செப்டம்பர் மாதம், வருடம் 1981. ஐ.டி.பி.எல்லிலிருந்து வேலை உத்தரவு வந்திருந்தது. அச்சமயம் மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடங்களாக ஜூனியர் இஞ்சினியராக இருந்தேன் (சம்பள விகிதம் 425-700). பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு ஐ.டி.பி.எல். சென்ற என்னை இஞ்சினியர் வேலையும் செய்ய விருப்பமா எனக் கேட்டு, உதவி டிஸைன் இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக தேர்ந்தெடுத்து அந்த உத்திரவு வந்திருந்தது.
இந்த வேலையின் சம்பள விகிதம் 700-1300. அதாவது, ஒன்றின் அதிகப்பட்ச சம்பளம் இன்னொன்றின் ஆரம்ப சம்பளம். மத்தியப் பொதுப்பணித் துறையில் எனக்கு அடுத்த வேலை உயர்வு வர இன்னும் 10 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டிய நிலை. அப்படியே வந்தாலும் அதன் சம்பள விகிதம் 650-1200 மட்டுமே. எனக்கு அளிக்கப்பட்ட விகிதம் ஜூனியர் க்ளாஸ்-1 ஐச் சேர்ந்தது. ஆகவே நான் வேலையை உடனே எற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி தெளிவாக நிலைமை இல்லை. அப்போது என் அடிப்படை சம்பளம் 600 ரூபாய். ஆகவே நான் புது வேலையை ஒத்துக் கொண்டால் மொத்த ஊதிய உயர்வு 200 ரூபாயை விடக் குறைவுதான். மேலும் அப்போது நான் சென்னையில் இருந்தேன். புது வேலையோ குர்காமில் தில்லிக்கு அருகில். என் வீட்டம்மா அப்போது இந்தியன் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு வேறு ட்ரான்ஸ்ஃபர் வாங்க வேண்டும். என் குழந்தைக்கு அப்போது 5 வயது கூட நிரம்பவில்லை. நாங்கள் இருவரும் வேலைக்கு செல்லும்போது என் அத்தை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார். தில்லியில் அதற்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுற்றியிருந்த உறவினர்களில் பலர் சௌகரியமாக இங்கிருப்பதை விட்டு ஏன் அவ்வளவு தொலைதூரம் செல்ல வேண்டும் என்ற ரேஞ்சில் பேசினர். அதிலும் சிக்கல். சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரலாம் என்ற நிலை. ஏழு ஆண்டுகள் இருந்ததே மிகவும் அதிகம் என்றுதான் கூற வேண்டும். எங்கு போடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஒரே குழப்பம். அப்போதுதான் என் வீட்டம்மா ஒரு விஷயத்தை என் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அவர் கூறினார். "நீங்கள் மொழிபெயர்ப்பு செய்வதில் விருப்பம் கொண்டவர். இப்போது அதற்கு வாய்ப்பு வந்துள்ளது. மேலும் இரண்டு வருடத்திற்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் லியன் வேறு (இது பற்றி இந்தப் பதிவு போட்டுள்ளேன்). ஆகவே போய் முயற்சிப்பதில் தவறே இல்லை. போனதும் முதல் இரண்டு மாதத்திலேயே மொழிபெயர்ப்பை முழு நேர வேலையாக எடுப்பதில் உள்ள சாதக பாதகங்கள் தெரிய வரும். அப்போது எழுதுங்கள், நான் தில்லிக்கு மாற்றம் பெற்று வருகிறேன். அப்படி வேலை பிடிக்கவில்லையென்றாலும் கவலயில்லை. லியனை உபயோகித்து மத்தியப் பொதுப்பணித்துறைக்கே வந்து விடலாம்."
ஐ.டி.பி.எல்லில் சேர்ந்த பிறகு என் மொழிபெயர்ப்பு வேலை பற்றி பாஸிடிவான முடிவெடுக்க எனக்கு சில நாட்களே தேவைப்பட்டன. பிறகு நான் சென்னைக்கு எழுதி என் மனைவி மாற்றம் பெற்றுக் கொண்டு வந்தது தானே நடந்தது. வீட்டைக் காலி செய்யக் கூட நான் சென்னைக்குப் போகத் தேவையிருக்கவில்லை. எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொண்டு, ரயில்வே கண்டெய்னரில் சாமான்களை ஏற்றி, தில்லி வந்ததும் ரயில்வே ரசீதை என்னிடம் ஒப்படைக்க, சாமான்கள் வீட்டு வாசலில் இறக்கப்பட்டன.
வருடம் 1986. திடீரென என்னை குர்காம் தொழிற்சாலைக்கு மாற்றம் செய்து விட்டார்கள். வேலையையே விட்டுவிடலாமா என்ற ரேஞ்சுக்கு குழம்பிய போதும் என் வீட்டம்மாதான் சரியான அட்வைஸ் கொடுத்தார்.
"டியூட்டியில் சேருங்கள். சில நாட்கள் போகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டதில் பல விஷயங்கள் நடந்தன. தொழிற்சாலையில் என் ரேங்கில் இருந்த ஆனால் எனக்கு ஜூனியர் நிலையில் இருந்த சக இஞ்சினியர் பாலிடிக்ஸ் செய்ய என்னை கார்ப்பரேட் அலுவலக மேற்பார்வைக்கே அனுப்பி வைத்தனர். நான் பாட்டுக்கு சந்தோஷமாக என் வெளி மொழிபெயர்ப்பு வேலைகளை செய்ய முடிந்தது.
அக்டோபர் மாதம் 1993. ஐ.டி.பி.எல்.லில் பலர் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்ல, ஆட்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்த நிறுவனத்தின் எதிர்க்காலம் இருண்டதாக இருந்தது. என்னைப் போன்ற இஞ்சினியர்களை ரிஷிகேஸுக்கு மாற்றப் போவதாக ஒரே பேச்சுத்தான். நானும் விருப்ப ஓய்வு எடுக்கப் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என் கைவசம் மொழிபெயர்ப்புத் திறமையை நம்பித்தான் செயல் புரிய வேண்டும். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் வாடிக்கையாளர்கள் ஒழுங்காக வேலை கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் வந்தது. ஏனெனில் அச்சமயம் என் வீட்டம்மாவும் வேலையில் இல்லை. குடும்பக் காரணங்களால் 1988-லேயே அவர் வேலலயை விட்டு விட்டிருந்தார்.
அப்போதுதான் வீட்டம்மாவின் அறிவுறை மறுபடி துணைக்கு வந்தது. யூ.டி.ஐ. மாதாந்திர வட்டித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தேன். அவற்றில் மாதத்துக்கு கணிசமான வட்டி வந்து கொண்டிருந்தது. ஐ.டி.பி.எல். வேறு விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு கணிசமானத் தொகை கொடுக்கும்.
ஆகவே அவர் சொன்னார்: "கவலைப்பட வேண்டாம். வாடகை போக என்னிடம் ஒரு நான்காயிரம் ரூபாய் மாதத்துக்கு இருந்தால் அதிலேயே குடும்பம் நடத்த இயலும். உங்கள் முதலீடுகளிலேயே அந்தத் தொகை கிடைக்கும். ஆகவே மொழி பெயர்ப்பில் சிறிது கிடைத்தாலும் தற்சமயம் அது போதும். கவலையின்றி விருப்ப ஓய்வுக்கு எழுதி கொடுங்கள்".
அவ்வாறே செய்ததில் முதல் வருடத்திலேயே நல்லப் பலன் இருந்தது. தில்லியில் இன்னும் எட்டு ஆண்டுகள் 2001 வரை இருந்து தொழிலை நன்கு அபிவிருத்தி செய்து கொள்ள முடிந்தது.
மே மாதம் 2001. நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் திடீரென வீட்டைக் காலி செய்ய சொல்லி விட்டார். தில்லியில் இருந்த கிட்டத்தட்ட 20 வருடங்களில் 7 முறை வீடு மாற்ற வேண்டியிருந்தது. அப்போதுதான் சென்னைக்கே திரும்பலாம் என்று என் வீட்டம்மா ஆலோசனை கூறினார். எனக்கும் சரி என்று பட்டது. அப்போதும் அவர் கூறினார். "நாம் சொந்த வீட்டுக்குப் போவதால் வாடகை மிச்சம்தானே. சென்னையில் மாதம் ஐயாயிரம் கையில் இருந்தால் போதும். சமாளித்துக் கொள்வேன்".
இத்தனை ஆண்டுகளாக என் வீட்டம்மாவின் ஆலோசனையால் பயன் பெற்ற நான் இம்முறை யோசிக்கக்கூட இல்லை. இத்தனை ஆண்டுகளாக என் நங்கநல்லூர் வீடு வேறு அடிக்கடி கனவில் வந்து கொண்டிருந்தது.
சென்னைக்கு வந்ததில் வாழ்க்கை அற்புதமயமானது எனப் புரிந்தது. நான் பயந்ததற்கு மாறாக என் மொழிபெயர்ப்பு வேலைகள் மிக வேகமாக அதிகமாயின. தில்லியில் இருபது வருட மொழிபெயர்ப்புத் தொழிலில் சம்பாதித்ததை சென்னைக்கு வந்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிஞ்ச முடிந்தது. இங்கு வந்ததில் கணினி அறிவு பெற்று, தமிழ்மணத்தில் வந்து, தமிழ் மொழிபெயர்ப்பிலும் முன்னேற்றம் பெற்று, இணையத்தில் இணையற்ற நண்பர்களை பெற முடிந்தது. இப்போது வயது அறுபதாலும் மனதுக்கு என்னவோ 25 வயதுதான்.
ஆகவே நண்பர்களே, நான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
10 comments:
நான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.//
ரொம்ப சரி. இல்லன்னா சாப்பாடு கிடைக்காதே ஹி.ஹி..
நன்றி ஜோசஃப் அவர்களே.
99% குடும்பங்களில் அதுதான் நிலை. இதிலும் நான் சற்று வேறுபடுபவன். நானே மிக அருமையாக சமைப்பேன். ஆகவே என்னைப் பொருத்தவரை அவர் சொன்னதைக் கேட்டதற்கு இது நிச்சயம் காரணம் இல்லை.
நெருக்கடி என்று வரும்போது கலங்காமல் செய்யவேண்டியதை யோசிப்பதில் பெண்களை மிஞ்ச முடியாது. இந்த ரிட்டயர்மெண்டையே எடுத்துக் கொள்ளுங்கள். ரிட்டயர் ஆன சில மாதங்களிலேயே வேறு பொழுது போக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாத ஆண் துவண்டு விடுகிறான். பெண் அப்படியில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரியா சொன்னீங்க!
"சரியா சொன்னீங்க!"
அவ்விடத்திலும் அப்படித்தானோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
enakku pondaatti illai :-(
appa naan yaar sollaiyum kEtka vEndiyathillaiyaa :-)
I am just pulling your legs ; don't mind..
Thanks
maravantu
பொண்டாட்டி இல்லையென்றால் அம்மா சொல்வதைக் கேளுங்கள். மாணிக்கம் படத்தில் ராஜ் கிரண் கூறுவார், "அம்மா எப்போதும் நம்மோட இருக்க முடியாது என்பதற்காகவே மனைவியைப் படைத்தான்" என்பதில் உண்மை உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வீட்டைப் பெண்ணும், நாட்டை ஆணும் ஆண்டால் தான் வீடும், நாடும் உருப்படியாக இருக்கும்....
பின்னூட்டத்துக்கு நன்றி லக்கி லுக் மற்றும் கழுதை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்னும் தொனியில் வரும் பாட்டை உங்களது இப்பதிவு நிரூபிக்கிறது.
கல்யாணமாகாதவன்
காலையில் அலுவலகம் வந்தப்பொது ஒரு யோசனை. திடீரென்று வேலை போய்விட்டா என்ன செய்வது என்று. அப்போதுதான் அழகான காதலியின் முகம் கண்முன் வந்தது. சும்மா வெட்டியா இருந்தா கூட நம் மீது உள்ள பாசத்தால் உக்கார வைத்து சோறு போடுவாள் என்று தோன்றியது. மனம் அமைதி அடைந்தது. நோ ரென்ஷன். ரிலாக்ஸிங்.
Post a Comment