நிரந்தர பக்கங்கள்

11/04/2005

அழிக்கமுடியாத அப்புசாமி மற்றும் சீதா பாட்டி

சமீபத்தில் 1963-ஆம் வருடத்திலிருந்து நம் எல்லோரையும் பரவசப்படுத்தி வரும் இந்த தம்பதிகளைப் பற்றி என் நினைவுகள்.

சீதா பாட்டியின் வயது 70, அப்புசாமிக்கு 75 வயது. அது கடந்த 42 வருடங்களாக அப்படியே உள்ளது. குமுதத்தில் ஜனனம், பல ஆண்டுகள் அங்கேயே வாசம். அவர்களை படைத்த ஜ.ரா.சுந்தரேசன் இப்போது அவர்களை மற்றத் தளத்திலிருந்தும் நமக்குக் காட்டுகிறார். இப்போது என் நினைவுகள்.

முதல் கதையே தூள். அப்புசாமி பொடி போடுவதைத் தடுக்க சீதாபாட்டி நடவடிக்கை எடுக்க, அப்புசாமியின் எதிர்வினைகள் எல்லாமே அட்டகாசம்தான். என் மனதில் இருக்கும் இன்னொரு கதை இதோ.

அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.

அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை" *மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.

இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"

சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).

இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர்.

அப்புசாமிக்காகவே இப்போது இணையத்தளமும் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு அப்புசாமி ஜோக்:

அப்புசாமியின் நண்பர் எழுதிய துணுக்கு ஒரு பத்திரிகையில் பிரசுரமாயிருந்தது. எழுதியவர் அப்புசாமிக்கு போன் செய்தார். "என் துணுக்கைப் படித்தீர்களா?" என்றார் ஆவலுடன்.

அப்புசாமி "படித்தேன். ரொம்ப நன்றா யிருந்தது, இவ்வளவு திறமை உங்களிடம் இருக்கிறதே. பேஷ்! பேஷ்!" என்றார்.

மறுதினம் விடிகாலை நாலு மணிக்கு அந்த நண்பருக்கு அப்புசாமி மறுபடி போன் செய்தார். "உங்கள் துணுக்கு மகாப் பிரமாதம். நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப அருமை" என்றார். "ரொம்ப நன்றி. சந்தோஷம்" என்றார் நண்பர்.

அப்புசாமி அன்று இரவே பன்னிரண்டு மணிக்கு மறுபடி நண்பருக்கு போன் செய்தார். "ரொம்பப் பிரமாதம் உங்க துணுக்கு. என்னால் மறக்கவே முடியாது. பாராட்டுக்கள்" என்றார்.

"இனிமேல் நான் துணுக்கு எழுதினால் சத்தியமாக உம்மிடம் சொல்ல மாட்டேன்" என்றார் நண்பர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

  1. ஒரு காலத்தில் சுவையாக இருந்த அப்புசாமி சீதாப்பாட்டி தொடர்கள், தற்போது ஜோக் என்ற பெயரில் அறுவையாக உள்ளது. உதாரணம். னீங்கள் கூறியுள்ள கடைசி ஜோக்.
    பாக்கியம் ராமஸ்வாமிக்குக் கற்பனை வரட்சி போலும்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  2. கடைசியில் குறிப்பிட்டிருந்த ஜோக் உண்மையில் முல்லா நசுருத்தீனுடையது. அதை இங்கு அப்புசாமிக்குப் பொருத்தியிருக்கிறார்கள்.

    பாக்கியம் ராமசாமி என்னவோ அப்படியே இருக்கிறார். நாம்தான் மாறிவிட்டோம். அப்புசாமியின் பல கதைகள் அதனதன் காலக்கட்டத்திற்கு ஏற்றவை. அவற்றை படிக்கும்போது நமக்கும் பழைய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அதனால் நமக்கு சுவையும் கூடுகிறது. அதுதான் விஷயம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. டோண்டு சார்,

    கலைமகள் அல்லது அமுதசுரபியா என்று சரியாக தெரியவில்லை. "நானும் ஆப்புசாமியும்' என்று பாக்கியம் ராமசாமி எழுதியுள்ளார். படிக்க வேண்டும் நேரம் கிடைக்கவில்லை.

    தேசிகன்
    http://www.desikan.com/blogcms/

    ReplyDelete
  4. அப்புசாமியும் பீமராவும்(?) மாஞ்சா பூசி பட்டம் விடும் கதையும் பல வருடங்களுக்கு பின்னும் இன்னமும் நினைவில் நிற்கிறது.

    ReplyDelete
  5. //சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).

    இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க,//

    நானும் வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். அப்புறம் இதே ஸ்டைலில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நானும் என் நண்பனும் ஹிந்தியில்(மேஜ் பர் கலம் ஹை வகையில் தான்) சீரியஸாகப் பேசி மற்றவர்களைக் கடுப்பேற்றியிருக்கிறோம்.

    ReplyDelete
  6. மாஞ்சா பூசி பட்டம் விடும் கதையும் மறக்க முடியாததே. அப்புசாமியும் ரசகுண்டுவும் என்று ஞாபகம். ஆனால் பீமாராவும் கூட இருந்திருக்கலாம். இக்கதையிலிருந்துதான் அப்புசாமி வாத்தியார் பாஷை பேச ஆரம்பித்தார்.

    தேசிகன் அவர்களே, "நானும் அப்புசாமியும்' என்று பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கிறாரா? நானும் படிக்க ஆவலாயுள்ளேன்.

    இக்கதைகளுக்கு ஓவியம் வரைந்த ஜெ அவர்கள் ஒரு முறை கூறினார். அதாவது அப்புசாமி சீதா பாடி இருவருக்கும் ஒரே அடிப்படையில்தான் முகம் வரைந்தாராம். பல ஆண்டுகள் ஒன்றாய் வாழும் தம்பதியினர் காலப்ப்போக்கில் ஒரே ஜாடையில் மாறிவிடுவர் என்று ஒரு விஞானபூர்வமான கருத்து இருக்கிறதாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. "ithu eppati irukku?"

    சுவாரசியமாக இருக்கு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. நன்றி நாட்டாமை அவர்களே. உங்கள் கேள்விகளுக்காகவே ஒரு தனிப்பதிவு போட்டால் போகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. டோண்டு ஐயா, இன்னொரு கேள்வி.

    நீங்க நல்லவரா கெட்டவரா?

    ReplyDelete
  10. "நீங்க நல்லவரா கெட்டவரா?"
    தெரியல்லியேப்பா, போலி டோண்டுவை கேட்கலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. நான் மட்டுமல்ல, அனைத்து பார்ப்பனர்களும் நல்லவர்கள். எங்களுக்கு பார்ப்பனரல்லாதாரை பிடிக்காது, எனவே, அவர்கள் கெட்டவர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    (டோண்டு ஐயா, தவறாக னினைக்க வேண்டாம். இது போலி டோண்டுவின் பதில் எப்படி இருக்கும் என்ற என்னுடைய சிறிய கற்பனை. ஹி ஹி)

    ReplyDelete
  12. போலி டோண்டுவை பற்றி நான் எழுதியதை என்னுடைய அடுத்தப் பதிவில் பார்க்கலாம். தமிழ் மணம் இன்னும் அதை திரட்டாத பட்சத்தில், Home-ஐ சுட்டிப் பாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. டோண்டு சார், ரசகுண்டுவின் பாட்டி கீதாப்பாட்டி ஞாபகம் இருக்கா? ஜெ... உயரமாய், ஒல்லியாய், தேச்சலான பாட்டி உருவம்
    வரைந்திருப்பார். சற்றேறக்குறைய அப்புசாமிக்கு பெண் வேடம் போட்டதுப் போல இருக்கும். என்னிடம் பழைய குமுத பைண்டிங்க் இருந்தது. அதில் படித்த சிறுகதைகள் இது. அதில் கீதாப்பாட்டி சப்பாத்தி சுடும் வர்ணனைகள் ஆஹா! வட்டமாய், சில சுட்ட விழுப்புண்களுடன், கமகமவென்று தட்டில் விழும் சப்பாத்திகள்.

    ReplyDelete
  14. கீதா பாட்டியை மறக்க முடியுமா. அப்புசாமி பாட்டுக்கு கீதா என்று குறிப்பிட்டுவிட, சீதா பாட்டி வீறுகொண்டெழுந்து "அது என்ன ஸ்டைலா கீதாங்கறது. கீதாக் கிழவி என்று கூறுங்கள்" என்று எகிறியதும் எனக்கு நினைவிலிருக்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. "பாக்கியம் ராமசாமி என்னவோ அப்படியே இருக்கிறார். நாம்தான் மாறிவிட்டோம்" - என்னதான் நீங்கள் இப்படி ஒரு காரணம் சொன்னாலும், எனக்கென்னவோ அந்த பழைய 'திராணி' அப்புசாமி-சீதா ஜோடிக்கிட்ட இருந்து டிமிக்கி கொடுத்திரிச்சின்னுதான் தோணுது.

    ReplyDelete
  16. தருமி அவர்களே, அப்புசாமி சீதா பாட்டி முதலில் வந்தது வந்தது 1963-ல். அதை நான் சமீபத்தில் என்று கூறினாலும் நாமும் சில உண்மைகளை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது எனக்கு 17 வயது, அப்புசாமி சீதா பாட்டியை என் தாத்தா பாட்டி ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொள்ள முடிந்தது? ஆனால் இப்போது? அவர்கள் என்னவோ அதே வயதில் இருக்கிறார்கள். நாம்தான் அந்த வயதை நெருங்குகிறோம். நம் பார்வைக் கோணமும் மாறும் அல்லவா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. ரசகுண்டு, பீமாராவ், அப்புசாமி, சீதாபாட்டி- கடத்தல் செய்யபடுவதை போல ஒரு கதையும் வந்ததாக நினைவு. மறக்கமுடியாத கதாபாத்திரங்கள். நீங்கள் சொல்வது போல பார்வையும் ரசனையும் மாறிவிட்டன என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  18. நீங்கள் சொன்ன கடத்தல் கதையும் படித்துள்ளேன்.

    அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் கதையும் பிரமாதம். நாம் அவற்றை விரும்பினோம் மட்டும் மறக்காமலிருப்பதால்தான் இந்த நோஸ்டால்ஜியா.

    இப்படிக்கு,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. அப்புசாமி கதைகளில் பல சமகால அரசியல் மற்றும் செய்திக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

    உதாரணத்துக்கு சமீபத்தில் 1963-ல் ப்ரொஃப்யூமோ என்ற பிரிட்டிஷ் யுத்த மந்திரி கீலர் என்னும் 19 வயது பெண்ணோடு இணைத்துப் பேசப்பட்டார். அதன் காரணமாக அவர் ராஜினாமா செய்யவும் வேண்டியிருந்தது. போகிற போக்கில் பிரதம மந்திரி ஹெரால்ட் மாக்மில்லன் பதவிக்கும் வேட்டு வைத்து விட்டு போனார்.

    அந்த சமயத்தில் வந்த ஒரு அப்புசாமி கதையில் சீதா பாட்டிக்கு அவர் ஒரு இளம்பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாக சந்தேகம் விழுந்து விட்டது.

    "அட்ரோஷியஸ், ப்ரொஃப்யூமோ கீலர் விவஹாரம் மாதிரியல்லாவா இது இருக்கு" என்று கொதிக்கிறார் அவர். அந்த நேரம் பார்த்து ரேடியோவில் "கங்கைக் கரையோரம், கன்னி பெண்கள் கூட்டம்" என்ற பாட்டு வேறு போடப்பட, அவர் வயற்றில் புளி கரைக்கப்பட்டது போன்ற உணர்வு. அச்சமயம் அங்கு வந்த அப்புசாமியிடம் சீதா பாட்டி "என்ன ப்ரொஃப்யூமோ சார்" என்று கோபக் கிண்டலுடன் கேட்க, அப்புசாமி "என்ன சௌக்கியமா என்று கேட்கிறாயா" என்று அரைகுறையாகக் கேட்டு வெறுப்பேற்றுகிறார். "கீலர் எப்படியிருக்கிறாள்" என்று அடுத்த கேள்வியை கேட்க, "காலரா? ஜிப்பாவுக்கு ஏது காலர்" என்று வேறு கேட்டு குழப்புகிறார் அப்புசாமி.

    இந்த சொல் விளையாட்டு 1963-ல் புரிந்திருக்கும், ஆனால் இப்போது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. 2003-இல் நாங்கள் சென்ற் காசி கயா புனித யாத்திரையில் குடும்பத்துடன் வந்த திரு.ஜ.ரா.சு மிகவும் இனிமையாக பழக கூடியவர். அவருக்கு நகைச்சுவை வெகு இயல்பாக வருவதும், நல்ல observation இருப்பதும் (he was around 66 then! ) நான் அருகிலிருந்து கண்டு வியந்துள்ளேன். truly a cheerful and wonderful human being !

    ReplyDelete
  21. "அவருக்கு நகைச்சுவை வெகு இயல்பாக வருவதும், நல்ல observation இருப்பதும் (he was around 66 then! ) நான் அருகிலிருந்து கண்டு வியந்துள்ளேன். truly a cheerful and wonderful human being!"
    மிகவும் உண்மை. அற்புதமான மனிதர். நீங்கள் சென்றது யாத்ரா குழுவினருடனா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. ஆமாம் டோண்டு ஸார். விஜயலக்ஷ்மி Travels என்று நினைவு. புவனேஷ்வர், கோனார்க், கயை, த்ரிவேணி சங்கமம், அல்லாHஆபாத், வாராணஸி ஆகிய இடங்கள் சென்றோம்.

    ReplyDelete
  23. நல்ல பதிவு டோண்டு சார்.

    அப்புசாமியை டிவி சீரியலாக்கிய போது சொதப்பி விட்டார்களே? அதைப் பற்றியும் தனிப்பதிவு எழுதுங்கள். காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாக நடித்தார். ஏனோ ஒட்டவில்லை.

    ReplyDelete
  24. எழுத்து ரூபத்தில் வரும் வெற்றிகரமான கதைகள் திரைப்படமாக்கப்படும்போது சொதப்புவதுதான் பொது விதி. மிகக் குறைந்த தருணங்களில்தான் அவை வெற்றி பெறுகின்றன.

    இது பற்றி பதிவு போட உள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. :)) அருமையான பதிவு. ரசித்து சிரித்தேன். நான் கூட சில அப்புசாமி சீத்தா பாட்டி கதைகள் படித்திருக்கிறேன். ஏனோ இந்த அளவுக்கு நினைவில் நிற்கவில்லை.

    ReplyDelete