நிரந்தர பக்கங்கள்

6/11/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 11.06.2009

யார் யாரைப் பற்றி என்ன கூறுவது என்பதற்கு ஒரு தராதரம் வேண்டாமா?
ஸ்டாலினுக்கு உதவி முதல்வர் பதவி கொடுக்கட்டும், அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி பெற்று தரட்டும். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று கேபினட் மந்திரி பதவிகளில் இரண்டை தனது குடும்பத்தினருக்கே வழங்கட்டும். இவர் எல்லாம் தேறாத கேஸ் என்று கருணாநிதி அவர்களை எப்போதோ தண்ணி தெளித்து, ஓரம் கட்டி ஒதுக்கியாகி விட்டது. இருப்பினும் அவருக்கு ஏதோ உறுத்துகிறது போல. அதற்காக இப்படி எல்லாம் பிதற்றக் கூடாது என்றுதான் எனக்கு படுகிறது, அருமை நண்பர் அருண்குமார் எனக்கனுப்பிய மின்னஞ்சலை பார்க்கும்போது. முதலில் அதை பார்ப்போம். இந்த மின்னஞ்சலை பொதுவில் பதிப்பதற்கு அவர் எனக்கு அனுமதி தந்துள்ளார், அவருக்கு என் நன்றி.

தமிழ்நாட்டில் முதன்முறையாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டு அதில் முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அமர்த்தப்பட்டுள்ளார். இதுபற்றிய பத்திரிகை பேட்டியின்போது, குடும்ப வாரிசுகள் பதவி பெறுவது ஒன்றும் புதிதல்ல, காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, அவரது மகன் பரூக், பேரன் உமர் அப்துல்லா வரை பதவி பெற்றுள்ளனர் என்றும், தமிழகத்தில்கூட ராஜாஜியின் மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பியாக இருந்துள்ளார் எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்கியதற்கும், தனது குடும்பத்தினரைப் பல்வேறு பதவிகளில் அமர்த்தியதற்கும் ஏற்கெனவே தங்களது குடும்பத்தினரை அரசியலில் புகுத்தி வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொண்டுள்ள தேவகௌடா, முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத் போன்ற இக்கால அரசியல் தலைவர்களை அவர் உதாரணம் காட்டியிருக்கலாம். ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும், தனிவாழ்வில் எளிமையையும், நிர்வாகத்தில் தூய்மையையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த ராஜாஜியின் பெயரை அவர் உபயோகித்திருக்க வேண்டியதில்லை.

சி.ஆர். நரசிம்மன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது 1952 முதல் 1962 வரை. 1952 தேர்தலின்போது ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, அரசியலிலிருந்து விலகி இருந்த காலம். அந்தத் தேர்தலில், ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கவர்னர் ஸ்ரீபிரகாசாவின் ஆலோசனையின் பெயரில் குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதுதான் சரித்திரம். அந்தக் காலகட்டத்தில் எம்.பி. டிக்கெட் பெறுவதற்கு கட்சி அலுவலகத்தில் மனு செய்து நேர்காணலில், ""உங்களால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்?'' எனக் கேள்வி கேட்கப்பட்டு, பலர் சிபாரிசு செய்து அதன்பின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் பெறும் நடைமுறை கிடையாது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் யார் நின்றால் அப்பகுதியின் பெரியவர்கள் மற்றும் காங்கிரஸôர் விரும்புவார்கள் என்ற தகவல்கள் தரப்பட்டு அதனால் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்துடன் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

1952 மற்றும் 1957-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு ராஜாஜியின் மகன் நரசிம்மனை கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகத் தேர்வு செய்தது பெருந்தலைவர் காமராஜர்தான். ராஜாஜியுடன் கடுமையான உள்கட்சி கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர் காமராஜர் என்பது வேறு, கிருஷ்ணகிரி தொகுதிக்கு சரியான வேட்பாளர் தனி மனித நேர்மை, படிப்பறிவு ஆகியவை நிரம்பிய நரசிம்மன்தான் என்பது வேறு என்ற வகையில் உயரிய நடைமுறைகள் வழக்கத்திலிருந்த காலகட்டம் அது.

அதுமட்டுமன்றி, தந்தையும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்தபோதும் அவர்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது அதைவிட சுவாரஸ்யமான விஷயம். 1959-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் சி.ஆர். நரசிம்மன் தனது வீட்டில் முன் அறையில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது அவரது தந்தை ராஜாஜிக்கு ஒரு தந்தி வருகிறது. எம்.ஆர். மசானி, என்.ஜி. ரங்கா ஆகிய இருவரும் அனுப்பிய அந்தத் தந்தியில் தாங்கள் மறுநாள் சென்னை வர இருப்பதாகவும் அச்சமயம் ராஜாஜியை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நரசிம்மனுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அந்தத் தந்தியை வீட்டின் உள்ளே இருந்த தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணகிரி தொகுதிக்கு பணி நிமித்தம் நரசிம்மன் சென்றுவிடுகிறார்.

இரண்டு நாள்கள் கழித்து கிருஷ்ணகிரியில் பத்திரிகையைப் புரட்டியபோதுதான் நரசிம்மனுக்குப் புதிதாக சுதந்திரா கட்சி எனும் ஓர் அரசியல் கட்சியைத் தனது தந்தை ராஜாஜி உருவாக்கிய செய்தி தெரிய வருகிறது. அதாவது, ஒரே வீட்டில் குடியிருந்து வரும் தனது மகன் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர், எம்.பி. என்ற வகையில் காங்கிரஸை எதிர்த்து கடுமையான அரசியலை நடத்தி வந்த தனது நடவடிக்கைகள் தெரிய வேண்டியதில்லை என்று ராஜாஜியும் கருதினார். நரசிம்மனும் சரி, சுதந்திரா கட்சியின் தலைவர்கள் சிலர் அவரை அக்கட்சிக்கு அழைத்தபோது மறுத்துவிட்டார். 1962-ம் ஆண்டில் அவர் அதே கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு திமுக வேட்பாளர் க. ராசாராமிடம் தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளரான ராஜாஜியின் மகன் எம்.பி. டிக்கெட் பெற்றது காமராஜரினால்தானே தவிர, அவரது தந்தையின் சிபாரிசால் அல்ல. ஆகவே, குடும்ப அரசியலுக்கு மேற்கோளாக ராஜாஜியை முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டி இருப்பது சரியல்ல.

அடுத்து, இன்னொரு சம்பவம். ராஜாஜியின் மற்றொரு மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி. இந்து பத்திரிகையின் உதவி ஆசிரியர் பணியில் இருந்தார். அப்பொழுதெல்லாம் இரவு பணி முடிந்து ரிக்ஷாவில்தான் அவர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் நள்ளிரவு ரிக்ஷா கிடைக்காததால் பொடி நடையாக, மாம்பலம் பசுல்லா சாலையிலுள்ள தங்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார் கிருஷ்ணசாமி. மவுண்ட்ரோடில் இரவு ரோந்துப் பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரை நிறுத்தி விசாரித்து, சந்தேகத்தின் பேரில் அவரை மவுண்ட் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். வீட்டு விலாசத்தை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் இது முதல்வர் ராஜாஜியின் விலாசம் எனக் கூறி மேலதிகாரியிடம் விசாரிக்க, முதல்வர் மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி இந்து பத்திரிகை உதவி ஆசிரியர் எனும் உண்மை புலப்பட்டது. சி.ஆர். கிருஷ்ணசாமி தன்னை "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்று சொல்லிக் கொண்டாரே தவிர, முதல்வரின் மகன் என்று குறிப்பிடவே இல்லை. அந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏன் முதலிலேயே அந்த உண்மையைக் கூறவில்லை என்று கேட்டபோது, சி.ஆர். கிருஷ்ணசாமி சொன்ன பதில்~ "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்கிற பதவி நிரந்தரமானது. கௌரவமானது. முதல்வரின் மகன் என்பது அப்படியில்லை!'. சப் இன்ஸ்பெக்டருக்கும், கான்ஸ்டபிளுக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ என்று கருதினர்.

கிருஷ்ணசாமி மறுத்தும், விடாப்பிடியாக அவரை போலீஸ் ஜீப்பில் முதல்வரின் வீடு வரை கொண்டு போய் விட்டு விட்டு வந்தார் சப்-இன்ஸ்பெக்டர். மாடியில் விழித்திருந்து படித்துக் கொண்டிருந்த முதல்வர் ஜன்னல் வழியே ஒரு போலீஸ் ஜீப்பில் தனது மகன் வந்திறங்கியதைப் பார்த்திருக்கிறார். காலையில் முன்னிரவில் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டு தலைமைச் செயலகம் சென்ற பின் போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து போலீஸ் வாகனத்தை உபயோகிக்க உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என கேட்டிருக்கிறார். சந்தேகக் கேஸில் ஸ்டேஷனுக்குப் பிடித்துக் கொண்டு வரப்படும் குற்றவாளி தரத்திலானவர்களை லாக்கப்பில் தள்ளுவதும், தவறாகக் கொண்டு வரப்படும் கண்ணியமானவர்களை நடுநிசியில் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு போலீஸ் ஜீப்பில் கொண்டு போய் விடுவதும் வழக்கத்திலிருக்கும் நடைமுறையே என முதல்வருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

கொள்கை ரீதியாக ராஜாஜியுடன் கடுமையாக மோதிய பெரியார், காமராஜர் போன்றவர்கள்கூட அவரது நேர்மையையும், தன்னலமற்ற பொது வாழ்க்கையையும் சந்தேகித்ததும் இல்லை, குறை கூறியதும் இல்லை. ராஜாஜியின், நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதுதான் முதல்வர் கருணாநிதியின் நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராயிருந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் மஜீத், அவர் ஒருமுறை அலுவல் நிமித்தம் விருதுநகர் சென்றபோது, காமராஜரின் இல்லத்திற்கு சென்று அன்னை சிவகாமி அம்மையாரை சந்தித்திருக்கிறார். அச்சமயம், காமராஜரின் சகோதரி தண்ணீர்க் குடத்துடன் வந்திருக்கிறார். அமைச்சர் உங்கள் வீட்டிற்கு தனியாக குடிதண்ணீர் இணைப்பு கிடையாதா எனக் கேட்க, இல்லை என்ற பதில் வந்துள்ளது. அன்றைய நிலையில் தனி வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு இல்லாமல் எல்லாருமே பொதுக் குழாய்களில் தெருக்களில் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் நடைமுறையே இருந்தது. விருதுநகர் நகராட்சியில் நிர்வாக ஆய்வு செய்த அமைச்சர், ஆணையரை அழைத்து முதல்வர் காமராஜரின் வீட்டிற்கு ஒரு தனி குடிதண்ணீர் இணைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த முறை விருதுநகர் சென்ற காமராஜர் தனது வீட்டிற்கு குடிதண்ணீர் இணைப்பு தரப்பட்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார். விவரங்களைக் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய பின் மஜீத்தை அழைத்து, ""நீங்களே விதியை மீறி ஒரு குடிதண்ணீர் இணைப்பை எங்கள் வீட்டுக்குக் கொடுக்கச் சொன்னது, அதிகாரிகள் இனிமேல் தங்கள் இஷ்டத்திற்கு பல வீடுகளுக்கும் ஹோட்டல்களுக்கும் இணைப்பு கொடுக்க வழிவகுக்கும். இதனால் ஊழலும், தண்ணீர் தட்டுப்பாடும் உண்டாகும். நீங்களே அந்த இணைப்பை அகற்றிவிடச் சொல்லுங்கள்'' எனக் கூறினாராம்.

இதுபோன்று தன்னலமில்லா பொதுத் தொண்டு செய்யும் அரசியல் தலைவர்கள் நம்மிடையே வாழ்ந்த காலம் மாறி தான் தன் குடும்பம் என சுயநலத்தோடு அரசியல் நடத்தும் தலைவர்கள் நாடெங்கிலும் பெருகிவிட்டனர். தியாகத் தலைவர்கள் பற்றி இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும்வகையில் முழுவிவரங்களையும் தெரிவிக்காவிட்டாலும் அவர்களைப் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் அரைகுறை தகவலை மட்டும் எடுத்துரைப்பது சரியல்ல! சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் அப்பழுக்கில்லாத பழைய தலைவர்களை உதாரணம் காட்டுவதன் மூலம் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயலும் முதல்வரின் முயற்சிகள் ஏற்புடையதல்ல. இன்றைய தலைமுறைக்குக் கடந்தகால வரலாறு தெரியாது என்கிற தைரியத்தில் முதல்வர் இப்படிக் கூறுகிறாரோ என்னவோ?


நன்றி: தினமணி, முருகன்.

அதனால்தான் கேட்கிறேன், அப்பழுக்கற்ற அரசியலை நடத்திய ராஜாஜியை பற்றி பேசுவதற்கு கருணாநிதி அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

Putin-ஐ டென்ஷனாக்கிய Dobby:
ஆர். கே. லட்சுமணுக்கு ஒரு பழக்கம் இருந்ததாம், அதாவது சிங்கம், புலி. நரி ஆகிய மிருகங்களின் முகங்களை அதே ஜாடையில் உள்ள மனித முகங்களாக மாற்றுவாராம். ஒரு முறை ஒரு ஆட்டின் முகத்துக்கு மூக்குக் கண்ணாடி எல்லாம் வரைந்து மனித முகமாக்க, அன்று அவர் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் தன்னை அப்படம் கிண்டல் செய்ததாகக் கோபப்பட்டாராம். மாற்றப்பட்ட படத்தையும் வந்த விருந்தினரின் முகத்தையும் ஒன்றாக பார்த்த வீட்டாருக்கு சிரிப்பை அடக்க இயலவில்லையாம். அதுதான் தனது கார்ட்டூன் உலகப் பிரவேசத்துக்கு தூண்டுகோலாக இருந்தது என பிற்காலத்தில் லட்சுமண் கூறினார்.

ஆனால் ஹாரி பாட்டரின் இரண்டாம் புத்தகத்தைப் பார்த்த ரஷ்யர்கள் அப்படி விட்டுவிடத் தயாராக இல்லையாம். அதில் வரும் Dobby the elf பார்ப்பதற்கு அச்சு அசலாக ருஷ்ய குடியரசுத் தலைவர் போலவே இருக்கிறது என அலம்பல்கள் செய்யப்பட்டன. இப்போது அவையெல்லாம் சரியாகி விட்டனவா என்பது தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரியுமா? நீங்களே உருவ ஒற்றுமையை பாருங்களேன்.



அன்புடன்,
டோண்டு ராகவன்

37 comments:

  1. Dear sir,
    very good article. this shows how the last generation leaders followed their own ethics on politics

    thanks for sharing

    ReplyDelete
  2. எல்லாம் சரி டோண்டு சார்
    இந்த விசயம் உங்கள் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பினாரா? இன்றைய தினமணியில் முருகன் என்பவர் எழுதிய கட்டுரையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தினமணியில் வந்த கட்டுரை என்று சொல்லாமல் நண்பர் என்று சொன்னதன் காரணம் என்னவோ? ஒருவேளை அந்த முருகன் தான் உஙக்ள் நண்பரோ? தேவுடா!!

    ReplyDelete
  3. டோண்டு சார்,

    காமராஜர் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே போங்க!

    http://kamarajar.blogspot.com/

    ReplyDelete
  4. திராவிட சொம்பு தூக்கிகளுக்கும், பார்பன சொம்பு தூக்கிகளுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்காது போலவே!

    பார்பனர்களை தவிர இந்தியாவை ஆள தகுதியானர்களே இல்லை என்பீர்கள் போலவே!

    கருணாநிதி ராஜாஜியை மேற்கோள் காட்டியது மட்டுமே கண்ணுக்கு தெரியுதா! மற்ற யாரும் அப்பழுகற்ற ஆட்சி நடத்தவில்லையா!

    ReplyDelete
  5. @ஆசிஃப் மீரான்
    சரியான சுட்டி தந்துள்ளேன். நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //கருணாநிதி ராஜாஜியை மேற்கோள் காட்டியது மட்டுமே கண்ணுக்கு தெரியுதா! மற்ற யாரும் அப்பழுகற்ற ஆட்சி நடத்தவில்லையா!//
    காமராஜ், ராஜாஜி அவர்களது தரத்துக்கு ஈடாக வேறு யாராவது அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியிருந்தால் காட்டுங்களேன். உங்களை யார் தடுத்தது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. //காமராஜ், ராஜாஜி அவர்களது தரத்துக்கு ஈடாக வேறு யாராவது அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியிருந்தால் காட்டுங்களேன். உங்களை யார் தடுத்தது?//

    அகில இந்திய அளவில் சுட்டி காட்டிய போது ஏன் தமிழ்நாட்டை மட்டும்!
    வேறு யாரையும் தெரியாதா! இல்ல பிடிக்காதா!

    ReplyDelete
  8. ஒரு கம்பெனி சேர்மன், முக்கிய பதிவிகளுக்கு குடும்பத்தினரை அமர்த்துவது நடைமுறை தானே. அவர் எப்படி அந்த கம்பெனிக்கு சேர்மன் ஆனாருன்னு கேட்க்க கூடாது

    ReplyDelete
  9. இன்று, போர்ப்ஸ் என்றொரு அயல்நாட்டு பத்திரிகை என்னையும், என் குடும்பத்தாரையும், உலகின் 445-வது பணக்காரர்களாக அறிவித்து, விஷம பிரச்சாரம் செய்துள்ளது. இதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. அயல்நாட்டின் அந்நியர் கூட இங்கு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார்களோ என்று ஐயப்பட வைக்கிறது. மறத்தமிழன் ஒருவன், இந்த பட்டியலில், 444 இடங்கள் பின்தங்கி உள்ளானே என்று யாரும் கோபப்படவில்லை, வெட்கப்படவில்லை, வருத்தப்படவில்லை.


    என்னை இந்த இடத்தில் வைத்து அழகு பார்த்த தமிழகமே, தமிழக மக்களே, எதிர்கட்சிகார்கள் கேட்கிறார்களே, இந்த இடம் எப்படி வந்ததென்று?? அவருக்கு சொல்லுங்கள், அது நீங்கள் எனக்கு, அன்பால் அளித்த இடம் என்று. வரும் வருடங்களில், இந்த இடம் நிரந்தரம் இல்லை, மேலும் உயரவைப்போம் என்று. அப்போதாவது அவர்களுக்கு புரியட்டும், நான் யாரென்று??


    இந்த 445 இடத்தில் நான் உள்ளதை பற்றி கேள்வி எதுவும் கேட்க நினைப்போர், அந்த பட்டியலில், எனக்கு முன் உள்ள 444 பேரையும் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள், பிறகு உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். என்னை மட்டும் கேள்வி கேட்பது, என்ன கயமைத்தனம்??

    ReplyDelete
  10. காமராஜர், ராஜாஜி பற்றி மேலே கூறியவை உண்மை எனில்...

    //தியாகத் தலைவர்கள் பற்றி இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும்வகையில் முழுவிவரங்களையும் தெரிவிக்காவிட்டாலும் அவர்களைப் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் அரைகுறை தகவலை மட்டும் எடுத்துரைப்பது சரியல்ல!//

    என்பது சரியே.

    ReplyDelete
  11. //பார்பனர்களை தவிர இந்தியாவை ஆள தகுதியானர்களே இல்லை என்பீர்கள் போலவே!
    //
    வால், புரிய வில்லை. இங்கே அப்படி எங்கே முருகனோ இல்லை டோண்டு வோ சொல்லி இருக்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. குருட்டு தனமாக நீங்கள் பொதுவான/ முற்போக்கான ஆள் என்று காட்டி கொள்ள முயற்சி செய்கிறீர்களா ?ஜாதிய விட்டு கொஞ்சம் வெளில வாங்க. அதை கஷ்டப்பட்டு எதிர்க்க வேண்டியது இல்லை. கண்டுக்காம இக்னோர் செய்து விட்டாலே போதும்.

    ReplyDelete
  12. அனானி நண்பருக்கு,

    நிச்சயமாக நான் சாதியில் இருந்து வெளிவந்துவிட்டேன் என உறுதியாக கூறமுடியும், அதன் பொருட்டே நான் திராவிட குஞ்சுகளையும் சாடுகிறேன்!

    அதே நேரம் பிடித்த நபர் என டோண்டு அவர்கள் சுட்டிகாட்டுவதெல்லாம் மோடி,சோ,ராஜாஜி.

    இவர்களை பிடிக்க காரணம் இவர்களுது நேர்மை என டோண்டு அவர்கள் கூறினாலும் சாதி பற்று அவர்கள் மேல் உள்ள விமர்சனங்களை மறைக்கிறது!

    நூறு சதவிகிதம் பெர்பெக்ட் மேன் என்று யாருமில்லை என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன்!

    மற்றபடி டோண்டு எனது தந்தை மாதிரி! அவரை கேள்வி கேட்காமல் யாரை கேட்க போகிறேன்.

    ReplyDelete
  13. நியாபகம் வருதே! நியாபகம் வருதே!June 11, 2009 10:11 PM

    இந்த பதிவ படிச்சா கவுண்டமணி சொல்லும் டயலாக்தான் நியாபகம் வருது.

    "அரசியல்வாதினாலே தியாகிகள்தான"
    "அரசியல்வாதினாலே தியாகிகள்தான"
    "அரசியல்வாதினாலே தியாகிகள்தான"
    "அரசியல்வாதினாலே தியாகிகள்தான"
    "அரசியல்வாதினாலே தியாகிகள்தான"

    ReplyDelete
  14. //சாதி பற்று அவர்கள் மேல் உள்ள விமர்சனங்களை மறைக்கிறது!//

    மோடி,சோ,ராஜாஜி அளவுக்கு ஜெயலலிதாவை டோண்டு அய்யாவுக்கு பிடிப்பதில்லயே....

    ReplyDelete
  15. டோண்டு சார்! நல்ல காலம் ராஜாஜியை உதாரணம் காட்டியதோடு விட்டாரே? அவர் பாட்டுக்கு “ராஜாஜி மரணப்படுக்கையில் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொண்டார்! அதை 40 வருஷம் கழித்து சொல்லச் சொன்னார்! அந்த சத்தியத்தின் பேரால்தான் இப்போது என் வாரிசுகளுக்கு பதவி வாங்கிக்கொடுக்கிறேன்” என்று சொல்லியிருந்தால் நாமெல்லாம் மயக்கம் போட்டிருக்க மாட்டோமா? சொல்லாம விட்டாரேன்னு சந்தோஷப்படுவோமா, அத விட்டுட்டு?

    ReplyDelete
  16. திரு வால்பையன் அவர்களே டோண்டு அவர்கள் காமராஜர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவர் பிராமணர் இல்லை, அதே போல மோடியும் பிராமணர் அல்ல. இருவரும் தற்பொழுதைய வகைப்படுத்துதலில் இதர‌ பிற்படத்தப்பட்ட வகுப்பில் வருகிறார்கள். அவர் சொன்னது முற்றிலும் உண்மை காமராஜர், ராஜாஜி போன்றவர்கள் தந்த ஆட்சியை தமிழகத்தில் வேறு யாரும் தரவில்லை.

    ReplyDelete
  17. @வால்பையன்
    நான் கூற நினைத்த பதிலை ராம்குமார் கூறிவிட்டார். மோடியும் காமராஜரும் பார்ப்பனர்கள் அல்ல.

    மற்றப்படி உங்கள் கேள்விகள் என்னை ஒரு மகன் ஸ்தானத்தில் இருப்பவர் உரிமையுடம் தனது தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவரிடம் கேட்பதாகத்தான் படுகின்றன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. //மோடி,சோ,ராஜாஜி அளவுக்கு ஜெயலலிதாவை டோண்டு அய்யாவுக்கு பிடிப்பதில்லயே.... //

    அ.தி.மு.க வுக்கு தான் ஓட்டு போடுவேன்னு ஏன் சொன்னாராம்!

    ரெண்டுமே ஊழல் கட்சி ஆனா அ.தி.மு.க, ரவுடிகளை ஒழிக்கும்னார்! தமிழகத்தில் ஒரே ரவுடி அதுவும் பொம்பளை ரவுடி தான்!

    ReplyDelete
  19. மோடி பார்பனரல்லாத விசயம் இப்போது தான் எனக்கு தெரியும்! உறுதி செய்யப்பட்ட உண்மையா!

    காமராஜரை தொட்டு சென்றாரே தவிர பாடிய புராணமெல்லாம் ராஜாஜியும் அவரது பையனையும் பற்றி!

    ReplyDelete
  20. //காமராஜரை தொட்டு சென்றாரே தவிர பாடிய புராணமெல்லாம் ராஜாஜியும் அவரது பையனையும் பற்றி!//
    ஏனெனில் கருணாநிதி உதாரணம் காட்டியது ராஜாஜி மற்றும் அப்வரது மகன் பற்றி மட்டும்தான்.

    மோடி ஓ.பி.சி வகுப்பை சார்ந்தவர்.

    ஜெயலலிதாவா கருணாநிதியா என்னும் விஷயத்தில் தீவிரவாதிகளைக் கையாளும் விஷயத்தில் ஜெயலலிதாவின் உறுதி அதிகம் என்பதாலேயே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. //மற்றபடி டோண்டு எனது தந்தை மாதிரி! //

    எனக்கும் தான் ;). நீங்கள் என் சகோதரரை போல். நாங்களும் யூத் தான் :).. அதுனால தான் கேட்டேன். இதே போல ராஜாஜி செய்யாத நல்ல விஷயங்களை நீங்கள் குறிப்பிட்டு இருந்தால் அதுவே சரியான வாதமாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    //நூறு சதவிகிதம் பெர்பெக்ட் மேன் என்று யாருமில்லை என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன்!//
    100%.
    நன்றி

    ReplyDelete
  22. //இதே போல ராஜாஜி செய்யாத நல்ல விஷயங்களை நீங்கள் குறிப்பிட்டு இருந்தால் அதுவே சரியான வாதமாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.//

    ராஜாஜி செய்ய நினைத்த கெட்ட காரியம் தான் எனக்கு தெரியும் அது வர்ணாசிரமத்தை ஆதரித்தது, அதில் எனக்கு துளியளவும் ஒப்புதல் இல்லை,

    அதே நேரம் திராவிட குஞ்சுகளும் தந்தை அரசியல் என்றால் தமையனும் அரசியல் என்று மறைமுகமாக வர்ணாசிரமத்தை ஆதரிப்பது பெரியார் என்ற பெயரை கூட பயன்படுத்த தகுதியில்லாத நிலையை காட்டுகிறது!

    அரசியல் சாக்கடையோ இல்லையோ, உள்ளே இருக்கும் அனைவரும் பன்றிகள் தான்!

    ReplyDelete
  23. @வால்பையன்
    ராஜாஜி மேல் சற்றும் அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு. எனது இப்பதிவைப் பார்க்கவும் http://dondu.blogspot.com/2006/08/2.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. உயர்நிலை
    மத்திமநிலை
    கடைநிலை

    என்ற மூன்று பிரிவுகளாக இருந்த சாதிகளில், யார் யாருக்கு எந்தந்த மாதிரி சலுகை காட்டப்பட்டது என சாட்சியங்களும், ஏடுகளும் இருகின்றன.

    ராஜாஜி உட்கார்ந்து கொண்டு சட்டம் போடலாம், எல்லோருக்கும் கல்வி முக்கியம், அதே நேரம் எதாவது கைத்தொழிலும் முக்கியம் என்று ஆனால் நடந்தது என்ன, பள்ளிகளில் கடைநிலை சாதி மாணவர்களுக்கு தனி இடமும், உணவில் கடைசி பந்தியும் ஒதுக்கப்ப்ட்டது.

    பள்ளிகளில் ஆசீரியர்களாக உயர்சாதியினரும், மற்ற ஊழியத்திற்கு மத்திமசாதியினரும் நியமிக்கப்பட்டனர்,

    ராஜாஜியும் பெரும்பான்மையினரை நம்பி அரசியல் நடத்திய ஒரு சாதாரண அரசியல்வாதியே தவிர கொண்டாட வேண்டிய அளவுக்கு ஒரு அரசியல்வாதிகளும் கிடையாது என்பதே என் கருத்து!

    ReplyDelete
  25. //நீங்கள் பைனாக்குலரைத் திருப்பிப் பார்க்கிறீர்கள். 1953 - ல் கிராமத்தில் உள்ளப் பெரும்பான்மை குழந்தைகள் பள்ளிக் கல்வியே இல்லாமல் இருந்தனர். அவர்கள் தங்கள் பெற்றோரால் குலக் கல்வி அளிக்கப்பட்டனர். ராஜாஜி செய்தது என்னவென்றால் அவர்கள் குறைந்தப் பட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது பள்ளிக்கு வரச் சொன்னதுதான்.//


    இவ்வாறு ஒரு சட்டம் இயற்றபட்டதுக்கு பெரியாரே முக்கிய காரணமாக இருந்திருப்பார்!

    காரணம் பார்பனர்களுக்கு கல்வியே புரோகிதம் தான்! அதுவும் தொழிலாக அமையும், அதையே தான் அவர்கள் மற்றவர்களையும் செய்யசொன்னது.

    பெரும்பான்மையான குழந்தைகள் கல்வி இல்லாமல் இருந்தது பொருளாதார பிரச்சனையால், ஆண்டான் அடிமை ஒழிக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்ததும் பெரியார் தான்! காங்கிரஸ் கூட அல்ல!

    ReplyDelete
  26. @வால்பையன்
    வெறுமனே சொன்னால் போதாது, ஆதாரங்கள் தர வேண்டும்.

    ஒரு விஷயம்; ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளீகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் ஏதும் கிடையாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. //இப்போது மட்டும் என்ன மொபிலிடி வாழ்கிறதாம்? கீரிப்பட்டி தலித்துகள் கிராமத்தில்தானே முடங்கிக் கிடக்கின்றனர்?//

    அருமையான கேள்வி அப்போதே கேட்டிறுக்கிறீர்கள், தற்போதைய உத்தாபுர பிரச்சனையும் கிணற்றில் விழந்த கல்லாகிவிட்டது.

    இதற்கு திராவிட குஞ்சுகள் அல்லது அதிகார மையத்தில் உள்ளவர்கள் பதில் சொல்லவேண்டும்.

    ஆனால் முடியாதே! அவர்களிடம் கேள்வி கேட்டால் எதிர் கேள்வி மட்டுமே கேட்க தெரியும், பதில் சொல்ல தெரியாது!

    ReplyDelete
  28. //ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளீகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் ஏதும் கிடையாது.//

    ஆனால் அப்போதே தங்கி படிக்கும் வசதியுள்ள குருகுலங்கள் இருந்தன!
    அங்கே உணவு தரப்பட்டது!
    அதில் நடந்த நிகழ்வுக்காக ஒரு முறை பெரியாருக்கும்,ராஜாஜிக்கும், காங்கிரஸ் மாநாட்டில் கருத்து வேற்பாடு ஏற்ப்பட்டது தமிழ்நாடே அறியும் ”பெரியார்” படம் மூலம்

    ReplyDelete
  29. //இவ்வாறு ஒரு சட்டம் இயற்றபட்டதுக்கு பெரியாரே முக்கிய காரணமாக இருந்திருப்பார்!//
    அப்படியா, அப்புறம் ஏன் அதை மாங்கு மாங்கென்று எதிர்த்தார்?

    விளையும் வெள்ளாமையில் உழுபவனுக்கு அறுபது, நிலச் சொந்தக்காரனுக்கு நாற்பது மட்டுமே என்ற சட்டத்தை கொண்டு வந்தது ராஜாஜிதான். கந்து வட்டிக் கடன் தலைவிரித்தாடியபோது, அசலுக்கு மேல் வட்டி தந்திருந்தால், கடன் கேன்சல் என்ற சட்டத்தையும் தந்தது ராஜாஜிதான்.

    அதே சமயம் சமீபத்தில் 1968-ல்கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலச்சுவான்தார் தலித்துகளை உயிரோடு எரித்த போது அதை வெறும் கூலித்தகராறு என சப்பைக்கட்டு கட்டியது பலீஜா நாயுடு வகுப்பை சேர்ந்த ஸ்ரீமான் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான். சக நாயுடு பாசம் அவரை அவ்வாறு பேச வைத்தது என்பதையும் மறக்கக் கூடாது.

    எது எப்படியானாலும் மஞ்சத் துண்டு ராஜாஜியை பற்றிப் பேச ஒரு அருகதையும் இல்லாதவர் என்பதுதான் இப்பதிவின் அடிநாதம். அதை மறந்து ராஜாஜியை தாக்க வேண்டியதன் அவசியம்? அதுவும் தப்புத் தப்பாக வாதங்கள் வேறு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. பெரியார்ரும் கணை மூடி கொண்டு பார்பனிய எதிர்பை மட்டும் காட்டியதில் எனக்கும் உடன்பாடில்லை!

    சமகல்வி, சம உரிமை என்ற பதத்துக்கு மட்டுமே பெரியாரை எடுத்து கொள்கிறேன்!
    ராஜாஜியின் சக நண்பராக!

    மற்ற படி நான் பெரியாரின் சீடனல்ல என்பது உங்களே தெரியும்!

    ReplyDelete
  31. //ஆனால் அப்போதே தங்கி படிக்கும் வசதியுள்ள குருகுலங்கள் இருந்தன!
    அங்கே உணவு தரப்பட்டது!//
    அவை அரசுப்பள்ளிகள் அல்ல. ராஜாஜி முதன் மந்திரியாக இருந்தபோது நடந்ததும் அல்ல.

    அப்போதைய காண்ட்ரவர்சி கூட வவேசு அய்யருக்கும் பெரியாருக்கும் இடையில்தான் நடந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. //பெரியார்ரும் கண்ணை மூடி கொண்டு பார்பனிய எதிர்பை மட்டும் காட்டியதில் எனக்கும் உடன்பாடில்லை!//
    அதன் நோக்கமே பார்ப்பனர் அல்லாத மற்ற உயர் சாதியினர் காட்டிய சாதிப்வெறியை மறைக்கத்தான். கீழ்வெண்மணியில் அது வெளிப்படையாகத் தெரிந்தது. பார்ப்பன மிராசுதாராக இருந்திருந்தால் அவர் எப்படியெல்ல்லாம் குதித்திருப்பார் என்பதை நீங்களே எண்ணிப் பார்க்கவும்.

    வைக்கத்துக்கு பிறகு, ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தபோதோ, பிறகு தி.க.வில் இருந்தபோதோ அவர் எங்காவது ஹரிஜனங்களுக்கு ஆலயப்பிரவேசத்துக்காக போராட்டம் நடத்தியதாகவோ, கிராமப்புர டீகடைகளில் இரட்டை தம்ளர் முறைக்கு எதிராகவோ போராட்டம் ஏதும் நடத்தியதாகத் தெரியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. உயர்சாதியம் யார் பேசினாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும், அதை பெரியாரே கோட்டை விட்டது உண்மை தான்!

    முதிர்ச்சியின் காரணமாக கடைசி நேரத்தில் களப்பணியில் இறங்கி செய்ய இயலாமல் இருந்திருக்கலாம்.

    ஒருவேளை நீங்கள் சொல்ல்வது போல் பெரியார் ஒரு கைதேர்ந்த நாடககாரராக இருந்திருந்தால் அரசியல் முழுநேரப்பணியை செய்து ஆட்சியை பிடிக்க செய்திருக்கலாம், அதில் ஆர்வமில்லாமல் இருந்த போதே ஓரளவு பெரியாரை நாம் புரிந்து கொள்ளலாம்!

    ReplyDelete
  34. க. கா. அ. சங்கம்June 13, 2009 8:42 AM

    இரட்டை குவளை முறை தவறு என்பவர்கள் பலர் இரட்டை சட்டத்திற்கு (இசுலாமியர்களுக்குத் தனிச்சட்டம், இந்துக்களுக்குத் தனிச்சட்டம்) ஆதரவாக இருக்கிறார்களே. ஏன் ?

    ReplyDelete
  35. பல வரலாறுகளை நம்ப முடியவில்லை
    (உண்மை எங்கே கிடைக்கிறது. எல்லாரும் அவரவர்களுக்கு பிடித்த, முக்கிய துவம் வாய்ந்த வற்றை பற்றியே எழுதுகிறார்கள். அதனால் நான் ராஜாஜி பற்றியோ, பெரியார் பற்றியோ, நல்லதோ கேட்டதோ, எல்லாமே எங்கோ எப்போதோ யாரோ எழுதியதை வைத்து தான் சொல்ல முடியும்.
    இருக்கும் போது திட்டு பவர்கள் கூட, போன பின் 'அவர் போல உண்டா'. அவர் தான் இதையே இப்படி செய்ய ஆரம்பித்தார்' என்று ஒரு போடு போடுவார்கள்.
    (ஏக., ராஜாஜி உடைய அறிவு திறனை அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸ்ன் வியந்து பாராட்டி உள்ளார்.)
    உடனே சிலர் பெரியாரை, கலைஞரை ரஷ்ய தலைவர் பாராட்டினர் என்று அடிப்பார்கள்.
    ஏதோ படத்தில்.. அமெரிக்க வில் மைகேல் ஜாக்சன் கூப்டகா , ஜப்பான் ல ஜக்கி சான் கூப்டகா என்பது போல.
    எல்லாமே நம்பினால் நம்புங்கள் போல தான் !!! சரியான ஆதாரங்கள் கிடைத்தால் ஒழிய

    என் கருத்து ...
    இந்த விவாதத்தில் ஜாதி தேவை இல்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது. அவ்வளவே.

    அன்புடன்,
    சுப்ரமணிய சிவா

    ReplyDelete
  36. //இரட்டை குவளை முறை தவறு என்பவர்கள் பலர் இரட்டை சட்டத்திற்கு (இசுலாமியர்களுக்குத் தனிச்சட்டம், இந்துக்களுக்குத் தனிச்சட்டம்) ஆதரவாக இருக்கிறார்களே. ஏன் ? //


    ஓட்டு பொறுக்கிங்க எத வேணும்னாலும் செய்வாய்ங்க!

    அசிங்கமா கூட சொல்லலாம்!

    ReplyDelete
  37. 1.கொங்கு மண்டலத்தில் கள் இறக்குவோர் போராட்டம் பற்றி?
    2.மது ஆறாய் ஓடும் போது கள்ளுக்கு மட்டும் தடை ஏன்?
    3.கள்ளச் சாராயம் கலாச்சாராம் குறைந்துள்ளாதா?
    4.தேர்தலில் திமுகவை எதிர்த்து வேலை செய்த திரைப் படத்துறையினரை தண்டிக்கப் போவதாய் பேசினார்களே?
    5.நடிகர் விஜய்காந்த் கட்சி அதிமுகவுக்கு(பாமக) ஆப்பு,நடிகர் விஜய் கட்சி யாருக்கு?

    ReplyDelete