நிரந்தர பக்கங்கள்

5/28/2006

மீட்டிங் பற்றிய விஷயங்கள்

சில நாட்கள் முன்னால் ஜோசஃப் அவர்களிடமிருந்து சிவஞானம்ஜி அவர்களின் எண்ணை பெற்று அவருடன் பேசியிருந்தேன். அப்போது மாதக் கடைசியில் வலைப்பதிவார் சந்திப்பு நடைபெறலாம் என்று கூறியிருந்தேன். மூக்கு சுந்தர் அவர்கள் சென்னைக்கு வந்திருக்குக்கும் தருணத்தை பயன்படுத்தி அவருடன் பேச விருப்பம் தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் இட்டிருந்தேன். அவரும் சந்திக்கலாம் எனக் கூறியிருந்தார். தவிர கோ.ராகவன் வேறு இங்கிருக்கிறார். எல்லோரையும் சந்திக்கலாம் என்று நானும் ஜோசஃப் சாரும் நினைத்திருந்தோம். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் அவ்வாறு சிவஞானம்ஜியிடம் அவ்வாறு கூறியிருந்தேன்.

நேற்று காலை திடீரென சிவஞானம்ஜி அவர்கள் தொலை பேசியில் கூப்பிட்டார். மீட்டிங் விஷயம் என்னவாயிற்று எனக் கேட்டார். ஜோசஃப் சாருடன் பேசிவிட்டு கூப்பிடுவதாக அவரிடம் கூறினேன்.

ஜோசஃப் அவர்கள் திடீரென கூக்ள் டாக்கில் வந்து நான் கேட்க நினைத்ததையே அவரும் கேட்டார். சில நிமிடப் பேச்சிலேயே நேற்று மாலை மீட்டிங் வைக்கலாம் என்று தீர்மானித்தோம். என்னுடைய வலைப்பூவில் ஒரு பதிவு போடுவது எனத் தீர்மானித்தோம். அது போலவே போட்டேன். மணி 11.30. குறுகிய கால அவகாசம்தான், ஆனால் என்ன செய்வது. முடிவு எடுத்த ஐந்து நிமிடத்தில் பதிவு போட, அடுத்த சில நிமிடங்களில் ஜோசஃப் அவர்களும் அதை பின்னூட்டம் ரூபத்தில் கன்ஃபர்ம் செய்தார்.

ஜயராமன் அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டு பேச அவர் வருவதாகக் கூறினார். சிவஞானம் அவர்கள் பின்னூட்டத்திலேயே அதை கூறிவிட்டார். நாங்கள் பயந்த மாதிரியே பலருக்கும் முன்னாலேயே ஏற்றுக் கொண்ட வேலைகள் இருந்ததால் வர இயலாமையை பின்னூட்டங்களில் தெரிவித்தனர்.

மாலை 6 மணிக்கு சரியாக என் கார் டிரைவ் இன்னில் நுழைந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஜோசஃப் சார் காரை பார்க் செய்து விட்டு வந்தார். அதன் பிறகு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு சிவஞானம்ஜி வந்தார். ஜயராமன் வழியில் இருப்பதாக செல்பேசியில் தெரிவித்தார். அதே போல வந்து சேர்ந்தும் விட்டார். மரவண்டு கணேஷ் ஃபோன் செய்து மீட்டிங் பற்றி கேட்க, அவரை உடனே புறப்பட்டு வரும்படி கூறினேன். அவர் நுங்கம்பாக்கத்தில் இருந்தபடியால் உடனே வந்து விட்டார். ஆக மொத்தம் ஐந்து பேர் தேறினோம். 6.10 அளவில் சந்திப்பையும் ஆரம்பித்தோம்.

சிவஞானம்ஜி பல அரசுக் கல்லூரிகளில் பொருளாதாரம் பேராசிரியராகப் பணியாற்றியவர். 2000 ஆண்டில் ஓய்வு பெற்றவர். பொருளாதாரத்தை மாணவர்களுக்கு தமிழ் போதனா மொழியிலும் கற்பித்தவர். பல பாடங்களை தமிழில் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதியவர். பல சுவாரசியமான விஷயங்கள் பற்றி கூறினார். இப்போது தமிழ்மணத்தின் ருசியை அறிந்து உள்ளே வந்தவர். தற்சமயம் பின்னூட்டங்கள் அதிகம் போடுவதாகவும் பதிவுகள் ரொம்பவும் போடவில்லை என்றும் கூறினார். தமிழில் நூற்றுக் கணக்கான பக்கங்களை அனாயாசமாக எழுதியவர் தற்சமயம் கணினி தட்டச்சு மூலம் அவ்வளவாக வேகமாக அடிக்க இயலவில்லை என்ற நிலை. ஜோசஃப் சார் அவரிடம் இகலப்பையை இறக்கிக் கொள்ளுமாறு கூறினார்.

தமிழ்மணத்தின் பிரச்சினையாகிய போலியின் விஷயத்தை நான் சிவஞானம் அவர்களிடம் மிகச் சுருக்கமாக விளக்கினேன். பிறகு அது பற்றி பேச்சைத் தவிர்த்து வேறு பல விஷயங்கள் பேசினோம். பேசிப் பேசி அலுத்த விஷயம்தானே அது.

ஐந்து பேர் மட்டும் இருந்ததில் ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால், எல்லோரும் ஒருக்கொருவர் பேசிக் கொள்ள முடிந்ததுதான். இப்போது பல குடும்பங்களில் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்வதால் நாளடைவில் மாமா, சித்தப்பா, அத்தை, பெரியப்பா, சித்தி ஆகிய உறவுமுறைகள் பற்றி யாருக்குமே பரிச்சயம் இருக்காது என்ற அச்சத்தை சிவஞானம்ஜி வெளியிட்டார். ஜயராமன் அவர்கள் தன் தரப்புக்கு தன் அம்மாஞ்சி மன்னியின் ஒன்று விட்ட அத்தங்காவின் வீட்டில் நடந்த மரணத்தை துக்கம் கேட்டு வருமாறு தன் தந்தை பணித்ததைக் கூறி இவ்வாறான உறவுமுறைகள் தற்சமயம் யாருக்கும் தெரியாமல் போய்விடும் அபாயத்தையும் கூறினார்.

பொருளாதாரம் சம்பந்தமாக ஏதேனும் சொல்லகராதி தமிழில் அதிகாரபூர்வமாக உள்ளதா என்று சிவஞானம்ஜியை நான் கேட்க, அவர் இல்லையென்று கூறினார். பாடப் புத்தகங்களும் தமிழில் சரியானத் தரத்தில் இல்லை என்றும் கூறினார். ஆங்கிலப் புத்தகங்களை வைத்துத்தான் ஒப்பேற்றவேண்டியிருக்கிறது, முக்கியமாக பி.ஏ. மற்றும் எம்.ஏ. வகுப்புகளில் என்றார். இந்த அழகில் தமிழ்வழிக் கல்வியை எவ்வாறு கொண்டு வருவது?

நானும் மரவண்டு கணேஷும் மற்ற மூவர் பேசுவதை கூர்ந்து கவனித்தோம். தமிழ்வழிக் கல்வி பற்றிய பல புது விஷயங்களை சிவஞானம்ஜி அவர்கள் சுவையாகக் கூறினார். ஏ.எல். லட்சுமணஸ்வாமி முதலியார் அவர்கள் மதறாஸ் யூனிவெர்சிடி துணைவேந்தராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததை நான் நினைவுகூற, சிவஞானம்ஜி அவர்கள் ஆதிசேஷய்யாவை பற்றி பேசினார். அவர்கள் அளவுக்கு இப்போது யாரும் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மையே. என் சொந்த ஊரான சருக்கை பற்றியும் சிவஞானம்ஜி அவர்கள் பேசினார். அந்தப் பக்கத்தில் தனக்கு நிலங்கள் இருப்பதையும் கூறினார். மூப்பனார் அவர்களது குடும்பம் தனக்கு மிகப் பரிச்சயம் என்றும் கூறினார்.

ஜயராமன் அவர்கள் டிஜிட்டல் கேமரா கொண்டு வந்தார். அப்பக்கம் வந்த வெயிட்டரை எங்கள் ஐவரையும் சேர்த்து போட்டோ எடுக்குமாறு அவர் கேட்டுக் கொள்ள, வெயிட்டரும் அவ்வாறே செய்தார். முதல் போட்டோ சற்று டார்க்காக வர, ஜயராமன் அவர்கள் "விடாது கறுப்பு" என்று வந்த படத்தை விடுத்து இன்னொரு படம் எடுக்குமாறு கூறி எடுக்கச் செய்தார். இப்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்ப இப்பதிவில் அதை ஏற்றுகிறேன்.



இடமிருந்து வலம்: மரவண்டு கணேஷ், ஜோசஃப், டோண்டு ராகவன், சிவஞானம்ஜி மற்றும் ஜெயராமன்

இப்போது சில பொதுவான எண்ணங்கள்.

சந்திப்பு பற்றிய பதிவை போடும் முன்னரே நான் ஜோசஃப் அவர்களிடம் Arrangement will be on the basis of Dutch treat என்று போட்டுவிடலாமா என்று கேட்டேன். அவர் தான் பாங்க்கில் பெற்ற பதவி உயர்வுக்கான ட்ரீட்டாக இதை பாவித்து, செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறி விட்டார். எனக்கு மனது கேட்கவில்லை, ஆகவே கையில் தேவையான பணம் எடுத்துக் கொண்டு வந்தேன். ஐந்து பேர்களுக்கும் மைசூர் போண்டா (மரவண்டு மட்டும் சாம்பார் வடை ஆர்டர் செய்தார்) மற்றும் காப்பி ஆர்டர் செய்தோம். பில் வந்ததும் ஜோசஃப் அவர்கள் அதை நொடியில் கைப்பற்றி பணம் செலுத்தி விட்டார்.

செலவைப் பங்கு போடுவது பற்றி போன முறையே ஜயராமன், மரபூர் சந்திரசேகர் ஆகியோர் என்னிடம் பிரஸ்தாபித்தனர். அப்போது செலவை பி.கே.எஸ். ஏற்றுக் கொண்டிருந்தார். அதற்கு முன்னால் துளசி அவர்களது கணவர் கோபால் பில்லை பே செய்தார். எனக்கு என்னவோ இதை வேறு மாதிரி கையாள வேண்டும் எனத் தோன்றுகிறது. நாசுக்கான இந்த விஷயத்தை இத்தருணத்தில் நான் எழுப்பி விட்டேன். அடுத்த முறையாவது இது பற்றி ஏதேனும் செய்து செலவை எல்லோரும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். சந்தர் அவர்களும் இது பற்றி எனது முந்தையப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஊத வேண்டிய சங்கை இங்கு ஊதி விட்டேன். அடுத்த முறை பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

50 comments:

  1. சார்

    நீங்கள் அனைவரும் சந்தித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    நன்றி.

    ReplyDelete
  2. ஏங்க டோண்டு,

    11.30 க்கு முடிவு செஞ்சு மாலை 5 மணிக்குன்னு ஆனதுனாலேதான் என்னாலே வந்து கலந்துக்க முடியலை:-))

    அது என்ன எப்பவும் இப்படி ஒரு செட் மெனு? புதுசா வேற எதாவது சாப்புட்டு இருக்கலாமே?

    சிவஞானம்ஜியை எங்க கண்ணுலே காமிச்சதுக்கு நன்றி. அவரோட விவரம் ஒண்ணும் இதுவரை தெரியாததாலே
    பாவம், அவரை மிரட்டி, விரட்டியெல்லாம் பின்னூட்டத்துலே கலாய்ச்சு இருக்கேன்.(-:

    தப்பா நினைச்சுக்க மாட்டார்னு நம்பறேன்.

    மீட்டிங் விவரம் போட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றி டோண்டு அவர்களே!
    பயனுள்ள சந்திப்பு; மகிழ்ச்சி
    வலைப்பூவர்கள் மகா......நாடு னு
    நான் துள்சிதளத்தில் நேற்றிரவே
    பின்னூட்டம் இட்டேன்.போடோவைப்
    போட்டு குட்டை உடைத்துவிட்டீர்களே

    ReplyDelete
  4. "11.30 க்கு முடிவு செஞ்சு மாலை 5 மணிக்குன்னு ஆனதுனாலேதான் என்னாலே வந்து கலந்துக்க முடியலை:-))"

    அடேடே, ஆறு மணி என்பதை தவறுதலாக ஐந்து என்று நினைத்து விட்டீர்களா? வந்திருக்கலாமே!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. நன்றி சிவபாலன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. துளசி ஒன்றும் தவறாக நினைத்து கொள்ள மாட்டார், ஏனெனில் அவர் அட்டெண்ட் செய்த முதல் சர்வதேசீய சந்திப்பில் நான், அவர் மற்றும் அவர் கணவர் மட்டும் இருந்தோம். இரண்டாம் சந்திப்பில் தருமி, அவர், அவரது கணவர் இன்னும் ஒரு வலைப்பதிவாளர் என்று நால்வர் மட்டுமே.

    நாமோ ஐவர் ஆயிற்றே.

    மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிதுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. டோண்டு சார்,
    இங்கு டட்ச் டிரீட் மிகவும் சாதாரணம்.நம்மூரில் ஓட்டலில் பில்லுக்கு சண்டை பிடிப்பது ஒரு பார்மாலிடியாகவே ஆகிவிட்டது.இதனால் சில மனஸ்தாபங்கள் கூட ஏற்பட்டுள்ளன.சிலர் இன்னொருவர் பில் தருவார் என தெரிந்தால் சாப்பிடவே கூச்சப்படுவார்கள்.

    டட்ச் டிரீட் நல்ல வழிமுறை என எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete
  8. செல்வன் அவர்களே,

    நான் பம்பாயில் சமீபத்தில் எழுபதுகளில் இருந்த போது டட்ச் ட்ரீட்தான். ஆனால் வேறு ஒரு முறையில். அதாவது நாங்கள் நால்வர், ஜயகுமார், சுந்தரம், வீரராகவன் மற்றும் நான், ஒரே அறைவாசிகள் ஒன்றாக வெளியில் செல்லும்போது யாராவது ஒருவர் பில்லை செட்டில் செய்வர். ஒரே அவுட்டிங்கில் பல இடங்களில் நால்வரும் முறை போட்டுக் கொண்டு செலவு செய்வோம். இரவில் அறையில் உட்கார்ந்து கணக்கு பார்த்து கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொண்டுதான் படுக்கவே செல்வோம்.

    அடுத்த நாளும் இதே கதை தொடரும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. செல்வன்,

    டட்ச் ட்ரீட் என்பது என்னுடைய நண்பர் வட்டத்திலும் கடைப்பிடிக்கப்படுவதுதான். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட வலைப்பூவர் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணப்படும் அளவிலேயேதான் வலைஞர்கள் இருப்பர் என்பது எனக்கு தெரிந்ததுதான். அதனால்தான் தைரியமாக நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று டோண்டு அவர்களிடம் கூறியிருந்தேன்:)

    அடுத்த முறை சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிக்கையை வெளியிட்டு நடத்தலாம் என்று எண்ணம். இனி சென்னையில் நடைபெறவிருக்கும் எல்லா கூட்டங்களுக்கும் நம்முடைய டோண்டு அவர்களே கன்வீனராக இருக்கவேண்டும் என்பதும் என் விருப்பம். அடுத்த சென்னை வலைஞர் கூட்டத்திற்கு தியதியை இப்போதே நிர்ணயித்து அறிவித்தால் என்ன என்றும் தோன்றுகிறது.

    என்ன டோண்டு சார்?

    ReplyDelete
  10. தாராளமாகச் செய்யலாம் ஜோசஃப் அவர்களே. ஜூன் போகட்டும். ஜூலையில் செய்யலாம். இரண்டு வாரங்களுக்கு முன்னால் போட்டு எல்லோருக்கும் தோதான தேதியை வைத்துக் கொள்ளலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. அடுத்த வலைஞர் மாநாட்டுக்கு இப்போதே நான் ரிசர்வ் செய்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  12. சிவஞானம்ஜியை பெண் என்று யாரோ சொன்னதாய் நினைவு அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேனா என்று தெரியவில்லை :-) மனதில் இருக்கும் உருவம் மாறிப் போச்சே ஐயா!
    போண்டா, காபி என்றால் அடுத்த சந்திப்புக்கு நான் வரவில்லை :-)

    ReplyDelete
  13. உஷா அவர்களே,

    சமீபத்தில் 1961-ல் பதினொன்றாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு பாடல் சம்பந்தமாக பாடம் நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் "கவுந்தி ஐயையைக் கைதொழ" என்ற அடி கவுந்தி அடிகளைப் பற்றி வந்தது. எங்கள் தமிழாசிரியர் அப்ரஹாம் லிங்கன் (பட்டப் பெயர், சொந்தப் பெயர் தெரியாது) ஐயை என்பது ஐயாவுக்கு பெண்பால் என்று விளக்கம் தர, நானும் என் நண்பன் டி.ஆர். சந்திரனும் ஒரே சமயத்தில் எழுந்து நின்று ஆசிரியரைக் கேட்டோம், "சார், கவுந்தி அடியடிகள் பொம்பளையா?" என்று. ஆசிரியர் அடுத்த அரை மணி நேரத்துக்கு சீதைக்கு ராமன் சித்தப்பா என்ற கதையை விளக்கிக் கூற ஒரே கலாட்டாதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. உங்கள் வரவு நல் வரவு ஆகுக சந்தர் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. படிக்கச் சுவையாக இருந்தது!
    பார்க்கவும்தான்!
    நன்றி.

    ReplyDelete
  16. சென்ற மாலை சந்திப்பு மனதில் நின்று மகிழ்விக்கும் சந்திப்பு.

    ஒரு நூறு நல்ல பதிவுகள் (இவற்றை தேடத்தான் வேண்டியிருக்கிறது...) படித்த திருப்தி எனக்கு இந்த ஒரு மணி நேர சந்திப்பில் ஏற்பட்டது.

    அனுபவம் நிறைந்த இந்த வலைஞர்களின் அனுபவ பரிமாற்றங்கள் கேட்பதற்கு சுவாரசியம் மட்டுமல்லாமல் தெரிந்துகொள்ளும் விஷய ஆர்வத்துக்கும் தீனியாக இருந்தது.

    சென்ற முறை போல் அதிக நண்பர்கள் சேரவில்லை. ஆனாலும், சுவாரசியம் குறையவில்லை.

    உஷா அவர்களின் சலிப்பு நியாயமானதுதான். ;-) டோண்டு அவர்களின் போண்டா பிரமோஷன் சூடாக நடந்தது. போண்டாவும் வடையும் ஒன்றுதான் என்று அவர் ஆணித்தரமாக பத்து நிமிடம் பேசினார். நான் வேண்டாம் என்று தடுத்தும், 'பேசாம நான் கொடுக்கறத சாப்பிடுங்க' என்று உரிமையாக அதட்டினார். நான் 'சார். நான் பேசறதுக்கு தான் வந்திருக்கேன். பேசாம போண்டா சாப்பிட இல்லை' என்று சொல்லிவிட்டு (வேறவழி...) போண்டா சாப்பிட்டேன். (நன்றாகத்தான் இருந்தது...)

    சிவஞானம் அவர்களின் எகனாமிக்ஸ் ஞானத்தில் சிறு துளி பருகினேன். மால்த்யூஸியன் தியரியில் அவர் நடைமுறை புள்ளிவிவரங்களை சொல்லி விளக்கினார். அது பொய்த்துவிட்டது என்று நான் சொன்னதை ராகவன் (வழக்கம்போல) மறுத்தார். ;-)

    இவரை பார்த்த உடன் நான் எகனாமிக்ஸூக்கு பயந்தே கிடப்பில் போட்ட என் CFA பாடங்களை இறக்கி பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

    கணேசைத்தவிர எல்லோரும் வயதில் என் மூத்தவர்கள். ஆனால், அவர்கள் காட்டிய உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டது.

    ரிடையர்ட் கேஸ்கள் என்று அருவருப்பாக எழுதும் தமிழ்மணத்தில் உள்ள சில அறைகுறைகள் இவர்களை பார்த்து திருந்தட்டும்.

    ஜோசப் அடிக்கடி கேரளா போகும் ரகசியம் தெரிந்துகொண்டேன். (அது இங்கே எழுதப்படாது :-))

    நன்றி

    ReplyDelete
  17. "படிக்கச் சுவையாக இருந்தது!
    பார்க்கவும்தான்!"
    எது, எங்கள் ஃபோட்டோவா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. நான் விரும்பியது போலவே நீங்கள் விட்டுப் போனவற்றை எழுதியுள்ளீர்கள் ஜெ அவர்களே.

    போண்டாவும் வடையும் ஒரே மாவில்தான் செய்கிறார்கள் என்பதால் அவை இரண்டும் ஒன்றே என்பது எனது துணிபு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. மிக நல்ல முயற்சி, அதனை பதிப்பித்து எல்லோரும் அறியச் செய்தது, 'லைவ்'-ஆக பங்கு பெற்றது போலிருந்தது.

    மேலும் வளர, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. சூட்டோடு சூடாக பதிவு போடாமலிருந்தால் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று ஆகியிருக்குமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. டோண்டு அவர்களே
    போண்டாவும் வடையும் ஒன்றுதான்
    என்று மீட்டிங்கில் சொன்னீர்கள்
    மசால்வடையும் போண்டாவும் சொந்தம் என்று துளசி கூறுகின்றார்
    அப்போ மசால் வடையும் வடையும் ஒன்றா......?

    ReplyDelete
  22. மசால் வடை என்பது வேறு மெது வடை என்பது வேறு. ரெண்டையும் போட்டுக் கொழப்பிக்கப்படாது (வடிவேலுவின் குரலில்). மெது வடையும் போண்டாவும்தான் ஒரே மாவு.

    மசால் வடை? அது எலிக்குத்தான் அதிகம் பிடிக்கும்!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. நான் தமிழ்மணத்திற்கு புதிது...இது போல் வலை உலகில் இருப்பவர்கள் நிஜ உலகில் சந்திப்பதை பற்றி தெரிந்து கொண்டால் சந்தோஷமாக இருக்கிறது!! தாயகம் திரும்பியதும் இனி நானும் வருவேன் இது போன்ற சந்திப்புகளுக்கு... (இது மிரட்டல் இல்லை, ஆசை தான்!)

    ReplyDelete
  24. //
    மசால் வடை? அது எலிக்குத்தான் அதிகம் பிடிக்கும்!!
    //

    ஏங்க இந்த கவர்மெண்ட் ஆபீஸ்லெ வேலெ பார்கிறவங்கள்ளாம் அது விறும்பி சாப்பிடுகின்றார்களே....

    ரெண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? :))

    வஜ்ரா ஷங்கர்.

    ReplyDelete
  25. ஷங்கர் அவர்களே, பெருச்சாளிக்கும் மசால் வடை பிடிக்கும் என்பது ஏனோ என் நினைவுக்கு வருகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. சென்னைக்கு வந்தால் அவசியம் சந்திக்கலாம் ஸ்ரீராம் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. மரவண்டு கணேஷ்,
    நீங்கள் சிவகாசி ANJA கல்லூரியில் 1995 முதல் 1998 வரை B.sc வேதியியல் படித்தவர் தானே?. நான் அதே வருடங்களில் B.SC இயற்பியல் படித்தேன். உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். என் பெயர் மகேந்திரன். நாம் இருவரும் NCC யில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். 1997ம் ஆண்டு மதுரையில் NCC முகாமில் ஒன்றாகத் தங்கியிருதோம். உங்களை நான் 2001 ம் ஆண்டு சென்னையில் சக்தி டவர்ஸில் சந்தித்திருக்கிறேன். நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறதா?

    ReplyDelete
  28. என் பதிவு மூலம் நீங்கள் ஒரு நண்பரை கண்டு கொள்ள முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி மகேஸ் அவர்களே.

    மரவண்டூ அவர்களிடம் இப்போதுதான் இது பற்றி தொலை பேசினேன். அவரும் நீங்கள் சொன்ன விஷயங்களை உறுதி செய்தார்.

    இது ஒரு சிறிய உலகம்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. ஜூலையில் சென்னையில்தான் இருப்பேன். பின்னூட்டங்களிலேயே காலம் தள்ளி வரும் எனக்கு இந்த சந்திப்புகளில் இடம் உண்டா?

    (சிறு வயதில் அண்ணன் உரக்கப்பாடம் படிக்கையில் "என்னடா, காந்தி அடிகளைப்போய் தப்புத்தப்பாக கவுந்தி அடிகள் என்று சொல்கிறானே" என திருத்தப்போய் கிண்டல் செய்யப்பட்டது நினைவுக்கு வருகிறது).

    ஜோசப் அய்யா, என்னய்யா இது அநியாயம்! எப்படி இருந்த தலை எப்படி ஆகி விட்டது!

    ReplyDelete
  30. என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் அருணகிரி அவர்களே. இஸ்ரேலின் ஆதரவாளர் என் நண்பர் அல்லவா?

    Jokes aside, பின்னூட்டமிடுவதற்கே நீங்கள் ப்ளாக்கராக இருக்கத்தானே வேண்டும். இது ப்ளாக்கர் சந்திப்பு அல்லவா, கண்டிப்பாக நீங்களும் வரலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. ஆகா.......சந்திப்பு நடந்திருச்சா? சென்னைல வீட்டுல இணைய வசதி இல்லை. ஆகையால் இன்று காலைதான் ஜோசர் சாரின் குறிப்பும் உங்கள் மெயிலும் கண்டேன்.

    அதனால் என்ன...அடுத்த வாரம் சந்தித்து விட்டால் போகிறது.

    ReplyDelete
  32. அதெல்லாம் இருக்கட்டும் ராகவன் சார். நீங்கள் கொடுத்த செல்பெசி எண்ணும் செயலில் இல்லையே. நானும் ஜோசஃபும் ரொம்பவே முயற்சி செய்தோம். சரியான எண்ணைத் தெரிவிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. டோண்டு,

    கொஞ்சம் டைம் எடுத்து குறைந்தது ஒரு பத்து பதினைந்து பேர் சேர்த்து இருக்கலாம்.

    விடுங்க.அடுத்த முறை கலக்கிரலாம்.

    ReplyDelete
  34. முத்து நீங்கள் இம்மாதக் கடைசியில் வர முயற்சிக்கிறேன் என்றீர்களே? வரும் உத்தேசம் ஏதேனும் உண்டா?

    மீட்டிங்கிற்கு பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்னால் பதிவு போடுவதில் ஒரு பிரச்சினை உண்டு என்னைப் பொருத்தவரை. திடீரென்று துபாஷி வேலைக்கு கூப்பிடுவார்கள். கன்வீனரே வரமுடியாமல் போவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே போல பலருக்கும் நிலை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. அருமையான சந்திப்பு.... பெரிய கொடுமை என்னவென்றால் உங்கள் சந்திப்பு நடந்த 6 மணிக்கு உட்லண்ட்ஸ் எதிரே இருக்கும் ராம்ஸ் அபார்ட்மெண்டில் தான் நான் இருந்தேன்.... ஒரு 10 நிமிட அவகாசம் கிடைத்திருந்தாலும் எல்லோரையும் வந்து சந்தித்து விட்டு போயிருப்பேன்.....

    ReplyDelete
  36. எந்த உட்லேண்ட்ஸை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் லக்கிலுக் அவர்களே? நாங்கள் சென்றது ராதாகிருஷ்ணன் சாலையில் ஜெமினிக்கு அருகாமையில் இருக்கும் டிரைவ் இன் உட்லேண்ட்ஸுக்கு. அதன் எதிரில் அமெரிக்க நூலகம், பிறகு ஒரு சர்ச்தானே இருக்கின்றன? அதையும் தாண்டினால் கோக்னைஸண்ட் அலுவலக்க் கட்டிடம் வருகிறது.

    என்னுடன் செல்பேசியிருக்கலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. படம் போட்டு என் நண்பரைக் கண்டுபிடிக்க உதவிய டோண்டு சார் வாழ்க. :))))

    ReplyDelete
  38. நல்லது மகேஸ். நண்பருடன் பேசியாகி விட்டதா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. இன்னும் இல்லை டோண்டு சார். முக்கியமான வேலை காரணமாக வங்கி விடுமுறை நாளான இன்றும் அலுவலகம் கிளம்பிக் கொண்டுள்ளேன். பிறகுதான் பேசவேண்டும். நன்றி டோண்டு சார்.

    ReplyDelete
  40. <---
    மசால் வடை என்பது வேறு மெது வடை என்பது வேறு. ரெண்டையும் போட்டுக் கொழப்பிக்கப்படாது --->
    மாவு மட்டும் ஒண்ணா இருந்தாப் போதுமா? தயாரிக்கும் பக்குவமும் ஒண்ணா இருக்கணுமா? அப்படீன்னா இட்லியும் தோசையும் ஒண்ணா?

    ReplyDelete
  41. <--------
    ஜோசப் அடிக்கடி கேரளா போகும் ரகசியம் தெரிந்துகொண்டேன். (அது இங்கே எழுதப்படாது :-))
    --------->
    ஜொசப் வீட்டம்மவுக்கு இது போதும், ஜொசப்பை வறுத்தெடுக்க

    ReplyDelete
  42. மெது வடை மற்றும் மைசூர் போண்டாவிற்கு மாவுப் பதம் ஒன்றுதான். இரண்டுக்கும் ஒரே மாவுதான். மெது வடையில் துளை போடுவார்கள். போண்டாவில் போட மாட்டார்கள். ஆனால் இட்லியில் போடுவான் எனப்படும் உளுத்தம் பருப்பின் அளவு மாறுபடும். மாவு இட்லைக்கு தோசையை விட நைசாக அரைக்க வேண்டும்.

    ஜோசஃப் சார் பேச்சுவாக்கில் கேரளப் பெண்கள் அழகானவர்கள் எனக் குறிப்பிட, நானும் அதை ஒத்துக் கொள்ள, ஜயராமன் அவர்கள் அடித்த ஜோக்கைத்தான் அவர் மறைமுகமாக தன் பின்னூட்டத்தில் போட்டுள்ளார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. அன்புள்ள மகேந்திரன்

    எப்படிய்யா கண்டுபிடிச்ச , போட்டாவுல எனக்கே என்னைய அடையாளம் தெரிலை :-)

    ஆம் , நான் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தான் படித்தேன்
    நீர் இயற்பியல் படித்தவர் என்று சொன்னாலே எனக்கு ஞாபகம் வந்திருக்கும்.
    எதற்காக என்.சி.சி எல்லாம் ஞாபகப்படுத்துகிறீர்கள்.அதெல்லாம் கசப்பான அனுபவங்கள் . உங்கள் வலைப்பூவை இன்று தான் பார்த்தேன்.
    அறிவுச்செல்வன் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.அவர் எனக்கும் வகுப்பெடுத்திருக்கிறார்.

    மற்றவை தனிமடலில்

    என்றும் அன்பகலா
    மரவண்டு

    ReplyDelete
  44. மரவண்டு மற்றும் மகேஸ்,

    நீங்கள் இருவரும் என் வலைப்பதிவு மூலமாக சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. சார்,

    இன்னைக்கித்தான் இந்த பதிவிலிருந்த பின்னூட்டங்களையெல்லாம் சாவகாசமா படிச்சேன்.

    ஜயராமனோட டிடெக்ட்டிவ் மைண்டும், அருணகிரியோட அங்கலாய்ப்பும் (என் தலையைப் பற்றி!) படிக்கறதுக்கு நல்லாவே இருந்துது..

    சார்.. நா எதுக்கு கேரளா போறேன்னு எங்க வீட்டம்மாவுக்கு நல்லாவே தெரியும். அவங்களும் அங்கத்து பொண்ணுங்கள பாத்தவங்கதானே.. ஹி.ஹி!

    அருணகிரி.. எல்லாம் இந்த கேரளா தண்ணியினாலதான் (நான் சொல்றது குளிக்கிற தண்ணிங்க)..

    ராகவன்,

    முதல்ல ஒங்க செல் ஃபோன் நம்பரை தாங்க. அப்பத்தான் ஒங்களுக்கு அடுத்த மீட்டுக்கு அழைப்பு..

    ஜுலை மாதம் முதல் ஞாயிறு 2.07.06 அதே நேரம், அதே இடம்..

    வர முடிஞ்சவங்கல்லாம் வரலாம்.. என்ன சார்?

    ReplyDelete
  46. வரும் இரண்டாம் தேதியா, தாராளமாக சந்திக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயம், எனக்கு அன்றைக்கென்று ஏதாவது துபாஷி வேலை என்று ஒன்றும் வாராமல் இருக்கோணும்.

    ஆனாலும் கணித முறைப்படி அதன் சாத்தியக்கூறு கம்மிதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. ஜூலை மாதம் ஒன்னு ஏற்பாடு செய்யுங்க மிசியே ! நானும் வருவேன்.

    ReplyDelete
  48. ஜூலை 2 என்று தற்போதைக்கு பேச்சு. பார்க்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  49. ஜூலை 7,8 தேதியில் வைத்தால் இன்னொரு டிக்கெட்டும் ஆஜர்.

    ReplyDelete
  50. ஜூலை 7 அல்லது 8 பிரச்சினை இருக்காது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete