நிரந்தர பக்கங்கள்

6/29/2009

சென்னை பதிவர் சந்திப்பு - 28.06.2009

நடேசன் பூங்காவினுள் நுழையும்போது மணி 5.30. அரை மணி நேரம் லேட். ஏன்னுடன் சேர்ந்து கேபிள் சங்கரும் அப்போதுதான் பார்க்கில் நுழைந்தார். உள்ளே பத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே குழுமியிருந்தனர். ஒரு நோட்டு புத்தகத்தில் வருகை பதிவு செய்யப்பட்டிருந்தது. என்னிடமும் அது வந்த போது எனது பெயரை பதிவு செய்தபின் எனது நோட்டு புத்தகத்திலும் அப்பெயர்களை அப்படியே சந்தடி சாக்கில் ஏற்றிக் கொண்டேன்.

வந்தவர்கள் விவரம்: 1. பைத்தியக்காரன், 2. பாலபாரதி, 3. சுகுமார் சுவாமிநாதன், 4. வெண்பூ, 5. நர்சிம், 6. லக்கிலுக், 7. அதிஷா, 8. பாபு, 9. ஸ்ரீ, 10. ஆ.முத்துராமலிங்கம், 11. ஜெ. அன்புமணி, 12. நெல்லை எஸ். ஏ. சரவணகுமார், 13. பினாத்தல் சுரேஷ், 14. கேபிள் சங்கர், 15. டோண்டு ராகவன்

பிறகு வந்தவர்கள்: 16. ப்ரூனோ, 17. செல்வம், 18. ஜாக்கி சேகர், 19. காவேரி கணேஷ், 20. அக்கினி பார்வை, 21. தண்டோரா, 22. வண்ணத்து பூச்சியார், 23. சரவணகுமார், 24. நைஜீரியா ராகவன், 25. தங்கமணி பிரபு (கோலங்கள் சீரியலில் டிஜிட்டல் பள்ளத்தாக்கின் பிரதிநிதியாக வருபவர்), 26. பாஸ்கர் சக்தி (மேகலா, கோலங்கள் சீரியல்கள் வசனகர்த்தா), 27. ஆசிஃப் மீரான் (சாத்தான் குளத்தார்).

நான் முன்னெச்சரிக்கையாக மூன்று கொசுவர்த்தி சுருள்கள் மற்றும் அவற்றுக்கான standகளுடன் சென்றிருந்தேன். என்ன அக்கிரமம், கொசுக்கள் இம்முறை கண்ணிலும் படவில்லை, உணரவும் முடியவில்லை. ஆகவே நான் கொண்டு சென்றதற்கு வேலை இல்லாமல் போயிற்று.

ஆசிஃபை அமீரகத்திலேயே பார்த்திருக்க வேண்டியதை மிஸ் செய்து விட்டது குறித்து நைஜீரியா ராகவன் வருத்தப்பட்டார். பார்ப்பதற்கு ரிசர்வ் டைப்பாக தெரிந்த நைஜீரியா ராகவன் பேச ஆரம்பித்ததும் கலகலவென பழகினார். அவரிடம் நைஜீரியா பற்றி கேட்டேன். லாகோசில் இருக்கிறாரா என கேட்டதற்கு, இல்லை தான் வேறு ஒரு நகரத்தில் இருப்பதாகக் கூறி அதன் பெயரையும் சொன்னார். இன்னொரு முறையும் கேட்டு உறுதி செய்து கொண்டாலும் இப்போது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அவரே பின்னூட்டமாக போடட்டும். நைஜீரியாவில் அறுபதுகளில் உள்நாட்டு போர் நடந்தது. இபோ பிரிவை சேர்ந்தவர்கள் பிரிந்து போய் பயாஃப்ரா என்னும் தேசம் அமைத்தனர். ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் அங்கீகாரம் தந்தன. இருப்பினும் சில ஆண்டுகள் போருக்கு பின்னால் பயாஃப்ரா உலக வரைபடத்திலிருந்து மறைந்தது என அக்காலகட்ட பேப்பர்களில் படித்துள்ளேன்.

இப்போது அங்கு நிலைமை எப்படி என ராகவனை கேட்டதற்கு இப்போதெல்லாம் அங்கு இரண்டே இரண்டு பிரிவினர்தான் உண்டு, அதாவது பணம் படைத்தவர்கள் மற்றும் ஏழைகள் அவ்வளவே என்றார். தான் இருக்குமிடம் அமைதியாக உள்ளது என்று கூறினார். இத்தாலியை சேர்ந்த ஒரு கம்பெனியில் பணிபுரிகிறார். போஸ்டிங் நைஜீரியாவில். இந்திய கம்பெனியாக இருந்தால் சேர்ந்திருக்க மாட்டேன் என்றார். ஏனெனில் அன்னியச் செலாவணி தகராறால் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒரு முறைதானாம். இத்தாலிய கம்பெனி பரவாயில்லையாம், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் தந்து விடுகிறார்களாம். மாத வாடகை எப்படி தருவீர்கள் என இழுத்ததற்கு அவர் ஆண்டு வாடகையாக முன்கூட்டியே தர வேண்டியிருப்பதால் பிரச்சினை அந்த விஷயம் பொருத்தவரை கிடையாது என்றார். அதுவும் கம்பெனியே அதை பார்த்து கொள்கிறது என்றார். அக்கவுண்ட்ஸ் மற்றும் நிர்வாக துறைகளில் அவரது போஸ்டிங் என்றார். ரொம்பவும் கடினமான பொறுப்புதான்.

பாஸ்கர் சக்தி தனக்கும் வலைப்பூக்களுக்கும் அவ்வளவு பரிச்சயம் இல்லை என்றார். சுரேஷ் கண்ணன் இவரை ஒரு முறை சந்தித்ததை மற்றவர்களை ஏப்ரல் முட்டாளாக்கும் நோக்கத்தில் மெருகூற்றிக் கூறியதை தான் முதலில் சீரியசாக எடுத்து கொண்டு, அம்மாதிரியெல்லாம் நடக்கவேயில்லை என கோபமாக பின்னூட்டமிட்டதையும் சுரேஷ் கண்ணன் தான் ஏப்ரல் ஃபூல் செய்யும் நோக்கத்தில் போட்டதாகவும் கூறி அடுத்ததாகவே மன்னிச்சுடுங்க என்னும் பதிவை போட்டதையும் கூறி, தான் அப்போது ஓவர் ரியேக்ட் செய்திருக்கலாம் என்றார். அதன் பிறகு தான் வலைப்பூக்களை அதிகம் பார்த்ததில்லை என்றும், இப்போதுதான் சில நாட்களாக பார்ப்பதாக கூறினார். வலைப்பூக்கள் பற்றி அவரது கருத்தை கேட்டதற்கு கிரியேட்டிவிடி என்பது அதில் சற்றே குறைவுதான், ஆயினும் எழுத்து நடை நன்றாக இருப்பதாக கூறினார்.

நர்சிமின் எழுத்துக்களால் தான் கவரப்பட்டதாக ஒரு பதிவர் கூறினார். இன்னொருவருக்கு பரிசல்காரனை பிடித்திருந்தது. இப்போது விகடன், குமுதம் ஆகிய பத்திரிகைகளில் பல வலைப்பூக்கள் ரிபீட் ஆகின்றன என்றும், போகிற போக்கில் அவை முழுக்க முழுக்க வலைப்பதிவர்களின் எழுத்தால் நிரப்பப்படும் காலமும் வரலாம் என ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் எழுதி பப்ளிஷ் செய்து கொள்ளலாம் என்ற நிலை காரணமாக பல புதுப்புது எழுத்தாளர்கள் வருவதும் வரவேற்கப்பட்டது.

குமுதம் ரிப்போர்டரில் சைபர் கிரைம் தொடர் பற்றி எழுதி வரும் லக்கிலுக்கிடம் நான் ஒரு கேள்வியை வைத்தேன். அதை எனக்கு ஒரு அனானி வாசகர் பின்னூட்டமாக இட்டிருந்தார், நான் அதை ஏற்கவில்லை. இப்போது எல்லார் முன்னிலையிலும் அக்கேள்வியை நான் வைத்தேன், அதாவது சைபர் கிரைம் ப்ற்றிய அத்தொடரில் அவர் போலி டோண்டு விவகாரத்தை தொடுவாரா என்பதே அக்கேள்வி. பாலபாரதி இப்போதுதான் லக்கிலுக் சீரியலையே எழுத ஆரம்பித்திருப்பதாகவும், இன்னும் பல காலத்துக்கு அது வரும் என்றும், அது முடிந்தபின் போலி டோண்டு விவகாரம் அதில் கவர் ஆகவில்லையெனில் அப்போது அவரை கேட்கலாம், இப்போது கேட்பது சஸ்பென்சை உடைத்து விடும் என்றார். நானும் அதை ஏற்று கொண்டேன்.

எல்லோரும் சுய அறிமுகம் செய்து கொள்வது இருமுறை நடந்தது. ஏனெனில் முதல் அறிமுகம் முடிந்த பிறகு மேலும் பலர் வந்ததே அதற்கு காரணம். எனது சுய அறிமுகம் செய்து கொண்டதும், நான் எழுதிய எதையாவது பற்றி சில வார்த்தைகள் கூறும்படி கேட்டு கொள்ளப்பட்டேன். இஸ்ரேல் பற்றி பேசலாமா என்றதற்கு பலர் பதறிப் போயினர். பிறகு தெருக்களில் ஒருதலை பட்சமாக சாதிப் பெயர்களை எடுத்து நிர்வாக குழப்பத்துக்கு தமிழக அரசு சமீபத்தில் 1978-ல் செய்தது குறித்து நான் எழுதிய யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவை கூறி அதற்கான எதிர்வினைகள் பற்றியும் கூறினேன். இப்போதும் சற்றே சலசலப்பை அது எழுப்பியது.

எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பல குழுக்களாக பிரிந்து டிஸ்கஸ் செய்யப்பட்டது இயற்கையாகவே நிகழ்ந்தது. நான் கலந்து கொண்ட டிஸ்கஷன்களைத்தான் நான் எழுதியுள்ளேன். மற்றவர்களும் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஏழரை மணியளவில் கூட்டம் கலைந்தது. பாஸ்கர் சக்தியுடன் கோலங்கள் பற்றி நான் சில கேள்விகள் இட்டேன். போன ஆண்டு மே மாதமே முடிந்திருக்க வேண்டியது இன்னும் இழுக்கப்படுவதற்கு அதற்கு பல முறை தரப்பட்ட எக்ஸ்டென்ஷன்கள்தான் காரணம் என அவர் தெரிவித்தார். மிக நல்ல தொழில்நுட்ப முறையில் சீரியல் எடுக்கப்படுதால் அது பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆகவே அதன் இயக்குனரின் சமூகப் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது எனக் கூறிய நான் திருச்செல்வனிடம் ஒரு லைவ் டி.வி. ஷோவில் நான் கேட்ட கேள்வி பற்றியும் கூறினேன். அவரை அச்சமயம் கேட்க நினைத்து, கேட்காமல் விட்ட கேள்வியை இப்போது பாஸ்கர் சக்தியிடம் கேட்டேன். அதாவது எந்த கேரக்டர்களுக்குமே சாதியை கூறாது விட்டுவிட்டு, கங்கா என்னும் நெகடிவ் பாத்திரத்தை மட்டும் ஐயங்கார் பெண் என குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் அது. அதில் என்ன இழிவான விஷயம் கூறப்பட்டது என கேட்க, அந்த ஐயங்கார் குடும்பத்தின் மாப்பிள்ளை தன் மனைவியையே கூட்டிக் கொடுப்பதாகவெல்லாம் சீன் வைக்கப்பட்டதை கோபத்துடனேயே நான் குறிப்பிட்டேன். பல எபிசோடுகள் இக்குடும்பத்தினர் செய்வதாகக் கூறப்படும் எதிர்மறை காட்சிகள் வந்தன. அதே சமயம் அபி குடும்பத்துக்கு சூனியம் வைப்பது, காசு வெட்டிப் போடுவது போன்ற உத்தமமான காரியங்கள் செய்த பாஸ்கரின் அன்னை, கொலை கொலையாய் முந்திரிக்காய் என செயல்பட்ட பாஸ்கர் ஆகியோரின் சாதி பற்றி பேச்சில்லை. ஆகவே கதை ஓட்டத்துக்கு சற்றும் தேவைப்படாத சாதி விஷயத்தை ஒரு க்ரூப்புக்கு மட்டும் ஐயங்கார் என அடையாளம் ஏன் காண்பிக்க வேண்டும் என கேட்டு, அக்கேள்வியை திருச்செல்வத்துக்கு பாஸ் செய்யும்படி கேட்டு கொண்டேன். பாஸ்கர் சக்தியும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.

தங்கமணி பிரபுவை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது. அவரும் கோலங்கள் சீரியலில் வந்ததாக கூறப்பட்டதுமே நினைவுக்கு வந்து விட்டது. அவரிடம் அவர் ஏற்ற பாத்திரம் பற்றியும் பேசினேன். இப்போது லாஜிக்கலாக முரண்படும் சில விஷயங்கள் பற்றி கேட்க, பாஸ்கர் சக்தி ஒரு விஷயம் சொன்னார். அதாவது பல முறை கதையின் போக்கு மாற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 30 எபிசோடுகளுக்கு ஒரு கதை என்ற ரேஞ்சில்தான் ஒரு சீரியல் செல்கிறது. அதில் முக்கிய பாத்திரங்களின் கேரக்டர்கள் மட்டும் அடிநாதமாக இருக்கின்றன. அவற்றுக்கு பங்கம் வராமல் வசனம் எழுத வேண்டியிருக்கிறது. அதனால் பல முறை பழைய நிகழ்வுகள் கவனத்திலிருந்து மறைந்து போகின்றன என்றார். பேசாமல் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்த டோண்டு ராகவனையாவது அல்லது தனது அன்னையையாவது வேலைக்கு வைத்து கொள்ளலாம் என ஒரு பதிவர் குறிப்பிட்டார் (கேபிள் சங்கர்?). திட்டிக் கொண்டே தன் அன்னை சீரியலை விடாது பார்ப்பதையும்ம் அவர் கூறினார். என்னைப் பொருத்தவரை கோலங்கள் சீரியல் அளவுக்கு மீறி அசடு வழிந்தால் நான் அந்த எபிசோடுகளை பார்ப்ப்தை தவிர்த்து விடுவேன் என கூறினேன். மேகலா நல்ல முறையில் வருவதாக கூறினேன்.

அங்கிருந்து ஒரு சிறு கோஷ்டி தாகசாந்திக்காக அருகில் இருந்த பாருக்கு நகர்ந்தது. நானும் அதில் இருந்தேன். த்ண்டோரா அவர்கள் காரில் லிஃப்ட் கிடைத்தது. நைஜீரியா ராகவனும் வந்தார் ஆனால் ஸ்ட்ரிக்டாக சாஃப்ட் ட்ரிங்க் மற்றும் சைவ ஐட்டங்கள்தான். நான் பயங்கர அசைவ பார்ட்டி என்பது டைம் பத்திரிகையிலேயே போட்டு விட்டார்கள். ட்ரிங்க் ஆக ப்ளடி மேரி எடுத்து கொண்டேன். பிறகு ராகவன் அவர்கள் எடுத்து கொண்ட சாஃப்ட் ட்ரிங்கையும் ஆர்டர் செய்து கொண்டேன். மற்றவர்கள் விஸ்கி, பிராண்டு என்றெல்லாம் அமர்க்களப்படுத்தினர். ஒரு பதிவர் என்னிட யாருடைய பெயரையும் இது சம்பந்தமாக குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் அவர்களது பெயரை கூறவில்லை. தண்டோராவின் பெயரை கூறித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அவர்தான் என்னை கடைசியில் மீனம்பாக்கத்தில் ட்ராப் செய்தார். அவருக்கு நன்றி.

இங்கும் பேச்சு பல விஷயங்களை தொட்டது. என் பங்காக சில அசைவ ஜோக்குகள் சொன்னேன். நல்ல வரவேற்பு. அதுவும் பெண்வீடா பிள்ளைவீடா என்ற தத்துவக் கேள்விகளை உள்ளடக்கிய ஜோக் மிகுந்த வரவேற்பை பெற்றது. வலது இடது பிரச்சினையும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட இரவு பத்தரைக்கு கிளம்பினோம். கேகே நகரில் சிலரை இறக்கி விட்டு கார் 100 அடி ரோட் வழியாக கத்திபாராவை தாண்டி மீனம்பாக்கம் நோக்கி விரைந்தது. பேச்சு சுவாரசியத்தில் நான் இறங்க வேண்டிய இடம் மிஸ் ஆகிவிட தண்டோரா அவர்கள் சற்றும் தயங்காமல் காரை ஏர்போர்ட்டில் யூ டர்ண் செய்து என்னை மிஸ் ஆன இடத்தில் இறக்கி விட்டார். அப்படியே ரயில்வே லைனை கிராஸ் செய்து ஜெயின் கல்லூரி பக்கம் சென்றால் ஒரு ஆட்டோவும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் விறுவிறென நடை. வீட்டுக்கு போய் சேரும்போது மணி 11.30. எழுபதுகளுக்கு பிறகு இப்போதுதான் ராத்திரி அந்த ஏரியாவில் நடை.

இன்று காலை 5.17 மணிக்கு இப்பதிவை போட ஆரம்பித்தேன். இப்போது நேரம் 6.58.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/28/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.06.2009

மாமியார் வீடு
சில வட்டங்களில் மாமியார் வீடு என்பது சிறைச்சாலையை குறிக்கும். இது தமிழுக்கே உரித்தான சொலவடை என நினைத்து வந்தேன். எனது நினைப்பு தவறானது என்பது ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப் பெற்ற “காபூலிவாலா” என்னும் சிறுகதையை படிக்கும்போது தெரிய வந்தது.

அக்கதையில் பல பொருட்களை ஓரிடத்தில் இராது அலைந்து திரிந்து விற்பனை செய்யும் காபூலிவாலாவுக்கும் அவன் வழமையாக பொருட்களை விற்கும் ஒரு வீட்டில் உள்ள சிறு பெண்ணுக்கும் இடையில் உருவாகும் நட்பு காவியத்தன்மையுடன் விவரிக்கப்பட்டிருக்கும்.

அக்குழந்தையிடம் அவன் விளையாட்டாக கேட்பான், “பாப்பா நீ எப்போ உன் மாமியார் வீட்டுக்கு போவாய்”? என. அக்குழந்தையும் மழலையுடன் எதிர் கேள்வி போடும், “ஏன் நீ போகவில்லையா”? என. அப்போது கதைசொல்லி காபூலிவாலா புழங்கும் வட்டத்தில் மாமியார் வீடு என்றால் சிறைச்சாலை என்ற அர்த்தம் உண்டு என கூற, அட என நான் வியந்தேன், தமிழிலும் அச்சொல்லுக்கு அப்பொருளும் உண்டென்று.

இதைப் பற்றி இப்போது ஏன் எழுத வேண்டும்? இன்று (28.06.2009) காலை தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் “ரங்கோலி (ஒளியும் ஒலியும்) நிகழ்ச்சியில் காபூலிவாலா என்னும் படத்தின் ஒரு பாடலை போட்டனர். அதைப் பார்த்ததும் அக்கதையை ஆங்கிலத்தில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஆகவே இப்பதிவு.

„Wanderer, kommst du nach Sparta, verkündige dorten, du habest uns hier liegen gesehn, wie das Gesetz es befahl.
கி.மு. 480-ல் தெர்மோபைலே என்னும் இடத்தில் தங்களை விட பலமடங்கு அதிகம்பேரை கொண்ட பாரசீகப் படையினரை 300 பேர்களே இருந்த கிரேக்கப் படை எதிர்த்து போராடி அத்தனை பேரும் அழிந்த இடத்தில் உள்ள நடுகல்லில் மேலே கூறிய ஜெர்மானிய வாசகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. அதன் பொருள் பின்வருமாறு, “இதைப் பார்க்கும் நாடோடிகளே, நீங்கள் எங்கள் ஊரான ஸ்பார்ட்டாவுக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள எங்களவரிடம் கூறுங்கள், நாங்கள் யாவரும் ஒருவர் விடாமல் எதிரிகளுடன் போராடி எங்களுக்கென விதிக்கப்பட்ட வீர மரணம் அடைந்தோம் என”. உலக சரித்திரத்தில் பல போர்கள் நடந்து விட்டன, நடக்கின்றன, நடக்கவும் இருகின்றன. ஆனால் இந்தப் போரும் அதை போன்ற வெகு சில போர்கள் மட்டும் இன்னமும் மக்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளன. வெற்றியா தோல்வியா என்பது இரண்டாம் பிரச்சினை. முக்கிய விஷயம் என்னவென்றால், மரணம் நிச்சயம் என அறிந்திருந்தும் கடைசிவரை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்வதே.

அவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களது பெயர்கள் மக்கள் மனதில் வைக்கப்பட்டு பாடப்படும். அதே போல இஸ்ரவேலர்களது வரலாற்றில் மஸாடா என்னும் இடத்தில் நடந்த போரை இன்னமும் இஸ்ரவேல குழந்தைகள் போற்றுகின்றனர். அப்போரில் எல்லா யூதர்களும் இறந்தனர். அவ்விடத்தில் இன்னமும் இஸ்ரவேலர்கள் “மஸாடா இனிமேல் விழாது” என்னும் வீரச்சபதம் எடுக்கின்றனர். 1943-ல் போலந்து தலைநகரம் வார்சாவின் யூதக் குடியிருப்பை நாஜிகள் நாசமாக்கிய போது அவர்கள் எதிர்த்து போராடினர். அது April 19, 1943 - May 16, 1943 வரை நீடித்தது. 1939-ல் போலந்தின் அதிகாரபூர்வமான ராணுவம் கூட அவ்வளவு நாள் தாக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க யூத எழுத்தாளர் எழுதிய “மிலா 18” நாவலிலும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய “தி வால் (சுவர்)” என்னும் நாவலிலும் இது பற்றி பார்க்கலாம். இங்கும் போராளிகள் கடைசியில் கொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/27/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 101, 102 & 103 (இறுதிப் பகுதி)

பகுதி - 101
கைலாசம் சாரியார் வீட்டுக்கு வருகிறார். அவர் அப்போதுதான் கொல்லப்பட்ட பெருமாளுக்கு கடைசி காரியம் செய்து முடித்துள்ளார். அவர் சொந்த மகன் பாச்சாவுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அவர் யார் பெற்ற பிள்ளைக்கோ அவன் தன் சொந்த மகன் என்னும் நினைப்பில் கடைசி காரியம் செய்வதை அவர் சாடுகிறார். அப்போதுதான் சாரியார் நிரஞ்சன் மூலமாக முழு உண்மையை அறிந்து கொண்ட ஃபிளாஷ் பேக் கூறுகிறார். பார்வதிக்கு ரத்த புற்றுநோய் என்ற உண்மையும் வெளிவருகிறது. அதையெல்லாம் பார்வதி நிரஞ்சனுக்கு கடிதமாக எழுதியிருப்பதை நாமும் அறிகிறோம். டாக்டர் வெளிநாடு சென்ற அடுத்த நாள் இது எழுதப்பட்டுல்ளது. அதே கடிதத்தில் அவள் டாக்டர் கைலாசம் சாரியாரின் குழந்தை மாற்றப்பட்ட விவகாரத்தின் உண்மையையும் எழுதியுள்ளதால் சாரியாருக்கு கடைசியில் பாச்சாதான் தன் சொந்த பிள்ளை என்னும் தெளிவும் அதனால் மனவமைதியும் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பெருமாளும் வையாபுரியும் கொல்லப்பட்டதால் அவரது ஜோசியமும் சரி என்பது உறுதியானது.

பெருமாள் தன் பிள்ளையில்லை என்னும் நிலையிலும் அவர் ஏன் அவனுக்கு காரியம் செய்வதால் அவர் உயர்ந்து நிற்கிறார் என டாக்டர் அவரை விதந்தோத, அப்படியெல்லாம் இல்லை என சாரியார் மறுக்கிறார். சாதி வேற்றுமை பார்க்கக் கூடாது என வாய் வார்த்தையாக கூறிவந்த தானே இம்மாதிரி ஹரிஜன பையன் தன் வீட்டில் வளர்ந்து வருவதை நினைத்து மனம் குமைந்தது தான் சிறியவனே என்னும் எண்ணத்தை உறுதியாக்கியது எனவும், உண்மையில் பெரிய மனிதன் நிரஞ்சனே, ஏனெனில் பார்வதிக்கு ரத்த புற்றுநோய் என்னும் நிலையிலும் அவளை அவன் மணக்க உறுதியாக நினைக்கிறான் என்றும், தான் இப்போது காரியம் செய்வது கூட ஒரு வித பிராயச்சித்தமாகவே எனவும் சாரியார் கூறிவிடுகிறார்.

இருந்தாலும் சாரியார் நிஜமாகவே உயர்ந்த மனிதன் என டாக்டர் விடாப்பிடியாகக் கூறுகிறார். இது எங்ஙனம் என சோவின் ந்ண்பர் கேட்க, சாரியார் இப்போதுதான் உண்மையான ஞானப்பாதைக்குள் வந்திருக்கிறார். சமபார்வை என்பதை இப்போதுதான் இலக்காக வைத்துள்ளார். எவன் தன் மனத்தியே ஜெயிக்கிறானோ அவன் தனக்குத் தானே நண்பன் இல்லாவிடில் விரோதி என கீதை கூறுகிறது. கூடிய சீக்கிரம் சாரியார் தனது இலக்கை அடைந்து விடுவார். அதனாலேயே அவர் பெரிய மனிதருமாகிறார் என சோ கூறுகிறார்.

ரமேஷ் உமாவின் திருமணம் சாத்திர முறைப்படி நடக்கிறது. மாலை மாற்றிக் கொள்ளல், பெண்ணீன் தலைக்கு மேல் நுகத்தடி வைத்து நீர் ஊற்றல், மாலை மாற்றல், தாலி கட்டுதல், சப்தபதி நடத்தல், அருந்ததி பார்த்தல் என்னும் ஒவ்வொரு சடங்கும் நடக்க நடக்க சோவின் நண்பர் கேள்வி கேட்க, சோ அவர்கள் தனக்கே உரித்தான முறையில் விளக்கம் அளித்தல் ஆகியவற்றை வீடியோ சுட்டியிலேயே பார்க்க வேண்டும். நான் என்ன எழுதினாலும் நிறைவாக இருக்காது.

அசோக்கின் “எங்கே பிராமணன்” தேடல் தொடருகிறது. ஒவ்வொரு கோவிலாக, வீடாகப் போய் பல வைதீகர்களை இது குறித்து கேட்பது டயலாக் இன்றி காட்டப்படுகிறது. கடைசியில் டாக்டர் கைலாசத்திடம் வருகிறான். அவர் சாரியாரை விட அதிக தகுதி உடையவர்கள் தனக்கு தெரியாது எனக் கூறி தென்கலை சம்பிரதாயத்தில் அவர் ஊறியவர் என்பதையும் கூறுகிறார். தென்கலைக்கும் வடகலைக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து சோவின் நண்பர் கேள்வி எழுப்ப, மொத்தம் 18 வேறுபாடுகள் உண்டு, ஆனால் அவையெல்லாம் தத்துவங்களை புரிந்து கொள்வதில் ஏற்படும் விஷயங்களே என கூறி, அவ்வாறு 18 வேறுபாடுகள் உள்ளன என்று அவற்றில் சிலவற்றைக் கூறுகிறார்.

சாரியார் அப்படி என்னதான் விசேஷமாகச் செய்தார் என அசோக் கேட்க, டாக்டர் அவர் தான் பெறாதம் பிள்ளைக்கு காரியம் செய்ததை பெருமையாகக் கூறுகிறார். அசோக்குக்கும் தனது தேடல் சாரியாரிடமே நிறைவு பெறலாம் என எண்ணம் ஏற்படுகிறது.

பகுதி - 102
சாரியாரை சந்தித்து அசோக் அவரிடம் தனது எங்கே பிராமணன் என்னும் தேடல் பற்றி கூறுகிறார். சாரியார் தான் அவ்வாறு தேடும் உண்மையான பிராமணனாக இருப்பாரா என்னும் தனது அனுமானத்தை அவரிடம் கூற, அவர் அதை திட்டவட்டமாக மறுக்கிறார். அதில் உண்மை பிராமணனுக்குரிய எல்லா கடுமையான விதிகளும் அலசப்படுகின்றன.

இவையெல்லாம் தேவையா எனக் கேட்கும் நண்பருக்கு சோ ஆம் தேவையே எனக் கூறுகிறார்.

தன் பிள்ளை எனத் தெரிந்த நிலையிலும் அவர் பெருமாளுக்கான அந்திமக் கடன்களை செய்தது மகோன்னமான செயலே, அதை வேறு யாரால் செய்திருக்க முடியும் என அசோக் கேட்க, மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும், ஆனால் அது உண்மையில்லை. பெர்மாளை தனது சொந்த மகன் என்னும் மயக்கத்தில் பல நாட்கள் இருந்ததனாலும், அவன் மேல் அதனால் பாசம் ஏற்பட்டதாலும், இப்போது அவனது தந்தையும் அவனுடனேடே சேர்ந்து இறக்க வேறு வழியின்றி தான் கர்மம் செய்ததாகவும், இதில் ஒன்றும் மகோன்னத விஷயம், என்றெல்லாம் இல்லை என சாரியார் கூறி, இதற்கு முன்னால் தனக்கு முன்பின் தெரியாத ஒருவனுக்காக இதையெல்லாம் தான் செய்திருந்தால்தான் அது விசேஷம் என சாரியார் கூறி, அச்சொக் தனது தேடலை வேறிடத்தில்தான் தொடர வேண்டும் என கூறுகிறார். அசோக்கும் அவரை வணங்கி விட்டு புறப்படுகிறான்.

“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்னும் திருமங்கையாழ்வாரின் பாடல் பின்னணியில் கம்பீரமான குரலில் ஒலிக்கிறது.

நாதன் வீட்டிற்கு டாக்டர் கைலாசம் வந்திருக்கிறார். அவருடன் நாதனும் வசுமதியும் அசோக்கின் தற்போதைய தேடல் பற்றி பேசுகிறார்கள். அசோக்குக்கு வேண்டாத வேலை இது என நாதன் கோபப்படுகிறார். “எங்கே பிராமணன்” என ஏன் தேட வேண்டும், இத்தேடலால் யாருக்கு என்ன பலன் என அவர் சீறுகிறார். அதானே என சோவின் நண்பரும் அதை ஆமோதிக்கிறார். அப்படி பார்த்தால் உலகில் எந்த செயலுமே தேறாது. சரித்திரம் ஏன் படிக்க வேண்டும்? சந்திராயனை விண்வெளியில் செலுத்தி ஆகப்போவது என்ன என்ற்நெல்லாம் கேள்வி கேட்டு கொண்டே போகலாம் என சோ கூறுகிறார். அசோக்கின் தேடல் வேதந்தத்தின் ஒரு முக்கியப் பகுதி. அந்த அளவில் அது முக்கியமானதே என அவர் முற்றுப் புள்ளி வைக்கிறார்.

கோவிலுக்கு நீலகண்டனும் பர்வதமும் வந்திருக்கின்றனர். அங்கு வரும் சாம்பு சாஸ்திரி அதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். என்ன விசேஷம் எனக் கேட்க, நீலகண்டன் தான் இத்தனை நாள் அறியாமையில் உழன்றதை ஒத்து கொள்கிறார். ஆகம விதிகளுக்குட்பட்டு இக்கோவில் கட்டப்பட்டது எனவும், பல நாத்திகர்களை தடுத்தாட்கொண்டது எனவும் சாம்பு சாஸ்திரி கூற, ஆகம விதிகள் பற்றி சோவின் நண்பர் கேள்வி எழுப்புகிறார். சோவும் அவற்றை அவருக்கு அவை பற்றி விளக்குகிறார். வைணவக் கோவில்கள், சைவ கோவில்கள் பற்றியும் அவர் கூறுகிறார்.

நீலகண்டனும் பர்வதமும் சாம்பு சாஸ்திரிகளின் காலில் விழுந்து நமஸ்கரிக்கின்றனர். “நீங்கள் பல ஆண்டு நலமாக வாழ வேண்டும்” என அவரும் ஆசி செய்கிறார். இது தவறல்லவா, கோவிலில் வைத்து மனிதர்களை வணங்கலாமா என எனது வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். எனக்கும் அது தவறுதான் எனப்படுகிறது. எனது நண்பர் டாக்டர் ராகவனைத்தான் கேட்க வேண்டும்.

அசோக் தனது கேள்வியை வேம்பு மற்றும் சாம்பு சாஸ்திரிகளிடம் வைக்கிறான். முதலில் மேம்போக்காக அவர்கள் பதில் தருகின்றனர். பிறகு அசோக் அவர்களை தனது அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடிக்கிறான்.

பகுதி - 103 (இறுதிப்பகுதி, 26.06.2009)
இப்பதிவு ஆரம்பித்த சில நொடிகளிலேயே நான் இதுதான் கடைசி பதிவு என்பதை புரிந்து கொண்டு விட்டேன்.

சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.

சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்

அசோக் விடை பெற்று சென்றதும் சாம்பு சாஸ்திரிகள் மனதில் போராட்டம் நிகழ்கிறது. ஒரு நிமிடம் அவர் தான் எல்லா ஆசாபாசங்களையும் விட்டு உண்மையான பிராமணனாக வாழ்ந்து விடலாமா என எண்ணுகிறார். அந்த சமயம் பார்த்து அவரது இரண்டாம் பிள்ளை அப்பாவை தேடி வருகிறான். “என்னப்பா எனது பரீட்சை கட்டணம் 2500 ரூபாய் கட்டணும்னு சொன்னேனே” என அவன் கூற, தான் எங்கிருந்து அவ்வளவு பணம் கொண்டு வரமுடியும்னு சாம்பு மலைக்கிறார். கூடவே வீட்டு வாடகை பாக்கி இருப்பதால் வீட்டுக்காரர் வீட்டை காலி செய்ய சொல்கிறார் என்னும் அடுத்த குண்டையும் பையன் போடுகிறான்.

சமய சஞ்சீவி போல வேம்பு சாஸ்திரிகள் அப்பக்கம் வந்து ஒரு பணக்காரர் வீட்டில் முக்கிய பூஜைக்காக தான் சாம்புவை சிபாரிசு செய்ததாகவும், ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கும் எனக் கூறிவிட்டு 500 ரூபாய் அட்வான்ஸ் தருகிறார். அதை அப்படியே பையனிடம் கொடுக்கும் சாம்பு மீதி பணத்தை பூஜை முடிந்ததும் தருவதாக பையனிடம் கூற அவனும் திருப்தியுடன் செல்கிறான். தான் பிராமணனாக இருக்க நினைத்தாலும் யாரும் தன்னை அவ்வாறு இருக்க விடவில்லையே, நான் பிராமணன் இல்லை என புலம்புகிறார் சாம்பு.

“அவர் ஏன் பிராமணனாக இருக்க முடியவில்லை? யார் அதுக்காக அவரை அடிப்பாங்க” என சோவின் நண்பர் கேட்க, “சொல்ல முடியாது அடிச்சாலும் அடிப்பாங்க” என கூறுகிறார் சோ. கர்மாக்கள் செய்யணும், அடுத்த வேளைக்கு சேமித்து வைக்கக் கூடாது என்றெல்லாம் இருந்தால் தற்காலத்தில் அதோகதிதான். வயலில் சந்தையில் கீழே கிடைக்கும் நெல் மணிகளை பொறுக்கினால் பைத்தியம் எனக்கூறி கல்லால் அடித்தாலும் அடிக்கலாம். பண்டைய காலங்களில் அவ்வாறெல்லாம் செய்தால் மதித்தார்கள். இப்போதிருக்கும் கால கட்டத்தில் அவ்வாறு இருப்பது யாருக்குமே கட்டுப்படி ஆகாது. ஏன் வெறுமனே நேர்மையான அதிகாரியாக இருந்தாலே பிழைக்கத் தெரியாதவன், தானும் வாழமாட்டான், மற்றவரையும் வாழவிடான் என தூற்றுவார்களே என்றும் சோ கூறுகிறர்.

தனது தேடல் வெற்றியடையாத நிலையில் அசோக் கடற்கரையில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நடக்கிறான். “என்ன சார் கதை அவ்வளவுதானா, அவன்பாட்டுக்கு கடலை நோக்கி போவதையே காட்டறீங்களே. வசிஷ்டர் அசோக்காகவே பூவுலகில் விடை கிடைக்காது நிற்க வேண்டியதுதானா? ப்ரொட்யூசர் என்ன சொல்லுவார்” என நண்பர் கேட்க, “நீங்கள்தானே ப்ரொட்யூசர். நீங்க என்ன சொல்லிடப் போறீங்க” என சோ கிண்டல் செய்கிறார். தான் ப்ரொட்யூசராக ஆக்ட் கொடுப்பவர் மட்டுமே, தான் குறிப்பிடுவதோ உண்மையான ப்ரொட்யூசரை என நண்பர் நாராயணசாமி கேட்க, “அவர் பெயர் சுந்தரம். அவரும் ரொம்ப நல்லவர், ஒண்ணும் சொல்ல மாட்டார்” என சோ கூறுகிறார்.

நண்பர் திருப்தியடையாது போகவே, “சரி நானும் வெங்கட்டுமாக சேர்ந்து இன்னொரு முடிவை யோசித்து வைத்துள்ளோம், அதையும் பாருங்கள் என்கிறார். கைலாயத்தில் நாரதர் சிவபெருமானை வணங்கி தான் ஆரம்பித்து வைத்த கலகத்தால் வசிஷ்டர் அப்படியே பூவுலகில் சிக்கி விட்டார். அவரை எப்படியாவது மேலே கொண்டு வரவேண்டும் என வேண்டுகிறார். அவரும் சம்மதிக்கிறார்.

அசோக் ஒரு சிவன் கோவிலுக்கு வருகிறான். கர்ப்பக்கிரகம் திறந்து சிவபெருமான் ஓர் அந்தணர் ரூபத்தில் அவனை நோக்கி வருகிறார். அவரைப் பார்த்ததும் உண்மையான பிராமணனை கண்ட உணர்வு அசோக்குக்கு ஏற்பட, பரமன் முதலில் கூறியபடி தான் வசிஷ்டர் என்ற நினைவு அவனுக்கு திரும்ப வருகிறது. பரவச நிலையில் இருக்கும் அவனை அந்தணர் கைலாகு கொடுத்து கர்ப்பக்கிருகம் நோக்கி அழைத்து செல்கிறார். பார்த்து கொண்டிருக்கும்போதே இருவரும் பார்வையிலிருந்து மறைகின்றனர்.

“வசிஷ்டர் தேவலோகம் திரும்பிவிட்டார். இந்த சீரியல் மூலம் தன் சொல்ல வந்தது ஒன்றேதான். எந்த விஷயத்தையும் குறை கூறலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அந்த விஷயம் என்னவென்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்” என்கிறார் சோ. “இன்று, அதாவது 2009 ஆண்டு ஜூன் திங்கள் 26-ஆம் நாள் வெள்ளியன்று, ஒரு சங்கல்பம் செய்வோம். அதாவது எதை குறை கூறுவதற்கும் முன்னால் அதை பற்றி நன்கு அறிந்தே பேசுவோம். இந்து மதத்தை நான் அறிந்தேன் என கூற முடியாது. அந்த மகாசமுத்திரத்தின் கரையில் அலைகளில் சற்றே கால் நனைப்பவன் நான். அவ்வளவே. மற்றவரகளையும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன்” எனக் கூறிவிட்டு சீரியலை பார்த்த எல்லோருக்கும் தனது குழு சார்பில் நன்றி தெரிவிக்கிறார் சோ.

இப்போது டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வார்த்தைகள். மேலே குறிப்பிட்ட சங்கல்பம் வடமொழியில் ரொம்ப அழகாக பிரும்மாவின் தினத்திலிருந்து டிரைவ் செய்யப்பட்டு கூறப்படுகிறது. நான் சொல்வது வெறும் இண்டெர்ப்ரெடேஷன் மட்டுமே.

அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்.

ஆரம்பத்தில் நான் இம்மாதிரி கிட்டத்தட்ட எல்லா பகுதிகளையும் எனது வலைப்பூவில் கவர் செய்வேன் என நினைக்கவில்லை. அது தானாகவே அமைந்தது தெய்வச்செயல் என்பதுதான் என் எண்ணம். பெயரளவில் மட்டுமே இது மெகா சீரியல். ஒரு சாதாரண மெகா சீரியலில் உள்ள இழுவை இதில் சுத்தமாக இல்லை. “எங்கே பிராமணன்” புத்தகத்தில் உள்ள நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டது, அவற்றுடன் சோ அவர்கள் எழுதிய “சாத்திரம் சொன்னதில்லை” என்ற புத்தகத்தின் நிகழ்வுகள் இதில் சேர்க்கப்பட்டது ஆகிய எல்லாமே நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன. இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என ஒரு சீரியல் நம்மை நினைக்கச் செய்தாலே அது அருமையான சீரியல்தான்.

நான் இது சம்பந்தமாக இட்ட அத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து பின்னூட்டங்கள் இட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. விட்டுப் போன பகுதிகளையும் பார்க்க வசதி செய்த techsathish & isaitamil.net ஆகிய தளங்களுக்கும் என் நன்றி. அந்தந்த பகுதிகளின் தலைப்புதான் அதற்கான வீடியோ லிங்க் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/26/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.06.2009

வெறும் ஐந்து நிமிடம் நீடித்த புயல்
நேற்று சென்னையிலிருந்து நங்கநல்லூருக்கு எனது காரில் வந்து கொண்டிருந்தேன். பிற்பகல் 4 மணியளவில் பழவந்தாங்கல் சப்வேயில் இறங்கி ஏறும்போது கூட ஒன்றும் அறிகுறிகள் இல்லை. திடீரென மேகங்கள் சேர்ந்து பயங்கரமாக காற்றும் மழையும் காரை நாலாபக்கத்திலும் அலைகழித்தன. வீட்டுக்கு வரும் வழியில் பல மரங்கள் முறிந்து விழுந்தன. நல்ல வேளையாக எல்லாவற்றிலிருந்தும் கார் தப்பியது. காரிலிருந்து இறங்கி கேட்டை திறப்பதற்குள் தொப்பலாக நனைந்தேன்.

உள்ளே பார்த்தால் மின்சாரம் இல்லை. திடீரென வந்தது போலவே காற்றூம் மழையும் கடந்து போயின. பிறகு பார்த்ததும்தான் விபரீத விளைவுகள் புலப்பட்டன. மின்சார கம்பிகள் மீது மரங்கள் உடைந்து விழுந்ததில் அவை அறுந்து தொங்கின. நல்ல வேளையாக காற்று ஆரம்பிக்கும்போதே சப்ளையை கட் செய்திருந்தார்களோ, உயிர்ச்சேதம் இல்லாமல் பிழைத்தோமோ.

சரிதான் குறைந்த பட்சம் ஒரு நாளைக்காவது மின்சாரம் இல்லாமல் காலம் கழிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. இப்போதுதான் அதிசயமான விஷயம் நடந்தது. எங்கள் கவுன்சிலர் குமார், ஆலந்தூர் நகரசபை தலைவர், ஆலந்தூர் கமிஷனர், உயர் மின்சார அதிகாரிகளின் படையெடுப்பு நடந்தது. போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடந்து இரவு 09.40 மணியளவில் முழு சப்ளை மீண்டும் வழங்கப்பட்டது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய செயல்.

பாராட்ட வேண்டிய விஷயங்களை பாரட்டாமல் இருக்கக் கூடாதுதானே. கூடவே இப்பதிவையும் பார்த்து விடுங்கள்.

வால்பையனை கோபமூட்டும் செயலைச் செய்யும் குமுதம்
எனது இந்தப் பதிவில் வால்பையன் என்னைக் கேட்ட கேள்விகளும் நான் அவற்றுக்கு அளித்த பதில்களும்:
வால்பையன்:
1. குமுதத்தில் பிராமணர்களை பற்றி எழுதிவிட்டார்களா!
பதில்: இல்லை

2. அப்படி எழுதினால் யாரை பாராட்டி எழுதுவார்கள்!
பதில்: அப்படி எழுத ஆரம்பித்தால் அதற்கெனவே பல பக்கங்கள் போட வேண்டியிருக்கும்.

அப்போது அனுமானத்தில் பதிலளித்தேன். இப்போது நேரடியாகவே பதில் தரலாம். குமுதம் 01.07.2009 தேதியிட்ட இதழில் பார்ப்பனர்கள் பற்றிய கட்டுரை தொடரை நான் தமிழன் என்னும் வரிசையில் மணிகண்டன் ஆரம்பித்துள்ளார். யாரை பற்றி எழுதப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் அவருக்கு கூடிய சீக்கிரம் பதில்கள் கிடைத்து விடும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இந்தத் தொடர் வரும்.

நமது பாரம்பரியங்களை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். சாதிகளும் அவற்றில் அடங்கும். அந்த விஷயத்தில் மணிகண்டனும் குமுதமும் நல்ல பணியார்றி வருகின்றன. யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகள் இந்தத் தொடரை கூர்ந்து கவனிக்கின்றன. எந்த சாதியினர் எங்கு பெரும்பான்மையில் உள்ளனர் என்பதை பார்த்துத்தானே அவர்கள் தமது வேட்பாளர்களையே நிறுத்துகின்றனர். இதை யாரேனும் மறுக்கவியலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/25/2009

டோண்டு பதில்கள் - 25.06.2009

நாமக்கல் சிபி:
1. ஆமாம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லக் கூடிய கேள்விகள் உங்களுக்குப் பிடிக்காதுதானே?
பதில்: சில கேள்விகளுக்கு அம்மாதிரி கூறவும் இயலாதுதானே. உதாரணத்துக்கு வக்கீல் ஒருவர் ஒரு சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும்போது “உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா, ஆமாம்/இல்லை என்ற பதில் சொல்லவும்” எனக் கேட்டால், எதை சொன்னாலும் சாட்சி மாட்டிக் கொள்வார். தமிழ் சினிமாக்களில் சில சமயம் இம்மாதிரி சீன் வரும். ஆனால் சாட்சி இதற்கு பதில் சொல்ல மறுக்கலாம், நீதிபதியும் கேள்வியை தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்ட வக்கீலையும் எச்சரிப்பார். விஷயம் என்னவென்றால் சில கேள்விகளுக்கு ஆமாம் அல்லது இல்லை என விடையளிக்க இயலாது. ஆமாம் மற்றும் இல்லை என்று கூட பதில் வர சான்ஸ் உண்டு. உதாரணத்துக்கு ஒரு படத்தில் வடிவேலுவோ விவேக்கோ (என நினைக்கிறேன்), டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர் என்னத்த கன்னையாவைப் பார்த்து டாக்சி வருமா என கேட்பார். கன்னையாவோ “வரும் ஆனாக்க வராது” என்று சொல்லியே வெறுப்பேற்றுவார். யாராவது என்ன படம்னு பின்னூட்டத்திலே சொல்லுங்கப்பு.


எவனோ ஒருவன்:
1. ’வரதட்சணை வாங்குவது சரியில்லைதான், கேக்கலைனா மாப்பிள்ளைக்கு குறை இருக்குனு நெனப்பாங்க’ - இதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?
பதில்: அது மனித இயற்கையே. பல நேரங்களில் கல்யாணப் பெண்ணே அவளது சகோதரிகளின் கணவர்களுக்கு தரப்படும் சீர் செனத்திகளைப் பார்த்து பொறாமைப்படுவதும் உண்டு. இதிலெல்லாம் தட்டையா யோசிக்க முடியாது.

2. இமெயிலை ஓபனாக காட்டுவதால் என்னென்ன தொல்லைகள் வரலாம்?
பதில்: பல எரிதங்கள் வரலாம். உங்கள் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு எழுத்தை நீக்கியோ சேர்த்தோ இன்னொரு அடையாளம் உருவாக்கி உங்களைப் போலவே டிஸ்ப்ளே பெயர் எல்லாம் வைத்து நடிக்கலாம், பல ரகசியங்களை உங்கள் நண்பர்களிடமிருந்து பெறலாம். இதெல்லாம் கற்பனையில்லை நடந்துள்ள விஷயங்கள். இதற்கு மேல் விடை தந்தால் - வேண்டாம், நான் கோடு போட்டேன், நீங்கள் ரோடு போட்டு பார்த்து கொள்ளுங்கள்.

3. 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ - இன்னும் அப்படியே இருக்கிறது என நினைக்கிறீர்களா?
பதில்: வந்தாரை நாம் தொந்திரவு செய்யும் நிலையிலா இருக்கிறோம்? நம்மவர்கள் எவ்வளவு பேர் தமிழகத்துக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அங்கெல்லாம் அவர்கள் வந்தவர்கள்தானே? அதுவும் ஓகோ என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாமும் வந்தாரை வாழவைப்பதே புத்திசாலித்தனம்.

4. பாடிகாட் முனீஸ்வரன் என்கிறார்களே... பாடிகாட் என்றால் என்ன? இதற்கும் Bodyguard க்கும் சம்பந்தம் உண்டா?
பதில்: என்னைப் பொருத்தவரையில் ஒரு ஐயமும் இல்லை. முனீஸ்வரன் நமக்கு bodyguard ஆக செயல்படுகிறார். நான் என்ன மேலும் சொல்லுவேன் என்றால் உடல் மட்டுமல்ல மனத்துக்கும் அவரே bodyguard.


அனானி (18.06.2009 மாலை 07.10-க்கு கேட்டவர்)
1. Who will be next super star in tamil cinema field (1. MGR 2. Rajani 3. ?)
பதில்: யார் என்ற கேள்வி too early. முதலில் பழைய சூப்பர் ஸ்டார் முழுதுமாக சீனில் இருந்து மறைய வேண்டும்.

2. Who will be the next prime minister after manmohan?
பதில்: இப்போதைக்கு என் கண்ணீல் படுவது ராகுல் காந்தி. அவர் சுலபமாக வர வேண்டும் என்பதற்காகவே இப்போதைய பொம்மை பிரதமரையே இன்னும் வைத்திருக்கிறார்கள்.

3. Who will be the successor to karunanithi (chanakkiya arasiyal)?
பதில்: கருணாநிதிக்கு அப்புறம் கட்சியே முழுசாக நிற்குமா என பார்க்க வேண்டியதுள்ளது. பிறகுதான் யார் கருணாநிதிக்கு வாரிசு என்றெல்லாம் பேசுவதில் பொருள் இருக்கும்.

4. Will it be possible to see honest leaders like kamaraj/rajaji/anna in the coming days?
பதில்: முதலில் நாம் அவர்களையெல்லாம் வர விடுவோம்னு நினைக்கிறீங்க? ஆனால் குஜராத்தியர்கள் நம்மை விட புத்திசாலிகள்.

5. What will be the next reaction by t.r balu?
பதில்: ஏம்பா இது நியாயமா? என்னைப் போயா இந்தக் கேள்வி கேட்பது? இதற்கான விடை பாலுவுக்கே தெரியாம பேய்முழி முழிக்கிறார். நானும் வேண்டுமானால் அவருக்கு துணையாக உட்கார்ந்து முழிக்கட்டுமா?


வஜ்ரா:
1. தமிழில் அனைத்து எழுத்துக்களும் வரும் விதத்தில் ஒரு சிறு பத்தி இருக்குமா?
பதில்: தெரியவில்லை. இக்கேள்விக்காக நான் யோசித்து பார்த்ததில் ஆத்திச்சூடிதான் கண் முன்னே வருகிறது.


ரமணா:
கலைஞரின் லட்சியக் கனவாம் கழக வாரீசு அறிவிப்புடன் ,ஸ்டாலினுக்கு முடிசூட்டி (துணைமுதல்வர் கிரீடம் சூட்டுதல்)அழகு பார்த்ததை, அம்மா ஜெ. வுக்கு பயப்படமால் மனம் திறந்து , சட்ட மன்றத்தில் பாராட்டிய மயிலை எஸ்.வி.சேகரின் நல்லெணத்தை பாராட்டி,அவர் ஆரம்பித்துள்ள பிராமணர் நலம் காக்கும் கட்சியின் அடிப்படை கோரிக்கையை (7 % job reservation to brahmins in tamilnadu, based on the numerical strength,considering the poor economical condition (social condition to some extent), தமிழக முதல்வர் ஏற்று, தமிழகத்தில் வாழும் அனத்து பிராமணர்களுக்கும்(without any restriction) கல்வி,வேலைவாய்ப்பு,வீட்டுவசதிவாரிய வீடு (பெரியார் சமத்துவபுரங்களில் உள்ளது போல்) ஒதுக்கீடு -ஆகியவைகளில் 7 விழுக்காடு ஒதுக்கீடும் அதில் ஐயங்கார்களுக்கு உள் 2.5 விழுக்காடும் வழங்கி அரசாணை பிறப்பித்தால் இவர்களின் கருத்து/விமர்சனம் என்னவாயிருக்கும்? 1. காஞ்சி பெரியவாள் 2. துக்ளக் ஆசிரியர் சோ 3. அதிமுக தலைவி ஜெ
4. தி.க தலைவர் வீரமணி 5. தமிழக பாஜக கட்சி 6. தயாநிதி மாறன் 7. ஹிண்டு ராம் 8. தினமணி வைத்தியநாதன் 9. சாதீய உணர்வுகளை நாளும் சாடும் ஈரோட்டு தங்கம் வால் பையன் 10. டோண்டு ராகவன்
அனானியால் சேர்க்கப்பட்டது: இவர்களையும் சேர்த்துக் கொள்ளவும் 11. அண்ணல் காந்தியின் ஆத்மா 12. சட்டமேதை அம்பேத்காரின் ஆத்மா 13. மூதறிஞர் ராஜாஜியின் ஆத்மா 14. பெரியவர் காமராஜின் ஆத்மா 15. தந்தை பெரியாரின் ஆத்மா 16. அறிஞர் அண்ணாவின் ஆத்மா 17. திரு மண்டலின் ஆத்மா 18. மண்டல் வீரர் விபிசிங்கின் ஆத்மா 19. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்தும்,எதிர்த்தும் உயிரைத் துறந்த வட இந்திய, தென் இந்திய மனிதர்களின் ஆத்மாக்கள்.

பதில்: அப்பாடா, மூச்சு விட்டுக்கறேன். ஏன் சார் இப்படித்தான் இகலப்பை போன்ற மென்பொருள் கையில இருக்கும் தைரியத்துல சகட்டுமேனிக்கு பெயர்களை போட்டு விடுவதா?
சரி முயற்சி செய்கிறேன். காஞ்சி பெரியவர் இதை வேண்டாத வேலை என்பார். சோ அவர்கள் என்ன கூறுவார் என்பது பல முறை அவருக்கே அவர் கூறும்வரை முன்கூட்டி சொல்வது கடினம், இருப்பினும் அவரும் இதை எதிர்ப்பார் தனக்கே உரித்தான முறையில் எனவே நம்புகிறேன். டோண்டு ராகவனாகிய நான் முழுமூச்சுடன் எதிர்ப்பேன். அதாவது பொருளாதார நிலையின் பின்னிலையில் இருப்பவர்களுக்கு தரலாம், அதில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என தனி கன்சிடெரேஷன் கூடாது. ஜெயலலிதாவோ இது கருணாநிதியால் கொண்டுவரப்படுகிறது என்பதற்காகவே எதிர்ப்பார்; வீரமணி வயிறெரிவார், வாஞ்சிநாதனின் விதவைக்கு பென்ஷன் கொடுக்கும் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போல. பாஜக கட்சி ஐயோ பாவம் நிலையில் உள்ளது, அதைப்போய் இங்கு தொந்திரவு செய்ய வேண்டாமே. ஹிந்து ராம், தினமணி வைத்தியநாதன் என்ன கூறுவார்கள் என்பது தெரியாது. தயாநிதி மாறன் நடுநிலைமை வகிப்பார் என நினைக்கிறேன். வால்பையன் சாதிகளையே ஒட்டு மொத்தமாக எதிர்ப்பவர், அவரும் இதை எதிர்ப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் ஆத்மாக்களில் ராஜாஜி, காமராஜ் (எதிர்ப்பு), காந்தி, அம்பேத்கர் (சலிப்பு), பெரியார் (பயங்கர எதிர்ப்பு), அறிஞர் அண்ணா கலைஞரின் கனவில் நிஜமாகவே வந்து கன்னாபின்னாவென்று சண்டை போடுவார், மண்டல், வி.பி.சிங் (தீவிர எதிர்ப்பு), மற்ற வட இந்திய தென்னிந்திய ஆத்மாக்கள் தத்தம் நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஆதரவு/எதிர்ப்பு.


அனானி (20.06.2009 காலை 09.18-க்கு கேட்டவர்):
1. கலைஞரின் கச்சுத்தீவு மீட்புப் போராட்டம் , ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசாரை மிரட்டவா? கடைசி துருப்பு சீட்டா? சும்மா பாவ்லா காட்டவா? குடும்ப சண்டையை திசை திருப்பவா? இடைத்தேர்தல் ஸ்டண்டா?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட எல்லாமேதான் காரணிகள்

2. இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்மீது உண்மை நிலைதான் என்ன? அத்துமீறுவது யார்? விடுதலைபுலிகளின் வீழ்ச்சிதான் இதுக்கு காரணமா? மத்திய அரசு என்ன செய்ய் வேண்டும்? நம்து கடற்படையின் ரோந்துக் கப்பல்கள் என்ன செய்கின்றன தமிழக மீனவ்ர்களை காக்கும் விசயத்தில்?
பதில்: செத்தும் கெடுத்தது போல பிரபாகரன் உயிருடனேயே இருக்கிறார், புலிகளின் போராட்டங்கள் தொடரும் என்றெல்லாம் எழும் பேச்சுக்களும் குழப்பத்தை அதிகரிக்கின்றன. ஸ்ரீலங்காவின் கடற்படை இதை சாக்காக வைத்து கெடுபிடி செய்ய அவையே துணைபோகின்றன. மேலும் இடையில் உள்ள கடற்பகுதி மிக குறுகியதால், சிறிது ஏமாந்தாலும் இலங்கை தரப்பு கடலுக்கு படகுகள் வழிதவறி நடக்கும் அபாயம் வேறு இருக்கிறது. சிலசமயம் அப்பகுதியில்தான் கொழுத்த மீன்வேட்டெஐ இருப்பதால் நமது மீனவர்களும் தெரிந்தே சிலசமயம் ரிஸ்க் எடுக்கின்றன. இரு நாட்டு கடற்படைகளுக் கூட்டாக ரோந்து செய்தால் பல தவறுகளை தவிர்க்க இயலும்.

3. இலங்கையின் இந்திய கடல் எல்லைகளில் அத்து மீறல்கள் , சீனாவின் இராணுவத் துணை இருக்கும் அசட்டு தைரியத்திலா? இலங்கையின் இந்த வாலாட்டத்தை தடுக்க வேண்டமா? இலங்கையில் சீனாவின் கடல் ஆதிக்கம் டேஞ்சர் அல்லவா? பாகிஸ்தானும் தன் பங்குக்கு மூட்டிவிடுகிறதா? இலங்கைக்கு சரியான பாடம் புகட்டுமா மன்மோகனின் வலிமையான அரசு?
பதில்: நீங்கள் சொல்வதில் பல உண்மைகள் உள்ளன. இருப்பினும் பூகோள ரீதியில் சீனாவால் அவ்வளவு தூரம் வந்து வாலாட்டுவது என்பதை long standing ஆக செய்வது கடினம். மற்றும் இந்திஒயாவும் அவ்வளவு பலகீனமான சக்தி எல்லாம் இல்லை. நல்லதே நடக்கும் என நினைப்போம்.

4. சீனாவின் நில ஆக்கிரமிப்பு வாலாட்டம் மீண்டும் இந்தியாவிடம் எடுபடுமா? ராணுவ பலத்தில் தற்சமயம் சீனாவின் கை ஒங்கியுள்ளது போன்ற தோற்றம் உண்மையா? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது பொறமைப்படும் சீனாவின் தகிடுதத்தங்கள் விலை போகுமா? பாகிஸ்தானும் சீனாவும் இணந்து போர் நெருக்கடி கொடுத்தால் நம்மளால் சமாளிக்க முடியுமா? அமெரிக்கா நம் பக்கம் பகவான் கிருஷ்ணர் போல் இருந்து நம்மை காக்க அணு ஆயுத ஒப்பந்தத்தில் (மற்றும் 123 ஒப்பந்தம்) ஏதேனும் ஷரத்து இருக்க்கிறதா?
பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மந்திரிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய ரகசிய தகவல்கள் டோண்டு ராகவனுக்கு கிடைப்பதாக உங்களுக்கு யாரோ அவதூறாக தகவல்கள் சொல்லியுள்ளனர்.

5. சீனாவின் போலிமருந்து தயாரிப்பு மற்றும் மேலை நாடுகளில் விற்பனை, இந்தியாவின் பெயரால் இதை எப்படி மன்மோகன் அரசின் ரசாயனம் மற்றும் மருந்துகள் நடுவண் அமைச்சர் அண்ணன் அழகிரி சமாளிப்பார்? சீனாவின் இந்த நம்பிக்கை துரோகத்தை தடுக்க, சீனாவின் பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கலாமே? இதுவும் சீனாவின் மறைமுகப் போரா பாரதத்தின் மீது? மீண்டும் கெளரவ-பாண்டவ யுத்தம் ஆசியக் கண்டத்திலா? அமெரிக்காவின் பெரியண்னன் (world police) பதவியை கபளிகரம் செய்ய் முயலும் சீனாவின் செப்படி வித்தைகள் வெல்லுமா?
பதில்: இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் செய்யப்பட்டதாக லேபல் ஒட்டி சீன போலி மருந்துகள் விற்கப்படுவதை இந்தியா முதலிலிருந்தே எதிர்த்து எல்லோருக்கும் தனது தரப்பு வாதங்களை அனுப்பவேண்டும். அதையும் விடாது செய்ய வேண்டும். பிரச்சினை என்ன என்பதை தமிழ்மணி அவர்களது இப்பதிவில் பார்க்கலாம். நீங்கள் சொல்வதுபோல இதுவும் ஒருவகை போர்தான். சீனாவின் பொருட்களுக்கு தடைவிதிப்பது ப்ராக்டிகலாக இருக்காது, ஏனெனில் இருநாடுகளுமே Gatt உறுப்பினர்கள். பிரச்சினையை நாசுக்காக கையாள வேண்டும். சீனா ஒரு சர்வதேச போலி டோண்டு.


ரமணா:
1. 19-06-2009 அன்று ராகுல் காந்தியின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த வசந்த் டீவி , ராகுலின் பதவி ஆசை இல்லாத சிறப்புத் தன்மையை புகழும் வகையில், எல்லோரையும் விமர்சிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ கூட,ராகுலின் இந்தத் தியாக உணர்வினை வித்தியசமாய் இருக்கிறது என பாராட்டியுள்ளதாகவும்.ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்கமுடியாது எனக் கருத்து சொன்னதாய் சொன்னது (ஒளி பரப்பியது) உண்மையா? விளக்கவும்?
பதில்: சோ பலமுறை இம்மாதிரி விஷயங்களில் அனுபவப்பட்டவர். யாரையாவது புகழ்வார், பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே அவ்வாறு புகழப்பட்டவர் ஏதேனும் சொதப்பலாக காரியம் செய்வார். இது பற்றி நான் விளக்கமாக எனது டோண்டு ராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்னும் பதிவில் எழுதியுள்ளேன். ஆகவே இப்போதும் சோ அவர்கள அடக்கி வாசிக்க முயலுகிறார். இதுவரை ராகுலின் செயல்பாடு திருப்திகரமாகவேதான் உள்ளது என அவர் நினைப்பதைத்தான் அவர் கூறுகிறார்.

அனானி (20.06.2009 மாலை 06.07-க்கு கேட்டவர்)
1. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றிய அரசின் பிரச்சாரத்தின் இப்போதைய நிலை?
பதில்: இந்த உரலில் உங்களுக்கு தேவையான லேட்டஸ்ட் விவரங்கள் உள்ளன.

2. இலஞ்சம் வாங்கிய குற்றத்தை பெண் ஊழியர்களும் செய்ய் ஆரம்பித்துள்ளது பற்றி?
பதில்: லஞ்சம் வாங்குவதில் ஆண் என்ன பெண் என்ன? என்ன, பெண் அதிகாரிகள் எண்ணிக்கை முன்பெல்லாம் குறைவு, இப்போது அதிகரித்து கொண்டே போகிறது. ஆகவே விஷயம் அதிகம் லீக் ஆகிறது, அவ்வளவே.

3. தொடரும் மின் தட்டுப்பாடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் தொடர்ந்து வழங்கல், இது எதில் சேர்த்தி?
பதில்: மின்சார வினியோகத்தை மேம்படுத்த ஒரு மண்ணாங்கட்டி திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே வேலைகள் மட்டும் செய்ய பணம் கஜானாவிலிருந்து திசை திருப்படுகிறது. ஓட்டுகளை விற்கும் வாக்காளர்களை முதலில் சொல்ல வேண்டும்.

4. சோனியா காந்தி தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் தலைவியாக பணியாற்றியுள்ளார்கள்?
பதில்: பத்து ஆண்டுகளுக்கு மேல்.

5. பெரிய நிறுவனங்கள் சிறுவியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்கிற தடை கொண்டுவரப்பட வேண்டும் எனும் வாதம் என்ன்னாச்சு?
பதில்: ஏன் தடை வரவேண்டும்? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கல் காய்கறி, பழம் வியாபாரம் செய்வதால் நுகர்வோருக்கும் நல்ல தரமான பொருள் கிடைக்கும், அதே சமயம் விவசாயிக்கும் நல்ல விலை கிடைக்கும். என்ன பிரச்சினை?

அனானி (20.06.2009 காலை 07.50-க்கு கேட்டவர்)
1. இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது?
பதில்: 1300 வழக்குகள் என இங்கே கூறுகிறார்கள். இது ஓராண்டுக்கு முந்தைய நிலை. இப்போது கண்டிப்பாக அதிகரித்திருக்கும்.

2. இந்திய ஆக்கி அணியின் நிலை இப்போது என்ன?
பதில்: ரொம்பவுமே பாவம் எனக் கூறும் நிலையில் உள்ளது. 1980-ல் பலநாடுகள் பங்கேற்காத மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் பெற்ற தங்க பதக்கத்துக்கு பிறகு அடுத்த ஒலிம்புக்களில் ஒரு பதக்கமும் இல்லை. அதிலும் 2008 ஒலிம்பிக்கில் உள்ளேயே வரவிடவில்லை.

3. தி.மு.க.வின் ராஜ்யசபை உறுப்பினர்களில் பெஸ்ட் யார்?
பதில்: இருக்கும் 4 உறுப்பினர்களில் கனிமொழிதான் தெரியும். அவர் எப்படி செயல்படுகிறார் என தெரியவில்லையே.

4. இப்போது அரசு அலுவலகங்களில் ஊழல்கள் உச்சத்திலா?
பதில்: விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் இருக்கும் நிலையில் உச்சம் என எந்த நிலையை சொல்வது?

5. உங்களின் ஆலோசகராய் யாரை கருதுகிறிர்கள்?
பதில்: என் வீட்டம்மாதான். அதனால்தான் பெண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்னு சொல்றேன். அதிலும் 2001-ல் தில்லியில் ஏழாவது முறையாக வீடு மாற்றவேண்டியிருக்கிறதே என்று ஆயாசமாக இருந்தது. அப்போதுதான் என் வீட்டம்மா கூறினார், பேசாமல் சென்னைக்கே திரும்பலாம் என. நான் தயங்கினேன், மொழிபெயர்ப்பு வேலைகள் என்னாகும் என்று. அதற்கும் அவர் பதில் வைத்திருந்தார். வீட்டு வாடகை தர வேண்டியிராது, ஆகவே மாதம் 5000 ரூபாய் இருந்தால் போதும் என்று உறுதியாகக் கூறினார். நானும் கணக்கு பார்த்தேன். தில்லியில் சேமித்த தொகைகளை அவ்வப்போது யூ.டி.ஐ. மாதவட்டி திட்டத்தில் போட்டு சுமார் 6000 ரூபாய் மாதவருமானம் வரும் நிலையிருந்தது. அப்போதைக்கு அது போதும் என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்றும், ஏதாவது செய்து மொழிபெயர்ப்பு வேலையை சென்னையிலும் வெற்றிகரமாக முடிப்பேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என்னை சமீபத்தில் 1953-லிருந்து பார்த்து வருபவர் என்பதால் என்னைப் பற்றி நான் அறிந்ததைவிட அவர் அதிகமாகவே அறிந்திருந்தார் என்றுதான் கூறவேண்டும்.

6. பா.ம.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: கட்சி கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பது பிடித்திருக்கிறது. அன்புமணி, வேலு, மூர்த்தி ஆகியோர் மந்திரிகளாக நன்றாகவே செயல்பட்டனர். பிடிக்காதது சந்தர்ப்பவாத அரசியல்.

7. ம.தி.முக., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான்.

8. விஜய்காந்த்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான்.

9. சமத., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: சிரிப்பு மூட்டாதீர்கள்.

10. வலது.கம்யூனிஸ்ட்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான். மேலும் தேசபக்தி இல்லாத கட்சி.

11. இடது.கம்யூனிஸ்ட்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான். மேலும் தேசபக்தி இல்லாத கட்சி.

12. தமிழக.காங்கிரஸ்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: ஐயோ பாவம்னு இருக்கற கட்சி. பிடிக்காதது சுயமரியாதை இல்லாத தன்மை.

13. அதி.மு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது வலிமையான தலைமை. பிடிக்காதது மனம் போன போக்கில் செயல்படுவது.

14. திமு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது முன்னால் இருந்த உட்கட்சி ஜனநாயகம். பிடிக்காதது அது இப்போது மறைந்தது.

15. மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து?
பதில்: தேவையற்றது. சோ அவர்கள் இது விஷயமாக கூறுவதை முற்றிலும் ஒத்து கொள்கிறேன்.

16. மதவெறியர்களும், தீவிரவாதிகளும் அடங்கவே மாட்டார்களா?
பதில்: மக்கள் விழிப்புணர்வுடன் இல்லையே. அது வந்தால் இவர்களது ஆட்டம் சீக்கிரமே க்ளோஸ் ஆகும்.

17. டண்டணக்க அடுக்கு மொழி ஸ்பெஷலிஸ்டு டி.ராஜேந்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
பதில்: ரொம்ப முக்கியம்! அவர் என்ன செய்தால் என்ன?

18. 2 ஜி செல் பேசியின் வரவால் சிட்டுக் குருவிகளை காணோம் பார்த்தீர்களா?
பதில்: ரொம்பவும் cryptic ஆக இருக்கிறது. கேள்வி புரியவில்லை. இம்மாதிரி கேள்விகளுக்கு ஏதேனும் சுட்டி தந்தால் பார்க்க சௌகரியமாக இருக்கும், நன்றி.

19. 3 ஜி வந்தால்?
பதில்: மேம்பட்ட சேவைகள் தர இயலும், ஆனால் அதற்கேற்ப infrastructures களும் தேவைப்படும்.

20. விஜயகாந்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது?
பதில்: நான் என்ன அவரது நிதிநிலை ஆலோசகரா?

21. நேற்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
பதில்: ஒருவரை ஒருவர் தவிர்க்க இயலாது, அதே சமயம் ஒருவருக்கொருவர் தண்டனை.

22. இன்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
பதில்: அதேதான், அதாவது ஒருவரை ஒருவர் தவிர்க்க இயலாது, அதே சமயம் ஒருவருக்கொருவர் தண்டனை.

23. நாளை காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
பதில்: அ.இ.அ.தி.மு.க. தன்னை மாற்றி கொள்வதை பொருத்திருக்கிறது.

24. இந்தத் தடவை மன்மோகன்சிங்கின் அரசு எப்படியிருக்ககும்?
பதில்: இடதுசாரிகளின் படுத்தல்கள் இல்லை. திமுகவும் சற்றே அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை. ஆகவே மன்மோகன் சிங் தனது முழு திறமையையும் பயன்படுத்த இயலும் என்றுதான் தோன்றுகிறது.

25. பங்கு மார்க்கெட் ஏன் உயர்கிறது/சரிகிறது?
பதில்: வால்பையன், தமிழ்சசி ஆகிய்யொரை கேட்க வேண்டிய கேள்விகளை எனக்கு அனுப்பலாமா?

26. பங்கு மார்க்கெட் -குதிரைப் பந்தயம்-சீட்டு விளையாட்டு (தாலியைக் கூட அடமானம் வைக்கும் நபர்கள்)-லாட்டரி சீட்டு (பெரும் கடன் வாங்கி மூட்டை மூட்டையாய் வாங்கும் நபர்கள்) ஒப்பிடவும்?
பதில்: இதில் என்ன ஒப்பிடல் வேண்டியிருக்கிறது? எல்லோருமே நாசத்துக்கு வழிகாட்டிகள்.

27. கிரிக்கெட் வீரர்கள் ஏலம் போவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அதை அவர்களே தங்கள் சுயலாபத்துக்கு விரும்பி ஏற்கின்றனர். இதில் நினைக்க என்ன இருக்கிறது? ஆனால் ஒன்று, இம்மாதிரி இருப்பதால் எந்த குழுவுமே எனக்கு பாந்தமாக இல்லை. இந்த மேட்சுகளில் பவுண்டரி, சிக்ஸர், விக்கெட் எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் சமயம் cheerleaders ஆடுவது மட்டும் பிடித்துள்ளது.

28. சென்னையில் ரோந்து போலீசாரின் நடவடிக்கைகள் எப்படி உள்ளது? பலன் எப்படி?
பதில்: Hyundai கார்கள் கொடுத்துள்ளனர் போலிருக்கிறது. பலன் இருப்பது போலத்தான் தோன்றுகிறது. என்ன, ரோந்து போலிசாரை உபயோகமற்ற அரசியல்வியாதிகளின் பந்தோபஸ்துக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்.

29. இரயில்வே//பொது பட்ஜெட்டால் அதிகம் பலனடையப் போகிறவர் யார்?
பதில்: அது யாருக்கெல்லாம் சலுகைகள் தரப்போகிறார்கள் என்பதை பொருத்தது. பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பார்ப்போம்.

30. எல்லா அரசியல்வாதிகளுமே ........?
பதில்: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என சொல்ல வருகிறீர்களா?

31. இந்த பழமொழி இப்போது சாத்தியமா-செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருப்போன் என்பதெல்லாம்?
பதில்: சாத்தியமே இல்லைதான்.

32. மேற்கு வங்கத்தில் இடதுகளின் பிடி/செல்வாக்கு இனி அவ்வளவுதானா?
பதில்: மம்தா பானர்ஜி எப்படி காய்களை நகர்த்துகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

பார்த்தா
1. Do you know what was the problem between Cho and writer Sujatha?
பதில்: எனக்கு தெரிந்து அவர்களுக்குள் ஒரு பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. உண்மை கூறப்போனால் பல விஷயங்களை தொட்ட அவ்விருவருமே ஒருவரை ஒருவர் தம் எழுத்துக்களில் ரெஃபர் கூட செய்ததாக நினைவில்லை.

2. US keeps ignoring India after the democrats came to power. Should India register it's concern regarding this?
பதில்: நான் ஏற்கனவேயே இப்பதிவில் ஒரு பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது போல, டெமாக்ரடிக் ஜனாதிபதிகளால் இந்தியாவுக்கு தொல்லைகள்தான்.


3. What should India do to prevent the growing Chinese presence in our neighbouring countries?
பதில்: இந்தியா முதலில் தன்னை பொருளாதாரத்திலும் ராணுவபலத்திலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். ராஜதம்திர தளத்தில் அயராது பணி புரிய வேண்டும்.

ஸ்ரீராமஜெயம்
1. சுவாமிகளை துதி பாடும் பக்தர்கள் சொல்லும் இந்த ஸ்லோகங்கள்,மந்திரங்கள் சொல்லும் அர்த்தம் என்ன? இவைகளை சொல்வதால் பக்தர்கள் அடையும் பலா பலன்கள் என்ன என்ன?நீங்கள் சொல்லும் ஸ்லோகம்,மந்திரம் எது? 1.ஓம் நமோ நாராயணாய! 2.ஓம் சிவாயா நம ஓம்! 3.ஓம் சக்தி ஒம் சக்தி ஒம் ,பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்த்கி ஓம் 4.அரோகரா அரோகரா
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 5.ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர 6.ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹர ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹர ஹரே 7.தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டுக்கும் இறைவா போற்றி
8.அரஹர பார்வதி நமஹ 9.ஓம் நமச்சிவாய 10.ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம்.

பதில்: ஓம் என்பது பிரணவ மந்திரம். அத்துடன் சேர்த்து தனத்து இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்வது வழக்கமாக நடப்பது. பிரணவ மந்திரத்துக்கு பொருளைத்தான் முருகன் தனது தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்ததாக புராணம். பலன் என்று பார்த்தால் அதை சொல்வதனால் கிடைக்கும் மன அமைதிதான். எல்லா இடர்களையும் எதிர்நோக்கும் மனோபலம் ஏற்படும். நான் விளிப்பது தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனையே.


அனானி (22.06.2009, காலை 06.01-க்கு கேட்டவர்):
1. மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சியா?
பதில்: சீனா மெனக்கெட்டு இதெல்லாம் செய்ய வேண்டியதில்லை. இந்தியாவில் உள்ள அதன் கம்யூனிஸ்டு ஜால்ராக்கள் அதை பார்த்து கொள்வார்கள்.

2. கச்சத் தீவு பிரச்னையைத் தீர்ப்பதில் அக்கறை யாருக்கும் இல்லையா? நமது கடற்பரப்பின் பாதுகாப்பு கேள்விக்குறியா?
பதில்: கச்சத்தீவு முறையாக ஸ்ரீலங்காவுக்கு இந்தியாவால் ஹேண்ட் ஓவர் செய்யப்பட்ட இடம். அப்போது என்ன நடந்தது என்பதை அறிய தகவல் பெறும் உரிமை சட்டத்தை பிரயோகித்து கேட்டால் ஏதேனும் தெரியலாம். இந்த உரலில் இது பற்றி சற்று அறியலாம்.

3. மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்ப நினக்கும் லாலுவின் உண்மையான நோக்கம் என்ன?
பதில்: இந்த மகளிர் இட ஒதுக்கீடு என்பதே தேவையற்றது என நான் கருதுகிறேன். இந்த விஷயத்திலும் நான் முழுக்க முழுக்க சோவின் கட்சியே. என்ன, நான் இதை கூற எங்களுக்கு தடை ஏதும் இல்லை. ஆனால் அவ்வாறே நினைக்கும் அனைத்து கட்சியினரும் அவ்வளவு ஓப்பனாக இருக்கவியலாததுதான். அவர்கள் அதை ஆதரிப்பார்கள் என்றால் பேசாமல் தங்கள கட்சி வேட்பாளர்களிலேயே முதற்கண் 33 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளலாமே. ஆனால் செய்ய மாட்டார்கள். இதில் லாலு என்ன, முலாயம் சிங் யாதவ் என்ன, சரத் யாதவ் என்ன எல்லோருமே ஆஷாடபூதிகளே.

4. தனியார் துறையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசின் நோக்கம்?
பதில்: ஓட்டு பொறுக்கும் அரசியல்தான், வேறென்ன. இது நடக்கும் என தோன்றவில்லை. அதை ஆதரிக்கும் ஓட்டு பொறுக்கிகள் தங்கள் கேஸ்களுக்கு வக்கீல்களை நியமிக்கும்போது மட்டும் ரிசர்வேஷன் என்றெல்லாம் மூச்சு கூட விடமாட்டார்கள்.

5. மாதச் சம்பளக்காரர் வீட்டுக்கு எடுத்துச் செல்வது 40% மட்டுமே என்ற ஆய்வு இந்தியாவும் அமெரிக்காவின் பாணியிலா?
பதில்: இந்த 40% எங்கிருந்து பெற்றீர்கள்? எங்காவது இதை பார்த்திருந்தால் அதன் சுட்டியுடன் கேள்வி கேட்பது நலம். மற்றப்படி பொதுவாக சம்பளத்திலிருந்து பிடித்தங்கள் எல்லாம் ஆன பிறகு ஹிந்து ஆஃபீசில் 60 பைசா மட்டும் எடுத்து சென்றவர்கள் பற்றி எனது தந்தை அமரர் நரசிம்மன் கூறியுள்ளார். ஆனால் இப்போதெல்லாம் இம்மாதிரி பிடித்தங்களுக்கும் (முக்கியமாக கடன்களுக்கு) உச்ச வரம்பு உண்டு என்றுதான் கேள்விப்படுகிறேன். அதுதான் லாஜிகலாக இருக்கும்.


அனானி (23.06.2009-இரவு 09.30-க்கு கேட்டவர்):
1. In your opinion, what is the best way to tackle communist terrorism?
பதில்: கம்யூனிசமோ வேறு என்னவோ தீவிரவாதம் என்பது ஒழிக்கப்பட வேண்டியதே. பை தி வே உலகில் எத்தனை கம்யூனிச அரசுகள் மிஞ்சியுள்ளன என நினைக்கிறீர்கள்? மிகவும் ஏழை நாடுகளான கியூபாவும் வட கொரியாவும்தான். சீனா எப்போதோ முதலாளித்துவவாத நாடாகி விட்டது. ஆகவே சென்ற நூற்றாண்டு ஐம்பதுகள் அறுபதுகளில் எதிர்க்கொண்டது போன்ற கம்யூனிச தீவிரவாதம் அதே ரூபத்தில் இப்போது இல்லை.

அவ்வாறு க்ளாசிகல் முறையில் அறிந்த கம்யூனிச தீவிரவாதம் மலேசியாவில் நாற்பதுகளின் இறுதியிலும், இந்தோநேசியாவில் அறுபதுகளின் மத்தியிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. முயன்று செயல்பட்டால் எல்லாமே முடியும்.

2. Communisa teeverivadam Tamilnattil nulaya vayppu ullada? (They are having base in Andhra)
பதில்: ஆந்திரா அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமில்லை என்று கருதுகிறேன்.

3. Why no political parties raised their voice on issue mentioned by Dinamani in their editorial வாளாவிருக்கிறோமே ஏன்?
பதில்: நான் ஏற்கனவேயே மேலே ரமணா அவ்ர்களது ஐந்தாம் கேள்விக்கு விடையாக கூறியது போல சீனா சர்வதேச அளவில் ஒரு போலி டோண்டுவாக செயல்பட்டுள்ளது. இந்தியா இதை சும்மாவிடக்கூடாது. எல்லா மன்றங்களுக்கும் சீனாவின் இந்த கபடநாடகத்தின் செய்தியை எடுத்து செல்ல வேண்டும். இக்னோர் செய்தால் இந்த போலி அடங்குவான் என்று இப்போதாவது யாரும் பிரச்சாரம் செய்யாமலிருப்பது நன்று.


ரவிஷா:
1. ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு வார்த்தை E யில் ஆரம்பித்து E இல் முடியும்! பல சமயம் அதில் ஒரே ஒரு லெட்டர்தான் இருக்கும்! அது என்ன?
பதில்: என்ன கண்ணா இதெல்லாம் ஒரு கேள்வியா?

2. ஒரு பணக்காரருக்கு இரண்டு மகன்கள்! ஒரு நாள் அவர் சாகக் கிடக்கிறார்! அப்போது அவர் இருவரையும் கூப்பிட்டு “நான் ஊரில் நடுவில் உள்ள ஒரு இடத்தில் ஒரு புதையலை வைத்துள்ளேன்! நீங்கள் இருவரும் தனித்தனி குதிரையில் சவாரி செய்து அந்த இடத்தை கண்டுபிடிக்கவேண்டும்! யார் குதிரை கடைசியாக அங்கே போய் சேருகிறதோ அவருக்கே அந்த புதையல்” என்று சொல்லிவிட்டு செத்துவிடுகிறார்! அவருடைய எண்ணம் என்னவென்றால் புதையல் மெதுவாக கிடைக்கட்டுமே என்று!
அதனால் இருவரும் தனித்தனி குதிரையில் ம்ம்ம்ம்ம்மெதுவாக அடிமேல் அடிவைத்து செல்கிறார்கள்! இருவரையும் கண்ட ஒரு முனிவர் என்ன விஷயம் என்று கேட்க
அவர்கள் விஷயத்தை சொல்ல, அவர் இருவர் காதிலேயும் ஒன்றை சொல்கிறார்! பிறகு நடந்தது என்னவென்றால், இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு
குதிரையில் பறக்கிறார்கள் அந்த புதையலை தேட! அந்த முனிவர் என்ன சொன்னார்? அதற்குப் பின் நடந்தது என்ன? அவர்கள் ஏன் அப்படி வேகமாக போகிறார்கள்?

பதில்: மூத்தவன் குதிரை இளையவனுக்கும் இளையவன் குதிரை மூத்தவனுக்கும் மாற்றினார் ஒரேயடியாக ரேஸ்தானே?


அனானி (24.06.2009 காலை 10.38-க்கு கேட்டவர்)
you are given a chance to become the leader/president for one day for the following organisations what will you do ?(one by one)
1.congress(tamil nadu) 2.dmk 3.admk 4.pmk 5.mdmk 6.nadikarkal sangam 7.vivasaiyikal sangam 8.viyaapaarikal sangam 9.vakkeelkal sangam 10.manavarkal sangam

பதில்: நம்மை ஒரு வழியாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே. ஏன் இந்த கொலைவெறி. காங்கிரஸ் தலைவனாக ஒரு நாள் இருந்தாலே ஒவ்வொரு கோஷ்டியும் கியூவில் வந்து ரவுண்ட் கட்டி அடிக்கும். பிறகு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேண்டும். ஆகவே மற்ற பொறுப்புகளை கற்பனையிலும் ஏற்க இயலாது. ஐயா ஜாலி.

அனானி (23.06.2009 மாலை 07.38-க்கு கேட்டவர்)
1. சின்னத்திரையும், சினிமாவும், செல்பேசியும், இண்டெர்நெட்டும் இளைஞர்களை சீரழிக்கின்றனவா?
பதில்: இவை காலத்தின் கட்டாயங்கள். அவற்றை நாம் ஆளவேண்டுமே தவிர அவை நம்மை ஆளவிடக்கூடாது. ஆகவே உங்கள் குற்றச்சாட்டுகளை ஒத்து கொல்ள இயலாது.

2. உலக, இந்திய, தமிழக அரசியல் இன்று எப்படியிருக்கிறது?
பதில்: எப்போதும் போல காலை வாரும் துரோக கலாசாரங்களுடன் அவை இருந்து வருகின்றன.

3. தமிழகக் காங்கிரசார் இனி என்ன செய்தால் காமராஜ் ஆட்சி மலரும்?
பதில்: காமராஜ் மீண்டும் பிறக்க வேண்டும்.

4. பெண்கள் நகை வாங்குவதால்தான் தங்கத்தின் விலை உச்சத்திலா?
பதில்: தங்கத்தின் விலையேற்றத்துக்கு இந்தியப் பெண்களின் நகைமோகமும் முக்கியக் காரணமே.

5. மூச்சுப்பயிற்சி செய்யும் பழக்கம் பரவலாகிவருவது பற்றி?
பதில்: இதனால் உருப்படியாக ஏதேனும் நடந்தால் சந்தோஷமே.

6. கோ ஆப் டெக்ஸின் பொருளாதார நிலை எப்படி?
பதில்: இதற்காக கூகளிட்டு பார்த்ததில் இந்த பக்கம் கிடைத்தது. நல்லபடியாகத்தான் அது நடக்கிறது எனத் தோன்றுகிறது. உங்களுக்கு வேறு ஏதேனும் விஷயங்கள் தெரியுமா?

7. தமிழக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: என்னைப் பொருத்தவரை அழகிரி மற்றும் ஸ்டாலின்.

8. இந்திய அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: மோடி, ராகுல் காந்தி

9. உலக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: என் கண்ணுக்கு ஒருவரும் தென்படவில்லையே.

10. பருவ மழையின் கண்ணாமூச்சி விளையாட்டு?
பதில்: மிகுந்த கவலையளிக்கிறது. நிலத்தடி நீர் வேகமாக இறங்கி வருகிறது. ஏதோ மழைநீர் சேமிப்பு திட்டத்தால் சென்ற ஆண்டு மழை வேஸ்ட் ஆகாததால் நிலைஅமை அவ்வளவு மோசமாக இல்லை.

அனானி (23.06.2009 இரவு 07.52-க்கு கேட்டவர்)
1. வரலாற்றில் மூன்று கிரகணங்கள் தொடர்ந்து வந்தால் பேரழிவுகள் நடந்துள்ளதற்கு சான்றுகள் (இரண்டாம் உலகப் போர்) உள்ளதாயும் இந்த ஆண்டு அதன் தாக்கம் உண்டு என்ற தகவல்?
பதில்: அதை நான் நம்பவேயில்லை. கிரகணம் என்பது பூமியிலிருந்து தெரியும் ஒரு மாயத்தோற்றம். பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருபது என்பதே பூமியிலிருந்து பார்க்கும் பார்வை கோணத்தில்தான். இதற்கென ஸ்பெஷல் விளைவு என்பதையெல்லாம் நம்புவதற்கு நான் ஆள் இல்லை.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/24/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 99 & 100

பகுதி - 99 (22.06.2009)
நீலகண்டன் தன் திகைப்பை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். இத்தனை நாள் இறந்தவர்னு நினைத்து கொண்டிருந்த ரமேஷ் திடீர்னு உயிரோட வந்து நிற்கிறார். இது illogical இல்லை, inconceivable. நிச்சயமா மனித சக்திக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை தான் இப்போது ஒத்து கொள்வதாக நீலகண்டன் கூற, உமா இப்போதாவது பகவான் என்று இருப்பதை அவர் ஒத்து கொள்கிறாரா என உமா கேட்கிறாள். அது பகவான்னு சொன்னாலும் சரி, வேறு ஏதாவது பேர்ல அதை குறித்தாலும் சரி, தன்னுடை இத்தனை ஆண்டுகால நாத்திகவாதத்தை இந்த ஒரு நிகழ்ச்சி தூள்தூளாக உடைத்து விட்டது என அவர் கூற, உமா மனம் நெகிழ்வுடன் தந்தையின் தோள்களை பற்றுகிறாள்.

சட்டென்று அப்பால் சென்ற பர்வதம், ஒரு தட்டில் விபூதி எடுத்து வருகிறாள், நீலகண்டனை அதை நெற்றியில் பூசிக்கொள்ள சொல்கிறாள். அவர் மிகவும் தயங்கி தான் இத்தனை நாள் ஆண்டவனை திட்டியதற்கு அதற்கான தகுதி த்ன்னிடம் இல்லை என ஐயப்படுகிறார். பகவான் நம் எல்லோரையும் காப்பவர். கண்டிப்பாக அவர் மன்னித்து ஏற்று கொள்வார் என உமா கூற, நீலகண்டன் விபூதியை எடுத்து பூசுகிறார். தாய்ம் மகளும் மகிழ்ச்சியுடன் அதை பார்க்கின்றனர்.

“இது என்ன சார், ஆஃப்டர் ஆல் விபூதிதானே, அதை பூசிக்கறதுங்கறது இவ்வளவு பெரிய விஷயமா?” என சோவின் ந்ண்பர் கேட்க, சோ தான் ஏற்கனவே கூறியபடி விபூதி என்பது சாம்பல்தான் வாழ்வின் அல்டிமேட் என்பதை குறிக்கிறது எனக் கூறிவிட்டு, கூன் பாண்டியன், அவன் மனைவி மங்கையர்க்கரசி, மந்திரி குலச்சிறையார், திருஞான சம்பந்தர், சைவ சமண வாதங்கள் ஆகியவை அடங்கிய நிகழ்வை எடுத்து காட்டுகிறார். அதில் கடைசியாக கூன் பாண்டியன் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறி அவனுக்கு திருஞான சம்பந்தர் விபூதி பூசியது அவனுக்கு கிடைத்த அருள் என்பதை விளக்குகிறார்.

டாக்டர் கைலாசம் வெளிநாட்டு ட்ரிப்பிலிருந்து திரும்பி வந்துள்ளார். சாரியார் அவரை பார்க்க வருகிறார். தான் வெளிநாட்டில் இருந்த கடந்த 2 மாதங்களில் இங்கு பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது பற்றி டாக்டர் குறிப்பிடுகிறார். சாரியாரின் மகன் பாச்சாவுக்கும் நடேச முதலையாரின் இரண்டாம் மகள் சோபனாவுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருப்பதை குறிப்பிட்ட, சாதி அதிகம் பார்த்த முதலியார் எப்படி ஒத்து கொண்டார் என அவர் திகைக்கிறார். சோபனாவின் பெயர் ஏற்கனவே பேப்பரில் அதிகம் அடிபட்டதால் அவளுக்கு கல்யாணம் என ஒன்று ஆனால் போதும் என்னும் நிலையில் முதலியார் வேறு என்ன செய்திருக்க இயலும் என சாரியார் திரும்பக் கேட்கிறார். சாரியாருக்கு அது திருப்தியளிக்கிறதா என டாக்டர் கேட்க அவரும் தனது சம்மதமும் இதில் உண்டு என கூறி விடுகிறார்.

பிறகு 25 ஆண்டுகளுக்கு முன்னால் குழந்தைகள் மாறிய விவகாரம் தனக்கும் தெரிந்து விட்டது எனவும், அதை தான் சமாளித்து விட்டதாகவும் சாரியார் கூறி, இந்த விஷயம் தன்னை மீறி வெளியே போகாது என்பதையும் குறிப்பிட, திடுக்கிட்ட டாக்டர் தான் அவ்வாறு அன்று பார்வதியிடம் சொன்னது சாரியாரை சோதிக்கவே என்றும், அது உண்மையில்லை, பாச்சா உண்மையிலேயே அவர் குழந்தைதான் என கூறுகிறார். சாரியார் அவரை நம்ப மறுக்கிறார். நர்ஸ் பார்வதியையே அழைத்து சாரியாரிடம் உண்மையை சொல்ல வைக்க அவர் முயலும்போது பார்வதி குழந்தைகள் மாறியது நிஜமே எனக் கூறி டாக்டரை அசர வைக்கிறார்.

சாரியார் அந்தண்டை போனதும் டாக்டர் பார்வதியிடம் அவள் ஏன் இம்மாதிரி தன் காலை வாரிவிட்டாள் எனக் கேட்க அவள் தனது தங்கை சோபனாவின் கல்யாணம் இதனால் நின்றுவிடுமோ என்ற பயமே தன்னை இவ்வாறு பேச வைத்தது எனக் கூறுகிறாள். பாச்சா ஹரிஜனப் பையன் என்ற நினைப்பில் சாரியார் இருப்பதே இக்கல்யாணத்தை பொருத்தவரை நல்லது, ஏனெனில் பாச்சா உண்மையிலேயே தனது மகனே என்றிருந்தால் அவர் இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்க மாட்டார் என அவரே கூறியதை தான் நேரடியாகக் கேட்டதாக அவள் கூறுகிறாள்.

“அம்மாதிரி சீன் எதுவும் வரவில்லையே” என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் பார்வதி தான் கேட்டதாக கூறுகிறாள். அதுவே போதும், ஏனெனில் பல காட்சிகள் அம்மாதிரி டயலாக்கிலேயே முடிந்து விடுவதும் பல நாடகங்களில் நடப்பதுதான் என சோ அவர்கள் கூறுகிறார்.

டாக்டருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையா என பார்வதி கேட்க, சாரியார் அறியாமையில்தான் ஒத்து கொண்டுள்ளார். அவருக்கு உணமை தெரிந்திருந்தால் இக்கல்யாணம் நடந்திராது என்பதுதான் அவரது ஆட்சேபணைக்கு காரணம். தனது தங்கையின் திருமணத்துக்கு பிறகுதான் தனக்கும் நிரஞ்சனுக்கும் (சேட்டு பையன்) திருமணம் என்பதால் இவள் இவ்வாறு சுயநலமாக செயல்படுகிறாள் என டாக்டர் குற்றஞ்சாட்ட, தனது திருமணத்தை தன்னிச்சையாக தான் தள்ளிப் போட்டதில் சுயநலம் எங்கிருந்து வருகிறது என்று அவள் திருப்பி கேட்கிறாள். எது எப்படியானாலும் தனது பொய்யே தன்னைக் கட்டிப் போட்டது என டாக்டர் ஆயாசத்துடன் கூறுகிறார்.

அசோக்கும் கிரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனது தந்தை சிகாமணி முதலியார் பற்றி அவன் பெருமையுடன் பேசுகிறான். உண்மைக்கு மதிப்பு கொடுப்பவர் எனக் கூறி அதற்கு ஒரு உதாரணமும் தருகிறான். அசோக் அவனிடம் தான் அவனது தந்தையை நேரில் பார்க்க விரும்புவதாகக் கூற, சரி என்கிறான் கிரி. அசோக்கும் சிகாமணியும் பேசுகின்றனர். அவரது வடமொழி அறிவை மிகவும் சிலாகிக்கிறான் அசோக். சிகாமணி வேதம் அந்தம் இரண்டும் சேருவதே வேதாந்தம் என்கிறார். எல்லா வேதங்களுமே பரம்பொருளை அந்தத்தில் அடைகின்றன என்கிறார்.

“அப்படியா சார்?” என சோவின் நண்பர் கேட்கிறார். வார்த்தைகளில் சேர்க்கை அப்பொருளைத்தான் தருகிறது என கூறுகிறார் சோ அவர்கள். வேதங்கள் நான்கு, ஒவ்வொன்றுக்கும் நான்கு அங்கங்கள் உண்டு. அவை சம்ஹிதை (மந்திரங்கள்), பிராம்மணம் (யாகங்கள்), ஆரண்யீயம் (யாக செய்முறைகள்) மற்றும் உபநிஷத் (ஆத்ம விசாரங்கள்). கடைசியாக கூறப்பட்ட உபநிஷத் வேதங்களில் ஒரு பகுதி என்றாலும், மேற்கத்தியர்கள் அவற்றை தனியாக நிற்பவை எனக் கருதினார்கள். ஆனால் அது சரியில்லை. இவ்வாறாக மேலும் சில விவரங்களை அவர் தருகிறார்.

தான் உண்மையான பிராம்மணனை தேடுவதாக அசோக் கூற முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் சிகாமணி. சிகாமணி அவர்களே உண்மையான பிராமணனாக ஏன் இருக்க கூடாது என அசோக் கேட்க, you are going too far என சிகாமணி கூறுகிறார். பிராமணனாக இருக்க பிறப்பு காரணம் இல்லை என்றாலும், தன்னை பொருத்தவரை அந்த ஒரே க்வாலிஃபிகேஷன் போதாது என்கிறார் சிகாமணி. அவ்வாறு பிறப்பின் மூலம் வராது தகுதியால் வருபவர்களுக்கு உதாரணமாக அவர் விஸ்வாமித்திரரை எடுத்து கூற, அசோக்கோ உண்மையை பேசிய சத்யகாம ஜாபாலி பற்றி பேசுகிறான். அதே போல சிகாமணி அவர்களும் தனது உத்தியோகத்துக்கு வரக்கூடிய ஆபத்தை பொருட்படுத்தாது உண்மையை பேசியதையும் சுட்டிக் காட்டி அவர் உண்மையான பிராமணனே என தான் நினைப்பதற்கு ஆதாரம் தேடுகிறான். அவ்வாறு உண்மை கூறுவது மட்டுமே போதாது என சிகாமணி மறுதளிக்க, “அப்படியா சார்” என்கிறார் சோ அவர்களின் நண்பர்.

பகுதி - 100 (23.06.2009)
ஆம் என ஆமோதிக்கும் சோ அவர்கள் பிராமணனாக ஏற்று கொள்ளப்படுவதற்கான மற்ற விதிமுறைகளையும் அடுக்கிறார். கேட்டாலே தலை சுற்றும் அளவுக்கு அவை உள்ளன. தூய்மையாக இருக்கணும். சமப்பார்வை வேண்டும், அதாவது எலோருமே சமம் என்ற மனநிலை. பணம் சம்பாதிக்கக் கூடாது, அடுத்த நாளைக்கு என எதையும் சேமித்து வைக்கக் கூடாது. யாசிக்காமல் கிடைப்பதை வைத்துத்தான் சாப்பிட வேண்டும். வயல், சந்தை ஆகிய இடங்களில் கீழே சிந்தி கிடக்கும் தானியங்களை திரட்டி எடுத்து உணவாக்கி உண்ண வேண்டும். இதுதான் உண்மையான உஞ்சவிருத்தி. பலர் நினைப்பது போல யாசிப்பது அல்ல. வசதியான வாழ்க்கை இருக்கக் கூடாது.

யாகம் செய்வது, செய்விப்பது. வேதம் கற்பது கற்பிப்பது, தானம் பெறுவது, தானம் அளிப்பது. தானம் மட்டும் வாங்கலாமா என்றால், தானம் செய்யும் கடமைக்காக அதுவும் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறாக பல கட்டுப்பாடுகள் உல்ளன. பிராமணன் ஆக பிறப்பால் முடியாது, உடலால் இயலாது, தோஷமற்ற அறிவால் இயலாது. அது தோஷமற்ற, பிறப்பற்ற, எல்லையற்ற, முடிவற்ற ஆன்மா பற்றிய அறிவு வேண்டும். அதை பெற்று விருப்பு வெறுப்பற்ற சமபார்வை வேண்டும். இவ்வாறெல்லாம் பல தகுதிகள் வேண்டும். இதையெல்லாம் கூறுவது வஜ்ரசூசிகா என்னும் உபநிஷத். மேலும் இது பற்றி பாரதம், பாகவதம் போன்ற புராணங்களிலும் பல இடங்களில் கூறப்பட்டது என்கிறார் சோ அவர்கள்.

“ஒரே ஒரு இதழ் மட்டும் மலராக முடியாது. அதே போல உண்மையை சொல்வது மட்டும் என்னை பிராமணனாக்க முடியாது. அரிச்சந்திரனே பிராமணன் ஆகமுடியவில்லையே, நான் எந்த மூலைக்கு? ஆனாலும் இந்த உண்மை சொல்லும் தன்மையே என்னை ஒரு நாள் இலக்கு நோக்கி நகர்த்தும். எங்கே பிராமணன் என தேடும் உனது முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்” என கூறுகிறார் சிகாமணி.

அசோக் பல கோவில்களுக்கு செல்கிறான். பல அறிஞர்களுடன் தனது தேடல் பற்றி விவாதிக்கிறான். ஆனால் இக்காட்சிகளெல்லாம் வாய்ஸ் ஓவராக காட்டப்படுகின்றன.

சாரியார் நடேச முதலியார் வீட்டுக்கு வருகிறார். நடேச முதலியார் அவரை அன்புடன் வரவேற்று நடக்கவிருக்கும் சோபனா பாச்சா கல்யாணம் பற்றி பேசுகிறார். சாரியார் சுரத்தேயில்லாமல் பேசுவதை இவர் கவனிப்பதாகத் தெரியவில்லை. திடீரென இந்த கல்யாணம் நடக்கக் கூடாது என ஒரு குண்டை தூக்கி போடுகிறார். நடேச முதலியார் திகைக்கிறார். அவர் என்ன பேசினாலும் பிடி கொடுக்காத சாரியார் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். சாரியார் திடீரென சாதியை பார்க்கிறாரா என அவர் கோபத்துடன் கேட்க, கண்டிப்பாக இல்லை எனக்கூறும் சாரியார், பாச்சாவின் ஜாதகத்தை அன்றுதான் பார்த்ததாகவும், அதில் அவனுக்கு குறைந்த ஆயுள் என்பதை கண்டதாகவும், சோபனா திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் விதவையாகி விடுவாள் எனவும் அவர் கூறி, சோபனாவின் நலனை நோக்கியே தான் திருமணத்தை நிறுத்துவதாக சாரியார் கூறி பயங்கரமாக பல விஷயங்களை குறிப்பிட்டு அவற்றின் மேல் ஆணை வைக்கிறார்.

சாரியார் கிளம்பி சென்றதும் நடேச முதலியார் சோர்வுடன் பார்வதியிடம் திருமண ஏற்பாடுகளை நிறுத்த சொல்லிவிட்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். சாரியாரை துரத்தி சென்ற பார்வதி அவரை திரும்ப வீட்டுக்கு அழைக்கிறாள். அவரும் வருகிறார். வையாபுரியின் மகன் பிறந்த நேரம் அன்று காலைதான் தனக்கு கிடைத்ததாகவும் அதை வைத்து ஜாதகம் கணித்ததில் பாச்சாவுக்கு அல்பாயுஸ் என அறிந்ததாகவும் அவர் விளக்கிக் கூற, பார்வதி நிம்மதியாக பெருமூச்சு விட்டு, டாக்டரும் தானும் டாக்டர் வெளிநாடு செல்லும் சமயத்தில் வேண்டுமென்றே சாரியாரை டெஸ்ட் செய்யவே கூறிய பொய்யை பற்றி கூறி, உண்மையாகவே பாச்சாதான் சாரியாருடைய பிள்ள எனவும், டாக்டர் உண்மையை கூறியபோது தான் கூறாததற்கு காரணமே தனது தங்கை சோபனாவின் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே என்னும் விளக்கமும் தருகிறாள். ஆனால் அந்தோ சாரியார் இதை நம்ப மறுத்து விட்டு, சோபனாவின் திருமணத்துக்கப்புறம் பார்வதி நிரஞ்சனை திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதை எடுத்து கூறி அவள் சுயநலத்துக்காக தங்கை விதவையானாலும் பரவாயில்லை என செயல்படுவதாக அவளிடம் குற்றம் கண்டுவிட்டு அப்பால் செல்கிறாள். டாக்டர் தனது பொய்யாலேயே தான் கட்டிப் போடப்பட்டதை எண்ணி திகைத்தது போல பார்வதியும் இப்போது திகைக்கிறாள். இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சாரியார் நடேச முதலியார் வீட்டுக்கு வந்து கல்யாணத்தை நிறுத்தும் காட்சி அப்படியே சோ அவர்கள் எழுதிய “சாத்திரம் சொன்னதில்லை” என்னும் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அசோக்கின் தேடல் தொடர்கிறது. பலரிடம் பேசுகிறான். அந்த காட்சிகளும் வாய்ஸ் ஓவர்களாகவே போகின்றன.

நாதன் வீட்டுக்கு சிங்காரம் அழுது கொண்டே வருகிறான். மதுராந்தகத்துக்கு தன் குடும்பத்தினருடன் காரில் சென்ற வையாபுரி வழியில் ஒரு கிராமத்தில் ஜாதிக்கலவரத்தில் சிக்கி, காருடன் சேர்த்து எல்லோருமே எரிக்கப்பட்டனர் என கதறுகிறான். எரிந்த அத்தனை உடல்களையும் சேர்த்து மூட்டையாக கட்டி பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர் என அழுகிறான். நாதனும் வசுமதியும் செய்வதறியாது திகைக்கின்றனர். நாதன் இறுதி மரியாதை செய்ய புறப்படுகிறார். போவதற்கு முன்னால் வசுமதியிடம் சாதி அரசியல் செய்த வையாபுரி சாதியாலேயே இறந்தார் என சொல்லி வருந்துகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/22/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.06.2009

தோ அஞ்சானே:
எனக்கு கேட்கப்பட்ட 32 கேள்விகளில் நான் கடைசியாக அழுதது எப்போது என்ற கேள்விக்கு கீழ்க்கண்ட பதிலை அளித்தேன்.

“என் தந்தை சமீபத்தில் 09.09.1979 அன்று இறந்தபோது எனக்காக அழுதேன். அதற்கு முன்னாலும் பின்னாலும் சினிமா/நாடகங்கள்/நாவல்கள் ஆகியவற்றில் வரும் பல சோகக் காட்சிகளில் அழுதிருக்கிறேன்”.

அம்மாதிரி என்னை அழச்செய்த ஒரு காட்சி பற்றி இங்கே கூறுவேன். என்ன, அது என்னை மகிழ்ச்சியில் அழச்செய்தது. சமீபத்தில் 1977-ல் வந்த ஹிந்தி படம் தோ அஞ்சானே. நடிப்பு அமிதாப் பச்சன் மற்றும் ரேகா. சண்டைக் காட்சிகளே இல்லாத அமிதாப்பின் படம். அமிதாப்பும் ரேகாவும் தம்பதியர்கள். கல்கத்தாவில் வாழ்கின்றனர். ரேகாவுக்கு சினிமாவில் நடித்து புகழ் பெற ஆசை. அவர்களுக்கு ஒரே மகன், பிட்டு, சுமார் இரண்டு வயது இருக்கும். மகன் மேல் அமிதாப்புக்கு உயிர், மகனுக்கும் அவ்வாறே. முதலில் அவர்கள் சந்தோஷமாகப் பாடும் பாடலை கீழே பார்த்து விடுங்கள். அப்போதுதான் நான் சொல்ல வருவதை இன்னும் நன்றாக உணர இயலும்.



அமிதாப்பின் நண்பன் பிரேம் சோப்ரா அவர்கள் வாழ்வில் குறுக்கிடுகிறார். ரேகாவின் சினிமா ஆசைக்கு தூபம் போட்டு, அமிதாப்பை ஓடும் ரயிலிருந்து தள்ளிவிடுகிறார். தெய்வாதீனமாக பிழைத்த அமிதாப் ஒரு பணக்கார தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டு அவர்கள் மகனாக பம்பாயில் இருக்கிறார். ஆனால் அவருக்கு தான் யார் என்பது மறந்து விட்டது. திடீரென சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவருக்கு தன் பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வருகின்றன.

தன் வளர்ப்பு தந்தையிடம் கூறிவிட்டு அவர் பம்பாய் செல்கிறார். அலெக்ஸாண்டெர் ட்யூமாவின் மோந்த் க்றிஸ்தோ பிரபு ரேஞ்சில் ரேகாவையும் பிரேம் சோப்ராவையும் பழி வாங்க ஆரம்பிக்கிறார். அது தனி சேனலில் போகிறது.

அதே சமயம் தனது மகன் பிட்டு படிக்கும் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு (டேராடூனில் இருக்கிறது) அவனைப் பார்க்க செல்கிறார். அவர் தன் மகனை காணும் காட்சி, மகன் அவரை எங்கேயோ பார்த்திருக்கும் முகபாவத்தில் தன் நினைவுகளுடன் தடுமாறுவது எல்லாவற்றையும் படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். அதில் வரும் மனதை உருக்கும் இப்பாடலையும் கீழே பார்க்கலாம்.



ஆவின் நிறுவனம் செய்யும் குளறுபடிகள்
ஆவின் பொருட்களில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் நீல லேபல் அரை லிட்டர் பாக்கெட்டுகள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 9 ரூபாய்க்கு மேல் அதிக விலையிலேயே விற்கப்படுகின்றன. கொழுப்பு நீக்கப்பட்ட இந்த toned பால் திருமலா மேக்கில் 11 ரூபாய் ஆகிறது. இந்த கணிசமான விலை வேறுபாட்டினால் ஆவின் பால் 9.50 அல்லது 10.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அதிக விலை நாணயமற்ற இடை தரகர்களுக்கு போகிறது. ஆவின் அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் கவனிக்கப் படுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது. சில நாட்களுக்கு முன்னால் ஆவின் தரப்பிலிருந்து இந்த அதிகாரமற்ற விலை உயர்வு மறுக்கப்பட்டு விளம்பரங்கள் வந்தன. அதிக விலை தர வேண்டாம் என பொது மக்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். சில நாட்களுக்கு அடாவடிக்காரர்கள் அடக்கி வாசித்தனர். ஆனால் இது நேற்றிலிருந்து மீண்டும் நடக்கிறது.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த விலை குறைவு சப்சிடி ஆக இருந்தால், அதை விலக்குவதே முறை. ஆவின் பால் வாங்குபவர்கள் அப்படியெல்லாம் ஏழைகள் அல்ல. இதனால் இடை தரகர்கள்தான் பலன் அடைகிறார்கள். சப்சிடி என்ற விஷயமே ரொம்ப அபாயகரமானதே.

சாத்திரம் சொன்னதில்லை
சோவின் இந்த நாடகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக எல்லா பாத்திரங்களுமே அவரது “எங்கே பிராமணன்” சீரியலில் புகுத்தப்பட்டதாக எனக்கு ஓரிரு முறைகள் பின்னூட்டங்கள் வாயிலாக கூறப்பட்டது. கடந்த சனியன்றுதான் நான் அப்புத்தகத்தை கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்தில்ருந்து எடுத்து வந்து வாசித்தேன்.

பின்னூட்டங்களில் கூறப்பட்டது உண்மையே. ஆனால் இந்த பாத்திர சேர்ப்பு நான் இதுவரை பார்த்தவரை எங்கே பிராமணன் சீரியலில் அற்புதமான முறையில் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் வரும் எபிசோடுகளில் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/21/2009

நண்பர் ஜெயமோகனுக்கு மனமார்ந்த நன்றி

தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்கிறேன்.

எனது வறுமையும் புலமையும் பதிவில் சுஜாதா சாரின் உதாரணத்தையும் எடுத்திருந்தேன். அதிலிருந்து சில வரிகள்.

பல எழுத்தாளர்கள் வேறு தொழிலை கையில் வைத்திருக்கிறார்கள். சுஜாதா ஒரு முக்கிய உதாரணம். சோவும் கூட இதற்கு நல்ல உதாரணம். இக்காலத்தில் பல துறைகளில் திறமை வளர்ப்பது ரொம்ப முக்கியமாகி விட்டது. பதிப்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு ஒரு தெம்பை இது கொடுக்கிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை கூடுவதும் ஒரு முக்கியக் காரணியாகி விட்டது. சந்தையில் எது விலை விலை போகிறது என்பதைப் பார்ப்பதும் முக்கியம்.

நான் மொழிபெயர்ப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறியதற்கும் என்னிடம் இருந்த முழுநேர வேலைதான் காரணம். மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடம் இருந்த போது கவலையின்றி மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களுடன் பேரம் பேச முடிந்தது அல்லவா. கூடவே இஞ்சினியராக இருந்ததாலும், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இஞ்சினியர் கூட்டு இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அதே சமயம் விரும்பத்தக்கதாக ஆனதாலும் என் முன்னேற்றத்துக்கு தடையே இல்லை.

அதே போல மொழிபெயர்ப்பாளரானதால் ஐ.டி.பி.எல்லில் இஞ்சினியர் க்ளாஸ் 1 அதிகாரியாக முடிந்தது. ஆகவே இரு திறமைகளும் ஒன்றுக்கொன்று உதவி செய்தன.


ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல. நான் இங்கு தொட நினைப்பது இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டு மிக அதிக வெற்றிகளை ஈட்டுபவர்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினையே. அதாவது சக அலுலகர்களது பொறாமை, வயிற்றெரிச்சல், அடாவடி செயல்கள் ஆகியவையே. என்னைப் பொருத்தவரை நான் எனது இப்பதிவில் எழுதியது போல முழுநேர வேலை, பகுதிநேர வேலை ஆகிய இரண்டையுமே தனித்தனியே வைத்திருந்தேன். பலருக்கு விஷயமே தெரியாது. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டு என இருந்தேன். இந்த விஷயம் இருவருக்கே என் கம்பெனியில் தெரியும். ஒருவர் டைப்பிஸ்ட், இன்னொருவர் அந்த டைப்பிஸ்டின் அடுத்த மேல்நிலையில் உள்ள அதிகாரி. அவர்களுக்குக் கூட நான் வெளிவேலை செய்கிறேன் என்பதுதான் தெரியுமே ஒழிய, எங்கிருந்து அவற்றைக் கொண்டு வருகிறேன் என்பது தெரியாது. ஏனெனில் அது அவர்களுக்குத் தேவையற்றத் தகவல்.

டைப்பிஸ்ட் இதில் எங்கு வந்தார்? என் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சு செய்வது அவரே. அவருக்கு ஒரு பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று ஏற்கனவே பேசி வைத்துக் கொண்ட விலையில் எவ்வளவு பக்கங்கள் தட்டச்சு ஆகிறதோ அதற்கான முழுதொகையையும் உடனுக்குடனே செட்டில் செய்துவிடுவேன். ஆகவே அவர் நான் செய்யும் வேலை குறித்து வாய் திறக்கப் போவதில்லை.

அந்த டைப்பிஸ்டின் மேலதிகாரி? இது சுவாரஸ்யமானது. முதலில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அதை விட டைப்பிஸ்டுக்கு வேலை கொடுக்குமுன் அவரிடம் நான் கம்பெனி வேலையில் ஒரு பாக்கியும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டேன். ஒரு தற்பாதுகாப்பு என்று வைத்து கொள்ளுங்களேன். ஆக நடந்தது என்ன? மேலதிகாரி கொடுக்கும் காகிதங்கள் கடகடவென்றுத் தட்டச்சுச் செய்யப்பட்டு, அவர் மேஜைக்குத் திரும்பச் சென்றன. அவருக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. என் வேலையைச் செய்வதால் அவர் வேலை தாமதமின்றி நடந்தது. அவரும் என்னைப் பற்றி ஒன்றும் கூறப் போவதில்லை. உண்மையைக் கூறப்போனால் நான் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு வேலைக்குச் சென்ற போது என்னை உற்சாகமாக வரவேற்றது அந்த டைப்பிஸ்டும் அவர் மேலதிகாரி மட்டும்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் எழுத்தாளர்கள் விஷயத்தில் இம்மாதிரி செயல்பட இயலாது. அவர்கள் பெறும் வெற்றிகள் அம்மாதிரி. அதே சமயம் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி அவர்கள் அதிகாரபூர்வமாகவே அனுமதி பெற இயலும். எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சலுகை இது. ஆகவே சட்டப் பிரச்சினைகள் இருக்காது. ஆனால் சக அலுவலகர்களின் தரப்பிலிருந்து பொறாமையால் போடப்படும் முட்டுக் கட்டைகள்? நீலபத்மநாபனின் “உத்யோக பர்வம்” என்னும் சிறுகதை ஒன்றில் இந்த பிரச்சினை நன்கு கோடி காட்டப்பட்டிருந்தது. ஆகவே அம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஊழியர் கம் எழுத்தாளர்கள் என்பது பற்றி நான் மேலும் அறிய விரும்பினேன்.

ஆகவே நம்ம ஜெயமோகனுக்கு இது சம்பந்தமாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் அனுப்பினேன்:

அன்புள்ள ஜெயமோகன்,

நீல பத்மநாபன் என நினைக்கிறேன் (அவர்தானே துணைப்பொறியாளராக பணியாற்றியவர்?), அவரது ஒரு கதையின் கதாநாயகன் அவரைப் போலவே அரசு வாரியத்தில் ஏ.இ. ஆக பணிபுரிந்து கொண்டே, பல புத்தகங்கள் எழுதி அவார்டும் வாங்குகிறார். இது அவரது சக இஞ்சினியர்களை மனம் புழுங்க வைக்கிறது. இவருக்கு இம்மாதிரி எல்லாம் அனுமதி/சலுகைகள் எல்லாம் தந்தால் தாங்கள் எல்லோருமே எழுதத் தொடங்கி ஆஃபீசை சங்கடத்தில் ஆழ்த்துவோம் என அவர்களில் ஒருவர் வெளிப்படையாகப் பொருமும் அளவுக்கு நிலைமை சீர்கெடுகிறது.

ஒரு அலுவலக மீட்டிங்கில் அவரது மேலதிகாரி, “சார் இந்த மீட்டிங்கையே தனது ஏதேனும் ஒரு கதையில் புகுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என வேடிக்கையாகக் கூற, அவரது சக அதிகாரி அதை சீரியசாக எடுத்து கொண்டு, அவ்வாறெல்லாம் இவர் செஞ்சா செருப்பாலே அடிக்கப்போவது என்று கூறுவது உறுதி போன்ற எதிர்வினை தருமளவுக்கு நிலைமை போகிறது.

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் தரப்பிலிருந்து பொறாமையால் விளைந்த தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எழுதியதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து, தவறிப் போய்கூட பதவி உயர்வு ஏதேனும் அதிகாரியாக வந்து விடாமல் பார்த்து கொள்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.

சட்டப்படி அனுமதி வாங்கிக் கொண்டு நீங்கள் பாட்டுக்கு உங்கள் தரப்பிலிருந்து வருமான வரி ரிடர்ன்ஸ் அளித்து வந்தால் அந்த வகையில் பிரச்சினை இருக்காதுதான். ஆனாலும் இந்த பொறாமை என்னும் விஷயம்? அது எந்தெந்த காரணங்களுக்காகவோ வருகிறதே?

இது பற்றி ஏதேனும் பதிவுபோடும் எண்ணம் உண்டா? அல்லது இந்த மின்னஞ்சலுக்காவது தனி பதில் தரவியலுமா?

சங்கடமான கேள்வியாக இருந்து பதிலளி்க்க விரும்பாவிட்டால், அதையும் புரிந்து கொள்வேன்.

எனது விஷயத்தில் நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்து வந்தேன். இது பற்றி நான் ஒரு பதிவும் போட்டுள்ளேன்.

ஆனால் உங்கள் விஷயத்தில் நீங்கள் பெறுகின்ற புகழ் அவ்வாறு தனி சேனலில் இயங்க விடாது என்பதும் தெரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


ஜெயமோகன் எனக்கு அனுப்பிய பதில் இதோ:

அன்புள்ள டோண்டு சார்,

வேலையில் இருந்துகொண்டே கலை இலக்கிய விஷயங்களில் ஈடுபடுவது பொதுவாக கடினமானது. ஆனால் அதில் பல வசதிகளும் இருக்கின்றன.

ஒன்று, வேலை நம் ஆற்றலின் பெரும்பகுதியை, நேரத்தின் நல்ல பகுதியை, உறிஞ்சி விடுகிறது. ஒரு கதை எழுத 3 மணி நேரம் போதும். ஆனால் ஒருநாளில் மூன்று மனிநேரம் மட்டும் கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு நல்ல கதையை எழுதிவிட முடியாது. அதற்குப்பின்னால் உள்வாங்குதல், உள்ளூர பயணம்செய்தல் என பல மனநிலைகள் இருக்கின்றன. அவற்றுக்கான நேரமும் உண்மையில் எழுத்துக்கான நேரமே. வேரு விஷயங்களில் நாளெல்லாம் மூழ்கியபின் கிடைக்கும் மூன்றுமணி நேரம் நேரமே அல்ல.

பெரும்பாலும் அன்றாட லௌகீக விஷயங்கள் நம் கற்பனையை படைப்புத்திறனை உறிஞ்சிக்கொள்வதையே காண்கிறோம். ஆகவே வேலைச்சுமை என்பது எழுத்துக்கு எதிரானதே. எழுத்தே வேலையாக உள்ள எழுத்தாளனுக்கு இருக்கும் வாய்ப்பில் சிறு பகுதியைக்கூட நாம் பகுதிநேர எழுத்தாளர்களிடம் காணமுடியாது. மேலைநாட்டில் எழுத்தாளன் என்பவன் முழுநேர எழுத்தாளனே

ஆனால் அதற்காக எழுத்தை தொழிலாகச் செய்தால் ஏற்படும் இழப்பு இன்னும் அதிகம். வருமானத்துக்காக கட்டாயமாக எழுத நேர்வதும் சரி ஏராளமாக எழுத நேர்வதும் சரி எழுத்தாளனின் கல்லறையை அவனே கட்டிக்கொள்வதுதான். அவன் தான் எழுத வேண்டிய, தன்னுடைய , இலக்கியத்தை எழுதி அதனாலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவேண்டும்

அப்படி முடியாத பட்சத்தில் அரசு வேலையே சிறந்தது. அதில் உள்ள நிரந்தரத்தன்மை எழுத்தாளனின் அன்றாடப் பதற்றங்களை வெகுவாகக் குறைத்துவிடும். புறவாழ்க்கையை எளிமையாக, சவால்கள் அற்றதாக, சாதாரணமாக அமைத்துக்கொள்வதே எழுத்தாளனுக்கு வசதியானது.

நான் அரசுவேலையில் பதவி உயர்வுகளை மறுத்தேன். சவால்கள் இல்லாத எளிமையான வேலையிலேயே நீடித்தேன். இது எனக்கு அளித்த சுதந்திரமும் உறுதிப்பாடும் எனக்கு மிக மிக உதவியாக இருந்தன.

அத்துடன் நான் என் அலுவலகத்தில் எப்போதுமே அடையாளம் இல்லாதவனாக, சாதாரணமானவனாக, பிரச்சினைகள் இல்லாதவனாக இருந்தேன். அதாவது 'கண்ணுக்குத் தெரியாமல்' நடமாடினேன். அது எனக்கு மிக உதவியாக இருந்தது

ஜெ


எனது அடுத்த மின்னஞ்சலும் அதற்கு அவரது பதிலும்:

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுக்கு எனது மின்னஞ்சலை அனுப்பிய பின்னால் நீலபத்மநாபன் அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. அவரது பள்ளிகொண்டபுரம் நாவலின் தலைப்பை அவர் அனுமதி இல்லாது ஒரு திரைப்படத்துக்கு போட்டதற்கு அவரது எதிர்வினை பற்றி அவரிடம் கேட்டிருந்தேன்.

அச்சமயம் என்னால் உங்களுக்கான மின்னஞ்சலில் சுட்டப்பட்ட அவரது கதை பற்றியும் கேட்டேன். சுவாரசியமான பதில்கள் தந்தார்.

நிற்க. இந்த நமது மின்னஞ்சல் பரிமாற்றத்தை உங்கள் பதிவுகளில் போடும் எண்ணம் உள்ளதா? நான் போட விரும்புகிறேன். உங்கள் பெயரை அதில் உபயோகிக்கலாமா? அவ்வாறு செய்யலாம் என்றால் இரு மின்னஞ்சல்களையும் அப்படியே மாற்றாமல் பெயர்களுடன் குறிப்பிட்டு மேலே சில எண்ணங்களை சேர்ப்பேன். இல்லாவிடில் பொதுவாக ஒரு எழுத்தாளருடன் நான் மின்னஞ்சல் தொடர்பில் பேசிய விஷயங்கள் என்று குறிப்பிட்டு கொள்வேன்.


அவரது பதில்:

i planned to publish it in my site with the link of ur article
j


ஆக, ஜெயமோகன் சார் அப்பிரச்சினைகளை தனது நடவடிக்கைகளால் பெருமளவு தவிர்த்து விட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பதிவுக்காக நான் அவரது அனுமதி கேட்டு அவரும் அன்புடன் தந்தார். ஆகவே நண்பர் ஜெயமோகனுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/20/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 96, 97 & 98

பகுதி - 96 (17.06.2009)
உமா, அவள் மாமனார் மற்றும் மாமியார் சீனில் வருகின்றனர். மாமனாரும் மாமியாரும் ரமேஷ் பற்றிய தத்தம் நினைவுகளை கூறி, அவன் இறந்ததற்காக பிரலாபிக்கின்றனர். உமாவோ ரமேஷ் இன்னும் சாகவில்லை என்பதை உறுதியாக நம்புகிறாள். இதில் அவளது அந்தராத்மாவையே அவள் நம்புகிறாள். மாமனாரோ மாமியாரோ அந்த நம்பிக்கையை ஏற்க ஒத்து கொள்ளவில்லை. அவன் இறந்தான் என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இல்லை.

“இம்மாதிரி அவசர அவசரமா ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ததால்தான் இந்த கஷ்டம் எல்லாம். அது நடக்காமல் இருந்திருந்தால் இந்த பெண்ணூக்கு இந்த கஷ்டம் வந்திராதல்லவா” என சோவின் நண்பர் கேட்கிறார். அப்படியெல்லாம் சொல்ல முடியாது என கூறுகிறார். முன்பிறவி பயன் என்பது பற்றியும் பேசுகிறார். அதற்கு உதாரணமாக மகாபாரதத்திலிருந்து கௌதமி என்னும் பெண்ணின் கதையை கூறுகிறார். அவள் மகனை பாம்பு கடித்து இறக்க, அதற்கு யார் காரணம் என பார்க்க போய், பாம்பு, யமன், கடைசியாக காலதேவன் என்று ட்ரேஸ் செய்து கொண்டு போக, கடைசியில் அச்சிறுவனின் முற்பிறவியின் பலனே அது எனவும், அதைத் தடுக்க காலதேவனாலும் ஏலாது எனவும் நிலைநிறுத்தப்படுகிறது.

உமாவின் மாமனார் தன் மகன் இறந்துவிட்டான் என்பதில் உறுதியாகவே இருக்கிறார். அவனை அலை அடித்து போனதை எல்லோரும் பார்த்தார்கள் எனவும் கூறுகிறார். ஆனால் உடல் கிடைக்கவில்லை என்பதை உமா சுட்டிக் காட்டுகிறாள். அவன் இறந்ததை அமெரிக்க செய்தித் தாள்களும் உறுதி செய்ததையும் மாமனார் எடுத்துரைக்கிறார். இல்லை ரமேஷ் சாகவில்லை என உமா திரும்பத் திரும்ப கூறுகிறாள்.

நீலகண்டனும் உமா சொல்வதை ஏற்க மறுக்கிறார். ரமேஷ் இறந்தது ஒரு விபத்து மட்டுமே, அதற்கு காரணம் ரமேஷே தனக்கு விதித்து கொண்டது என்பதையும் நீலகண்டன் கூறுகிறார். கல்யாணத்துக்கு முன்னால் ரமேஷ் உமா ஜாதகத்தை பார்த்திருக்க வேண்டும் என்று பர்வதம் கூறியதையும் அவர் ஏற்கவில்லை. ரமேஷுக்கு நீரில் கண்டம் இருந்ததை பர்வதம் கூற அப்போதும் அவர் ஒத்து கொள்ளவில்லை. ஒரு வேளை அது பற்றிய பயமே ரமேஷை செயல்பட விடாது தடுத்திருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம் என்கிறார். விதி என தனியாக எந்த மண்ணாங்கட்டியோ நான்சென்ஸோ இல்லை என்பதையும் அவர் கூறுகிறார்.

நீலகண்டன் சரியாகப் பேசுவதாக சோவின் நண்பர் கூறுகிறார். ஏதாவது ஒரு புரியாத நிகழ்ச்சி நடந்தால் அது விதி என கூறுவதே பலருக்கு வழக்கமாகப் போயிற்று எனவும் அவர் கூறுகிறார். வேறு என்னதான் அம்மாதிரி நிகழ்வுகளுக்கு காரணமாகக் கூற முடியும் என சோ அவர்கள் எதிர்கேள்வி போடுகிறார். நன்கு ஆராய்ந்தே இந்த விதி என்னும் கோட்பாடு உருவாயிற்று என அடித்து கூறுகிறார் அவர். இது சம்பந்தமாக மகாபாரதத்தில் கடைசியில் வியாசர் சொல்வதையும் அவர் கூறுகிறார். இந்த ஸ்லோகத்தை படித்தால் முழுமையாக பாரதம் படித்த பலன் கிட்டும் என்று வேறு கூறுகிறார். அதை படித்து பொருளும் கூறுகிறார்.

பிறகு பர்வதம் மற்றும் ரமேஷின் தெய்வ நம்பிக்கை எதுவுமே ரமேஷை காப்பாற்றவில்லை என்பதையும் நீலகண்டன் சுட்டிக் காட்டுகிறார். இந்த தெய்வம் என்ற கான்செப்டே ஏற்று கொள்ள முடியாதது எனவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.

அசோக் வீட்டில் சமையற்கார மாமி அவனிடம் இப்போதெல்லாம் சந்தோஷமாக அவன் காட்சி தருகிறான் என்பது குறித்து பேசுகிறார். மேக மூட்டங்கள் எல்லாம் விலகி எல்லாமே தெளிவாகத் தெரிகின்றன என அசோக் கூறுகிறான். பிறகு மாமியிடம் அவள் கணவர் பர்றி விசாரிக்கிறான். அவர் ரிட்டயர் ஆகிவிட்டதாகவும் ரொம்ப கடன் தொல்லையில் இருப்பதாகவும் மாமி கூறுகிறாள். எல்லாத்துக்கும் வேளை வரவேண்டும் என அசோக் கூறுகிறான். எல்லோரும்தான் எல்லா காலங்களிலும் ஆப்பிள் மரத்திலிருந்து விழுவதை பார்த்து கொண்டே இருந்தார்கள். ஐசக் நியூட்டன் வந்த பிறகுதான் அந்த நிகழ்வை பார்த்து மேலே யோசித்து புவியீர்ப்பு விசை பற்றி எல்லாம் பேச முடிந்தது என அவன் விளக்குகிறான்.

நாதன் வசுமதியிடம் போய் சமையற்கார மாமி அசோக்கின் முன்னேற்றம் பற்றி பேச அவர்களும் அதை தாங்களே கண்டுணர்ந்ததாக கூறி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.நாதன் பாகவத்ருக்கு கிரெடிட் கொடுக்க, வசுமதி சாரியாரை சிலாகிக்கிறாள். அங்கு வரும் அசோக் தான் பாகவதரை காண திருச்சி போக வேண்டுமென்றும் அப்படியே அவர் அட்டெண்ட் செய்யும் ஹிந்து மத மகாநாட்டௌக்கும் செல்ல வேண்டும் என நாதனிடம் கூற அவரும் சம்மதிக்கிறார். வசுமதி பயப்படுகிறாள், அவன் மறுபடி காணாமல் போவன் என்று, நாதன் அப்படியெல்லாம் நடக்காது என உறுதி கூறுகிறார்.

பார்வதியின் காதலன் சேட்டு பையன் நடேச முதலியாரிடம் வந்து சோபனாவின் பெயர் பெருமாளின் பெயருடன் சேர்ந்து பேப்பரில் அடிபட்டது எனவும், பெருமாள் அதை பற்றி ஒன்றும் செய்யாது பேசாமல் இருந்ததால், சோபனா பாச்சாவை திருமணம் செய்து கொள்ள போகிறாள் என கூறுகிறான். இதெல்லாம் தனக்கு தெரியும் எனக் கூறும் நடேச முதலியார் விரக்தியுடன் எப்படியோ பென்ணூக்கு திருமணம் ஆனால் சரி என பேசுகிறார்.

ரமேஷ் உமா ஜாதகத்தை ஒரு ஜோசியரிடம் காட்ட, அவர் உமா ரமேஷுக்கு பத்துக்கு பத்து பொருத்தங்கள் இருப்பதையும், உமாவுக்கு நல்ல மாங்கல்ய பலம் இருப்பதையும் கூறி, ரமேஷின் ஜாதக கணிப்பில் சில தவறுகள் இருப்பதை கூறி, அவனுக்கும் நல்ல ஆயுள் இருப்பதாகவும் அடித்து கூறுகிறார். முக்கியமாக சுக்கிரனின் பார்வை அவனுக்கு நன்றாக இருக்கிறது என்னும் அவர் சுக்கிராச்சாரியார் இறந்த அசுரர்களையும் பிழைக்க வைத்தவர் என கூறுகிறார்.

அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்கிறார்.

பகுதி - 97 (18.06.2009)
”செத்து போனவர்களை சுக்கிராச்சாரியார் உயிர்ப்பிக்க கூடியவரா, நம்பவே முடியவில்லையே” என சோவின் நண்பர் கேட்கிறார். நம்பிக்கை இருந்தால் நம்பலாம், கதை என்றால் கதைதான் என சொல்லும் சோ நம்மவருக்கும் மேல் நாட்டினருக்கும் இடையிலே காலம் என்ற கான்சப்ட் சம்பந்தமாக முக்கிய வித்தியாசங்கள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் ஐயாயிரம் ஆண்டுகள்தான் அதிக பட்சமாக யோசிக்கக் கூடியவர்கள் ஆனால் நம்மவர்களோ, யுகக்கணக்கில் லட்ச லட்சமான ஆண்டுகள் பற்றி பேசுபவர்கள். மேலும் சில கருத்துகளை இது சம்பந்தமாக கூறிய அவர் பிறகு தேவகுரு பிருஹஸ்பதியின் மகன் கச்சன், அசுரகுரு சுக்கிராச்சாரியார் மற்றும் அவரது மகள் தேவயானி பற்றிய கதையையும் கூறுகிறார். இறப்பவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர் சுக்கிராச்சாரியார். அதனால் தேவாசுரப் போரில் இறக்கும் அசுரர்களை உயிர்ப்பித்து மீண்டும் சண்டையில் பங்கேற்கச் செய்ய, அதனால் ஆயாசம் கொள்கின்றனர் தேவர்கள். ஆகவே அவர்கள் கச்சனை சுக்கிராச்சாரியாருக்கு சிஷ்யனாகி மந்திரம் கற்று வருமாறு அனுப்புகின்றனர். அவன் அதை கற்றுக் கொள்ளாமலிருப்பதற்காக அசுரர்கள் அவனுக்கு பல வகையில் தொல்லை தர, கடைசியில் அந்த தொல்லைகளே கச்சன் சஞ்சீவினி மந்திரத்தை கற்ற்க வழி செய்கின்றன. இதில் முக்கியமாக இந்த சீரியலின் காண்டக்ஸ்டில் சுக்கிராச்சாரியார் என்பவர் மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கிறவர் என புரிந்து கொள்ள வேண்டியது.

ஆக இந்த ஜாதகரான ரமேஷ் சுக்கிரனின் பூர்ண பரிவு பார்வைக்கு உட்பட்டவராக இருப்பதால் அவர் துர்மரணம் அடைந்திருக்க இயலாது எனவும், அவர் தீர்க்காயுளோடு இருப்பதாக அடித்து கூறுகிறார் ஜோசியர். உமாவுக்கு மகிழ்ச்சி.

“உன் மனப்படியே எல்லாம் நடந்து, நீ ரமேஷுடன் அமோகமான வாழ்க்கையை வாழ்வாயாக, ததாஸ்து” என அசோக் கூற உமா மகிழ்வது இருக்கட்டும், பார்வையாளர்களுக்கும் ஒரு மனநிம்மதி வருவதை மறக்கவியலாது. “உன் பார்வையிலும் தெளிவு வந்துள்ளது” என கூறுகிறாள் உமா. பிரும்மோபதேசத்துக்கு பிறகு தன்னுள் ஒரு தேடல் வந்துள்ளதாக கூறும் அசோக், உண்மையான பிராமணன் இருக்கிறானா, அவன் எங்கே இருக்கிறான் என்று அத்தேடலை விவரிக்கிறான். தான் திருச்சி மகாநாட்டுக்கு செல்ல இன்னொரு முக்கிய காரணமே ஒரு வேளை பாகவதரே தான் தேடும் உண்மையான பிராமணராக இருப்பாரா என்ற தனது எண்ணத்தை பரிசோதித்து கொள்ளவே எனவும் கூறுகிறான். “எங்கே பிராமணன் என்பதை தேட புறப்பட்ட உனது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்” என மகிழ்ச்சியோடு உமா கூற, அதற்கு நன்றி கூறுகிறான் அசோக்.

திருச்சியில் பாகவதரை சந்திக்கும் அசோக் நேரடியாகவே சில கேள்விகள் கேட்கிறான். பிராமணன் என்ற தகுதியையடைய பல கடுமையான நியமங்கள் உண்டு. அவர்கள் கற்க வேண்டிய சாத்திரங்கள் பல. அம்மாதிரி எல்லா தகுதிகளையும் பெற்ற பிராமணர் யாராவது தற்சமயம் இருக்கிறார்களா? சுருக்கமாக எங்கே பிராமணன் என அசோக் கேட்க, பாகவதர் திக்குமுக்காடி போகிறார். எல்லா குணாதிசயங்களும் பொருந்தி வருவது என்பது நடக்காத காரியம், கிட்டத்தட்ட அவற்றில் பெரும்பான்மையான குணங்களுடன் உள்ளவர்கள் உண்டு என பாகவதர் இழுக்க, அது எப்படி கால் பிராமணன், அரைக்கால் பிராமணன் என கொள்வது என அசோக் கேட்கிறான்.

அசோக் மேலும் கூறுவதாவது. நான்கு வர்ணங்கள் என்பது அந்தந்த மனித இயல்புகளுக்கு பொருத்து வரையறுக்கப்பட்டன. அதில் வர்ணம் என்பது பிறப்பினால் வருவதல்ல என்பது மிக முக்கியம். அவற்றுக்கும் இப்போது காணப்படும் சாதிக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லை. வெறுமனே பூணல் போடுவதாலும், பல சின்னங்களை தரிப்பதாலுமே ஒருவன் பிராமணன் ஆகிவிட முடியாது. இப்போது இன்னொரு நேரடியான கேள்விக்கு அவன் வருகிறான். பாகவதர் பிராமணரா, அவர் தந்தை, பாட்டனார் பிராமணர்களா, தனது தந்தை பிராமணரா அல்லது தானே கூட பிராமணனா என்பதே அவன் கேட்பது.

“என்ன சார் பாகவதரையே இப்படி கேட்டுவிட்டான்” என சோவின் நண்பர் ஆச்சரியப்படுகிறார். அது அவனது தேடல். ஆகவே அப்படி அவன் கேட்டதில் தவறு இல்லை என்பதை சோ விளக்குகிறார். இம்மாதிரி பார்த்தால் தானே கூட பிராமணன் இல்லை என அவர் தெளிவுபடுத்துகிறார். சாதி என்பதே தற்காலத்தில் மனிதருக்கே உரித்தான குழு அமைக்கும் மனப்பான்மை என்பதையும் தெளிவுபடுத்துகிறார். சாதி இல்லையென்றால் வேறு வகையில் குழு அமையும். கட்சிகள் உருவாவது போல. இப்போதைக்கு அசோக் கேள்வி கேட்டுள்ளான், மேலே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என சோ கூறுகிறார்.

தன்னைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் பாகவதர். உணர்வு பூர்வமாக தான் தன்னை பிராமணன் என கூறிக் கொண்டாலும், அறிவு பூர்வமாக அவ்வாறு கூறத் தயக்கமாக இருக்கிறது என்று ஆரம்பிக்கும் அவர், தான் பிராமணனக்குரிய வெளிச் சின்னங்களுடன் இருப்பவர், வேத சாஸ்திரங்களை கரைத்து குடித்தவர் என அவர் ஆரம்பிக்கிறார்.

“நிஜமாகவே பாகவதர் வேத சாஸ்திரங்களை கரைத்து குடித்தவரா” என சோவின் நண்பர் கேட்க, அவர் அப்படி நினைத்து கொண்டிருக்கிறார் என சோ பேச ஆரம்பிக்கிறார். இம்மாதிரித்தான் பலர் தாங்கள் சிறிது கற்க ஆரம்பித்ததுமே எல்லாமே தெரிந்து கொண்டு விட்டதாக நினைத்து கொள்கின்றனர் எனக் கூறி. அவ்வளவு அறிவு பெற்ற நாரதரே தனக்கு எல்லாமே தெரியும் எனக் கூறிக் கொள்ளாது, அடக்கத்துடன் சனத்குமாரரிடம் பாடம் கேட்க வருகிறார் என்பதையும் விளக்குகிறார். இங்கு இது பாகவதரின் பாத்திர குணாதிசயத்தை விளக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.

பாகவதர் தொடர்கிறார். ஆயினும் தான் தன்னை பிராமணன் என அடையாளம் காட்டிக் கொள்ள இவை போதாது என்பதையும் ஒத்து கொள்கிறார். அசோக் சீரியசான முகபாவத்துடன் அவர் கூறுவதை மிக கவனத்துடன் கூறுகிறான். பாகவதர் பேசப்பேச அவரது உணர்ச்சிகள் பீறிட்டு எழுகின்றன. பல வகைகளில் தன்னையே ஆய்ந்து பார்க்கும் அவர் தான் பிராமணன் இல்லை, தன் தகப்பனாரோ பாட்டனாரோ பிராமணர்கள் இல்லை, அதே போல அசோக்கோ அவன் தந்தையோ கூட பிராமணர்கள் இல்லை என்பதை ஒரு கையறு நிலையில் ஒத்து கொள்கிறார். இந்த பேச்சுக்களையெல்லாம் நான் இங்கே எழுதுவதை விட வீடியோவில் பார்ப்பதே அதிக பலன் தரும்.

நடேச முதலியார் வீட்டில் நடக்கவிருக்கும் சோபனா பாச்சாவின் திருமணம் பற்றி பார்வதி, அவள் அன்னை நடேச முதலியாரிடம் விவாதிக்கின்றனர். நடேச முதலியார் எதுவும் தன் கையில் இல்லை, எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும் என்னும் விரக்தியான நிலையை அடைந்துள்ளார். சாரியார் ஏதேனும் சொன்னாரா என்று மனதில் குறுகுறுப்புடன் பார்வதி கேட்க, அவர் ஒன்றுமே சொல்லவில்லை எனக் கூறி, அவரை சிலாகித்து பேசுகிறார் முதலியார். அவரைப் பார்த்து தானும் இனி சாதி என்னும் குறுகிய வட்டத்திலிருந்து விடுபடப் போவதாக நடேச முதலியார் கூற, இதுதான் சாக்கு என பார்வதி தனது தந்தையிடம் இப்போதாவது அவர் தனது தம்பியுடன் சமாதானமாக்ப் போக வேண்டும் என கேட்டு கொள்கிறாள். அவரும் சம்மதிக்கிறார். அப்படியே தம்பியின் சம்பந்தி வேம்பு சாஸ்திரிகளையும் பார்த்தால் அவர் நாள் குறித்து கொடுப்பார் என பார்வதியின் அன்னை தன் பங்குக்கு கூறுகிறாள்.

“என்ன சார் நாள் குறிக்கிறது, வசிஷ்டர்தான் ராம பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்து தந்தார். ஆனால் என்ன ஆச்சு, ராமர் காட்டுக்குத்தானே போனார்” என சோவின் நண்பர் கேட்கிறார்.

பகுதி - 98 (19.06.2009)
நண்பர் கூறுவது போல சொல்வது ராமாயணத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று விரும்புபவர்களே என சோ கூறிவிட்டு மேலே சொல்கிறார், வால்மீகி ராமாயணத்தில் வசிஷ்டர் நாள் குறித்து தரவில்லை. தசரதராக தீர்மானம் செய்து கொண்டது. அவருக்கு வந்த கெட்ட சொப்பனங்கள், அவர் ஜாதகத்தில் கோள்நிலைகளின் சரியின்மை, அவருக்கே தான் சீக்கிரம் இறந்து விடுவோம் என்ற பயங்கள் ஆகியவற்றின் பேரில் அவராகவே தீர்மானிக்கிறார் பட்டாபிஷேக நாளை. பிறகுதான் சபையை கூட்டி அதை தெரிவிக்கிறார். சபையினர் அவர் ராமர் பட்டாபிஷேக உத்தேசத்தை வெறுமனே அறிவித்த உடனேயே எல்லோருமே ஏக மனதாக ஆரவாரத்துடன் ஆமோதித்தது அவரை டென்ஷன்படுத்தியது தனி சேனலில் வருவது வேறு விஷயம். எது எப்படியாயினும் ஒரு வாதத்துக்காக வசிஷ்டர் நாளை குறித்து தந்தார் என வைத்து கொண்டாலும் அதுவும் ராமாவதார காரியம் நடப்பதிலேயே முடிந்திருக்கிறது. ஆனால் வசிஷ்டர் நாள் குறிக்கவில்லை என்பதில் சோ தெளிவாகவே இருக்கிறார்.

வேம்பு சாஸ்திரிகள் மூன்று நாட்களை குறித்து தருகிறார். நடேச முதலியாரும் அவர் குடும்பத்தினரும் மகிழ்கின்றனர்.

திடீரென ரமேஷ் தன் வீட்டிற்கு வந்து நிற்கிறான். எல்லோரும் திகைக்கின்றனர். பிறகு தான் அலையால் இழுக்கப்பெற்று ஒரு தீவில் ஒதுக்கப்பட்டதாகவும், அங்குள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டதாகவும், கேயென் (Cohen) என்னும் ஒருவர் தன்னை பிள்ளை போல் பார்த்து கொண்டதாகவும், அம்னீசியாவில் எல்லாவற்றையும் மறந்திருந்ததாகவும் இப்போது திடீரென எல்லாம் நினைவுக்கு வந்ததாகவும் கூறுகிறான். நீலகண்டன், பர்வதம், உமா, ரமேஷின் பெற்றோர்கள் எல்லோரும் திகைக்கின்றனர். நம்ப முடியாததுதான் ஆனால் தான் உயிருடன் இருப்பதுதான் நிஜம் என அவன் கூறுகிறான்.

திருச்சியிலிருந்து திரும்பி வந்த அசோக் தனது அனுபவங்களை கூறுகிறான். வெளிநாட்டுக்காரர்கள் அனேகம் பேர் இந்த மகாநாட்டுக்கு வந்ததாகக் கூற, நாதனோ அவர்களுக்கு இந்து மதம் பற்றி என்ன தெரியும் என வியக்கிறார். நம்மைவிட அவர்கள் நமது மதம் பற்றி அறிந்துள்ளனர் என அசோக் திட்டவட்டமாக கூறுகிறான். ஹிக்கின்ஸ் என்னும் அமெரிக்கருடன் தான் பேசிய விவரங்களையும் அவன் கூறுகிறான். தனது நாட்டில் இல்லாத இத்தனை மதங்களும் ஜாதிகளும் இந்தியாவில் மட்டும் ஏன் என ஹிக்கின்ஸ் தன்னை கேட்டதாக அசோக் கூற, வசுமதி என்ன இருந்தாலும் அமெரிக்கன் அமெரிக்கனே என தனது மேல்நாட்டு மோகத்தை பறைசாற்றுகிறார். வேற்றுமைகளே இல்லாத நாடு என ஏதேனும் ஒரு நாட்டை காட்ட முடியுமா என தான் கேட்டதாக அசோக் கூற, நாதன் அவையெல்லாம் பொருளாதார வேற்றுமைகள், அவையும் சாதி வேற்றுமைகளும் ஒன்றல்ல என கூறுகிறார்.

சோவின் நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இன்று ஏழையாக இருப்பவன் நாளை உழைத்து பணக்காரனாகலாம் ஆனால் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு வரவியலுமா என்று அவர் ஆணித்தரமாக கேட்கிறார். சோ அவர்களோ மறுபடியும் வர்ணம் வேறு சாதி வேறு என்பதை சுட்டிக் காட்டுகிறார். சாதி என்பது பின்னால் தோன்றியது. ஆனால் முதலில் வந்த வர்ணங்களோ மனித இயல்பை பொருத்தே நிர்ணயிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றிலிருந்து தாராளமாக இன்னொன்றுக்கு மாறிக் கொள்ளலாம். பிறகு இதற்கான பல உதாரணங்களை சோ அவர்கள் அடுக்கிறார். ஷத்திரியராக இருந்த விஸ்வாமித்திரர் பிரும்மரிஷியாகவே மாறியது, தர்மவியாதர் என்ற கசாப்பு கடைக்காரர் பிராமணராக உருவெடுத்தது, தந்தை பெயர் தெரியாத சத்யகாம ஜாபாலி உயர்ந்த நிலையை பெற்றது போன்றவையே அவை. ஆக பொருளாதார நிலைகளை மாற்றிக் கொள்வதை போல இங்கும் வர்ணங்களை மாற்றி கொள்ள இயலும் என கூறிய சோ இவை எல்லாவற்றையும் சொல்வது இப்போது எல்லோராலும் வெறுக்கப்படும் மனுஸ்ம்ருதியே என குறும்புடன் கூறி முடிக்கிறார்.

பாகவதர் கூட இந்து மதத்தை சனாதன தர்மம் என கூறுவார் என நாதன் சொல்ல, அசோக்கும் அதை ஆமோதித்து இந்துமதத்துக்கு பேரே இல்லை என கூறுகிறான். இதென்ன கூத்து என சோவின் நண்பர் வியக்க, சோ விளக்குகிறார். இந்து மதம் என்பதே கிரேக்கர்கள் தங்கள் புரிதலுக்காக வைத்து கொண்ட பெயரே. இதுதான் முதலில் இருந்த ஒரே மதம் எனக் கூறி, அதற்கான சான்றுகளை அடுக்குகிறார். முதலில் நாம் தமிழில் மதம் என்பதை (madham) என உச்சரிக்கிறோம், ஆனால் சரியான உச்சரிப்போ (matham) என்பதே ஆகும். முதலாவதற்கு பொருள் வெறி இரண்டாவதற்கு பொருள் நம்பிக்கை. பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சரித்திர, கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக் காட்டுகிறார். தகவல் தொடர்பு மிகக் குறைவாய் இருந்த பழைய காலத்தில் இச்சான்றுகள் பல இடங்களில் பரவியிருப்பதே இந்து மதம்தான் முதலில் எல்லா இடங்களிலும் இருந்தது என்பதற்கான சான்று எனவும் கூறுகிறார்.

அதையே அசோக்கும் அந்த அமெரிக்கருக்கு கூறியிருக்கிறான். இதெல்லாம் தேவையற்ற ஆராய்ச்சி என அலுத்து கொள்ளும் வசுமதி அசோக்கிடம் “நீ எப்போ பிறந்தே அப்படீங்கறதாவது உனக்கு தெரியுமா” என்ம கேட்கிறாள். தான் அனாதி (ஆரம்பம் அற்றவன்) என அவன் சாந்தமாக கூற, பெற்றோர்கள் குத்துக்கல்லாட்டம் உயிரோட இருக்கும்போது அவன் எப்படி தன்னை அநாதை என கூறிக் கொள்ளலாம் என வசுமதி கொதித்து போகிறாள். அசோக் பொறுமையுடன் அனாதி மற்றும் அநாதைக்கானா வேறுபாட்டை விளக்குகிறான்.

பாகவதரின் நலத்தை நாதன் வர்ணிக்க அவரை தான் அவர் பிராமணனா எனக் கேட்டதாகக் கூற வசுமதி திகைக்கிறாள். இது என்ன கூத்து அந்த பிராமணன் இந்த கேள்வியை எப்படி தாங்கிக் கொண்டார் என்றும் அவள் கேட்கிறார். அசோக்கோ பாகவதரே தான் பிராமணன் என ஒத்து கொள்ளவில்லை எனக்கூற, அப்போ நான் பிராமணன் இல்லையா என நாதன் சீறுகிறார். அது அவர் தன்னையே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி என கூறிவிட்டு அசோக் அப்பால் செல்கிறான். நாதனும் வசுமதியும் செய்வதறியாது திகைக்கின்றனர்.

நீலகண்டனிடம் வசுமதி அவர் முதலில் தெய்வ நம்பிக்கையை கிண்டலடித்து பேசியதை சொல்லி குத்தி காட்டுகிறார். நீலகண்டன் பிரமிப்பில் இருக்கிறார். ரமேஷ் கடலில் மூழ்கி இறந்ததாக எல்லோரும் கூற உமா மட்டும் தனது உள்ளுணர்வை நம்பி அவன் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கிராள். இது முதலாவது இல்லாஜிகல் விஷயம். இரண்டாவதாக உமாவின் ஜாதகத்தை பார்த்த சோசியர் அவளுக்கு மாங்கல்ய பலம் மிக அதிகமாக இருப்பதாகவும் ஆகவே ரமேஷ் இறந்திருக்க முடியாது என அடித்து கூறியிருக்கிறார், அது இரண்டாவது இல்லாஜிகல் விஷயம் என குழம்புகிறார்.

“இந்த விஷயத்தில் ஜோசியர் சொன்னது பலித்து விட்டது. எப்போதும் அப்படியே நடக்குமா என சோவின் நண்பர் கேட்க, எப்போதுமே பலிக்கும் எனக் கூறவியலாததுதான். ஆனால் இச்சமயம் பலித்தது. தனக்கு ஜோசியம் பார்க்க ஒருவன் வரும்போது அவனது நேரம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, அவனுக்கு பலன் பார்த்து சொல்பவனது நேரமும் நன்றாக இருத்தல் அவசியம் என்ற பார்வை கோணத்தை முன்வைக்கிறார் சோ அவர்கள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்