நிரந்தர பக்கங்கள்

6/08/2007

சம்பவாமி யுகே யுகே

தலைப்பை பின்னால் நியாயப்படுத்துகிறேன்.

அமரர் தேவன் அவர்கள் எழுதிய நாவல், "கல்யாணி" என்று நினைக்கிறேன். (இல்லை அது கோமதியின் காதலன் என திருத்தியவருக்கு நன்றி) அதில் இரு சகோதரர்கள். அப்பா ஒரு கோபக்கார மிராசுதார். ஊரில் இல்லை. அப்போது அண்ணன் தம்பிகளுக்குள் பயங்கர சண்டை. தம்பி கோபித்து கொண்டு சென்னை செல்கிறான். இப்படி போகிறது கதை. கதை அப்படியே போகட்டும், நாம் ஒரு நிமிடம் இந்த சகோதரர்களின் தாயார் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்போம். அவருக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை. வீட்டில் அண்ணன் தம்பிகள் இப்படி அடித்து கொள்கிறார்களே, அதுவும் கணவர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து என நொந்து போகிறார். இளைய மகன் எங்கிருக்கிறானே என்று வேறு கவலை. அடுத்த நாள் காலை ஜோசியர் வீட்டுக்கு செல்கிறார். அப்போதுதான் ஜோசியர் மனைவி தன் கணவரின் சாமர்த்தியத்தைப் பற்றி தனது வெளிப்படையான எண்ணங்களைத் தெரிவித்து விட்டு, சமையலறைக்கு சென்றிருக்கிறார்.

இந்த நேரம் பார்த்து வந்த மிராசுதார் மனைவியின் முகத்தில் ஏகப்பட்டக் கவலை. ஜோசியருக்கோ அவர் கவலை. இருந்தாலும் நல்ல சம்பாவனை கிடைக்குமே. ஆகவே வரவேற்கிறார்.

ஜோ. வாங்கம்மா, என்ன கவலையா இருக்கீங்க? காளை விஷயம்தானே (அந்த ஊரில் மாட்டுக் கொள்ளை சர்வ சாதாரணம்)?
மி.ம. ஆமாம் ஜோஸ்யரே, இளையக்காளைதான் எங்க வீட்டு மூத்தக்காளையிடம் சண்டை போட்டுண்டு போயிட்டான்.
ஜோ. (திடுக்கிட்டு, ஆனால் சுதாரித்து கொண்டு) அடேடே, நான் பயந்தா மாதிரியே ஆயிடுத்தே. உங்க கிரக நிலை சரியில்லை. ஒரு பூஜை போடலாம்.
மி.ம. (அவருக்கு 100 ரூபாய் கொடுத்து விட்டு கேட்கிறார்): எதுக்கும் நம்ம சேதுவை பட்டணத்துக்கு அனுப்பி பார்க்கச் சொல்லட்டுமா?
ஜோ: (பணத்தை வேட்டியில் முடிந்து கொண்டே, விட்டேத்தியாக): பேஷா செய்யுங்கோ.

'சேதுவுக்கு மூளை லேது' என்று பெயர் வாங்கியிருந்த அந்த சேது பிறகு அக்கதையில் செய்யப் போகும் குளறுபடிகள்... அதை அந்த நாவலில் போய் படித்து கொள்ளவும். நான் பதிவுக்கு போக வேண்டும்.

வைகுந்தத்தில் விஷ்ணுவைப் பார்க்க ஒரே நெரிசல். நாரதர் தலைமையில் தேவர்கள் அரக்கர்கள் பண்ணும் அக்கிரமங்களை பற்றி புகார் செய்து மூக்கால் அழ, பகவான் எப்போதெல்லாம் அதர்மம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் வருவேன் என்று பொருள்பட ஸ்லோகம் கூறுகிறார். அது "சம்பவாமி யுகே யுகே" என்று முடியும். (ஏம்பா அவசரப்படறீங்க, இது தலைப்பை நியாயப்படுத்துகிறதுன்னு நான் எப்போ சொன்னேன்)?

இப்போது மேட்டருக்கு வருவோம். இன்று ஆனந்த விகடனில் ஒரு தலையங்கம். ஹெல்மட் கூத்து பற்றி. இதில் என்ன குழப்பம் எனத் தெரியவில்லை. ஹெல்மட் வியாபாரிகள் பிழைக்க வேண்டாமா? அவர்கள் சம்பாதித்தால்தானே கமிஷன் எல்லாம் கிடைக்கும்? கட்டாயப்படுத்தாமல் நம்மூர்க்காரர்கள் வாங்குவார்களா? அதுதான் ஜூன் 1 வரைக்கும் இத்தனை பந்தா. பிறகு? ஜூன் ஆரம்பித்து விட்டது. கட்சித் தலைவர்கள் வருவார்களே, "தலைவா இதனால் ஓட்டிழப்பு நிச்சயம்" என்று கூறிக் கொண்டு. அதனால் என்ன? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கெடுபிடி தேவையில்லை என்று தாயுள்ளத்துடன் ஆணை பிறப்பித்தால் போயிற்று. எதற்கும் வரவேண்டியதெல்லாம் வந்து விட்டதல்லவா? அப்புறம் என்ன புடலங்காய் சட்டம்? இப்போது ஓட்டுத்தானே முக்கியம்? பிறகு தேவைப்பட்டால் மொத்த சட்டத்தையும் அதிகாரபூர்வமில்லாது கிடப்பில் போடுவது. அப்போதுதானே தேவைப்பட்டால் போலீஸ் மாமூல்கள் கேட்க முடியும்?

அது சரி. இது வரை வாங்கியவர்கள் மனநிலை? அதற்கு என்ன செய்ய முடியும்? சட்டம் என்று இருக்கிறதல்லவா? அதை மதித்தவர்கள் நல்லவர்கள். அவர் பொருட்டு பெய்யெனப் பெய்யும் மழை என்று உணர்ச்சியால் கரகரக்கும் குரலில் ஒரு குறுநகையோடு கவி சம்மேளனம் ஒன்றில் கவிதை நடையில் விளம்பினால் போயிற்று.

இத்தனையும் ஏற்கனவே நடந்து முடிந்திருக்கிறது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால். அப்போதும் அதே கெடுபிடிகள். ஹெல்மெட்டை கையில் பிடித்துக் கொண்டுதான் ஸ்கூட்டர் லிஃப்டே கேட்க முடியும். இதே போல எல்லோரும் ஹெமெட்டுகள் வாங்கியதும் சட்டத்தின் ஜபர்தஸ்து தானே குறைந்தத்து. ஒரே ஒரு வித்தியாசம். அப்போது அதிமுக அரசு. இப்போது திமுக அரசு.

ஆக, எப்போதெல்லாம் கட்சிக்கு பணம் தேவைப்படுகிறதோ, இம்மாதிரி சட்டங்கள் காமதேனுவாகின்றன.

சம்பவாமி யுகே யுகே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

  1. என்னாது, சாம்பார்ல பல்லி உழுந்துடுச்சா ?

    ReplyDelete
  2. டோண்டு அவர்களே, ஒரு சிறு திருத்தம். நாவலின் பெயர் கல்யாணி இல்லை 'கோமதியின் காதலன்'. பின்னாளில் இது திரைப்படமாகவும் வெளி வந்தது

    ReplyDelete
  3. சம்பவாவி யுகே யுகே சோ அவர்களின் பிரபல நாடகம்

    ReplyDelete
  4. டோண்டு சார் ஏதாச்சும் கெட்ட கனவு கண்டு பயத்தில எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?

    புள்ளிராஜா

    ReplyDelete
  5. //டோண்டு சார் ஏதாச்சும் கெட்ட கனவு கண்டு பயத்தில எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?//
    பயமா? இந்த டோண்டு ராகவனுக்கா? விளக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. இப்படி இந்திய அரசியல் சட்டத்திலும் 1000க் கணக்கான சட்டங்கள் இதுவரைக்கும் ஒரு முறை கூட உபயோக்கிக்கபடாமல் இருக்கிறது.
    இப்படி பயன்படுத்தாமல் இருக்கும் சட்டங்களை காட்டியே மக்களிடமிருந்து அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். 'ஊழலையும், லஞ்சத்தையும் உறம் போட்டு வளர்ப்பது பயன்படுத்தாமல் இருக்கும் சட்டங்களே', இதை நான் சொல்லவில்லை மைய லஞ்சம் மற்றும் ஊழல் கண்கானிப்புதுறை கூறியுள்ளது .

    Remove obsolete laws through sunset principles
    // Obsolete laws and time consuming bureaucratic procedures are the breeding ground for corruption. We should implement through out the Government of India the principle of the sunset laws so that no law will be on the statute book for more than five years or ten years unless it is re-enacted and repromulgated after careful examination. This will automatically ensure that obsolete laws do not clutter the system.
    ..... Jain Committee which has recommended that out of the 2500 administrative laws, about 1300 should be scrapped. This can be done at one go so that the Government of India is not hampered by the presence of obsolete laws and time consuming procedures which are breeding grounds for corruption.//

    வெளிநாடுகளிலும் உபயோகபடுத்தாமல் சட்டங்கள் இருக்கின்றன் ஆனால் அங்கு sunset clause முலமாக பயனில்லா சட்டங்கள் 5 அல்ல 10 வருடங்களில் காலாவதி ஆகிவிடும். ஆனால் இந்தியாவில் அப்படி காலவதி ஆகும் முறையே கிடையாது.

    http://cvc.nic.in/vscvc/note.html

    ReplyDelete
  7. அரசியலை விடுங்கள், பணத்தை விடுங்கள், பாதுகாப்பை கவனியுங்கள். கவசம் வாங்காதவர்கள் மண்டை தெறித்து சாகட்டும்.

    ReplyDelete
  8. இன்னா ஐயிரே எத்தனை தலக்கவசம் வாங்குன.இனிமேல் ஐயர்வாள் மட்டுந்தான்
    தலக்கவசம் மாட்டனுமுனு சட்டத்தை மாத்தியாச்சு. தெரியுமோன்னோ?

    ReplyDelete
  9. //இன்னா ஐயிரே எத்தனை தலக்கவசம் வாங்குன.//
    ஸ்கூட்டர் விடத் தெரியாது. பின்னால் உட்கார விருப்பம் இல்லை. வேண்டுமானால் எனது காரில் செல்வேன் (வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு எனது காரில்தான் செல்வேன், இல்லாவிட்டால் எனது பஸ்சிலாவது மின்சார வண்டியிலாவது). ஆகவே நோ ஹெல்மட்.

    டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல்மட் வேண்டுமென்று போட்டு ஒரு கான்ஸ்டபிளை டென்ஷன் ஆக்கினது வேறு கதை. அவன் பாவம் என்னுடன் ஹிந்தியில் பேசி, நான் அவனுக்கு சுத்தமான உ.பி. ஹிந்தியில் பதிலளிக்க(சைக்கிள்காரனுக்கு ஹெல்மட் கூடாது என்பது சட்டமா, என சட்டமாகக் கேட்க) அவன் சுத்தமாக வெறுத்து ஹரியாணவி வட்டார மொழியில் சத்தமாகப் புலம்பியபடி சென்றான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //அரசியலை விடுங்கள், பணத்தை விடுங்கள், பாதுகாப்பை கவனியுங்கள். கவசம் வாங்காதவர்கள் மண்டை தெறித்து சாகட்டும்.//

    ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஒரு தடவை சொன்னா 100 தடவை சொல்லறதுக்கு சமம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. //டோண்டு அவர்களே, ஒரு சிறு திருத்தம். நாவலின் பெயர் கல்யாணி இல்லை 'கோமதியின் காதலன்'.//
    நன்றி ஆதித்தன அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. வாருங்கள் செந்தழல் ரவி. எனக்கு சில மொழி பெயர்ப்புகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
    1. யாதோன் கீ பாராத் = யாரோ எட்டிப்பாக்கிறான்
    2. கோரா காகஜ் = கோரமான காகம்
    3. ஜஞ்சீர் = இஞ்சி
    4. குப்தக்யான் = குப்தனின் ஞானம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. //'சேதுவுக்கு மூளை லேது'//

    கிழட்டு பாப்பார பரதேசிக்கும் லேது!

    ReplyDelete
  14. //டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல்மட் வேண்டுமென்று போட்டு ஒரு கான்ஸ்டபிளை டென்ஷன் ஆக்கினது வேறு கதை. அவன் பாவம் என்னுடன் ஹிந்தியில் பேசி, நான் அவனுக்கு சுத்தமான உ.பி. ஹிந்தியில் பதிலளிக்க(சைக்கிள்காரனுக்கு ஹெல்மட் கூடாது என்பது சட்டமா, என சட்டமாகக் கேட்க) அவன் சுத்தமாக வெறுத்து ஹரியாணவி வட்டார மொழியில் சத்தமாகப் புலம்பியபடி சென்றான்.//
    நிஜமாகவே பாவம்தேன் போலீஸ்காரன். இப்படித்தான் எல்லோரையும் டென்ஷன் ஆக்குவீங்களா?

    வெளியூர்க்காரன்

    ReplyDelete
  15. "அப்போது அதிமுக அரசு. இப்போது திமுக அரசு."

    காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது.எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.

    ReplyDelete
  16. //காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது.எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.//
    ரிப்பீட்டே.

    ராம்குமார்

    ReplyDelete
  17. ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில் எந்த மட்டை சிறந்த மட்டை என்பது தெரியுமா?

    ReplyDelete
  18. //ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில் எந்த மட்டை சிறந்த மட்டை என்பது தெரியுமா?//
    முதல் மட்டை: உருப்படுவியா நீ?
    இரண்டாம் மட்டை: நீ மட்டும் உருப்படுவியா?
    மூன்றாம் மட்டை: நீங்க ரெண்டு பேருமே உருப்பட மாட்டீங்க.
    நாலாம் மட்டை: இங்க மட்டையடிக்கறதுக்கு பதிலா ஏதாவது தமிழ்வலைப்பூவிலே போய் கும்மி அடிப்போமா?
    முதல் மூன்று மட்டைகள்: எங்கே?
    நாலாம் மட்டை: ஓசை செல்லா எதுக்கு இருக்கார்? அவரோட வூட்டுக்குப் போவோமா?
    எல்லா மட்டைகளும்: அதுதான் சரி.

    மட்டைகள்

    ReplyDelete
  19. டோண்டு, பதிவு நன்றாக இருக்கிறது! நீங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் நினைவு வைத்திருக்கிறீர்களே!

    ReplyDelete