நிரந்தர பக்கங்கள்

1/29/2006

நெருக்கடி நிலை பற்றிய சில எண்ணங்கள்

ஜூன் 12, வருடம் 1975. இந்திரா காந்தி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து அவருடன் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். அதன் தீர்ப்பு வந்து நாட்டையே தலைகீழாக்கியது. வழக்கை விசாரித்த நீதியரசர் சின்ஹா அவர்கள் இந்திரா காந்தி பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்து அவர் வெற்றி செல்லாது என்று அறிவித்தார். அது மட்டுமின்றி அவர் ஆறு வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று வேறு தீர்ப்பு கொடுத்து வைத்து விட்டார்.

இந்திரா காந்தி இந்தத் தீர்ப்பை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஏன், அவருக்கு எதிராக கேஸ் போட்ட ராஜ் நாராயணனே எதிர்ப்பார்க்கவில்லை. அடுத்த நாள் நாடே திகைத்து போனது. தீர்ப்பு நடைமுறைக்கு வர நீதிபதி சில நாட்கள் அவகாசம் அளித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிர் வினையாய் பல அடாவடி காரியங்களை இந்திரா காந்தியும் அவர் ஜால்ராக்களும் நிகழ்த்தினர். பல கூலிப்படைகள் பணம் கொடுத்து லாரிகளில் வரவழைக்கப்பட்டு இந்திரா காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பச் செய்யப்பட்டனர்.

அச்சமயம் விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த கிருஷ்ண ஐயர் அவர்களிடம் இந்திரா காந்தியின் மேல் முறையீடு வந்தது. அவர் அலஹாபாத் தீர்ப்பை சில ஷரத்துகளின் அடிப்படையில் ஜூன் 24-ஆம் தேதி நிறுத்தி வைத்தார். அதன்படி இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் சபையில் ஓட்டெடுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது. இது காரியத்துக்காகாது என்று இந்திரா காந்தி செயல்பட்டு June 25 அன்று அவசர நிலை பிரகடனம் செய்தார்.

இந்திரா காந்தியின் நிலையை பலப்படுத்த தேர்தல் விதிகள் மாற்றப்பட்டன. அரசியல் நிர்ணயச் சட்டம் 39-வது முறையாக திருத்தப்பட்டது. அதில் பிரதம மந்திரி மற்றும் சபாநாயகரின் தேர்தல் வழக்குகளுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டன. அதாவது அந்த வழக்குகள் நடத்துவது கடினமாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்திராவின் தேர்தல் வழக்கும் இதன் கீழ் சேர்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சுப்ரீம் கோர்ட் இந்த திருத்தத்தை சட்ட விரோதம் என்று தள்ளுபடி செய்தது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 தொங்கலில் வைக்கப்பட்டன. பல மாநிலங்களில் பலர் காவலில் வைக்கப்பட, பல ஆள் கொணர்வு கோரிக்கைகள் பல உயர் நீதி மன்றங்களுக்கு முன்னால் வந்தன. அங்கெல்லாம் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வர, விஷயம் உச்ச நீதி மன்றத்திற்கு முன்னால் வந்தது. அந்த நீதி மன்றமோ 4:1 விகிதத்தில் அவசர நிலையின் கீழ் சட்டப் பிரிவு 21 செயல்படாததால் அடிப்படை உரிமைகள் எதுவும் தற்சமயம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. மனித உரிமை செல்லாக்காசாகியது. இதை எதிர்த்து மைனாரிடி தீர்ப்பை அளித்த நீதிபதி கன்னா அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இந்தப் பெரும்பான்மை தீர்ப்பு நாட்டிலும் சட்ட வல்லுனர்களிடத்திலும் பெரிய நிராசையை உண்டாக்கியது. 1976-ல் அ.நி.ச. வின் 42-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது பல அடாவடி காரியங்களுக்கு வழி வகுத்தது.

நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் நிலையில் மட்டும் வந்திருக்க வேண்டிய அவசர நிலை சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இந்திரா காந்தியின் நலனைக் காக்கவே கொண்டுவரப்பட்டது. நாடு முழுக்க உறக்கத்தில் இருந்த நடுநிசியில் இது நுழைக்கப்பட்டது. அடுத்த 19 மாதங்களுக்கு நாடு இருட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. தனிமனித உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர்.

அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.

அவசர நிலை கொடுமைகள் நல்ல வேளையாக தெற்கில் அவ்வளவாக இல்லை. ஆனால் வட இந்திய மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மானாவாரியாக அகப்பட்டவர்களையெல்லாம் உட்படுத்தினர். கைதான பலரும் தடயம் இன்றி மறைந்தனர். இந்திராதான் இந்தியா என்று பரூவா என்னும் கோமாளி திருவாய் மலர்ந்தருளினார். தேர்தல்களே நாட்டுக்குத் தேவையில்லை, அன்னிய மொழிகளை படிப்பது தேசவிரோதம் என்றெல்லாம் கூறி சஞ்சய் காந்தி தமாஷ் செய்தார். பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார். அவசர நிலை இருந்த 19 மாதங்களிலும் அவர் வெறுமனே இந்திரா காந்தி என்றுதான் எழுதினாரே தெரிய பிரதமர் இந்திரா காந்தி என்று எழுதவேயில்லை. (நானும் இப்பதிவில் அவ்வாறே செய்திருக்கிறேன் என்பதை கவனிக்க).

1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.

சிலர் கூறலாம், அவசர நிலை காரணமாக ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு ஓடின, விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன என்று. இருக்கலாம், ஆனால் இந்திரா காந்தியின் கெட்ட எண்ணத்திற்கு அவையெல்லாம் ஈடாகாது.

1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.

இதில் நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கண்டறிந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜெர்மன் இதழ் வீட்டிற்கு வரும். திசம்பர் 1975 இதழில் "Diktatorin Indira Gandhi" (சர்வாதிகாரி இந்திரா காந்தி) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. தணிக்கையதிகாரிகளுக்கு ஜெர்மன் தெரியாதது சௌகரியமாகப் போயிற்று.

தேர்தல் வந்தது. இந்திரா காந்திக்கு சரியான தோல்வி. அவரும் அவர் பிள்ளை சஞ்சயும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர். அப்போதுதான் பத்திரிகைத் தணிக்கை தனக்கே பாதகமாக முடிந்ததை இந்திரா காந்தி அவர்கள் கண்டு நொந்து போனார். அதாவது பத்திரிகைகள் சுதந்திரமாக இல்லாது போனதால் வசவசவென்று உப்புசப்பில்லாத செய்திகள் வர, உண்மை நிலை மறைக்கப்பட, நாட்டின் நாடியை பார்க்க அரசு தவறியது. என்னமோ அப்போது தேர்தல் வைத்து பெரிய மெஜாரிடியை வைத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம் என்று மனப்பால் குடித்துத்தான் அவர் தேர்தலையே அறிவித்தார். பிளாங்கியும் அடித்தார்.

தேர்தலில் தோற்றதும் இந்திரா காந்தி புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். ஜனாதிபதியிடம் ராஜினாமா தரும் முன்னால் அவசரநிலையையும் நீக்குமாறு சிபாரிசு செய்தார். அது அப்படியே இருந்தால் தான் உடனேயே கம்பியெண்ணவேண்டும் என்று அவர் பயந்ததே அதன் முக்கியக் காரணம். மற்றப்படி வேறு நல்லெண்ணம் எல்லாம் இல்லை.

அவசர நிலையை அவசர அவசரமாக வலது கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க, இடது கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்து நாட்டுக்கு நல்லது செய்தனர் என்பது ஆறுதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு பின்னால் இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். ஆனால் மறுபடியும் அவசர நிலையை கொண்டுவர அவருக்கோ மற்ற யாருக்குமோ முடியாதபடி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

  1. அடக்குமுறையை மையமாக வைத்து, Rohinton Mistry எழுதிய நாவல் A Fine Balance ஒரு முக்கியமான புத்தகம்.

    ReplyDelete
  2. தொடக்கத்தில் இது அவசரநிலை அடக்குமுறைகளுக்கு எதிரான பதிவு என்று நினைத்தேன்..
    ஆனால் பிறகு தான் புரிந்து கொண்டேன் இது சோ வழிபாட்டுப் பதிவு என்று!!

    இந்திரா காந்தி செய்தது அடாவடி!
    சோ செய்தது தைரியமான செயல்!!

    இந்திரா செய்தது அக்கிரமம்!
    சோ செய்தது ஆண்மை!!

    இப்படி நாலு வரியில் "நச்"னு போட்டிருக்கலாம்;

    1999 – 2004 க்கு இடைப்பட்ட காலத்தில் நெருக்கடிநிலைக்கு ஆதரவுக் குரல் "ஆண்மை" மிகுந்தவரிடம் இருந்து வரவில்லையா?

    //அவசர நிலை கொடுமைகள் நல்ல வேளையாக தெற்கில் அவ்வளவாக இல்லை.//
    பூனை கண்ணை மூடிக் கொண்டால் …… ? "அவ்வளவாக" என்ற சொல்லுக்குப் பின் ஒளிந்து கொள்வீர்கள்.. சிறைக்குள் மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோருக்கு சிறை அதிகாரிகள் சாமரம் வீசினார்கள்.. தென்னகத்தில் அவசரநிலைக் கொடுமைகளை மீறி ஒரே ஒருவர் தலையில் மட்டுமே மயிர் வளர்ந்தது.. அதையும் அவர் ஆண்மையுடன் மழித்துவிட்டார்.

    அதற்காக சோவின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை.ஆனால் அவர் மட்டுமே எதிர்த்த மாதிரி நீங்கள் பதிவு செய்ய முயல்வது நல்ல தமாஷ்!

    நீங்கள் குறிப்பிடும் மனிதர்களைத் தாண்டி தமிழகத்தில் 1969 முதல் 1976 வரை பலர் அடக்குமுறையை சந்தித்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.. மகர நெடுங் குழைக்காதர் அவர்களைக் காக்கவில்லை!

    ReplyDelete
  3. "நீங்கள் குறிப்பிடும் மனிதர்களைத் தாண்டி தமிழகத்தில் 1969 முதல் 1976 வரை பலர் அடக்குமுறையை சந்தித்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.. மகர நெடுங் குழைக்காதர் அவர்களைக் காக்கவில்லை!"

    நான் கூறியது பத்திரிகையாளர்களைப் பற்றியது. அவர்களில் சோ மாணிக்கமாகவே திகழ்ந்தார். நீங்கள் குறிப்பிடும் மற்றவர்கள் பத்திரிகையாளர்களா? ஏனெனில் நான் இங்கு பேசியது அவர்களை பற்றி மட்டுமே. முரசொலி கார்ட்டூன் போட்டதையும் கூறினேனே. எக்ஸ்பிரஸைப் பற்றியும் கூறினேனே. 1977-ல் எக்ஸ்பிரஸ் பற்றி இப்போது துக்ளக்கில் எழுதியிருந்ததை நினைவிலிருந்து கூறுவேன். அது ஒரு மிக்ஸட் மெடஃபார். "சிங்கமெனச் சீறி எழுந்த எக்ஸ்பிரஸின் சிறகுகள் துண்டிக்கப்பட்டன". எனக்கு அதை படிக்கும்போது ராமாயணத்தில் ராவணனை சீறி எதிர்த்த ஜடாயுதான் ஞாபகத்துக்கு வருகிறார்.

    நான் நேரடியாகப் பார்த்ததைத்தான் எழுத முடியும். ஆனந்த விகடன், குமுதம், கல்கி, ஹிந்து பத்திரிகை ஆகியவை எவ்வாறு வளைந்து கொடுத்தன என்பதை நான் நேரிலேயே படித்தவன்.

    அடேடே மறந்து விட்டேனே இன்னொரு ஆங்கிலப் பத்திரிகையை. அதன் பெயர் பிக்விக். அதன் ஆசிரியர்: ராம்கி கோபப்படக்கூடாது. அவர் சோ அவர்கள்தான்!!!!!!!

    ஸ்டாலின் முதலியோர் சிறையில் அடைக்கப்பட்டதையும்தானே எழுதியிருந்தேன். இப்போதும் கூறுவேன் வட இந்தியாவில் இங்கு நடந்ததை விட பன் மடங்கு கொடுமை நிகழ்ந்தது. நான் கூறியது வெறும் கம்பேரிசனே. இங்கு நடந்ததையே நீங்கள் கொடுமை என்று கூறினால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

    1999-2004 என்ன நெருக்கடி நிலை ஏற்பட்டதாம்? தயவு செய்து விளக்கவும்.

    அப்படி மற்றவர்கள் யாராவது தமிழகத்தில் அவசர நிலை அடக்குமுறையை எதிர்த்து போராடியிருந்தால் (உதாரணம் ரஜனிகாந்த்) தாராளமாக எழுதுங்களேன். யார் உங்கள் கையைப் பிடித்து தடுத்தது?

    அதை கண்டு பிடித்து எழுத என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம்.

    puriyalai, why?

    ReplyDelete
  5. நல்ல கேள்விக்கு பாராட்டுக்கள் ராஜ் சந்திரா அவர்களே.

    கருணாநிதி அவர்களின் மந்திரி சபை கலைக்கப்பட்டது பிப்ரவரி - 1976. அதற்கு முந்தைய ஜூன் 25-லிருந்து அமலிலிருந்த நெருக்கடி நிலை தமிழகத்தில் அவ்வளவு கடுமையாக இல்லாமல் போனதற்கு தமிழ் நாடு அரசின் அவசர நிலை எதிர்ப்பேயாகும். ஆக முதல் 7 மாதங்கள் தமிழகம் பல அட்டூழியங்களிலிருந்து தப்பித்தது.

    ஆனால் பிப்ரவரி 1976ல் நிலைமை தலைகீழாக மாறியது. தமிழக மக்களுக்கு பயம் வந்தது, ஏனெனில் அதற்குள் வட இந்தியாவில் நடந்த கொடுமைகள் அவர்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது, முக்கியமாக பத்திரிகையாளர்கள், மற்றும் அரசியல் தலைவர்களுக்கு.

    கருணாநிதி அவர்களுடன் தொலை பேசியில் கூட பேசப் பயந்தவர்கள் உண்டு. பயம் ஆதாரமற்றதும் இல்லை. பலர் கைது செய்யப்பட்டு திரும்ப வரவேயில்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பது கூட பலருக்குத் தெரியாது. அதிகார வெறி பிடித்து இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் ஆடினர்.

    அந்த நேரத்தில் சோ அவர்கள் நேரே போய் கருணாநிதி அவர்களுக்கு தன் உயிரைப் பயணமாக வைத்து தன் ஆதரவைத் தெரிவித்தார்.

    உங்கள் வயது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வலைப்பதிவர்களில் பலர் அப்போது பிறக்கக்கூட இல்லை. ஆகவே நெருக்கடி நிலையின் தீவிரம் இப்போதையத் தலைமுறைக்குப் புரியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. மன்னிக்கவும் ரஜினி ராம்கி அவர்களே.

    ராம்கி என்றப் பெயர் பார்த்ததும் நீங்கள்தான் நினைவுக்கு வந்தீர்கள். ஆகவேதான் விளையாட்டாக ரஜனி பெயரை என் பதிலில் இழுத்தேன்.

    இப்போதுதான் எலிக்குட்டியை வைத்துப் பார்க்கத் தோன்றியது. இது நம்ம ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி அல்லவா. மகரநெடுங்குழைகாதனை பற்றி கேலியாக எழுதுவதாகப்பட்டதால் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். இரு ராம்கிகளுமே மன்னிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. "அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29."

    எனக்கு 28 வயசு. எனக்கும் எல்லாம் ஞாபகத்துலே இருக்கு. துக்ளக்கெல்லாம் வெளிப்படையாக படிக்க பயந்த காலம். நீங்க குறிப்பிட்ட 1977-லே சீரணி அரங்கத்துலே சோ மீட்டிங்குக்கு நானும் போயிருந்தேன். மனுஷன் இப்பப் போலவே அப்பவும் அசத்தினார்.

    இப்ப இருக்கற இளம் பதிவர்கள் இதெல்லாம் உணர முடியாதுன்னுதான் நான் நெனக்கிறேன். உங்களோட இந்தப் பதிவு மனசுக்கு பிடிச்சிருக்கு.

    முனிவேலு

    ReplyDelete
  8. நன்றி முனிவேலு அவர்களே. சோ அவர்களை பற்றி பேச ஆரம்பித்தால் இந்த டோண்டு ராகவன் ஓய மாட்டான். இருந்தாலும் உங்களை போர் அடிக்க விரும்பாதலால் இத்தோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். பிறகு வந்து படுத்துவேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete