நிரந்தர பக்கங்கள்

6/30/2005

திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்

சில நாட்களாக மன அழுத்தம் அதிகரிக்கச் செய்த நிகழ்வுகள் நடந்து விட்டன. இன்று மனதைப் பிடிவாதமாக சில மணி நேரம் அமைதியாக வைத்திருந்தேன். பல் மின்னஞ்சல்கள் ஆறுதலாக வந்தன. மன் உற்சாகம் என்னும் அம்புறாத்துணியில் ஒவ்வொரு அம்பாக வந்து சேர்ந்தன. அவை இன்னும் வருமா? தெரியாது. ஆனால் அதற்குள் என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாத என்மனத்திரையில் தோன்றி ஆசுவாசப்படுத்தினான். சிறிது நேரம் உலகக் கவலைகளை மறந்து தன் சகா திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் திருக்கல்யாண உற்சவத்திற்கு சமீபத்தில் நான் சென்று திரும்பியதைப் பற்றி பதிவு போட ஆணையிட்டான். அதை விட இந்த தாசனுக்கு வேறென்ன வேலை முக்கியமாக இருக்க முடியும்? இதோ வந்தேன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதனே.

இம்மாதம் 14-ஆம் தேதி செவ்வாயன்று காலை 8 மணிவாக்கில் கிளம்பி நேரே வைத்தீஸ்வரன் கோவில் சென்றோம். அங்கு அங்காரகன் மற்றும் ஈசன் சன்னிதிகளில் அர்ச்சனை. மாலை மாயூரம் பாம்ஸ் ஹோட்டலில் ரூம் போட்டோம். பிறகு தேரழுந்தூர் மற்றும் சிறுபுலியூர் சென்றோம். அதற்கு முன்னால் மாயவரத்தான் அவர்களின் தந்தையிடம் தொலைபேசினேன். அன்புடன் அவர் என்னிடம் பேசினார். தேரழுந்தூரில் 50 வருடங்களாக ஓடாத தேரை ஓட வைத்தது பற்றியும் கூறினார். அறைக்கு திரும்ப இரவு ஆகிவிட்டது.

அடுத்த நாள் காலை மயூரனாதர் கோவில் மற்றும் திருஇந்தளூர் கோவில் தரிசனம். திருஇந்தளூரில்தான் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனுக்கு சாப விமோசனம் கிட்டியதாக ஐதீகம். பரிமளரங்கநாதப் பெருமாள், பரிமள ரங்கநாயகி மற்றும் புண்டரீகவல்லித் தாயார்கள். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றத் தலம்:

பிறகு கும்பகோணம் சென்றோம். மதியம் 3.30-க்கு உப்பிலியப்பனுக்கும்
பூமித்தேவித் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம். என்னைச் சேர்த்து
இரண்டு உபயதாரர்கள். கண்கொள்ளா காட்சி, பெருமாளும் தாயாரும் மாலை
மாற்றியது. பெருமாளும் தாயாரும் யுகயுகமாகக் காதலிப்பவர்கள். அவர்கள் கல்யாணத்தைச் செய்து வைக்க முந்தையப் பிறவில் நல்ல காரியம் செய்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்து கும்பகோணத்தில் எங்கள் அறைக்குத் திரும்பும்போது மாலை 7 ஆகி விட்டது. வியாழன் காலை சென்னை திரும்பினோம்.

மனதுக்கு நிறைவான யாத்திரை. செய்ய நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது.
எல்லாம் எம்பெருமான் அருள். வந்த உடனேயே பதிவு போட நினைத்தேன். அதைச் செய்ய விடாமல் பிரச்சினை மேல் பிரச்சினையாக வந்தது. சிறிது தாமதித்து இப்போது பதிவிடுவதும் நல்லதுக்குத்தான். மனதுக்கு ஒரு நிறைவு. பிரச்சினை என்ன பிரச்சினை புடலங்காய்? அவை எல்லாம் இப்போது துச்சமாகத் தோன்றுகின்றன. இருந்தாலும் ஒன்றைக் கூற வேண்டும். இம்மாதிரி நெருக்கடியானத் தருணங்களில் நண்பர்கள் கொடுக்கும் ஆதரவு பின்னூட்டங்கள் மனதை நிறையச் செய்து இப்பதிவை போடச் செய்தன. எல்லோருக்கும் இப்போது நன்றி கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மனம் பிறழ்ந்தவன் செய்யும் கூத்து

போலி டோண்டுவின் லீலைகள் சகிக்க முடியாத அளவுக்கு போகின்றன. இப்போது அவர் ஒரு புதிய வலைப்பூ திறந்து என்னுடைய ப்ரொஃபைல் மற்றும் போட்டோவை போட்டிருக்கிறார். அவர் பின்னூட்டாங்கள் என் டிஸ்ப்ளே பெயரில் போட்டோவுடன் வருகின்றன.

என் டிஸ்ப்ளே பெயரான டோண்டு(#4800161) -வை அப்படியே போட்டிருக்கிறார். ஆனால் எலிக்குட்டி அவருடைய உண்மை எண்ணான 10214825 -யைக் காண்பித்து விடுகிறது. இப்போதுதான் சக வலைப்பதிவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் பதிவில் என் பெயர் மற்றும் போட்டோவுடன் ப்ளாக்கர் பின்னூட்டம் வந்தால், ப்ளாக்கர் எண்ணை எலிக்குட்டி மூலம் சரி பார்க்கவும். உண்மை டோண்டுவின் எண் 4800161. போலியின் எண் அதுவல்ல. வேறு எந்த எண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில் மூளை பிறழ்ந்த அந்த சைக்கோ பல பதிவுகளை ஒரே பெயரில் திறக்கக் கூடியவர்.

இன்னும் ஒரு விஷயம். இன்று எனக்கு நடப்பது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.

வேறொரு விஷயத்தையும் கூறி விடுகிறேன். இவ்வளவு நாட்களில் பிரச்சினையின் தீவிரத்தைப் பற்றி புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். என் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் பின்னூட்டம் வந்தால் அதற்கு பதிலளிக்கு முன் அதை எழுதியது நான்தானா என்று பாருங்கள். கீழ்கண்டவற்றை மனதில் நினைவு கொள்ளுங்கள்.

1. என் பின்னூட்டங்கள் ப்ளாக்கர் பதிவுகளில் என் போட்டோவுடன் வரும்.
2. அப்படியே போட்டொவுடன் வந்தாலும் எலிக்குட்டியின் உதவியால் ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். உண்மை டோண்டுவின் எண் 4800161. அதாவது போட்டொ மற்றும் ப்ளாக்கர் எண் இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
3. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என் பிரத்தியேகப் பதிவில் நகலிடுவேன்.
4. அங்கும் இந்த மூளை பிறழ்ந்தவர் போட்டோவுடன் நகலிடும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கும் எலிக்குட்டியார்தான் துணை.
5. நான் கவலைப் படுவதெல்லாம் ஒரு விஷயத்துக்குத்தான். போலியின் பின்னூட்டத்தைப் பார்த்து என்னை பற்றி தவறாக நினைத்து அதனால் சம்பந்தபட்டவருடன் நான் கொண்டிருக்கும் நட்புக்கு பங்கம் வரக்கூடாது என்பதே அது. நண்பனின் மரணத்தைக் கூட தாங்கிக் கொள்வேன். நட்பின் மரணத்தை அல்ல.

இதை தனிப்பதிவாக போடுவதுதான் நலம். அவ்வாறே போடுகிறேன். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எல்லோரையும் காக்கட்டும். அந்த மூளை பிறழ்ந்தவருக்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/25/2005

வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இப்போதுதான் போலி டோண்டு வந்து கலாட்டா எல்லாம் செய்து போனார். அதே நபர் இப்போது வேறு அவதாரத்தில் வந்திருக்கிறார். அனானிப் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவுகளில் தன் கைவரிசையைக் காட்டுகிறார்.

அதில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தி என் பெயரை என் சரியான ப்ளாக்கர் எண்ணின் கீழ் வருமாறு செய்கிறார். பிறகு இழிவானப் பின்னூட்டங்கள் இடுகிறார். என் நண்பர்கள் முகமூடி, எஸ்.கே., வசந்தன் மற்றும் குழலி ஆகியோர் இச்சதியை எளிதில் கண்டு கொண்டனர். எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லாத உம்மாண்டியும் என் மேல் பாசத்துடன் செயல்பட்டார்.

உண்மையிலேயே என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் என்னை இம்முறையும் இம்மாதிரி நண்பர்களை அழைத்து என்னைக் காத்தான். எனக்காக பெடியன்கள் பதிவில் ஆண்டவனிடம் வேண்டிய எஸ்.கே. அவர்களே, மிக்க நன்றி. மற்றவருக்காக வேண்டிய உங்களுக்கு என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் ஒரு குறையும் வைக்க மாட்டான்.

என் நண்பர்களுக்கு இன்னொரு வேண்டுகோள். இந்த போலி டோண்டு என் நிம்மதியைக் குலைக்க முடிவு செய்து விட்டார். நானும் அவரை என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகர நெடுங்குழைகாதன் துணையுடன் எதிர் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

இதில் உங்கள் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

முதலாவதாக உங்கள் பதிவுகளில் அனானி பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்யவும். இது மிக முக்கியம்.

இரண்டாவதாக என் வலைப்பூவில் நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் இந்த உரலின் கீழ் அவற்றைச் சேமிப்பேன்.

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அங்கு வந்து உங்கள் பதிவில் வந்த பின்னூட்டம் இருக்கிறதா என்று பார்க்கவும். அங்கும் அது இருந்தால் ப்ளாக்கர் எண்ணை எலிக்குட்டியின் மூலம் சரிபார்க்கவும்.

இன்னும் ஏதாவது தோன்றினால் அவற்றையும் இப்பதிவின் பின்னூட்டமாக எழுதுகிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/23/2005

இது ஒரு சோதனைப்பதிவு

விஷயம் இதுதான். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் ஒரு பதிவு போட்டேன். அது வாசகர் அட்டவணையிலும் வந்தது. ஆனால் இப்போது காணவில்லை. என் வலைப்பூவில் மட்டும் அப்படியே உள்ளது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆகவே இப்பதிவு. இது அட்டவணைக்கு வரும்போது அதையும் இழுத்து வராதா என்று நப்பாசை. பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/22/2005

மெட்டி ஒலி - என் பார்வை

இத்தொடரை நான் ஏறக்குறைய முழுமையாகப் பார்த்தேன் என்றுதான் கூற வேண்டும். சுமார் 810 தொடர்களில் ஒரு 40 தொடர்கள் மட்டும் பார்க்காமல் விடப்பட்டிருக்கும். சில சமயம் காட்சி ரொம்ப மனக்கிலேசம் அளிப்பதாகவிருந்தால் என் கணினி இருக்கும் அறைக்கு சென்று என் மொழி பெயர்ப்பு வேலைகளில் ஈடுபடுவேன். சில நேரங்களில் தமிழகத்தில் சொந்த விஷயமாகச் சுற்றுப்பயணம் செல்லும்போது ஹோட்டலுக்கு காரில் செல்வதற்குள் 9.30 மணி ஆகியிருக்கும். ஆனால் ஒன்று அந்த 40 சொச்சத் தொடர்களில் சிலவற்றை ஜெமினியில் தெலுங்கில் பார்த்து விட்டேன். ஆகவே நான் கூறப்போவது ஓரக்கண்ணால் பார்த்து அல்ல, இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு பார்த்ததின் பலனே.

மெட்டி ஒலி பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/even-scene-in-mega-serial-can-be.html
அதில் கூறிய கருத்தை இப்போதும் உறுதி செய்கிறேன். ஒருவர் விடாமல் அடிக்க மற்றொருவர் பொறுமை என்ற பெயரில் விடாமல் தாங்கிக் கொள்வது ஒரு அலுப்பையே கொடுக்கிறது. ஒரு தலை யுத்தத்தை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது? கடைசியில் ஒரு முறை மன்னிப்பு கேட்டு விட்டால் செய்ததெல்லாம் மறந்து விடுமா என்ன? "ஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தாருக்கு பொன்றும் துணையும் புகழ்" என அய்யன் அவர்கள் எழுதி வைத்தாலும் வைத்தார், சீரியல்காரர்கள் இதையே பிடித்து கொண்டு தொங்குகிறார்கள். சிறுமை கண்டு பொங்கச் சொன்ன பாரதியே எனக்கு அதிகச் சிறப்புடையவராகத் தோன்றுகிறார். ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைவதுதான் எனக்கு பிடிக்கும். வாழு வாழ விடு என்பதே என் கொள்கை.

ஒருவரே செயலாற்றுவது மற்றவர்கள் அதைப் பேசாமல் ஏற்றுக்கொள்வது அல்லது பலவீனமாக எதிர்வினை ஆற்றுவது என்பதையே அதிகம் காட்டினால் திகட்டி விடும். எல்லா தளங்களிலிருந்தும் செயல் வந்து அதை எதிர்த்து செயல் புரிதல் என்ற அளவில் காட்சிகள் அமைத்தால் அவை விருவிருப்பாக அமையும்.

மெட்டி ஒலி அந்த வகையில் தோல்வி அடைந்துள்ளது. சரோவின் மாமியாரும் கணவனும் கடைசி வரை அராஜகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பல கொடூர மனதுடையோருக்கு மேலும் ஐடியாக்கள் கொடுப்பதாகவே அமைந்தன அவ்வகைக் காட்சிகள். ரவியின் கதையும் அஃதே. திருந்துவது கூட சீரியலை முடிக்க வேண்டுமே என்பதற்காகத் திணிக்கப்பட்டக் காட்சிகளே. செயற்கையாகவே தோன்றுகின்றன. ஆணாதிக்கம் போற்றப்பட்டிருக்கிறது. வேலி தாண்டிய மாணிக்கம் பலமுறை மன்னிக்கப்பட்டிருக்க ஒரு முறை அறியாமையில் கணவனைப் பிரிந்த அருந்ததி மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். செல்வத்தையும் அருந்ததியையும் சேர்த்து வைத்திருந்தால் அது நியாயம். சக்தியின் பாத்திரப்படைப்பு தேவையற்ற ஒன்று. எபிஸோடுகளின் எண்ணிக்கையை பலப்படுத்துவதற்கே அது திணிக்கப்பட்டுள்ளது. திருமுருகனால் நிச்சயமாக இம்மாதிரி செல்வத்தையும் அருந்ததியையும் சேர்த்து வைத்திருக்க முடியும். அவருள் இருக்கும் ஆண் அதை செய்யவிடவில்லை. இதே பலவீனம் மற்ற எல்லா இயக்குனர்களிடமும் உள்ளன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

இவ்வளவெல்லாம் இருந்தாலும் ஏன் நான் இந்த சீரியலை விடாது பார்த்தேன்? சீரியல் விருவிருப்பாக எடுக்கப்பட்டிருந்தது. நடிக நடிகைகள் தேர்வு அபாரம். எல்லோரும் பாத்திரங்களாகவே மாறிவிட்டிருந்தனர் ஆகியவையும் சீரியலின் புகழுக்கு காரணம்.

ஆனால் ஒன்று. அடுத்து வரும் முஹூர்த்தம் சீரியலை பார்க்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறேன். கொஞ்ச நாளைக்காவது சீரியல் போதையிலிருந்து விடுபட ஆசை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/18/2005

அபூர்வ மனிதர் சி.பா. ஆதித்தனார்

தமிழ் நாட்டில் பாமரனும் பத்திரிகை படிக்குமாறு செய்தவர் தினத்தந்தியை நிறுவிய திரு. சி.பா. ஆதித்தனார் அவர்கள் என்றால் அது மிகையாகாது. உதாரணத்துக்கு ஒரு செய்தி. ஒரு சரக்கு ரயில் வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அது கடந்து வந்த முந்தைய ரயில் நிலையம் இப்போதிருந்த ரயில் நிலையத்தை விட தாழ்ந்த மட்டத்தில் இருந்திருக்கிறது. இஞ்சின் ஓட்டுனர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது திடீரென்று வண்டியின் பார்க்கிங் ப்ரேக் செயலிழந்தது. ஆகவே வண்டி அப்படியே பின்னால் சில கிலோமீட்ட்ரகள் சென்று முந்தைய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேறு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டது. எல்லா பத்திரிகைகளிலும் இதை வெறுமனே வார்த்தைகளில் வர்ணித்து விட்டு விட்டனர். ஆதித்தனார் அவர்கள் சற்று வித்தியாசமாக சிந்தித்தார். அதன் விளைவு ஒரு லைன் ஸ்கெட்ச். இரு ரயில் நிலையங்களுக்கிடையில் இருந்த சரிவு மிகத்தெளிவாகக் காட்டப்பட்டது. அப்படத்தை பார்த்த எவருக்கும் என்ன நடந்தது என்பது உடனே விளங்கியது. அதுதான் ஆதித்தனார்.

இன்னொரு முறை நேரு அவர்கள் திருமதி கென்னடியை ஆலிங்கனம் செய்து வரவேற்றார் என்று ஒரு நிருபர் எழுதியதைப் படித்தார் ஆதித்தனார் அவர்கள். சம்பந்தப்பட்ட நிருபரை அழைத்து ஆலிங்கனத்துக்கு பதில் நல்ல தமிழ் சொல்லை போடுமாறு கூறினார். நிருபர் தயங்கியபடி "கட்டித் தழுவி" என்ற சொல்லைக் கூற அவ்வாறே போடுமாறு அவருக்கு உத்தரவிட்டார். அவர் கவலை எல்லாம் அவர் பத்திரிகையைப் படிக்கும் சாதாரண ரிக்க்ஷா தொழிலாளிக்கு புரியுமாறு இருப்பது பற்றித்தான். தங்களை அறிவு ஜீவிகளாகப் பாவித்து கொண்டிருந்த ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல.

பல விஷயங்களுக்கு அவர் முன்னோடியாக இருந்தார். அவற்றில் முக்கியமானது மாத நாவல் வெளியிடுவதாகும். தினசரிப் பத்திரிகைக்கான காகிதம் நியூஸ்பிரின்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் மிகுதி இருந்த பேப்பரை உபயோகிக்கும் எண்ணத்திலேயே அவர் ராணி முத்துவைத் தொடங்கினார். அதைப் பின்பற்றி மற்ற மாத நாவல்கள் வந்தன என்பது யாவரும் அறிந்ததே.

ஒரு சமயம் சில அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சென்னைக்கு வந்த போது தினத்தந்தியைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. உள்ளூர் செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் இப்பத்திரிகையில் கொடுக்கப்பட்டதை அவர்கள் எல்லோரும் ஆதரித்தனர். அமெரிக்காவிலும் அப்படித்தான் என்றும் அவர்கள் கூறினர்.

ஆதித்தனார் அவர்கள் செய்திகளுக்கு தலைப்பிடுவதில் வல்லவர். 1963-ல் கென்னடி அவர்கள் தலையில் குண்டு பாய்ந்தது என்ற செய்தியைத் தைரியமாக கென்னடி மரணம் என்றே குறிப்பிட்டார். தலையில் குண்டடி பட்டு யாரும் பிழைத்ததில்லை என்று அவர் பின்னால் கூறினார். இவ்வாறு அவர் எடுத்தத் துரித முடிவுகள் மிகப் பிரசித்தி பெற்றவை.

இதெல்லாம் எழுதிய பிறகு எனக்கு ஒரு சந்தேகம். கன்னித் தீவு எப்போது முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/12/2005

எனக்கு பிடித்தப் புத்தகங்கள்

என்னை இந்த விளையாட்டுக்கு என்றென்றும் அன்புடன் அழைத்த பாலா அவர்களுக்கு நன்றி.
எபோதும் புத்தகமும் கையுமாக இருந்தவன் நான். குளிக்கும், தூங்கும் தருணங்கள் தவிர்த்து எப்போதும் புத்தகம் இருந்தது என்னிடத்தில். அது ஒரு பொற்காலம். இப்போது அவ்வளவாக இல்லை என்பது வேறு விஷயம். வாசிப்புகள் தற்சமயம் இணையத்தில் அதிகம் நிகழ்கின்றன.

தமிழில் எனக்கு விருப்பமான புத்தகங்கள்:
1. அமரதாரா, கல்கி அவர்கள் எழுதியது
2. தொடுவானம், பி.வி.ஆர். அவர்கள் எழுதியது
3. அன்பே ஆருயிரே, தி. ஜானகிராமன் அவர்கள் எழுதியது
4. வேர்கள், கிருஷ்ணமணி அவர்கள் எழுதியது
5. பாலங்கள், சிவசங்கரி அவர்கள் எழுதியது
6. சக்கரவர்த்தி திருமகன், ராஜாஜி அவர்கள் எழுதியது
7. வியாசர் விருந்து,ராஜாஜி அவர்கள் எழுதியது
8. மாம் ஃப்ரம் இண்டியா, அனுராதா ரமணன் அவர்கள் எழுதியது

மேலே கூறியவை எல்லாம் தொடர்களாக வெளிவந்தன. வியாசர் விருந்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தொடர்களாக வரும்போதே படித்தவன்.

இப்போது ஆங்கிலத்தின் முறை
1. Tender Victory, by Taylor Caldwell
2. Dear and Glorious Physician, by Taylor Caldwell
3. Mila - 18, by Leon Uris
4. Exodus, by Leon Uris
5. Q.B. VII, by Leon Uris
6. Tower of Babel, Morris West
7. Odessa File, Frederick Forsyth
8. Harry Potter series, by J.K. Rowling

ஜெர்மன் புத்தகங்கள்
1. Stein und Flöte und das ist noch nicht alles, by Bemman
2. Harry Potter series, by J.K. Rowling, all translated into German
3. Ilona, by Hans Habe

ஃபிரெஞ்சு புத்தகங்கள்
1. La peste, by Camus
2. Harry Potter series, by J.K. Rowling, all translated into French

நான் குறிப்பிட்டவை மிகக் குறைவே. இன்னும் எவ்வளவோ உள்ளன. எல்லாவற்றையும் கூறினால் பதிவு நீண்டு விடும்.

நான் அழைக்க நினைப்பவர்கள். எல்லோரும் எல்லோரையும் அழைத்து விட்ட நிலையில், யாரேனும் விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு என் அழைப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்