நிரந்தர பக்கங்கள்

7/17/2008

மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை என்பதைவிட அறியாமலே ஒட்டிக் கொண்ட திறமை என்றே கூறலாம்!

நான் ஏற்கனவே போட்ட மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தவை போல அன்றி இப்போது நான் குறிப்பிடப்போவது என் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லாது என்னுடன் ஒட்டி கொண்டது என்று கூறினால் மிகையாகாது. அதைப் பற்றி கூறுவதற்கு முன்னால் ஒரு சிறு புதிர்.

ஆம்புலன்ஸ்களில் முன் கண்ணாடியில் AMBULANCE என்னும் சொல் கீழே உள்ளது போல தலகீழாகக் காண்பிக்கப்படும்.


இது ஏன் என்பதுதான் கேள்வி. பயப்படாதீர்கள். விடை உடனேயே தரப்படும், ஏனெனில் இது புதிருக்கான பதிவு அல்ல. ஒரு ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்போது முன்னுரிமை அதற்குத்தான். முன்னாலிருக்கும் வண்டிகள் ரியர் வ்யூ கண்ணாடிகளில் ஆம்புலன்ஸை பார்க்க நேர்ந்தால் அதற்கு வழிவிடவேண்டும். கண்ணாடி எழுத்துக்கள் முந்தைய காரின் பின்னோக்கு கண்ணாடியில் நேராகத் தெரியும். ஆகவேதான் ஆம்புலன்ஸ் என்பது தலகீழாக எழுதப்படுகிறது.

புதிர் எளியதுதான், ஆனால் பலர் அவர்களிடம் நான் இதை கேட்டபோது சரியான விடையைத் தர இயலாமல் போனார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் சாதாரணமாக "எனது காரை" ஓட்டும் நபர்கள்தான். நான் விடையை கூறியவுடன் "அடேடே இது தெரியாமல் போயிற்றே", என ரொம்ப ஃபீலிங்ஸ்லாம் ஆவார்கள். ஒரு தடவை என் வாடிக்கையாளரது காரில் பூந்தமல்லியிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சமயம் ஓட்டுனரிடம் நான் இதை கேட்க, அவர் விடையை சரியாக கூறியது மட்டுமின்றி, நான் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் வசிக்கிறேனா எனக் கேள்வியும் கேட்டார். எப்படி அவர் அதை அறிந்தார் என கேட்க, அவரது மச்சானும் டாக்ஸி டிரைவர் என்றும், தன்னிடம் இதே கேள்வியை பத்து நாட்களுக்கு முன்னால் கேட்டதாகவும் கூறினார். பிறகு அதே மச்சான் அவரிடம் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் வசிக்கும் ஒரு பெரிசு இதை தன்னிடம் கேட்டு ரொம்பவும் படுத்தினார் என்பதையும் இவரிடம் கூறியிருக்கிறானாம். சேச்சே, அப்படியா நான் படுத்துகிறேன்?

நிற்க. நான் இப்பதிவில் ஆரம்பத்தில் கூறிய திறமைக்கு வருவோமா? இந்த கண்ணாடி எழுத்துக்களை நான் மிகச்சுலபமாக எழுதுவேன். இத் திறமையை நான் முதலில் கண்டுகொண்டது சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான். ஒரு நாள் தமிழாசிரியர் பூவாளூர் சுந்தரராமன் (எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "தாய் மகளுக்கு கட்டிய தாலி" என்ற திரைப்படம் இவர் எழுதிய கதைதான்) தமிழ் பாடத்துக்கான நோட்ஸ் டிக்டேட் செய்ய நாங்கள் எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விளையாட்டாக நான் கண்ணாடி எழுத்துக்களில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன். சரளமாக எழுத முடிந்தது. என்ன, பிறகு கண்ணாடியில் வைத்து பார்த்தால் நேராகத் தெரியும். ஆனால் அது எனக்கு தேவைப்படாது, ஏனெனில் அதை என்னால் அப்படியே படித்து உள்வாங்கி கொள்ள முடியும்.

இப்போது ஒரு சிறு சினோரியோ கூறுகிறேன். நான் முதல் பெஞ்சில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் வகுப்பறையின் எதிர்க்கோடியில் கடைசி பெஞ்சுக்கருகில் நின்று கொண்டு டிக்டேட் செய்கிறார். அவர் குரலைத் தவற வேறு சத்தமே இல்லை. டிக்டேட் செய்து கொண்டே அவர் பூனைபோல மெதுவாக நான் இருக்கும் திசை நோக்கி நடக்கிறார். நான் அஹ்டை கவனிக்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் கழிகின்றன. நாங்கள் எழுத்தில் மூழ்கியுள்ளோம். அப்போது சொடேரென்று என் பிடரியில் ஒரு பலத்த அடி விழுகிறது. ஆசிரியர் நோட்டு புத்தகத்தை பிடுங்கிப் பார்க்கிறார். "என்னடா கிறுக்குகிறாய்" என்னும் கேள்வி வேறு. பிறகு என் வகுப்பாசிரியர் ராமஸ்வாமி அய்யரிடம் வேறு நடந்ததைக் கூறி புகார் செய்கிறார். அவருக்கோ ஒருபக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம் சங்கடம், நான் அவருடைய செல்ல மாணவன் என்பதால்.

ராமசாமி அய்யர் பிறகு சுதாரித்து கொண்டு, "அதிருக்கட்டும் சுந்தரராமன், அவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு இந்த ராகவன் பயல் செய்வதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு ஓர் அருமையான பதிலை சுந்தரராமன் தந்தார். அது என்னவாக இருக்கும்? நான் என்ன எழுதுகிறேன் என்பதை அவரால் அவ்வளவு தூரத்திலிருந்து படித்திருக்க முடியாது. பிறகு எவ்வாறு அவ்வாறு கண்டுகொண்டு அவ்வளவு தூரத்திலிருந்து பூனை மாதிரி வந்தார்?

இது புதிருக்கான பதிவு இல்லையென்று முதலில் கூறிய இந்த டோண்டு ராகவனே இக்கேள்வியை இப்போது முன்வைக்கிறான். உண்மையில் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? சகமாணவர்கள் யாரும் போட்டு கொடுக்கவில்லை என்பதையும் கூறிட வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

  1. வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்துக்கு எழுதியிருப்பீர்கள் (right to left, like Arabic). இதை வைத்து கண்டு பிடித்திருப்பார். சரி தானே?

    ReplyDelete
  2. //இதை தன்னிடம் கேட்டு ரொம்பவும் படுத்தினார் என்பதையும் இவரிடம் கூறியிருக்கிறானாம்.//

    Please give respect to every human being.

    Thanks,
    A regular visitor

    ReplyDelete
  3. புதிருக்கு விடை
    நீங்கள் வலமிருந்து இடமாக எழுதியிருப்பீர்கள்

    இம்மாதிரி எழுதும் பழக்கம் எனக்கும் உண்டு.
    நண்பர்களுக்கு கடிதம் எழுதும் போது இம்மாதிரி மற்றும்
    உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாமல் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை பயன்படுத்தி எழுதுவேன். நண்பர்களுக்கு புரியாது, ரொம்ப தமாசா இருக்கும்.

    அப்புறம் என்னுடைய பழைய தொலைப்பேசி என்னை வாங்கி விட்டேன்.
    மிஸ்டு கால் கொடுக்கவும்

    வால்பையன்

    ReplyDelete
  4. //வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்துக்கு எழுதியிருப்பீர்கள்//
    அதுவேதான். அதிலும் சுந்தரராமன் கூறியவார்த்தைகள் : "தூரத்திலேருந்து பார்க்கிறேன், மசூதி காஜியார் மாதிரி வலப்பக்கத்திலேருந்து இடப்பக்கம் எழுதிண்டு போறான் இந்த ராகவ ராஸ்கல்"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. //Please give respect to every human being.//
    இது ஓட்டுனர் என்னிடம் தன் மச்சான் சொன்னதாக கூறியபோது சொன்னது. தனது மச்சானை அவர் ஒருமையில்தான் குறிப்பிட்டார், அது அப்படியே எனது எழுத்துக்களில் indirect speech-ல் வந்துள்ளது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. முகமதியர்கள் தங்களின் அரபு மொழியினை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாய் எழுதுவார்கள் .கண்ண்ணாடியில் பிம்பம் தெரிவதற்கு அதே பாணியில் மாதிரி தங்கள் எழுதியிருக்கலாம்.தாங்கள் வித்தியசமாக எழுதுவதை கண்டு ஆசிரியர் உங்கள் தனித்திறைமையை ( திறமை இரண்டு)

    கையும் களவுமாக பிடித்து இருக்கலாம்

    ReplyDelete
  7. ஓக்கே! இப்போ கேள்வி நேரம்! (இந்த கேள்விக்கு பதில் சொல்லிவிட்டீர்களான்னு தெரியவில்லை.. இருந்தாலும்..) கோமணகிருஷ்ணன் போன்றவர்கள் தாத்தாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்! ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை. இப்படித்தான் பலர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்! அப்போதெல்லாம் அதை கோமணகிருஷ்ணன் போன்றவர்கள் எதிர்த்தார்கள்! ஆனால் இப்போது தாத்தாவுக்கு ஜால்ரா காதை மட்டும் இல்லை டவுசரையும் சேர்த்து கிழிக்கிறது! Hypothetically, தாத்தா போன பிறகு இவர்களெல்லாம் யாரை ஆதரிப்பார்கள்!

    ReplyDelete