நிரந்தர பக்கங்கள்

3/16/2007

தாய்மொழி வெறியர்கள்

நான் சமீபத்தில் 1975-ல் செய்த முதல் மொழிபெயர்ப்பு வேலையே துபாஷி வேலைதான். மார்ச் மாதம். அப்போது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் Oberstufe வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். பிரெஞ்சு இன்னும் கற்கவில்லை. அந்த ஆண்டு ஜூலை மாதத்தில்தான் அதை ஆரம்பிக்கப் போகிறேன் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. அது வேறு கதை. இப்போது நான் கூறவந்ததைக் கூறிவிடுகிறேன்.

திடீரென Gaitonde என்ற தோல் பதனிடும் கம்பெனிக்கு ஜெர்மன் துபாஷி தேவைப்பட்டது. மேக்ஸ்ம்யுல்லர் பவன் நிர்வாக அதிகாரி துளிக்கூட தயக்கம் காட்டாது என்னை சிபாரிசு செய்து விட்டார். எனக்கு சற்றே உதறல்தான். ஆனால் தேசிகன் என் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையை பார்த்தபின் நானும் துணிந்து விட்டேன். போனேன், வேலை செய்தேன்.

ஆரம்பத்திலேயே ஜெர்மன் விருந்தாளி என்னிடம் கூறிவிட்டார். அவர் தனது ஆங்கில அறிவை மேம்படுத்துவதில் இருந்ததால் தான் அதிகம் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கப் போவதாகவும் ஆகவே நான் அவருக்கு அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளை எடுத்து கொடுத்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். பணவிஷயம் பற்றிப் பேசும்போது மட்டும் மனிதர் ஜெர்மனில்தான் பேசினார்.

நான் பார்த்த ஜெர்மானியர் முடிந்த வரைக்கும் தாங்களே ஆங்கிலம் பேசி என்னைப் போன்ற துபாஷிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டனர். அவர்களை துரோகிகள் என்று நான் பாதி விளையாட்டாகவும் பாதி வினையாகவும் கூறுவதுண்டு. அப்போதிலிருந்து இன்று வரை நான் செய்த ஜெர்மானிய துபாஷி வேலைகள் ஃபிரெஞ்சு துபாஷி வேலைகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பிரெஞ்சுக்காரர்கள்? ஆங்கிலம் தெரிந்தாலும் அதில் பேச விரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாய்மொழிப் பற்று அவர்களுக்கு. அவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். என் போன்றவர்களுக்கு வேலை கிடைக்கிறதல்லவா? ஹி ஹி ஹி.

அவர்களது மொழிவெறிக்கு ஒரு உதாரணம் Gerge Pompidou என்பவர். அவர் ஃபிரான்ஸின் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடந்த விஷயம் இது. அப்போது இங்கிலாந்து ஐரோப்பிய பொதுச் சந்தைக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒத்து கொண்ட நிலையில் ஃபிரான்சு மட்டும் முட்டுக்கட்டை போட்டது.

அப்போது Pompidou சொன்னார். "இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தால், ஐரோப்பிய சந்தையின் பொது மொழியாக ஆங்கிலம் வந்து விடும். எனக்கு அது பிடிக்கவில்லை" என ஒரு குண்டைப் போட்டார். அச்சமயத்தில் சில ஃபிரெஞ்சுக்காரர்களுக்கே இது கொஞ்சம் ஓவராகப் பட்டது. ஒரு பத்திரிகையில் இவ்வாறு தலைப்பு குடுத்தார்கள். "Monsieur le Président, vous êtes chauviniste!!" (குடியரசுத் தலைவர் அவர்களே, நீங்கள் ஒரு வெறியர்). அதற்காகவெல்லாம் அவர் அசரவில்லை. உண்மையைத்தானே கூறுகிறார்கள் என்று விட்டுவிட்டார் போல.

எது எப்படியானாலும் பிரெஞ்சுக்காரர்களுடன் ஒப்பிடும்போது நாம் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கித்தான் இருக்கிறோம். எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கப்பல் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையே எடுத்து கொள்வோம். பழந்தமிழர்கள் கடற்பயணங்களில் விரும்பி ஈடுபட்டவர்கள். கப்பல்களை கட்டி, கடலில் செலுத்தியவர்கள். நான் கூறுவது சோழர்கள் காலத்தை. கண்டிப்பாக கப்பலின் எல்லா பகுதிகளுக்கும் தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள். அவற்றை கண்டறிந்து இக்காலக் கப்பல்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்க முடியாதா? உதாரணம் மாலுமி, மீகாமன், சுக்கான், நங்கூரம் போன்றவை.

அதைத்தான் ஃபிரெஞ்சுக்காரர்களும் செய்கிறார்கள். பல புதிய தொழில்நுட்ப ஆங்கில வார்த்தைகளை முதலில் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். பிறகு அவற்றுக்கேற்ற பிரெஞ்சு வார்த்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். நம்ம வைகைப்புயல் ஒரு படத்தில் சொன்னது போல இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்க போல.

உதாரணத்துக்கு:
Walkman --> Baladeur
Email --> Courriel
Spam --> Pourriel or Polluriel
Hardware --> Matériel
Software --> Logiciel

இந்த மாதிரி ஒக்காந்து யோசிக்கறதுக்குன்னே எனக்கு தெரிந்து இரண்டு அமைப்புகள் உள்ளன. அவை:

Académie Française,

L'enrichissement de la langue française (ELF)

நிஜமாகவே உக்காந்துதான் யோசிக்கிறாங்க. அவ்வப்போது பயங்கர சண்டையெல்லாம் ஏற்படும். அது வேறு கதை. ஆனால் ஒன்று யாராவது சரியான வார்த்தையை உபயோகிக்காவிட்டால் அவர்களுக்கு சங்குதாண்டி. அதே போல பெயர்ப்பலகை வைக்கும்போது ஃபிரெஞ்சில் இல்லையேன்றால் கையில் அகப்பட்டதை வெட்டி விடுவார்கள்.

திடீரென ஏன் இப்பதிவைப் போட்டேன்? காரணம் இருக்கிறது. நான் இப்போது மொழிபெயர்த்து கொண்டிருக்ப்பது ஒரு ஃபிரெஞ்சு கட்டுரை. அது பிளாஸ்டிக் பொருட்கள் பற்றியது. அதில் திடீரென Plasturgiste என்ற வார்த்தை வந்தது. பார்த்த உடனேயே புரிந்து விட்டது. மெடல்லர்ஜி நிபுணர்களை நாம் மெடல்லர்ஜிஸ்டுகள் என்று கூறுவது போல இங்கு பிளாஸ்டிக் தொழில் நுட்பம் தெரிந்தவர்களை பிரெஞ்சில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் தொழ்யில் நுட்பங்களௌக்கிடையே பல வார்த்தைகள் பொது. மோல்ட், காஸ்டிங் போன்றவை. இது பற்றி உடனே நான் மரபூராருக்கு (ப்ளாஸ்டிக்சந்திரா) ஃபோன் செய்து கேட்டபோது ஆங்கிலத்தில் அவ்வாறு கூறுவதில்லை எனக் கூறிவிட்டார். இருப்பினும் இந்த வார்த்தை என்னைக் கவர்ந்தது. பிளாஸ்டிக் டெக்னாலஜிஸ்ட் என்று கூறுவதை விட இது அழகாகத்தானே உள்ளது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

45 comments:

  1. Superrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. Dear Dondu

    I love you.

    Nameetha. ( tamil Actress)

    ReplyDelete
  3. அன்புள்ள திரு டோண்டு அவர்களே,
    தங்கள் வலைப்பூவை சமீபகாலமாகப் படித்து வருகிறேன்.என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில வலைப்பூக்களில் முதன்மையானதாக உள்ளது.ஒரு வாசகன் என்ற முறையில் எனது எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
    இங்கிலாந்துக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையில் ஒரு நதி உள்ளதாம்.இங்கிலாந்துக்கரையில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியுமாம்.ஃபிரஞ்ச் மொழி சுத்தமாகத் தெரியாதாம்.அக்கரையில் அப்படியே உல்டாவாம்.வாஸ்தவமா?அவ்வளவு மொழி வெறியா?

    ReplyDelete
  4. Plasturgiste என்ற சொல் பற்றிய விவாத்தில் திடீரென நமீதாவுக்கு உங்கள் மீது காதல் ஏற்பட்டு விட்டது போலும். டோண்டு சார், என்ன பதில் கூறப்போகிறீர்கள்?

    ஏன் இந்த வம்பெல்லாம் உங்களுக்கு?

    ReplyDelete
  5. தங்கள் வேதனையும், இங்கு ஒரு விவாதத்தைத் துவக்கவேண்டி நீங்கள் படும் பாட்டையும் பார்க்கிறேன். இது ஒரு நல்ல பதிவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தப்பதிவின் நோக்கமும் இதன் உட்கருத்தும் சற்றும் நல்லதல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

    மொழி என்பது ஒருவன் தான் தகவல் பரிமாற ஒரு கருவியாக பயன்படுத்தத்தொடங்கினர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மொழியை ஒரு கருவியாகப்பார்க்காமல் ஒரு கலையாகப்பார்க்கத்தொடங்கியது கவிதைகளும் கதைகளும் தொடங்கிய பின்னரே.

    ஒரு மொழி ஒரு பகுதியை ஆக்ரமிக்கும்போது அதன் கலாசாரத்தையும் விதைக்கிறது என்பதும் மறுக்கமுடியாததே. எனவே ரஷ்யர்கள் செய்ததை சரி என்றே எண்ணத்தோண்றுகிறது.

    ஆனால் அதன் தொடர்ச்சியாக தாங்கள் கூறிய அடுத்தவன் கண்டுபிடிப்புக்கு நாம் பெயர்வைப்பது என்றால் அதைவிட வெட்கக்கேடானது எதுவும் இல்லை. தர்க்கரீதியாகப்பார்த்தாலும் லிப்டிற்கு நாம் மின்தூக்கி என்று சொல்வது அராஜகத்தின் உச்சம் என்றுதான் சொல்வேன். அப்போது ப்ளாஸ்டிக் முதலியவற்றிற்கு என்ன பெயர் சொல்லப்போகிறோம்?

    இது தேவை இல்லாத வேலை. அடுத்தவன் குழந்தைக்கு நாம் பெயர்வைப்பது போலத்தான்.

    ReplyDelete
  6. ஹ்ம்ம்...நல்லாத்தான் இருக்கு. ஆனா இப்ப தமிழில் ஆங்கில சொற்கள் ஒரு பெரிய அளவில ஆக்கிரமிப்பு செய்திருப்பது என்னவோ நிஜமே. ஆனால் இன்றைய சூழலில் மாறுதல்களுக்கு எத்தனை பேர் ஒத்து வருவார் எனதான் தெரியவில்லை. வந்தால் நன்றாகத் தான் இருக்கும்!

    //Dear Dondu

    I love you.

    Nameetha. ( tamil Actress)//

    ஹிஹிஹிஹெஹேஏஏஏ

    நம்மூர்ல எத்தனை தமிழ் நடிகைகளுக்கு டமில் தெரியும்? அதுவும் நமீதாவுக்கு சத்தியமா சுட்டுப் போட்டாலும் டமில் வராது!

    ReplyDelete
  7. //இங்கிலாந்துக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையில் ஒரு நதி உள்ளதாம்.இங்கிலாந்துக்கரையில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியுமாம்.ஃபிரஞ்ச் மொழி சுத்தமாகத் தெரியாதாம்.அக்கரையில் அப்படியே உல்டாவாம்.வாஸ்தவமா?அவ்வளவு மொழி வெறியா?//

    அது நதி இல்லை சார். அதற்கு பெயர் English Channel.
    ஆங்கிலேயர்கள் ஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள். ஆகவே அவர்களது மொழி உலகெங்கும் பரவியது. மற்ற மொழிகளை கற்பதில் சோம்பல் ஆனால் பிரெஞ்சுக்காரர்களுக்கு தங்கள் மொழிமேல் அபாரக் காதல்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //நமீதாவுக்கு உங்கள் மீது காதல் ஏற்பட்டு விட்டது போலும். டோண்டு சார், என்ன பதில் கூறப்போகிறீர்கள்?//

    ஹி ஹி ஹி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. //ப்ளாஸ்டிக் முதலியவற்றிற்கு என்ன பெயர் சொல்லப்போகிறோம்?//
    இராமகி ஐயாதான் பதில் தர வேண்டும்.

    கணினி, எலிக்குட்டி, மின்னஞ்சல், எரிதம் என்றெல்லாம் வந்தது எவ்வாறென நினைக்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. கி.பி.1066-ல் நார்மண்டியின் ட்யுக் வில்லியம் (William, the Conquerer) பிரிட்டனை வென்று ஆட்சி புரிந்த பிறகுதான் அவர்கள் பிரெஞ்சுக்காரர்களையும், பிரெஞ்சு மொழியையும் வெறுக்கத் தொடங்கினார்கள்என்று சரித்திரம் சொல்கிறது. இந்த நார்மண்டி வெற்றியை அவர்கள் படங்களாகத் தொகுத்து துணிகளில் எம்ப்ராய்டரி செய்துவைத்துள்ளார்கள். (ஏனெனில் அப்போதெல்லாம் பிரிட்டனில் எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் மிக அரிதாம்!) இதனை Bayeux Tapestry என்று அழைக்கிறார்கள். (இந்த Bayeux-வை எங்ஙனம் உச்சரிப்பது, டோண்டு அவர்களே?)

    ஆனால் பிரித்தானியர்கள் ஜெர்மானியர்களை ஏன் வெறுக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. ஏனெனில் வில்லியம் போர் தொடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சாக்ஸனியிலிருந்து கடல் மூலம் இங்கிலாந்தில் குடியேறி அங்கு அதற்கு முன்பிருந்த ஸெல்டிக் முறைகளை அழித்து ஆங்லோ-சாக்ஸன் (Anglo-Saxon) மொழியை பாவனையில் கொணர்ந்தார்கள். நார்மன் ஆட்சிக்குப் பிறகு லத்தீனும் பிரெஞ்சும் ஆங்கிலத்தில் கலக்கத் தொடங்கின.

    இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. எந்த ஒரு மொழியும் தனித்தன்மை வாய்ந்ததாக அரிதியுட்டுக் கூற முடியாது. பலவிதமான influences பல கால கட்டங்களில் கலப்பது சகஜம். சில நிகழ்ச்சிகள் பற்றி ஆதாரங்கள் கிட்டும். சிலவை எந்த சரித்திரக் குறிப்புமின்றி நமக்குத் தெரியாமல் போகும். ஆகையால் ஹிந்தியைப் போல் "அப்படியே கொள்வோம்" என்கிற கொள்கைதான் (அஸ்பதால் = ஆஸ்பத்திரி என்பது போல்) ஒரு மொழி வேகமாக வளர்வதற்கு வழி என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

    எஸ்.கே

    ReplyDelete
  11. //எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.//

    எந்த மனப்பான்மையை சொல்கிறீர்கள். காணும் மனப்பன்மையையா? கண்டிக்கும் மனப்பான்மையையா?

    ReplyDelete
  12. Very good post, informative !

    Thanks !

    ReplyDelete
  13. //உதாரணத்துக்கு கப்பல் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையே எடுத்து கொள்வோம். கண்டிப்பாக கப்பலின் எல்லா பகுதிகளுக்கும் தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள். அவற்றை கண்டறிந்து இக்காலக் கப்பல்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்க முடியாதா? உதாரணம் மாலுமி, மீகாமன், சுக்கான், நங்கூரம் போன்றவை
    //

    I am happy and appreciate your point on this.

    plastic = nehizhi. the word 'nehizhi' is in use a lot in tn.

    sorry for writing in english.

    -naaga elangovan

    ReplyDelete
  14. //எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.//

    எந்த மனப்பான்மையை சொல்கிறீர்கள். காணும் மனப்பன்மையையா? கண்டிக்கும் மனப்பான்மையையா?//

    இதில் என்ன குழப்பம்? கண்டிக்கும் மனப்பான்மையைத்தான் நாம் கண்டிக்க வேண்டும். என்னுடைய வாக்கியங்களிலேயே அது தெளிவாகத் தெரியுமே.

    இதை எப்படி கூறுகிறேன் என்பதை யாராவது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். இதற்கு விடை நான் ஏற்கனவே போட்டுள்ள புதிர்கள் ஒன்றில் உள்ளது. புதிர்களுக்காகவே லேபல் தனியாக எனது வலைப்பூ பக்கத்தில் உண்டு. அதிலிருந்து சம்பந்தப்பட்ட புதிரை கண்டு பிடித்து, இப்போது நான் கேட்ட கேள்விக்கும் சரியான விடை கூறுபவருக்கு புதிர் மன்னர் என்ற பட்டப் பெயர் தரப்படும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. வணக்கம் சுவனப்பிரியன் அவர்களே,

    ஹாஜியார் நலமா? அரேபிய மொழியில் தொழில் நுட்ப வார்த்தைகளுக்கு ஏதேனும் தனிப்பட்ட முயற்சி உண்டா? அது பற்றி அறியத் தாருங்களேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //ஆகையால் ஹிந்தியைப் போல் "அப்படியே கொள்வோம்" என்கிற கொள்கைதான் (அஸ்பதால் = ஆஸ்பத்திரி என்பது போல்) ஒரு மொழி வேகமாக வளர்வதற்கு வழி என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.//
    அப்படியே விட்டுவிட முடியாது எஸ்.கே. அவர்களே. கம்ப்யூட்டரை விட கணினி அழகாகத்தானே உள்ளது? அதே போல எலிக்குட்டி, வலைப்பூ, இடுகை ஆகிய சொற்களும்.

    எய்ட்ஸுக்கு கூட தமிழில் சொல் கண்டு பிடித்துள்ளனர். அது எசகு (எதிர்ப்புச் சக்தி குறைபாடு). எசகு பிசகாக நடந்து கொண்டால் எசகுதான் வரும் என்ற வாக்கியம் நன்றாக மனதில் பதிகிறதல்லவா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. நல்ல பதிவு டோண்டு சார்.

    வழக்கம்போல இங்கும் சில திம்மிகள் வந்து கும்மியடிக்கலாம்!

    ReplyDelete
  18. //வழக்கம்போல இங்கும் சில திம்மிகள் வந்து கும்மியடிக்கலாம்!//

    அளவுக்கதிகமாக திம்மிகள் கும்மி அடித்தால் அவர்களை டம்மியாக்கும் ஆயுதம்தான் மட்டுறுத்தல். அது என்னிடம் உள்ளது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. பின்னூட்டத்திற்கு நன்றி பாலா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. இப்ப சன் டி.வி சீரியல் பாக்காம மக்கள் தொலைகாட்சிக்கு மாறிடிங்களா. நல்ல மாற்றம்.
    டோண்டு ராகவன், அடுத்த தேர்தல் உங்க வோட்டு எங்களுக்கு தான் போல.

    வாழ்க தமிழ் வெறியர்கள்
    - பா.ம.க

    ReplyDelete
  21. இங்கே பின்னுட்டம் ஈட்டவன் கூட்டனியில் என் மானத்தை வாங்கும் பங்காளி இல்லை. இவன் அதே பேயர் கோண்ட வேர் ஓருவன்.

    ReplyDelete
  22. //அது எசகு (எதிர்ப்புச் சக்தி குறைபாடு).//

    இததை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்துல் ஜபார் சொன்னபோது அவர் அதனை ஏற்று தமது நிர்வாகப் பகுதிகளில் அமுலுக்கு கொண்டு வருவதாக சொன்னாராம். அதே நேரம் துணியியல் என்ற சொல்லினையும் புலிகளின் தலைவர் ஜபாருக்கு அறிமுகப்படுத்தியிருந்தாராம். (டெக்ஸ்டைல் டெக்னாலஜி)

    தமிழகத்தை விட ஈழத்தில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் புலிகள் நிறைய சொற்களை தமிழாக்கம் செய்தது மட்டுமன்றி பயன்பாட்டிலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  23. பொதுவாக தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழியின் மீது அளவு கடந்த பாசமும், வெறியும் உண்டு. அதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் தமிழை அடிப்படையாகக் கொண்டதால் அதன் கலாச்சாரத்தின் மீது பாசம் கொண்ட கலாச்சாரக் காவலர்கள் அவ்வப்போது அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மொழி தத்தமது மக்களுக்கிடையே ஒரு தகவல் தொடர்புதானே தவிர அது வாழ்க்கையல்ல. வாழ்க்கை முறையும் அல்ல. இது உலகத்திலேயே தமிழர்களுக்கு மட்டும்தான் புரிய மறுக்கிறது. மிஸ்டர் டோண்டு.. நான் இப்போதுதான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உங்களை மாதிரி நன்கு படித்தவர்களாவது தமிழ் மொழியின் மீதிருக்கும் போதையை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.

    அன்புடன்
    தமிழ்சரண்

    ReplyDelete
  24. //உங்களை மாதிரி நன்கு படித்தவர்களாவது தமிழ் மொழியின் மீதிருக்கும் போதையை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.//
    சரிதான். நானறிந்த ஆறு மொழிகளுள் தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்றிருக்கும் டோண்டு ராகவனிடமா? :)))))))))

    விளையாட்டுக்கு கூறினேன். நீங்கள் கூறுவதும் புரிகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. உண்மைத் தமிழன் அவர்களே,

    தமிழை மற்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று சொல்லுபவர்களிடமும் நியாயமான காரணம் இருக்கிறது. ஏனெனின், மற்ற மொழி/மொழிகள் ஆதிக்கம் மிகுந்தால் தமிழராய் பிறந்தவர் அனைவரும் தாழ்ந்தவர் என்கின்ற அரஸியல் விளையாட்டிற்கு வழிபிறக்கும். இது மொழிக்கு மட்டுமல்ல எல்லா விஷயங்களுக்குமே சரியாகப் பொருந்தும். "உன்னத விட என்னது பெருசு" என்கின்ற அசட்டு விளையாட்டு. இந்த விளையாட்டை எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம்; பயன்படுத்தியுள்ள விஷயங்களில் மொழி தலையாயதானது.

    இந்த அரஸியல் விளையாட்டில் ஆதரவாகவோ எதிராகவோ குதித்தால் சண்டைக்கு முடிவே கிடையாது. செய்ய வேண்டியதெல்லாம் மொழியின் மூலமாகவும், பிறப்பின் மூலமாகவும் ஒரு குழு மற்றொரு குழுவைவிட உயர்ந்தது தாழ்ந்தது என்கின்ற கருத்துக்களை ஸுத்தமாக ஒதுக்கித் தள்ளிவிடும் புரிதல்தான்.

    இந்தப் புரிதல் இருப்பதால் அரபியில் ஒலிக்கும் துவாவின் இசை அழகை ஒரு ராஜஸ்தானிய ஹிந்து அரசனால் ரஸிக்க முடிந்து, அவனுடைய தலைநகரான் ஜெய்ப்பூரில் மஸூதி கட்டச் முடிந்தது.

    கஜினி முகம்மதுவால் தன்னால் கத்தி முனையில் மதம் மாறியவர்கள் தன்னுடைய அடுத்த படையெடுப்பின்போதும் தாய் மதத்திற்குத் திரும்பாமல் துலுக்கராகவே இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படத்தான் முடிந்தது. அவனால் புரிந்து கொள்ளவே முடியாதது மதம் மாறாத மற்றவர்கள் மதம் மாறிய இவர்களுக்கு உதவியாய் மஸூதிகள் கட்டித் தந்ததுதான்.

    (இப்போது அவன் போன்றாரால் மதம் மாற்றப்பட்டவர்களின் வம்ஸத்தாராலும் இது புரிந்துகொள்ள முடியாத நிலை இருப்பது கொடுமை.)

    காரணம் இங்கே மனிதனும் அவன் ஆன்மீக முயற்சியும் வரவேற்கப்படுகின்றது. மதம் என்பதை அமைப்பாய் மாற்றி கொள்ளை, கொலை, கற்பழிப்பு நடத்தி, ஏழைகளையும், நம்புபவர்களையும் ஏமாற்றி பிழைத்துக்கிடக்க இங்கே அது நிறுவனமான அமைப்பாக இல்லை.

    குழுவைவிட தனிமனிதர்கள்தான் பெரியவர்கள். அவர்கள் வாழ்வின் வெளிப்பாடுதான் கவனத்திற்கொள்ளவேண்டியது. அதுவும் வாழ்க்கையை புரிந்துகொள்ளுவதற்கு மட்டுமே. தன்மேலோ மற்றவர்மேலோ திணிப்பதற்கு இல்லை. இதை ஹிந்துத்துவமாக நான் புரிந்துகொள்கிறேன். தனிமனித விடுதலையை அத்தனிமனித சிந்தனையின் அடிப்படையில் அத்தனிமனிதம் வாழவும், நடைமுறைப்படுத்தவும், அனுபவிக்கவும் வாய்ப்புக்கொடுப்பது இந்த பரத கண்டத்தில் தோன்றிய சிந்தனைகள்தான்.

    பரத கண்டம் தாண்டியும் இச்சிந்தனைகள் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது இல்லை. பரத கண்டத்திலும் இத்தகைய பரந்த மனப்பான்மைக்கு எதிராய் பார்த்தீனிய விஷங்கள் பரவிவருகின்றன. இது மனிதத்திற்கு ஏற்பட்ட இரண்டாவது கேவலம்.

    இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளுவதுகூட தவறு என்கின்ற மனோபாவம்தான் இருப்பதிலேயே மனிததிற்கு ஏற்பட்ட தலையாய கேவலம்.

    ReplyDelete
  26. Well thought out comment Mr. Muse. But why Dondu Sir is calling u as Vinoth Dua? Is he referring to the same person, who used to work with Pranoy Roy in Election broadcasts?

    Curious Cat

    ReplyDelete
  27. //உங்களை மாதிரி நன்கு படித்தவர்களாவது தமிழ் மொழியின் மீதிருக்கும் போதையை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
    //
    :-)))))))) டோண்டு அய்யா உங்களுக்கு எப்போதிருந்து தமிழ்போதை ஏறியது???? :-))))))))

    ReplyDelete
  28. //Dear Dondu

    I love you.

    Nameetha. ( tamil Actress)
    //
    சட்டுன்னு சிரிச்சிட்டேன்....

    ReplyDelete
  29. Even common men use medical terms in daily life. they use "migraine" for heaud ache and Rhino-pharangite for cold+throat ache..

    ReplyDelete
  30. Dear Curious Cat,

    Is he referring to the same person, who used to work with Pranoy Roy in Election broadcasts?


    Yes.

    ReplyDelete
  31. எந்த மொழியையும் ஒழுங்காகத் தெரிந்துவைத்திராமல், "தமிலே உளகிண் முதந் மொயி" என்று பீத்திக்கொள்ளுபவர்கள் மத்தியில் முடிந்த அளவு நல்ல தமிழில் எழுதிவரும், பேசிவரும் டோண்டு அவர்கள் தனக்குத் தமிழ் போதை உண்டு என்பது முழுக்க முழுக்க உண்மைதான்.

    அவருக்குப் பிடித்தததை சொல்லக்கூட உரிமை இல்லை என்று சொல்லுவதற்குத்தான் மற்றவர்கள் வெட்கப்படவேண்டும்.

    சந்தேகவியாதிக்காரன் பெண்டாட்டி நின்றால் குத்தம் நடந்தால் குத்தம் என்று கண்டுபிடிப்பதுபோல இந்த வலைப்பதிவுலகில் மனோவியாதி கொண்டவர்கள் பலருக்கு டோண்டு அவர்கள் எது செய்தாலும், செய்யாவிட்டாலும் குற்றம்தான்.

    அவருக்கென்ன, "போடா ஜாட்டான்" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு "மகரநெடுங்குழைக்காதனை" கண்டு கசிந்து நலமாயும், வல்லவன் பொருள் சேர்க்கும் தத்துவத்தால் வளமாயும் இருப்பார்.

    ReplyDelete
  32. //அவருக்கென்ன, "போடா ஜாட்டான்" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு "மகரநெடுங்குழைகாதனை" கண்டு கசிந்து நலமாயும், வல்லவன் பொருள் சேர்க்கும் தத்துவத்தால் வளமாயும் இருப்பார்.//
    விஷயம் அறிய விரும்பும் பூனை, டோண்டு ராகவனின் முழு சாரத்தையும் தரும் இந்த வரிகளைப் பார்த்தாவது வினோத் துவா பெயர் பொருத்தம் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. //அவருக்குப் பிடித்தததை சொல்லக்கூட உரிமை இல்லை என்று சொல்லுவதற்குத்தான் மற்றவர்கள் வெட்கப்படவேண்டும்.//
    நண்பர் குழலி நண்பன் என்ற முறையில்தான் கலாய்த்திருக்கிறார் ம்யூஸ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. :)))))))))))

    செந்தழல் ரவி

    ReplyDelete
  35. Are u a good or a bad man, Senthazal Ravi?

    Curious Cat

    ReplyDelete
  36. நட்பினால் உவப்போடு கலாய்த்தலை எதிர்க்கவில்லை. காய்தலைத்தான் எதிர்க்கிறேன்.

    ReplyDelete
  37. Please go to China.

    ReplyDelete
  38. மொழியைப் பற்றிய முக்கியமான இப்படிப்பட்ட விவாதங்களில், சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை ஏற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன், டோண்டு சார். முகமூடி அணிந்தவர்களது கருத்துக்கள் உங்கள் தலைப்புக்கு அப்பால் இருந்தால், அது உங்கள் பக்கத்துக்கு தேவைதானா?

    ReplyDelete
  39. //டோண்டு சார். முகமூடி அணிந்தவர்களது கருத்துக்கள் உங்கள் தலைப்புக்கு அப்பால் இருந்தால், அது உங்கள் பக்கத்துக்கு தேவைதானா?//
    நமீதாவின் பின்னூட்டம் கூடவா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. <---
    ஆங்கிலம் பேசி என்னைப் போன்ற துபாஷிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டனர்.
    அவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். என் போன்றவர்களுக்கு வேலை கிடைக்கிறதல்லவா? ஹி ஹி ஹி --->
    --)))))))

    ReplyDelete
  41. தலைவர் டோண்டுவை ஒலிக என்று சொன்னவன் நல்லவன்!
    தலைவர் சொல்வது நல்ல ஒலியுடன் கேட்க வேண்டும்!
    ரவி ஒரு ஒலி-பெருக்கி வாங்கி கொடுத்தால் நல்லா இருக்கும்.

    டோண்டு ரசிகர் மன்றம்
    -ராயபுரம்

    ReplyDelete
  42. //புதிர்களுக்காகவே *லேபல்* தனியாக எனது வலைப்பூ பக்கத்தில் உண்டு. ///

    இதுக்கு தமிழ் வார்த்தை உமக்குத் தெரியாதா டோண்டு??

    ReplyDelete
  43. //இதுக்கு தமிழ் வார்த்தை உமக்குத் தெரியாதா டோண்டு??//

    குழுச்சொல் அல்லது சுட்டிச் சொல்.

    அது இருக்கட்டும், நான் March 17, 2007 6:37 AM போட்ட புதிருக்கு விடையிறுக்கப் பாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete