8/13/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 13.08.2012

கொடும்பாவி எரிக்கும்போது ஜாக்கிரதை!!!!!!!!!!
அது சரி இவர்கள் கண்டார்களாமா இம்மாதிரி ஆகும் என்று?



இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நம்புவோமாக.

ரொம்பவும் சினிமா பார்த்தால் இம்மாதிரி ஆகிவிடுமோ?
கல்யாணப் பெண்ணை அழைத்து வரும் தோழியர் வாராய் என் தோழி வாராயோ பாடுவதைக் கண்டுள்ளோம். ஆனால் பெண்ணே அவ்வாறு பாடி நடனமாடினால்?



ஆனாலும் மணமகன் பாவந்தேன்!!!!!

இல்லை அப்படியில்லை என்கிறர் மகேஸ். அதே திருமணத்தில் மணமகன் அடிக்கும் லூட்டியைக் கீழே பார்க்கலாம். நன்றி மகேஸ்.



நான் என்ன நினைக்கிறேன் என்றால், பழங்காலத் திருமணங்களில் இரு தரப்பினரும் நையாண்டிப் பாடல்கள் பாடுவார்கள். அதன் இன்னொரு ரூபம்தான் இது என.

ஈவேரா பற்றிய கார்ட்டூன்களின் உண்மை உரைத்ததால் கள்ள மௌனமோ?
இதற்கு முந்தைய பதிவில் வந்த கார்ட்டூன்களை நான் போட்ட முக்கியக் காரணமே தலித்துகள் விஷயத்தில் அவரது உண்மை நிலையைக் காட்டவே. அதாவது condenscending மனப்பான்மை என்பார்கள். அதுதான் இது. உண்மையிலேயே அவருக்கு பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் முன்னேற்றம்தான் முக்கியம். இக்கருத்துக்கள் பற்றி நான் ஏற்கனவேயே கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான சரியான சான்று கிடைக்காமல் இருந்தேன். இப்போது முரசொலி கார்ட்டூன் கிடைத்தது.

ஆனால் நான் எதிர்பார்த்தது போல எதிர்வினை ரொம்ப இல்லை. ஈவேரா ஆதரவாளர்களின் கள்ள மௌனம் நீடிக்கிறது.

மனதை நிறையச் செய்த ஒலிம்பிக்ஸ்
பரவாயில்லை. தங்கம் இல்லாவிட்டாலும் மற்ற பதக்கங்கள் கிடைத்தனவே என அல்ப திருப்தி பட்டு கொள்ள வேண்டியதுதான். அவை கூட இல்லாமல் சிங்கி அல்லவா அடித்துள்ளோம் இத்தனை ஆண்டுகளாக.

செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலைகள் இன்னும் பல உள்ளன. முக்கியமாக ஒலிம்பிக் டீமுடன் டூருக்கு வரும் அதிகாரிகளின் பிச்சைக்கார கும்பலை ஒழிக்க வேண்டும். செய்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/11/2012

திராவிட அரசியலின் தரக்குறைவும் வெட்கம் கெட்டத்தனமும்

ஈவேராமசாமி நாயக்கர் பற்றி நன்கு அறிந்தவர்களில் திமுகவினரே முக்கியமானவர்கள். அவர்கள் இவருடன் முரண்பட்டு நின்ற காலகட்டம் 1949 முதல் 1967 வரை ஆகும். அச்சமயத்தில் இரு தரப்பினரும் எதிர்தரப்பினரின் வண்டவாளத்தை வண்டியில் ஏற்றினர். உதாரணத்துக்கு சமீபக்த்தில் 1962-ல் வெளியான முரசொலி கார்ட்டூன்களை கீழேகாணலாம்.



இமேஜ் பெரிதாக இல்லை என குறை நீங்க, கேப்ஷன்களை கீழே  மீண்டும் தருகிறேன்.

துணிவிலை உயர்ந்ததேன்?
புலைச்சி எல்லாம் ஜம்பர் போட ஆரம்பிச்சுட்டா அதனாலதான்.

வேலையில்லா திண்டாட்டம் ஏன்?
பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சுட்டானுங்க அதனாலதான்.

அரிசிவிலை உயர்ந்ததேன்?
கள் குடிக்கிற பசங்களெல்லம் சோறு திங்கறாங்க அதனாலதான்.

கார்டு கவர் விலையெல்லாம் உயர்ந்ததேன்?
தபால்காரனெல்லாம் அதிக சம்பளம் வாங்கறானே அதனால்

விபூதி பூசிக்கொள்ளாததேன்?
சந்நிதானம் பூசிக்கோ என்றால் பூசிக் கொள்வேன்.

வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதியதிலிருந்து சில வரிகள்:

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களிடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?”. “பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா” என்றாராம் பெரியார்.

காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் காமராசன் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்?

கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.

கீழ்வெண்மணி கொடுமைக்கு எதிர்வினையாக ஈவேரா அவர்கள் கொடுத்த அறிக்கையே அவரது சுயசாதி அபிமானத்தைக் காட்டுகிறது.

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

அந்த வலைப்பூ இங்கே:

ஆக 42 பேர் இறந்ததற்கு அணுவளவேனும் அனுதாபம் கூட இல்லை. கொலை செய்வித்த கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரையும் இந்த பலீஜா நாயுடு சொல்லவில்லை. வேறு என்னத்தைத்தான் சொல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்


8/05/2012

மன்மதலீலையை வென்றார் உண்டோ?

சமீபத்தில் 1976-ல் வந்த இப்படம் இன்னும் என் மனதில் நிற்கிறது. அதன் முழு வீடியோ யூ டியூப்பில் இப்போது. கிடைக்கவில்லை, ஆனால் ஒரு பாட்டு உண்டு, எஞ்சாய்!!





இப்போது பார்த்தாலும் அதே புதுமையை இழக்காமல் உள்ளது அப்படம். பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஹிட் ஆகவில்லையென்றால் நமது ரசிகர்க்கு ரசனை போதாதுஎன்றுதான் கூறுவேன்.

கவர்ச்சி நடிகை ஹலத்தை முழுக்க முழுக்க போர்த்திய புடவையுடன் பார்ப்பது சிறந்த மாறுதலாக உள்ளது.

பெண் சபலம் மிக்க மது பார்க்கும் பெண்களுடன் எல்லாம் கற்பனையிலேயே காதல் செய்கிறான்.முக்கியமாக டைட்டில் சாங்க் “மன்மதலீலை” மிக அழகான முறையில் படமாக்கப்பட்டுள்ளது (பாடல் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாகவே அவ்வப்போது வசனங்களுடன் வருகிறது).

ஒவ்வொரு பெண்ணின் அறிமுகமும் சுவையானது. அவ்வப்போது மனைவியிடம் மாட்டிக் கொண்டு பேய்முழி முழிப்பதும் சுவையானதே.

இப்படத்தில் வரும் பல ஆண்களும் பெண் சபலத்துடன் இருப்பது சற்றே இடிக்கிறது என்று கூறத் தோன்றினாலும் அதையும் சுவைபட சொல்கிறார் டைரக்டர்.

டாக்டரின் ஆலோசனைப்படி பாவமன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என தனது கிளார்க்கிடம் எல்லாவற்றையும் கன்ஃபெஸ் செய்ய அவர் படும் பாடும் பிரமாதம்.

கிளைமாக்ஸ் பிரமாதம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தைத்தான் பாருங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/01/2012

நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி

இன்றைக்கு இந்த்ப் பாட்டின் முறை. அதை முதலில் பார்த்து கேட்கவும்.




அப்பாட்டு தனியாகக் கிடைக்காததால் படத்தின் கடைசி பகுதியையே இணைத்துள்ளேன். போனஸாக பெற்று மகிழவும், முக்கியமாக “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” பாடலுடன்..

சொன்னக் கருத்தில் நம்பிக்கை இருந்தால் அதை விடாது பிடித்துக் கொள்வதிலும் ஒரு நெஞ்சுரம் தேவைப்படும். பிற்காலத்தில் அதனால் பிரச்சினை வந்தாலும் சொன்னது சொன்னதுதான் என எத்தனை பேரால் இருக்கவியலும்?

முக்கியமாக பதிவுலகில் இதற்கான பல உதாரணங்கள் உண்டு. முதலில் ஓர் உந்துதலில் பதிவொன்றைப் போடுவது. பிறகு எல்லோரும் கடுமையாக எதிர்வினை புரியும்போது ஓசைப்படாமல் அதை எடுத்துவிடுவது.

எனக்கு இது எப்போதுமே புரிந்ததில்லை. வெளியே வந்த சொல் வில்லிலிருந்து விடுபட்ட பாணம் போல. அதைத் திரும்ப வாங்குவது மகாபாரதத்து அருச்சுனன் போன்றவரால் மட்டுமே முடியும். இது என்ன கதை எனக் கேட்பவர்களுக்காகக் கூறுகிறேன்.

மகாபாரத யுத்த முடிவில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட, அதற்கு எதிரக தனது தரப்பிலிருந்து பிரும்மாஸ்திரம் விடுகிறான் அருச்சுனன். இரு பிரும்மாஸ்திரங்களையும் தனது தபோவலிமையால் தற்காலிகமாக த்டுத்து நிறுத்தும் வியாச முனிவர், அருச்சுனனைப் பார்த்து அவன் தனது பிரும்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்க, அவனும் அவ்வாறே செய்கிறான். ஆனால் அசுவத்தாமனோ அவ்வாறுசெய்ய தனக்குத் தெரியாது எனப்பேய்முழி விழிக்கிறான். “அப்படியானால் ஏன் அஸ்திரத்தை விட்டாய் மூடனே” எனச் சீறுகிறார் வியாசர்.

வேறுவழியில்லை அசுவத்தாமனின் அஸ்திரம் செயல்பட, கிருஷ்ணர் பாண்டவர்களைக் காப்பாற்றுவது வேறு கதை. அவ்வாறு செய்ததாலேயே அசுவத்தாமன் சிரஞ்சீவியாக வாழ்வான் என்றும் போகுமிடமெல்லாம் அவனது துரோகத்துக்கான வசைச் சொற்களைப் பெறுவான் எனவும் அவனுக்கு கடூரமான சாபம் கிடைப்பதும் வேறு கதை.

இங்கு மீண்டும் இப்பதிவுக்கு வருவேன். நான் இப்போது இடும் இப்பதிவு 1355-வது.  இது வரைக்கும் ஒரு பதிவையும் எதிர்ப்புகளுக்கு பயந்து எடுத்ததில்லை. அதனால் எல்லாம் நான் பெரிய பிடுங்கி என்றெல்லாம் கூறவில்லை. ஆனால் அதே சமயம் அவற்றை நீக்காததால் ஒரு கேடும் எனக்கு நிகழவில்லை என்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் கூறுவதை மேலும் நன்கு புரிந்து கொள்ள நான் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள், மற்றும் என் பெயரில் வெளியாகும்பின்னூட்டங்கள் -2 ஆகிய இரு இடுகைகளையே உதாரணங்களாகத் தருவேன். அக்காலக் கட்டத்தில் நான் மற்றவர் இடுகைகளில் இடும் பின்னூட்டங்களின் நகல்களை அவற்றுக்கான சுட்டிகளுடன் எனது மேலே சொன்ன இரு இடுகைகளிலும் இடுவேன். சில நாட்களுக்கு முன்னால் விளையாட்டாக சம்பந்த்ப்பட்ட சுட்டிகளைத் தேடினால் அவற்றில் பல காணாமல் போயிருந்த்ன. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றுதான் நான் இப்பதிவில் கூறிய விஷயமும் என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன்.

என்ன செய்வது, நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி செயல்பட்டால் அதுதான் நடக்கும்.

எனக்கு மிக எதிர்ப்பைச் சம்பாதித்து தந்த பதிவுகளில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

எத்தனை நெகடிவ் ஓட்டுகள்!!

அதனால் என்ன, நான் கூறியது கூறியதுதானே என விட்டு விட்டேன்.

எனது இந்த யோம் கிப்பூர் பதிவால் பல சங்கடங்கள், ஆனால் என்ன, போட்டது போட்டதுதான்.

மறுபடியும் கூறுவேன், இதனால் எல்லாம் நான் தைரியசாலி எனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் எனது தன்னம்பிக்கையே இதற்கெல்லாம் அடிநாதம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது