யாழ்தேவி நட்சத்திர வாரம் பங்குனி முதல் வாரம்
இப்போது ஒரு குழப்பமுமில்லாது பங்குனி முதல் வாரம் என ஈழக்கணக்குப்படி எழுதி விட்டேன். அதே போல எந்த ஆங்கில நாட்காட்டி தேதியையும் என்னால் ஈழநாட்காட்டிக்கு மாற்றவியலும். ஆனால் அதெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் எனது இந்தப் பதிவுக்கு பின்னால்தான் வந்தது. ஒரு பிறப்பு சான்றிதழை ஈழத்தமிழ்லிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தபோது தமிழ் பெயரில் மாதங்களை குறிப்பிட்டதால் எனக்கு சரியான ஆங்கில தேதி மாற்றத்துக்காக ஈழ சகோதரகளை நாட வேண்டியிருந்தது. ஆகவே அப்பதிவை இட்டேன். சும்மா சொல்லக்க்கூடாது, உடனேயே உதவியும் வழங்கினார்கள் பல ஈழப் பதிவர்கள். அவர்கட்கு மீண்டும் இங்கு எனது நன்றி.
தாய்மொழி தரும் உற்சாகம்
எனது இப்பதிவில் குறிப்பிட்டது போல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முடிந்ததில் தமிழ்வலைப்பூவை பாவிப்பது ஒரு முக்கிய பங்கு வகித்தது/வகிக்கிறது என்றால் மிகையாகாது. தாய்மொழியில் எழுதுவதால் வாக்கிய கட்டமைப்பு தானாகவே வருகிறது. எண்ணங்களை மட்டும் கோர்வையாக்கிக் கொண்டால் போதும். இப்போது ஜெர்மனிலிருந்து மற்றும் பிரெஞ்சிலிருந்தும் கூட தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது அம்மாதிரியான வேலைகள் பெரும்பாலும் சுவிஸ், கனடா, அமெரிக்கா நாட்டு அரசு துறைகளிலிருந்தே வருகின்றன. அவை முக்கியமாக அந்தந்த நாடுகளுக்கு அகதிகளாக போய் சேர்ந்து பிறகு அன்னாட்டு குடிமக்களாக மாறும் ஈழத் தமிழருக்காகவே. அதனால் ஓரிரு வேலைகளை அனுப்பியவர்கள் ஈழத்தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டனர். அப்போது, நான் அவர்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறினேன். அதாவது, ஈழத்தமிழில் இருந்தால் என்னால் அதை உள்வாங்க முடியும். ஆங்கிலத்துக்கோ, பிரெஞ்சுக்கோ அல்லது ஜெர்மனுக்கோ மொழிபெயர்க்க இயலும். ஆனால் அதற்காக நான் ஈழத்தமிழில் எழுதுவது என்பது என்னால் முடியாத காரியம் என்றே குறிப்பிட்டு விடுவேன். என்னுடையது தமிழ்நாட்டு தமிழ்தான் என தெளிவுபடுத்திவிடுவேன். எனது இப்பதிவில் நான் குறிப்பிட்ட ஈழவாலிபர் தெனாலி படத்தில் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஈழத்தமிழில் பல பிழைகள் இருந்ததாக கூறினார். அம்மாதிரி நானும் முயற்சி செய்து மொழிபெயர்ப்பில் குறை வருதல் கூடவே கூடாது என்பதாலேயே நானும் அம்மாதிரியான வேலைகளை தவிர்த்து விடுவேன்.
இதே போல சிலசமயம் பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்க கனேடிய ஃபிரெஞ்சை பயன்படுத்த வேண்டும் என்ற தருணத்தில் இதே நிலைப்பாட்டை எடுத்தேன். எது நம்மால் முடியும், எது முடியாது என்பதில் தெளிவாக இருப்பது வேறு யாருக்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ, மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் அவசியமே.
நித்தியானந்தர் விவகாரம்
இப்போது மெதுவாக பேச ஆரம்பித்திருக்கிறார் நித்யானந்தர். அவர் அவ்வாறு செய்து மக்களை கன்வின்ஸ் செய்கிறார் என வைத்து கொண்டால், அதற்கான கிரெடிட் முழுக்க முழுக்க அவரை எதிர்த்து செயல்பட்ட எல்லோருக்கும் போய் சேரும். அந்த அளவுக்கு அவர்கள் மிகைப்பட செயல்பட்டனர். சன் டிவி குழுமத்தினர் அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகளை போட்டனர். நக்கீரன் குழுமமோ இன்னும் அதிக போர்னோகிராஃபியை உள்ளடக்கிய சிடிக்களை பார்க்க நாக்கூசாமல் பணம் கேட்டது. ஒரு தருணத்தில் இவர்கள் எல்லோருமே ரொம்பத்தான் அலட்டுகிறார்கள் என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மேலும் சன் டிவி குழுமத்துக்கும் நித்யானந்தர் ஆஸ்ரமத்துக்கும் இடையில் உள்ள ரியல் எஸ்டேட் பிரச்சினைதான் அக்குழுமம் இவ்வளவு அலட்டலுக்கு காரணம் என்பதும் புரிய ஆரம்பித்து விட்டது. அப்படியெல்லாம் இல்லை என சன் டிவி நிர்வாகம் விட்ட ஸ்டேட்மெண்ட் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்னும் ரேஞ்சில் பார்க்கப்படுகிறது. அதுவும் அழகிரி விவகாரத்தில் அது அடித்த பல்டிகளுக்கு பிறகு அதன் நம்பகத்தன்மை அரோகரா ஆகி விட்டது.
நித்யானந்தருக்கு இங்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. மற்றவருக்கு செய்யும் உபதேசத்தை தானே பின்பற்றாவிட்டால் இப்படித்தான் ஏற்படும் எனப்தைத்தான் நான் எனது நித்யானந்தரும் பெரியாரும் இடுகையில் ஏற்கனவேயே எடுத்து காட்டியிருக்கிறேனே.
யாழ்தேவிக்கு என் நன்றி
முதலில் என்னை யாழ்தேவி நட்சத்திரபதிவராக இருக்க சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. உடனே சுதாரித்து கொண்டு அதை ஏற்றேன். தமிழ்நாட்டு பதிவர்களிடமிருந்து முதல் நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் கௌரவம் அளித்த செயல். அதற்காக யாழ்தேவிக்கு என் நன்றி. ஈழபிரச்சினையில் என் கருத்து ஈழத்தவர் பலருக்கு ஒப்புதல் இல்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும் என்னை தேர்ந்தெடுத்தது அவர்கள் பெருந்தன்மை. அதற்கு தலை வணங்குகிறேன். இன்று தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எனக்கு கொடுத்த அன்பான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேகங்களின் குரல் 11,புத்திக்கும் அப்பால்
-
பொதுவாக கார்ப் பயணங்களில் தீவிரமான உரையாடல்கள் நிகழ்கின்றன. வழக்கமான
அறைகளுக்குள் அமர்ந்து கொண்டு பேசுவதை விட பயணங்களில் ஏன் நல்ல உரையாடல்
நிகழ்கிறது? ஓர்...
3 hours ago
