3/31/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 31.03.2009

டோண்டு ராகவனுக்கு பச்சைமீன் வாசனை பிடிக்கும் என்பது அவனது நண்பர்கள் வட்டாரத்தில் பிரசித்தம். “அதெப்படிடா, மீன் சாப்பிடும் எங்களுக்கே அந்த வாசனை பிடிக்காது, நீ என்னமோ மூச்சு பயிற்சி செய்யறது போல அந்த வாசனை இருக்கிற இடத்தில் மூச்சை இழுத்து விடறே” என சில அசைவ நண்பர்கள் ஆச்சரியப்படுவதுண்டு.

மேலே போவதற்கு முன்னால் வேணுவனம் என்னும் வலைப்பூவில் நான் இட்ட இப்பின்னூட்டத்தை இங்கு நினைவுகூர்கிறேன்.

“எனக்கு பச்சைமீன் வாசனை பிடிக்கும். இப்போது அது ஏன் என நினைத்து பார்க்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது சென்னை, திருவல்லிக்கேணியில். கடற்கரை எங்கள் விளையாட்டு மைதானம். மீனவர்கள் மாலை மீன் கொண்டுவரும்போது வேடிக்கை பார்த்தவாறு நின்றிருப்போம்.

ஒரு கவலையும் இல்லாத ஆனந்தமயமான இளமைக் காலத்தை இப்போதுகூட எங்கிருந்தாவது மீன் வாசனை வந்தால் நினைவுகூர்வதாலேயே அந்த வாசனை பிடிக்கும் என நினைக்கிறேன்”.

அதே சமயம் அந்த வாசனையை நுகரும்போது உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக தலைவலி ஏதும் ஏற்கனவேயே இருக்கக் கூடாது.

அவ்வாறு செய்யும்போது கடற்கரையில் நண்பர்களுடன் விளையாடியது, மெரீனா நீச்சல்முளம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகக் கிளையில் அமர்ந்து புத்தகங்கள் படித்தது ஆகியவை நினைவுக்கு வரும். நான் இருந்த வெங்கடாசல செட்டித் தெரு ஒரு பக்கத்தில் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் சேர்கிறது. அங்கு சென்று கிழக்கே நடந்தால் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை இருக்கும் இடத்துக்கு போய் சேரலாம். சமீபத்தில் 1968-ல் உலகத் தமிழ் மகாநாடு நடந்த போது நிறுவப்பட்ட சிலை அது. பிற்பாடு அது ஜெயலலிதாவின் கண்களை உறுத்தி இரவோடிரவாக எடுக்கப்பட்டு, கலைஞர் ஆட்சிக்கு திரும்ப வந்ததும் முதல் காரியமாக அதே இடத்தில் நிறுவப்பட்டது.
========================================================

வக்கீல்கள் போலீசார் பிரச்சினை கவலை தரும் வகையில் ஒருதலைப்பட்சமாக, வக்கீல்களுக்கு ஆதரவாக ஹேண்டில் செய்யப்படுகிறது. இது பல தவறான சமிக்ஞைகள் தருகிறது. வக்கீல்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தோன்றிவருவது விசனத்துக்குரியது. போலீசார் சிலரை சஸ்பெண்ட் செய்தது போலவே முட்டைவீசும் செயலை ஆரம்பித்து வைத்த வக்கீல்களுக்கும் தற்காலிகமாவது சன்னதை பிடுங்கிருக்க வேண்டும். அச்செயல் நீதிபதிகள் முன்னாலேயே நடந்ததாதலால் அவர்களை இனம் காணுவது எளிதுதான்.
======================================================

மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ் காமில் ஒரு சிறு சலசலப்பு. ஒரு மன்ற இடுகை தவறான மொழிபெயர்ப்பினால் வந்த அனர்த்தங்கள் பற்றியது. அதற்கான உதாரணங்கள் கேட்கப்பட்டிருந்தன. என் பங்குக்கு பைபிள் பழைய ஏற்பாட்டில் வந்த பிழையான மொழிபெயர்ப்பு பற்றி எழுதினேன். விஷயம் இதுதான்.

ஒரு முறை இசாக் அசிமோவ் ஸ்பெயினில் ஒரு மியூசியத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு இருண்டகாலம் என ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் அச்சிடப்பட்ட பைபிள் இருந்தது. அதை அச்சிட்டு வெளியிட்டவர்கள் அந்த நாட்டில் உள்ள யூதர்கள். இசாக் அசிமோவ் அந்த பைபிளை புரட்டிப் பார்த்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் யூதர்களின் ரட்சகர் பற்றி ஒரு முன்னறிவிப்பு இருந்தது. “ஒரு அல்மாவுக்கு ரட்சகர் பிறப்பார்” என ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் ஹீப்ரூ மொழியாகும். இந்த வாக்கியத்தில் எல்லாமே ஸ்பானிய மொழியில் இருக்க அல்மா என்ற ஹீப்ரூ சொல் மட்டும் அப்படியே கையாளப்பட்டிருந்தது. அல்மா என்றால் கல்யாண பிராயத்தை ஆடைந்த இளம் பெண் என்று பொருள். ஆனால் சாதாரணமாக எல்லா மொழிகளீலும் இந்த இடத்தில் கன்னி என்றுதான் மொழிபெயர்ப்பார்கள். ஒரு நிமிடம் திகைத்த அசிமோவுக்கு திடீரென தெளிவு பிறந்தது. யாரோ ஒரு மொழிபெயர்ப்பாளர் கடந்த காலத்தில் இந்த ஹீப்ரூ சொல்லை கன்னி என மொழிபெயர்த்துள்ளார். பிறகு அதிலிருந்து மொழி பெயர்த்த பலர் அப்படியே கன்னி என குறிப்பிட்ட, கன்னி மேரி வழிப்பாடு எல்லாம் வந்து விட்டது. அதை ஒத்துக் கொள்ளாதவர்கள் கொலை முதலிய கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட கன்னி(கழியாத பெண்ணை பெடூலா என ஹீப்ரூவில் குறிப்பிடுவார்கள்).

இந்த விஷயத்தை நான் ப்ரோஸின் அந்த இடுகையில் குறிப்பிட்டதுமே சீறிக் கொண்டு ஆக்ரோஷமான தாக்குதல்கள் என்னை நோக்கி வந்தன. “வெளியாட்கள் எல்லாம் எங்கள் கிறித்துவ வேதம் பற்றி பேசுவதா, அதுவும் இந்த இசாக் அசிமோவுக்கு என்ன தகுதி உண்டு என்றெல்லாம் பொருள்ப்ட வாசகங்கள் இருந்தன. நான் மட்டும் சும்மா இருந்தேனா, என்ன? பழைய ஏற்பாடு என்பது யூதர்களது புத்தகம். சொல்லப்போனால் கிறித்துவர்கள்தான் வெளி மனிதர்கள். இசாக் அசிமோவ் யூதர். மேலும் இரு பைபிள்களையும் ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருக்கு தகுதி இல்லையென்றால் வேறு யாருக்கு தகுதி உண்டு என்றெல்லாம் நான் எழுத, ஒரே கலாட்டாதான் போங்கள். நேற்று அந்த இடுகையில் போய் பார்த்தால் எனது ஒரிஜினல் பதிவு, அதன் பதில்கள் ஆகியவை நீக்கப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக மேலும் பலர் எழுதி, எல்லாவற்றையும் எடுத்தது சரிதான், ஆனால் நரசிம்மனுடைய (டோண்டு ராகவன்) ஒரிஜினல் பதிவு கண்டிப்பாகவே ஏற்புடையதே என வாதாடினர். பிறகு என்ன நடந்தது? தலைவாசலின் அதிபர் ஹென்றியே வந்து அந்த திரியத்துக்கே ஒரு பெரிய பூட்டு போட்டுவிட்டு சென்றார். அவர் எழுதுகிறார்:
“ViktoriaG wrote this earlier in the thread, but even at that point, 16 posts (from 9 different posters) had already been removed for having strayed from the topic of translation. By now, a total of 28 posts from 13 posters has been removed. At least five moderators have been involved. A number of members, too, have tried to redirect discussion to the original topic. Thanks for your efforts, folks.

At this point, in the interest of keeping things orderly (so that our moderators can do their own work, too!), I am closing the thread”.

உண்மை என்னவென்றால் மொழிபெயர்ப்புடன் மிகவும் சம்பந்தம் உடையதுதான் நான் இட்ட இடுகை. இருப்பினும் பல மன அழுத்தங்களை அது உருவாக்கியதால் அதையும் அதன் எதிர்வினைகளையும் நீக்க வேண்டியிருந்தது என்பதே நிஜம். கடைசியில் சமாளிக்க முடியாமல், போகவே மொத்த டாபிக்கையே பூட்டு போட்டு விட்டனர்.
===================================================

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/30/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 39 & 40

பகுதி - 39 (26.03.2009):
இதற்கு முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டபடி, இப்போதுதான் கதையே சூடுபிடிக்கிறது. கைலாய சீன் போன பகுதியில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது. நாரதரை பரமனும் உமையும் ஜாக்கிரதை உணர்வுடனேயே வரவேற்கின்றனர். ஆனாலும் என்ன, கலகம் செய்யாது ஒரு குறிப்பிட்டக் காலம் கழிந்தால் தலை வெடித்துவிடும் என்ற சாபத்தைப் பெற்ற நாரதரிடரமா அது நடக்கும்?

நாரதர் பூலோகத்தில் தான் கண்ட ஒரு விஷயம் பற்றிக் கூறுகிறார்.

“சமீபத்தில் பூவுலகில், பாரத தேசத்தில், தென்னாட்டில் பிராமணர்கள் மகாநாடு நடந்தது. (இங்கு டோண்டு ராகவனின் சிறுகுறிப்பு: இக்கதை சமீபத்தில் எழுபதுகளில் வந்தது. ஆகவே அதில் குறிப்பிட்டப்பட்ட மகாநாடும் எழுபதுகளில்தான் வந்திருக்க வேண்டும். அதாவது சமீபத்தில் எழுபதுகளில் என வைத்து கொள்ளலாம். இக்குறிப்பு வால்பையனின் கவனத்துக்காக). அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி, கலாசாலைகளில் அவர்களுக்கு தரப்படும் இடங்களின் எண்ணிக்கை பற்றி எல்லாம் அந்த மகாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இந்த மகாநாடு பிராமணர்களின் ஜாதி வெறியைத்தான் காட்டுகிற்து என்று சிலர் கூறுகிறார்கள். சில தீவிரவாதிகள் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் சில அதிதீவிரவாதிகள் அவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்கள்”.

கைலாயத்தில் எல்லோருமே மௌனம் சாதிக்க, நாரதர் மெதுவாக இது சம்பந்தமாக விஸ்வாமித்திரர் கருத்து கூறாதது ஆச்சரியமாக உள்ளது என அவருக்குக் கொம்பு சீவுகிறார். மேலும் சில சொற்களை இதே பாணியில் கூற விஸ்வாமித்திரர் வாய் திறக்கிறார். இது பற்றி மேலே பேசும் முன்னால் எத்தனை பிராமணர்கள் எங்கே இருக்கிரார்கள் என்பது அடையாள்ம் காணப்படுவது அவசியம் என அவர் அபிப்பிராயப்படுகிறார். வசிஷ்டர் தன் பங்குக்கு, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னால் யார் பிராமணன் என்பதும் தெளிவாக வேண்டும் என கூறுகிறார்.

பிரச்சினைகளுக்கு விடை என்ன என உமையவள் கேட்க, இக்கேள்விகள் கைலாயத்தில் எழுப்பப்பட்டாலும், அவற்றுக்கான விடைகளை பூவுலகில்தான் தேட வேண்டும் எனக் கூறிவிட்டு, மேலும் பேசுகிறார் பரமன்.

“இதற்கான விடைகளைக்காண வசிஷ்டர் பூவுலகில் அவதரிப்பார். அவருக்கு பூணூல் போட்டு பிரும்மோபதேசம் பெறும் வரையில் சாதாரணமாகவே இருப்பார். அதன் பிறகு தனது தேடலைத் துவங்குவார், தான் கண்டறியும் விஷயங்களை மனித சமுதாயத்துக்கு கூறுவார். ஏற்பவர் ஏற்கட்டும், ஏற்காதவர் பற்றிக் கவலையில்லை. இந்த விவாதம் பூவுலகில் பல காலமாக நடந்து வந்து ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பதில் கூறி வந்துள்ளனர். ஆகவே நடுநிலைமையிலிருந்து ஒருவர் இந்த விஷயத்தை ஆதியோடந்தமாக கண்டறிவது அவசியம். அதற்கு வசிஷ்டரே லாயக்கானவர். அசோக் உண்மையான பிராமணனைக் கண்டதும்தான் தான் வசிஷ்டன் என்பதை உணர்வான். அப்போது இங்கு கைலாயத்தில் நமது ஆனந்தத் தாண்டவம் நடக்கும். அது வசிஷ்டனாகிய அசோக்கின் காதில் விழும். அவன் உடனேயே கைலாயம் திரும்புவான்”

இதை கூறியதும் கைலாயத்தில் சந்தோஷ அலைகள் பொங்குகின்றன. கலபக மரங்களுக்கிடையே மகரிஷிகள் அமைந்து வேதம் ஓதினார்கள். விநாயகர் உவகை பொங்க, உரக்க வீரிட அந்த ஒலியைக்கேட்ட குகனுடைய மயில், ‘மேகக்கூட்டத்தின் சப்தம்’ என எண்ணி தோகை விரித்து ஆனந்த நடனம் ஆடியது. (மேலே படிக்க, பார்க்க “எங்கே பிராமணன்? அல்லயன்ஸ் பதிப்பகம், ஒன்பதாம் பதிப்பு, பக்கங்கள் 87 - 88).

இங்கு நாதன் வீட்டில் கூட்டு பிரார்த்தனை முடிந்து, பாகவதர் விடை பெற்று செல்கிறார். பிறகு திடீரென ஏதோ ஒன்று ஞாபகத்துக்கு வர, திரும்பவும் நாதன் வீட்டுக்கே வருகிறார். நாதனிடம் அவர் தந்தை பற்றியும், பாட்டனார் பற்றியும் விசாரித்து அவர்கள் பிராமணர்கள் செய்ய வேண்டிய கருமாக்களை சரிவர செய்யாததால் அனர்த்தம் வந்ததெனக்கூறி, அசோக்குக்கு கூடிய சீக்கிரம் பூணல் போட வேண்டும் எனக்கூறுகிறார். நாதனும் வசுமதியும் ஒத்து கொள்கின்றனர்.

இப்போது சீனுக்கு வருகின்றனர் சோவும் நண்பரும். சோ அவரிடம் கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அதன் முந்தைய யுகங்களிலேயே கூறிவிட்டனர் என்று கூறி பல உதாரணங்களை அடுக்குகிறார். “சார், நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்” என நண்பர் வியக்க, தன்னை மாதிரி அதிகம் பேசுபவர்கள் புத்திசாலிகளாகக் கருதப்படுவார்கள் எனக்கூறி முத்தாய்ப்பு வைக்கிறார்.

பகுதி - 40 (27.03.2009):
அசோக்குக்கு பூணல் போட முடிவானதும் வசுமதி நீலக்ண்டன் மனைவி பர்வதத்துக்கு ஃபோன் செய்து அவாளாத்து சாஸ்திரிகளிடம் இது பற்றி கூறும்படி கேட்டுக் கொள்கிறாள்.

நீலகண்டன் வீட்டில் அசோக்கின் பூணல் விஷயம் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. சில எளிய உதாரணங்களால் பர்வதம் காயத்ரி மந்திரம் கற்றுத்தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதைத் தன் கணவருக்கு விளக்குகிறாள்.

பிரியா கிருபா வீட்டில் பிரியா தன் கணவனிடம் அவனுக்கு வேலையில் பிரமோஷன் கிடைக்க சுதர்சன ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை கூறுகிறாள். தனது தந்தையும் முக்கியமானத் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் சுதர்சன மந்திரம் கூறுவார் என்றும் கூறுகிறாள்.

இது பற்றி சோவின் நண்பர் அவரிடம் கேட்க, சோ அவர்கள் எல்லா காரியத்துக்குமே ஆண்டவன் அருள் தேவை என்கிறார். ஒரு பெரிய மரத்தின் கீழே ஒரு பக்கத்தில் தம்பதியர் படுத்து இளைப்பாற, மறு பக்கத்தில் இவர்களது இருப்பை அறியாத வேடன் படுத்துறங்குகிறான். மரத்தின் கிளைகளில் எப்போதோ யாரோ விட்ட அம்பொன்று காற்ரின் அசைவால் கீழே விழுந்து தம்பதியரில் மனைவியின் உயிரைக் குடிக்கிறது. வேடன் மேல் பழி விழுந்து வழக்கு மன்னனிடம் வருகிறது. இதில் செய்வதறியாத மன்னன் சோமசுந்தரக் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு செல்கிறான். அவரது அருளால் இரு யமகிங்கரர்கள் பேசுவதை அவன் கேட்க இயலுகிறது. அப்போது ஒரு உயிரை எடுக்கும் விதத்தைப் பற்றிப் பேச, அப்போது மரத்தடியில் அந்த பெண்மணி அம்பால் எவ்வாறு உயிரிழந்தாள் என்பதும் வெளியில் வருகிறது. மன்னனும் தெளிவு பெற முடிந்தது.

இது ஒரு extreme கேஸ் என்றாலும், இறைவன் அருள் இருந்தால்தான் செய்யும் காரியமும் சித்தியடையும் என்பதையே இது விளக்குகிறது என சோ கூறுகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/28/2009

மாண்புமிகு நந்திவர்மன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்னும் தலைப்பில் புதுமைப்பித்தான் ஒரு கதை எழுதியுள்ளார்.

“மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்” என ஆரம்பிக்கும் அக்கதையை முழுதும் படிக்க இங்கே செல்லவும். நான் அக்கதையை இங்கு குறிக்கும் நோக்கத்தை பின்னால் கூறுகிறேன்.

இப்போது நான் நம்ம பதிவர் டி.வி ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதி முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மாண்புமிகு நந்திவர்மன் என்னும் நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்தேன்.அதை பார்க்கும்போது மேலே நான் குறிப்பிட்ட புதுமைப் பித்தனின் கதைதான் நினைவுக்கு வந்தது. அது மட்டுமா வந்தது? சோ அவர்கள் எழுதிய “சம்பவாமி யுகே யுகே” என்ற நாடகமும் நினைவுக்கு வந்தது. சமீபத்தில் எழுபதுகளில் தேங்காய் சீனுவாசன் நடித்த “கலியுகக் கண்ணன்” திரைப்படமும்தான்.

ஏன் அவ்வாறு வரவேண்டும்? ஏனெனில் எல்லாவற்றிலும் கடவுளே பூவுலகுக்கு வந்து சிறிது காலம் மனிதர்களுடன் தங்குகிறார்/பழகுகிறார்/அவ்வப்போது வந்து போகிறார். இந்த கான்சப்டை ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு மாதிரியாக கையாண்டுள்ளார்கள். ஓரிரு தினங்களுக்கு முன்னால் பதிவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு ஃபோன் செய்து தனது சௌம்யா தியேட்டர்ஸ் குழுவினர் இந்த நாடகத்தை வாணிமகாலில் 28.03.2009 மாலை திநகர் வாணிமகாலில் போடப்போவதாகக் கூறி எனக்கும் அழைப்பு விடுத்தார். முன்னமேயே இவரது “என்று தணியும்” என்னும் நாடகத்தை பார்த்துள்ளேன். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். இம்முறை அவரும் இருந்து நாடகத்தில் முக்கிய பாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார்.

ஏற்கனவேயே சொன்னபடி இதில் சிவபெருமான் பூவுலகுக்கு தனது பக்தர் சத்தியா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசியல்வாதிகளை திருத்துவதற்காக வருகிறார். வருகிறவர் தானே அரசியல் வலையில் சிக்கி, முதல்வராக பதவியேற்று, இல்லாத ஊழல்கள் எல்லாம் செய்து பதவியிழக்கிறார். கடவுளாலும் அரசியல் என்னும் சாக்கடையை சரி செய்தல் இயலாது என்ற கான்சப்டை முன்வைக்கிறது இந்த நாடகம்.

கரூர் ரங்கராஜன் சத்தியாவாகவும், டி.வி.ராதாகிருஷ்ணன் சிவபெருமானாகவும், SBI முரளி எம்.எல்.ஏ. பூபதியாகவும், சக்தி சத்தியாவின் மகன் தமிழாகவும், ராஜேந்திரன் அமாவாசையாகவும், வாசுதேவன் பொதுமக்களாகவும், P.R.S. பத்திரிகை நிருபராகவும் வருகின்றனர்.

மேடைக்கு பின்னால் செயல்பட்டவர்கள்:
ஒப்பனை -- குமார்,
அரங்கவமைப்பு -- சைதை குமார்,
ஒலி -- வாணிமஹால்
ஒளி மற்றும் இசைக்கலவை: கிச்சா,
தயாரிப்பு நிர்வாகம்: P.R. சீனுவாசன்
எண்ணம், உரையாடல், இயக்கம் -- டி.வி. ராதாகிருஷ்ணன்.

தேவையின்றி இழுக்கடிக்காமல் நாடகத்தை விறுவிறென கொண்டு சென்ற ராதாகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். என்ன, நாடகம் ஒரு கையறு நிலையில் முடிந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதேசமயம் எவ்வாறு யோசித்து பார்த்தாலும் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் வேறு எவ்விதமாக நாடகத்தை முடித்திருக்க இயலும் என்பதையும் கற்பனை செய்ய முடியவில்லை என்பதே நிஜம். இதே மனநிலை எனக்கு சோ அவர்களின் “சம்பவாமி யுகே யுகே” நாடகத்தைப் பார்த்தபோதும் ஏற்பட்டது.

நாடகத்தின் பெரும்பகுதியில் ஒரு கேரக்டர் ஒன்றுமே பேசாது வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. கடைசியில்தான் அது பொதுமக்களை பிரதிபலிக்கும் பாத்திரம் என விளங்கியது. ஆர்.கே. லட்ச்மணின் கார்ட்டூனில் வரும் common man போல என வைத்து கொள்ளலாம். மேலும் பதவியில் இருக்கும்வரை சிவபெருமானே அவரைப் பார்க்கவில்லை, பதவியிழந்ததும்தான் அவர் கண்ணுக்கு தென்பட்டார் என்பதும் சுவாரசியமாக இருந்தது.

நாடகம் முடிந்ததும் கிரீன் ரூமுக்கு சென்று ராதாகிருஷ்ணனுடனும் கரூர் ரங்கராஜனிடமும் பேசினேன். எனக்கு தெரிந்து அமெச்சூர் நாடகங்கள் மிகவும் குறைந்து விட்டது. சௌம்யா குழுவினர், ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வருகின்றனர். அரங்கம் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது. இதே நாடகம் அதன் பஞ்ச் வரிகளுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வரிக்குவரி அப்ளாஸ் வாங்கியிருக்கும்.

நான் ஏற்கனவே கூறியபடி, இவரது “என்று தணியும்” என்னும் நாடகத்தை பார்த்தபோது அவர் அமெரிக்காவில் இருந்தார். (இந்த நாடகம் “அன்னியன்” மற்றும் “கௌரவம்” கதைகளை நினைவுபடுத்தியது). சென்னையில் அவர் அச்சமயம் இருந்திருந்தால் கரூர் தங்கராஜின் உறவினராக வந்து காமெடி டயலாக் சொல்லியிருப்பார் எனத் தோன்றுகிறது (கௌரவம் திரைப்படத்தில் நீலு ஏற்ற பாத்திரம்). ஏனெனில் இப்போதைய நாடகத்தில் சிவபெருமானே சற்று காமெடி டயலாக் பேசி புன்முறுவலை வரவழைத்தார். ராதாகிருஷ்ணன் அவர்கள்தான் எனது அனுமானம் சரியா எனக் கூற வேண்டும்.

மற்ற ஊடகங்களிருந்து வரும் போட்டிகளால் தமிழ் நாடகக் கலைக்கு இப்போது பின்னடைவுதான் என எனக்கு தோன்றுகிறது. எப்படி அவர்களுக்கு கட்டுப்படியாகிறது என்று கேட்டேன். தாங்கள் அமெச்சூர் குழுவென்றும், நடிகர்களுக்கு போக்குவரத்துக்கு மட்டுமே பணம் தரப்படும் என்றும், வெறுமனே ஆர்கெஸ்ட்ரா, லைட்டிங் ஆகிய விஷயங்களுக்கும் மட்டுமே பணம் தருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். கேட் கலெக்சன் என இழுத்ததற்கு அது ஒரு சபா ஏற்பாடு செய்த நாடகம் என்றும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை தந்து விடுவார்கள் எனவும் கூறப்பட்டது. கையைக் கடிக்காமல் போகிறதா எனக் கேட்டதற்கு ஏதோ போகிறது என பதில் கிடைத்தது. ஆனால் அவ்விருவருடைய ஆர்வமே அவர்களது செயல்பாட்டுக்கு காரணம் என்பது புரிந்தது. அதே சமயம் தொழில்முறை நடிகர்கள் ஏன் குறைந்து போனார்கள் என்பதும் புலப்பட்டது.

அவ்விருவருக்கும் வாழ்த்து கூறிவிட்டு புறப்பட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.03.2009

சில சமயங்களில் பல விஷயங்கள் பதிவாக்கப்பட போட்டி போடுகின்றன. தனித்தனியாக பதிவு போடும் அளவுக்கு விஷயம் இருப்பதில்லை. ஆகவே என்ன செய்யலாம் என யோசித்து, அவற்றை சேர்த்து ஒரு பஞ்சாமிர்த பதிவாக போடலாம் என்ற யோசனை.

புலிவருது புலிவருது:
இந்த ஹெல்மட் சமாச்சாரம் போலவே பிளாஸ்டிக் பைகள் சம்பந்தமான சட்டதிட்டங்களும் blow hot blow cold முறையில் வருகின்றன, போகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் எங்களூரில் இவற்றைத் தடை செய்தார்கள். பொருட்களை வாங்குபவர்கள் துணிப்பைகளுடன் கடைக்குச் செல்லுமாறு “அன்புடன்” அறிவுறுத்தப்பட்டனர். இதுதான் சாக்கு என சுபிட்சா கடையினர் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் தருவதை சுத்தமாக நிறுத்தினர். ஆனால் பல கடைக்காரர்கள் ஓசைப்படாமல் தந்து தமது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டதுதான் நடந்தது. திடீரென ஆரவாரமின்றி இந்த ஆணை நகராட்சியால் வாபஸ் பெறப்பட்டது. பல மாதங்கள் கழித்து இப்போது இதே ஆணை மறுபடியும் அமுலாக்கப்பட்டுள்ளது. இப்போது அதை கடைபிடிப்பவர்கள் முன்னை விட குறைவே. நான் என்ன நினைக்கிறேன் என்றால் இம்முறை அதை சீரியசாக எடுத்துக் கொள்ள பலர் தயாராக இல்லை. இது கவலையளிக்கும் விஷயமே. பிளாஸ்டிக்கால் சுற்றுப்புறச் சூழலுக்கு வரும் தீமைகள் தெரிந்ததே. அதன் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்தான். ஆனால் அதே சமயம் அதற்கான பத்திரமான மாற்றுப் பொருளை முதலில் தயார் செய்ய வேண்டாமா? பிளாஸ்டிக்கின் எல்லா அனுகூல விஷயங்களும் அதில் இருத்தலும் நல்லதுதானே. உதாரணத்துக்கு டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதில் பேப்பர் கப்புகள் வந்துள்ளன. அவை சீக்கிரமே மக்கிப் போய்விடும் என நினைப்பதால், சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து இருக்கக் கூடாது. ஆனால் சாமான்களை பேக் செய்ய பேப்பர் பைகள் உபயோகப்படுமா எனத் தெரியவில்லை. உலர்ந்த பொருட்கள் ஓக்கே. ஆனால் ஈரமான பொருட்களுக்கு அவை சரிபடாதுதானே. இந்த பிரச்சினையை குறிவைத்து செயல்பட்டு, பிளாஸ்டிக்குக்கு மாற்றை கண்டுபிடித்துவிட்டு ஆணையை பிறப்பித்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதைவிடுத்து விதிகள் போடுவது, வாபஸ் வாங்குவது என என்ன இந்த விளையாட்டு? தேவையா அது?


Conficker C வைரஸ்:
வரும் ஏப்ரல் ஒன்றாம்தேதி முதல் இந்த வைரஸ் செயல்படத் துவங்குமாம். பேப்பரில் போட்டிருக்கிறார்கள். கூகளிட்டுப் பார்த்தேன். இந்த உரல் கிடைத்தது. விஷயம் தெரிந்த பதிவர்களில் யாரேனும் இது பற்றி பதிவு போடுவார்களா?


போலிகள் மீள்வருகை:
உண்மைத் தமிழன் மற்றும் செந்தழல் ரவி இது பற்றி எழுதியுள்ளனர். ஃபிரெஞ்சில் déjà vu எனக் கூறுவார்கள். அதாவது ஏற்கனவேயே இதை பார்த்திருக்கிறோமே என்ற உணர்வைத்தான் குறிப்பிடுகிறேன். இதனால் மிக அதிகமாகப், பாதிக்கப்பட்டவன் என்னும் முறையில் நான் சில வரிகள் கூற ஆசைப்படுவேன். இது பற்றி நான் எழுதிய இப்பதிவிலிருந்து சில வரிகளை கீழே தருகிறேன்:

“தத்தம் பதிவுகளில் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களைச் செயலற்றதாக்குங்கள். பதிவாளர்கள் மட்டும் பின்னூட்டமிட வகை செய்யுங்கள். மட்டுறுத்தலை செயலாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த பதிவாளர் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் ஒரு வகையில் சந்தேகம் அளிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நண்பரை எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டு அப்பின்னூட்டத்தை எழுதியது அவர்தானா என்பதைப் பாருங்கள். மட்டுறுத்தலுக்கான பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வருமாறு செய்து கொண்டால் அதில் பின்னூட்டமிடுபவரின் டிஸ்ப்ளே பெயர் ஹைப்பர்லிங்காக வரும். அதை க்ளிக்கிட்டு சரியான நபரா என்பதை சரி செய்து கொள்ளலாம்.

போலி பின்னூட்டங்கள் எவ்வாறு இன்னொருவர் பெயரில் உருவாகின்றன என்பதைப் பற்றி முகமூடி அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் பல உபயோகமானக் குறிப்புகள் உள்ளன.

போலி டோண்டு யார் என்பது பலருக்கும் தெரியும். என்ன செய்வது, அவன் மனம் பிறழ்ந்த அன்னியன் என்று அவனை விட்டுப் பிடிக்கிறார்கள். இருப்பினும் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமை காப்பது? எதற்கும் இட்லி வடையின் இப்பதிவைப் பார்க்கவும்.

வலைப்பூக்கள் பல வகையில் உபயோகமானவை. அவற்றில் நஞ்சு போல வந்து புகுந்திருக்கும் போலி டோண்டு போன்ற இழிபிறவிகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் நம்மை நாமே கண்ணடியில் தைரியமாகப் பார்த்துக் கொள்ள முடியாது”.

எதற்கும் இருக்கட்டும் என நான் சேகரித்த எலிக்குட்டி சோதனைகளை இங்கு கூறுகிறேன்.

1. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை பாவிக்க பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் அவற்றை எடுத்துவிடலாம்.
2. பதிவர் ஆப்ஷனில் உங்களது பதிவு அமைவுகளில் போட்டோக்கள் வருவது செயலாக்கப்பட்டிருந்தால் பின்னூட்டமிட்ட பதிவரின் போட்டோவும் (அவரது புரொஃபைலில் இருந்தால்) இங்கள் பின்னூட்ட பக்கத்தில் வரும். எலிக்குட்டியை வைத்து சோதனை செய்தால் பதிவர் எண்ணும் கீழே தெரியும். அவை இரண்டும் மேட்ச் ஆவது மிக அவசியம்.
3. அதர் ஆப்ஷன்கள் உபயோகிக்கும் பட்சத்தில் பதிவர் எண்ணை கொண்டு வரலாம் ஆனால் போட்டோ வராது. ஆக 2 மற்றும் 3 சேர்ந்து நிறைவேற வேண்டும்.

சிவா மனசுல சக்தி:
இப்படத்துக்கான ஷோவுக்கு எங்களூர் வேலன் தியேட்டரில் பிற்பகல் 02.30 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளே உட்கார்ந்தேன். பக்கத்து சீட்டில் இருப்பவருடன் பேச்சு கொடுத்ததில் வரவிருக்கும் படம் நான் ஏற்கனவே பார்த்த “யாவரும் நலம்” என்பதையறிந்து எகிறி குதித்து வெளியெ ஓடிவிட்டேன். நல்லவேளையாக டிக்கெட்டை கிழிப்பவர் துணையோடு எனது டிக்கெட்டை இன்னொருவருக்கு விற்க முடிந்தது. இல்லாவிட்டால் 40 ரூபாய் எள்ளுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/26/2009

எங்கே பிராமணன் -- பகுதி 38

பகுதி - 38 (25.03.2009):
நாடி சோதிடர் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்திருக்க, நாடி ஜோசியர் அவர்களது தேவைகள் பற்றி கேட்கிறார். யாருக்கு நாடி சோதிடம் பார்க்க வேண்டுமோ அவரது பெயரைச் சொன்னால் சுவடி கிடைக்கிறதா என்பதைப் பார்க்கலாம் என்கிறார் அவர். முதலில் எல்லோருக்குமே சோதிடம் பார்க்கலாமா என கேட்க, பெயர்களைச் சொன்னால் தேட ஏதுவாக இருக்கும், இங்கே கிடைத்தால் கிடைக்கலாம், கிடைக்கவில்லை வேறு பல இடங்கள் உள்ளன. சில சமயங்களில் கிடைக்காமலேயே கூட போகலாம். எப்படியானும் கிடைக்கும் என்றிருந்தால் அதை நாடி வருவார்கள், ஆகவேதான் அதை “நாடி” சோதிடம் என அழைக்கிறார்கள் என்கிறார், சோதிடர். அதற்கெல்லாம் நேரம் போதாது என்பதை உணர்ந்து, அசோக்குக்கு மட்டுமே பார்க்க நினைக்கிறார்கள். அசோக் பெயரைச் சொன்னதும் சோதிடர் உள்ளே போகிறார். அசோக் மெல்ல சிரிக்கிறான். விளக்கம் கேட்ட அன்னையிடம் “சுவடி கிடைக்காது” எனக் கூறுகிறான்.

“அது எப்படி ரிஷிகள் எல்லோரையும் பற்றி எழுதியிருக்க முடியும்" என வசுமதி கேட்க, எல்லாமே ஆகாயத்தில் உள்ள ஆவணங்கள், அதாவது எல்லாமே அண்டத்தில் உள்ள ஈதரில் பதிவாகி உள்ளன. அவற்றை படிக்க முடிந்தவர்களால் எழுத முடியாதா என அசோக் கேட்கிறான். ரிஷிகள் பொறுத்தவரை எதிர்க்காலம் இறந்த காலம் என ஒன்றுமே இல்லை, உதாரணத்துக்கு தனது சுவடி கிடைத்து அதில் தனது இப்போதைய பிறவி (நிகழ்காலம்) தெரிந்தாலும், அதை எழுதியவரை பொறுத்தவரை அது எதிர்காலமே என்கிறான்.

அசோக் என்னும் பெயருக்கு பல சுவடிகள் கிடைத்து அவற்றை கொண்டு வரும் சோதிடர், ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்க, ஒன்றன் பின் ஒன்றாக ரிஜக்ட் ஆக ஆரம்பிக்கின்றன. கடைசியில் அசோக்கின் சுவடியும் கிடைக்கிறது. இச்சுவடியை நாடிவரும் காலத்தில் அசோக்கின் தந்தையின் வயது 58 என்ற சிறிய ஆனால் சரியான விவரமும் சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது. அசோக்கின் குணநலன்களும் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மேலே படிக்கும் முன்னால் எங்கிருந்தோ வந்த பேய்க்காற்று அத்தனை சுவடிகளையும் கலைத்து போட்டு தெருவில் அவை பறக்கின்றன. எல்லோரும் ஓலைகள் பின்னால் ஓட அசோக் மட்டும் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல நிற்கிறான்.

நாதன் வீட்டில் பாகவதரிடம் நடந்ததை கூற அவர் ஆச்சரியப்படுகிறார். பிறகு அசோக் பற்றி அறிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லை என தனது ஊகத்தை வெளிப்படுத்துகிறார். பிறகு அவதார புருஷர்கள் பற்றி பேச்சு வர, புத்தரை அவதாரமாக இந்து மதம் ஏற்றுக் கொள்ளவில்லை என பாகவதர் கூறுகிறார்.

இப்போது சீனில் வரும் சோ புத்தரை 21-ஆவது அவதாரமாக கருடபுராணத்தில் குறிப்பிட்டிருப்பது பற்றி படித்து காட்டுகிறார். மொத்தம் 22 அவதாரங்கள் எனக்கூறி அவற்றை பட்டியலிடுகிறார். ஆயினும் பாப்புலராக 10 அவதாரங்கள் மட்டுமே பேசப்படுகின்றன எனவும் கூறுகிறார்.

பாகவதர், எல்லாவற்றுக்கும் நேரம் வர வெண்டும் எனக் கூறி அகலிகை சாபம் பற்றியும் அதன் விமோசனம் பற்றியும் கூறுகிறார். தங்களால் முடியவில்லை, ஆகவே பாகவதரே யூகத்தால் கூறுமாறு நாதன் கேட்கிறார்.

அசோக் அவதார புருஷனாக இருக்கலாம், அல்லது சிறு சறுக்கலால் ஒரு உத்தம பிறவி மானிட ஜன்மம் எடுத்தவனாக இருக்கலாம், அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக பூலோகத்துக்கு அனுப்பப்பட்டவனாக இருக்கலாம் எனக் கூறி விட்டு எல்லாவற்றுக்கும் நாதன், தான் மற்றும் வசுமதி கூட்டாக பிரார்த்தித்து கடவுளைக் கேட்கலாம் என அவர் கூற, மூவரும் பிரார்த்திக்கிறார்கள்.

சோவின் நண்பர் அவரிடம் கூட்டு பிரார்த்தனை பற்றி கேட்க, அது பற்றி சோ விளக்குகிறார். அது இந்து மதத்தில் ஒரே வழியாகக் கூறப்படவில்லை. இந்த மதத்தில் தனிப்பட்ட பிரார்த்தனைகளே உள்ளன, இருப்பினும் அவ்வப்போது இதுவும் நடக்கிறது எனவும் கூறுகிறார்.

கூட்டுப் பிரார்த்தனை நடக்க ஆரம்பிக்கிறது.

கைலாயத்தில் அம்மையப்பன் வீற்றிருக்க அவர்களைக் காணவந்த நாரத்ர், வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் அன்னையையும் பரமனையும் வணங்குகின்றனர்.

இதென்ன புதுக்கதை என நண்பர் விழிக்க, இனிமேல்தான் அசோக் பற்றிய தேவலோக ரகசியம் திறக்கப்பட உள்ளது என சோ கூறுகிறார்.

இப்போது டோண்டு ராகவன். இந்த எபிசோடை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இனிமேல் வரும் எபிசோடுகள் இன்னும் அதிக விஷயங்களை தரப்போவதாகவும் ஊகிக்கிறேன். ஆகவே இப்பகுதியை உடனேயே தருகிறேன். எதற்கும் இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 26.03.2009

எம். கண்ணன்:
1. நேர்காணல், செவ்வி, பேட்டி - எது சரி? எது நன்றாக உள்ளது?
பதில்: எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தானே?

2. தமிழ் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலத்தில் மணிலாவிலிருந்தெல்லாம் சூடாக அரசியல் பேட்டி எடுத்து பரபரப்பு ஏற்படுத்திய (வாழப்பாடியார் பேட்டி ஞாபகமிருக்கிறதா?) ரபி பெர்நாட் இப்போது ஜெயாடிவியில் ஊசிப்போன பேட்டிகளை எடுத்து வருவது எதனால்? (ஜெயா டிவி ஞாயிறு இரவு 10மணி)
பதில்: நீங்கள் சொல்லும் ஆரம்ப காலத்தில் நான் தில்லியில் வசித்து வந்தேன். ஆகையால் அவற்றைப் பார்க்க எனக்கு வாய்ப்பே இல்லை. எது எப்படியானாலும் தற்போதைய பேட்டிகளை நான் அதிகம் பார்ப்பதில்லை.

3. சன் டிவி வீரபாண்டியன் பேட்டிகள் (சன் செய்திகள் - சனி இரவு 9 மணி) ஒரு காலத்தில் விறுவிறுப்பாக இருந்தன. ஆனால் அதுவும் இப்போது நமுத்துப் போய் உள்ளது எதனால்?
பதில்: பேட்டி காணப்படுபவரை சங்கடப்பட்த்தும் கேள்விகள், அவற்றைத் திறம்பட சமாளித்தல் ஆகியவையே ஒரு பேட்டியின் விறுவிறுப்புக்கு வழிகோலும். அதே கேள்விகளால் சேனலை கண்ட்ரோல் செய்பவர்களும் சங்கடம் அடைவார்கள் என்றால், பேட்டி காண்பவரை அடக்கி வாசிக்கத்தான் சொல்வார்கள். அதுதான் இங்கு காரணம்.

4. முன்பெல்லாம் விகடன், குமுதத்தில் வட இந்திய (மற்ற மாநில) முக்கிய அரசியல் தலைவர்களின் பேட்டியும் அடிக்கடி வரும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலும் தமிழக தலைகளுடனேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்களே ஏன்?
பதில்: அந்தந்த பத்திரிகைகளின் முன்ன்னுரிமைகளில் வரும் மாறுதல்களே இதற்குக் காரணம்.

5. பத்திரிக்கைகாரர்களை சந்திக்காத ஒரே பிரதமர் மன்மோகன்தானோ? சோனியாவும் பேட்டிகள் ஏதும் (சமீபத்தில்) கொடுப்பதில்லையே ஏன்?
பதில்: இங்கு ஒரு நேர்காணலின் வீடியோவை பாருங்களேன். சோனியாவும் சரி, மன்மோகனும் சரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. மன்மோகன் பெயருக்குத்தான் பிரதமர் என்பதையும் மறக்கலாகாது. சோனியாவை க்வாட்ரோச்சி பற்றியெல்லாம் கேள்வி கேட்டால் அவர் காலி.

6. தமிழ்நாட்டில் கலைஞர், ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் போன்ற தினசரி மாற்றி மாற்றி அறிக்கை விடும் அரசியல் வேறெந்த மாநிலத்திலும் நடப்பது போல் தெரியவில்லையே?
பதில்: அரசியல்வாதிகள் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். அந்தந்த உள்ளூர் பத்திரிகைகளைப் பார்த்தால் புரியும்.

7. ஜெயமோகன் தென் திருப்பேரை கோயில் சென்றது பற்றி எழுதியுள்ளாரே? படித்தீரா?
பதில்: அதைப் படிக்காமலா? எப்படியும் ஜெயமோகன் எனது பிளாக் ரோலில் இருக்கிறார். ஆகவே அவ்ர் எழுதுவது எதையுமே மிஸ் செய்வதில்லை.

8. ஞாநியை ஏன் எந்த டிவி சானலும் பேட்டி எடுக்க உபயோகிக்கவில்லை? நன்றாக பேட்டி எடுப்பாரே? (மாலன் சன் நியூசில் இருந்தவரை எடுத்த அரசியல் பேட்டிகள் வெறும் வழவழ கொழகொழ பேட்டிகள்)
பதில்: அதானே ஏன் செய்யவில்லை? நான் நினைக்கிறேன், ஞாநி சுலபத்தில் சமரசங்கள் செய்து கொள்வதில்லை. அவரை பயன்படுத்தாதற்கு அதுதான் காரணம் என நினைக்கிறேன்.

9. தமிழ் அரசியல் மற்றும் பத்திரிக்கை அரங்கில் யார் எடுத்த பேட்டிகள் உங்களுக்கு பிடிக்கும்? சிறந்த பேட்டி எடுப்பவர்? பேட்டி எடுக்கப்பட்டவர்?
பதில்: பேட்டி எடுப்பவர்கள் என்று தனியாக நான் பார்த்ததில்லை. அப்படியே பார்த்தாலும் அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கும். எடுக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் எனக்கு பிடித்தவர்கள் சோ மற்றும் மோடி மட்டுமே. ஏன் என்று சொல்லவும் வேண்டுமா? Coffee with Anu எனக்கு பிடித்த நிகழ்ச்சி. ஆனால் இது அரசியல் பேட்டியில் வராது அல்லவா? மோடியை சோ பேட்டி கண்டால் நன்றாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

10. ஆங்கிலத்தில் கரண் தாப்பர் (cnn-ibn) எடுக்கும் காரசார பேட்டிகள், NDTVயில் ஷேகர் குப்தா எடுக்கும் 'Walk the Talk' பேட்டிகள் போல் தமிழில் எந்த சானலிலும் நல்ல அரசியல் பேட்டியாளர்களோ, பேட்டி நிகழ்ச்சிகளோ வருவதில்லையே ஏன்? (ஆட்டோ பயம்தான் காரணமா?)
பதில்: முந்தைய கேள்வியில் சொன்னதைப் போல கரண் தாப்பரை எனக்கு பிடிக்கும். தில்லியில் இருந்த சமயம் அவரோடு தொலை பேசியுள்ளேன். சேகர் குப்தா எடுத்த பேட்டிகள் பார்த்ததில்லை. இப்போதெல்லாம் பார்ப்பதெல்லாம் தமிழ்ச்சேனல்கள்தான். NDTV எல்லாம் பார்ப்பதில்லை.

சேதுராமன்:
1. அறிமுக இளைஞர் அரசியல்வாதிக்கு, அறிவு,அனுபவம், அடக்கம், பண்பு, பணம் மிகமிகத் தேவை! இவைகளில் முதல் நான்கும் மருந்துக்குக்கூட வருண் காந்தியிடம் இல்லை போல் இருக்கிறதே? தேறுவாரா?
பதில்: நாவடக்கமும் மிகவும் தேவை அரசியல்வாதிக்கு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை முக்கியமாக அவர்கள் மறக்கக் கூடாது. வருண் காந்தி இதை அறிவது முக்கியம். அதுவும் காங்கிரஸ் சார்பு செயல்பாட்டை உடைய தேர்தல் கமிஷன் இம்மாதிரி தருணத்துக்காகவே காத்திருக்கிறது என்பதையும் அவர் மறக்கக்கூடாது.

அதே சமயம் தேர்தல் கமிஷன் செய்வதும் அட்டூழியமே. தங்களுக்கு ஜூரிஸ்டிக்‌ஷன் இல்லாத இடத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. வருண் காந்தியை தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் அவர்களுக்கு கிடையவே கிடையாது. தங்களது பாரபட்சமற்றத் தன்மைக்கு பங்கம் விளைவித்து கொண்டதே பலன். 2002 குஜராத் தேர்தலின்போது மோடியை அப்போதைய தேர்தல் கமிஷனர் கோமாளி என மைக் ஆனாக இருக்கும்போதே வர்ணித்து அசடு வழிந்தார். அவரது மூக்கை குஜராத் மக்கள் நன்றாக உடைத்தனர். 2007 தேர்தலில் சோனியா காந்தி பேசியதை அடக்கி வாசித்து மோடியை மட்டும் சாடினார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாமல் போவதே அவர்களுக்கு வாடிக்கையாயிற்று.

2. நாட்டில் பொதுத் தேர்தல் 2009ல் நடக்கும் என்று தெரிந்தும் கூட ஐ.பி.எல். போட்டிகளுக்கு நாள் குறிப்பிட்டார்கள். இவர்களுக்கு நாட்டில் அக்கரை இருந்தால் இந்த சமயம் பார்த்து, போட்டிகளை வெளி நாட்டில் வைத்து தேர்தலைப் புறக்கணிக்கலாமா?
பதில்: அரசியல் நிர்ணயச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படும் தேர்தல்களின் காலகட்டம் மாற்ற முடியாதது. அப்போது ஐ.பி.எல். போட்டிகளை வைத்து கொண்டது தவறுதான். தேர்தல் தேதிகளை வேண்டுமானால் மாற்றுங்கள் என்பதௌ தின்னுக் கொழுத்த கொழுப்புடன் கூடிய அராஜகம். இப்போ வெளி நாட்டுக்கு போறாங்களாம். ஒழியட்டும்.

3. தமிழ் நாட்டில் கொலை, கொள்ளைகள் நிகழாத நாட்களே கிடையாது என்ற மாதிரி நாளுக்கொரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. இன்று பார்த்தீர்களா, நல்ல படிப்பும், ஏ.ஜி. காரியாலயத்தில் வேலை செய்பவரும் காரைத் திருடியகப்பட்டுக் கொண்டதை - இல்லாதவன்தான் திருடுகிறான் என்றால்,இவரது திருட்டு எதில் சேர்த்தி?
பதில்: கொலை, கொள்ளை ஆகியவை இருப்பதுபோலத்தான் இருந்து வருகின்றன. என்ன விஷயங்கள் உடனுக்குடன் வெளியாகின்றன. அவ்வளவே.


வெங்கி என்னும் பாபா:
1) 'டோண்டு' பெயர்க்காரணம் கூறுக?
பதில்: ஏற்கனவேயே இக்கேள்விக்கு பலமுறை பதிலளித்துள்ளேனே. உதாரணத்துக்கு இங்கே பார்க்கவும்.

2) தேர்தல் சமயத்தில் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு தரவியலாத நிலைக்கு நமது நாட்டில் பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்று கூறலாமா?
பதில்: இல்லை அதை நான் ஒத்து கொள்ளவில்லை.

3) IPL போட்டிக்கு வேறு நாட்டிற்க்கு மாற்றப்பட்டது, நரேந்த்ர மோடி கூறியது போல் நமது நாட்டிற்க்கு கேவலமா?
பதில்: இல்லை. மோடி கூறுவது எனக்கு ஏற்புடையது இல்லை. இது பற்றி நான் போட்ட பதிவில் கூறியதையே கன்ஃபர்ம் செய்கிறேன்.

4) சோ தேர்தல் பிரச்சாரத்தில் இடுபட்டுளார் என்று துக்ளக் ஆண்டுவிழாவில் அவர் கூற கேட்டேன். அவர் எந்தெந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்துள்ளார்?
பதில்: எனக்குத் தெரிந்து அவர் சமீபத்தில் 1971-லிருந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். அந்த ஆண்டு பழைய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங் ஆகிய கட்சிகளுக்கும், 1977-ல் ஜனதா கட்சிக்கும், அதன் பிறகு பாஜகவுக்கும் பேசியிருக்கிறார். மற்ற கட்சிகள் விவரங்கள் கைவசம் இல்லை.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்

3/25/2009

பலே ஆடிட்டர், நன்றாகவே அடிச்சு ஆடிட்டார்!

இன்றைய (25.03.2009) ஹிந்து பத்திரிகை முதல் பக்கத்தில் வந்த செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.

ஏ.ஜி. ஆஃபீசில் சீனியர் ஆடிட்டராக வேலை பார்க்கும் ஆண்ட்ரூ ராஜகுமார் என்னும் நபர் HCL பொது மேலாளர் பிரசாத் என்பவரது பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய சொகுசுக் காரை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.

ஷோ ரூமில் டெலிவரி எடுக்கும்போதே காரின் கீ மிஸ்ஸிங். பொறுப்பற்ற ஷோ ரூம்காரர்கள் அவருக்கு ஒரு டூப்ளிகேட் தந்து சமாளித்துள்ளனர். அந்தக் கார்தான் திருட்டு போயிற்று.

திருடிய நபரின் போட்டோவையும் ஹிந்துவில் போட்டுள்ளனர்.

இனி என்ன நடக்கும்? திருடனின் வேலை பறிபோகும், ஜெயில் களி சாப்பாடு. இதெல்லாம் அந்தாளுக்கு தேவையா?

ஆனால் சில முக்கியக் கேள்விகள் பாக்கியுள்ளன.

காரில் கீ இல்லையென்றவுடன் அந்தக் காரை பிரசாத் அவர்கள் டெலிவரி எடுக்க மறுத்திருக்க வேண்டும். ஷோ ரூம்காரர்கள் செய்ததோ பொறுப்பற்றத்தனத்தின் உச்சக்கட்டம். எச்.சி.எல். பார்க்கிங்கில் திருடன் போலி ஐடி கார்டுடன் எப்படி வரமுடிந்தது? எச்.சி. எல்லின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவுதானா? பொது மேலாளரின் காருக்கான பார்க்கிங் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கும். அங்கிருந்து முன்பின் தெரியாத ஒருவர் அக்காரை ஓட்டிச் செல்ல முடிந்தது என்றால் கார் பார்க்கிங் ஊழியர் என்ன செய்து கொண்டிருந்தார்?

நல்ல வேளையாக கேமராக்கள் செயலில் இருந்ததால் காரை ட்ரேஸ் செய்ய முடிந்தது.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/24/2009

எங்கே பிராமணன் பகுதிகள் - 36 & 37

பகுதி - 36 (23.03.2009):
நாதன்-அசோக் விவாதம் தொடர்கிறது. பிருகு மஹரிஷி ஒவ்வொரு முறையும் அவரது தந்தையின் சொற்படி தவம் செய்து படிப்படியாகத் தெளிவைப் பெறுகிறார். கடைசியில் ஆனந்தமே பிரும்மம் என்னும் முடிவுக்கும் வருகிறார் என அசோக் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். இப்ப என்ன சொல்ல வருகிறான் அசோக் என நாதன் பொறுமையிழந்து அவனிடம் கேட்கிறார். அவரைப் போன்ற லௌகீக மனம் கொண்டவர்கள் பிருகு முனிவரின் முதல் கட்டத்திலேயே தங்கி விடுகின்றனர், பௌதீக விஞ்ஞான விஷயங்களுக்கு மேல் போக மறுக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறான் அசோக்.

தான் தனது வயதுக்கேற்ப லௌகீகமாக வளர வேண்டும் என தன் தந்தை கூறுவதை வாதத்துக்காக ஒப்புக் கொள்வதாகக் கூறும் அசோக், அடுத்த கேள்வியை கேட்கிறான். நாதனுக்கு ஆன வயதுக்கு அவர் பற்றுக்களை துறக்க வேண்டும் என கூறப்படுவதை மட்டும் அவர் ஏற்க மறுத்து ஏன் இன்னமும் லௌகீகமாகவே இருக்க வேண்டும் என கேட்கிறான் அவன். அப்படியெல்லாம் ஆசாபாசங்களை ஒரேயடியாக துறந்திடல் இயலாது என நாதன் ஒரேயடியாக மறுக்கிறார். ஒவ்வொன்றாகத்தன் துறக்கவியலும் என நாதன் கூற, ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியை அசோக் கூறுகிறான். அவரைப் பார்க்க வந்த பக்தரிடம் பற்றைத் துறக்க ஏதுவாக அவரிடம் ஒரு பை நிறைய தங்க நாணயங்களைத் தந்து அவற்றை அப்படியே கங்கையில் போடுமாறு கூறுகிறார். அவரும் ஒவ்வொரு நாணயமாக எறிய, அதைப் பார்த்த ராமகிருஷ்ணர் அப்படியே ஒட்டுமொத்தமாக எறிந்தால்தான் பற்றை முற்றுமாக துறக்கவியலும் எனக் கூறுகிறார்.

தன் மாமியாரைப் பார்க்க வரும் பிரியா தனக்கு தனிக்குடித்தனம் பிடிக்கவில்லை என்றும் தன் மாமியார் அவர் கணவரிடம் பேசி கூட்டுக் குடும்பத்துக்கே ஏற்பாடு செய்யச் சொல்லுமாறு கேட்கிறாள். மாமியாருக்கு சற்று தயக்கம்தான். இருப்பினும் தன் கணவரிடம் இது பற்றிப் பேசுவதாகக் கூறுகிறார்.

பாகவதர் வீட்டில் அவரது மருமகள் தன் மாமனார் மாமியார் தானும் தன் கணவனும் இல்லாத நேரத்தில் ராமசுப்புவை நல்லமுறையில் பார்த்து கொண்டு போலீஸ் தொந்திரவிலிருந்து காப்பாற்றியதற்கும் நன்றி கூறுகிறாள். ராமசுப்புவிற்கு ஹாஸ்டலில் வேறு ரூமை வார்டனுடன் பேசி ஏற்பாடு செய்யுமாறு பாகவதர் தன் மகனிடம் கூறுகிறார்.

சாம்பு சாஸ்திரியிடம் அவர் மனைவி பிரியா கூறியதைக் கூற அவர் அந்த யோசனையை ஏற்க மறுக்கிறார். இப்போதைக்கு வந்தலும் சீக்கிரமே கூட்டுக் குடும்பம் பிரியாவுக்கு அலுத்துவிடும் என்றும், ஆகவே அவள் அப்பா செய்து வைத்த தனிக்குடித்தன ஏற்பாடே ஏற்றது என்றும் அவர் கூறிவிடுகிறார்.

நாதன் தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாகவதர் அசோக்கின் ஜாதகத்தை பிரபல ஜோஸ்யரிடம் காட்ட அவர் அதை பார்த்துவிட்டு அசந்து போகிறார்.

ஜாதகம் எல்லாம் அப்படியே பலித்து விடுமா என சம்சயம் கொள்ளும் தன் நண்பரிடம் சோ அவர்கள் சரியானபடி கணிக்கப்பட்ட ஜாதகங்கள் என்றால் நிச்சயம் பலிக்கும் என்கிறார். இதில் நேரமும் சரியான முறையில் கணிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறி அதை விளக்க கணிதமேதை பாஸ்கராச்சாரியர் தனது மகளின் மாங்கல்யபலம் குறைவாக இருந்ததால், கணித முறைப்படி ஒரு முகூர்த்த நேரத்தை கணித்து அதில் தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார். இருப்பினும் நேரம் காட்டும் கருவியில் கோளாறு ஏற்பட்டு அவர் மகளுக்கு தவறான நேரத்தில் மணம் நடந்து அவள் விதவையாகிறாள்.

இங்கு சீரியலில் ஜோசியர் தனது முடிவுகளை மேலும் கூறுகிறார். இது ஒரு மகானுடைய ஜாதகம். ஜாதகர் வாக்கு பலம் அதிகம் உள்ளவர். அவர் கூறியது பலிக்கும். லோகாயத வாழ்க்கையான கல்யாணம், காட்சி என ஏதும் இவருக்கில்லை. அவர் இப்போது ஒரு பெரிய தேடலில் இருக்கிறார். பூர்வ ஜன்மங்களில் விடாது புண்ணியம் செய்ததாலேயே அருச்சுனனுக்கு கண்ணனின் விசுவரூப தரிசனம் கிடைத்தது. அது போலவே அசோக்கும் பூர்வ ஜன்மங்களில் புண்ணியங்கள் செய்து அவற்றின் பலம் அதிகமிருப்பதால்தான் அந்த ஜாதகருக்கு இப்பிறப்பில் இவ்வளவு சிறப்புகள். மேலும் இவருக்கு குருவே கிடையாது எனவும் கூறுகிறார்.

அது எப்படி குரு இல்லை எனக் கூறவியலும், பாகவதர் இருக்கிறாரே என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் குரு என்ப்வர் பற்றி விவரிக்கிறார். ஆச்சாரியர் என்பவர் வேறு உபாத்தியாயர் என்பவர் வேறு என்றெல்லாம் விவரிக்கிறார். நான் எழுதுவதை விட சோ கூறுவதை நேரடியாகக் கேட்பதே அதிகம் பிரயோசனமாக இருக்கும்.

இங்கு சீரியலில் பாகவதரின் திகைப்பு அதிகரிக்கிறது. அப்படியானால் குருகடாட்சம் இவனுக்கு இல்லவே இல்லையா என திகைப்புடன் கேட்க, அசோக்குக்கு குருவே தேவையில்லை, அவன் ஒரு ஸ்வயமாச்சாரியன் என ஜோசியர் விளக்குகிறார்.அசோக்கின் வாழ்க்கையில் இன்னும் பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கவிருக்கின்றன. அப்போதுதான் லோகத்துக்கே ஒளி வரப்போகிறது என்றும் கூறுகிறார்.

பகுதி - 37 (24.03.2009):(இந்த எபிசோட் இணையத்தில் ஏற்றப்படவில்லை)
நாதன் வீட்டிற்கு வந்திருக்கும் அவரது சகோதரி உடையாளூர் செல்லம்மா வசுமதியிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். உடையாளூரில் உள்ள குலதெய்வக் கோவிலை வசுமதியும் நாதனும் அலட்சியம் செய்ததால்தான் பிரச்சினைகள் என்றும் அங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும்படியும் அவள் ஆலோசனை கூறுகிறாள்.

அது என்ன குல தெய்வம், எல்லா தெய்வங்களும் ஒன்றுதானே என சோவின் நண்பர் கேட்க, நாம் குடும்ப டாக்டர் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் போவதுபோலத்தான் இஉதுவும் என சோ விளக்குகிறார். கடைசியில் ஆண்டவன் ஒருவனே என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்கின்றனர் என்பதிலும் சந்தேகமேயில்லை என்றும் அவர் கூறுகிறார். அதுதான் இந்து மதத்தின் சிறப்பு. இறைவனை அவரவர் மனநிலைக்கேற்ப உருவகப்படுத்தி கொள்கின்றனர். இறைவனும் அவரவர் மனோபாவத்தை ஒரு தாய் தனது குழந்தையின் விளையாட்டை ரசிக்கும் மனோபாவத்தில் அதே ரூபத்திலும் வருகிறான் என்றும் கூறுகிறார்.

இங்கு ஒரு டைவர்ஷன்:
சமீபத்தில் 1977-ல் வெளியான ஆங்கிலப் படம் ஒன்று "O God" என்னும் தலைப்பில் வந்தது. அதில் வரும் கடவுள் ஒரே ரூபத்தில்தான் வருகிறார், ஆனால் அதே படம் “உருவங்கள் மாறலாம்” என்னும் தலைப்பில் வந்த போது கடவுள் சிவாஜி கணேசன், கமல், ரஜினிகாந்த், மனோரமா, ஜெயசங்கர் என பல ரூபங்களில் வருகிறார். என்னைக் கேட்டால் தமிழில்தான் இப்படம் பாந்தமாக இருந்தது.
டைவர்ஷன் முடிந்தது.

நீலகண்டன் வீட்டில் ஃபோன் அடிக்க உமா எடுக்கிறாள். வசுமதி பர்வதத்துடன் பேச வேண்டும் எனக் கூற, உமா தன் அன்னையை கூப்பிட்டு அவளிடம் ஃபோனைத் தருகிறாள். தான் உடையாளூர் போக எண்ணியிருப்பதை கூறி பர்வதத்தையும் தன்னுடன் அழைக்கிறள் வசுமதி. நீலகண்டனை கேட்டுச் சொல்வதாக பர்வதம் கூறிவிடுகிறாள். உமாவும் தன் அன்னையிடம் உடையாளூர் செல்லுமாறு ஆலோசனை தருகிறாள்.

சாம்பு வீட்டுக்கு பிரியாவின் அம்மா வந்து சாம்புவிடம் பிரியாவின் கூட்டுக் குடும்ப எண்ணத்தை பற்றி விவாதிக்கிறாள். தனது கணவருக்கும் இதில் சம்மதம் என்றும் ஆனால் தனக்கு இல்லையென்றும் கூறி தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறாள். ஆரம்ப சூரத்தனமாக பிரியா வந்தாலும் சில நாட்களீலேயே அவள் மனம் மாறிவிடும் எனவும் கூறுகிறாள். சாம்புவும் அந்த வாதங்களை ஏற்று பிரியாவின் எண்ணம் நிறைவேறாமல் இருக்க தன்னால் ஆனதைச் செய்வதாக வாக்களிக்கிறார்.

பிரியாவை பார்க்க கிருபாவின் தம்பி சந்துரு வருகிறான். குடும்ப கஷ்டங்களை எடுத்து கூறுகிறான். தனது தந்தை சாம்பு அநியாயத்துக்கு ஆச்சாரம் பார்க்கிறார், சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார் என்றெல்லாம் புலம்புகிறான்.

உடையாளூரில் குல தெய்வ பூஜை முடிந்ததும், கும்பகோணத்தில் அசோக்குக்கு நாடி ஜோசியம் பார்க்கலாம் என தீர்மானிக்கிறார்கள். அசோக் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறான். ஆனால் மற்றவர்கள் ஒத்து கொள்ளாததால், பிறகு உங்கள் இஷ்டம் என விட்டு விடுகிறான். அதே சமயம் தனக்கான ஓலைச்சுவடி கிடைக்காது எனவும் கூறுகிறான்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/23/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 33, 34 & 35

பகுதி - 33 (18.03.2009):
கிருபா, பிரியா கல்யாணத்துக்கும் பிறகு அடையார் வீட்டில் தனிக்குடித்தனம் போகப்போவது பற்றி பற்றி சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் டிஸ்கஷன். அடையார் வீட்டில் எல்லோருமாக போய் இருக்கலாம் என்ற யோசனையை சாம்பு நிராகரிக்கிறார். புதுமணத்தம்பதிகளை தொந்திரவு செய்யக்கூடாது என்கிறார் அவர். சோவும் நண்பரும் இது பற்றிப் பேசும்போது இம்மாதிரி கலிகாலத்தில் மனிதனின் குடும்பம் குறுகப்போவது பற்றி ஏற்கனவேயே கூறப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் சோ. அதுவும் ஒரு மனிதனுக்கு தனது உறவினர்களைவிட தனது மனைவிசார் உறவினர்களே அதிக முக்கியத்துவம் பெறுவார்கள் என்பதும் மகாபாரதத்தில் ஏற்கனவேயே கூறப்பட்டதே என்கிறார் அவர்.

நீலகண்டன் வையாபுரி வீட்டுக்கு வந்து அவருடன் அசோக் விஷயமாக சண்டை போடுகிறார். அதற்கு எதிர்வினையாக வையாபுரியின் ஸ்பான்ஷர்ஷிப் பெற்ற ராஜப்பாவின் வங்கிக் கடன் விண்ணப்பத்தை தான் நிராகரித்ததாகக் கூறிவிட்டு செல்கிறார்.

கிருபா பிரியாவின் கல்யாணம் முடிந்து பால் பழம் தரும் சடங்கு நடைபெறுகிறது.

நாதன் வீட்டில் வசுமதிக்கும் நாதனுக்கும் இடையில் விவாதம் நடக்கிறது. வையாபுரியிடம் தன் மகன் பைத்தியம் என்பதை ஒத்து கொண்டதை அவள் சாட, அசோக்கை பைத்தியம் என குறிப்பிட்டது வசுமதியே என அவர் சுட்டிக் காட்டுகிறார். வையாபுரி கொடுக்கச் சொன்னதாக ஒரு கடிதத்தை சிங்காரம் கொண்டு வந்து தருகிறான். அவருக்கும் வையாபுரிக்கும் இடையில் தான் வந்தது குறித்து ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

பாகவதர் வீட்டில் அவரும் அவர் மனைவி ஜானகியும் அசோக் பற்றி விவாதிக்கிறார்கள். அசோக் ஒரு தெய்வக் குழந்தை என பாகவதர் கூறுகிறார். அவனும் பிரான்சின் Jeanne d'Arc, ஐயப்பன் போன்று இளமையிலேயே ஞானம் பெற்றவன் எனக் கூறுகிறார். இத்தருணத்தில் தெய்வமே ராமராக வந்து அவதார காரியத்தை நிறைவேற்றும்போது வால்மீகி ராமாயணத்தின்படி ராமருக்கு தான் கடவுள் என்னும் பிரக்கிஞை இல்லை என சோ எடுத்து கூறுகிறார். அவரை தெய்வமாக உயர்த்திக் காட்டியது துளசிதாசரும் கம்பரும் மட்டுமே என வேறு கூறுகிறார்.

அசோக் இவ்வளவு செய்தும் சிங்காரம் கேசில் அவனது சாட்சியம் உபயோகமாகவில்லையே என பாகவதர் மனைவி அங்கலாய்க்க, அசோக் பலனை எதிர்பாராது காரியம் செய்பவன் என பாகவதர் சுட்டிக்காட்டுகிறார்.

நீலகண்டனின் மனைவி பர்வதம் வசுமதியிடம் தனது கணவர் வையாபுரியிடம் சண்டை போட்டது பற்றி கூற நாதன் நீலகண்டனுக்கு இது தேவையில்லாத வேலை என கண்டிக்கிறார். அச்சமயம் நீலகண்டன் மனைவியைத் தேடி அங்கு வந்த சிங்காரம் அவளையும் அவள் குடும்பத்தினரையும் தாக்கப் போவதாகக் கூறி பயமுறுத்துகிறான்.

பகுதி - 34 (19.03.2009):
நீலகண்டன் வீட்டில் பர்வதம் தன் கணவரிடம் இனிமேல் நாதன் வீட்டுக்கு போக வேண்டாம் என ஆலோசனை கூறுகிறாள்.

பாகவதர் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட பையனின் கேஸ் விசாரணை முடிந்தது என்றும், அவரது பேரன் ராமசுப்பு இனிமேல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார்.

மறுபடியும் வையாபுரி வீட்டுக்கு வரும் நீலகண்டன் இனிமேல் தனது கைத்தடியையெல்லாம் தன் வீட்டுக்கு அனுப்பி பயமுறுத்தும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறார். வையாபுரி இம்முறை அவரிடம் நயமாகப் பேசி தனது நண்பர் ராஜப்பாவுக்கு லோன் சாங்க்‌ஷன் செய்யும்படி கேட்க, வையாபுரி காரண்டி செய்யும் பட்சத்தில் அந்தக் கடன் கிடைக்காது எனக்கூறி விடுகிறார். வையாபுரியோ நீலகண்டன் இனிமேல் தன் நண்பன் என ஒரு ஆட்டையைப் போடுகிறார்.

கிருபா, பிரியா வீடு. அந்த மாத சம்பளத்தை வழக்கம்போல கிருபா தன் அப்பா அம்மாவிடம் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும் எனக் கூறுகிறாள். அத்துடன் மாமனார் வீட்டுக்கு மாதம் ஒரு தொகை தரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறாள். கிருபாவோ அதெல்லாம் கட்டுப்படியாகுமா என சந்தேகப்பட, பிரியாவோ அதற்கேற்ப தான் செலவைக் குறித்து கொள்வதாகக் கூறுகிறாள். எப்படியும் வீட்டு வாடகை தரவேண்டாம், ஆகவே அதைத் தருவதாக நினைத்து ஒரு தொகையை தன் மாமனாராத்துக்கு தரும்படி அவள் ஆலோசனை கூறுகிறாள்.

இப்படியும் ஒரு மருமகளா என சோவின் நண்பர் கேட்க, இம்மாதிரி உத்தமப் பெண்கள் இருப்பதாலேயே தர்மம் செழிக்கிறது என சோ கூறுகிறார். ஆண்களைப் போலவே பெண்கலிலும் எல்லா வகையினரும் உண்டு என்று வேறு அவர் கூறி, பெண்களின் வெவேறு குணங்களின் காம்பினேஷனையும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் யாரும் இல்லை, எல்லோரும் வெளியே போயிருக்க, பீரோவில் சாவிக்கொத்து தொங்குகிறது. சமையற்கார மாமி சபலத்துக்கு இரையாகி மூன்று வளையல்களை எடுத்து தனது ஆடிட்டர் கணவனிடம் தருகிறாள்.

கிருபா தனது அப்பாவுடன் பேசும்போது, இனிமேல் தனது மாமனாராத்துக்கு அவர் புரோகிதம் செய்யப் போக வேண்டாம் எனக் கூறுகிறான். அதனால் அவரது கௌரவம் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறான்.

பகுதி - 35 (20.03.2009):
நாதன் வீட்டு பால்கனியில் காக்கா கத்த யார் வரப்போகிறார்கள் என சிந்திக்கிறாள் சமையற்கார மாமி. அதற்கேற்ப நாதன் குடும்ப சினேகிதி உடையாளூர் செல்லம்மா மாமி வருகிறார். அசோக்கை பற்றி விசாரிக்க, வசுமதி அவரிடம் நடந்ததைக் கூறுகிறாள்.

கிருபா வீட்டில் அவன் வெறுமனே ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டுப் போனதை அவன் தங்கை குறை கூறுகிறாள். எல்லாம் பிரியாவின் போதனை என அபாண்டமாகக் கூறுகிறாள் அவள். சாம்பு சாஸ்திரிகளும் அவர் மனைவியும் பெண்ணை அடக்குகின்றனர்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு வரும் வேம்பு சாஸ்திரி அவருக்கு டிவியில் சாஸ்திரிகள் ரோல் வாங்கித் தருவதாகக் கூற அவர் அது வேண்டாம், மந்திரங்களின் வீர்யத்தையெல்லாம் கண்ட இடங்களில் உச்சரித்து கெடுக்கக் கூடாது என அவர் கூறுகிறார்.

அப்படியானால் நடிப்பு என்பது மட்டமா என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்களோ சாஸ்திரப்படி அப்படித்தான் எனக் கூறுகிறார். இருப்பினும் சிவபெருமானே நடனத்துக்கு தலைவனாக சித்தரிக்கப்படுவது பற்றியும் கூறுகிறார். ஆனால் காலப்போக்கில் நடிப்புக் கலையும் கௌரவம் தருவதாகப் போயிற்று. என்ன இருப்பினும் சாம்பு சாஸ்திரிகள் பழைய காலத்து மனிதர் என்பதையும் மறக்கலாகாது என அவர் கூறுகிறார்.

மீண்டும் சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு காட்சி வருகிறது. சாம்பு அவ்வாறு இந்த சான்ஸை மறுப்பதை வேம்பு பாராட்டுகிறார். ஆனால் அவரது பெண் இதையெல்லாம் ஒரு விரோதமான முகபாவத்துடன் நோக்குகிறாள்.

பிரியாவைப் பார்க்க அவளது மாமியார் வருகிறார். பிரியா அவரிடம் மிக மரியாதையாகப் பேசி ஆசாரமாக நடந்து கொள்ள பயிற்சி அளிக்குமாறு கேட்டு கொள்கிறாள். மாமியாருக்கு மிக்க மகிழ்ச்சி.

நாதனும் அசோக்கும் பேசுகின்றனர். நாதன் லௌகீக விஷயங்கள் பற்றிப் பேச, அசோக் ஞான மார்க்கம் மற்றும் பிரும்மம் பற்றிப் பேசுகிறான். நாதனுக்கு அவன் பேசுவது புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யக்கூட மனமில்லை.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/22/2009

யாவரும் நலம்

ரொம்ப நாளைக்கப்புறம் தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். எங்களூர் வேலனில் வெற்றிகரமாக 25-ஆம் நாளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படம். பால்கனியில் ஹவுஸ்ஃபுல், கீழே ஸ்டால் விஷயம் தெரியாது. அதுவே பெரிய அதிசயம்தான். ஏனெனில் வேலன் தியேட்டர் பால்கனி சாதாரணமாக காலியாகத்தான் இருக்கும். அதுவும் இம்மாதிரியான ஆவிகள் படமென்றால் பயமாகவும் இருக்கும்.

ஒரு புது அப்பார்ட்மெண்டில் குடிபுகுந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் அனுபவம் என்பதை விட அதில் உள்ள ஒருவரின் அனுபவம் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அந்த ஒருவர்தான் மாதவன், ஒரு கட்டுமானப் பணி பொறியாளர். அவருக்கு மட்டும் லிஃப்ட் வேலை செய்வதில்லை, அவரை வைத்து எடுக்கும் புகைப்படங்கள் கோணவாயன் கொட்டாவி விட்டது போல மாறுகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் மட்டும் “யாவரும் நலம்” என்னும் சீரியல் ஒளிபரப்பாகிறது. அதே சீரியல் வேறு இடங்களில் முற்றிலும் மாறுபடுகிறது. இவர்கள் வீட்டின் டிவியில் வரும் சீரியலில் மட்டும் இவர்கள் வாழ்க்கை சம்பந்தமான நிகழ்ச்சிகளே நடக்கின்றன. அதையெல்லாம் நான் வர்ணிப்பதைவிட படத்தை நீங்களே பார்த்து கொள்ளல் நலம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் தில்லியில் இருந்தபோது படித்த ஒரு ஜெர்மானிய மொழி நாவல் நினைவுக்கு வந்தது. அதிலும் வீட்டில் இருக்கும் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் விசித்திரமாக இருக்கும். அதாகப்பட்டது, ஒரு கலவரக்காட்சி நியூஸில் காண்பிக்கப்பட்டால் அதில் பங்கு பெறுபவர்கள் டிவி பிரேமில் மட்டும் இல்லாது, அறைக்குள்ளும் வருவார்கள். பார்வையாளரின் நாற்காலிக்கு பக்கத்தில் கீழே ஒருவன் படுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பான். ஆனால் அதெல்லாம் வெறும் இமேஜ்கள்தான். நிகழ்ச்சி சேனலை மாற்றினால், சம்பந்தப்பட்ட இமேஜ்கள் மறைந்து, புது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இப்போது அறைக்குள் தென்படுவார்கள்.

இப்படம் சென்னையில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் பி மற்றும் சி மையங்களில் அவ்வளவாக வெற்றி பெறாது என்பதுதான் என் எண்ணம். அதை உறுதி செய்து கொள்ள லக்கிலுக்குக்கு ஃபோன் செய்தால் மனிதர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அப்படியானால் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணைத் தருமாறு கேட்டேன், அவரும் தந்தார்.

கேபிள் சங்கரிடம் இது சம்பந்தமாக கேள்வி கேட்டதற்கு அவர் இப்போபோதெல்லாம் ஏ செண்டரே மிகவும் விரிவடைந்து வருகிறது என்றார். முன்னெல்லாம் கிண்டியுடன் சென்னை முடிவடையும், ஆனால் இப்போதெல்லாம் மதுராந்தகம் வரை சென்னையின் ஆளுமை நீடிக்கிறது என்றார். ஆகவே ஏ செண்டரில் பெறுகின்ற வெற்றியே படத்துக்கு லாபமான வசூல் தந்து விட்டது என்றும், இனிமேல் வரப்போவது எல்லாம் மேலும் அதிக லாபமே என்றும் கூறினர்.

இது ஏதோ ஆங்கிலப் படத்தை சுட்டது போல இருக்கிறதே எனக் கேட்க, அவர் அப்படியில்லை என்றும், இப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்க இப்படத்தின் டைரக்டரிடமிருந்து ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்கள் என்ற புதிய தகவலையும் தந்தார். மற்றப்படி உலகிலேயே மொத்தம் 7 கதைக்கருக்களே உள்ளன என பொதுவாகக் கூறப்படுவதையும் அவரும் கூறினார். உண்மைதான்.

படம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லோருமே ஒரு முறை பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாட்டுக்கு தேவை ஜனநாயகமா அல்லது தின்னு தின்னு கொழுப்பெடுத்துக் கிடக்கும் கிரிக்கெட்டா?

இந்த ஐ.பி.எல். பிரச்சினை எனக்கு பிடிபடவில்லையே. நாட்டில் தேர்தல் என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி கட்டாயம். அதுவும் இப்போது வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறிப்பிட்ட நாட்களில் நடந்து முடிந்து புது லோக்சபை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வர வேண்டிய கட்டாயம்.

ஆனால் ஐபிஎல் நடத்தும் இந்த இழவு கிரிக்கெட் விளையாட்டுகள் அப்படியா? அதுவும் விளையாடுபவர்கள் யார்? ஏலத்தில் எடுக்கப்பட்ட அடிமைகள். என்ன விலையுயர்ந்த அடிமைகள், அவ்வளவுதான். அடிமைகள் ஆடும் இந்த ஆட்டத்துக்கு என்ன இந்த அலம்பல்கள்? லோக்சபா தேர்தல் எப்போது வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், என்ன திமிர் இருந்தால் அதே தேதியில் ஐபிஎல்லில் கிரிக்கெட் விளையாட்டுகளை வைப்பார்கள்?

அதுதான் புரியவில்லை என்றால், அவர்களை அரசு கெஞ்சுவதும் பார்க்க சகிக்கவில்லையே. என்ன பிரச்சினை ஐயா, அரசுகளிடம்? ஏதேனும் கட்டிங் பெறுகிறார்களா என்ன?

தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு இந்த ஐபிஎல் இழவு மேட்சுகளை வைத்துக் கொண்டால் யார் குடி முழுகிவிடுமாம்?

அரசு செய்யக்கூடியவையாக எனக்கு தோன்றுவன:

1. வெளிநாட்டு பிளேயர்களுக்கு விசா மறுக்கலாம்.
2. விளையாட்டு வீரர்களது பந்தோபஸ்துக்கு ஒரு கான்ஸ்டபிளைக் கூட அனுமதிக்கக் கூடாது. தேவையானால் ஐ.பி.எல்லே எல்லா பந்தோபஸ்துகளையும் தமது செலவிலே பார்த்து கொள்ளட்டும் என விட்டுவிடுங்கள். கொள்ளையடிக்கப்படும் பணத்தில் ஒரு பகுதி இம்முறையிலாவது தனியார் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லட்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/20/2009

இல்லாமை என்னும் கட்டாயத்தால் வந்த எளிமை

ஜெயமோகன் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா பற்றி எழுதியுள்ள பதிவிலிருந்து சில வரிகளை முதலில் பார்ப்போம்.

“மலையாள சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. அதன் முதல்திரையிடலே 60 பிரதிகள்தான். மலைப்பகுதிகளில் இரண்டாம் ஆட்டத்துக்கு கூட்டம் இருக்காது. மழைக்காலத்தில் இரவுக்காட்சிகளே கூட்டம் சேராமல் ஓடும். கேரளத்தில் பெரும் பகுதி மழை ஓயாது பெய்யும் மலைக்கிராமங்கள். மேலும் கேரளத்தில் வளைகுடா பணத்தால் நடுத்தர வற்கம் பெருகியபடியே வருகிறது. இவர்கள் பொதுவாக திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதில்லை. வீட்டில் ஹோம் தியேட்டர் இருக்கும். ஆகவே படத்தின் ஒட்டு மொத்த வசூல் சாத்தியக்கூறு மிகமிக குறைவானதே.ஆகவே மிகக் குறைவான பட்ஜெட்டில்தான் மலையாளத்தில் படம் எடுத்தாக வேண்டும்.

மலையாள சினிமாவின் வலிமையே இந்த சிறிய அளவுதான் என்று சொல்ல வேண்டும்.ஆர்ப்பாட்டமான காட்சியமைப்புகள் மலையாள சினிமாவுக்குக் கட்டுப்படி ஆகாது. திரைக்கதை, நடிப்பு ஆகிய இரண்டை மட்டுமே நம்பி மலையாள சினிமா இயங்கியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால்தான். ஆகவேதான் மலையாளத்தில் தொடர்ச்சியாக ஏராளமான நல்ல திரைக்கதைகள் எழுதப்பட்டன. நுட்பமான பல நடிகர்கள் உருவாகி வந்தார்கள். மலையாள சினிமாவின் சாதனைகள் இந்த தளத்திலேயே. இந்திய சினிமாவில் மலையாள சினிமாவின் முக்கிய இடம் இவ்வாறு உருவாகி வந்ததேயாகும்.

அதாவது பட்ஜெட் காரணமாகவே மலையாள சினிமா யதார்த்ததில் நின்றது என்று சொல்ல வேண்டும். கடுமையான தணிக்கை உள்ள நாடுகளில் வணிக சினிமா இல்லாமல் போய் அதன் விளைவாக நல்ல சினிமா வளர்வதுபோல என்று இதைச் சொல்லலாம்”.

பிறகு வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜெயமோகன், ஆனால் இப்பதிவு மலையாள சினிமா பற்றியல்ல.

பணக்காரர்கள் எல்லாம் படாடோபமானவர்கள் (ஆகவே கெட்டவர்கள்) ஏழைகளெல்லாம் எளிமையானவர்கள் (ஆகவே நல்லவர்கள்) என்ற பொது புத்தியுடன் ஜெமினி வாசன் பல படங்கள் எடுத்துள்ளார். அந்தக் கருத்துக்கும் ஒரு மெல்லிய அடிப்படை உண்டு. நான் என்ன கூறவருகிறேன் என்றால் அடுத்த வேளை சோற்றுக்கே போராடும் நிலையில் இருந்தால் படாடோபமாக இருப்பதற்கு எங்கிருந்து பணம் வருமாம்? இப்போது வரும் பல சீரியல்களில் கதாநாயக நாயகியர் படும் சங்கடங்கள் பலவற்றைக் காணும்போது, அவை எல்லாம் உண்டு கொழுத்தவருக்கே வரும் நிலை என்றுதான் தோன்றுகிறது.

உலகமயமாக்கம் வரும்வரை கிராமப்புறங்கள் எளிமையாக இருந்தன. நகரத்தில் வாழ்பவர்கள் மன அமைதிக்கு அங்கு சில நாட்கள் சென்று வந்தனர். இப்போது அப்படிப்பட்ட இடங்களைப் பார்ப்பது அபூர்வமாகி வருகிறது என அவர்கள் புலம்புகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட கிராம மக்களைக் கேட்டால் அவர்களில் பலர் இவ்வளவு ஆண்டுகள் எளிமையாக வாழ்ந்ததன் முக்கியக் காரணமே தங்களது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணமின்றி வாழ்ந்ததே என்று கூறுவார்கள். இப்போது கிராமங்களும் மெல்ல மெல்ல நகர அடையாளங்களைப் பெற்று வருகின்றன. என்ன, அது நல்லதற்கில்லை எனக் கூறுபவர்கள் நகரத்தில் உள்ளவர்களே. கிராமத்தில் உள்ளவருக்கு இதில் பிரச்சினை இருக்காது. பஸ் வசதி இல்லாது மைல் கணக்கில் நடக்க வேண்டியிருந்த கிராமங்கள் பலவற்றில் ஆட்டோ என்ன, பஸ்கள் என்ன என விறுவிறுவென போக்குவரத்து நடக்கிறது. அரை கிலோமீட்டர் தூரம் என்றாலும் அரை மணிக்கு குறையாது பஸ்ஸுக்காக காத்திருப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஆகவே “இப்போ நீ என்ன சொல்ல வரே” என்று கேட்கும் முரளி மனோகருக்கு நான் வைக்கும் கேள்வி “பணம் இருந்தால் தொந்திரவுதானா”? என்பதே.

என் தந்தை கூறுவார், உணவு உண்ணும்போது தன்னை ஏழையாக பாவித்து கொள்ள வேண்டும், அதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதாவது தாராளமாக நெய் விட்டுக் கொள்ளக் கூடாது. கட்டித் தயிர் கூடவே கூடாது, கடைந்தெடுத்த மோர்தான் தாராளமாக நீர் சேர்த்து பாவிக்க வேண்டும். ஆனால் என் நாக்கு கேட்கிறதா? இரண்டையும் விரும்பித்தான் சேர்த்து கொள்கிறேன். அவற்றை ஈடு செய்ய ஓரிரு கிலோமீட்டர்கள் அதிகமாக நடந்தால் போயிற்று என மனதுடன் சமரசம் செய்து கொள்கிறேன். வேறென்ன செய்வது?

சரி, பிரச்சினை தெரிந்து விட்டது, அதாவது இல்லாமையால் பல துன்பங்கள் இருந்தாலும் எளிமையான, மனச்சஞ்சலங்களுக்கு இடம் தராத வாழ்க்கை முறை இருந்தது. அந்த நல்ல விஷயம் அருகி வருகிறது. தனிப்பட்ட முறையில் அதை கடைபிடிக்க இயலுமா? அதைத்தான் நான் இப்போது செய்ய முயன்று வருகிறேன்.

என் குடும்பத்தினருடன் வெளியில் செல்லும்போது “எனது” காரில்தான் செல்கிறேன். எனது மனநிலைக்காக அவர்களை தொந்திரவு செய்யக் கூடாது. கடவுள் அருளால் நல்ல சம்பாத்தியம் இருப்பதால் அது ஒரு பாரமாகத் தோன்றவில்லை. ஆனால் தனியே செல்லும்போது? முடிந்தவரை பஸ் அல்லது நடைதான். “பதிவர் சந்திப்புகளுக்கு வரும்போது தனியாகத்தானே வருகிறாய், அப்போது மட்டும் “உன்” காரில் ஏன் வருகிறாய்” எனக் கேட்கும் முரளி மனோகர் நியாயமான கேள்விதான் கேட்கிறான். அச்சமயங்களில் பல நேரங்களில் என் குடும்பத்தினர் அதே காரை எடுத்து கொண்டு வேறு இடங்களூக்கு சென்று, என்னை சந்திப்பு நடக்கும் இடத்தில் டிராப் செய்து பிறகு பிக் அப் செய்கின்றனர். மேலும் பல தருணங்களில் கைவசம் வேலை இருக்கும். ஆகவே போகவரும் நேரம் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்.

மேலே சொன்னதைத் தவிர மற்ற தருணங்களில் பஸ் அல்லது நடைதான். அத்தருணங்களில் நான் மனரீதியாக முப்பது ஆண்டுகள் பின்னே செல்கிறேன். மனதுக்கு இந்த எளிமை பிடித்திருக்கிறது. எனது சென்னையின் சூழ்நிலையை முழுவதும் அனுபவிக்க இயலுகிறது.

முதல்வன் அல்லது ஜெண்டில்மேன் படத்தை எளிமையான பட்ஜெட்டில் மலையாளத்தில் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/19/2009

டோண்டு பதில்கள் - 19.03.2009

கமலக்கண்ணன்:
1. இப்போதைய கல்வியின் மகத்தான சாதனை என்ன?
பதில்: நிறைய பேருக்கு கல்வி தர முயற்சி செய்யப்படுகிறது. நன்கு முனைந்து படித்தால் முன்னேற முடியும் என்றளவில் வேலையும் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. அதுவே கல்வியின் ஒரு சாதனைதானே.

2. நமது நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருவது எது? குறைந்து வருவது எது?
பதில்: ஒரு மொக்கை பதில் (அதாவது மொக்கை என அறிந்தே தரும் பதில்) வேண்டுமா? என்னைவிட குறைந்த வயதானவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள், அதே சமயம் என்னை விட அதிக வயதானவர்க்ள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

3. தற்போதைய தமிழகத்தில் யார் யாருக்கு எதில் கடும் போட்டி நிலவுகிறது?
பதில்: தத்தம் ஜாதியை தாழ்த்தப்பட்டவர் லிஸ்டில் சேர்ப்பதற்கு கடும்போட்டியே நிலவுகிறது.

4. அரசியல் கட்சிக்காரர்களுக்கு யார் கடவுள்?
பதில்: ரௌடிகள்

5. எம்.ஜிஆர் ஆட்சி போலீஸ், ஜெ ஆட்சி போலீஸ், கலைஞர் ஆட்சி போலீஸ் ஒப்பிடுக?
பதில்: எல்லாமே அப்போதைய ஆளும்கட்சிகளுக்கு சலாம் போட்டவை என்பதில் ஒற்றுமை. அப்படி யாருக்கு போட்டார்கள் என்பது ஆளும் கட்சியை பொருத்து மாறியதுதான் வேற்றுமை.


அனானி (14.03.2009 மாலை 07.51-க்கு கேட்டவர்):
1. அமெரிக்க மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்ன?
பதில்: ஒற்றுமை உலகிலேயே இரு பெரிய ஜனநாயக நாடுகளின் குடிமக்களாக இருப்பது. நம்மக்களிடம் ஜாதி சார்ந்த சண்டை அமெரிக்கர்களிடமோ கருப்பர் வெள்ளையர் பிரச்சினை. பணவிஷயத்திலும் வேற்றுமை. அவர்களுக்கு பணபலம் என்றால் நம்மிடம் ஆன்மீக பலம் எனச் சொல்லும் அதே நேரத்தில் அக்கரைக்கு இக்கரை பச்சையாக அவர்களில் பலர் ஆத்மாவைத் தேடி அலைய நம்மவரில் பலர் பணத்தை மட்டும் தேடி ஓடுவது ஒரு பெரிய நகைமுரணே.

2. வள்ளுவர் பெயர், காந்தி பெயர், அண்ணா பெயர், காமராஜ் பெயர் ஆகியவற்றைக் கெடுத்தது யார்?
பதில்: வள்ளுவர் பெயர் ஒன்றும் கெட்டதாகக் கூறவியலாது. மற்றவர்கள் பெயரை கெடுக்க அவரவர் கட்சி ஆட்களே போதும்.

3. ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
பதில்: பிரமோஷன்.

4. ஏழை, பணக்காரன், மிடில் கிளாஸ் ஆகியோரது நிலை இந்தியாவில் இப்போ எப்படி?
பதில்: முதலில் மிடில் கிளாஸை எடுத்து கொள்வோம். உலகமயமாக்கலுக்கு பிறகு அவர்களில் பலரது வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. டெலிவிஷன், டெலிஃபோன் ஆகிய விஷயங்கள் இல்லாத குடும்பங்கள் குறைவுதானே. செல்ஃபோன் என்பது கிட்டத்தட்ட எல்லாவித மக்களிடமும் உள்ளது. அது இனிமேலும் சொகுசுப்பொருளாகக் கருதப்பட இயலாது. எது எப்படியானாலும் சற்றே முயன்றால் முன்னேற பல வழிகள் திறந்துள்ளன.

5. அரசின் பணம் தேவையற்ற விளம்பரமாய், தண்ணீர் போல் செலவழிப்பது பற்றி?
பதில்: ரொம்ப கவலையளிக்கும் நிகழ்வுதான் இது. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறும் சாத்தியக்கூறு ஏதும் இருப்பதாகத் த்ரியவில்லை. பை தி வே தண்ணீர் தட்டுப்பாடு வரும் நிலையில் பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்வது என்பது சிக்கன நடவடிக்கைக்கு உதாரணமாக மாறிவிடும் சாத்தியக்கூறு உண்டு.

6. பல பத்திரிக்கைகள் பிரிக்கப்படாமலேயே பழைய பேப்பர் கடைக்கு போவது பற்றி?
பதில்: பேப்பர்கள் விஷயத்தில் ஒன்று நிச்சயம். பேப்பர் படிக்கலின் அன்றே படிக்குமின் அஃதலின் படிக்கலின் படிக்காமை நன்று. ஆக ஒரு நாள் பேப்பர் படிக்காமல் கட்டில் சேர்க்கப்பட்டு பிறகு பேப்பர் கடைக்கு போவது ஒன்றும் அபூர்வமான நிகழ்வு அல்ல.

7. இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து செழிக்கும் போது பணவீக்கம் இல்லாமலே போகுமா?
பதில்: பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்ல மழையும் அவசியமே. ஆனால் அது மட்டும் போதாதே.

8. தமிழ் நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் இன்னும் பழைய பொலிவுடன் இருப்பது எது?
பதில்: பழைய பொலிவு எனப் பார்த்தால் முதலில் பல்கலைக் கழகமும் பல ஆண்டுகளாக செயல் பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்கும் பல்கலைக் கழகங்கள் என்னைப் பொருத்தவரை இரண்டே இரண்டுதான், அதாவது அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம். அவை அப்படி ஒன்றும் பழைய பொலிவுடன் இருப்பதாக எனக்குப் படவில்லையே.

9. சிரஞ்சீவி இன்னுமொரு என்டிஆரா?
பதில்: சரித்திரம் மறுபடி நிகழும். முதல் முரை அது சரித்திரம், அடுத்த முறை அது கேலிக் கூத்து.

10. நேதாஜி உயிருடன் வந்தால்?
பதில்: சாத்தியமே இல்லை.

11. சென்சார் போர்டு இருக்கா?
பதில்: இருக்கிறது. அவர்கள் சென்சார் செய்த காட்சிகள் அரசு கெஜட்டில் வரும். அதுவே சற்றே மிதமான பலான கதை விளைவைத் தரும் என்பதை அறிவீர்களா? உதாரணங்கள்: படம் ஜானி மேரா நாம் (சமீபத்தில் 1970-ல் திரையிடப்பட்டது). சென்சார் குறிப்பு கெஜட்டில் படித்தது. பத்மா கன்னா காபரேயில் குளோசப்பில் அவரது முலைக்காம்புகள் தெரியும் காட்சி நீக்கப்படுகிறது என ஒரு வரி. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் பாண்டியராஜன் “மயிறு” எனச் சொல்லும் காட்சி நீக்கப்பட்டது. விஷயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட கெஜட்டை வாங்கிப் படித்து மகிழ்ந்தனர். இப்போதும் அம்மாதிரி கெஜட் அறிக்கைகள் வருகின்றன.

12.லஞ்சம் உங்கள் பாணியில்/ஸ்டெயிலில் விளக்கவும்?
பதில்: விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைத் தவிர்க்க இயலாதுதான். எவ்வளவு முடியுமோ தவிர்ப்பதே நலம்.

13. தமிழகம் சட்டம் ஒழுங்கு இப்போ எப்படி?
பதில்: போலீசார் பற்றாக்குறை இருக்கும் நிலையில் முக்கால்வாசிப் பேரை பந்தோபஸ்து கடமைக்கு, அதுவும் உபயோகமற்ற அரசியல்வாதிக்ளின் பாதுகாப்புக்கு பயன்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு சவலைக் குழந்தையாகத்தான் உள்ளது.

14. தேர்தல் முடிவு தொங்கு நிலையா?
பதில்: இப்போதிருக்கும் ட்ரெண்ட் அப்படித்தான் தோன்றுகிறது. லோக்சபா தேர்தலைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

15. அரசியல் ஏமாளி யார்?
பதில்: வாக்காளர்களை இதில் பீட் செய்ய இயலாது.

16. காங்கிராசாரின் தனிச் சிறப்பு எது?
பதில்: எந்த மாநிலக் கட்சியிடம் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொள்வது என்பதில் கைதேர்ந்தவர்கள். அதற்கு முக்கியக் காரணமே அன்னை மாதா இந்திரா காந்திதான்.

17. இன்றைய லஞ்சத்தின் அளவு எது?
பதில்: வானமே எல்லை.

18. அரசியல் கட்சிகள் உங்கள் பார்வையில்?
பதில்: குடும்ப வியாபாரங்கள்.

19. யார் அரசியல் கொத்தடிமைகள்?
பதில்: வாக்காளர்கள்.

20. இட ஒதுக்கீடு எதிர்ப்பு அடங்கி விட்டதா?
பதில்: வேலைகளில் இட ஒதுக்கீட்டை பொருத்தவரை அரசு வேலைகள் அருகிவரும் தருணத்தில் அவை இர்ரெலெவண்டாகப் போகின்றன. படிப்பும் இப்போது ரொம்ப காஸ்ட்லியாகப் போன நிலையில் இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் படிக்கப் பணம் இன்றி பலரது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எல்லோருமே களைத்துப் போனதுபோல ஒரு தோற்றம்.

21. பஞ்சாயத்துராஜ் சட்டம் இருக்கா?
பதில்: சட்டம் என்னவோ இருக்குதான். ஆனால் மேல்விவரங்கள் ஒண்ணும் தெரியாது.

22. இரண்டாவது பசுமைப்புரட்சி/வெண்மை புரட்சி வருமா?
பதில்: முதல் பசுமைப் புரட்சி முக்கியமாக ரசாயன உரங்களால் வந்தது. இப்போது அவற்றால் பலவிளை நிலங்கள் பாழாகியுள்ளன. இந்த நிலைஅயை சரிசெய்த பிறகுதான் இரண்டாம் பசுமைப்புரட்சி பற்றி பேசவியலும். இரண்டாம் வெண்மைப்புரட்சி வர இன்னொரு குரியன் வரவேண்டும்.

23. சாதிச் சங்கங்கள் இந்த தேர்தலில்?
பதில்: பேஷா பங்கெடுக்கும்.

24. அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?
பதில்: யாரிடம் எதற்காக எம்முறையில் அந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்பதை அறிந்தால்தான் அது வெற்றி பெறுமா எனக் கூறவியலும். நிச்சயமாக வெற்றி பெறும் என்று தெரிந்தால்தான் அரசியல்வாதி முயற்சியை மேற்கொள்வார்.

25. சுப்பிரமணியசாமி அடுத்து என்ன செய்வார்?
பதில்: அவருக்கே அது தெரியாது என்றிருக்கும்போது நான் எப்படி அதைக் கூறுவது?

26. இந்தியா மற்ற உலக நாடுகளிடமிருந்து எதில் வித்தியாசப் படுகிறது?
பதில்: ஜனநாயகம் இந்தியா மற்றும் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில்தான் செயல்பட்டு வருகிறது என்பதே நம் நாட்டின் கிரீடத்தில் இன்னொரு மயிலிறகு.

27. அந்தக்கால அரசியலுக்கும் தற்கால அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?
பதில்: அதே லஞ்சலாவண்யங்கள், ஏறி வந்த ஏணியை உதைத்துச் செல்லல், நன்றி மறத்தல் ஆகிய எல்லாமுமே அப்படியேத்தான் உள்ளன, இதில் என்ன வேறுபாடு வாழ்கிறது?

28. கழகக் கட்சிகளில் எது பரவாயில்லை?
பதில்: யோசித்து, தேடிப் பார்த்து சொல்ல வேண்டிய விஷயம். இருப்பினும் தீவிரவாதத்துக்கு துணைபோகாத கட்சி என்னும் நிலையில் அதிமுக பரவாயில்லை.

29. உலகில் தொடர் நிகழ்ச்சியாய் வருவது எது?
பதில்: இந்தக் காலத்துப் பசங்க, ஹூம், எதுவும் அந்தக் காலம் போல இல்லை என்று பெரிசுகள் செய்யும் அலம்பல்கள்.

30.மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரமென்பார் அப்படியென்றால் கணவன், பிள்ளைகள், மாமனார்/மாமியார்/நாத்திமார்/சகலை/ஓரகத்தி/மருமகன்/மருமகள்/பேரன்/பேத்தி/மச்சினர் அமைவதெல்லாம்?
பதில்: அந்த வரத்துக்கு போனஸ்கள்.


ரமணி:
1. சாதாரணமாக துக்ளக்கில் விளம்பரங்கள் வருவதில்லை? என்ன காரணம்? வியாபாரிகள் எடுத்த முடிவா அல்லது சோ அவர்களது வணிகக் கொள்கையா? இப்போது சர்குலேஷன் எவ்வளவு?
பதில்: சோ அவர்களுக்கு மார்க்கெட்டிங்கில் அவ்வளவு திறமை போதாது என்றுதான் வைத்து கொள்ள வேண்டும். பல பத்திரிகைகள் தங்களது விளம்பரதாரர்களை பகைத்து கொள்ளக் கூடாது என்னும் பயத்தில் பல பிரச்சினைகளில் அடக்கி வாசிக்கின்றனர். சோ அவர்களது மனோபாவத்துக்கு அது ஏற்றதில்லை என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். தெரியவில்லை.

2. உங்கள் பதிவுகளில் ஆதரித்து எழுதும் அவருடைய ஜெயா டி.வி. சீரியலால் துக்ளக்கின் சர்குலேஷன் கூடியுள்ளதா?
பதில்: என்ன குழந்தைத்தனமான கருத்து? ஜெயா டிவி சீரியல் வேண்டுமானால் அவரது பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தியிருக்கலாம். அதே சமயம் ஜெயா டிவிக்கும் இந்த சீரியலால் டிஆர்பி ரேட்டிங் கூடியிருக்கும் என்பதும் நிஜமே. ஆனால், அதற்காக அந்த சீரியலை நான் ஆதரித்து எழுதும் இடுகைகளையும் அதே மூச்சில் குறிப்பது ரொம்பவே ஓவர். நான் சீரியலை பற்றி எழுதுவது எனது மனத்திருப்தியைத் தவிர வேறெந்த பலனையும் எதிர்பாராது செய்வதே. இது இப்படியிருக்க, அதனால் எல்லாம் சீரியலுக்கு சப்போர்ட் என்றெல்லாம் கற்பனையாகக் கூட சொல்லிட இயலாது.

3. இப்போது துக்ளக்கின் சர்குலேஷன் என்ன?
பதில்: 2005-ல் நான் அட்டெண்ட் செய்த துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் அவர் தெரிவித்தபடி, அப்போதைய சர்குலேஷன் சுமார் 75000.

3. எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சோ அழகிரியிடம் பூங்குழலியின் திருமணத்தின்போது கூறியுள்ளார், ஏன்?
பதில்: எனக்கும் புரியவில்லை. ஒரு வேளை இருவருமாக சேர்ந்து மணிரத்தினத்தை வைத்து கீழே சொல்வது போல காமடி செய்திருப்பார்களா?
சோ: விடணும், விடணும்.
அழகிரி: எதை? எதை?
சோ: எல்லாத்தையுமே, எல்லாத்தையுமே.
அழகிரி: முதல்லே அவனை விடச்சொல்லு, நானும் விடறேன்.
குபீர் சிரிப்பு, ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொள்கின்றனர். இது எப்படி இருக்கு?

4. காங்கிரசும் அதிமுகாவும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கக் கூடுமா?
பதில்: வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

5. சுற்றிலும் கலைஞர் டிவி, சன் டிவி குழுமங்கள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு நடுவில் ஜெயா டிவியால் பார்வையாளர்களை ஈர்க்க இயலுமா?
பதில்:கஷ்டம்தான்.

அனானி (17.03.2009 மாலை 07.22-க்கு கேட்டவர்):
1) சரத்குமாருடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எத்தனை ஓட்டு கிடைக்கும்?
பதில்: பாவம் பாஜக. எல்லோரும் அதை வைத்து காமெடி செய்கிறார்கள்.

2) அருண் ஜெட்லியை இழப்பது பாஜகவுக்கு பெரிய இழப்புதானே?
பதில்: நல்ல நேரம் பார்த்தார்களையா சண்டைபோட.

3) மாயாவதி மற்றும் ஜெயலலிதா தயவில் அத்வானி பிரதமராவாரா?
பதில்: ஒரு முறை வாஜ்பேயி பட்டது இன்னும் மறக்கவில்லையே. ஆனால் அத்வானி இரண்டு இடிகள். ஐயோ பாவம்.


சேதுராமன்:
1. கத்ரோச்சி புகழ் அன்னை சோனியா, டாஜ் காரிடார் புகழ் அன்னை மாயாவதி, மாட்டுத் தீவனம் புகழ் அன்னை ராப்ரி தேவி, சிங்குர் புகழ் மம்தா, நர்மதா புகழ் மேதா, டான்சி புகழ் அம்மா, முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் உமாபாரதி, சங்கமம்/ஸ்பெக்ட்ரம் புகழ் கனிமொழி -- இவ்வளவு பேருக்கு மத்தியில் அன்னை இந்தியா நிற்க முடியுமா? சோவின் பரம சிஷ்யர்ரன நீர் அவர் பாணியில் பதில் அளிக்கவும்!
பதில்: மேலே கூறியவர்கள் எல்லோருமே அன்னை மாதா தாயார் இந்திரா காந்திக்கு முன்னால் தூசுக்கு சமம். அப்படிப்பட்ட இந்திராவிடமிருந்தே அன்னை இந்தியா தப்பித்தாகி விட்டது. இன்னும் அன்னை இந்தியாவுக்கு அதே அதிர்ஷ்டம் இருக்கும் என நம்புவோமாக.

2. பத்து கோடி இளைஞர்கள் ஓட்டளிக்கும் உரிமை பெறுவார்கள் புதிதாக என்று தெரிகிறது - இது நல்லதற்கா, அல்லது பழைய குருடிதானா?
பதில்: அதே போல கணிசமான அளவில் ஓட்டர்கள் மறைந்தும் போயிருப்பார்கள் அல்லவா. மேலும் இது நல்லதா அல்லது கெட்டதா என்றேல்லாம் விவாதித்தால் ஆகும் பலன் என்ன? இந்தியா ஒரு ஜனநாயக நாடாக பரிமளிக்க இது இன்றியமையாததே. புதிதாக வந்து சேரும் ஓட்டர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே நமக்கு வேண்டியது.

3. வருண் காந்தியின் கன்னிப் பேச்சு எழுப்பியிருக்கிற புயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: வீடியோ டேப் திரிக்கப்பட்டு, அதில் தில்லுமுல்லு நடந்துள்ளது என வருண் கூறுகிறார். தில்லி ஜும்மா மசூதியிலிருந்து தலைமை காஜி இந்தியாவை எதிர்த்து முசல்மான்களை தூண்டுவதையெல்லாம் தட்டிக் கேட்க துப்பில்லாதவர்கள் இங்கு வந்து ஆட்டம் போடுவது விந்தையாக இருக்கிறது. அதுவும் பத்து நாட்களாக இந்த டேப் இருந்திருக்கிறது. அதில் என்ன தில்லுமுல்லு ஆயிற்றோ, யாருக்குத் தெரியும்?

வெங்கி (என்னும்) பாபா:
1) சோ அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
பதில்: ஒரு பெண், ஒரு பிள்ளை என நினைக்கிறேன். மற்றப்படி ஒன்றும் தெரியாது, தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஆனால் ஒன்று, அவரது பேத்தி ஸ்கூலில் அசத்துகிறாள், சோவையே ஆட்டிப் படைக்கிறாள் என கர்வத்துடன் அக்குழந்தையின் தாத்தா சோவே கூறியுள்ளார்.

2) எங்கே பிராமணன் இன்னும் எவ்வளவு இருக்கிறது? ஒரு 25% முடிந்திருக்குமா?
பதில்: இன்னும் நிறையவே இருக்கிறது. 25% அளவு வருவதற்கே இன்னும் அதிக தூரம் போக வேண்டி உள்ளது. ஆனால் ஒன்று, ஏதேனும் நடந்து சீரியலை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால், நான்கே எபிசோடுகளிலும் முடிக்கவியலும். அம்மாதிரி எதுவும் ஆகாது என நம்புவோம்.

ரமணா:
a) போலீசு-லாயர் மோதல் முதல் ரவுண்டு வெற்றி யாருக்கு?
பதில்: இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் வக்கீல்கள் குதிக்கின்றனர். அதே போல விஷமத்தை முதலில் ஆரம்பித்து வைத்த வக்கீல்களில் ரிங் லீடர்களின் சன்னதையும் பிடுங்க வேண்டும்.

b) போலீசு-அரசியல்வாதி சண்டை வந்தால் எப்படி இருக்கும்?
பதில்: சண்டையில் ஈடுபடுவது ஆளும் கட்சி அரசியல்வாதிகளா அல்லது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அப்படியே எதிர்க்கட்சியாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் பதவிக்கு வரக்கூடிய நிலைமையில் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அதை பொருத்துத்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கூற இயலும்.

c) முகமுத்து, அழகிரி பக்கம் சாய்கிறார?
பதில்: முக முத்து என்பவர் வாழ்வில் தோல்வியடைந்தவர். அழகிரியின் மனநிலைக்கு அவர் ஒத்து வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆகவே அவர் அழகிரி பக்கம் சாய்ந்தால் என்ன, சாயாவிட்டால் என்ன?

d) பி.எஸ் .என்.எல் -கலைஞர் டீவி(தினமணிச் செய்தி)க்குகொடுக்க இருக்கும் ஒரு கோடி விளம்பரம்( உருப்படாத சீரியலுக்கு)-மத்திய அரசுத்துறையையும் கெடுத்தாச்சா?
பதில்: ஒரு விளம்பரம் என்பது அது அடைய வேண்டிய இலக்கு வாசகர்களை மிக அதிகப்பட்ச அளவில் அடைய வேண்டும். அந்த வகையில் கலைஞர் டிவியின் அந்த சீரியலுக்கு இருக்கும் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

e) ஆமை /அமீனா புகுந்த வீடு போல் கழகம் கைபற்றிய அரசுத்துறையின் எதிர்காலம்?
பதில்: அரசுத்துறை என்றாலே அனாவசிய செலவுகளை உள்ளடக்கியுள்ளதுதானே.

f) 3 ஜி மொபைலை பிஎஸ் என் எல் தொடங்குவதில் ஏதும் சிக்கலா?
பதில்: அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. வணிக ரீதியாக அடுத்த மாதம் சென்னையில் வரும் என நினக்கிறேன்.

g) மாயாவதி, ஜெ,உமாபாரதி, மம்தா, சோனியா யாரால் பிரதமர் பதவி அழகு பெறும்? (பண்டிட் ஜவஹர்லால் காலம் போல்)
பதில்: மோடி அல்லது அத்வானி.

h) ஹோட்டல்கள் அரசு அறிவித்த விலைக் குறைப்புக்கு மூடு விழா நடத்தி விட்டதே? (ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கும் பொற்கால ஆட்சியிலே தரமான ஒரு இட்லி ரூ5/=)
பதில்: நான் வசிக்கும் நங்கநல்லூரில் இரண்டு இட்டிலிகள் விலை 6 ரூபாய்தான். நன்றாகவே உள்ளன. எது எப்படியாயினும் வணிக அடிப்படை ஏதுமே இல்லாத முடிவுகள் காலப்போக்கில் குப்பையில் கடாசி வீசப்படும்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/18/2009

எங்கே பிராமணன் - பகுதி - 31 & 32

பகுதி 31 (16.03.2009): (நடுவில் ஒரு discontinuity வருகிறது)
ஜட்ஜ் தனது பரிபூரண சம்மதத்தைத் தெரிவிக்கிறார். சாம்புவுக்கு வேம்புவுக்கும் ஆனந்தம் கலந்த ஆச்சரியம். ஆனால் வீடு திரும்பும்போது சாம்புவுக்கு ஒரு சந்தேகம், ஒருவேளை ஜட்ஜாத்து மாமிக்கு சம்மதம் இல்லையோ என. அதற்கேற்றார் போல ஜட்ஜ் சம்மதம் தெரிவித்து மரியாதை செய்யும் இடத்தில் மாமி கூட இல்லை. எது எப்படியிருப்பினும் இந்த சந்தேகங்களை எல்லாம் வீட்டில் போய் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என வேம்பு சாம்புவுக்கு ஆலோசனை தருகிறார்.

அதேபோல சாம்புவும் தனது வீட்டில் ஜட்ஜ் அளித்த சம்மதம் பற்றி மட்டும் கூறுகிறார். ஜட்ஜின் மனைவியும் சம்மதம் தெரிவித்ததாக ஒரே போடு போட்டு விடுகிறார். கிருபாவின் சகோதரன் கூட இம்மாதிரி காதல் என்றால் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் இன்றி சப்பென முடிந்து விட்டது என செல்லமாக அலுத்துக் கொள்கிறான்.

அசோக் மூலம் வந்த போலீஸ் பிரச்சினையை சமாளிக்க வையாபுரி அசோக்குக்கு மனநிலை சரியில்லை என்னும் விஷயத்தைப் பரப்பி, அது சம்பந்தமாக அசோக்கின் தெருவிலுள்ளவர்களிடம் கையெழுத்து வாங்குகிறார். எரிச்சலுடன் நாதன் தன்னிடமும் கையெழுத்து கேட்பதுதானே எனக்கூறி கையெழுத்து போட்டுவிட்டு அகலுகிறார். வையாபுரி குழம்புகிறார். (ஒலிநாடாவில் நடுவில் ஒரு discontinuity வருவதால் இக்காட்சி இங்கே நினைவிலிருந்து கூறப்படுகிறது).

ஜட்ஜ் வீட்டில் போயும் போயும் வைதிகர் வீட்டு சம்பந்தம்தானா தன் மகளுக்கு என அவர் மனைவி ஆட்சேபம் தெரிவிக்க, அவரே குருக்களின் பெண்தான் என்பதை ஜட்ஜ் தன் மனைவிக்கு நினைவுபடுத்துகிறார். ஆனால் தான் இப்போது ஜட்ஜின் மனைவி என அவர் சமாளிக்க, பகவத்கிருபை இருந்தால் தன் மகளும் அதே மாதிரி பிரமோஷன் பெறுவாள் என ஜட்ஜ் முத்தாய்ப்பு வைக்கிறார். அப்போது அங்கு வந்த அவரது உறவினரும் அதே ஆட்சேபணையை வைக்கிறார்.

சோவும் அவர் நண்பரும் சீனில் வருகின்றனர். இது என்ன உறவுக்காரான்னா இப்படித்தான் உபத்திரவம் செய்வார்களா என நண்பர் கேட்க, அதுதான் உறவினரின் சுபாவம் என்பதை சோ தெளிவுபடுத்துகிறார். ஊரான் ஒருவனை எவ்வளவு புகழ்ந்தாலும் அவனது உறவினர்கள் அவனை மட்டம் தட்டுவது பலமுறை நடந்திருக்கிறது என சோ கூறிவிட்டு, ராமாயணத்தில், ராவணனும் வீடணன் தனக்கு அறிவுறை கூறும்போது இதையே கூறுகிறான் என்றார். போயும் போயும் ராவணனையா இங்கு மேற்கோள் காட்டுவது என நண்பர் அங்கலாய்க்க, ராவணனின் சிறப்புகளை பட்டியலிடுகிறார் சோ அவர்கள். அவனது பெண் சபலத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அவன் பெரிய அறிவாளி, பக்திமான் என்கிறார் சோ. அதே சமயம் ராமரும் இதே கருத்துக்களை வேறொரு தருணத்தில் கூறுகிறார் என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். [இங்கு சோ கூறாமல் விட்டது என்னவென்றால் ராவணனும் சரி ராமரும் சரி, இருவருமே இங்கு உதாரணமாகக் காட்டுவது வீடணனைத்தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ராவணன் வீடணனை சாடவே அதை பயன்படுத்துகிறான், ராமரோ அதற்காக வீடணன் மேல் குற்றம் காட்டவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் ராவணனே சரணம் என தன்னிடம் வந்திருந்தால் அவனுக்கும் அடைக்கலம் தந்திருப்பேன் என்று வேறு கூறுகிறார்].

ஜ்ட்ஜ் வீட்டில் அவர் தனது உறவினரின் ஆட்சேபணைகளை உறுதியான வாதங்களினால் மறுக்கிறார்.

நாதன் வீட்டில் அவர் அசோக்கிடம் அவனால் தனக்கு ஏற்படும் சங்கடங்களைப் பட்டியலிடுகிறார். அவன் புன்முறுவலுடன் அவர் பேசுவதைக் கேட்கிறான்.

பகுதி 32 (16.03.2009):
வையாபுரி செய்த காரியத்தால் சிங்காரம் விடுதலையாவான், அசோக் பைத்தியம் என்பது உறுதியாயிற்று என அவர் கூற, தான் பைத்தியமா இல்லையா என தனக்குத் தெரிந்தால் போதும் என அசோக் கூறுகிறான்.

சீனில் வரும் நண்பர் இது என்ன அசோக் குடாக்காக இருக்கிறான் என சோவிடம் கூறி வியக்கிறார். அசோக் ஒரு ஜீனியஸ் என்பதை விளக்குகிறார் சோ. ஞானிகள் மற்றவர்கள் நினைப்பதையெல்லாம் பற்றி பொருட்படுத்த மாட்டார்கள், பொருட்படுத்தவும் கூடாது எனக் கூறுகிறார். இதற்காக பட்டினத்தார் வாழ்க்கையில் நடந்த நிகழ்வையும் கூறுகிறார். வழியில் போகும் இரு பெண்கள் இவரைப் பற்றி வம்புபேசியவாறு செல்ல, அவரும் அதற்கேற்பச் செயல்பட்டு மேலும் அசடராகிறார். பிறகுதான் தான் ஞானப்பாதையில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதையும் உணர்கிறார். அவரை அவ்வாறு பரிகசித்தவர்கள் உமையும் சரஸ்வதியும் என்பது பின்னால் அக்கதையில் கூறப்படுகிறது, ஆனால் அது வேறு விஷயம். தன் பூதவுடலுடனேயே சொர்க்கம் செல்லமுடிந்த பட்டினத்தாருக்கே இந்தக் கதி.

மீண்டும் அசோக்கும் நாதனும் சீனில் வருகின்றனர். இப்போது வையாபுரியிடமிருந்து கிடைக்க வேண்டிய பலன்களும் கிடைக்காமல் போகப்போகிறது என நாதன் பொரும, அது அவருக்கு blessing in disguise என அசோக் கூற நாதன் அதை ஏற்க மறுக்கிறார். அவன் கூறுவது எல்லாம் படிக்க மட்டும் நன்றாக இருக்கும், ஆனால் பிராக்டிகலாகப் பலன் அற்றவை. மேலும் அசோக் ஒரு இடத்திலேயே அடைந்து கிடைக்காமல் உலகை பற்றி அறிய வெண்டும், மற்றவர்களாஈ புரிந்து கொள்ள முயல வேண்டும் என ஒரு பாசமுள்ள தந்தையின் ஆதங்கடோடு அவர் கூறுகிறார்.

ஜட்ஜ் வீட்டில் அவர் மனைவி பிரியாவுக்கு கல்யாணம் ஆனதும் அவளைத் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, ஒரு நல்ல வைதிகக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு அங்குள்ள நல்ல பழக்கவழக்கங்களைத் தன் பெண் கற்றுக் கொள்ளவேண்டுமென தான் ஆசைப்பட்டதைக் கூறிய ஜட்ஜும் கடைசியில் இந்தக் கோரிக்கைக்கு அரை மனதுடன் சம்மதிக்கிறார்.

தான் நியமித்த ஆடிட்டர் முட்டாள்தனமான தவறுகளை செய்வதற்காக நாதன் அவரைச் சாட, அவரும் மனம் கலங்குகிறார். இனிமேலும் இவ்வாறு முட்டாள்தனமானத் தவறுகளை அவர் மீண்டும் செய்தால் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார் என்க் கூறி அப்பால் செல்கிறார். அவரால் முன்னால் கைவிடப்பட்ட நாதன் வீட்டு சமையற்கார மாமி அவரைத் தேற்றுகிறார். அவரது இரண்டாம் மனைவிக்கு பிறந்த பெண்ணின் திருமணம் நிச்சயமான தருணத்தில் பணமுடை.

போலீஸ் ஸ்டேஷனில் வையாபுரி தான் சேகரித்த ஸ்டேட்மெண்டுகளுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மந்திரியின் சிபாரிசை பெற்று, சிங்காரம் மேல் இருக்கும் கேஸை போலீஸ்காரை மனதில்லாமல் வாபஸ் வாங்க வைக்கிறார்.

வசுமதியும் பர்வதமும் அசோக்கிற்கு ஏற்பட்ட அவப்பெயரை பற்றி விவாதிக்கின்றனர். நாதன் தம்பதியினர் காலனி மக்களுடன் கலக்காமல் தம் பணப்பெருமையால் தனித்துப் போனதாலும், அச்சொக்குடன் வேறு பல பழைய மன வேறுபாடுகள் காரணமாகவும் ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக சாட்சி சொன்னது பற்றி பர்வதம் எடுத்துரைக்கிறாள். [கூடவே அசோக் ரொம்ப புத்திசாலி என்று வேறு கூறுகிறாள். வசுமதியோ இந்த அளவுக்கு புத்திசாலியாக பிள்ளை தனக்கு வேண்டாமென்றும், பர்வதத்தின் பிள்ளை அளவுக்கு புத்திசாலியாக இருந்தால் போதும் எனக் கூறி பவுண்டரிக்கு பந்தை glance செய்து விட்டு போகிறாள். அனாயாசமாக அதை சமாளித்துக் கொண்டு, பணம் கையில் இருந்தால் இவ்வளவு கஷ்டமா என பர்வதம் வியக்க தாங்கள் பணத்தை வைத்திருக்கவில்லை என்றும் பணம்தான் தங்களை வைத்திருக்கிறது என்றும் வசுமதி கூறுகிறாள். ஆனால் இதுவும் டேப் முழுமையாக இல்லாததால் இச்சுட்டியில் பார்க்கக் கிடைக்காது, நினைவிலிருந்து இங்கு எழுதியுள்ளேன்].

பணம் என்றால் நிஜமாகவே கஷ்டமா என சோவின் நண்பர் வியக்க, சோவும் அதை ஆமோதிக்கிறார். தேவைக்கதிகமான அபரிதமான பணத்தினால் தொல்லைகள்தான் அதிகம் எனவும் கூறுகிறார். பணத்தின் பின்னால் ஓடுபவரை தேனீயுடன் ஒப்பிடுகிறார். தேனி அவ்வளவு சிரமப்பட்டு தேனை சேகரிக்க, வேடன் அதை அனாயாசமாக பறித்துச் செல்கிறான். ஆனால் இரை எங்கும் தேடாது தன்னிடம் வரும் இரையை தேவைக்கேற்ப மட்டும் விழுங்கும் மலைப்பாம்புக்கு இம்மாதிரி பிரச்சினை இல்லை. பணக்காரனுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி பிரகலாதனிடம் அவன் க்ருவும் விவரமாகக் கூறுகிறார். பணக்காரனுக்கு விரோதிகளில் அரசன், உறவினர் ஆகியோரும் நிச்சயம் அடங்குவர் எனக்கூறுகிறார்.

தான் பிட்சை கேட்கப்போன இடத்தில் திருடன் எனத் தவறாக எண்ணப்பட்டு உதை வாங்குகிறார் பட்டினத்தார். அதுவும் தனக்கு வேண்டிய தண்டனைதான், ஏனெனில் பிட்சை தேடிப்போனது தன் தவறுதான் எனத் தெளிகிறார் அவர். ஆகவே பிட்சை கூடத் தேடிப்போகாது இருக்குமிடத்தில் கிடைத்தால் அதை மட்டும் உண்பது என அவர் தீர்மானிக்கிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/14/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 28, 29 & 30

பகுதி - 28 (11.03.2009):
கிருபாவுடன் அவன் வீட்டில் அவன் தந்தை, தாய் ஆகியோர் முதலில் திரையில் வருகின்றனர். வேம்பு சாஸ்திரிகளின் பெண் ஜயந்தி தனக்கு சரிப்படாது என கிருபா கூறிவிடுகிறான். யாரையேனும் மனதில் வைத்திருக்கிறானா என்ற கேள்விக்கு அப்படி ஏதும் இல்லை என மழுப்புகிறான். முதலில் தயங்கினாலும் கிருபாவுக்கும் மனது என ஒன்று உண்டு. தாங்களும் அவன் அபிப்பிராயத்தை கேட்டுத்தான் வேம்புவிடம் பெண் பார்க்க வரப்போவதாகக் கூறியிருக்க வேண்டும் என்பதை உணருகின்றனர். வேறு வழியின்றி சாம்பு சாஸ்திரிகள் வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் நேரில் விஷயத்தைக் கூறச் செல்கிறார்.

வேம்பு வீட்டில் சாம்பு விஷயத்தைச் சொன்னதும் அங்கும் டிஸ்கஷன் நடக்கிறது. ஜயந்தியே விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்கிறாள். அவள் அன்னை சுப்புலட்சுமியோ தனக்கு முதலிலிருந்தே இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை என்பதை நினைவுபடுத்தி தன் பெண்ணுக்கு வேறு நல்ல இடத்தில் வரன் பார்ப்பதாகவும், அப்படி செய்யாவிட்டால் தான் தூத்துக்குடி சுப்புலட்சுமி அல்ல எனவும் சூளுரைக்கிறாள். அவள் ரொம்பத்தான் பொறந்தாத்து பெருமை பீற்றிக் கொள்கிறாள் என வேம்பு அபிப்பிராயப்படுகிறார்.

அசோக் காலேஜிலிருந்து விலக்கப்பட்டது பற்றி நீலகண்டன், அவர் மனைவி பர்வதம் மற்றும் மகள் உமா விவாதிக்கின்றனர். நீலகண்டனுக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது. அசோக் இம்மாதிரியே இருந்தா யார் பெண் தருவார்கள் என நொடிக்கிறாள் பர்வதம். ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய பாம்பு கதையை உரைக்கிறாள் உமா. சாதுவின் வார்த்தையை கேட்டு அநியாயத்துக்கு சாத்வீகமாகப் போனதால் அப்பாம்பு கல்லடிப் படுகிறது. பின்னால் அந்த சாதுவே பாம்பிடம் தான் அதை கொத்த வேண்டாம் என்றுதான் சொன்னதாகவும் சீற வேண்டாம் எனக் கூறவில்லை என்றும் கூறுகிறார். அசோக்கும் சிறிது சீறியிருக்க வேண்டும் என பர்வதம் அபிப்பிராயப்படுகிறாள்.

அடுத்த விஷயமாக கிருபா ஜயந்தியை நிராகரித்த விஷயத்தை கையில் எடுக்கிறாள் உமா. பர்வதமும் தன் தரப்புக்கு பேச, இந்தப் பெண்களுக்கு மட்டும் எங்கேருந்துதான் இந்த வம்பெல்லாம் கிடைக்கிறதோ என நீலகண்டன் அதிசயிக்கிறார்.

நாதன் வீட்டில் அவர் டெலிபோனில் தன் மானேஜரிடம் சரியாக வேலை செய்யவில்லை எனச் சீறுகிறார். அவர் ஏன் கீதையில் பகவான் சொன்னதைப் போல பலனை எதிர்ப்பார்க்காது காரியம் ஆற்றக் கூடாது என அசோக் ஆலோசனை கூற நாதன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் சொல்வதுபோல செய்வதைவிட பேசாமல் தானும் காவியுடுத்து அவனுடன் அமர வேண்டியதுதான் எனக் கூறுகிறார்.

இப்போது சோவும் நண்பரும். பேசாமல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து காவியுடுக்க வேண்டியதுதானா என நண்பர் கேட்க, சோ அவர்கள் அப்படியில்லை என விளக்குகிறார். இல்லறத்தில் தீவிரமாக ஈடுபட்ட கிருஷ்ணர் தன்னை நித்ய பிரும்மச்சாரியாகவும், அப்போதுதான் பலகாரங்களை மூக்குபிடிக்க உண்ட துர்வாசர் தன்னை நித்ய உபவாசம் செய்பவராகவும் வர்ணித்துக் கொள்ளும் கதையை சோ கூறுகிறார். அதாவது காரியத்தின் பலன் மேல் யாருக்கும் அதிகாரம் இல்லை, கடமை ஆற்ற வேண்டும் அவ்வளவுதான்.

நீலகண்டன் வீட்டில் அசோக்கை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்ததாக உமா கூறுகிறாள். ரௌடி ஒருவன் கட்டை பஞ்சாயத்து செய்து ஒருவன் கையை வெட்டியதைத் தான் பார்த்ததாக அசோக் போலீசிடம் வாக்குமூலம் தந்திருப்பதாக அவள் கூறுகிறாள். இவனுக்கு எதற்கு அந்த வேலை என சலித்து கொள்ளும் நீலகண்டன், பரவாயில்லை, நாதனுக்கு வையாபுரியின் சப்போர்ட் இருப்பதால் அவர் அவனிடம் சொல்லி அசோக்கை காப்பாற்றலாம் என நீலகண்டன் கூற அந்த ரௌடியே வையாபுரியின் ஆள் சிங்காரம்தான் என்பதையும் உமா கூறுகிறாள். தன் தந்தை ஏதேனும் செய்து அசோக்கை காப்பாற்ற வேண்டும் என அவள் ஒத்தைக்காலில் நிற்க, அவள் தேவைக்கு அதிகமாகவே அசோக் விஷயத்தில் பரிவு காட்டுவதாகவும், அதெல்லாம் அசோக்கின் அன்னை வசுமதிக்கு பிடிக்காது என்றும் பர்வதம் தன் பெண்ணை எச்சரிக்கிறாள்.


பகுதி - 29 (12.03.2009):
மகாதேவ பாகவதர் வீட்டுக்கு போலீஸ்காரர் வந்து அவரது பேரன் ராமசுப்பு அவன் அறைத்தோழன் தூக்குமாட்டிக் கொண்டு இறந்தது சம்பந்தமான போலீஸ் விசாரணைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறிவிட்டு செல்கிறான்.

நீலகண்டன் வீட்டில் வேம்பு சாஸ்திரிகள் வந்து அடுத்த நாள் சூரிய கிரகணம் ஆதலால் கிரகணப் பீடை வராமலிருக்க அவர் தர்ப்பணம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். கிரகணம் என்பது வெறுமனே வான சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை நிகழ்வு. அதற்கெல்லாம் தர்ப்பணம் செய்வது என்பது மூட நம்பிக்கை என நீலகண்டன் கூறிவிடுகிறார்.

சோவின் நண்பர் அவரிடம் பீடை என்றால் என்ன பொருள் எனக் கேட்க, அவரும் நிதானமாக விளக்குகிறார். கிரகங்கள் எப்படி மனிதனின் வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறார். மன்நிலை பாதிக்கப்பட்டவர்களது செயல்பாடுகள் அமாவாசை பௌர்ணமி தினங்களில் தீவிரம் அடைவதையும் சுட்டிக் காட்டுகிறார். சூரிய கிரகணம் பற்றியும் பேசுகிறார்.

மீண்டும் நீலகண்டன் மற்றும் வேம்பு சாஸ்திரி சீனில் வருகின்றனர். ஆதிமனிதன் பல விஷாய்ங்களைக் கண்டு பயந்தான், ஆகவே பரிகாரம் என்றெல்லா அலைந்தான். தனக்கு அம்மாதிரி பயம் ஏதும் இல்லை. ஆனால் தன்னம்பிக்கை உண்டு என நீலகண்டன் விளக்குகிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலை பற்றி விசாரணை நடக்கிறது. ராமசுப்பு அந்தப் பையனின் தந்தை அவனை திட்டியதாகவும், அவனை செத்துப் போகும்படி கூறியதாகவும் கூற, இன்னொரு பையன் ராமசுப்புவின் பணத்தை அப்பையன் எடுத்ததாகவும், அதனால் ராமசுப்பு அவனை ரொம்பவுமே திட்டிவிட்டதாகவும் கூறுகிறான். போலீசார் ராமசுப்பு தினம் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என அவனிடம் கூறுகின்றனர்.

நாதனின் சமையற்காரியிடம் அவளை 30 ஆண்டுகளுக்கு முன்னால் தள்ளி வைத்த அவளது கணவர் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். அவள் பிடிகொடுக்காமல் பேசுகிறாள்.

இதற்கிடையில் சிங்காரம் வீட்டிற்கு வரும் அவன் கையாள் அவனைப் பற்றி போலீசில் புகர் வந்திருப்பதை கூறுகிறான்.

வேம்பு வீட்டில் அவரது மகள் ஜயந்தி கிருபா ஒரு பெண்ணைக் காதலிப்பதைக் கூற, வேம்புவும் சாம்பு வீட்டுக்கு வந்து அது பற்றிக் கூறுகிறார். சாம்பு திகைக்கிறார். வேம்பு அவரை சமாதானப்படுத்துகிறார். கிருபாவின் தங்கை அப்பக்கம் வந்து அவன் ஜட்ஜாத்து பெண் பிரியாவை விரும்புவதைக் கூறுகிறாள். வேம்புவும் சாம்புவும் இது பற்றிப் பேச ஜட்ஜாத்துக்கு செல்கின்றனர்.

மீண்டும் சோவும் நண்பரும். காதல் என்பது ரொம்ப அதிகமாகி விட்டது போலிருக்கிறதே என நண்பர் கூறுகிறார். ஆம் என சோவும் ஆமோதிக்கிறார். எட்டுவகை திருமணங்கள் பற்றிக் கூறும் சோ, அவற்றில் மிகச்சிறந்தது தாய் தந்தையர் சம்மதத்துடன் நடத்தப்படும் அரேஞ்ச்ட் கல்யாணமே என அபிப்பிராயப்படுகிறார்.


பகுதி - 30 (13.03.2009):
சிங்காரம் வையாபுரி வீட்டுக்கு வந்து தனக்கு நேரிட்ட பிரச்சினை பற்றிக் கூறுகிறான். அதுவும் நாதனின் மகன் அசோக்கே தனக்கு எதிராக சாட்சி சொல்ல வருகிறான் என்றும் எடுத்துரைக்கிறான்.

வையாபுரி அசோக் வீட்டுக்கு வந்து நாதனிடம் பேசுகிறான். நாதன் அசோக்கை கூப்பிட்டு விசாரிக்கிறார். ஒன்றும் பலனில்லை. அசோக் தனது செயல்பாட்டில் உறுதியாக நிற்கிறான்.

போலீஸ் வையாபுரி வீட்டுக்கு வந்து அவனைத் தேடமுயல, சர்ச் வாரண்ட் எடுத்துவருமாறு வையாபுரி போலீசிடம் கூறுகிறான்.

ஜட்ஜ் வீட்டில் வேம்பு ஜட்ஜிடம் கிருபா பிரியா காதல் பற்றி எடுத்துரைக்கிறார். ஜட்ஜ் ஒன்றும் பிடி கொடுத்து பேசாமல் அந்த இடத்தை விட்டு வீட்டினுள்ளே செல்கிறார்.

சோவிடம் அவர் நண்பர் ஜட்ஜ் ஸ்டேட்டஸ் பார்க்கிறாரா எனக் கேட்க, அவர் ஆமாம் என்கிறார். வைதிகர்களுக்கு கிருஹஸ்தர்கள் மரியாதை எல்லாம் தந்தாலும் கல்யாணம் என்று வரும்போது, பொருளாதார நிலையும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதையும் கூறுகிறார். ஆனானப்பட்ட கிருஷ்ணரே ருக்மிணியிடம் இது பற்றி பேசும்போது, அவளோ ராஜகுமாரி, ஆனால் தான் அவ்வளவு அந்தஸ்தில் இல்லை என்பதை கூறுவதையும் சோ குறிப்பிடுகிறார். வைதிகர்களை பல கிருகஸ்தர்கள் ஒரு எம்ப்ளாயீயாகவே பார்ப்பது துரதிர்ஷ்டவசமானதே, ஆனால் அதுதான் யதார்த்தம் என்றும் கூறுகிறார். சாம்பு சாஸ்திரிகளின் பிள்ளை என்னமோ நன்கு படித்தவனே. இருப்பினும் அந்தஸ்தில் குறைந்தவன். ஜட்ஜ் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/13/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 26 மற்றும் 27

பகுதி - 26 (09.03.2009):
தனது அடிதடி வேலையை முடித்துவிட்டு சிங்காரம் வையாபுரியிடம் திரும்பச் செல்கிறான். வையாபுரியும் அவனுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறான். இங்கே நாதன் வீட்டில் அவர் அசோக்கை இந்த சம்பவம் நடந்தது பற்றி அவன் பேசக்கூடாது என தடுக்கிறார். வையாபுரியிடம் அவர் சேரலாகாது என அசோக் ஆலோசனை கூற, அதெல்லாம் வேறு விஷயம் என நாதன் கூறுகிறார். சில விஷயங்களை தருமத்தின்படி செய்யலாம், பல காரியங்களை அடாவடியால்தான் சாதிக்க முடியும், அதற்கு வையாபுரி போன்றவர்கள் துணை தேவை என நாதன் கூறுகிறார். நாதன் அதர்மத்துக்குள் தர்மம் தேடுவதாக அசோக் கூறுகிறான்.

சோவிடம் அவர் நண்பர் கேட்கிறார், அதென்ன சார் தர்மத்தில் அதர்மம்னு குழப்பறேள் என்று. சோ கூறுகிறார், அசோக்கை பொருத்தவரை தர்மம் என்பது சட்டம், நியாயம், நீதி, மொராலிட்டி, righteous conduct ஆகியவற்றைக் குறிக்கும். நாதனைப் பொருத்தவரை வையாபுரி அவர் நண்பர்,அவருக்கு கெடுதல் செய்யலாகாது, அதிலேயே அவரது வியாபார தர்மமும் அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் கர்ணனும் அதே மாதிரி தர்ம சங்கடத்தில்தான் உள்ளான். துரியன் எவ்வளவு கொடியவனாக இருப்பினும் அவன் தனது நண்பன், எல்லோரும் தன்னை ஒதுக்கியபோது தன்னை நண்பனாக ஏற்று கொண்டவன். குந்தி தனது தாயாக இருப்பினும் தேரோட்டியின் மனைவியையே அவன் தாயாக காண்கிறான். ஆக எந்த இடத்திலும் தர்மமோ அதர்மமோ வெளிப்படையாகத் தெரியாது. என்ன செய்ய வேண்டுமென்றால், சான்றோர்கள் எதை தர்மம் எனக் கூறுகிறார்களோ அதன்படியே நடப்பதுதான் நல்லது. கூடவே ஸ்வதர்மம் பற்றியும் சோ கூறினார். அதை வைத்துப் பார்த்தால், கும்பகருணன் ராவணன் பக்கம் இருந்தது அவன் தருமம், வீடணன் எதிர்த்து நின்றதும் அவனைப் பொருத்தவரை சரியேதான்.

காலேஜில் அசோக்கை சக மாணவர்கள் கலாய்த்து அவனை வம்பில் மாட்டி விடுகின்றனர். பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவையே புத்தகங்கள், மற்றவை குப்பை எனக் கூறிய அசோக்கை நைச்சியமாகப் பேசி ஒரு பாடப் புத்தகத்தை எரிக்க வைக்கின்றனர். அதனால் கல்லூரி முதல்வர் அசோக்கை டிஸ்மிஸ் செய்கிறார். அசோக் அதை நாதனிடம் கூறுகிறான்.

பகுதி - 27 (10.03.2009):
அசோக்கின் காலேஜ் பிரின்சிபாலை நாதன் வந்து பார்க்கிறார். அசோக் செய்தது தவறுதான் என்றாலும் அவனைவிட பெரிய தவறுகள் செய்தவர்களையெல்லாம் மன்னித்துவிடும்போது இவனை மட்டும் காலேஜை விட்டு ஒரேயடியாக நீக்குவது கருணையில்லாத செயல் என அவர் சீற, பிரின்சிபாலோ அமைதியாக தான் அசோக்கைக் கருணையின் பேரிலேயே டிஸ்மிஸ் செய்ததாகக் கூறுகிறார். ஏனெனில் அசோக் தினமும் மற்ற மாணவர்களால் சீண்டப்படுகிறான். ஆனால் ஒரு முறைகூட அசோக் தன்னிடம் வந்து புகார் செய்யவில்லை என்கிறார் அவர். மேலும் கூறுகிறார், அசோக் ஒரு அசாதாரண மனிதன். இந்த காலேஜோ அல்லது வெறெந்த கல்லூரியோ அவனுக்கு ஒத்து வராது. அவன் வீட்டிலிருந்தே படிக்கலாம் எனக் கூறுகிறார்.

இப்போது சீனில் வருகின்றனர் சோவும் நண்பரும். அசோக் என்ன ஜடமா எனக் கேட்கிறார் நண்பர். அவன் ஸ்திதப் பிரக்ஞன் என்கிறார் சோ. அதாவது ஒருமித்து சிந்திப்பவன் என்கிறார். இது சம்பந்தமாக ஜடபரதர் கதையைக் கூறுகிறார்.

மீண்டும் பிரின்சிபால். வாராது வந்த மாணிக்கம் அசோக். அவன் படும்பாடு சகிக்காது மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனை டிஸ்மிஸ் செய்ததாக அவர் கூறுகிறார். நாதன் விடை பெற்று செல்கிறார். பின்னணியில் மெதுவான வேகத்தில் பாடல் ஒலிக்கிறது,

“நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ (நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோபட்ட - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ (நல்லதோர்)

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ (2)(நல்லதோர்)

நாதன் வீட்டுக்கு வந்து வசுமதியிடம் பேசுகிறார். அசோக் கல்லூரியில் பட்ட கஷ்டங்களை பற்றி குறிப்பிடும் அவர் அவற்றை விவரிக்க மறுக்கிறார், ஏனெனில் வசுமதியால் அதைத் தாங்க இயலாது என்பதால். மற்ற மாணவன் யாருக்கேனும் இம்மாதிரி தொந்தரவுகள் வந்திருந்தால் தற்கொலை வரை விஷயம் விபரீதமாகியிருக்கும் என்கிறார். நமக்கெல்லாம் வேகம் மட்டும்தான் இருக்கிறது, ஆனால் அசோக்குக்கோ விவேகம் இருக்கிறது என்கிறார் நாதன். இத்தனை இன்று பேசும் நாதன் தானே அடுத்த நாள் மாறி முழுக்க லௌகீக வாழ்க்கைக்கே திரும்பி விடுவார் என்பதை உணர்ந்தே அவர் பேசுகிறார். எது எப்படியானாலும் அசோக்குக்கு இனி காலேஜ் கிடையாது, வீட்டிலிருந்தே படிக்கட்டும் என கூறுகிறார் அவர். அவன் ஞானத்தைத் தேடுகிறான் என்றும் உணர்த்துகிறார்.

மீண்டும் சோவும் நண்பரும் வருகின்றனர். “அதென்ன சார், எல்லோரும் ஞானத்தைத்தான் தேட வேண்டுமா” என நண்பர் வினவ, அப்படியில்லை என மறுக்கிறார் சோ அவர்கள். கல்லூரி படிப்பு பற்றியும் அவர் பேசுகிறார். பூகோளம் படித்துவிட்டு சட்டக் கல்லூரியில் சேருகிறார்கள். சரித்திரம் படித்துவிட்டு வங்கி வேலைக்கு செல்கின்றனர். (“இப்ப நீ இஞ்சினீயரிங்குக்கு படிச்சுட்டு மொழிபெயர்ப்பு செய்யறது போலவா” என்று கேட்கிறான் முரளி மனோகர். அப்படியெல்லாம் கூறிவிட இயலாது, ஏனெனில் நான் தொழில் நுட்ப விஷயங்களை மொழிபெயர்க்கிறேன் என்பதே என் பதில்).

தற்காலக் கல்வி முறை பற்றி பாரதியார் கூறியதையும் நினைவுபடுத்துகிறார் சோ:
"கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்து மீனையும் கோளையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும் பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்தலும் அன்ன யாவும் உணர்ந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்'

நாட்டின் பெருமைகள் பற்றியெல்லாம் கல்வி போதிப்பதில்லை என்ற ஆதங்கமும் இங்கு வெளிப்படுகிறது. ஆங்கிலக் கல்வி வெறும் பேடிக் கல்வி. ஆனால் அசோக்குக்கு தேவைப்படுவது ஞானக் கல்வியே.

இந்த இடத்தில் நாவலிலிருந்து மாறியிருக்கிறார் சோ அவர்கள். அதில் அசோக் காலேஜை விட்டது அவனாகவே செய்த முடிவு, அதுவும் கதையின் இந்தக் கட்டத்தில் வராது பின்னால் வருகிறது. ஆனால் இந்த மாறுதலும் நல்லதாகவே படுகிறது. நாவலில் வெறுமனே தொடப்பட்டு செல்லும் பாத்திர குணாதிசயங்கள் இங்கு விரிவாகவே அலசப்படுகின்றன. ஒரு பின்னல் வலை இங்கு திறமையாகப் பின்னப்படுகிறது.

சீரியலுக்கு நடுநடுவில் வரும் சோவும் நண்பர்களும் பேசுவது சீரியலுக்கு சுவை ஊட்டுகிறது. எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/12/2009

டோண்டு பதில்கள் - 12.03.2009

டோண்டு பதில்கள் ஆரம்பித்து விளையாட்டு போல ஓராண்டு ஆகிவிட்டது. இன்றைய டோண்டு பதில்கள் பதிவுடன் முதல் ஆண்டு முடிவடைகிறது. நடுவில் ஒரே ஒரு வெள்ளியன்று (12.09.2008) இப்பதிவு கேள்விகள் ஏதும் வராததால் வெளியாகாமல் போயிற்று. இருப்பினும் சில எக்ஸ்ட்ரா பதிவுகளும் வந்ததில் இப்பதிவு இப்போது முடியும் ஆண்டின் 57-வது பதிவாக வந்துள்ளது. (52 வாரம் = ஒரு வருடம்). பதிவுலக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. இப்போது இப்பதிவுக்கு போகலாம். (இப்போதைக்கு கைவசம் இருக்கும் எல்லா கேள்விகளையும் தீர்த்து விட்டேன். அடுத்த ஆண்டுக்கு சீரோ பேலன்ஸில்தான் செல்கிறேன். சாதாரணமாக அதுதான் டீஃபால்ட் நிலை என்றாலும் கடந்த சில வாரங்களாக சிலர் ஒரேயடியாக நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டதில் அடுத்த வாரத்துக்கு பல கேள்விகளை கேரி ஓவர் செய்ய வேண்டியதாயிற்று). ஓக்கே, ஸ்டார்ட் மியூஜிக்.

அனானி (120 கேள்விகள் கேட்டவர். ஆனால் சில கேள்விகளை நான் கம்பைன் செய்ததால் 116 தான்):
91. ஒரு லிட்டர் பாலுக்கு 20 ரூபாய் கேட்பது நியாயம்தானே? (ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலையை ஒப்பிடுக)
பதில்: நியாயமே. ஆவின் பால் மினிமம் விலை லிட்டருக்கு 18 ரூபாய். அது சரி தண்ணீருடன் ஏன் ஒப்பிட வேண்டும்? ஏதேனும் உள்குத்து?

92. ரஜினியின் அரசியல் பிரவேசம் கலைஞருக்கு பின்னால் நடக்க வாய்ப்புள்ளதா? (அவரது ஜாதகம் வேறு சாதகமாய் உள்ளதாம்)
பதில்: நான் என்ன நினைக்கிறேன் என்றால் 1996-ல் அவரும் தமிழக காங்கிரசும் சேர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தேசீய கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவியிருக்கலாம். நரசிம்மராவின் சொதப்பலால் அது நடக்காமல் போயிற்று. மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டு சேர்ந்து திராவிட ஆட்சிதான் தமிழகத்தின் தலைவிதி என நிர்ணயம் செய்து விட்டது வேறு கதை. ரஜனியை பொருத்தவரை இப்போது நேரம் சரியில்லை. கலைஞருக்கு பின்னால்? வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

93. பாதாளச் சாக்கடை திட்டம் பகல் கொள்ளைதிட்டமாமே (சென்னையில் வீட்டு வரியின் சமமான பணம் (amount equal to house tax as maintenace charge for u/g mtce) அதற்காக கட்டுவது உண்மையா)?
பதில்: இல்லை, உண்மையில்லை. என் வீடுக்கான வரிக்கு 20%க்கும் குறைவாகத்தான் பாதாளச் சாக்கடைக் கட்டணம் உள்ளது.

94. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வருமா? (மீண்டும் திமுக பிளவு பட்டால்)
பதில்: அதற்கு முன்னால் காங்கிரஸ் பிளவுபடாமல் இருக்க வேண்டும் அல்லவா?

95. செஞ்சி,எல்ஜி -ஆப்பை புடுங்கிய குரங்குகளின் நிலையில் முன்னேற்றம் உண்டா?
பதில்: யார் அவர்கள் என்பதைக் கூறுங்கள் முதலில்.

96. சமீபத்தில் தமிழக அரசியலில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டியது யாரெல்லாம்?
பதில்: கலைஞர், ஜெயலலிதா, மருத்துவர் ஆகிய எல்லோருமேதான்.

97. பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் இன்றைய உண்மையான நிலை?
பதில்: வழக்கம்போலவே அவை இன்னமும் மைனாரிட்டியில் உள்ளன.

98. as on date: அரசியல்/அலுவலக/வாணிப உலகில் நீல மலைத் திருடன் யார், கொல்லிமலை கொள்ளைக்காரன் யார்?
பதில்: நான் அறிந்த நீலமலைத் திருடன் ரஞ்சன் மட்டுமே. அப்பெயர் கொண்ட படத்தில் வரும் வெள்ளைக் குதிரை நன்றாக ஓடுவதாக அறிகிறேன். மற்றப்படி கொல்லிமலைக் கொள்ளைக்காரன் பற்றி ஏதும் அறியேன். அப்படியிருக்க, தற்கால அரசியல்/அலுவலக/வாணிப உலகில் உள்ளவர்களில் யார் அவர்களுடன் கம்பேர் செய்யப்படவியலும் என்னும் கேள்வியிலிருந்து எஸ்ஸாகிறேன்.

99. பொருளாதாரத்தில் இந்தியா சீனாவை மிஞ்சுமா? இல்லை மக்கள் பெருக்கத்தில்?
பதில்: மக்கள் பெருக்கத்தில் மிஞ்சிவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது, ஏனெனில் சீனா மிகக்கடுமையாகவே குடும்பக் கட்டுப்பாட்டை அனுசரித்து வருகிறது. பொருளாதாரம் பற்றி எதுவும் இப்போது சொல்வதற்கில்லை.

100. பாரதியார் இப்போது இருந்தால் என்ன பாடுவார்?
பதில்: நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடியென் றாலது பெரிதாமோ? எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார் நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

101. கேரளா சட்ட மன்றம்-தமிழக சட்ட மன்றம் தற்போதைய சூழ்நிலையில் ஒப்பிடுக?
பதில்: கேள்விக்கு ஏதேனும் விசேஷ காரணம்? ஒன்று மட்டும் கூறலாம் என நினைக்கிறேன், அரசியல் எதிரியாக இருந்தாலும் கேரள அரசியலில் தனிப்பட்ட அளவில் சுமுகமாகவே பழகுவார்கள், நம்மூரைப் போன்று ஜன்ம விரோதிகளாக இல்லை.

102. விஜயன் -அச்சுதானந்தன் மோதல் சின்னத்திரை சீரியல்களையும் மிஞ்சுமா?
பதில்: கேரள மாநில அரசியல் பற்றி அதிகம் தெரியாது.

103. தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு சொன்னதில் இப்போது எதைச் சேர்க்கலாம்?
பதில்: அர்த்தமே இல்லாத கருத்து இது. இதற்கு விளக்கம் வேறு ஒரு கேடா?

104. முக்கிய தமிழக அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைபற்றி விமர்சனம் தனித்தனியாக ஒரு வரியில் சொல்ல முடியுமா?
பதில்: முக்கிய இரு திராவிடக் கட்சிகள்: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். பாமக: அன்புமணிக்கு மந்திரிப் பதவி யார் தந்தாலும் சரிதான் என்னும் நிலை. பாஜக: ஐயோ பாவம் அனாதை. காங்கிரஸ்: சவலைக் குழந்தை. தேதிமுக: ரகசியமாக திமுகாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். சரத்குமார் கட்சி: இருக்கிறார்களா என்ன?

105. உலகில் கம்யூனீசம்- இந்தியாவில் பொதுயுடமைதத்துவம் என்ன ஒற்றுமை-வேறுபாடு?
இந்தியாவும் உலகில்தானே இருக்கிறது? எல்லா இடங்களிலும் கம்யூனிசம் என்பது மனித இயற்கைக்கு புறம்பான தத்துவம்தான்.

106. மீண்டும் தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியின் கைப்பாவை ஆகிவிடுமா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது.

107. இந்த வருடம் தண்ணிர்ப் பிரச்சனை தமிழகத்தை ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கே?
பதில்: தண்ணீர் பிரச்சினை என்பது எப்போதுமே நம்மீது கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி. எப்போது வேண்டுமானாலும் நம்மீது கயிறு அவிழ்ந்து விழலாம்.

108. தமிழக மாணவர்கள் புத்திசாலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனரா? (வேலை நிறுத்தம் நீண்டு விடாமல் செய்ததின் அடிப்படையில்)
பதில்: எந்த நிகழ்ச்சியை சுட்டுகிறீர்கள் நீங்கள்? தூங்கியது போதும் மாணவர்களே, விழிமின் எழுமின் என்று எத்தனை முறை கூறினாலும் போதாது.

109. மக்கள் தொலை காட்சி பார்ப்பீர்களா? இலங்கையில் அதற்கு தடையாமே?
பதில்: இல்லை, பார்ப்பதில்லை.

110. குடிகாரன் பேச்சு-அரசியல் வாதியின் பேச்சு ஒப்பிடுக?
பதில்: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்லற அதே நேரத்துல, நிறைய அரசியல்வாதிங்க பேச்சைக் கேட்டா விடியாமலேயே போயிடும் போலிருக்கே.

111. கள்ள ஓட்டை தடுக்க என்னவெல்லாம் கமிஷன் கெடுபிடி செய்தாலும் திருமங்கல வீரர்கள் கெலித்துவிடுவது எப்படி சாத்யமாகிறது?
பதில்: மக்கள் ரெண்டுங்கெட்டானாக இருப்பதாலேயே நிகழ்கிறது. ஒன்று ஒரேயடியாக நேர்மையுடன் இருக்க வேண்டும். இல்லை அது இயலாது என்றால், முழுக்கவே நேர்மையைத் தொலைக்க வேண்டும். அதாவது ஓட்டளிக்க பணம் எல்லாம் வாங்கிக் கொள் ஆனால் ஓட்டு மட்டும் நல்லவனாகப் பார்த்துப் போடு. அங்கு போய் செய்து கொடுத்த சத்தியம் என்றெல்லாம் குழம்பாதே. இரண்டு மூன்று தேர்தல்களில் இம்மாதிரி நடந்தாலே போதும். வேட்பாளர்கள் திருந்தி விடுவார்கள்.

112. 2010ல் பொருளாதார சரிவு சரி ஆகிவிடும் என்பதை?
பதில்: நம்பிக்கையாவது வைப்போமே, காசா பணமா?

113. பதவி ஆசை இல்லாத ஒருவரின் பேர்? (வாழும் மனிதர்களில்)
பதில்: யாரும் என் கண்களில் படவில்லையே.

114. அரசியல் அம்மா-ஆன்மீகத்தில் அம்மா- யோகக்(அன்பை பரவலாக்குவதில்) கலையில் அம்மா- இதில் யார் சூப்பர்?
பதில்: அரசியல் அம்மாவை அறிவேன். மீதி இருவர் யார்?

115. அரசியல்/ஆன்மீகம்/சாதிக் கட்சி மாநாடு இவற்றில் கட் அவுட் கலாச்சாரம் போய் ப்ளக்ஸ் பேனர் கலாசாரம் -அடுத்து வருவது?
பதில்: தொழில் நுட்பரீதியாக எலக்ட்ரானிக் பலகை என தெரிவிக்கிறார், விளம்பரத் துறையில் இருக்கும் நண்பர் லக்கிலுக்.

116. விதி வலியது விதியை மதியால் வெல்லலாம். உங்கள் ஓட்டு யாருக்கு? என்ன காரணம்? சான்றுகள் உண்டா? உங்களின் அனுபவம்?
பதில்: இதற்கு நான் இப்போது தனியாக பதிலளிப்பதை விட ஏற்கனவே எங்கே பிராமணன் சீரியல் பகுதி - 15-ல் எழுதியதையே தருகிறேன்.
“அடுத்த சீனில் வசுமதி வீட்டுக்கு வரும் ஒரு பைராகி பிட்சை கேட்க, வசுமதி அவரை பிட்சை போட மாட்டேன் எனக்கூறி விரட்டுகிறார். சமையற்கார மாமி சமயோசிதமாக பேசி, பிட்சை இடுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்த வண்ணம் பார்த்த பாகவதர் வசுமதியிடம் நாதன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரது கொள்ளுத்தாத்தா காலத்தில் இம்மாதிரி அவாத்து மாமி பெண் துறவிக்கு பிட்சையிட மறுக்க, இனி அக்குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக போவார்கள், அவ்வாறு போகிறவருக்கு என்னவோ புண்ணியம்தான், ஆனால் மற்றவருக்கு பிரிவுத் துயரமே என அருள்வாக்கு கூறி அத்துறவி செல்கிறார். இதை கேட்டு திகைப்படந்த வசுமதி நாதனிடம் பிறகு அது பற்றி கேட்க, அவரும் சில உதாரணங்களைக் கூறி அதை ஊர்ஜிதம் செய்கிறார்.

மீண்டும் சோவும் நண்பரும். எல்லாமே விதிப்படித்தான் என்றால் ஏன் முயற்சி செய்து நேரத்தை வீணாக்க வேண்டும் என நண்பர் கேட்க, சோ அது பற்றி நீண்ட விளக்கமே அளிக்கிறார். மழை வருவது விதி. அது வந்தால்தான் விளைச்சல் இருக்கும். ஆனால் அது மட்டுமே போதாது. மற்ற முயற்சிகளும் வேண்டும். இல்லாவிட்டால், மழை வந்தும் என்ன பலன்? அதே சமயம் எல்லா முயற்சிகளும் செய்து கடைசியில் எதிர்ப்பாராத காரணங்களால் கைகூடாமல் போவதும் உண்டு. அதுதான் விதி. ஆக, முயற்சி எப்போதுமே தேவைதான். அல்லாவை நம்பு, அதே சமயம் ஒட்டகத்தையும் நன்றாக கட்டிப்போடு என்னும் பொருளில் இசுலாமிய நண்பர்களிடையே ஒரு சொலவடை உண்டு. அதுவும் இதைத்தான் வலியுறுத்துகிறது. சோவுக்கு தயாரிப்பாளராக இந்த நண்பர் வரவேண்டும் என்பது விதி, ஆனால் அவரையும் அவ்வப்போது பதில்கள் மூலம் சமாளிப்பது சோவின் முயற்சிகள்தானே.

யாதவர்கள் அழிந்தனர். கிருஷ்ணர் யாதவப் பெண்மணிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுமாறு அருச்சுனனை பணிக்க, அவனும் அவ்வாறே செய்கிறான். அப்போது அவனை தாக்கிய கொள்ளைக்கூட்டத்தாரை எதிர்த்து அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவனது காண்டீப வில்லும் பயன்படவில்லை. அப்போது திகைப்படைந்த அருச்சுனனுக்கு வியாசர் விளக்குகிறார், அருச்சுனனின் விதி முடிந்தது என்று. ஆக, அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் விதி பற்றிய விளக்கம் புரிந்து கொள்ள முடியும்.

கடைசியா முரளி மனோகர் ஒன்று கூற ஆசைப்படுகிறான். “அதானே, பாருங்களேன். பெரிசு சீரியலை துறந்தாலும் சீரியல் பெரிசை விடவில்லை. ஆகவே இப்பதிவு மற்ற பிளாக்கர்களையும் விடுவதாக இல்லைதானே. ஹூம், விதியின் விளையாட்டே தனி”.


வஜ்ரா:
1. எஸ்.வீ.சேகர் பிராமணர்களுக்கு 7% இடஒதுக்கீடு வாங்குவேன் என்கிறாரே? இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் பிராமணர்களுக்கு 7% இடஒதுக்கீடு கிடைத்தால் சந்தோஷம் அடைவீர்களா?
பதில்: இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? வேறு வகைகளில் இட ஒதுக்கீடு இல்லாத, ஆனால் பொருளாதார நிலையில் பின்னிலையில் உள்ளவர்களுக்கு என மொத்தமாக இட ஒதுக்கீடு வேண்டுமானால் தரலாம், அவர்களில் பார்ப்பன ஏழைகளும் வரலாம். அதற்காக பார்ப்பனருக்கு மட்டும் என இடஒதுக்கீடு கேட்பது சரியாகாது. எது எப்படி ஆனாலும் எல்லா ஒட்டுமொத்த இடஒதுக்கீடுகளுமே சேர்ந்து 50% தாண்டலாகாது.


எம்.கண்ணன்:
1. தினகரன் கூட தலையங்கம் வெளியிட ஆரம்பித்துவிட்டதே? (2ஆம் பக்கம்)எழுதுவது யார்? கலாநிதியா? தயாநிதியா? அவர்களுக்கு இந்த அளவு தமிழில் எழுதவருமா?
பதில்: ஏன் அவர்கள் எழுத வேண்டும்? இருவருமே மேலாண்மையில் தேர்ந்தவர்கள்தானே? இதனை இவனால் முடிக்கும் என நாடி அதனை அவன்கண் விடுபவர்கள் அல்லவா?

2. சன் டிவி, சன் எஃப்.எம், சன் பிக்சர்ஸ் போன்றவற்றின் வெற்றிக்குக் காரணம் கலாநிதியா இல்லை அவரது ஆப்த நண்பர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் பிஸினஸ் உத்திகளா? (என்ன தான் அரசியல்/ஆட்சி பலம் உபயோகித்தாலும்)
பதில்: இட ஒதுக்கீடு, மனவாடு என்றெல்லாம் பார்க்காது நல்ல ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை பொறுப்பான பதவிகளில் அமர்த்திய கலாநிதியின் மேலாண்மை உத்தியே காரணம்.

3. ஸ்டாலின் மனைவி துர்கா ஏன் சாந்தா என பெயர் மாற்றிக்கொண்டுள்ளார்?
பதில்: அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை தெரிந்து கொள்ள ஏன் இந்தக் கொலைவெறி?

4. அழகிரி மதுரைக்கு எம்.பி ஆனால் பாராளுமன்றத்தில் பேசுவாரா? இந்தி தெரியுமா?
பதில்: ஹிந்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்களாம்.

5. மலைச்சாமி, மைத்ரேயன் போன்ற அதிமுக ராஜ்யசபை எம்.பி.க்கள் இதுவரை தமிழ்நாட்டுக்காக என்ன செய்துள்ளனர்?
பதில்: மலைச்சாமி அதிகாரியாக இருந்தபோது ந்ன்கு பணி செய்துள்ளார். அரசியலில் வந்த பிறகு அவ்வளவாகப் போதாது. மைத்திரேயன் பற்றி ஒன்றுமே தெரியாது.

6. ஹிண்டு என்.ராம் பற்றியும் அவர் ஹிண்டுவை நடத்தும் விதம் பற்றியும் உங்கள் கருத்து என்ன? (இட்லிவடை பதிவைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_1577.html)

பதில்: இது பற்றி எனது கருத்தை அறிய நான் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதிய தந்தைக்கு பெருமை சேர்த்த மகள் என்னும் பதிவைப் பின்னூட்டங்களுடன் பார்க்கவும்.

7. ஜனதா நகர் காலனி என சோ வின் சீரியல் ஒன்று (தமிழ் தூர்தர்ஷன்?) பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானதே? பார்த்ததுண்டா? அவரின் தம்பியும் அதில் நடித்திருப்பார்.
பதில்: கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. 1981 முதல் 1995 வரை தில்லியில் தமிழ்ச்சேனல் ஏதும் பார்க்க இயலவில்லை. அந்த 14 ஆண்டுகால வனவாசத்தில் பல நல்ல தொடர்களை கோட்டை விட்டிருக்கிறேன். அவற்றில் இதுவும் ஒன்று.

8. தமிழில் சிறந்த கொக்கோகக் கதைகள் யாவை? (சரோஜாதேவியை குறிப்பிடாதீரும்). அவை இப்போது புத்தகமாக கிடைக்கிறதா? தமிழ்வாணன் பதிப்பகம் சில (பல?) புத்தகங்கள் வெளியிட்டுள்ளனரே? படித்ததுண்டா?
பதில்: இதென்ன போங்கு, சரோஜாதேவி கதைகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா? மற்றப்படி தமிழில் போர்னோ சம்பந்தமாக நான் இட்ட சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் பதிவையும் பாருங்களேன்.

9. ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வார தொடர் (உதா. பா.ராகவன்) எழுதுபவர்களுக்கு ஒரு வாரக் கட்டுரைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ? அதை ஒழுங்காக கொடுப்பார்களா ? (சாரு நிவேதிதா - யாரும் சரியாக பணம் கொடுப்பதில்லை என எழுதியுள்ளாரே?)
பதில்: இந்த விஷயத்தில் குமுதத்தைவிட விகடன் அதிக தாராளம் எனக் கேள்விப்படுகிறேன்.

10. இந்தக் கோடை மிக கடுமையாக இருக்கும் என சுற்றுப்புற சூழ்நிலை வல்லுனர்கள் சொல்கிறார்களே ? எப்படி (மின்வெட்டையும் சேர்த்து) சமாளிக்கப்போகிறீர்கள்? என்ன பிளான்?
பதில்: ஆச்சி மோர், ஆவின் லஸ்ஸி, இளநீர் ஆகியவையே துணை. வீட்டிலிருந்து கொண்டே கணினியில் வேலை செய்வதால் வெய்யிலில் அலைவதைத் தவிர்க்க இயலும். என் வீட்டைச் சுற்றி மரங்கள் இருப்பதால் அந்தளவுக்கு கதிரவனின் கொடுமைகள் குறையும்தானே.


அனானி (10.03.2009 காலை 06.32-க்கு கேட்டவர்):
1. ஜெயலலிதாவின் திடீர் இலங்கை கரிசனம் அவரை கரை சேர்க்குமா? ஒரேடியாய் கவிழ்க்குமா?
பதில்: ஜெயலலிதா சரியான அரசியல்வாதி. அவரது இந்த நிலையும் அவரது அரசியல் வியூகமே.

2. இடியாப்பச் சிக்கலில் தேர்தல் களத்தில் தற்சமயம் யார்?
பதில்: எனக்குத் தெரிந்து கருணாநிதி மற்றும் மருத்துவர்.

3. சோவின் நிலை தர்ம சங்கடமா?
பதில்: அவருக்கென்ன, மயிரே போச்சு என விடக்கூடியவரே.

4. அவரது பாஜகாவும் இலங்கை பிரச்சனையில் "டகால்டி" வேலை காட்டுதே?
பதில்: பாஜக மட்டும் வானத்திலிருந்தா குதித்து விட்டது? அதுவும் ஓர் அரசியல் கட்சிதானெ.

5. ஒருவேளை கூட்டணி பலம், விலைவாசி உயர்வு, கலைஞரின் உடல் நலக்குறைவு ஆகியவற்றால் ஜெ வெற்றிபெற்றுவிட்டால், காங்கிரஸ் கலைஞரை கைகழுவுமா?
பதில்: சமீபத்தில் 1962-ல் வெளிவந்த போலீஸ்காரன் மகள் படத்தில் வந்த ‘கண்ணிலே நீர் எதற்கு’ என்னும் பாடலின் மெட்டில் பாடவும். கூட்டணி என்பதெதற்கு? (சீர்காழி கோவிந்தராஜன்) தருணத்தில் காலை வாருவதற்கு (எஸ். ஜானகி)

6. மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு இப்படி அநியாயமாய் அதன் உழியர்களின் வருமானத்தை கூட்டிகொண்டே போவதை பார்த்தால்?
பதில்: இந்த இடத்தில் என் நண்பர் அரோரா அவ்ர்கள் நினைவுக்கு வருகிறார். அவர் சென்னைக்கு டூர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் பஸ்ஸில் அவர் பர்ஸை ஜேப்படி செய்துவிட்டார்கள். அவர் குய்யோ முறையோ என ஊரைக் கூட்டி தன் பர்ஸில் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய்கள் வரை வைத்திருந்ததாகக் கூறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார், நானும் அவர் ஹிந்தியில் கூறியதை தமிழில் மொழிபெயர்த்து கூற பஸ்ஸில் ஒரே கலாட்டா.

பஸ்ஸிலிருந்து இறங்கி அவர் தில்லி திரும்பச் செல்வதற்காக சென்ட்ரல் சென்றார். நானும் அவர் கூடவே சென்று போலீஸ் புகார் கொடுக்கச் சொன்னதற்கு, அவர் சிரித்துக் கொண்டே, பர்ஸில் ரூபாய் ஒன்றும் இல்லை என்றும் சில பில்கள் மட்டும் இருந்ததாகவும் கூறி, பணம் தன் உள்பையில் பத்திரமாக இருந்ததாகக் கூற, எனக்கு ஒரே திகைப்பு. ஏன் அவ்வாறு பஸ்ஸில் கத்தினார் என்று கேட்டப்போது ஜேப்படி செய்பவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டியிருக்கும், சக ஜேப்படித் திருடர்களுக்கும் பங்கு தர வேண்டியிருக்கும் என்றும், அவர் பர்ஸை கொள்ளையடித்த அந்த அப்பன் பெயர் தெரியாத பயல் பத்தாயிரம் ரூபாய்க்கேற்ப போலீஸ் மாமூலைக் கொடுத்து சாகட்டும் என்று கூறிவிட்டு ரயிலேறினார்.
இது ஏன் இப்போது நினைவுக்கு வர வேண்டும் என்பதை ஊகிப்பவர்கள் மேலே கேட்ட கேள்வியின் பதிலையும் அறிவார்கள்.

7. அரிசி விலை கிலோவுக்கு ரூ. 50 ஐ தாண்டுமாமே?
பதில்: ஏற்கனவேயே இந்த விலை சில இடங்களில் வந்து விட்டதாக அறிகிறேன்.

8. குறள் டீவி எப்படி?
பதில்: இக்கேள்விக்கு பதில் கூறவே கூகளிட்டு பார்த்தேன். நீங்களும் பாருங்களேன், டி.ராஜேந்தர் செய்திகளை அளிக்கும் காட்சியை.

9. அடுத்த தொலைதொடர்பு அமைச்சர் அழகிரியா?
பதில்: தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக ஏன் வரக்கூடாது?

10. கனிமொழி?
பதில்: சங்கமம்?

வி. குமார்:
1) உங்களிடம் வாரா வாரம் கேள்வி கேட்கும் வாசகர்கள் எதற்காக கேள்வி கேட்கிறார்கள் என ஆய்ந்ததுண்டா? உங்கள் பதில்கள் சுவாரசியமானதாகவோ, இல்லை அறிவார்த்தமானதாகவோ, புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் விதமாகவோ இல்லாத போது - மாங்கு மாங்கென்று எதற்கு கேள்விகள் கேட்கிறார்கள்?
பதில்: (டி. ராஜேந்தர் குரலில்) நீங்களும்தான் கேட்டீர்கள் இக்கேள்வி, உங்களுக்கு அது ஏன் என்பது தெரியும்தானே என்பது எனது பதில் கேள்வி. அதே போல மற்றவருக்கும் அவரவர் காரணம் ஏன் இருக்கக்கூடாது என்பது எனது மறு கேள்வி. இன்னும் புரியவில்லையா என்பது கடைசி சிறு கேள்வி.

2) யார் இந்த கேள்வி கேட்கும் நபர்கள் / அனானிகள்? உங்களிடம் கேள்விகள் கேட்பதால் அவர்களுக்கு என்ன பயன்?
பதில்: உங்களுக்கே ஏதோ பலன் இருப்பதால்தானே கேட்டீர்கள்?

சேதுராமன்:
1. வழக்கறிஞர்களுக்கு ஒரு சங்கம் போதாதா? அதில் பிரிவு தேவையா - தி.மு.க/அ.தி.மு.க என்று?
பதில்: தேவை இல்லைதான். சங்கமே தேவையில்லை. அவர்கள் ஸ்டேட்டஸுக்கு பார் கவுன்சிலே போதும்தான். ஆனால் யார் கேட்கிறார்கள்?

2. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைக்கு இந்த வக்கீல்கள் கொடுத்த மரியாதை சரிதானா?
பதில்: சரியில்லைதான். ஆனால் இம்மாதிரி நடந்து கொள்வதால் அவர்களே மரியாதைக்குரியவர்கள் இல்லாமல் போனதுதான் நடக்கிறது.

3. உச்ச நீதி மன்றம் சொல்லிய பிறகும் இவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது சரியா?
பதில்: ரிங் லீடர்களை பிடித்து வழக்கு போட்டு கடைசியில் குற்றம் ஸ்தாபிதம் ஆனால் சன்னதைப் பிடுங்குவதுதான் சரியாக இருக்கும்.

4. எல்லா கட்சி தலைவர்களும், போர் நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே, யாராவது புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றார்களா? அது மட்டும் நடந்தால் போரே இருக்காதே!
பதில்: பெரிய இடியாப்பச் சிக்கலாகி விட்டது. அவரவர் தத்தம் நிலையில் கெட்டியாக உட்கார்ந்து விட்டனர். தீர்வு கஷ்டம்தான்.

5. தமிழ் நாட்டில் பா.ஜ.க. தேறுமா? அல்லது அதோகதிதானா?
பதில்: தேறுவதற்கு ரொம்பவுமே மெனக்கெட வேண்டும். அது ஆரம்பமாகும் அறிகுறிகள் எதுவும் இப்போதைக்கு காணவில்லையே.


கமலக்கண்ணன்:
1. கடைசியில் காரோட்டி கண்ணப்பனும் கைவிரித்துவிட்டாரே, கன்னித்தமிழ் காவலராம் வைகோவின் அரசியல் எதிர்காலம் இனி? மதிமுக அதிமுகவில் இணையுமா?
பதில்: எந்த கண்ணப்பனை குறிப்பிடுகிறீர்கள்? மிஸ்டர் சுகன்யா? (பின்னால் சேர்த்ததது: சாரி, சாரி. நீங்கள் சொல்லற கண்ணப்பன் மிஸ்டர் சுகன்யா இல்லைதான். கலைஞரைப் போய் ஆஸ்பத்திரியில் மனிதாபிமான அடிப்படையில் பார்த்த கண்ணப்பன் வேறு அல்லவா. வைக்கோவுக்கு காலம் கைகொடுக்கவில்லை, நான் சொல்வது கோவி. கண்ணனை இல்லை.

2. பாமக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால்?
பதில்: ஆம், இதில் ஒருக்காலும் ஐயமே இருக்கலாகாது.

3. மயிலை சேகர் ஏன் (அம்மா) (அதிமுகா)வால் ஒரங்கட்டப்படுகிறார்?
பதில்: மகாபாரதத்தில் விதுர நீதி, பீஷ்ம நீதி என்று பல நீதிகள் உண்டு. அவை அரசன் நல்லது செய்து உன்னதம் அடைய வேண்டும் எனக் கூறும்போது. அவற்றுக்கெல்லாம் நேர்மாறான இன்னொரு நீதியும் உண்டு. அதுதான் கணிகர் நீதி. அதாவது அரசன் யாரையும் நம்பக்கூடாது. தன்னிடம் வேலை செய்பவர்கள் எக்காலத்திலும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க விடலாகாது. யாரையுமே தான் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை ஊகிக்க விடக்கூடாது. வேண்டாதவர்களை முழுமையாகவே அழிக்க வேண்டும் என்ற ரேஞ்சில் இந்த நீதி செல்கிறது. ஜெயலலிதாவும் அதையே செய்ய முயற்சிக்கிரார். இப்போது சேகர்தான் எதிர்வினையாற்ற வேண்டும். அவருக்கு இருக்கும் நடிப்புத் திறமைக்கு அவர் அளவிலேயே அவர் ராஜாவாக இருக்கலாம். ஜெயலலிதா போன்ற அபாயகரமான அரசியல் நண்பர்கள் அவருக்குத் தேவையில்லை. அப்படியே அரசியல் தேவை என்றாலும் சோ அவர்கள் மாதிரி விலகி நிற்பதே அவருக்கு மரியாதை தரும். சேகர் சம்பந்தமாக நான் இட்ட பதிவு பலே எஸ்.வி. சேகர் இதோ.

4. பாஜகவின் எதிர்க்கட்சி அந்தஸ்து தொடருமா?இல்லை சீட் குறையுமா?
பதில்: எனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று நான் எங்குமே கூறவில்லையே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது