10/05/2006

வறுமையும் புலமையும்

இது ஒரு மீள்பதிவு.

திருவிளையாடலில் நாகேஷ் சிவாஜியைக் கேட்பார் "பிரிக்க முடியாதது எது?" சிவாஜியின் பதில் அம்பு போல வரும் "வறுமையும் புலமையும்" என்று. சமீப காலம் வரைக்கும் அது உண்மையாகவே இருந்தது.

நிறைய பொருள் ஈட்டியப் புலவர்கள் அதிகம் இல்லை. உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தன் ஆசிரியர் பற்றி எழுதிய புத்தகத்தில் அவர் (ஆசிரியர்) பல தனவந்தர்களால் ஆதரிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். பொருள் ஈட்டியிருக்கிறார், ஆனால் எல்லாம் செலவழிந்து விட்டன. கடைசி காலத்தில் ரொம்ப மிஞ்சவில்லை என்றுதான் அறிந்தேன்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அதாவது புலவர்களுக்கு புலமையைத் தவிர வேறு லௌகீக விஷயங்களில் தேர்ச்சியிருந்ததில்லை என்பதையே குறிப்பிட விரும்புகிறேன். இருபதாம் நூற்றாண்டில் ஐம்பதுகள் வரையிலும் கூட இதே நிலைதான் ஏறத்தாழ இருந்திருக்கிறது.

வசதியுடன் வாழ்ந்தவர்களும் மாத ஊதியத்தில்தான் இருந்திருக்கிறார்கள். கல்கி அவர்கள் இறக்கும் போது அவர் சம்பளம் 3000 ரூபாய் என்று அறிகிறேன். 1954-ல் இது ஒரு பிரமிப்பை ஊட்டியத் தொகை. வீடு, கார் என்று தன் மகனுக்கு விட்டுச் சென்றார். மேலும் தன் எழுத்துக்களுக்கான காப்பிரைட் வேறு. அதிலும் விகடனில் அவர் ஆசிரியராக இருந்த போது எழுதியதை வாசன் அவர்கள் தன் வசம் வைத்திருந்திருக்கிறார். சாவி அவர்கள் தன் எழுத்துக்களுக்காகப் போராடி வாசன் அவர்களை கன்வின்ஸ் செய்து காப்பிரைட்டைத் தன்வசப்படுத்தியவுடன் கல்கியின் மகனுக்கும் அதன் பெனிஃபிட் கிடைத்தது.

மற்றப்படி ஃப்ரீலான்ஸாக இருந்தவர்கள் சோபிக்கவில்லை. புதுமைப் பித்தன் அனுபவித்த கஷ்டம் இப்போது படிக்கையிலும் மனதை உருக்கி விடும். அப்படியே இருப்பவர்களும் ஏதாவது பதிப்பாளரிடம் ஒப்பந்தம் மாதிரி போட்டுக் கொண்டு மாதம் தவறாமல் பொருள் வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அதெல்லாம் பழைய கதையாகி விட்டது என்றுதான் தோன்றுகிறது. இப்போதைய நிலை என்ன? பல எழுத்தாளர்கள் வேறு தொழிலை கையில் வைத்திருக்கிறார்கள். சுஜாதா ஒரு முக்கிய உதாரணம். சோவும் கூட இதற்கு நல்ல உதாரணம். இக்காலத்தில் பல துறைகளில் திறமை வளர்ப்பது ரொம்ப முக்கியமாகி விட்டது. பதிப்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு ஒரு தெம்பை இது கொடுக்கிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை கூடுவதும் ஒரு முக்கியக் காரணியாகி விட்டது. சந்தையில் எது விலை விலை போகிறது என்பதைப் பார்ப்பதும் முக்கியம்.

நான் மொழிபெயர்ப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறியதற்கும் என்னிடம் இருந்த முழுநேர வேலைதான் காரணம். மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடம் இருந்த போது கவலையின்றி மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களுடன் பேரம் பேச முடிந்தது அல்லவா. கூடவே இஞ்சினியராக இருந்ததாலும், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இஞ்சினியர் கூட்டு இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அதே சமயம் விரும்பத்தக்கதாக ஆனதாலும் என் முன்னேற்றத்துக்கு தடையே இல்லை.

அதே போல மொழிபெயர்ப்பாளரானதால் ஐ.டி.பி.எல்லில் இஞ்சினியர் க்ளாஸ் 1 அதிகாரியாக முடிந்தது. ஆகவே இரு திறமைகளும் ஒன்றுக்கொன்று உதவி செய்தன.

அதே போல இங்கு வலைப்பதிவர்களும் 90 சதவிகிதத்துக்கு மேல் வேறு தொழிலை கைவசம் வைத்துக் கொண்டுதான் எழுத்தாளர்களாக உள்ளனர். ஆக, வெறுமனே ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் என்பது குறைந்து விட்டதென்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

dondu(#11168674346665545885) said...

"புலமைங்கறத எப்படி எழுத்தோட மட்டும் இணைச்சி பார்க்கிறீங்கன்னு புரியல?"
வேறு எதனுடன் இணைப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"these days there are too many good writers (like too many Java guys for a Java requirement!). so one cannot just survive on just by writing. Thats what I believe"

ஆகவே வேறு ஒரு வேலையும் இருப்பது அவசியம். இதைத்தான் நானும் கூறுகிறேன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

P B said...

oru sujathavo cho vo perum ilakiya karthakkal kidayathu. Avargal meethu enaku peru mathipu iruntha pothum solgiren. Aanal kavi enbavan nootranduku oru murai thondrubavam, oru saathaka paravai pola vanjam illamal uyar nilaiyil irupavan. Tharai vara thevai illathavan. Bharathiyar oru kavi. "eppadi eppadi samajathu eppadi" endro "macham pathu naalachu endro" ezhuthi kaakaa pizhaipu pizhaika maatathavargal. Kavi matravar angeekarathuku enguvathillai. Unmayil pulavanuku thaan varumayil irupathu theriyathu. Avargaludan samanyargalai oppidatheergal.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் முத்துக்குமார் புராணம் அவர்களே,

இப்படி சொல்லியே புலவர்களை ஒழித்தாகி விட்டது. இப்போது இருப்பவர்களாவது பிழைக்கட்டும். புலவருக்குத் தான் வறுமையில் இருப்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது மனைவியைப் பற்றி யோசித்தாரே. பாரதியாரை போற்றலாம், ஆனால் தங்கம்மா பாவம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

P B said...

அது செல்லம்மா. புலவனை போற்ற வேண்டியது சமூகம் தான். இல்லாவிட்டால் சமூகத்தில் புலவர்களை கடவுல் அனுப்ப மாட்டார். ஒரு பாரதியை மதிக்காத சமூகத்துக்கு "சமஞ்சது எப்படி", "மச்சம் பாத்து நாளாச்சு" தான் கவிதை என்று விதி வந்து சேர்ந்தது. தவறு சமூகத்தின் மீது தான், கவி ஞானிகளுக்குள் சேர்த்தி. உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வயிரும் விதிமுறைகளும் அவனுக்கில்லை. அவனை சோற்றுக்கு வேலை செய்ய சொல்லாதீர்கள். சமூதாயத்திற்கு சொல்லுங்கள் அவர்கள் வந்துதித்து மறையும் ஞான சூரியன்களை டியூப் லைட் போல எண்ணக் கூடாதென்று. பாரதியோ, புதுமைபித்தனோ, தருமு சிவராமுவோ, பட்டுக்கோட்டையாரோ முட்டாள்கள் அல்ல. குற்றம் தமிழர்களுடையது, தவ செல்வர்களது அல்ல.

dondu(#11168674346665545885) said...

ஆம், அது செல்லம்மாதான். தங்கம்மா பாரதியாரின் புதல்வியல்லவா? தகவலை சரி செய்ததற்கு நன்றி.

"உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வயிறும் விதிமுறைகளும் அவனுக்கில்லை. அவனை சோற்றுக்கு வேலை செய்ய சொல்லாதீர்கள். சமூதாயத்திற்கு சொல்லுங்கள் அவர்கள் வந்துதித்து மறையும் ஞான சூரியன்களை டியூப் லைட் போல எண்ணக் கூடாதென்று".

பாரதி படத்தில் ஒரு காட்சி. அவர் பராசக்தியையே தான் நாத்திகனாகி விடுவதாக மிரட்டுவார். ஒரு மகன் தன் தாயிடம் உரிமையுடன் "அம்மா பசிக்குது சோறு போடு" என்று கேட்பது போல இருந்தது.

நாம் அப்படி கூறுகிறோம். புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நேரடியாகக் கூறியவர்களும் இருந்தார்கள்/இருக்கிறார்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

"நாம் அப்படி கூறுகிறோம். புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நேரடியாகக் கூறியவர்களும் இருந்தார்கள்/இருக்கிறார்களே."

பெரியார் அவர்களே ஒரு புலவர் தன்னைப் பார்க்க வந்தபோது அவருக்கு அருந்த ஒரு டம்ளர் பால் கொடுத்துவிட்டு, அவரிடமே புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்று கூறியதாக நீங்கள் எழுதியிருந்தீர்களே. அப்புலவர் பெயரை மறந்து விட்டேன். கூற இயலுமா?

கிருஷ்ணன்.

dondu(#11168674346665545885) said...

அந்த வாயாடிப் புலவர் (ஈவேரா அவர்கள் சொற்களில்) பெயர் கதிரேசன். ஈ.வே.ரா. அவர்கள் உவேசா அவர்களையே அம்மாதிரி ஏளனம் செய்தவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

தகவலுக்கு நன்றி டோண்டு சார்.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

உம்மிடம் வந்து யாசித்தேனே என்று நொந்த அந்தப் புலவர் கதிரேசன் வாயினுள் விரலை விட்டு அந்தப் பாலை வாந்தியெடுத்து விட்டுச் சென்றார்.

முட்டாள்தனமான செய்கைதான். ஆனால் அதுதான் ஒரு புலவர். காசு பணம் இன்றி மற்றவர் ஆதரவை கோருபவனுக்கு என்ன தன்மரியாதை வேண்டியிருக்கிறது என்று பொதுப்படையாகக் கூறலாம்.

புதுச்சேரியிலிருந்து திரும்பி எட்டையபுரம் மன்னருக்கு சீட்டுக் கவி அனுப்பிய பாரதி அக்கவியில் தன் மதிப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. விறைப்பாகவே நின்றார். பாரதியார் படத்தில் அவரது அக்கையறு நிலையைப் பார்த்தபோது மனம் மிக சங்கடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

ஒரு பாரதியை மதிக்காத சமூகத்துக்கு "சமஞ்சது எப்படி", "மச்சம் பாத்து நாளாச்சு" தான் கவிதை என்று விதி வந்து சேர்ந்தது. தவறு சமூகத்தின் மீது தான்,

ஸமூகம் என்பது தப்பிப்பதற்காகப் பயன்படும் ஒரு வார்த்தைதான். உண்மையில் ஸமூகம் என்பதை உருவாக்கும் தலைவர்கள்தான் அதன் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணம். தமிழ் புலவர்களை பிச்சைக்காரர்கள் என்று சொன்னவர்களைத் தலைவர்களாகவும், தெய்வங்களாகவும் கொள்ளுகின்ற ஸமூகத்தை அந்தத் தலைவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.

ஒரு நுணுக்கமான உழைப்பை, திறமையை மதிக்கத் தெரியாத மடையர்கள் அந்த நுணுக்கமான இயலை அழிக்கவே முயல்வார்கள். அதன் ஒரு பகுதிதான் இதுபோன்ற இயல்களை இகழ்தலும், அதற்குத் தேவையான மதிப்பை, பொருளாதார உதவியை தடுப்பதும்.

இதே ஆட்கள் வெள்ளைத் தோல் முதலாளிகளின் புலமையை வியப்பவர்கள். இவர்களின் உயர்த்தலும் தாழ்த்தலும் பகுத்தறிவின்மையாலும், அடிமை மனோபாவத்தாலும், தன் நாட்டில் உள்ள உயர்வுகள் பற்றிய அறியாமையாலும் விளைந்ததே.

அதைத் தொடர்பவர்கள் தங்களை பெரிய முற்போக்குவாதிகள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

dondu(#11168674346665545885) said...

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது கூட காண்டக்ஸ்டில் பார்க்க வேண்டும் என்றும் தமிழ் மீது அவருக்கு நிஜமாகவே மரியாதை உண்டு என்றும் ஜல்லியடித்தவர்கள், சரி அதற்கேற்ற அவர் சம்பந்தமான ஏதாவது கூறப்பட்டவையிருந்தால் கூறவும் என்று கேட்டுக் கொண்டதற்கு இன்னும் பதில் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

பெற்றோரின் காலில் விழாமல், ஆண்டைகளின் காலில் விழுவது சுயமரியாதையா?

dondu(#11168674346665545885) said...

"பெற்றோரின் காலில் விழாமல், ஆண்டைகளின் காலில் விழுவது சுயமரியாதையா?"
சுயமரியாதை மற்றும் திராவிடக் கலாச்சாரம் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்லுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

A small correction - Kalki's monthly income was Rs 5000. He also owned 25% of the Kalki magazine - source: "Ponniyin Pudhalvar" written by Sundha

dondu(#11168674346665545885) said...

தகவலுக்கு நன்றி ஆர்.வி. அவர்களே. நானும் பொன்னியின் புதல்வரை படித்திருக்கிறேன். 3000 ரூபாய் என பார்த்ததாகத்தான் ஞாபகம். நீங்கள் சொல்வது போலவே கூட இருக்கலாம். நூலகத்தில் அப்புத்தகத்தை தேடி எடுத்து இன்னொரு முறை பார்க்கிறேன். அதில் கல்கியின் எஸ்டேட் குறித்து முழு பட்டியலே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது