பகுதி - 66 (06.05.2009):
அசோக்கை பார்க்க சைக்கியாட்ரிஸ்ட் மார்க்கபந்து வருகிறார். நாதனுக்கு அது பிடிக்கவில்லை. சைக்கியாட்ரிஸ்ட் அசோக்குடன் பேசும்போது அவனை தண்ணீர் கொண்டு வரும்படி அனுப்பி விட்டு, அவர் அசோக்கின் மாத்திரைகளை எடுத்துவிட்டு அவற்றின் இடத்தில் ப்ளாசீபோவை (placebo) வைத்துவிட்டு செல்கிறார். பாகவதரிடம் ஃபோனில் பேசி அவருக்கும் விஷயத்தைக் கூறி அவரை ஆசுவாசப்படுத்துகிறார்.
கிருபா வீட்டில் கிரியும் அவனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜயந்தியுடன் தனது திருமணம் நின்றதில் அவன் வருத்தத்துடன் இருக்கிறான். கிருபா அவனுக்கு ஆறுதல் கூறுகிறான். அவன் நிலையை நன்கு புரிந்து கொண்ட ஒரு பிராமண குடும்பத்தின் பெண் அவனுக்கு கிடைப்பாள் என உறுதி கூறுகிறான்.
காஞ்சிபுரத்தில் நீலக்ண்டனுக்கும் பாகவதரின் இரண்டாம் மகன் மணிக்கும் நீலக்ண்டன் அவனது மன்னி ராஜிக்கு அளித்த போதனை பற்றியும், அதனால் ராஜி வார்டனுக்கு தந்த லெட்டர் பற்றியும் விவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பாகவதரும், அவர் மனைவியும் மணியை விலகிச் செல்லுமாறு கூறுகின்றனர். நீலக்ண்டன் கறுவிய வண்ணம் அந்த இடத்தை விட்டு அகலுகிறார்.
ஒரு கோவில் வாசலில் சுலோக புத்தகங்கள், நோன்பு கயிற்கள் விற்கும் ஒரு வயோதிகரிடம் வந்து கிரி அனுமான் சாலிஸா இருக்கிறதா என விசாரிக்கிறான்.
அது என்ன அனுமான் சாலிஸா என சோவின் நண்பர் கேட்க, அவை துளசிதாசரால் அனுமனை பற்றி இயற்றப்பட்ட 40 சுலோகங்கள் என கூறுகிறார். பிறகு துளசிதாசர் பற்றி பேசுகிறார். அவர் முதலில் சாதாரண மனிதராகத்தான் இருந்தார். அவருக்கு தன் மனைவி ரத்னாவளி மேல் பெரிய மோகம். மனைவி பிறந்த வீடு செல்ல, அவரும் மனைவி பின்னாலேயே செல்ல, அவர் மனைவி சலிப்புடன், “என் பின்னால் வருவதற்கு பதிலாக ராமபிரான் பின்னால் அலைந்தால் போகிற இடத்துக்கு புண்ணியமாகுமே” எனக்கூற, அவரும் ஞானம் பெற்று, ராமபக்தராகிறார். பிறகு சிவனின் அனுக்கிரகம் பெற்று அவர் ராமசரிதமானஸ் என்னும் தலைப்பில் ஹிந்தியில் ராமாயணம் எழுதுகிறார்.
வால்மீகி ராமனை மனிதனாகவே முக்கால்வாசி இடங்களில் சித்தரித்து எழுத, இவரோ ராமனை தெய்வமாகவே வர்ணிக்கிறார். ராமாயண கதையோட்டத்தில் இதனாலேயே பல மாறுதல்களையும் செய்துள்ளார். அப்படிப்பட்டவரது அனுமான் சாலிஸாவை தினசரி 7 முறையாக, 21 நாட்களுக்கு பாராயணம் செய்தால், காரியசித்தி கிடைக்கும் எனவும் சோ கூறுகிறார்.
கிரி மற்றும் வயோதிகரின் பேச்சு தொடர்கிறது. இருவருக்குமிடையே ஒருவித பாசம் உருவாகிறது. தான் இறந்ததும், கிரி பொறுப்பேற்று தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும் எனக்கூற, அவனும் ஒத்து கொள்கிறான்.
சாம்பு வீட்டில் அவரும அவர் மனைவி செல்லம்மாவும் அசோக்குக்கு ஷாக் சிகிச்சை தரப்போவது பற்றி பேசுகின்றனர். அசோக்குக்காக தான் 108 முறை காயத்ரி மந்திரம் கூறப்போவதாக கூறிய சாம்பு அம்மந்திரத்தின் பெருமையை வர்ணிக்கிறார். அப்போது அங்கு வரும் அசோக் அவரிடம் தான் அவர் வீட்டில் இரண்டு நாளைக்கு தங்க அனுமதி வேண்டுகிறான். முதலில் மறுக்கும் சாம்பு அவரது மனைவியின் சிபாரிசால் ஒத்து கொள்கிறார்.
பகுதி - 67 (07.05.2009):
பாகவதர் வீட்டில் சிவராமன் தனக்கு ராஜி வார்டனுக்கு லெட்டர் கொடுத்த தகவலே தெரியாது என அழுத்தம்திருத்தமாகக் கூற, பின்னே எப்படி அவனது கையெழுத்து அதில் இருந்ததென பாகவதர் திகைக்க அவரது இரண்டாம் மகன் மணியோ மன்னிதான் அண்ணனது கையெழுத்தை ஃபோர்ஜ் செய்து போட்டிருக்க வேண்டும் என சரியாக ஊகிக்கிறான். விஷயத்தை இத்துடன் விடவேண்டும் என்றும், ராஜியிடம் சிவராமன் இது பற்றி பேசலாகாது என்றும் பாகவதரும் அவர் மனைவியும் சிவராமனிடம் கூறுகின்றனர். சிவராமன் தான் அவளிடம் சுமுகமாகவே பேசப்போவதாக கூறுகிறான்.
நாதன் வீட்டிற்கு சாம்பு அன்றைய பூஜைக்காக வரும்போது நாதனும் வசுமதியும் அசோக்கைக் காணாது தவித்து கொண்டிருக்கின்றனர். அதைப் பார்த்து சாம்புவுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அசோக் தன் வீட்டில் ஒளிந்திருப்பதை அவரால் கூறவும் முடியவில்லை, கூறாமலும் இருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.
அசோக் தன் வீட்டில்தான் இருக்கிறான் என்னும் உண்மையை சாம்பு மறைப்பது குற்றமில்லையா என நண்பர் கேட்க, சோ அதை ஒத்து கொள்கிறார். “Suppressio veri suggestio falsi" என்று இதை லத்தீன மொழியில் கூறுவார்கள் என கூறும் அவர், உண்மையை மறைப்பது பொய்க்கு சமம் என அதன் பொருளையும் தருகிறார். மாண்டவ்யர் என்னும் ரிஷிக்கு இது சம்பந்தமாக நிகழ்ந்த கழுவேற்றம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இதன் காரணத்தை அறிய அவர் தர்மதேவதையை போய் கேட்க, அங்கு கிடைத்த பதிலில் திருப்தியடையாது அவர் தர்மதேவதையையே மனித அவதாரம் எடுக்குமாறு சபிக்கிறார். அவர்தான் மகாபாரதத்தில் மகத்தான பொறுப்பை வகித்த விதுரராக அவதரிக்கிறார்.
நாதன் பேசிக் கொண்டிருக்கையில் நீலகண்டனிடமிருந்து ஃபோன் வருகிறது. அசோக்கை எப்படியாவது தான் டாக்டர் அப்பாயின்மெண்டுக்கு அழைத்து வருவதாக அவர் கூறிவிட்டு அசோக்கை தேடத் துவங்குகிறார். தன் வீட்டிற்கு கிளம்பிய சாம்பு மனது கேட்காது, நாதன் வீட்டுக்கு திரும்ப வந்து அசோக் தனது வீட்டில்தான் இருப்பதாகக் கூற, நாதன் அவருக்கு நன்றி கூறுகிறார். வசுமதியோ அவரிடம் கடுமையாகப் பேசுகிறாள். இங்கு சாம்பு வீட்டில் அசோக் அமர்ந்து புத்த்கம் படித்து கொண்டிருக்கிறான். செல்லம்மா மாமி அவனைப் பார்த்த வண்ணம் அடுத்த அறைக்கு செல்கிறாள். திடீரென அசோக் மாயமாக மறைகிறான்.
டாக்டர் மார்க்கபந்து டாக்டர் ஹம்சாவிடம் வந்து அசோக் பற்றி பேசுகிறார். அசோக் முழுக்க நார்மலாகத்தான் இருக்கிறான் என அவர் கூற, ஹம்சா அதை மறுக்கிறார். மார்க்கபந்து ராமகிருஷ்ண பரமஹம்சர், ஐயப்பன் மகரஜோதி, ஆகிய விஷயங்களை பற்றி கூறும் எல்லாவற்றையும் அவர் கேலி செய்கிறார்.
திருச்சியில் சிவராமன் வீட்டில் அவன் ராஜியை அவள் செய்த காரியத்துக்காக கண்டிக்கிறான். அவளும் தன் பக்கத்து நியாயத்தை கூறுகிறாள். ஒரு அன்னை என்ற ஹோதாவில் தான் அவ்வாறு செயலாற்ற வேண்டியதாகவும் அவள் கூறுகிறாள். ஒரு மாதிரியான அசௌகரிய அமைதி நிலவுகிறது.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
No comments:
Post a Comment