8/29/2007

இப்போது வெளிப்படையான யுத்தம்

மே 2005-லிருந்து ஆரம்பித்த போலி விவகாரம் தற்போது தீவிர நிலையடைந்துள்ளது. இது பற்றி நான் வெவ்வேறு நேரங்களில் போட்ட பதிவுகள் ஒரு லேபலின் கீழ் உள்ளன. தேவையானவர்கள் அவற்றைப் பார்த்து கொள்ளலாம்.

நண்பர் சர்வேசன் பதிவில் பல பின்னூட்டங்கள். அவற்றில் சிலவற்றில் போலி பிரச்சினைக்கு போலி மட்டும் காரணமல்ல, டோண்டுவும்தான் என கூறப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவு.

முதலில் ஒன்றை கூறி விடுகிறேன். மற்றவர்கள் விஷயத்தில் அந்த மலேஷியப் பதிவர் எப்படியோ தெரியாது. ஆனால் எனது விஷயத்தில் நேரடியாக தாக்குதல்தான். அதுவும் என் பெயரில் வலைப்பூ தயாரித்து நான் கருத்து கூறுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். அதனாலேயே அவன் போலி டோண்டு என பெயர் பெற்றான். பலர் அதை நம்பவும் செய்தனர் (உதாரணம் பதிவர் வேதா, டி.பி.ஆர். ஜோசஃப் ஆகியோர்). அந்நிலையில் நான் வேறு விதமாக செயல்பட்டிருக்க முடியாது. அவன் தாக்கிய மற்ற பதிவர்கள் பதிவு போடுவதையே நிறுத்தினர். ஆனால் நான் அவாறு செய்ய மறுத்தேன். என்ன செய்வது எனது அடிப்படை குணமே அடாவடிக்கு பணிய மறுப்பதுதான். நல்ல எண்ணத்துடன் அறிவுரை கூறியவர்களை நான் குறை சொல்லவில்லை. அதே சமயம் எனக்கு சரி என்று பட்டதையும் செய்தேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.

"அவன் அப்படித்தான், நீதான் பணிந்து போக வேண்டும்" என கருத்துடையவர்களை பார்த்து எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. தெருவில் இருவர் சண்டை போடுகிறார்கள். அவர்களில் ஒருவன் எங்கே சண்டை என அலைபவன், இன்னொருவன் தாக்கப்பட்டு தற்காத்து கொள்ள போராடுபவன். பலர் சண்டையை விலக்க வருவார்கள். முக்கால்வாசி சமயம் என்ன நடக்குமென்றால் எல்லோரும் இரண்டாமவனை மட்டும் பிடித்து கொள்ள அடாவடிக்காரன் அவனை இன்னும் நாலு குத்து விடுவான். நான் கூறுவது என்னவென்றால், முடிந்தால் இருவரையும் கட்டிப் பிடித்து நிறுத்து. இல்லாவிட்டால் வேடிக்கை பார். இம்மாதிரி ஒருவரை மட்டும் இழுத்து பிடிக்காதே என்பதே.

என்னை தாக்கிய அந்த மலேசிய பதிவர் எனக்கு பின்னூட்டம் இட்டதற்காக ஆண் பெண் பேதமின்றி எவ்வளவு எவ்வளவு குருட்டுத்தனமாக தாக்குகிறான் என்பதைத்தான் எல்லோரும் பார்க்கிறீர்களே. அதை தவிர்க்கவே பலர் பின்னூட்டம் இடவே தயங்கினர். எனது நண்பர்கள் மட்டும் பல பெயர்களில் வந்து பின்னூட்டம் இட்டனர். நாட்டாமை, அறவாழி அந்தணன், ராஜ் சந்திரா, வெங்கடேஷ் சர்மா, பஜ்ஜி, முனிவேலு, தங்கம்மா, நெப்போலியன் இன்னு மற்றும் பல பெயர்களில் வந்தனர்/வருகின்றனர். இப்போது அனானி ஆப்ஷனை போட்டு விட்டதால் அதற்கும் தேவையின்றி போய் விட்டது.

முரளி மனோஹர்? எனக்கு நானே நண்பன்தானே. அப்பெயரில் ஏதேனும் ஆபாச கருத்துகள் வந்தனவா? அதை தேடி தேடி அலுத்தனர் எதிரி முகாமினர். முரளி மனோஹர் என்பது புனைப்பெயரே. அதை வைத்ததற்காக என்னை தாக்குபவர்கள் கல்கி, அறிஞர் அண்ணா, ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோரையும் தாக்குவார்களா? அவர்கள் வரிசையில் சேர்ந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சியே.

எனது கருத்துகளில் ஒப்புதல் இல்லையெனில் சம்பந்தப்பட்ட பதிவுக்கு வந்து பின்னூட்டமிடுங்கள். அவ்வாறு செய்யாது தயங்குபவர்களில் பலர் போலிக்கு பயப்பட்டே அவ்வாறு செய்கின்றனர். இது அவர்தம் மனசாட்சிக்கு தெரியும். இப்போது நடப்பது யுத்தம். Stand up and be counted.

சர்வேசன், ஓசை செல்லா, அதியமான் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/27/2007

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் தண்டனை?

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஹிந்தி மூலப்படத்தில் கமலஹாசன் தமிழில் ஏற்ற பாத்திரத்தில் நடித்த சஞ்சய்தத்தை கட்டிப்பிடித்து விடை கொடுத்த எரவாடா சிறை காவலாளி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எட்டு காவலாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இன்றைய ஹிந்துவில் வந்த பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

"Constable suspended
Pune: A constable has been suspended for hugging Sanjay Dutt and eight others will face a departmental probe for their friendly gestures towards the actor, jail superintendent Rajendra Dhamne said.— PTI"

சஞ்சய்தத் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற குற்றவாளி என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இப்பதிவும் அது பற்றி பேசப்போவதில்லை. இடைஜாமீன் பெற்று வெளியே சென்ற அவரை நட்புடன் வழியனுப்பியதுதான் அந்தக் காவாலாளி செய்த தவறு என்றால் ஒன்று புரியவில்லை எனக்கு. சினேக பாவம் குற்றமா? அது நமது மரபணுக்களில் ஊறியதல்லவா? மேலும் சிறை காவலாளி என்பவரும் மனிதர்தானே? இவ்வாறு செய்யக் கூடாது என பஞ்சாப் சிறைவிதிகளின் கையேட்டில் கூறப்பட்டுள்ளதா? அப்படி என்றால் என்ன பிரிவில் அது வருகிறது? வழக்கறிஞர்/பதிவர் ராஜதுரை ஏதாவது இது பற்றி கூற இயலுமா?

சிறை தண்டனை என்பது திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக கருதுவதுதானே நல்லது? தூக்கு தண்டனை பெற்ற கைதிகளுடன் கூட அனுதாபத்துடன் பழகும் சிறை அதிகாரிகள் இல்லையா? போலீஸ் திருடன் விவகாரத்தில் காலப் போக்கில் ஒரு வித அந்நியோன்யம் ஏற்படுவது ஒன்றும் புதிதில்லையே? "என்னப்பா, திரும்பவும் மாமியார் வீட்டு வாசம்தானா" என சிறை அதிகாரி கேட்க, "அது இல்லாமல் போர் அடிக்கிறது" என கைதியும் பதில் தர மொத்தத்தில் சூழ்நிலையின் இருக்கம் குறைகிறது பல சமயங்களில்.

முதல் உலகப் போர் சமயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது எல்லைகளில் சண்டையிடும் ஜெர்மானிய மற்றும் நேசப்படையினர் அந்த ஒரு நாளைக்கு நட்புடன் கைகுலுக்கிப் பழக, சீறி எழுந்தனர் ராணுவத் தலைவர்கள். அவ்வாறு விரோதியுடன் சினேக பாவத்தில் இருந்ததற்காக பலர் மிலிட்டரி கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை கூட அடைந்தனர். ஆனால் அதே போரில் கொழுப்பெடுத்து பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இரு தரப்பிலும் காவு கொடுக்கப்பட்டனர் என்பதை சரித்திரம் இப்போது உணர்த்துகிறது. கேனத்தனமாக திட்டமிட்டு இதற்கு வழிவகுத்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு தண்டனையும் கிடையாது.

ஆக வாழ்க்கை என்பது எப்போதுமே லாஜிகலாகலாக இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது என்பதே நிஜம். வாழ்க்கை பல சமயம் அபத்தமாகவே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/25/2007

IdlyVadai - இட்லிவடை: சூடாகிறார் சோ!

IdlyVadai - இட்லிவடை: சூடாகிறார் சோ!
Dondus dos and donts - சோ அவர்களுடன் நான் ஒரு விஷயத்தில் மாறுபடுகிறேன்

சோ அவர்களுடன் நான் ஒரு விஷயத்தில் மாறுபடுகிறேன்

இவ்வார துக்ளக்கில் (29.08.2007) சோ அவர்கள் "மக்கள் அதிகாரம் இல்லாத அரசுகள்" என்ற தலைப்பில் மிக அருமையான தலையங்கம் எழுதியுள்ளார். இத்தலைப்புடன் மாறுபடுகிறானா இந்த டோண்டு ராகவன்? இல்லை.

மத்திய அரசை இடது சாரிகள் மிரட்டுகின்றனர். தமிழக அரசை பா.ம.க. சித்ரவதை செய்கிறது. ஆனாலும் தத்தம் ஆதரவை வாபஸ் பெறப் போவதில்லை என்றே கூறி வருகின்றனர். இக்கருத்துடன் மாறுபடுகிறேனா நான்? இல்லை.

மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி ஏன் இந்தத் தொல்லையை, இந்த அவமதிப்பை, இந்த அவமானத்தை, ஏன் இப்படி சகித்து கொள்கின்றனர்? காரணம் தகுதியின்மை. இரு அரசுகளுமே மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. மக்கள் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மெஜாரிட்டியை பெறவில்லை. அது அமைத்த கூட்டணி கூட அதைப் பெறவில்லை. ஆகவே தேர்தலில் தன்னை கடுமையாக எதிர்த்த இடது சாரிகளின் ஆதரவை வெளியிலிருந்து பெற்றுத்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இடது சாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் வெளியேற வேண்டியதுதான். அதே போல காங்கிரசை எதிர்த்து மக்களிடம் ஓட்டு வாங்கிய இடதுசாரிகளும் காங்கிரசை ஆதரித்தது மக்கள் கருத்தை எதிர்த்தே. தமிழகத்தில் நிலைமை சற்றே வேறு. தேர்தல் சமயத்தில் கூட்டணி அரசு வரும் எனக் கூறி விட்டு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் தனிப் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. மட்டும் கூட்டணியின் பெரும்பான்மையை தனது பெரும்பான்மை போல பாவித்து ஆட்சி அமைத்தது. இந்தத் தகுதியின்மை திமுகவை மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா தினமும் கூறி இம்சை செய்வதற்கு மேலே சொன்னதுதான் காரணம். இக்கருத்துடன் மாறுபடுகிறானா இந்த 61 வயது இளைஞன்? இல்லை.

ஆக, மக்கள் அதிகாரம் அளிக்காத போதே, அரசியல் பேரங்களைப் பயன்படுத்தி, அந்த அதிகாரத்தை அபகரித்துக் கொண்டவைதான் மத்திய - மாநில அரசுகள். இக்கருத்துடன் ஏதேனும் வேறுபாடு இவனுக்கிருக்கிறதா? இல்லவே இல்லை.

"தேர்தலில் நிற்பவர்களை 'ஓட்டுப் பொறுக்கிகள்' என்று வர்ணித்த, தி.மு.க.வின் இறைவனாகிய பெரியார் இன்று இருந்திருந்தால் இந்த மாதிரி அரசை ஆதரவு பொறுக்கிகள் என வர்ணித்திருப்பாரோ என்னவோ? நாம் அப்படிச் சொல்லவில்லை." என்ற இவ்வரிகளின் மாறுபடுகிறானா டோண்டு? ஆம், இக்கருத்தில் மட்டும் மிகவும் சற்றே மாறுபடுகிறான் அவன்.

இப்போது டோண்டு ராகவன் கூறுவது. பெரியார் அவ்வாறு நிச்சயம் கூறியிருக்க மாட்டார் என்பதுதான் எனது துணிபு. 1954-லிருந்து 1967 வரை இடைவிடாத காங்கிரஸ் ஆதரவு. பச்சைத் தமிழர் காமராஜ், திராவிட இயக்கத் தலைவரான அண்ணாவோ கண்ணீர்த்துளி மட்டுமே என்ற ரேஞ்சில்தான் இருந்தது அந்த ஆதரவு. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையே எதிர்த்தவர் அவர், எல்லாம் காங்கிரசுக்கு ஆதரவு தந்ததால்தான்.

1967-ல் காங்கிரஸ் அரசு மறைந்தது. திமுக அரசு வந்தது. உடனடியாக தன் நிலையை மாற்றிக் கொண்டார் பெரியார். கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள், அவர்தம் பெண்டிர் மற்றும் குழந்தைகள் ஆகியோரை கோபாலகிருஷ்ண நாயுடுவும், அடியாட்களும் தீவைத்து கொளுத்தியதை கண்டிக்காது சொதப்பலாக அவர் கருத்து கூறியதற்கும் அரசுக்கு அவர் அளித்து வந்த ஆதரவே காரணம்.

ஆக ஆதரவுக்காக சமரசங்களை செய்யத் துணிந்தவர் பெரியார் என்பதாலும், அதே முறையில் மான அவமானம் பார்க்காமல் இப்போதைய அரசு பாமக செய்யும் அவமானங்களை பொறுத்துக் கொள்வதன் மூலம் பெரியாருக்கு ஏற்ற சீடர்கள் என்பதே எனது கருத்து. இந்த விஷயத்தில் மட்டும் சோ அவர்களுடன் மிகச் சற்றே மாறுபடுகிறான் இந்த டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/21/2007

பென்ஷன் பற்றிய சிந்தனைகள்

நண்பர் நெப்போலியன் எனது சிவப்பு நாடா பற்றிய பதிவில் திடீரென பென்ஷன் திட்டத்தை அடியோடு நிராகரித்து கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டுள்ளார்.

"Mr dondu i am totally against your logic behind this post. the pension is the one of the worst scheme from the government of india.why should indian governmnent spare some unlimited amount to the old aged peoples those who never taken part for any of the work?
Pension is one of the useless and erotic plans the from GOI encourages the laziness".

அப்பதிவு பென்ஷனைப் பற்றி இல்லை ஆகவே இப்பின்னூட்டத்திற்கு எதிர்வினை இப்பதிவில் தருகிறேன்.

முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். பென்ஷன் என்பது இந்தியாவிற்கு மட்டும் உரித்தானது இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் அது வெவேறு ரூபங்களில் உள்ளது. பென்ஷன் என்பது அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தம். வேலையில் சேரும்போதே அந்த ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது.

நான் மத்தியப் பொதுப்பணித் துறையிலிருந்து ஓய்வு பெற்றதற்கு பென்ஷன், ஆனால் ஐ.டி.பி.எல். லிருந்து விருப்ப ஓய்வு பெற்ற போது கையில் கணிசமான தொகை கொடுத்தார்கள். இதில் என்ன பிரச்சினை? பென்ஷன் கொடுப்பது சரியா தவறா என்று இவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்ப்பது காரியத்துக்காகுமா?

குஷ்வந்த் சிங்கும் நெப்போலியன் போலவே ஒரு சமயம் கருத்து கூறியுள்ளார். பென்ஷன் என்பது காசு விரயம் என்பதே அவரது பாயிண்ட். தான் இவ்வளவு வயதுக்கப்புறமும் நன்றாக சம்பாதிப்பதைப் போல பென்ஷன் வாங்குபவர்களும் செய்ய வேண்டியதுதானே என அவர் கூறியுள்ளார். (இதெல்லாம் நான் எழுபதுகளில் படித்தது, ஆகவே சுட்டி தர இயலாது). அப்படி பார்த்தால் எனது சம்பாத்தியத்துக்கும் குறை ஒன்றும் இல்லை. அது பாட்டுக்கு அது, பென்ஷன் பாட்டுக்கு அது என்று இருக்கிறேன். அதாவது பென்ஷனிலேயே வாழ்க்கையை நடத்த நினைப்பது முட்டாள்தனம்.

இப்பதிவை வேண்டுமென்றே இந்த நிலையில் முடிக்கிறேன், மற்றவர்களும் கருத்தை கூற வேண்டும் என்பதற்காக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2007

சிகப்பு நாடா பிரச்சினை

இப்போதிருப்பது போல முன்பெல்லாம் ஓய்வூதியம் தொகை வங்கிக்கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படவில்லை. பென்ஷன் வாங்கும் தினத்தன்று அரசு கருவூலங்களில் ஓய்வு பெற்றவர்களால் சூழப்பட்டிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். அப்போதுதான் போனால் போகிறதென்று சில மணிநேரத் தாமதங்களில் பென்ஷன் தொகையை கடனே என்று பட்டுவாடா செய்வார்கள். இது சம்பந்தமாக உண்மையாக நடந்த ஒரு விஷயம் இதோ.

பிரணதார்த்தி ஹரன் (கற்பனை பெயர்) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தன் மகள் இருக்கும் இன்னொரு ஊருக்கு சென்றிருந்ததால் அவ்விரு மாதங்களும் ஓய்வூதியம் வாங்க வரவில்லை. மார்ச் மாதம்தான் வந்தார். மூன்று மாதங்களுக்கும் சேர்த்து பணம் பெறும் விண்ணப்பத்துடன் தான் உயிருடன் இருக்கும் சான்றிதழையும் எடுத்து வந்திருந்தார். ஆனாலும் பென்ஷன் மறுக்கப்பட்டது. காரணம்? அவர் மார்ச் மாதத்துக்கு மட்டும் உயிருடன் இருக்கும் சான்றிதழை எடுத்து வந்திருந்தார். அதற்கு முந்தைய மாதங்களான பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களுக்கு எடுத்து வரவில்லையாம்! இது எப்படி இருக்கு?

சமீபத்தில் 1971-ல் நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு உறவினரல்லாத இருவரிடமிருந்து ரெஃபரன்ஸ் வாங்கி வர வேண்டும். அதுவும் அவர்கள் என்னுடன் 3 ஆண்டுகளாவது பரிச்சயமாக இருக்க வேண்டும். நான் வேலையில் சேர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு அவ்வாறு இரு சான்றிதழ்கள் வாங்கி வந்தேன். அதில் ஒருவர் 3 ஆண்டுகள் என குறித்து வைத்திருந்தார். இது ஏற்கத்தக்கதல்ல என்று சம்பந்தப்பட் க்ளார்க் அபிப்பிராயப்பட்டார். அதாவது நான் சான்றிதழ் வாங்கிய தேதியில்தான் மூன்று ஆண்டுகள் ஆகிறது என்றும், நான் வேலையில் சேர்ந்த அன்று அக்காலக்கட்டம் 3 ஆண்டிலிருந்து பத்து நாட்கள் குறைகின்றன என்றும் விளம்பினார். விஷயம் S.E. இடம் சென்றது. நான் இப்பதிவில் குறிப்பிட்ட அதே எஸ்.இ. தான். க்ளார்க்கை பார்த்து அவர் கூறியது "உளறாதே" என்பதுதான். நல்ல வேளை.

ஆனால் ஒன்று. மற்ற பல நாடுகளைப் பார்த்தால் நம்மூர்க்காரர்களுக்கு கோவில்தான் கட்டி கும்பிட வேண்டும். பிரேசிலில் எல்லாவற்றும் படிவங்கள் உண்டு எனப் படித்துள்ளேன். அதில் ஒரு வன் இறந்ததாகத் தகவல் பதிவாகி விட தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதிலேயே கிட்டத்தட்ட உயிர் போயிற்றாம்.

இன்னொரு உதாரணம் ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசு. அது பல நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. அங்கு இருந்த சிவப்புநாடா பழக்கவழக்கங்கள் பிரசித்தி பெற்றவை. அவற்றில் ஒன்றைக் கூறுவேன். அச்சமயம் முதல் உலக மகாயுத்தம் முடிந்து அப்பேரரசுக்கே முடிவு ஏற்பட்டது. சக்கரவர்த்தி நாடு கடத்தப்பட்டார். யாருக்கு வருத்தம் இருந்ததோ இல்லையோ அரசு அதிகாரிகளுக்கு நிரம்ப வருத்தமே. ஏனெனில் கோப்புகளை எல்லாம் கையாளும் வாய்ப்பு போய் விட்டதல்லவா? பலருக்கு கிட்டத்ததட்ட பைத்தியமே பிடித்து விட்டது. ஆனால் ஒரு அதிகாரி மட்டும் ஜாலியாக இருந்தார். அவர் நண்பர் அவரிடம் அது பற்றி கேட்டார். அதற்கு இவர் தான் பழைய அலுவலகத்திலிருந்து பழைய கோப்புகள் கட்டுக்கள் சில தள்ளிக் கொண்டு வந்து விட்டதாகவும் தினமும் வீட்டில் அமர்ந்து அக்கோப்புகளுக்கான குறிப்புகள் எழுதுவதாகவும் ஆகவே பொழுது போய் விடுகிறது என்றும் கூறினார். நண்பருக்கு ஒரே பொறாமை. தன்னையும் அவர் வீட்டிற்கு வர அனுமதி கோரினார். வந்து அவரது குறிப்புக்களை தானும் சரிபார்த்து மேல்குறிப்புகளை போட வேண்டும் என்பதே நோக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/19/2007

யார் எதை எழுதுவது என்று யார் கூறுவது?

ஞாநி பாலியல் கல்வி பற்றி விகடனில் எழுதப் போகிறார் என்று செய்தி வந்தாலும் வந்தது, அவரவருக்கு கடுப்பு ஏறுகிறது.

"அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்" என்று திருவாய் மலர்கிறார் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர். ஒரு பத்திரிகையில் என்ன வரவேண்டும் என்று தீர்மானம் செய்வது அப்பத்திரிகையின் ஆசிரியர். அந்த உரிமையில் நாம் தலையிடலாகாது என்று இவரிடம் கூறினால் என்ன ஆகும். தன் வலைப்பூவில் என்ன எழுதுவது என்பது தனது உரிமை என்று மட்டும் கூறுவார் அவ்வளவுதானே.

அதிருக்கட்டும். பள்ளியில் மிகச்சில வகுப்புகளே படித்து தன் அனுபவ அறிவை மட்டுமே வைத்து கொண்டு காலம் கழித்த பெரியார் அவர்கள் என்ன அடிப்படையில் தமிழ் சீர்த்திருத்த எழுத்துக்கள் கொண்டு வந்தார்? அதுவும் கொம்பு வைத்த லை, னை, ளை ஆகியவற்றுஇக்கு மாற்றாக. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கூறவேண்டும். அதாவது அவர் பத்திரிகையின் அச்சுக்க்கூடத்தில் சம்பந்தப்பட்ட வார்ப்புருக்கள் தேய்ந்து போனதால் மட்டுமே அவர் அவசியத்துக்காக இவற்றைப் பயன்படுத்தினார். மற்றப்படி அவரே கைப்பட எழுதும்போது கொம்பு வைத்த எழுத்துக்களையே பயன்படுத்தினார். எனது பாயிண்ட் இதுதான். தமிழறிவு இல்லாது, அதுவும் எழுத்துக்களான மாத்திரைகள் போன்றவற்றின் அறிவு கிஞ்சித்தும் இல்லாத ஒரு பெரியார் செய்தபோது புகழ்ந்தீர்கள். ஆனால் ஞாநி மட்டும் தவறிழைத்தார். எப்படி ஐயா இந்த மெய்சிலிர்க்கும் பகுத்தறிவுடன் பேசுகிறீர்கள்?

மதன் அவர்களின் சரித்திரத் தொடர் பற்றியும் கண்டனங்கள். மதன் செய்த ஒரே குற்றம் அவர் பார்ப்பனராக இருப்பதுதான்,அப்படித்தானே. ஆண் பெண் பாலுறவுகளைப் பற்றி எழுத பலருக்கு தகுதி உண்டு. நானும் எழுதலாம் நீங்களும் எழுதலாம். ஏனெனில் அனுபவ அறிவு என்று ஒன்று உண்டு.

இந்த இடத்தில் சிறு திசை மாற்றம். ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் பற்றி proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் ஒரு தனி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மட்டுறுத்தனர் நான்தான். அது அப்புத்தகத்தை படித்தவர்களுக்கு மட்டுமே. அதில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "Now I have a hard time to think about what to do with my son, who is 11 this November, because the book is certainly not for his age, with all this snogging, sexual experience and so on taking a good half of it. I know the characters have grown adult, but what on earth should I tell to my 11-year-old kid who is desperate to know any news about Harry? That Harry was f***ng with Ginny? Mind you..."

அவருக்கு நான் அளித்த பதில்: "Recently in the year 1957 I was 11 year old myself and I vividly remember what we used to talk among ourselves and the colorful languages employed by us, of course in Tamil; but about snogging, we understood".

இதுதான் பிரச்சினை. பாலியல் சம்பந்தமாக பேசவே பலர் தயங்குகிறார்கள். ஞாநி பல இடங்களிலிருந்து விஷயங்கள் சேகரித்து தொகுத்தளிக்கிறார். இதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? இஷ்டம் இருந்தால் படியுங்கள் இல்லாவிட்டால் தினகரனுடன் உங்கள் வாசிப்பை நிறுத்தி கொள்ளுங்கள். யாருக்கு நஷ்டம்? தொடர் முடிந்த போது அவர் நூல்கள் பட்டியலை இடப் போகிறார். இதில் மற்றவர் உழைப்பை திருடுவது எங்கிருந்து வந்தது? அதிலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இதைச் செய்துவருவதாக வேறு பேச்சு? ஆனால் என்ன செய்வது, தனது ஐந்தாவது வயதில் சக பார்ப்பன மாணவன் எச்சில் துப்பினான் தன்மேல் என்ற ஒரே காரணத்துக்காக பார்ப்பன வெறுப்பை மேற்கொண்ட பெருந்தகையிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? அதே சமயம் தனக்கு முதன் முதலில் வேலை கொடுத்து ஊக்குவித்த பார்ப்பனரைப் பற்றி பேசும்போது மட்டும் அவர் பார்ப்பனர் என்பது இரண்டாம் இடத்துக்கு போய் விடும் - ஏன் மறந்தே கூட போய்விடும். என்ன செலக்டிவ் ஞாபகங்கள்?

பதிவை முடிக்கும் முன்னால் ஒரு தமாஷ். Everything you wanted to know about sex, but were afraid to ask என்னும் புத்தகம் சமீபத்தில் எழுபதுகளின் ஆரம்பத்தில் வந்து சக்கைபோடு போட்டது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியை நினைவிலிருந்து எடுத்து தமிழில் தருகிறேன்.

கேள்வி: சுய இன்பம் செய்தால் உடலுக்கு கேடாமே? அதுவும் ஆண்களுக்கு சக்தி விரையமாமே.
பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தேவையின்றி பல தலைமுறைகளாக சிறுவர்களை பயமுறுத்தவே இது கூறப்பட்டுள்ளது. தன் உடல் உறுப்புகளை பற்றி பிரக்ஞை வரும்போது எல்லோரும் செய்ததுதான் அது. என்ன, தாங்கள் பெற்றோராகும்போது மட்டும் அவர்களும் தங்கள் சிறுவர்களுக்கு இதே தடையை விதிக்கின்றனர். மறுபடியும் கூறுவேன், சுய இன்பத்தால் எந்த கெடுதியும் கிடையாது. என்ன துணி பாழாகும் அவ்வளவே.
கேள்வி: ஒரு கெட்ட விளைவும் இல்லையே?
பதில்: இல்லை. என்ன, உங்கள் காதுகள் மட்டும் கீழே விழுந்து விடும்.
அடிக்குறிப்பில் எடிட்டர் கூறுவது: Don't take it seriously, it is his attempt at humor.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/06/2007

மினி வலைப்பதிவர் சந்திப்பு

முந்தா நேற்று திடீரென செல்பேசி தன் இருக்கையை சத்தத்துடன் காட்டியது. எடுத்து கேட்டால் நம்ம அதியமான். ஏதோ வேலையாக நங்கநல்லூர் வந்திருப்பதாகவும் என்னை வந்து பார்க்க இயலுமா என்று கேட்டார். தாராளமாக வாருங்கள் என்றேன். சில நாட்களுக்கு முன்னால் ஏற்கனவே வீட்டுக்கு வந்திருந்ததால் அவருக்கு கண்டிப்பாக வழியை கண்டுபிடிப்பதில் கஷ்டம் ஏதும் இருக்காது என்பதால் நிம்மதி. அதே போல அவரும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தபோது மணி கிட்டத்தட்ட காலை 10.50.

இன்னும் சிறிது நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் அம்பலம் டாட் காமில் சேட் செய்ய இயலும் என்னும் செய்தியைத் தெரிவித்தார். அவருடன் சேட் சேய்யும்போது என்னுடன் கூடவே இருக்குமாறு கூறினேன். அவரும் சம்மதித்தார். போன தடவை அவர் வந்தபோது எனக்களித்த ராஜாஜி அவர்களின் சரிதை (அவரது மற்றும் காந்திஜியின் பேரன் ராஜ்மோஹன் காந்தி எழுதியது) மற்றும் அவர் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் அடங்கிய புத்தகத்தையும் திரும்பக் கொடுத்தேன். அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களைப் பற்றிய ஒரு புத்தகம் அவருக்கு படிக்கக் கொடுத்தேன்.

ஜெயகமலை பார்க்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவிக்க அவருடன் தொலைபேசி வரச் சொன்னேன். அவரும் தனது இணைபிரியா தோழர் சரவணனுடன் வந்து சேர என் வீடே ஒரு மின் வலைப்பதிவர் சந்திப்பின் களனாயிற்று.

இதற்குள் சுஜாதா அவர்களும் சேட்டில் வந்தார். ஆங்கிலத்தில்தான் சேட் நடந்தது. அவரிடம் நான் சமீபத்தில் 1971-ல் அவரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியை தேதி, இடம் விவரங்களுடன் எழுதியிருந்தேன். தனக்கு ஞாபகமில்லை என அவர் எழுத, நான் அதற்கு "Of course it is difficult for you to remember. While I met a celebrity, you did not" என எழுத அவர் அதெல்லாம் இல்லை தன் வயது காரணமாக மறந்துவிட்டது என எழுதினார். ஹாரி பாட்டர் புத்தகம் பற்றியும் அவருடன் பேசினேன். அதியமான் வந்திருப்பதையும் கூறினேன். அதியமானை விசாரித்ததாக அவர் கூறினார்.

அதியமான் சாரு நிவேதிதாவுடன் தான் பழகியதைப் பற்றி கூறினார். இந்த சந்திப்பில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நானும் சரி, அதியமானும் சரி ஜெயகமல் மற்றும் சரவணனும் சரி எல்லோருமே பயங்கரமான தனியுடைமை ஆதரவாளர்கள். உண்மை கூறப்போனால் எனக்கும் அதியமானுக்கும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துகள்.

பேச்சு ஒரு தடையோ பாசாங்கோ இன்றி பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் சந்திப்பு நீடித்தது. எல்லோரும் போன பிறகு அப்படி என்னதான் பேசினோம் என அதிசயித்தார் என் வீட்டம்மா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/05/2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

என் கார் சென்னை பல்கலைக்கழக மெரீனா வளாகத்தை அடைந்தபோது மணி சரியாக 09.30. ஏற்கனவே இணையத்தில் பதிவு செய்தவர்கள், செய்யாதவர்கள் என்று தனித்தனை ரெஜிஸ்டர்கள் வைத்திருந்தனர். முதலாவதில் உள்ளீடு செய்து, பட்டறைக்கான காகிதங்கள், எழுதுகோல் ஆகியவற்றை பெற்று கொண்டேன். கூடவே பகல் உணவுக்கான கூப்பனையும் தந்தார்கள். நல்ல ஏற்பாடுகள், மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டு கொண்டிருந்தன.

உள்ளே அரங்கத்தில் சென்றால் பல வலைப்பதிவர்கள் ஏற்கனவே வந்திருந்தனர். அவர்களில் சிலர்: அதியமான் (அவர் நான்தான் என்று நினைத்த பலரை பொய்யாக்கி வந்திருந்தார்), ஜெயக்கமல், சரவணன், உண்மைத் தமிழன், ஜெயசங்கர், விக்கி, சிவஞானம்ஜி, லிவிங் ஸ்மைல், ஆசிஃப் மீரான், பத்ரி, மா.சிவகுமார், டெல்ஃபின், கிருபா சங்கர், லக்கிலுக், ரஜனி ராம்கி, ஓசை செல்லா, தருமி, பொன்ஸ், இராமகி ஐயா, மாலன், தருமி, நேசமுடன் வெங்கடேஷ் ஆகியோர் (நினைவிலிருந்து எழுதுகிறேன்). Last but not least செந்தழல் ரவி கொரியாவை ஒரு வழி பண்ணிவிட்டு வந்திருந்தார்.

விக்கி அவர்களின் வரவேற்புரையோடு பட்டறை இனிதே துவங்கியது. காலத்துக்கேற்ப மாறுதல் செய்து வருவதில் தமிழ் வலைப்பதிவாளர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் தமிழின் முன்னேற்றம் கணிசமானது. Uncoference என்ற வார்த்தையை அடிக்கடி கையாண்டார் விக்கி அவர்கள். சாதாரண கருத்தரங்குகளில் மேடை மேல் இருப்பவர்கள், பார்வையாளர்கள் நடுவில் இருக்கும் இடைவெளி இம்மாதிரியான அன்கான்ஃபரென்சில் கிடையாது என்பதை வெளிப்படுத்தினார் விக்கி.

அதை விளக்குவது போல மாசிவகுமார் அவர்கள் தன்னிருக்கையில் இருந்தபடியே அந்த கான்சப்டை விளக்கினார். இப்பட்டறைக்கு வரமுடியாத நிலையில் வெளியூரில் இருக்கும் சிந்தாநிதி அவர்கள் "கணிச்சுவடி" என்ற தலைப்பில் உள்ள சிறு கையேட்டில் எகலப்பை என்றால் என்ன, அதை எப்படி நிறுவுவது என்பதையெல்லாம் எளியமுறையில் எழுதி அனுப்பியதையும் மாசிவகுமார் குறிப்பிட்டார்.

இப்பட்டறைக்கான பூர்வாங்க தயாரிப்பில் மிகுந்த அக்கறை எடுத்து கொண்டிருந்ததால் ஒரு குழப்பமும் இன்றி பட்டறை நடந்தது. கீழே கருத்தரங்கம், மாடியில் இரு அறைகளில் கணினிகள் வைத்து செய்முறை விளக்கங்கள் மூலம் வலைப்பதிவதை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தனர். பத்ரி சேஷாத்ரி அவர்கள் தற்போது இணையத்தில் தமிழை பயன்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள், பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்து கூறினார்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து மாடிக்கு சென்றேன். ஒரு மேஜையில் உள்ள கணினியில் தமிழில் தட்டச்சு செய்யும் முறைகளைப் பற்றி கேட்டார் ஒருவர். அச்சமயம் அக்கணினியில் எகலப்பையில்லை. அவரோ கையில் யாஹூ மெயில் ஒன்றில் வந்த தமிழ் மின்னஞ்சலை வைத்து கொண்டு அதைப் படிக்க இயலாது இருந்தார். சுரதா பெட்டியை நிறுவ முயன்றேன். கணினி இணைய பக்கங்கள் திறக்க ரொம்ப படுத்தியது. அதனுடன் மல்லாடுவதிலேயே நேரம் சென்றது. பிறகு ஜயக்குமார் என்பவர் வந்து எகலப்பையை நிறுவி ரீஸ்டார்ட் செய்தார். அதன் பிறகு உள்ளதும் போச்சடா என்பது போல இணைய இணைப்பும் அக்கணினியில் கிடைக்கவில்லை.

அடுத்த அறையில் சற்று முன்னேறிய நிலை. அங்கு சோமசுந்தரம் என்பவர் தனது வலைப்பூவை திறக்க முடியாது இருந்தார். கடவுச்சொல்லை மறந்து விட்டார். பிறகு பிளாக்கர் உதவிக்கு சென்றால் அவர்கள் தரப்பில் அதை விட சொதப்பினார்கள். சரி என்று புதிய வலைப்பூவையே திறந்தார். அதில் ஒரு கமெண்டும் இட்டேன், அனானியாக. இதிலேயே நேரம் ஆகிவிட்டது.

மணியும் மதியம் 1=15 போல ஆகிவிட்டது. உணவும் வந்தது. ஆளுக்கு இரு பொட்டலங்கள். பிரைட் அரிசி, குருமா மற்றும் தயிர்சாதம். பசிக்கு தேவாமிர்தமாக அமைந்தது. வீட்டில் பெரிய மொழிபெயர்ப்பு வேலையை விட்டுவிட்டு வந்திருந்ததால் உணவுக்கு பிறகு உடனே கிளம்ப வேண்டியிருந்தது. கிளம்புவதற்கு சற்று முன்னால் தமிழ்மணம் காசி, ஆசாத் மற்றும் பினாத்தல் சுரேஷ் அவர்களை சந்தித்தேன்.

பட்டறை பல இடங்களில் நடைபெற்றதால் எதை எடுக்க எதை விட என திக்குமுக்காடிப் போனது நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/01/2007

சொந்தத் தொழிலா அல்லது சம்பளத்துக்கு வேலையா?

நண்பர் மா.சிவகுமார் அவர்களது ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் வந்த முக்கால்வாசி கேள்விகள் கேட்டவர்கள் தத்தம் படிப்பு நிலைக்கான வேலை வாய்ப்புகளையே கேட்டனர். சிவகுமார் அவர்கள் சொந்த தொழில் செய்வது சம்பந்தமான கேள்விகளை எதிர்க்கொள்ள ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு அதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே கிடைத்தது.

ஒரு சராசரி இந்தியக் குடிமகன் மாத சம்பள வேலையைத்தான் முதலில் விரும்புகிறான் என்பது நான் அறிந்தவரையில் நிலை. அதிலும் அரசு வேலை என்றால் டபுள் ஓக்கே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலில் மின்வாரியத்தில் இளம் பொறியாளர் வேலைக்குத்தான் மனு போட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அந்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு போட்டிருந்தால் கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அப்போது என் அதிர்ஷ்டம் நான் கடைசி ஆண்டு பரீட்சையில் கம்பார்ட்மெண்ட் வாங்கினேன். நிஜமாகவே எனது நல்வினைப்பயனே அது. இல்லாவிடில் ஜெர்மன் படித்திருக்க மாட்டேன். பின்னால் பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் படித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றி இல்லை.

நான் சொல்ல வந்தது என்னவென்றால், எனது டிஃபால்ட் விருப்பம் சம்பளத்துடன் கூடிய வேலைக்குத்தான். அதில் 23 ஆண்டுகள் கழித்த பிறகே இப்போதைய சொந்த தொழிலுக்கு வந்தேன்.

மற்ற தொழில்களை பற்றி எனக்கு சொந்த அனுபவம் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்புத் துறையை பற்றி ஒன்று கூற முடியும். எடுத்த எடுப்பிலேயே அதை முழுநேரத் தொழிலாகக் கொள்ள முடியாது என்பதே. ஒன்று உங்களிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்க வேண்டும், அதாவது உங்கள் அப்பாவிடம். அவரும் உங்களுக்கு முழுமனதோடு ஆதரவு தர வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் முதலில் நல்ல கணினி வேண்டும், அகலப் பட்டை இணைய இணைப்பு வேண்டும். அச்சடிக்கப்பட்ட நல்ல அகராதிகள் வேண்டும். அவையும் தொழில் நுட்ப சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் தனி கவனம் செலுத்த விரும்பும் துறைக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம்? கணக்கு பார்ப்போமா?

கணினி ரூபாய் முப்பதாயிரத்துக்கு குறையாமல் ஆகும். தவறு என்றால் எனக்கு சரியான தொகையை பின்னூட்டமாக இடுங்கள். விண்டோஸ் எக்ஸ் பி ப்ரோ குறைந்தபட்ச தேவை. பிறகு அகலப்பட்டை இணைய இணைப்பு. மோடம் முதலியவை ரூபாய் 2000/க்கு மேல் ஆகும். மாதக் கட்டணம் குறைந்த பட்சம் ரூபாய் 800. அகராதிகள்? உதாரணத்துக்கு ஜெர்மன் -> ஆங்கில பொறியியல் அகராதி ரூபாய் 5000. பொது அகராதி ரூபாய் 1000. பிறகு இருக்கவே இருக்கின்றன கட்டட இயல் அகராதி, சிமெண்ட் சம்பந்தப்பட்ட அகராதி முதலியன. மற்ற துறைகளுக்கான அகராதியும் உண்டு. இதெல்லாம் சேர்த்து தேவையான முதல் தொகை அரை லகரத்தைத் தாண்டி விடும். ஆகவே பணக்கார, இளகிய மனதுடைய அப்பா தேவை. :)

சரி செட்டப் செய்து விட்டீர்கள். வாடிக்கையாளர்கள்? அவர்களை எப்படி பிடிப்பீர்கள்? அது சம்பந்தமாக நான் செய்ததை இங்கு எழுதியுள்ளேன். ஆனால் அதற்கெல்லாம் முக்கியமாக ஒன்று தேவை. அதாவது, உங்கள் வாழ்க்கையை தடையில்லாது நடத்த வேறு வகையில் பொருள் வரவு தேவை.

இப்போது எனது பதிவின் முக்கிய பகுதிக்கு வருகிறேன். வேறு வகையில் பொருள் வரவு? எல்லோருக்கும் பணக்கார அப்பாக்கள் மற்றும்/அல்லது மாமனார்கள் கிடைக்க மாட்டார்கள் அல்லவா? ஆகவே எங்காவது ஒரு நல்ல வேலை பார்த்து பிடித்து கொள்வது நலம். இப்போது இணைய தொடர்புகள் இருப்பதால் நான் மேலே கூறிய ஏற்பாடுகளை செய்து கொண்டால் உடனே தனியாக இந்த வேலையைத் துவங்கலாம். நான் பொறியாளனாக தொடர்ந்ததால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவற்றுக்கு ஆபத்து இல்லை. சாவகாசமாக மொழிபெயர்ப்புக்கான வாடிக்கையாளர்களுடன் பேரம் பேச முடிந்தது.

பொதுவாகவே பார்த்தாலும் முதலில் இம்மாதிரி வேலையில் சேருவதே நல்லது. உதாரணத்துக்கு நம்ம மா.சிவகுமாரையே எடுத்து கொள்வோம். முதலில் முழு நேர வேலை செய்துதான் அனுபவம் பெற்றார். தான் சேர்ந்த இடத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் இது தனதில்லை எனக் கூறாது செய்து பல வகைகளில் அனுபவம் பெற்றார். கண்டிப்பாக மற்றவர்களுக்கும் உதவி செய்து அவர்தம் வேலை அனுபவங்களையும் பெற்றிருக்க வேண்டும். அவரைப் போலத்தான் எல்லோரும் அனுபவங்களை தேடிச் செல்ல வேண்டும். அப்படியெல்லாம் செய்திருந்தாலும் முதலில் சொந்த தொழில் ஆரம்பிக்கும்போது அவர் சில தடங்கல்களை சந்தித்துள்ளார். அவற்றையெல்லாம் மீறி வருவதற்கு அவர் பெற்ற அனுபவங்களே உதவியுள்ளன எனக் கூறினால் மிகையாகாது. அது சரி எப்போது வேலையை விட்டு தொழில் ஆரம்பிப்பது? அது சற்று ரிஸ்க்கான காரியம். அதை எடுக்கத்தான் துணிவு வேண்டும்.

மறுபடியும் கூறுவேன். ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும் ஆனால் அதற்காக தேவையின்றி ஆபத்தை தேடக்கூடாது. எது எடுக்க வேண்டிய ரிஸ்க் எது தவிர்க்க வேண்டிய ஆபத்து என்பதை சம்பந்தப்பட்டவர் உள்ளுணர்வுதான் கூற வேண்டும்.

பதிவை முடிக்கும் முன்னால் எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில் நான் கேட்ட டயலாக்கை இடுகிறேன்.

சுந்தா: (நாடகத்தில் சேகரின் மாமா): சிகாமணி, எப்போதும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு வேண்டும். என்னையே எடுத்துக்கோ, நான் ஒரு பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நல்லா உழைத்து இரண்டே வருடங்களில் நானே ஒரு கடைக்கு முதலாளியாகிட்டேன்.

சேகர்: (நாடகத்தில் சிகாமணி): இப்பல்லாம் அது முடியாது மாமா. கல்லாவையெல்லாம் முதலாளிங்க இழுத்து பூட்டிடறாங்க.

அப்படியெல்லாம் செய்யப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது