2/17/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 34 & 35)

எபிசோட் - 34 (15.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ஏற்கனவே எடுத்த முடிவுக்கேற்ப நாதனும் வசுமதியும் கோவிலில் அன்னதானம் செய்வதற்காக வருகின்றனர். சாப்பாடு பொட்டலங்களாக வினியோகப்படுகிறது. எந்த பிள்ளை வீட்டுக்கு திரும்ப வேண்டுமென அன்னதானம் செய்கிறார்களோ அந்த அசோக் அதே கோவிலில் ஒரு சன்னிதி எதிரில் நின்று தியானம் செய்வது போல பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். இவ்வாறு அவன் விட்டேற்றியாக இருப்பது குறித்து நாதன் கோபப்படுகிறார்.

வசுமதியை தேடிக்கொண்டு அவளது லேடீஸ் கிளப் தோழி மைதிலி அங்கு வருகிறாள். அவள் உள்ளே வருவதை முதலில் பார்க்கும் சிங்காரம் “குசும்பு வருது பாரு” என கிண்டல் செய்கிறான். அன்னதானம் செய்வது நாதனின் ஸ்டேட்டசுக்கு ஏற்றதில்லை என மைதிலி கூறுகிறாள். அன்னதானம் ஒசத்தியான செயல் என நாதன் வாது செய்தாலும் அதை அரைமனதாகத்தான் செய்கிறார். அவருக்கும் மைதிலி சொல்வதுடன் சிறிது ஒப்புதல் இருப்பது போலத்தான் காட்டப்படுகிறது.

அசோக் தியானம் முடிந்து தன் பெற்றோரை பார்க்கிறான். அவர்கள் அன்னதானம் செய்வதை கண்டு சந்தோஷிக்கிறான். “பேஷ் நல்லா பன்ணுங்கோ, புண்ணியம் கிடைக்கும்” என்று கூறிவிட்டு விடை பெறுகிறான். அவன் அவ்வாறு நடந்து கொள்வதற்கும் நாதன் கோபப்படுகிறார்.

அங்கு வரும் ஒரு போட்டோகிராஃபர் அன்னதானத்தை ஃபோட்டோ எடுக்க, இதை லேடீஸ் கிளப்காரர்கள் பார்த்தால் மானம் போகும் என்னும் உணர்வுடன் வசுமதி நாதனை அழைத்து கொண்டு கிளம்புகிறாள்.

வேத பாடசாலையில் அசோக் மாணவர்களுக்கு வடமொழி கற்றுத் தர ஆசைப்படுவதாக முதல்வரிடம் கூற, அவரோ தன்னிடம் இதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே இருப்பதாலும், அவர்களுக்கே சம்பளம் தருவது கடினமாக இருக்க அசோக்கை எவ்வாறு ஏர்று கொள்வது என்ன மறுக்கிறார். அசோக் டான் சம்பளமின்றி வேலை செய்வதாகக் கூற, அவன் ஜீவனத்துக்கு என்ன வழி என கேட்கிறார். அப்போதே தான் பிட்சை எடுத்துத்தான் உண்பதாகவும், கடவுள் புண்ணியத்தில் உணவுக்கு குறையில்லை என்றும் கூறுகிறான். இரண்டு செட் வேட்டி, துண்டு இருந்தால் போதும் என்றும், உறைவிடத்துக்கு சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் தங்குவதாகவும் கூறிவிடுகிறான்.

இப்படி போதும் என்னும் மனத்துடன் இருப்பது சாத்தியமா என சோவின் நண்பர் கேட்க, ஞானிகளுக்கு அது சாத்தியமே என சோ கூறுகிறார். அசோக் ஞானப்பாதையில் செல்கிறான் என்றும் அவர் கூறுகிறார்.

அசோக்கிடம் அவன் ஏதாவது சான்றிதழ்கள் வைத்திருக்கிறானா என முதல்வர் கேட்க, ஒன்றும் இல்லை என அவன் பதிலிறுக்கிறான். தன்வசம் உள்ள பண்டிட்டை வைத்து அவனை பரிசோதிக்கப் போவதாக அவர் கூற, அசோக்கும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான். பண்டிட் முதலில் அன்னத்தை பற்றி ஒரு ஸ்லோகம் கூறி பொருள் கேட்க, விஸ்தாரமான பதிலைத் தருகிறான்.

அன்னம்னா சாப்பாடுதானே அதை என்ன மந்திரம் போல கூறுகிறார்களே என நண்பர் கேட்கிறார். அன்னத்தின் பெருமைகளை சோ விலாவாரியாக பட்டியலிடுகிறார். அட்சயப் பாத்திரத்தை பெற்ற ஆபுத்திரனின் கதையையும் கூறுகிறார். அதே அட்சய பாத்திரம் அமுதசுரபி என்னும் பெயருடன் மணிமேகலை வசம் வருவதையும் விளக்குகிறார்.

பண்டிட் கேட்கும் கேள்விகளுக்கு அசோக் அசராது பதிலளிக்க, அவரே பிரமித்து போகிறார். அந்த நேர்காணலை பல மாணவர்கள் கவனிக்கின்றனர். பிறகு முதல்வரிடம் வரும் பண்டிட் இத்தனை இளைய வயதில் இவ்வளவு ஞானத்தை தான் பார்க்கவில்லை என பிரமிப்புடன் கூறுகிறார். அவனை உதவி டியூட்டராக நியமிக்க தான் எண்ணியிருப்பதை முதல்வர் கூற, அது அந்த பாடசாலையின் பாக்கியம் என பண்டிட் கூறுகிறார். அசோக் சம்பளம் வேண்டாம் என கூறியதை அவர் சொல்ல, அது நிர்வாகம் செய்த புண்ணியம் என பண்டிட் அதே தொனியில் கூறுகிறார்.

வசுமதியுடன் வரும் மைதிலி நாதனின் புதுவீடு பிரமாதமாக இருப்பதாக கூறுகிறாள். அசோக்கை வீட்டுக்கு வரவழைக்க தான் உபாயம் கூறுவதாக அவள் கூற, வசுமதி அதை ஆவலுடன் கேட்கத் தயாராகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 35 (16.02.1010) சுட்டி - 1 & சுட்டி - 2
(சுட்டி - 1 இன்னும் தயாராகவில்லை. இசை தமிழ் வழ்க்கம் போல தாமதம் செய்கிறது)
மைதிலி அப்பக்கம் வந்த சமையற்கார மாமியை அப்பால் அனுப்புகிறாள். பிறகு பேச ஆரம்பிக்கிறாள். நான் ஊகித்ததுதான். அதாவது சாம்பு சாஸ்திரிகளை மிரட்டி ஊரை விட்டு துரத்தினால் அசோக் தானாகவே வீடு வந்து சேருவான் என அவள் கணிக்கிறாள். (ஏற்கனவே பாகவதரிடம் செய்த உத்தி இங்குமா என நினைக்க, சிலருக்கு என்ன பட்டாலும் புத்தி வராது என்னும் எனது எண்ணம் வலுப்படுகிறது).

இந்த பெண்மணி சகுனி போல உபதேசம் செய்கிறாளே என நண்பர் கேட்க, சகுனி முதலில் துரியனுக்கு பாண்டவர்களுடன் சமாதானமாகப் போகுமாறுதான் உபதேசித்ததாகவும்,. அதை துரியன் கேட்காது இருக்கவே தனது நிலையை மார்றிக் கொண்டான் எனவும் சோ கூறுகிறார். சூதாட்டாத்தில்கூட அவன் அதை விஞ்ஞான முறைப்படி ஆடித்தான் ஜெயித்தான் என்றும் தன்னை சூதாட்டத்தில் நிபுணனாக கருதிக் கொண்ட யுதிஷ்டிரர் அவனுடன் ஆடியதுதான் தவறு எனவும் கூறுகிறார். பிறகு யுத்தத்திலும் சகுனி சரியாகவே வீரமாக போரிட்டான் என்றும் சோ கூறுகிறார்.

இதில் நியாய அநியாயம் பார்க்கவியலாது எனக்கூறும் மைதிலி வசுமதி சம்மதித்தால் சாம்பு சாஸ்திரிகளை மிரட்டுவதை மேற்கொள்ளப் போவதாகச் சொல்ல, வசுமதியும் சம்மதிக்கிறாள்.

பாகவதரின் பேரன் அவனுக்கு அவன் அன்னை வாங்கித்தந்த ஸ்கூட்டருடன் வருகிறான். தன் தாத்தா பாட்டியை சவாரிக்கு ஏற்றிச் செல்கிறான். அவர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் இருக்க, அவர்களது மருமகள் ராஜி விட்டேற்றியாக பேசுகிறாள்.

சிங்காரத்தை வரவழைத்த மைதிலி அவன் சாம்பு சாஸ்திரிகளை மிரட்ட வேண்டும் எனக்கூற, அவன் திட்டவட்டமாக மறுக்கிறான். மைதிலி என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லை.

உமாவின் குழந்தையை பார்க்க வரும் அசோக்கை அவமானப்படுத்துகிறான் அவள் கணவன் ரமேஷ். அசோக் குழந்தைக்காக வாங்கி வந்த கவுனையும் துச்சமாகப் பேசி நிராகரிக்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

hayyram said...

டோண்டூ சார், இந்த எங்கே பிராமனன் குழுவினரில் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள். மனைவியை சந்தேகப்படும் கதாபாத்திரம், ஆள்வைத்து அடிக்கும் கேவலமான புத்தி கொண்ட பெண் பாத்திரம் போன்றவையெல்லா கதைக்குத் தேவையில்லை என்று. நிகழ் காலத்தில் வர்ணரீதியான பிராமணனாக வாழ முயலும் ஒருவன் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறான். பணமே உலகம் என்றிருக்கும் இந்த காலத்தில் பவதி பிக்ஷாம்தேஹி என யாசித்து ஒருவனால் வாழ முடிகிறதா? என்று ஒரு சேலஞ்சிங் ரீதியாக கதையை நகர்த்தினால் நன்றாக இருக்கும்.

அதை விட்டு வழக்கமான கெட்ட புருஷன், உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற கெட்ட கேரக்டர் கொண்ட வழக்கமான சீரியலாக சோவின் நாடகம் செல்வது அதன் தரத்தைக் குறைக்கிறது. கடுப்படிக்கிறது. இப்போ என்ன தான் சொல்ல வர்ரார்ன்னு தினமும் திட்டிக்கொண்டே பார்க்க வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி தங்கள் கருத்து என்னவோ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது