உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் இப்போது பேசுவோம்.
என் மொழிபெயர்ப்பு வேலைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1975 முதல் 1981 வரை சென்னையில் செயல்பாடு, பிறகு 2001 வரை தில்லி வாசம், தற்சமயம் திரும்ப சென்னையில். முதல் ஆறு வருடங்களுக்கு வேலை மந்தகதியிலேயே சென்றது. மத்தியப் பொதுப்பணி துறையில் இளநிலைப் பொறியாளராகவும் இருந்தேன். வேலை பளு மிக அதிகம். தினமும் நங்கநல்லூரிலிருந்து ஆவடிக்கு செல்ல வேண்டும். ஒரு வழிப்பயண நேரமே கிட்டத்தட்ட இரண்டு மணிகள். சென்ட்ரலிலிருந்து ஆவடி வரையானப் பயணம் மட்டும் ஒரு மணிநேரம் எடுக்கும். மின்ரயில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் மொழிபெயர்ப்பு வேலையைத் துவங்கி விடுவேன். அலுவலகத்திலும் மதிய உணவு நேரத்தில் மொழிபெயர்ப்பு வேலைதான். எங்கள் அலுவலக குமாஸ்தாவே தட்டச்சு செய்து கொடுத்து விடுவார். அவருடைய தொகையை உடனுக்குடன் செட்டில் செய்துவிடுவேன்.
1981-ல் தில்லி சென்றேன். உதவிப் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் வேலை ஐ.டி.பி.எல்லில். இந்த அனுபவத்தைப் பற்றி ஏற்கனவே முந்தையப் பதிவில் எழுதி விட்டேன். இப்போது, இருக்கும் நிலையை எவ்வாறு தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொண்டு மற்றவர்களையும் அவ்வாறே கருத வைப்பது என்பதைப் பார்ப்போம்.
தில்லியில்தான் என்னுடைய இந்த சைட் பிஸினஸ் மிக விரிவடைந்தது. அப்போதெல்லாம் இம்மாதிரி வேலைகள் தில்லி மற்றும் பம்பாயில்தான் மிக அதிகமாக தேவைப்பட்டன. தில்லியில் வேலைகளைத் தட்டச்சு செய்து தரவேண்டும் அதை சமாளித்ததை ஏற்கனவே கூறிவிட்டேன். 1995-க்குப் பிறகு கணினி உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. வாடிக்கையாளர்கள் என்னிடம் கணினியில் தட்டச்சு செய்து பிளாப்பியில் மொழிபெயர்ப்புகளைத் தருமாறு கேட்டனர். அப்போதைய நிலையில் என்னால் அது முடியாத காரியம். சொல்லப்போனால் சென்னைக்கு 2001-ல் திரும்ப வந்தவுடன்தான் 2002-ல் கணினியை வாங்கவே முடிந்தது. அது வரை என்ன செய்தேன்? அதுதான் தமாஷ்.
வாடிக்கையாளரின் கண்ணைப் பார்த்து சீரியஸாகப் பேச வேண்டும். "ஐயா, த்ங்கள் வேலைகளின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டாமா?" என்று கேட்க, எந்த வாடிக்கையாளர்தான் அதை இல்லை என்று மறுப்பார்? ஆகவே அவரிடம் கூறுவேன்: "உங்கள் அலுவலகத்துக்கு வந்து நேரடியாகவே மொழிபெயர்ப்பை கையெழுத்தில் தொடங்கி விடுகிறேன். நான் வேலையை ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் தட்டச்சளரிடம் நான் எழுதிய காகிதங்களை சேர்ப்பித்து கொண்டேயிருங்கள். மாலை 4.30 மணிவாக்கில், தட்டச்சுகளின் ப்ரின்ட்-அவுட்டுகள் என்னிடம் வந்தால் அவற்றை நான் பிழைதிருத்தி விடுகிறேன். அன்றைய வேலை உங்கள் வன்தகட்டில் ஏறி விடும். வேறு யாருடையக் கணினியிலும் இருக்காது." சொல்லும் விதத்தில் சொன்னால் வாடிக்கையாளர் நிச்சயம் ஒத்துக் கொள்வார். நானும் ஏற்கனவே 1993-ல்விருப்ப ஓய்வு ஐ.டி.பி.எல்லிலிருந்து பெற்று கொண்டு விட்டதால் வாடிக்கையாளரின் அலுவலகம் செல்ல ஒரு தடையும் எனக்கு இருந்ததில்லை. என் மாதிரி வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நேராக வந்து வேலை செய்யும் அளவுக்கு அப்போது தில்லியில் ஒரு ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் கிடையாது. பிறகு என்ன, என் காட்டில் மழைதான்.
சென்னைக்கு திரும்பி கிட்டத்தட்ட ஒரு வருடம் கயித்துத்தான் கணினி வாங்கினேன். அது வரைக்கும் தில்லியில் உள்ள என் வாடிக்கையாளருக்கு வேலைகளைத் தட்டச்சு செய்வித்து மின்னஞ்சல் இணைப்பாக கோப்புகளை அனுப்ப வேண்டியிருந்தது. நல்ல வேளையாக சென்னையில் தட்டச்சு செய்ய ஆட்களுக்குப் பஞ்சம் இல்லை. கணினி வாங்கிய பிறகு நிலமையில் மறுபடி மாற்றம். எல்லாவற்றையும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடிந்தது. பிளாப்பி கூட கிடையாது. என்னைப் பொருத்தவரை தொழில் நுட்பத்தில் ஒரு பெரிய தாவல் என்று கூற வேண்டும். ஆகவே இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயத்தின் ரேஞ்சே தனி. வாடிக்கையாளர்கள் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும் அல்லது பிளாப்பியில் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால், அவரிடம் நான் அதை விட சிறந்தமுறையில் சேவை தர முடியும் என்று கூறிவிடுகிறேன்.
சரி, இப்போது ஒரு வாடிக்கையாளர் தன் ஆவணங்களின் ரகசியம் பாதுக்காப்பதைப் பற்றிக் கூறினால் அதை எப்படி எதிர்கொள்வது? ரொம்ப சிம்பிள் ஜென்டில்மென். இப்போதும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே செல்வேன். நான் கேட்பதெல்லாம் ஒரு கணினி, அகலப்பட்டை இணையத் தொடர்பு ஆகியவை மட்டுமே. விருவிருவென்று வேலையைத் துவங்க வேண்டியதுதான். வாடிக்கையாளர் ஆனந்தக் கண்ணீர் விடாத குறைதான். சம்பந்தப்பட்ட மொழிக்கான ஆன்லைன் அகராதி, கூக்ளே ஒரு சாளரத்தில். தூள் கிளப்ப வேண்டியதுதான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சென்னையில் என்னளவுக்கு வேகமாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே வந்து செய்பவர்கள் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன். கூடவே பொறியாளராக 23 வருடங்கள் வேலை செய்த அனுபவம் வேறு.
இன்னும் கணினி சம்பந்தமாக புது அனுபவங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றையும் தொழிலில் பிரயோகிப்பதால் புது வாடிக்கையாளர்களைப் பிடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலே கூறிய நேர்மறை விஷயங்கள் என்னை வாடிக்கையாளர்களுடன் தைரியமாகப் பேரம் பேசுவதில் எல்லா வகையிலும் துணையாக உள்ளன.
என்னுடைய அனுபவங்களைக் கூறும்போதும் அவற்றை இவ்வாறு வெளியிடுவேன். பொறியாளராக 23 வருடம் அனுபவம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக 27 வருடம் அனுபவம், ஜெர்மன் மொழிபெயர்ப்பாளராக 30 வருட அனுபவம் ஆக 80 வருடங்கள் கூட்டு அனுபவம், ஆனால் வயதோ 59 என்பேன். எப்படி என்று வாடிக்கையாளர் கேட்க, ஓவர்டைம் என்பேன் சிரிக்காமல்.
சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையே வலியுறுத்துங்கள். என்ன செய்ய முடியாது என்பதை வெறுமனே ஒரு முறை கூறி அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல நடந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
11 minutes ago
2 comments:
ஆரோக்கியமான ஆலோசனைகள்!
அன்புடன்
ஸ்ரீரங்கன்
நன்றி சிறீரங்கன் அவர்களே. இவ்வரிசையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகள்தான் மிச்சம் உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment