1/31/2006

பேரறிஞர் அண்ணா அவர்கள் - 2

இப்போது திண்ணையில் வெளியான மலர் மன்னனுடைய கட்டுரையின் இரண்டாம் பாகத்துக்கு வருவோம்.

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா - 2

அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா? ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும் அண்ணாவின் குணநலன்களுக்கும் ஒரு சிறிதும் தொடர்பு இல்லையே! கருணாநிதி 'ஆட்சி மாறப்போகிறது என்பது நினைவிருக்கட்டும்' என்று இப்போதே மறைமுகமாக எச்சரிக்கை செய்யத் தொடங்கிவிட்டார். ஜயலலிதாவும் அதிகாரிகளிடம் பழிவாங்கும் போக்கில்தான் நடந்துகொள்கிறார். எத்தனை அதிகாரிகள் இவர் ஆட்சியில் பந்தாடப்படுகிறார்கள்! சிலருக்கு மாற்று இடம் தராது வீட்டில் உட்காரும்படிச் செய்துவிடுகிறார். இவர்களுக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தமே இல்லையே!' என்று ஆச்சரியப்பட்டார்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது? ஜயலலிதாவுக்கு அண்ணாவிடமிருந்து கேடயம் வாங்கியதற்குமேல் வேறு பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கருணாநிதி அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர். அண்ணாவிடமிருந்து அவரது இதயத்தை இரவலாகக் கேட்டு வாங்கியிருப்பதாக வேறு சொல்பவர். மேலும் இன்று எண்பது பிராயம் தாண்டிவிட்டவர். அவரே இப்படியிருக்கும்போது ஜயலலிதாவிடம் எப்படி அன்ணாவின் பிரதிபலிப்பை எதிர்பார்க்கமுடியும்?

அண்ணாவிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே, அவரால் நீங்கள் அடைந்த பலன் என்ன என்றும் அந்த நண்பர் கேட்டார். அவர் மீது பிழை இல்லை. பலன் கிடைத்தால்தான் ஒருவர் மீது பாசம் இருக்கும் என எண்ணத் தோன்றும் காலத்தில் வாழ்பவர் அவர்!

உலகாயதப்படிப்பார்த்தால் எனக்கோ என் குடும்பத்திற்கோ ஒரு துரும்பின் அளவுக்கும் அண்ணாவால் பலன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பார்த்தால் யாரால்தான் என்ன பலன் லௌகீகமாய்? மேலும் லௌகீகப் பலன் பார்த்தா ஒருவருடன் பழகுவதும், ஒருவரை நேசிப்பதும்? அண்ணாவிடமிருந்து சில நற்பண்புகளையேனும் கற்றுக்கொள்ளமுடிந்ததே, அதனைக் காட்டிலும் சிறந்த பலன் என்ன இருக்க முடியும்? உலகாயதப் பலன்களை எதிர்பார்த்து நான் அவரோடு பழகவும் இல்லையே! அப்புறமென்ன?

அண்ணா முதலமைச்சரான பிறகு முன்போல அவருடன் நெருங்கியிருக்க இயலாது போயிற்று என்றாலும் செய்தியாளன் என்ற முறையில் தினந்தோறும் கோட்டைக்குச் செல்வதும் அடிக்கடி அவரைச் சந்திப்பதும் நிகழ்ந்து வந்தது. முதலமைச்சராக அண்ணா தமது முதல் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியபோது ஒரு நிருபர் மதுவிலக்கு தளர்த்தப்படுமா என்று கேட்டார். கேள்வி முடிவதற்கு முன்னதாகவே அண்ணா பதிலிறுத்துவிட்டார்: I am an adict to prohibition என்பதாக. அன்ணாவின் அந்த வாக்குச் சாதுரியம் கேட்டு, adict என்ற பிரயோகத்தின் பொருத்தம் கண்டு, நிருபர்கள் அனைவரும் ஆஹாஹா என்று வாய்விட்டுக் கூவி ரசித்தனர், கச்சேரியில் ஒரு ஸ்வரப் பிரயோகம் கேட்டு மகிழ்வது போல!

அண்ணா சொன்னார்: '' நான் சிறுவனாயிருக்கையில் பள்ளியிலிருந்து திரும்புகையில் தெருவோரங்களில் பலர் உருண்டு கிடப்பது கன்ணில் படும். அது என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் கடந்த பல தலைமுறைகளாக அம்மாதிரியான காட்சியினைக் காணும் நிலைமை நம் குழந்தைகளுக்கு இல்லை. இதனை நான் மாற்றிவிடமாட்டேன், எவ்வளவுதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும்.''

அண்ணாவை மிகக் கேவலமாக மேடையில் பேசுபவர்கள் பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். ஒரு தடவை அண்ணா முதல்வரான பிறகு வெளியூர் சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். நடு நிசி. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் இடம் தேடி சின்ன அண்ணாமலை அல்லாடிக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டார் அண்ணா. சின்ன அன்ணாமலை இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார் போலிருக்கிறது. நாம் அழைத்துச் செல்வோம், உடனே அவரை அழைத்துவாருங்கள் என்று காவலரை அனுப்பினார் அண்ணா. முதல்வர் அழைக்கிறார் வாருங்கள் என அவரை அழைத்து வந்தார் காவலர். சின்ன அண்ணாமலைக்கு நம்பவே முடியவில்லை. இங்க இடமிருக்கு, வாங்க என்று அவரை அழைத்துக் கொண்டார், தமிழக முதலமைச்சர் அண்ணா. இச்சம்பச்வத்தைப் பதிவு செய்த சின்ன அண்ணாமலை, அந்தக் கணமே அண்ணா மீது தமக்கு இருந்த துவேஷம் நீங்கியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

யேல் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்லும் வழியில் அண்ணா வாடிகன் சென்று போப் ஆண்டவரைப் பார்த்தார். நம் நாட்டு சமயத் தலைவர்களைப் பார்க்காத அண்ணா மாற்று சமயத் தலைவரைப் பார்ப்பதா எனப் பலர் கடுமையாக விமர்சித்தனர். அண்ணாவோ ஒரு நோக்கத்துடன்தான் அந்தச் சந்திப்பை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் கோவா விடுதலைப் போரில் பங்கேற்ற சிலரைப் போர்ச்சுகல் அரசு கைது செய்து லிஸ்பனுக்கு அழைத்துச்சென்று சிறைவைத்திருந்தது. அந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தம் வாழ்நாள் முழுவதும் அன்னிய நாட்டுச் சிறையிலேயே கழிந்துவிடும் என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களை விடுதலை செய்யுமாறு போர்ச்சுகல் அரசுக்கு அறிவுறுத்துமாறு போப் ஆண்டவரிடம் விண்ணப்பித்தார், அண்ணா. போப் அதற்கு இணங்கி போர்ச்சுகல் அரசிடம் கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் இருப்போரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். போப் ஆண்டவரே கேட்டதால் அதற்குப் போர்ச்சுகல் அரசு இணங்கியது. ஆனால் நடைமுறைகளின் காரணமாக அதில் தாமதமேற்பட்டது. விடுதலையாகி வந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தமது விடுதலைக்குக் காரணமான, தங்களை முன்பின் அறியாத அண்ணாவைச் சந்தித்து நன்றி கூற விழைந்தனர். அதற்குள் அண்ணா காலமாகிவிட்டிருந்தார்.

''அண்ணா ஈஸ் ஜெம் ஆப் எ மேன்'' என்பார் மெயில் ராமனாதன். அவர் ஒரு பிராமணர். அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றுவதை மதிப்பீடு செய்த மெயில் இதழ், பதவியினால் சிலர் பெருமை அடைகிறார்கள், சிலர் தாம் வகிப்பதால் தமது பதவிக்குப் பெருமை அளிக்கிறார்கள். அண்ணா தாம் வகிக்கும் பதவிக்குப் பெருமை தேடித்தருபவர் என்று தலையங்கம் எழுதியது. நூற்றாண்டு கண்ட மெயில் ஆங்கில மாலை நாளிதழ், பிராமணர் வசமிருக்கும் சிம்சன் குரூப் நிர்வாகத்தில் நடந்த பத்திரிகை.

அண்ணா மறைந்தபோது, தினமணியில் தலையங்கம் எழுதிய ஏ என் சிவராமன், வெறும் சம்பிரதாயதிற்காக அல்லாது அண்ணாவைப் போற்றித் தலையங்கம் எழுதினார். அவரும் பிராமணர் மட்டுமல்ல, தேசிய உணர்வில் ஊறித் திளைத்தவரும்தான்.

அண்ணா முதல்வர் பதவியேற்ற சில நாட்கள் வரைதான் அப்பதவிக்குரிய மரியாதையைக் காக்கவேண்டும் என்பதற்காக தினமும் முக சவரம் செய்து, சலவை ஆடை அணிந்து காட்சியளித்தார். பிறகு வழக்கம் போல் குறைந்தது மூன்று நாள் சவரம் செய்யாத முகமும் கசங்கிய சட்டையும் அழுக்கேறிய நான்கு முழ வேட்டியுமாக எமக்கு நன்கு பரிச்சயமான அண்ணாவாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டார்!

அன்ணாவைப் பற்றிப் பேசுவதற்கு என்னிடம் இன்னுமின்னும் செய்திகள் உள்ளன. சமயம் வரும்போது அவற்றைப் பதிவு செய்ய வேண்டியதுதான். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இக்கட்டுரையை முடித்தாகவேண்டுமேயன்றி எவ்வளவுதான் வளர்த்திக் கொண்டு போவது?

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராத அபிமானிகள் உள்ளவரை அண்ணா இருந்துகொண்டுதானிருப்பார். அவர் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்?

மலர் மன்னன்
திண்ணையில் வெளியானக் கட்டுரை

பேரறிஞர் அண்ணா அவர்கள்

பழம்பெரும் பத்திரிகையாளர் மலர் மன்னன் அவர்கள் திண்ணை பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரையை அவர் அனுமதி பெற்று இங்கிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அவர் கட்டுரை முடிந்ததும் அண்ணா அவர்களைப் பற்றி என்னுடைய நினைவுகளை முதல் பின்னூட்டமாக வெளியிடுவேன். இப்போது மலர்மன்னன் அவர்கள்.

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா?

அண்ணா அவர்கள் மறைந்து விளையாட்டுப்போல் முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இன்னமுங்கூடத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், வேளை கெட்ட நடுநிசியில், மிகத்தாமதமாகக் கூட்டத்திற்கு வந்து, அப்படி வந்து சேருகிறவரை அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகி, ஆனால் வந்துசேர்ந்ததுமே அனைவரின் மகிழ்ச்சிக்கும் ஆளாகி, பொடி போட்டுப்போட்டுத் தொண்டையிலிருந்து வரவேண்டிய குரல் நாசியின் வழியாகவும் வர நேர்ந்து, தமக்கே உரிய கரகரப்பான குரலில் பேசிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

அண்ணா மாதம் முப்பது நாளும் வெவ்வேறு ஊர்களில் பேசிக்கொண்டிருப்பவராக இருந்ததால் அவர் எங்கோ இருந்துகொண்டிருப்பதான உணர்வே எனக்கு இருந்துவருகிறது.

அண்ணாவை நன்கு அறிந்தும், அவரோடு பழகியும் மகிழ்ந்தவர்களின் தலைமுறை அருகி வருகிறது. ஆகையால் அவர் தொடங்கிய தி.மு.கழகம் மற்றும் திராவிட இயக்கங்களின் வழியாக மட்டுமே அவரைப் பற்றிய புரிதலும் தெரிதலும் அமைந்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது.

முதலில் நான் கூறவிரும்புவது அண்ணாவின் அபிமானிகள் திராவிட இயக்கத்திற்கும் கட்சிகளுக்கும் வெளியேயும் இருந்தார்கள்; இன்னமுங்கூட இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அதுபோலவே அண்ணாவை வெறுப்பவர்களும் இருந்தார்கள், இன்னமும் இருக்ககூடும். ஆனால் அண்ணாவுடன் ஒரு மணிநேரம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியிருந்தாலே போதும், அவரை வெறுக்கத் தோன்றாது என்பது மட்டுமல்ல, அவரை மிகவும் மதிக்கவும் நேசிக்கவுமான மனநிலையும் தானாகவே உருவாகிவிடும். எவராயினும் அவரிடமிருந்து தொலைவில் இருக்கிறவரைதான் அவரைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.

அண்ணாவுடனான எனது முதல் அறிமுகம் ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான். சிதம்பரத்தில், மாணவப் பருவத்தில். சூரி என்கிற நண்பர் வரைந்து கொடுத்த அண்ணாவின் உருவப் படத்தில் அண்ணாவிடம் கையொப்பம் வாங்கியதிலிருந்து அது தொடங்கியது.

எனது பால பருவம், தமிழ் என்று ஓர் உயர்தனிச் செம்மொழி இருப்பதாகவோ, விந்திய பர்வதத்திற்குத் தெற்கே ஒரு நாகரிகம் இருப்பதாகவோ படித்தவர்கள் மத்தியிலே கூட அறியப்படாத பிரதேசங்களில் கழிந்தது. பாரதத்தின் தெற்குப்பகுதியிலிருந்து வருவோர் மொத்தமாக மதராசிகள் என்றே அறியப்பட்ட காலம்.

எனவே தமிழ் நாட்டிற்கு வரநேர்ந்து, முதல் முதலில் அண்ணாவின் மேடைப்பேச்சைக் கேட்கவும் நேர்ந்தபோது பரவசமடைந்தேன். எனது தாய்மொழி கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக, எத்தனை வளமாக உள்ளது என்பதை முதலில் உணர்ந்தது அவரது பேச்சைக் கேட்டபோதுதான். அதன் பிறகு ரா.பி. சேதுப் பிள்ளை, பொன். முத்துராமலிங்கத் தேவர், சோமசுந்தர பாரதியார், ம.பொ.சி. எனப் பலரது மேடைப் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்ந்தபோதிலும், என்ன இருந்தாலும் முதல் காதலுக்கு உள்ள மகிமையே தனிதான் அல்லவா, தமது மேடைப் பேச்சால் என்னைக் கவர்ந்தவர் அண்ணாவுக்கு இணையாக வேறெவரும் இல்லையென ஆயினர்.

சிதம்பரத்திலிருந்து ஐம்பது மைல் சுற்றளவுக்கு அண்ணா எங்கு பேசினாலும் ஒரு போதைக்கு அடிமையானவன் போலப் போய்க் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

எனினும், அன்ணாவிடம் பேசிப்பழகும் வாய்ப்பு சேத்தியா தோப்பு என்ற ஊரில்தான் கிட்டியது. இவ்வாறு ஊர், ஊராகப் போய் அண்ணாவின் பேச்சைக் கேட்கத் தொடங்கியதாலேயே உள்ளூர் தி.மு.க வினரின் நட்பும் ஏற்படலாயிற்று.

சேத்தியா தோப்பில் அண்ணா பேசிய கூட்டம் முடிந்தபோது நடுநிசி தாண்டிவிட்டிருந்தது.

சாப்பாட்டுக்கு என்ன செய்ய? அதன்பின் எப்படி ஊர் திரும்புவது? புவனகிரி ரத்தின. பாலகுருசாமி, சாப்பாட்டிற்கு ஏற்பாடாகியுள்ளது, வா என்னுடன் என்று அழைத்துச் சென்றார். அதன் பயனாக ஒரு சத்திரத்தில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

அது எனக்குப் பழக்கமில்லாத, முழுக்க முழுக்க அசைவச் சாப்பாடு!

+++

பலப்பல ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரியில் காரை சிபியின் வீட்டில் சாப்பிடுகிறேன். என்னுடன் என் மகள் பூரணியும் இருக்கிறாள். இலையில் சோற்றுக்கு அயிரை மீன் குழம்பும் தொட்டுக் கொள்ள வஞ்சிர மீன் வறுவலும்! மகள் பூரணிக்கு சாம்பாரும் ஏதோவொரு மரக் கறியும்.

மீன் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு என்கிற அதிர்ச்சியான உண்மை அப்போதுதான் என் மகளுக்குத் தெரிய வந்தது.

"எப்படியப்பா, இவ்வளவு அனாயாசமாக மீனை உரித்து உரித்துச் சாப்பிடுகிறாய்?' என்று திகைப்புடன் கேட்டாள், பூரணி.

முள்ளையும், சதையையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாமல், எப்படிப் பதமாக மீனை உண்ண வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அண்ணா அவர்கள். சேத்தியா தோப்பில், வேளை கெட்ட வேளையில் அளிக்கப்பட்ட அசைவ விருந்தில். இதனை அன்று நான் பூரணியிடம் சொல்லாமல் சிரித்தேன் என்றாலும் இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

மீன் இல்லையேல் சாப்பாடே இல்லை என்னும்படியான மேற்கு வங்கத்தில் பிற்காலத்தில் நான் வசிக்க நேர்ந்தபோது, அண்ணா கற்றுத் தந்த பாடம் மிகவும் உதவியாக இருந்தது.

அண்ணா மீன் குழம்புப் பிரியர். முக்கியமாக நெத்திலிக் கருவாட்டுக் குழம்புப் பிரியர். எனினும், மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அவர் மன்னை நாராயணசாமி வீட்டு மீன் குழம்பைவிட சவுரிராஜ ஐயங்கார் வீட்டு வற்றல் குழம்பைத்தான் சோற்றுக்குப் பிசைந்துண்ணவோ, இட்டலிக்குத் தொட்டுக்கொள்ளவோ விரும்புவார்.

கட்டுக் குடுமியும், நெற்றியில் பட்டை நாமமுமாகப் பொலியும் மன்னார்குடி நகராட்சித் தலைவர் சவுரி ராஜ ஐயங்கார் அண்ணாவின் நண்பர். பிற்காலத்தில் எம்ஜிஆருக்கும்தான்!

சவுரி ராஜ ஐயங்கார் மட்டுமா, எத்தனையோ பிராமண நண்பர்கள், அண்ணாவுக்கு. காஞ்சியிலே பிறந்து வளர்ந்தவர் வேறு, வைணவ அந்தணர் மிகுந்த பிரதேசம்!

அண்ணாவை ஒரு இலக்கியப் படைப்பாளியாக என்னால் கருத முடிந்ததில்லை. ஆனால் அவர் நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு படிக்கக் கூடியவராக இருந்தார். தமிழில் புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன் ஆகியோரின் படைப்புகளை அவர் ரசித்துப் படித்தார். பாரதியாரின் கவிதைகள் மட்டுமின்றி, கட்டுரைகளும், வ.ரா.வின் உரைநடையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. சரஸ்வதி, சாந்தி, ஆகிய பத்திரிகைகளை விரும்பி வாசித்தார். புதிதாக ஜயகாந்தன்னு ஒருத்தர் எழுதுகிறார், நன்றாக இருகிறது, படி என்று பரிந்துரைத்தார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள எவரும்அருகே இல்லாததை ஒரு குறையாக உணர்ந்தார். தி.மு.க. வுக்குப் பின்னர் வந்த க. ராஜாராம்தான் அண்ணாவுக்கு ஈடாகத் தரமான படைப்புகளை அடையாளங்காணக் கூடியவராக இருந்தார்.

கண்ணதாசனும் அத்தகையவராக இருந்தார்.

அண்ணாவின் எழுத்தை என்னால் சிலாகிக்க இயலாது என்றாலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்தார் என்பதை அறிவேன். கட்சி தொடர்பில்லாத பொதுவான கூட்டங்களில் அவர் கலந்துகொள்வதாக இருப்பினும் அவரைத்தான் கடைசியாகப் பேசுமாறு கேட்டுக்கொள்வார்கள். ஏனெனில் அவர் பேசிவிட்டால் வந்ததன் பயன் கிட்டிவிட்டது என்பதுபோல் கூட்டம் கலைந்து போய்விடும்!

சென்னை ராயப்பேடையில் லாயிட்ஸ் சாலையிலிருந்து உள்வாங்கும் தெரு ஒன்று உண்டு; லட்சுமிபுரம் என்பது அதன் பெயர். அங்கு லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நடத்தி வந்தார்கள். அதில் விசேஷம் என்னவென்றால், உறுப்பினர் பெரும்பாலும் ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட "யுவர்'கள்! அதிலும் அநேகமாக அனைவரும் பிராமணர்கள். வழக்கறிஞர்கள், கல்விமான்கள், உயர் உத்தியோகஸ்தர்கள். இந்தச் சங்கம் அடிக்கடி ஆசை ஆசையாக அழைப்பது அண்ணாவைத்தான். கச்சேரியை ரசிப்பதுபோல் அண்ணாவின் பேச்சை ரசித்து மகிழ்வார்கள். அன்ணாவுக்கும் அங்குபோய்ப் பேசுவதில் விருப்பம் அதிகம். சபையினர் நாடிபிடித்துப் பார்த்தவர் போல் அவர்களின் ரசனைக்கும் அறிவுநிலைக்கும் ஏற்பப் பேசுவார்.

எனக்குத் தெரிந்து கட்டணம் செலுத்திப் பேச்சைக் கேட்கும் ஏற்பாடு அண்ணா பேசும் கூட்டத்தில்தான் இருந்தது. எல்லாம் ?வுஸ் புல் கூட்டங்கள்! மக்கள் கச்சேரி கேட்கப் போவதுபோலத்தான் அண்ணாவின் பேச்சைக் கேட்கப் போவார்கள். கண்ணதாசன் தாம் நடத்திய "தென்றல்' வார இதழில் ஒருமுறை "கடற்கரையில் அண்ணா' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தார். அதன் இறுதி வரி, "பாட்டென விளம்பிப் போனார்' என்று முடியும். கூட்டத்திற்கு வந்தவர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக. அது முற்றிலும் உண்மை.

ஆனால் இதையெல்லாம்விட, அண்ணாவின் பெருந்தன்மை, மனிதாபிமானம், சக மனிதனுக்காகப் பதறித் துடித்து, இயன்ற உதவிகளைச் செய்ய முற்படும் இயல்பு, எவ்வளவு ஆத்திரமூட்டப்படினும் நிதானமிழக்காத, அதற்காக வெறுத்து ஒதுக்காத பண்பு, ஆகியவையே இன்றளவும் அண்ணாவின் அபிமானியாக என்னை இருத்தியுள்ளன.

1957ல் அண்ணா முதல் முதலாகத் தமது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது, ஈ.வே.ரா அண்ணா மீது பழி தீர்த்துக்கொள்ள தொகுதி முழுவதும் எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். பொதுக் கூட்டங்களில் மிகவும் தரக்குறைவாக அண்ணாவை விமர்சித்தார். தி.க.வினர் அண்ணாவின் பிறப்பையே கேள்விக்குறியாக்கி இழிவாகப் பேசினார்கள். ஆனால் ஈ.வே.ரா வுக்கு எதிராக ஒரு வார்த்தையும் எம் அண்ணாவின் வாயிலிருந்து வரவில்லை.

அண்ணாவின் உயர் பண்புகளுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் தரமுடியும். அவற்றுள் சிலவற்றையாவது பதிவு செய்யப் பார்க்கிறேன்.

அண்ணாவுக்குத் தமது கட்சியில் மிகவும் விருப்பமான நபர் ஒருவர் உண்டென்றால் அது ஈ.வி.கே. சம்பத்துதான். அவரை மட்டும்தான் பொதுக் கூட்டங்களிலும் உரிமையுடனும் பாசத்துடனும் "அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுவார். "நான் பிரித்துண்ணும் பகடா பொட்டலத்திலிருந்து எடுத்துண்பவன் சம்பத்" என்பார். அவ்வளவு அந்நியோனியமாக இருந்த சம்பத்துதான் 1962ல் தி முகவிலிருந்து விலக நேர்ந்தது, கருணாநிதியின் போக்கு காரணமாக. அண்ணா அவரே சொன்னதுபோலச் சூழ்நிலையின் கைதியாகிவிட்டிருந்தார்.

பொதுவாக அரசியல் கட்சிகளில் ஒருவர் வெளியேறிச் சென்றால் அவர்மீது குற்றம் சொல்வதுதான் கட்சித் தலைமையின் வழக்கம். ஆனால் சம்பத் விலகியது பற்றி அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

"சமபத்து ஒரு வைரத் தோடு (தோடு என்றுதான் சொன்னார், கடுக்கன் என்றல்ல). என் காதுகளில் புண் வந்திருக்கிறது. அதனால் அந்தத் தோட்டைக் கழற்றி வைத்திருக்கிறேன்' என்றுதான் சொன்னார், எம் அண்ணா.

1967 தேர்தல் முடிவு அடுக்கடுக்காக வெற்றிச் செய்திகளைக் குவித்துக்கொண்டிருந்தபோது மற்றவர்கள் உற்சாகத்தால் அகமகிழ்ந்திருக்கையில் அண்ணா பிரமிப்புடனும் சிறிது கவலையுடனும்தான் காணப்பட்டார். ஆட்சி செய்யும் பொறுப்பு தி.மு.க.வுக்கு மிக விரைவாக வந்துவிட்டதாகவே எண்ணுவதாகக் கூறினார்.

விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற மணவர் தலைவரான தமது கட்சி வேட்பளரிடம் காமராஜர் தோல்வியடைந்த செய்திகேட்டு மற்றவர்கள் உற்சாகத்தில் எகிறிக்குதித்தபோது, அண்ணா மிகவும் வியாகூலத்துடன் "அவர் தோற்றிருக்கக் கூடாது' என்று வருந்தினார். இவ்வளவுக்கும் காமராஜர் வன்மத்துடன் 1962 தேர்தலில் நடேச முதலியார் என்ற பஸ் முதலாளியை நிறுத்தி ஏராளமாகப் பணச் செலவு செய்யவைத்து அண்ணாவைத் தோற்கடித்து மகிழ்ந்தவர்தான்!

காமராஜர் தோற்ற செய்தி கிடைத்தவுடன் எம் அண்ணா எடுத்த முதல் நடவடிக்கை விருதுநகரில் வெற்றிக் கொண்டாட்டம், ஊர்வலம் என்று தம் கட்சியினர் அட்டகாசம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதுதான். காங்கிரசின் தலையாய தூணான காமராஜரையே தோற்கடித்த விருதுநகர் அன்று ஏதோ துக்க தினம் அனுசரிப்பதுபோலத்தான் காணப்பட்டது, தி முக வெற்றிபெற்ற போதிலும்!

ஆட்சிப் பொறுப்பு தி முகவைத் தேடி வந்தவுடன் எம் அண்ணா செய்த முதல் காரியம் காமராஜர், அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு, அவர்களின் ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் வேண்டியதுதான்!

பதவி ஏற்றதும் அதுவரையில் இரு ந்த அரசுச் செயலர்கள், காவல் துறை உயர்

அதிகாரிகள் ஆகியோர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியினரால் நியமிக்கப்பட்டு அதற்கே விசுவாசமாயிருப்பார்கள் ஆதலால் அவர்களையெல்லாம் மாற்றவேண்டும் எனத் தம்பிமார் வலியுறுத்தினார்கள். ஆனால் எம் அண்ணா அதற்கு இணங்கவில்லை. "அப்படிச் செய்வது அவர்கள் மேலும் நம்மிடமிருந்து விலகியிருக்கச் செய்துவிடும். நமக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதுபோலாகும். பார்க்கப் போனால் அவரக்ள்தான் ஆட்சிப் பொறுப்பில் நிரந்தரமாக இருப்பவர்கள். அரசியல் கட்சிக்கார்களான நமது ஆயுள் ஐந்தாண்டுகள்தான். பக்தவத்சலம் ஆட்சியில் யார் யார் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு தொடரட்டும் ' என்று சொன்னார் எம் அண்ணா.

ஐ.ஜி. யாக இருந்த அருள், அண்ணாவை ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் அவமரியதையாக நடத்தினார். அருளைப் பழிவாங்கத் தம்பிமார் துடித்தனர். "அருள் தோள் மீது ஒரு ஈ உட்காரவும் அனுமதிக்க மாட்டேன்' என்றார் எம் அண்ணா.

இருபதாண்டு காங்கிரஸ் ஆட்சியில் பழகிப்போன தலைமைச் செயலக அதிகாரிகள் புதியவர்களான தி.மு.க வினர் எப்படி நடந்துகொள்வார்களோ எனச் சஞ்சலத்துடன் இருந்தனர். அவர்களின் கலக்கம் களைவதற்காகவே கோட்டைக்குள் நுழையுமுன் கொடிமரம் எதிரில் அனைவரையும் அழைத்துக் கூட்டம் நடத்தி அவர்களையும் தம் தம்பிமார்களாக்கிக் கொண்டுவிட்டார் எம் அண்ணா!

தி முக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே மாணவர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மிகப் பெரிய மோதல் வெடித்தது. அந்தச் சமயம் முதல்வர் அண்ணா மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்குத் தாமகவே சென்று மாணவர்களிடம் மன்னிப்புக் கோரினார்! "ஏன் முன்னதாக வரவில்லை?' என்று மாணவர்கள் அதட்டினார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்கள் பஸ்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் ஸிக் ஸாகாக நிறுத்தியிருந்ததால் வரமுடியவில்லை என்று ஒரு குழந்தையைப் போலச் சமாதானம் சொன்னார் எம் அண்ணா.

தொண்டை வறள்வதால் குடிக்கத் தண்ணீர் கேட்டார். கோபத்தில் இருந்த மாணவர்கள் அவ்ருக்குத் தண்ணீர் கொடுக்கவும் மறுத்தனர். அதற்காக அவர்க்ள் மீது ஆத்திரம் கொள்ளவில்லை எம் அண்ணா.

இன்றோ, உயர் பதவி வகிப்போர் போராடுவோரின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதே அரும் பெரும் செயலாகப் பாராட்டப்படுகிறது.


இவை எல்லாம் எனது கற்பனை அல்ல. 1967-68 என்பது சமீப காலம்தான். ஹிந்து அலுவலகம் சென்று அந்தக் காலத்து ?ஹிந்து இதழ்களைப் புரட்டினால் இவையெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்தாம் என்பது தெரியவரும்.

இன்னும் சொல்வதற்கு என்னிடம் செய்திகள் உண்டு. ஆனால் அண்ணாவின் ஞாபகம் மிகுந்த வேதனைக் குள்ளாக்குகிறது. நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் ஒன்பதாம் எண் இல்லத்திற்கு ஓடிச் சென்று அண்ணாவின் குறும்புப் புன்னகை தவழும் முகத்தைக்காண மனம் துடிக்கிறது. ஆனால் எம் அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா?

அடுத்த தவனையில் மேலும் சிறிது சொல்கிறேன், எம் அண்ணாவைப் பற்றி.

மலர்மன்னன்
திண்ணையில் வெளியானது.

1/30/2006

நேற்று நடந்தது போல இருக்கிறது

நேற்று நடந்தது போலவே என் பல ஞாபகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சமீபத்தில் 1958-ல் ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த அந்த நிகழ்ச்சி. அதாவது சரியாக 48 வருடங்களுக்கு முன்னால்.

அப்போது நான் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஜனவரி 30 அன்றும் 11 மணிக்கு பள்ளியில் ஒரு பெல் ஒலிக்கும். வகுப்பில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான அஞ்சலி. மகாத்மா காந்தி அவர்கள் சுடப்பட்ட தினம் அல்லவா? (இப்போதும் அவ்வாறுதானே?)

அன்று பார்த்து எதுவும் சரியாக அமையவில்லை. பெல் அடித்தது. நாங்கள் எழுந்து நின்றோம். பத்து நொடிக்கு ஒரே அமைதி. திடீரென்று சடகோப ராமானுஜம் களுக் என்று ஒரு சிரிப்பை விட்டான்.

ஹிந்தி ஆசிரியர் V.G. சேஷாத்ரி ஐயங்கார் "உஷ்" என்று ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பினார். மிகவும் கோபக்காரர். அன்றைக்கென்று முகச் சவரம் செய்திருந்தார்.

அறிவு கெட்ட இன்னொரு மாணவன் "குபுக்" என்று சிரித்துத் தொலைத்தான். ஜி. ஜயராமனுக்கு அன்று நல்ல ஜலதோஷம். அவனாவது சும்மா இருந்திருக்கலாம். சனியன் பிடித்தவன் சளியுடன் கூடியத் தொண்டையில் "ஹள் ஹள் ஹள்" என்ற சிரிப்பை விட்டான். அவ்வளவுதான் எல்லா கட்டுப்பாட்டையும் இழந்து எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தோம்.

இந்தக் கூத்தில் இரண்டு நிமிடம் கழித்து அடிக்கும் பெல் ஒலித்தது. சேஷாத்ரி சார் எங்கள் எல்லோரையும் அப்படியே நிற்கச் சொல்லி விட்டார். வகுப்பு மானீட்டராகிய என்னை "ராகவையங்கார் முன்னால் வந்து நில்லும்" என்றார். (அவருக்கு கோபம் வரும்போது என்னை ஐயங்கார் என்றுதான் கூப்பிடுவார். அப்போது நல்ல உதை நிச்சயம்). பிறகு பெஞ்ச் பெஞ்சாக வந்து ஒவ்வொருவருக்கும் உள்ளங்கையில் பிரம்பால் அடி கொடுத்தார். ஜி. ஜயராமனுக்கு இரண்டு அடிகள். வகுப்பின் துரதிர்ஷ்ட மானீட்டராகிய எனக்கு மூன்று அடிகள்.

இப்போது நினைத்தாலும் சுரீர் என்ற அவ்வலியை உணர்கிறேன். கூடவே வெட்கம் கலந்த சிரிப்பும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: இது ஒரு மறு பதிவு.

1/29/2006

நெருக்கடி நிலை பற்றிய சில எண்ணங்கள்

ஜூன் 12, வருடம் 1975. இந்திரா காந்தி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து அவருடன் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். அதன் தீர்ப்பு வந்து நாட்டையே தலைகீழாக்கியது. வழக்கை விசாரித்த நீதியரசர் சின்ஹா அவர்கள் இந்திரா காந்தி பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்து அவர் வெற்றி செல்லாது என்று அறிவித்தார். அது மட்டுமின்றி அவர் ஆறு வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று வேறு தீர்ப்பு கொடுத்து வைத்து விட்டார்.

இந்திரா காந்தி இந்தத் தீர்ப்பை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஏன், அவருக்கு எதிராக கேஸ் போட்ட ராஜ் நாராயணனே எதிர்ப்பார்க்கவில்லை. அடுத்த நாள் நாடே திகைத்து போனது. தீர்ப்பு நடைமுறைக்கு வர நீதிபதி சில நாட்கள் அவகாசம் அளித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிர் வினையாய் பல அடாவடி காரியங்களை இந்திரா காந்தியும் அவர் ஜால்ராக்களும் நிகழ்த்தினர். பல கூலிப்படைகள் பணம் கொடுத்து லாரிகளில் வரவழைக்கப்பட்டு இந்திரா காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பச் செய்யப்பட்டனர்.

அச்சமயம் விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த கிருஷ்ண ஐயர் அவர்களிடம் இந்திரா காந்தியின் மேல் முறையீடு வந்தது. அவர் அலஹாபாத் தீர்ப்பை சில ஷரத்துகளின் அடிப்படையில் ஜூன் 24-ஆம் தேதி நிறுத்தி வைத்தார். அதன்படி இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் சபையில் ஓட்டெடுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது. இது காரியத்துக்காகாது என்று இந்திரா காந்தி செயல்பட்டு June 25 அன்று அவசர நிலை பிரகடனம் செய்தார்.

இந்திரா காந்தியின் நிலையை பலப்படுத்த தேர்தல் விதிகள் மாற்றப்பட்டன. அரசியல் நிர்ணயச் சட்டம் 39-வது முறையாக திருத்தப்பட்டது. அதில் பிரதம மந்திரி மற்றும் சபாநாயகரின் தேர்தல் வழக்குகளுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டன. அதாவது அந்த வழக்குகள் நடத்துவது கடினமாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்திராவின் தேர்தல் வழக்கும் இதன் கீழ் சேர்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சுப்ரீம் கோர்ட் இந்த திருத்தத்தை சட்ட விரோதம் என்று தள்ளுபடி செய்தது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 தொங்கலில் வைக்கப்பட்டன. பல மாநிலங்களில் பலர் காவலில் வைக்கப்பட, பல ஆள் கொணர்வு கோரிக்கைகள் பல உயர் நீதி மன்றங்களுக்கு முன்னால் வந்தன. அங்கெல்லாம் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வர, விஷயம் உச்ச நீதி மன்றத்திற்கு முன்னால் வந்தது. அந்த நீதி மன்றமோ 4:1 விகிதத்தில் அவசர நிலையின் கீழ் சட்டப் பிரிவு 21 செயல்படாததால் அடிப்படை உரிமைகள் எதுவும் தற்சமயம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. மனித உரிமை செல்லாக்காசாகியது. இதை எதிர்த்து மைனாரிடி தீர்ப்பை அளித்த நீதிபதி கன்னா அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இந்தப் பெரும்பான்மை தீர்ப்பு நாட்டிலும் சட்ட வல்லுனர்களிடத்திலும் பெரிய நிராசையை உண்டாக்கியது. 1976-ல் அ.நி.ச. வின் 42-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது பல அடாவடி காரியங்களுக்கு வழி வகுத்தது.

நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் நிலையில் மட்டும் வந்திருக்க வேண்டிய அவசர நிலை சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இந்திரா காந்தியின் நலனைக் காக்கவே கொண்டுவரப்பட்டது. நாடு முழுக்க உறக்கத்தில் இருந்த நடுநிசியில் இது நுழைக்கப்பட்டது. அடுத்த 19 மாதங்களுக்கு நாடு இருட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. தனிமனித உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர்.

அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.

இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.

அவசர நிலை கொடுமைகள் நல்ல வேளையாக தெற்கில் அவ்வளவாக இல்லை. ஆனால் வட இந்திய மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மானாவாரியாக அகப்பட்டவர்களையெல்லாம் உட்படுத்தினர். கைதான பலரும் தடயம் இன்றி மறைந்தனர். இந்திராதான் இந்தியா என்று பரூவா என்னும் கோமாளி திருவாய் மலர்ந்தருளினார். தேர்தல்களே நாட்டுக்குத் தேவையில்லை, அன்னிய மொழிகளை படிப்பது தேசவிரோதம் என்றெல்லாம் கூறி சஞ்சய் காந்தி தமாஷ் செய்தார். பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார். அவசர நிலை இருந்த 19 மாதங்களிலும் அவர் வெறுமனே இந்திரா காந்தி என்றுதான் எழுதினாரே தெரிய பிரதமர் இந்திரா காந்தி என்று எழுதவேயில்லை. (நானும் இப்பதிவில் அவ்வாறே செய்திருக்கிறேன் என்பதை கவனிக்க).

1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.

சிலர் கூறலாம், அவசர நிலை காரணமாக ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு ஓடின, விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன என்று. இருக்கலாம், ஆனால் இந்திரா காந்தியின் கெட்ட எண்ணத்திற்கு அவையெல்லாம் ஈடாகாது.

1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.

இதில் நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கண்டறிந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜெர்மன் இதழ் வீட்டிற்கு வரும். திசம்பர் 1975 இதழில் "Diktatorin Indira Gandhi" (சர்வாதிகாரி இந்திரா காந்தி) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. தணிக்கையதிகாரிகளுக்கு ஜெர்மன் தெரியாதது சௌகரியமாகப் போயிற்று.

தேர்தல் வந்தது. இந்திரா காந்திக்கு சரியான தோல்வி. அவரும் அவர் பிள்ளை சஞ்சயும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர். அப்போதுதான் பத்திரிகைத் தணிக்கை தனக்கே பாதகமாக முடிந்ததை இந்திரா காந்தி அவர்கள் கண்டு நொந்து போனார். அதாவது பத்திரிகைகள் சுதந்திரமாக இல்லாது போனதால் வசவசவென்று உப்புசப்பில்லாத செய்திகள் வர, உண்மை நிலை மறைக்கப்பட, நாட்டின் நாடியை பார்க்க அரசு தவறியது. என்னமோ அப்போது தேர்தல் வைத்து பெரிய மெஜாரிடியை வைத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம் என்று மனப்பால் குடித்துத்தான் அவர் தேர்தலையே அறிவித்தார். பிளாங்கியும் அடித்தார்.

தேர்தலில் தோற்றதும் இந்திரா காந்தி புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். ஜனாதிபதியிடம் ராஜினாமா தரும் முன்னால் அவசரநிலையையும் நீக்குமாறு சிபாரிசு செய்தார். அது அப்படியே இருந்தால் தான் உடனேயே கம்பியெண்ணவேண்டும் என்று அவர் பயந்ததே அதன் முக்கியக் காரணம். மற்றப்படி வேறு நல்லெண்ணம் எல்லாம் இல்லை.

அவசர நிலையை அவசர அவசரமாக வலது கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க, இடது கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்து நாட்டுக்கு நல்லது செய்தனர் என்பது ஆறுதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு பின்னால் இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். ஆனால் மறுபடியும் அவசர நிலையை கொண்டுவர அவருக்கோ மற்ற யாருக்குமோ முடியாதபடி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது