நிரந்தர பக்கங்கள்

5/08/2006

ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கை

ஐ.டி.பி.எல்.-லில் நான் இருந்தபோது ஒரு விஷயம் நடந்தது. எங்கள் ஜி.எம். ஒருவர் தனது 58 வயதில் ஓய்வு பெற்றார். எனக்கு ஒரே ஆச்சரியம். நான் அவரது வயது ஐம்பது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். இளமை தோற்றம் + சுறுசுறுப்பு நிறைந்த மனிதர். அவருக்கு நல்ல பார்ட்டி கொடுத்து வழியனுப்பினோம்.

ஒரு மாதம் கழித்து அவர் ஒரு வேலையாக அலுவலகம் வந்தார். எனக்கு ஒரே திகைப்பு. மனிதர் இப்போது 70 வயதினராக தோறம் அளித்தார். அலுப்பு நிறைந்த முகம். முழுத்தலையும் நரைத்திருந்தது. "என்ன சார் உடம்புக்கு" என்று நான் கேட்டேன். "அதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுதான் சோர்வாக இருக்கிறது" என்றார் அவர். அப்போது எனக்கு வயது 40. ஒரு நிமிடம் யோசித்தேன், ஏன் இவ்வாறு நடக்கிறது என்று. இந்த மனிதரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கம்பெனியே சகலமும். எப்போதும் வேலை, வேலை என்று ஆழ்ந்திருப்பார். வீட்டை கவனிக்கக் கூட நேரமின்றி இருந்திருக்கிறார். ஆனால் இப்போது? திடீரென வேலை இல்லை. வேறு பொறுப்புகளும் இல்லை. குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கு போயாயிற்று. இவரது தேவை குடும்பத்துக்கு இல்லை. ஆகவே தான் உபயோகமற்றவனாகி விட்டோம் என்ற காப்ளக்ஸே அவருக்கு வந்திருக்கிறது. சட்டென்று முதுமை தாக்கி விட்டது.

இவருக்கு இப்படியென்றால் பலருக்கு வேறுவித கவலை. பசங்கள் இன்னும் பெரியவர்களாகவில்லை, குடும்பத்துக்கு இவர் தேவை. ஆனால் திடீரென ஓய்வு வந்து விட்டது. அவர்கள் பாடு இன்னும் மோசம். அப்படிப்பட்ட ஒருவர் வாழ்க்கைதான் வியட்னாம் வீடு திரைப்படமாக சமீபத்தில் 1970-ல் வந்தது. சிவாஜி மிக அருமையாக நடித்திருப்பார். ஆனால் இப்பதிவு அப்படத்தைப் பற்றி இல்லை.

பிரச்சினை என்ன? மாணவர்கள் பரீட்சைக்கு தயார் செய்து, படித்து பாஸ் செய்கிறார்கள். பிறகு படிப்புக்கேற்ப வேலை தேட தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். வேலை காலத்தில் தங்களுக்கு பிரமோஷன் வருவதற்கான முஸ்தீபுகளையும் செய்கிறார்கள். எல்லாம் செய்பவர்கள், தங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரும் என்பதை எப்படி மறக்கிறார்கள்? திடீரென ஓய்வு தரும் அலுவலக ஆணையை கையில் வாங்கி ஏன் நிலை குலைந்து போகின்றனர்? ஏன் ஐயா இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? வருடங்கள் கடப்பதை தடுக்க முடியுமா? முன்கூட்டியே ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டாமா?

இதில் பெண்கள் பாடு சற்றே தேவலை போல் எனக்கு படுகிறது. அவர்கள் அலுவலக வேலையுடன் வீட்டு வேலையையும் சேர்ந்து பார்க்கின்றனர். ஆகவே ஓய்வுக்கு பிறகு அதை அவர்களால் ஆண்களை விட அதிக தைரியத்துடன் எதிர் கொள்ள முடிகிறது என்று தோன்றுகிறது. ஆனால் அவர்களுக்கு வருவது வேறு வித அழுத்தங்கள். ஐ.டி.பி.எல்,-லில் என்னுடன் வேலை செய்த ஒரு பெண்மணி விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்கு கணிசமான தொகை வரவேண்டியிருந்தது (சுமார் 4 லட்ச ரூபாய்கள்). அதை தன் கணவருக்கு கடனாகத் தருமாறு அவரது நாத்தனார் கேட்டார். அப்பெண்மணி என்னிடம் அது பற்றி ஆலோசித்தார். நாத்தனாரின் கணவர் அதற்கு வட்டி கொடுப்பதாகக் கூறியதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கு இதற்கு அவர் ஒருபோதும் ஒத்துக் கொள்ளலாகாது என்று அறிவுரை கூறினேன். அப்படியானால் நாத்தனாருடன் தனக்கு மனத்தாங்கல் வருமென அவர் கூற, அதற்கும் நான் பதில் வைத்திருந்தேன். எப்படியும் நாத்தனாரின் கணவர் ஒழுங்காக வட்டி எல்லாம் கொடுக்க மாட்டார், கொஞ்சம் கொஞ்சமாக அசலை திருப்பித் தருவதாக அப்புறம் கூறுவார். ஆகவே மனத்தாங்கல் வரத்தான் போகிறது, ஆகவே தன் கைப்பணத்தை பாதுகாத்துக் கொண்ட பிறகு அந்த மனத்தாங்கல் வரட்டுமே என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு யூனிட் ட்ரஸ்ட் மாதாந்திர வருமானத் திட்டத்தில் அதை போட்டு நிம்மதியாக இருந்தார். இது ஒரு விதிவிலக்கு. சாதாரணமாக பெண்களின் ஓய்வுத்தொகை இம்மாதிரி வாராக் கடன்களில் மூழ்குவதுதான் நட்க்கிறது.

இப்போது ஓய்வை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம். நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசிய கடமைகள் ஒன்றும் இல்லையென்றால், ஏதேனும் செயல்பாட்டை உண்டாக்கி கொள்வது நலம். வேறு வேலை தேடிக் கொள்வதும் புத்திசாலித்தனமே. நல்ல வருவாய் பெற்று வேறு ஏதேனும் பொழுது போக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம். கடமைகள் இன்னும் இருக்கும் பட்சத்தில் வேறு வேலைக்கு போயே ஆக வேண்டும். அது தன் திறமைக்கேற்றதாகவும் அதற்கேற்ற சம்பளம் தருவதாகவும் இருத்தல் நலம். இதையெல்ல்லாம் முன்பே திட்டமிடல் வேண்டும். ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகள் முன்னாலேயே இதற்கான பூர்வாங்க வேலைகளை துவக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் மனம் துறுதுறுவென்று இருக்க வேண்டும். வயதில் இளையவர்களுடன் நட்பு பூண்டு மனதை இளைமையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் சிறு வயதிலேயே கிழவன் போல நடந்து கொள்வார்கள். அவர்களது அண்மையை தவிர்க்க வேண்டும். ரிடையர்மெண்ட் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஒன்று விட்ட அத்திம்பேர் அல்லது மாமா தாத்தா சிபாரிசு செய்யும் பிளேடு கம்பெனிகளில் எல்லாம் பணத்தைப் போடக் கூடாது. இல்லாவிட்டால் தி.நகரில் பனகல் பார்க்கில் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தில் சேர வேண்டியிருக்கும். ஆகவே ஜாக்கிரதை.

இதெல்லாம் கூற எனக்கென்ன தகுதி என்று கேட்கிறீர்களா? நான் வாழ்வில் இரண்டு முறை ஓய்வு பெற்றவன். முதல் முறை 35 வயதில், சமீபத்தில் 1981-ல் மத்தியப் பொதுப்பணி துறையிலிருந்து. பிறகு இரண்டாம் முறை சரியாக பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ஐ.டி.பி.எல்.-லிருந்து விருப்ப ஓய்வு. முதல் முறை பெற்ற ஓய்வுக்காக இன்னும் எனக்கு பென்ஷன் வருகிறது. இரண்டாம் முறை நான் பெற்ற கணிசமானத் தொகை யூ.டி.ஐ. மாதாந்திர திட்டத்தில் போடப்பட்டு நல்ல மாத வருவாயைத் தந்தது. ஆகவே நான் எடுத்துக் கொண்ட முழுநேர மொழிபெயர்ப்பாளர் தொழிலில் டென்ஷன் இல்லாமல் என் முன்னேற்றத்தை திட்டமிட முடிந்தது. வாடிக்கையாளர்களுடன் தைரியமாக பேரம் பேச முடிந்தது. என் வேலையில் இருந்து கொண்டே ஓய்வு நேரத்தில் என் மொழிபெயர்ப்பு வேலைகள் செய்து வந்ததால் நான் விருப்ப ஓய்வு பெறும்போது என்னிடம் ஒரு பெரிய வாடிக்கையாளர் லிஸ்டே இருந்தது.

இப்போதுதான் நான் உண்மையாகவே அதிகம் வேலை செய்கிறேன். ஒரு நாளைக்கு கணினியின் முன்னால் 15 மணி நேரத்துக்கு குறையாது உட்கார்ந்து என் வேலையை செய்கிறேன். கூடவே தமிழ்மணத்தில் அவ்வப்போது அடிக்கும் கொட்டம் வேறு. பொழுது போக்கு, வேலை எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் இருக்கும் இந்த நிலை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த விஷயத்தில் நான் ரோல் மாடலாக வைத்திருப்பது குஷ்வந்த் சிங் மற்றும் சோ அவர்கள். அவர்களைப் பார்த்துத்தான் நானும் மனதை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க தீர்மானித்தேன்.

எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

59 comments:

  1. //ஒரு நாளைக்கு கணினியின் முன்னால் 15 மணி நேரத்துக்கு குறையாது உட்கார்ந்து என் வேலையை செய்கிறேன். கூடவே தமிழ்மணத்தில் அவ்வப்போது அடிக்கும் கொட்டம் வேறு.//

    ம்ம்.. கலக்குங்க சார்,
    ஆமா அதென்ன இந்த வயசுலயே ரிடையர்மெண்ட் பத்தியெல்லாம் பதிவு போடுறீங்க!

    :)

    ReplyDelete
  2. //முன்கூட்டியே ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டாமா? //

    உருப்படியான யோசனைகள்தான் கொடுத்துள்ளீர்கள். பிற்காலத்தில் எங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு! நன்றி!

    ReplyDelete
  4. மிக உபயோகமான பதிவு. மனசுல எப்பவுமே இளமையா இருங்கப்பான்றீங்க. அப்படி இருக்கிறவர் சொல்றதால இந்த அறிவுரைக்கு மதிப்பு அதிகம்.

    ஒரு விஷயம் சார், நீங்கள், சமீபத்தில் என்ற பதத்தை, 1982, 1986 நடந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது கூட பயன்படுத்துகிறீர்களே, சமீபத்தில் என்றால் கொஞ்ச நாட்களுக்கு , சரி விடுங்களேன், கொஞ்ச மாதத்திற்குள் நடந்திருக்க வேண்டுமல்லவா. அத்தனை வருடத்திற்கு முன் நடந்ததையும் அப்படி சொல்லலாகாதே...

    ஒரு வேளை, நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நொடி என்பார்களே, அதுபோல, வருடங்களை நீங்கள் மாதங்களாய் உணர்கிறீர்களோ...:-)

    ReplyDelete
  5. அரசாங்க வேலையில்தான் இந்த ஓய்வெல்லாம்.எங்களை மாதிரி தனியார் வேலையில் எல்லாம் ஒரேயடியா வீட்டுக்கு அனுப்பரதுதான்!

    ReplyDelete
  6. சார்,எங்க அப்பா கூட ரிடயர் ஆனபிறகு தான் ரொம்ப பிசி. நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கிறீர்கள்.
    பெண்களுக்கும் ரிடயர்மெந்ட் உண்டு. மருமகள் வீட்டோடு வரும்பொது. slight compromise and understanding from every sides shd solve the problem.
    நீங்கள் குறிப்பிடுவது போல் துடிப்பாக செயல் படலாம்.மனதளவிலாவது.

    ReplyDelete
  7. கிருஷ்ணா சொல்றார்
    <----
    ஒரு வேளை, நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நொடி என்பார்களே, அதுபோல, வருடங்களை நீங்கள் மாதங்களாய் உணர்கிறீர்களோ...:-)
    --->
    -))))

    ReplyDelete
  8. பிரயோசனமான அனுபவப் பதிவு.இதுபோன்ற அனுபவக் கட்டுரைகளை தாருங்கள்.

    இந்த வயதிலும் உழைப்பவர்களில் முன்மாதிரியாக நீங்கள் குறிப்பிட்டவர்களுடன் சேர்த்து கலைஞரையும் சேர்க்கலாம்தானே..

    ReplyDelete
  9. கிருஷ்ணா மற்றும் சிவா அவர்களே. "நான் சமீபத்தில் 1955-ல்" என்று எழுதிய பதிவில் இதெல்லாம் விவரமாகக் கூறியுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/1955.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. "இந்த வயதிலும் உழைப்பவர்களில் முன்மாதிரியாக நீங்கள் குறிப்பிட்டவர்களுடன் சேர்த்து கலைஞரையும் சேர்க்கலாம்தானே.."

    கண்டிப்பாக சேர்க்கலாம், அவ்வாறே கூறவும் செய்திருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. சிவா அவர்களே, தனியார் கம்பெனிகளில் உங்கள் பொறுப்பு அதிகமாக இருக்கும் அவற்றையெல்லாம் நிறைவேற்றி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாமே. எங்கு எந்த நிலையில் இருந்தாலும் அதை நமக்கு சாதகமாக்கிக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

    இதையேல்லாம் எந்த பள்ளியிலும் கற்க முடியாது, வாழ்க்கை என்னும் பள்ளியைத் தவிர.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. நன்றி நாமக்கல் சிபி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. Please read this http://muthuvintamil.blogspot.com/ without fail

    ReplyDelete
  14. நன்றி சிவபாலன் அவர்களே. மனு அவர்களே, நீங்கள் கூறுவது சரியே. மாட்டுப் பெண்ணை சொந்தப் பெண்ணாக நினைத்து செயல் புரிந்தால் நல்லதே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. சிவப்பிரகாசம் அவர்களே. இப்படி பொத்தாம் பொதுவாக முத்து (தம்ழினியின்) வலைப்பூவின் சுட்டியைக் கொடுத்தால் போதாது. எந்த குறிப்பிட்டப் பதிவு என்ன விஷயம் என்பதை தெளிவாகக் கூறவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. சமீபத்தில் நீங்கள் எழுதியதைப் படித்தேன். சில கேள்விகள் உண்டு. பின்னொரு சமயம் கேட்கிறேன். சுட்டியைச் சுட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. டோண்டு சார்,

    கூடிய சீக்கிரம் (இன்னும் 7 வருடத்தில்) நானும் ரிடையர் ஆகிவிடலாம் என இப்பவே திட்டமிட தொடங்கிவிட்டேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி

    ReplyDelete
  18. உங்கள் கேள்விகளை எதிர்பார்க்கிறேன் கிருஷ்ணா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. கால்கரி சிவா அவர்களே, ஓய்வு என்று நான் கூறுவது உத்தியோக வாழ்க்கைக்கே. மற்றப்படி வாழ்க்கையில் ஓய்வே இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது. வேலை செய்ய வேண்டும், பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டும், புதிதாகக் கற்க வேண்டும். கல்விக்கு கரையே கிடையாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. சமீபத்தில் என்று டோண்டு சார் கிண்டலாக கூட குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் மிகுந்த இன்வால்மேன்டோடு 15 மணி நேரம் வேலை செய்தால் காலம் போவதே தெரியாது. 1984 கூட சமீபமாக தெரியும்.

    ReplyDelete
  21. உண்மைதான் பாலசந்தர் அவர்களே. மைசூரில் நான் விமானப்படை நேர்காணலுக்கு சென்றிருந்தேன். மூன்று நாட்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது. ரொம்ப பிசி ஷெட்யூல். ரொம்ப நாளைக்கு அங்கிருந்த மாதிரி ஒரு ஃபீலிங். ஆனால் அதே சமயத்தில் நாட்கள் நகரும்போது அதை உணரவில்லை. ஒரு மாதிரியான கலவை உணர்ச்சி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. மனசாட்சி அவர்களே,
    சமீபத்தில் 1971-ல் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலைக்கு சேர்ந்த போது வயது 25. இப்போது என் மனதின் வயது அதே 25.

    தினம் புதிதாக ஏதாவதொன்றை கற்க ஆசை. உண்மை கூறப்போனால் தினம் அவ்வாறு செய்யும் வாய்ப்பு கிட்டுவதில்லை. ஆனால் கிட்டும்போது மனம் இன்னும் இளமையடைகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. நானும் என் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையை எப்பவோ முடிவு செஞ்சாச்சு.

    தினமும் ரெண்டு முறை கடலோரத்துலே 'வாக்' போகணும். மத்த நேரத்துக்கு இருக்கவே இருக்கு
    'எழுத்துப் பணி'. தமிழ்மணம் படிக்கறதுக்கேப் பாதி நாள் போதாதே! இதுலே அங்கங்கே
    பின்னூட்டம் வேற போடணுமா இல்லையா?:-)))

    ReplyDelete
  24. வாருங்கள் துளசி அவர்களே. ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கையை சந்தோஷத்துடன் அனுபவிக்க முக்கியத் தேவை பொருளாதார சுதந்திரம்.

    அதை உறுதி செய்து கொண்டால் பாதி கவலை தீர்ந்தது. பிறகு என்ன ஜாலிதானே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. நீங்கள் கூறுவதும் நல்ல யோசனைதான் நாட்டாமை அவர்களே. ஆனால் அதற்கு ரொம்ப முக்கியம் பொருளாதார சுதந்திரம். பிள்ளைகள், மாட்டுப் பெண்கள் தயவிலிருந்தால் அதெல்லாம் நடக்காது.

    "வீட்டில ஆயிரத்தெட்டு வேலை இருக்கு, பேரப் பசங்களை ஸ்கூலுக்கு கொண்டு விட்டு, அழச்சுண்டு வரலாம், எலெக்ட்ரிக் பில் கட்டலாம், அதெல்லாம் செய்யாம இந்தக் கிழம் சமூக சேவை செய்யறதாம்" என்று தோள்பட்டையில் மோவாயை இடித்துக் கொள்ளும் மருமகள்கள் இருந்தால், சமூக சேவையாவது புடலங்காயாவது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. நாட்டாமை அவர்களே,

    நீங்கள் சொன்ன விசுவின் அதே படத்தை மனதில் வைத்துத்தான் நானும் எனது பின்னூட்டத்தையே இட்டேன். இப்போது இப்பதிவின் இரண்டாம் பகுதியை எழுதுவேன், இதையே பொருளாக வைத்து.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. கடைசியிலே பொருளாதாரம்னு மெட்ரீயலிஸ்டிக் வாழ்க்கையை ஏத்துக்க சொறீங்களே, தெய்வீகம் அது இதுன்னு ஸ்பிர்ட்சுவல்ல போனா என்ன?

    ReplyDelete
  28. வெளிகண்ட நாதர் அவர்களே, நீங்கள் கூறுவது சரியே. ஆனால் அதற்கும் பொருள் வேண்டுமே.

    சும்மாவா கூறினார் ஐயன் வள்ளுவர்,
    "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,
    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லாகியாங்கு" என்று? அவ்வுலகத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. //
    "வீட்டில ஆயிரத்தெட்டு வேலை இருக்கு, பேரப் பசங்களை ஸ்கூலுக்கு கொண்டு விட்டு, அழச்சுண்டு வரலாம், எலெக்ட்ரிக் பில் கட்டலாம், அதெல்லாம் செய்யாம இந்தக் கிழம் சமூக சேவை செய்யறதாம்" என்று தோள்பட்டையில் மோவாயை இடித்துக் கொள்ளும் மருமகள்கள் இருந்தால், சமூக சேவையாவது புடலங்காயாவது.//

    என்னங்க, வீட்டுவேலை செய்வதென்றால் அவ்வளவு கசப்பா ? ஒய்வுகாலத்திலாவது குடும்பத்தை பூரணமாய் இரசிக்கலாம் என்று இருக்கிறேன். பேரப்பிள்ளைகளின் மழலையையும் வளர்ச்சியையும் பார்த்து மகிழ வேண்டாமா ?
    மற்றபடி பொருளாதார சுதந்திரம் ஓய்வுபெற்றவருக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் வேண்டும். இல்லையென்றால் மரியாதை கெட்டுவிடும். உங்கள் உதாரணம்தான் சரியில்லை.

    ReplyDelete
  30. "என்னங்க, வீட்டுவேலை செய்வதென்றால் அவ்வளவு கசப்பா ? ஒய்வுகாலத்திலாவது குடும்பத்தை பூரணமாய் இரசிக்கலாம் என்று இருக்கிறேன். பேரப்பிள்ளைகளின் மழலையையும் வளர்ச்சியையும் பார்த்து மகிழ வேண்டாமா?"

    அதை மரியாதையுடன் செய்ய முடிந்தால் சந்தோஷமாகச் செய்யலாம். ஓய்வு பெற்றவரை வேலைக்காரர்களாக நடத்தும் உறவினர் பற்றித்தான் நான் பேசினேன். இது பற்றி இன்னொரு பதிவு இப்போது தயாரித்து வருகிறேன். அது இன்னும் விளக்கிக் கூறும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. அருமையான பதிவு சார் இது.... விரைவில் ரிடையராகப் போகும் என்னைப் போன்றவர்களுக்கு இது ரொம்ப உபயோகமாக இருக்கும்.....

    (நீங்கள் மட்டும் 30 வருடத்துக்கு முன் நடந்ததை எல்லாம் சமீபத்தில் என்று சொன்னால், நாங்களெல்லாம் 30 வருடத்துக்கு அப்புறமா நடக்கப்போவதை விரைவில் என்று சொல்லக்கூடாதா?)

    ReplyDelete
  32. "நீங்கள் மட்டும் 30 வருடத்துக்கு முன் நடந்ததை எல்லாம் சமீபத்தில் என்று சொன்னால், நாங்களெல்லாம் 30 வருடத்துக்கு அப்புறமா நடக்கப்போவதை விரைவில் என்று சொல்லக்கூடாதா?"

    தாராளமாகச் சொல்லலாம். என்னுடைய ரெகார்ட் "சமீபத்தில் 1952-ல்"

    இன்னுமொரு விஷயம், 30 வருடங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஓடி விடும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. <----சிவப்பிரகாசம் அவர்களே. இப்படி பொத்தாம் பொதுவாக முத்து (தம்ழினியின்) வலைப்பூவின் சுட்டியைக் கொடுத்தால் போதாது. எந்த குறிப்பிட்டப் பதிவு என்ன விஷயம் என்பதை தெளிவாகக் கூறவும்.---->
    அந்தப் பதிவில் அவர் உங்களுடய இரண்டாவது பிரதியை பற்றி எழுதியிருந்தார்.வலைப் பதிவாளர் அந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொன்டதாகவும், மற்றவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடாமல் இருந்தால் தானும் அதுபோல் நடந்து கொள்வதாகவும் சொல்லியிருந்தாரம்("முதல்ல அவனை நிறுத்தச் சொல்லு" டயலாக் மாதிரி).அதனால் என்னால் அவரைப் பற்றி குறிப்பிட முடியவில்லை. நான் இட மாறுதல் பெற்று புதிய இடத்துக்கு வந்துள்ளதால் உடனே உங்கள் பதிலை பர்க்க முடியவில்லை.
    பின் குறிப்பு : நான் அதே சிவா-தான். முழுப் பெயரையும் போட்டுள்ளேன்.ப்ளாக்கர் எண்ணை சோதித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  34. அந்தப் பதிவில் அவர் உங்களுடய இரண்டாவது பிரதியை பற்றி எழுதியிருந்தார்.
    Are you by any chance referring to my practice of copying my comments elsewhere to a special posting of mine? Its purpose is to solely for proving that the concerned comment of mine was really mine. This is to protect my name as some "wellwishers" were in the habit of freely expressig their sexual inclinatins under the name of Dondu Raghavan.

    That's all. Muthu has been appraised of this by me.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  35. எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகாதவர். பணியில் இருந்தவரை வங்கியில் இருந்து இரவு 10 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்.
    பின்னர் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, குடும்பஸ்தர்கள் எல்லாம் வெவ்வேறு சிந்தனையில் இருக்க இவர் நிம்மதியாக உறங்கிவிடுவார்.
    பணி ஓய்வு பெற்றதும் அவர் சிறிதும் கவுரவம் பார்க்காமல் அந்த மெஸ்ஸிலேயே காசு வாங்கிப் போடும் பணியில் சேர்ந்த்து விட்டார்.
    பென்ஷன், மெஸ் வருமானம், இலவசச் சாப்பாடு என்று நிம்மதியாக இருக்கிறார்.
    வருடக்கடைசியில் சிறு வணிக நிறுவனங்களுக்கு கணக்கு வழக்குகளை முடித்துக் கொடுத்தும் சம்பாதிக்கிறார்.
    வறட்டுக் கவிரவம் பார்க்காமல் இருப்பதால் எப்போதுமே மகிழ்சிதான்.
    மொத்தத்தில் அவர் மற்றவர்களை விட நிம்மதியாக இருக்கிறார்.

    ReplyDelete
  36. பென்ஷன், மெஸ் வருமானம், இலவசச் சாப்பாடு என்று நிம்மதியாக இருக்கிறார்.
    வருடக்கடைசியில் சிறு வணிக நிறுவனங்களுக்கு கணக்கு வழக்குகளை முடித்துக் கொடுத்தும் சம்பாதிக்கிறார்.
    வறட்டுக் கவிரவம் பார்க்காமல் இருப்பதால் எப்போதுமே மகிழ்சிதான்.
    மொத்தத்தில் அவர் மற்றவர்களை விட நிம்மதியாக இருக்கிறார்.

    அப்படித்தான் இருக்க வேண்டும் மகேஸ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. ஐயா
    என் தந்தை இந்தமாதம் முதல்தேதி ரிட்டையர் ஆனார், இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது, அவரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அறிந்துகொண்டேன் மிக்க நன்றி ஐயா....
    ஸ்ரீஷிவ்...:)

    ReplyDelete
  38. ஸ்ரீஷிவ் அவர்களே,

    நான் பதிவுகள் போட ஆரம்பித்து ஒர் ஆண்டுக்கு மேல் ஆயிற்று. ஆயிரக்கணக்கில் இதுவரை பின்னூட்டங்கள் வந்துள்ளன. உங்களது இந்தப் பின்னூட்டம் எனக்கு அளித்த மன நிறைவை வெகு சில மற்றப் பின்னூட்டங்களே தந்துள்ளன.

    உங்கள் தந்தை தன் வாழ்க்கை முறையில் ஒரு புது மாறுதலைச் சந்திக்கிறார். அவர் அதை சுலபமாக ஏற்றுக் கொள்ள உதவி புரியவும். அவருடன் அடிக்கடி பேசவும். அவருடைய முக்கியத்துவத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. In his BLOG, Muthu Thamizhini,mentioned about your Duplicate Dondu on his 8-May-06 post and he gave his phone no. to contact. Now, it is not available on his BLOG. I thought it may of your interest.That is why I informed you.Now, it is no use as it is removed from his BLOG.

    ReplyDelete
  40. <-----
    நீங்கள் சொன்ன விசுவின் அதே படத்தை மனதில் வைத்துத்தான் நானும் எனது பின்னூட்டத்தையே இட்டேன். இப்போது இப்பதிவின் இரண்டாம் பகுதியை எழுதுவேன், இதையே பொருளாக வைத்து.
    --------->
    என் நண்பரின் அப்பாவுக்கு நண்பரின் சம்பளம் மட்டும் அல்லாமல்,நண்பரின் மனைவியின் சம்பளமும்
    வேன்டுமாம்.இது எப்படி இருக்கு?
    இப்போவெல்லாம் பெரிசுகள் ரொம்ப விபரமானவர்கள்.
    நடப்பு காலத்துக்கு வாருங்கள்.

    ReplyDelete
  41. சிவப்பிரகாசம் அவர்களே,

    அடாவடியாக யார் இருந்தாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதையும் கூறி விடுகிறேன். நீங்கள் கூறும் சினோரியோவும் நடக்கக் கூடியதே.

    அடாவடிக்குப் பணியாதீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பி.கு. முத்து தமிழினியின் நம்பர் எனக்குத் தெரியுமே.

    ReplyDelete
  42. அன்பின் ஐயா
    தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி, ஆனால் இன்னும் ஆப்பீஸ், ஆப்பீஸ்னு போய்க்கொண்டே இருக்கின்றார்,என் தாயாரும் எதுவும் கேட்பதில்லை என்று சொன்னார், வீட்டில் அமர்ந்தால்தான் போர் அடிக்கும் என்று நினைக்கின்றேன், இந்த நேரத்தில் அவருக்கு நான் ஏதேனும் ஆலோசனைகள் வழங்கலாமா?

    ReplyDelete
  43. <----
    நீங்கள் கூறும் சினோரியோவும் நடக்கக் கூடியதே.--->
    என் சிற்றறிவுஎன் சிற்றறிவுக்கு தெரிந்த வரையில், இப்போதுள்ள அப்பாக்களில் நீங்கள் சொல்வது மாதிரி அப்பாக்கள் ரொம்ப குறைவு.

    ReplyDelete
  44. "வீட்டில் அமர்ந்தால்தான் போர் அடிக்கும் என்று நினைக்கின்றேன், இந்த நேரத்தில் அவருக்கு நான் ஏதேனும் ஆலோசனைகள் வழங்கலாமா?"

    ஆலோசனைகள் கேட்டால் மட்டுமே தரவும். ஆனால் நீங்கள் தாராளமாக அவரிடம் ஆலோசனை தருமாறு கேட்கலாம். அதன்படி நடக்கவும் செய்யலாம்.

    நீங்கள் ஒரே பிள்ளையா? உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? கூட்டுக் குடும்பமாக இருக்கிறீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. "இப்போதுள்ள அப்பாக்களில் நீங்கள் சொல்வது மாதிரி அப்பாக்கள் ரொம்ப குறைவு."

    அடாவடி அப்பாக்கள்தான் இப்போது அதிகம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  46. அடாவடியோ,நயந்தொ, தான் சம்பாதித்த சொத்து மட்டுமல்ல,தன் பிள்ளைகளின் சொத்தும் தன்னிடமே இருக்க வேன்டும் என்று நினைக்கும் அப்பாக்கள்தான் அதிகம். இது நகர்ப்புறங்களில் வசிக்கும்/வெலை பர்க்கும் அப்பாக்களுக்கு நூறு சதம் பொருந்தும். இது ஒரு வகையான பாதுகாப்பற்ற உணர்வினால் என்று நினைக்கிறேன்.இது நடவாதபோதுதான் "நீ வேறு நான் வேறு" டயலாக் எல்லாம்

    ReplyDelete
  47. "அடாவடியோ,நயந்தொ, தான் சம்பாதித்த சொத்து மட்டுமல்ல,தன் பிள்ளைகளின் சொத்தும் தன்னிடமே இருக்க வேன்டும் என்று நினைக்கும் அப்பாக்கள்தான் அதிகம்."
    Do you really think so? Interesting observation. I have only heard of the saying பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  48. "அடாவடியோ,நயந்தொ, தான் சம்பாதித்த சொத்து மட்டுமல்ல,தன் பிள்ளைகளின் சொத்தும் தன்னிடமே இருக்க வேன்டும் என்று நினைக்கும் அப்பாக்கள்தான் அதிகம்."

    Do you really think so? Interesting observation. I have only heard of the saying பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.//

    அப்பா,அம்மா டார்ச்சர் மாமியார் மருமகள் சண்டையோடு முடிந்து விடும்.அல்லது பெரும்பாலும் மகளுக்கு ஏதாவது அதிகமாக செய்வார்கள்.ஆனால் பெரும்பாலும் சொத்தை மகனுக்கு கொடுப்பது தான் நடக்கும்.

    அன்புடன்
    செல்வன்

    ReplyDelete
  49. நான் இப்பதிவை ஆரம்பிக்கும்போது ரிடயர் ஆகிறவர்கள் தங்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் கூறத் துவங்கினேன்.

    ஆனாலும் மற்றவர்களை அளவுக்கதிமாக ஆளுமை செய்வது என்பது எல்லாத் தரப்பிலிருந்தும் நடக்கிறது என்பதையும் சிலர் எடுத்துக் காட்டினர்.

    ஆகவே இப்போது கூறுவேன், அடாவடி செய்வது தவறு என்றால், மற்றவர் தம் மேல் செய்யும் அடாவடிக்குப் பணிவது அதைவிட அதிகம் தவறு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. எப்படியும் நாத்தனாரின் கணவர் ஒழுங்காக வட்டி எல்லாம் கொடுக்க மாட்டார், கொஞ்சம் கொஞ்சமாக அசலை திருப்பித் தருவதாக அப்புறம் கூறுவார். ஆகவே மனத்தாங்கல் வரத்தான் போகிறது, ஆகவே தன் கைப்பணத்தை பாதுகாத்துக் கொண்ட பிறகு அந்த மனத்தாங்கல் வரட்டுமே என்று கூறினேன்//

    நூத்துல ஒரு வார்த்தை சார். இந்த கருவை வைத்தே நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.

    இத்தகைய உறவினர்கள் எல்லோர் குடும்பத்திலும் இருப்பார்கள். நம் கையில் கொஞ்சம் பணம் வந்துவிட்டால் அவர்களுக்கு மூக்கில் வேர்த்துவிடும். வாங்கும்போது இருக்கும் நயமான பேச்சு பணம் கைமாறியதும் முற்றிலுமாக மாறிவிடும்.

    பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான திருப்பம்.. பெண்களைப் பெற்றவர்களென்றால் முன்கூட்டியே நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துவைத்திருப்பார்கள். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களுடைய பாடு இருக்கிறதே.. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று காத்திருந்து.. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரை வைத்து ஒரு நீஈஈஈண்ட தொடரே எழுதலாம்.. நான்கு பிள்ளைகள்.. எல்லோரும் நல்ல நிலையில்.. ஆனால் என் நண்பரோ சென்னையிலுள்ள ஒரு வயோதிகர் இல்லத்தில்.. அவரை அவ்வப்போது பார்ப்பதும் என்னைப் போன்ற நண்பர்கள்தான்.. இருந்த ஒரே வீட்டையும் பிள்ளைகளின் பேச்சைக்கேட்டு விற்று.. முழுப்பணத்தையும் பிள்ளைகளிடமே இழந்து.. கொடுமை சார்.. இத்தனைக்கும் அந்த காலத்திலேயே ஐந்திலக்க ஊதியத்தை ஈட்டியவர். நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்..ஹூம் ரொம்பவும் நல்லவங்களா இருந்தாலும் பிரச்சினைதான் சார்..

    ReplyDelete
  51. வாருங்கள் ஜோசஃப். வாழ்க்கை என்பது நம் கடைசி நாள் வரை ஒரு யுத்தமே. ஆகவே தன் கையில் இருக்கும் அஸ்துரங்களைக் கடைசி வரை கீழே போடக்கூடாது என்பது மிக முக்கியம்.

    இது எல்லோருக்க்கும் பொருந்தும். ஓய்வு பெறுபவர்களுக்கு அதிகம் பொருந்தும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  52. <---------
    ..... ஆனால் இன்னும் ஆப்பீஸ், ஆப்பீஸ்னு போய்க்கொண்டே இருக்கின்றார்,என் தாயாரும் எதுவும் கேட்பதில்லை என்று சொன்னார்,
    -------->
    சிரிஷிவ் அவர்களே, அலுவலகத்துக்கு போவது மாதிரி ஒரு சுகம் கிடையாது. முன்பு எனக்கு வேலைப்பளு கம்மியாக இருந்தபோது, ஏன் வாரதுக்கு இரண்டு விடுமுறை நாட்கள் என்று வருத்தப்பட்டதுண்டு.இப்பொது வேலைப்பளு அதிகமாக இருப்பதால், எப்போது விடுமுறை நாள் வரும் என்று காத்திருக்கிறேன். டோண்டு மாதிரி ஓய்வுக்குப்பின் வேறு வேலை செய்து தன்னை பிசியாக்கிகொள்வதெல்லம் அசாதரமாணது.

    ReplyDelete
  53. <----------
    அல்லது பெரும்பாலும் மகளுக்கு ஏதாவது அதிகமாக செய்வார்கள்.ஆனால் பெரும்பாலும் சொத்தை மகனுக்கு கொடுப்பது தான் நடக்கும்.
    --------------->
    செல்வன்,ஆம்,அதனால்தான், பிள்ளைகளின் வருமானம் தனக்கே வர வேண்டும் என்று நினைக்கிறாற்கள்.அந்த வருமானத்தில் சொத்து சேர்த்தால்,பிறகு பிள்ளைகளுக்குதானே கொடுத்தாக வேண்டும் - "நாங்க போறப்ப(இறந்த பிறகு).உங்களுக்கு வச்சிட்டு போவாம கொண்டா போவப்போறோம்.

    ReplyDelete
  54. <-----------
    Do you really think so? Interesting observation. I have only heard of the saying பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
    ------------->
    நீங்கள் பார்ப்பது உங்களுக்கு தெரிந்த கோணங்கள் மட்டுமே.அதனால்தான் எனக்கு தெரிந்த,உங்கள் கோணங்களிருந்து மாறுபட்ட கோணங்களை காட்டுவதற்காகவே நான் பின்னூட்டமிடுகிறேன்.

    ReplyDelete
  55. "டோண்டு மாதிரி ஓய்வுக்குப்பின் வேறு வேலை செய்து தன்னை பிசியாக்கிகொள்வதெல்லம் அசாதரமாணது."

    37 மற்றும் 47 வயதில் ஓய்வு பெற்றதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதுவும் 35 வயதில் பெற்ற ஓய்வுக்கான பென்ஷன் இப்போதும் வருவதுதான் குருட்டு அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். இது பற்றி நான் போட்டப் பதிவைப் பார்க்கவும். http://dondu.blogspot.com/2006/03/blog-post.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. "நீங்கள் பார்ப்பது உங்களுக்கு தெரிந்த கோணங்கள் மட்டுமே."

    நிச்சயமாக. வாழ்க்கை என்பது கதையை விட அதிக அதிசயங்களை உள்ளடக்கியது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  57. <--------
    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரை வைத்து ஒரு நீஈஈஈண்ட தொடரே எழுதலாம்.. நான்கு பிள்ளைகள்.. எல்லோரும் நல்ல நிலையில்.. ஆனால் என் நண்பரோ சென்னையிலுள்ள ஒரு வயோதிகர் இல்லத்தில்..
    ------->
    ஜொசப் அவர்களே, என் தந்தை 13 வருடங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். அவர் 20 வருடங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் செலவில் அரசங்க கடனில் வீடு கட்டினார். இப்பொது அதன் மதிப்பு ரூ.15/20 லட்சம் இருக்கும்.எங்கள் எல்லோருக்கும் கடமைகள்(படிப்பு,வேலை,திருமனம்) முடிந்து விட்டன.கணிசமான தொகை ஓய்வுதியமாக வருகிறது. வாடகையும் வருகிறது.என் தந்தைக்கு வேறு கடன் எதுவும் இல்லை. என் தம்பி அதே வீட்டிலெயே ஒரு பகுதியில் தங்கி இருக்கிறான். அவருக்கு உடல் நிலை சரியில்லை எனில், அவன் தான், மருதுவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அனாலும், அவர் நிம்மதியாக/சந்தொஷமாக இல்லை.
    ஜொசப்,டோன்டு அவர்களே,
    என்ன காரணம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

    ReplyDelete
  58. நானே சொல்லிவிடுகிறேன்.அவருடைய அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாம்.
    அவருடைய ஓய்வுக்கு முன், எனக்கு இந்த மாதிரி அப்பா கிடைப்பதற்க்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருன்ந்தேன்.ஓய்வுக்குப் பின் எல்லாமே மாறி விட்டது."சொன்னதை செய். கேள்வி கேட்காதே" என்று அடாவடியாக பேசுறார்.இவ்வளவு இருந்தும், அவரால் நிம்மதியாக/சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எல்லாம் இறைவன் செயல்.பெத்த மனம் பித்துதான். ஆனால் பிள்ளையின் மேலுள்ள பாசத்தினால் அல்ல.அது சாதரண பித்துதான். இல்லை.முழுக் கதையும் எழுதினால் நன்றாக இருக்காது. சுவாரஸ்யமாகவும் இருக்காது.டோண்டு அவர்களே, இப்படியும் ஓய்வுக்குப்பின் நடக்கிறது என்று உங்களுக்கு/மற்றவர்களுக்கு தெரிந்து கொள்வதற்க்காக இதையெல்லாம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  59. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது சிவப்பிரகாசம் அவர்களே. உங்கள் அன்னை இருக்கிறார் அல்லவா? அவர் என்ன கூறுகிறார்?

    நான் சொன்னது ஒரு சினோரியோவை வைத்துத்தான். இப்போது அதற்கு நேர் எதிர் சினோரியோ தருகிறீர்கள். அதையும் நான் சொன்னது மாதிரி எதிர்க்கொள்ள வேண்டியதே. அதாவ்து அடாவடிக்கு பணியக்கூடாது. அன்புக்கு பணியலாம்.

    வேண்டுமானால் இப்பதிவை அவரிடம் காட்டுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete