12/30/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 3

இதற்கு முன்பு இந்த வரிசையில் வந்த
இரண்டாம் பதிவு
முதல் பதிவு

இதற்கு முந்தைய 2 பதிவுகளில் நீங்கள் தவிர்க்க வேண்டிய நபரகளை பற்றி பேசும்போது தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்களையே குறி வைத்தேன். இப்பதிவில் சற்று வேறு மனநிலைகளில் இருப்பவர்களைப் பற்றி கூறுவேன்.

நான் சமீபத்தில் 1963-69 காலக் கட்டத்தில் பொறியியல் கல்லூரியில் படித்த தருணம் அது. என் நண்பன் ஒருவன். பெயர் ராமகிருஷ்ணன் என்று வைத்துக் கொள்வோமே. (அவன் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பதால் அவனது உண்மைப் பெயரை கூறவில்லை). அவன் நன்றாகப் படிப்பவன். தினமும் தவறாது அன்றன்றைய பாடங்களைப் படித்து விடுபவன். ஹாஸ்டலில் இருந்தான். ஆனால் அவ்வாறு படிப்பது விடியற்காலை 3 மணியிலிருந்துதான். நாள் முழுக்க ஊர் சுற்றுவான். தான் ஒன்றுமே படிப்பதில்லை என்றெல்லாம் ஃபிலிம் காட்டுவான். அவன் சொல்வதை அப்படியே நம்பி சில அசடுகள் அவனுடன் ஊரை சுற்றும். இரவு 10 மணி வரை கொட்டம் அடித்து விட்டு படுக்கப் போய் விடுவான். அசடுகளும் அவ்வாறே செய்யும்.

ஆனால் விடியற்காலை 3 மணிக்கு ஃபிரெஷாக எழுந்து படித்து விடுவான். அது தெரியாத மற்ற அசடுகள் காலை 7 மணி வரை தூங்கும். கடைசியில் பரீட்சையில் இவன் எல்லா சப்ஜெக்டுகளையும் க்ளியர் செய்து போய்க் கொண்டே இருப்பான். அசடுகள் கம்பார்ட்மெண்டுகள் வாங்கும். இவன் ஒரு உதாரணமே. ஆனால் வாழ்க்கையில் இவனைப் போல பலர் உண்டு. தாங்கள் நேரத்தை வீணாக்குவதுபோல நடிப்பார்கள். எனக்கு எப்போதுமே இவர்களின் மோட்டிவேஷன் புரிந்ததேயில்லை. நல்ல வேளையாக நான் ஹாஸ்டலில் இருந்ததில்லை. இவனிடம் நான் மாட்டிக் கொள்ளவில்லை. இவனை பற்றி நான் என் தந்தையிடம் பேசினேன். அப்போது என் ஆச்சரியம் எல்லாமே அவன் எப்படி ஊர் சுற்றினாலும் அவ்வாறு எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றான் என்பதுதான். ஆனால் நான் அவனை வர்ணித்ததுமே என் தந்தை கூறினார், அவன் நடிக்கிறான் என்று. ஏனெனில் அவர் படிக்கும்போது கூட அவருடன் ஒருவன் இதே குணநலன்களுடன் இருந்தானாம். அப்புறம் விசாரித்ததில் என் தந்தை கூறியது போலத்தான் எனது கிளாஸ்மேட்டும் நடந்து கொள்கிறான் என்று தெரிய வந்தது.

அப்படிப்பட்டவர்களை நிச்சயம் தவிர்க்கவும். அதிலும் இப்போதெல்லாம் டீம் செயல்பாடுகள் அதிகம். இந்த குணாதிசியம் உள்ளவர்கள் தாங்கள் முன்னுக்கு வந்தால் போதாது, மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதற்காகக் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் காலில் விழுவார்கள், காரியம் முடிந்ததும் காலை வாருவார்கள்.

ஒரு பிரசித்தி பெற்ற அமெரிக்க பதிப்பாளர் ஒரு சமயம் கூறினார், "வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க நீங்கள் வெற்றி பெற்றால் மட்டும் போதது, உங்கள் நண்பர்கள் அதே சமயம் தோற்கவும் வேண்டும்" என்று.

அரசியல்வாதிகள் பலரும் இவ்வாறுதான் செயல்படுவார்கள்.

"தமிழ்வழிக்கல்வி எல்லோருக்கும் விழுந்து விழுந்து சிபாரிசு,
ஆனால் ஆங்கில மீடிய கல்வியில்தான் அவர்தம் வாரிசு"

என்ற ரேஞ்சில் செயல்படுவார்கள். அவர்களை பற்றி ஏற்கனவே வேணமட்டும் எழுதியாகி விட்டதால், இங்கு அவர்களை பற்றி அதிகமாகக் குறிப்பிடமாட்டேன்.

ஆனால் வேறு சில பதிவர்களை பார்க்கிறேன். உலகமயமாக்கலை எதிர்ப்பார்கள் ஆக்கிரோஷமாக. ஆனால் கூர்ந்து பார்த்தால், அப்பதிவுகளையும் அவர்கள் அதே உலகமயமாக்கல் கொள்கையால் உண்டான வேலைகளில் இருந்து கொண்டே வேலை நேரத்தில் போடுவார்களாக இருக்கும். அமெரிக்காவைத் திட்டுவார்கள், ஆனால் அங்கு வேலை செய்ய வாய்ப்பு வந்தால் அமெரிக்க தூதரக வாசலில் தேவுடு காப்பவர்களில் அவர்களே முதன்மையாக இருப்பார்கள்.

அது சரி, அது அவர்கள் பிரச்சினை, உமக்கென்ன வந்தது என்று கேட்பவர்களுக்கு எனது பதில்:

இப்பதிவு அவர்களைக் குறைகூறி அல்ல. அவர்கள் அப்படித்தான். ஆனால் அதே சமயம் அவர்கள் பதிவுகளை மற்றவர்கள் ஜாக்கிரதையாகவே அவதானிக்க வேண்டும் என்றெடுத்துரைப்பதற்காகவே. ஏனெனில் அவர்களது அறிவுறைகளை அவர்களே நம்புவதில்லை.

இருக்கட்டும், நான் கூற நினைப்பது என்ன?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/28/2006

என் புது முகம்

எதேச்சையாக இந்த பழைய பதிவைப் பார்த்தேன். மீள்பதிவு செய்தேன்.


தர்சன் அவர்களின் தங்கை என் வேண்டுகோளுக்கிணங்கி என் படத்தை சீர்படுத்தியிருக்கிறார். தர்சனுக்கு இந்த ரிக்வெஸ்டை வைத்ததும் அவர் நான்தான் கேட்கிறேனா அல்லது வேறு யாரோவா என்று சிறு குழப்பம் போல. எனக்கு தனி மின்னஞ்சலிட்டு கேட்டு தெளிவு செய்து கொண்டார். நான் மிகவும் ரசித்தேன் என் புது முகத்தை. நீங்களும் பாருங்கள். குழந்தைகள் பயந்து கொண்டால் கொழுமோர் காய்ச்சிக் கொடுக்கவும்.

தர்சனுக்கும் அவர் தங்கைக்கும் மிக்க நன்றி. அவர் என்னைப் பேயாக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

எல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/24/2006

நான் ரசித்த ஹிந்தி சீரியல்கள் - 1

ஹம்லோக்:
சமீபத்தில் 1984-85 ல் நான் தில்லியில் வசித்து வந்த போது திடீரென ஃபோன் அடித்தது. சென்னையிலிருந்து எஸ்டிடி. என் மைத்துனன் பேசினான். "டோண்டு, எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமே" என்று ஆரம்பிததான். நான் சட்டென்று கூறினேன், இங்க பாருடா, டிவி-லே ஹம்லோக் காண்பிச்சிட்டிருக்கான். இப்போ பேச நேரம் இல்லை. உன் தங்கையுடன் பேசிக் கொள் அவள் எனக்கு விஷயத்தை பின்னால் கூறுவாள்" என்று கூறி, ஒலி வாங்கியை என் வீட்டம்மாவிடம் கொடுத்துவிட்டு சீரியலை பார்க்கச் சென்றேன். அவன் அதற்காகக் கோபித்துக் கொண்டு அடுத்த முறை சென்னை சென்றபோது ரொம்ப நேரம் (5 நிமிடங்கள்) பேசாமல் இருந்துவிட்டு பிறகுதான் பேசினான்.

இங்கே எதற்கு இதை கூறினேன் என்றால், ஹம்லோக் என்ற சீரியலை நான் எந்த அளவுக்கு பார்த்து வந்திருக்கிறேன் என்பதைக் கூறவே. வாரத்துக்கு மூன்று நாள் ஹம்லோக் காட்டப்பட்டது. அது ஒளிபரப்பாகும் நேரங்களில் தில்லி தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கும். அடுத்த நாள் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் முந்தைய நாள் காட்டப்பட்ட எபிஸோடை பற்றி எல்லோரும் காரசாரமாக விவாதம் புரிவார்கள். ஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் திரைப்பட நடிகர் அசோக் குமார் நடந்து முடிந்த பகுதியை அலசுவார். அடுத்த எபிசோடில் என்ன காட்டப் போகிறார்கள் என்பதையும் கோடி காட்டுவார். (அதே சமயம் சென்னையில் முதல் சில எபிசோடுகளில் ஜெமினி கணேசனும், பிறகு வி.எஸ்.ராகவனும் எபிசோடுக்கு முன்னால் அதில் வரப்போகும் நிகழ்ச்சிகளை பற்றி கதை சுருக்கம் அளிப்பார்கள். சீரியல் என்னவோ ஹிந்தியில்தான் வரும்).

பசேஸர் ராமுக்கு மூன்று பெண்கள், பட்கி (பெரிய சகோதரி்), மஜ்லி (நடு சகோதரி), சுட்கி (குட்டி சகோதரி), இரண்டு பிள்ளைகள், லல்லு, நன்னே. பசேஸர் ராமின் மனைவி, பாட்டி, தாத்தா (பசேஸர் ராமின் அம்மா மற்றும் அப்பா). பசேஸர் ராம் ஏற்கனவே ஒரு மனைவியை இழந்தவர். அவர் வழியில் இரண்டு பெண்கள், ஏற்கனவே மணமானவ்ர்கள். ஆனால் முதல் சில எபிசோடுகளுக்கு பிறகு காணாமல் போனவர்கள்.

மேற்கண்ட குடும்பத்தினரை சுற்றியே கதை போகிறது. பாட்டி கூட சில எபிசோடுகளுக்கு பிறகுதான் கதைக்கே வருகிறார். அதே போல வெளிநாட்டு சித்தப்பா (பசேஸர் ராமின் தம்பி), சித்தி மறறும் அவர் குழந்தைகள் ஆகியோரும் நடுவில் வந்து சேருகின்றனர். குடும்பத் தலைவிக்கு திடீரன ஒரு தம்பியையும் அவரது குடும்பத்தினரையும் வேறு கதையில் புகுத்தினர். அதாவது ராக்கி சகோதரன் (உடன்பிறவா சகோதரன்). இந்த குடும்பம் தமிழ்க் குடும்பம். அவ்வப்போது தமிழில் வேறு டயலாக் வரும். தமாஷாக இருக்கும்.

மேலே கூறியவை எல்லாம் கதையில் மிக நாசுக்காகச் சேர்க்கப்பட்டன. தில்லியில் பொருளாதார ரீதியில் கீழ் நடுத்தர குடும்பம். இருப்பது வாடகை வீடு. இந்த குடும்பத்தில் நடக்கும் தினப்படி நிகழ்ச்சிகள். அதுதான் சீரியல். ஒவ்வொரு பாத்திரத்தையும் சிற்பி செதுக்குவதுபோல நன்றாகவே செதுக்கியிருந்தனர். இன்னொரு விசேஷம், இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அதாவது, ஒவ்வொரு எபிசோடிலும் வரும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் தேதியன்றே நடை பெறுவதாகக் காட்டியிருப்பார்கள். உதாரணத்துக்கு 1985 ஜனவரி 26-ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் அன்று காலை லைவாக காட்டப்பட்ட அணிவகுப்பை காட்டி, அதை குடும்பத்தினர் பார்ப்பதுபோல அமைத்திருந்தார்கள். திடீரென பாட்டி கத்துவாள், "பார் உங்கள் தாத்தாவும் அணிவகுப்பில் போகிறார்" என்று. (அப்பாத்திரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அவரும் அந்த பரேடில் மார்ச் செய்ததாக நிகழ்ச்சி). அதே போல அந்த ஆண்டு தீபாவளியின் போது ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலும் அதே உத்தி. பல எபிசோடுகளில் தினசரி காலண்டரை ஏதாவது ஒரு ஷாட்டில் காட்டுவார்கள். அது எபிசோட் ஒளிபரப்பாகும் தேதியையே காட்டும். இதனால் என்ன ஆயிற்றென்றால், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாகப் பார்க்கும் உணர்ச்சியைத் தரும். இந்த விஷயமும் அந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

அக்காலக் கட்டத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் சுதீர் தார் அவர்களது கேலிச் சித்திரம் ஒன்று வந்தது. அதில் மீட்டிங் நடக்கும் ஹாலில் அமைப்பாளர்களைத் தவிர பார்வையாளர்கள் இல்லாமல் ஈ அடிக்கும். ஒரு அமைப்பாளர் இன்னொரு அமைப்பாளரைப் பார்த்து பல்லைக் கடிப்பார், "எந்த முட்டாப்பயபுள்ள ஹம்லோக் சமயத்துல இந்த மீட்டிங்கின் நேரத்தை வச்சான்?"

சீரியலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினைகளுக்கேற்ப பிந்தைய எபிசோடுகளை மாற்றி வடிவமைத்ததுதான். முக்கியமாக இந்த பட்கியின் பாத்திரத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லோருக்கும் நல்லது சொல்லும் இந்த பாத்திரம் தனக்கு என்று வரும்போது மட்டும் சுயநலமாக நடந்து கொள்ளும். மக்களுக்கு அந்த பாத்திரத்தின் மேல் ஒரு எரிச்சலே பிற்காலத்தில் வந்தது. அதற்கேற்ப ஒரு எபிசோடில் பக்கத்து வீட்டுக்காரி அப்பாத்திரத்தின் பலவீனங்களைத் தாக்கி, கிழி கிழி என்று கிழித்து தோரணமிடுவார். இதெல்லாம் பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினையின் பலனே.

100வது எபிசோடில் பட்கியின் திருமணம் காட்டப்பட்டது. அன்று தில்லி தெருக்களே ஈயடித்தன. கடைக்காரர்கள் கூட கடைகளைப் பூட்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்கள். அவ்வப்போது லாஹூருக்கு பெரிய மனிதர்கள் யாராவது வரும்போது வேண்டுமென்றே ஹம்லோக்கில் சுவாரசியமான நிகழ்ச்சிகளை அமிர்த்தசர் டிவியில் காண்பித்து லாஹூர் நிகழ்ச்சிகளை பிசுபிசுக்க செய்துவிடுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வேறு அவப்போது பொருமுவார்கள். அதே அரசு அதிகாரிகளில் அதற்குப் பின் வந்த "புனியாத்"தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டபோது, அவ்வாறு பொருமாமல் அவர்களும் அந்த எபிசோட்டைப் பார்த்தனர். அது பற்றி அடுத்த பதிவில் மேலும் விவரமாக.

இம்மாதிரி சீரியல்களை முழுதும் ரசித்து பார்க்க எனது ஹிந்தி அறிவு மிகவும் பயன்பட்டது. தில்லியில் இருந்த 20 வருடங்களுமே, வெளியூரில் இருக்கும் எண்ணமே வராதவகையில் கழிந்தன என்பதையும் இப்போது மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/19/2006

நண்பர்களுக்கு நன்றி

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (20.03 hrs IST) ஹிட் கவுண்டர் 99,981 காண்பிக்கிறது. இதை முடிக்கும்போது ஒரு லட்சம் தாண்டி விடும். ஹிட் கவுண்டர் போன ஆண்டு ஜூலையில் வலைப்பூவில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 17 மாதங்கள்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எனது யோம் கிப்பூர் பதிவுகள் சமயத்தில் ஒரு நாளைக்கு 1000-க்கு மேல் ஹிட்கள் இருந்தன.

இப்போது நேரம் 20.07, கவுண்டர் காண்பிப்பது 99,986. இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பதிவு போடுகிறேன். நெருப்பு நரியில் வலைப்பூவை திறந்துள்ளேன். அதிலிருந்துதான் ஹிட்கள் பார்க்கப்படுகின்றன.

ஹையா, ஹிட்கள் 1,00,001 (நேரம் 20.45hrs. IST). சோடா சாப்பீட்டு வருவதற்குள் லட்சத்தை தாண்டி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தி. நகர் மகாத்மியம்

மதுசூதனன் அவர்களது இப்பதிவில் தி.நகரைப் பற்றி வந்துள்ளது. ஆங்கிலத்தில் வந்துள்ளதை இங்கு தமிழில் தருகிறேன்.

இந்த மார்கழிப் பனியிலும் உங்களுக்கு வியர்க்கிறதா? நடைபாதையில் போக்குவரத்து நெருக்கடி? ரெயில்வே ஸ்டேஷன் ஓய்வு அறையில் உள்ள கழிப்பிட நாற்றத்தையும் மிஞ்சும் நாற்றத்தை உணர்கிறீர்களா?

மேலே உள்ள எல்லா கேள்விகளுக்கும் உங்கள் விடை ஆமாம் என்றிருந்தால், நீங்கள் தி.நகருக்கு வந்துள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவாகுக. தி.நகர் நமது பால்வெளிவீதியில் உள்ள ஒரு தீவிர ஷாப்பிங் பகுதியாகும். இங்கு ஷாப்பிங் செய்ய உங்களுக்கு தேவைப்படுவது அசாத்திய பொறுமை மற்றும் இந்த இடத்தை ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள் தெரிவு செய்வதற்கான அபார முட்டாள்தனம். இங்கு இருக்கும் எல்லா கடைகளிலும் புகுந்து சாமான்களை வாங்க முயன்றால், கி.பி. 2020-க்கு முன்னால் வெளியில் வர இயலாது.

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியதை கூறும் நோக்கத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

1.தி.நகர் எங்குள்ளது?
இந்தக் கேள்விக்கு சரியான விடை அறிந்தவர் இலர். சென்னையில் உள்ள இந்த அழகிய இடத்துக்கு மறுமுறை நீங்கள் வர எண்ணினால், கீழ்பாக்கத்து மனநிலை மருத்துவமனையில் ஜன்னலோர பெட் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். விடுமுறை பேக்கேஜ் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

2. மூன்றாம் முறையும் நான் அங்கு வந்தால்?
ஏர்வாடியில் சேது விக்கிரமுக்கு பக்கத்து தூணில் சங்கிலியுடன் கட்டப்படுவீர்கள். விடுமுறை பேக்கேஜில் சங்கிலியின் விலையும் அடக்கம்

3. ஆனால் அழகிய இடம் என்று சொன்னீர்களே? இங்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் உள்ளனரா?
ஒரு மாதிரி அப்படித்தான். இது சென்னையின் தற்கொலை முனையாகவும் கருதப்படுகிறது.

4. இங்கு ஷாப்பிங் செய்ய இயலுமா?
இங்கு செய்யக் கூடிய காரியங்கள் இரண்டேதான். ஒன்று ஷாப்பிங் மற்றது செத்துப் போதல். முந்தையது மட்டும் என்னவோ உங்கள் சாய்ஸில் வரும், பின்னது இல்லை.

5. என் வீட்டம்மா சில பட்டுப் புடவைகள் வாங்க விரும்பறாங்க. அவங்களை எங்கே அழைத்து செல்லலாம்?
அவங்களை போத்தீசுக்குள்ளே தள்ளி விட்டுட்டு எகிறி குதிச்சு எஸ்கேப் ஆயிடுங்க. அப்போத்தான் பிற்காலத்திலே சுயமரியாதையோடு வாழ முடியும்.

6. நான் ஓடாம அங்கேயே இருந்தாக்க?
பீஹார் தேர்தல்லே பங்கு பெறும் எல்லா தகுதியும் உங்க கிட்டே இருக்கு.

7. நானும் கடைக்குள்ளே போனாக்க?
உங்க பேர் அண்ணாமலைன்னு இருந்தால் வெளியில் வரும்போது நீங்க அரோஹரா ஆகிடுவீங்க.

8. அங்கே சில கடைகளிலே தங்கம் பயங்கர சீப்பாமே?
விலை மட்டுமே சீப்பா இருக்காது. ஒரு வேளை ரங்கநாதன் தெரு அண்ணாச்சி கடையை பற்றி கேக்கறீங்களா?

9. ஆமாமாம். அங்கே எப்படி போறது?
அந்தத் தெருவோட ஒரு முனையிலே நிந்துக்கோங்க. கண்ணை மூடிக்குங்க. முழிச்சுப் பாத்தா கடைக்குள்ளே நீங்க. மத்த வாடிக்கையாளர்கள் உங்களை அங்கே தள்ளிண்டே போய் சேர்த்துடுவாங்க.

10. என் வண்டியை எடுத்துட்டு போகலாமா?
வாயைக் கழுவுங்க. லாலு பிரசாத் யாதவுக்கு கூட அந்த துணிச்சல் வராது.

11. அப்படியா? அங்கே கூட்டம் அதிகமோ?
ஆமாம். சுத்தி இருக்கறவங்களை நீங்க எண்ணி முடிக்கறதுக்குள்ளே ஜுனூனை ரெண்டு தடவை ஒளிபரப்பிடலாம்.

12. ஜுனூனா? அது யார் அல்லது என்ன?
கடவுளே. தெரியாதா உங்களுக்கு ஜுனூனை பற்றி? பாத்ததில்லையா இதுவரை அதை நீங்க? அது என்னவோ பெரிய சீரியல். அதில் பேசுவாங்க மாத்தி மாத்தி மொழிபெயர்த்த தமிழிலே.

13. சரி இருக்கட்டும். தி. நகர்லே ஆண்களும் ஷாப்பிங் செய்யறாங்களா?
புத்திசாலி ஆண்கள்னா செய்ய மாட்டாங்க. கல்யாணமான ஆண்கள்தான் செய்வாங்க.

14. அங்கே நிறைய நடைபாதை கடைகள் இருக்குன்னு கேள்விப்படறேனே?
நடைபாதையா? அது எங்கே இருக்கு? ஆனா கடைங்க இருக்கு.

15. சரி தொலையட்டும். பொருட்கள் எப்படி இருக்கும்?
நிஜம்மாவே நல்லா இருக்கும். குறைஞ்ச விலையிலே எல்லா பிராண்டுகளும் கிடைக்கும். Nykee, Ribok, Adeedas, இன்னும் இப்படி பல பிராண்டுகள்.

16. ஏம்பா இதெல்லாம் போலி மாதிரி இருக்கே? ஸ்பெல்லிங் வேற தப்பு தப்பா இருக்கு!
அப்படியில்லை சார். நியூமராஜிபடி இருக்கு ஸ்பெல்லிங், அவ்ளோதான்.

17. சரி, சரி. அங்கே ஏதாவது நல்ல ஹோட்டல் இருக்கா?
இருக்கே, சரவணா பவன்.

18. ஹை! 50 ரூபா கொடுத்தா இங்கே என்ன கிடைக்கும்?
நிறைய கிடைக்குமே. பாதி தோசை, சின்ன சொப்பிலே சாம்பார், சில பொடி கற்கள்.

19. பொடி கற்களா? ஏன், ஏன், ஏன்?
என்ன சார் குழந்தை மாதிரி கேட்டுண்டு. காக்கா, பானை மற்றும் அதில தண்ணி கதை கேட்டதில்லையா நீங்க? கல்லைப் போட்டாத்தானே சாம்பர் சொப்பில் மேலே வரும்?

20. அப்ப சட்னி?
கதவு கிட்ட பெரியா பாத்திரத்துலே சட்னி இருக்கும். அதை வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு ஓடிடணும்

21. அடேடே ரொம்ப மோசம்தான் நிலைமை. ஆனா அங்க ஹாட் சிப்ஸ் கூட கிடைக்குமாமே?
ரங்கநாதான் தெருலே நுழைஞ்சா நீங்களே ஹாட் சிப்பா மாறிட போறீங்க. அப்போ தனியா எதுக்கு ஹாட் சிப்ஸ் எல்லாம்?

22. தி. நகர்லே சுற்றுப்புற சூழல் எப்படி?
அங்கே போய் நீளமா மூச்சை இழுங்க. உடனே சாவு நிச்சயம். இல்லேன்னாக்க பணம் வாபஸ்.

23. இவ்ளோ பிரச்சினைகளா அங்கே? கடைசியா ஒரு கேள்வி. தி.நகரின் சிறப்பு என்ன?
வெரைட்டிதான். அவ்ளோ கடை, அவ்ளோ வகை உடைகள், இன்ன பிற சமாசாரங்கள். வேறு எந்த முறைலே சாகாம தப்பிச்சாலும் கொழப்பத்திலேயே செத்துடுவீங்க!

நன்றி மதுசூதனன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றுவது?

டோண்டு ராகவனது இந்த மீள்பதிவுக்கு தூண்டுகோல் எஸ்.கே. ஐயாதான். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. அவர் எனது இந்தப் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம்தான் காரணம்.

தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மொழி பெயர்க்கக் கூடாது என்னும் எண்ணம் இப்போது கோலோச்சுகிறது. இக்கேள்வி என்னைப் பொருத்தவரை தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அல்லது பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பதை குறிக்கும். தமிழ் ஆங்கிலம் இரண்டும் என்னைப் பொருத்தவரை தாய்மொழி ஸ்தானத்தில் உள்ளன. ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் சிலர் கேட்கிறார்கள்.

இது ஒரு நல்ல கேள்வி. ஏன் கூடாது என்பதற்கான வாதங்களை முதலில் வைக்கிறேன்.

முதலில் ஒன்றைக் கூறி விட வேண்டும். இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த எதிர்ப்பு கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சரியே. ஆகவே அதை முதலில் பார்ப்போம்.

இவற்றில் மொழியின் நெளிவு சுளிவுகளுக்கு அதிக இடம் உண்டு. உதாரணம் ஹாரி பாட்டர் புத்தகங்கள்.

என்னைப் போன்ற மொழி பெயர்ப்பாளர்கள் தலைகீழாக நின்றாலும் அதன் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பை அவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது.

அதே போல விளம்பர வாசகங்களையும் கூறலாம். "இது என்னப் புதுக் கலர்" என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொருவராகக் கிழே விழுந்து துணிகளை அழுக்காகிக் கொள்வார்கள். அருமையான தமிழாக்கம். ஹிந்தியில் கேட்கவே வேண்டாம். அவ்வளவு அற்புதம். அதே போல "எல்லோரும் உஜாலாவுக்கு மாறிவிட்டார்கள்" என்ற வாசகமும்தான்.

தாய் மொழிக்காரர்களால்தான் இது முடியும். இங்கும் கிட்டத்தட்ட என்றுதான் கூறினேன். ஏனெனில் மேலே கூறியது எப்போதும் பொருந்தாது.

உதாரணத்துக்கு மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன் அவர்கள் ஜெர்மனில் மொழி பெயர்த்த அகிலனின் கதையை எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். (தேசிகன் என்னும் மாமனிதர்). (இதுவும் மீள்பதிவு செய்யப்பட உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் கூறுவேன்).

நிச்சயமாக ஒரு ஜெர்மானியனால் இக்கதையை மொழி பெயர்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழறிவு பெற்ற ஜெர்மானியர் கிடைப்பது அரிது. அவ்வளவுதான்.

தொழில் நுட்பங்களை உள்ளிட்டுக் கலைச் சொற்கள் மிகுந்த ஒரு கட்டுரையை மொழி பெயர்க்க மொழியறிவு மட்டும் போதாது. விஷய அறிவும் வேண்டும்.

அப்போது கூட ஒன்று கூறுவேன். மொழியறிவு மற்றும் விஷய அறிவும் சேர்ந்து அமையப் பெற்றால் தாய் மொழியில் மொழி பெயர்ப்பவர்கள் அதிகம் ஆதரிக்கப்படுவர்.

ஆனால் இங்கு விஷய அறிவுக்கு முக்கியத்துவம் அதிகம். என்னுடைய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் நான் 12 வருடம் வேலை செய்த ஐ.டி.பி.எல்லில் பிரெஞ்சுக்காரர்கள் கிடையாது. ஆகவே கம்பெனி இந்திய மொழி பெயர்ப்பாளர்களுடன் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

அதில் எனக்கு முன்னால் இருந்தவரால் ஈடு கொடுக்க முடியவில்லை நான் ஈடு கொடுத்தேன். ஏனெனில் நான் ஒரு பொறியாளன் கூட. முன்னவர் வெறுமனே பிரெஞ்சில் எம்.ஏ. அவ்வளவுதான். என் மொழிபெயர்ப்பு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது.

ஆனால் தற்சமயம் இணையத்தின் உதவியால் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பு வேலை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆகி விட்டது. ஆகவே இப்போதைய நிலையில் தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மாற்றம் செய்வது அவ்வளவாக ஆதரிக்கப்படுவதில்லை.

இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அதைச் செய்கிறோம். காரணம் என்ன? விலைதான் அது.

ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு மொழி பெயர்ப்பாளர் ஒரு இந்திய மொழி பெயர்ப்பாளரை விட பல மடங்கு பணம் அதிகம் வாங்குவார். அங்கு விலைவாசி அப்படி. பணமும் அன்னியச் செலாவணியில் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே நாங்கள் இங்கும் தேவைப் படுகிறோம்.

வீரமாமுனிவர் என்னும் மாமனிதர் இத்தாலியப் பாதிரியார். தமிழ் கற்றுக் கொண்டு விவிலிய வேதத்தை தமிழில் மொழி பெயர்த்தார். பாராட்டத் தக்க முயற்சி. ஆனாலும் கண்ணதாசன் அவர்களால் எழுதப் பெற்ற ஏசுவின் கதையைப் போல சரளமானத் தமிழில் இருந்திருக்காது.

இங்கும் கால தேச வர்தமானங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. வீரமாமுனிவர் காலத்தில் மேல் நாட்டு மொழிகள் அறிந்த தமிழர்கள் மிகக் குறைவு. ஆகவே அப்போதைக்கு அவர் மொழி பெயர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அது இப்போது பிரார்த்தனை நூல் ஆனதால் இப்போது அதை மாற்ற யாருக்கும் ஆசை வராது. இங்கு மொழியின் நெளிவு சுளிவுகளூக்கு மேலாக மற்றக் கருத்துக்கள் ஆட்சி செய்கின்றன.

இன்னும் ஒன்று கூறுவேன். நாம் எழுதுவது இந்திய ஆங்கிலம். அதில் எழுதுபவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிக்காரர்கள். ஆகவே அவர்கள் எழுதும் ஆங்கிலம் அவர்கள் தாய்மொழியால் பாதிக்கப்பட்டிருக்கும். எஸ்.கே. ஐயா எழுதிய "The world is not dark just because the cat has closed it eyes!!" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதை பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட தமிழ் மொழி தெரிந்த டோண்டு ராகவன் போன்றவர்களே சிறந்தவர்கள்.

ஆக இக்கேள்விக்கு பதில் எளிதானதல்ல. மொழி பெயர்ப்பாளர்களின் இணையத் தளங்களில் இது பற்றிய விவாதங்கள் இப்போதும் சூடு பறக்க நடந்துக் கொண்டிருக்கின்றன.

See:

http://www.proz.com/post/134603#134603

I am the Raghavan, whose posting is highlighted in the above link. Do read the other posts too in that thread.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/17/2006

புதிர்கள் புதுசு - 3

"புதிர்கள் புதிசு - 2" போட்டு பல நாளாச்சு. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, விடையளிக்கப்பட்டவைக்கு பதிலாய் சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. உலகம் முற்றும் சுற்றினாலும் இது மட்டும் ஒரு மூலையிலேயே இருக்கும்.

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> -->

3. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

4. பேசினாலே இது கலைந்து விடும். அது என்ன?

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட, அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் வேங்கை மாதிரி ஓடி விட்டார்.

7. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

8. அபீதகுசலாம்பாளின் அன்னைக்கு மூன்று பெண்கள். ஒருத்தியின் பெயர் சித்திரை, இன்னொருத்தி வைகாசி. மூன்றாமவள் பெயர் என்னவாக இருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ

"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயிற்று. வேறு காண்டக்ஸ்ட் ஏதும் இல்லாமல் கேட்டபோதே இந்த நிலை. வைதவ்யம் அடைந்த அப்பெண், அவளது பெற்றோர்களின் துயரம் ஆகியவற்றை மனம் தன்னையறியாமலேயே கற்பனை செய்யத் தொடங்கி விட்டது.

இதன் பின்புலம் புரியாதவர்களுக்காக இப்போது கடந்த புதனன்று நடந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து கூறுவேன்.

கிழக்கு பதிப்பகம் இலக்கிய மொழி பெயர்ப்பாளர்களுக்காக ஒரு கலந்துரையாடலை எல்டாம்ஸ் ரோடில் உள்ள பார்வதி மினிஹாலில் ஏற்பாடு செய்திருந்தது. இது பற்றி ஹிந்து பத்திரிகையில் அதற்கு முந்தைய நாள் அறிவிப்பு வந்தது. நம்ம பத்ரியை உடனே தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் கலந்துரையாடலுக்கு இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் பலரை எதிர்பார்ப்பதாகக் கூறினார். யோசித்தேன். நானும் இது வரை தொழில்நுட்ப எழுத்துக்களை மட்டுமே மொழி பெயர்த்து வந்திருக்கிறேன். கதைகளை தொழில் முறையில் மொழி பெயர்த்ததில்லை. போன மாதம் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் நண்பர் பால பாரதி அவர்கள் நான் ஏன் நாவல்களை மொழிபெயர்க்கக் கூடாது என்று கேட்டதற்கு அப்போதைக்கு அது ஒரு வேலை என்ற கணக்கில் என்னிடம் வராதவரை நானாகவே மெனக்கெட்டு ஒரு நாவலை மொழி பெயர்ப்பதற்கில்லை என்று கூறி விட்டிருந்தேன்.

இருப்பினும் மனதில் இது ஒரு எண்ண அலையை உருவாக்கி விட்டது, ஏன் அதை முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று. அதற்கேற்றாப்போல் அந்த சந்திப்பிற்கு முன்னமேயே Jerome K.Jerome எழுதிய "Three men in a boat, not to say of the dog" என்ற புத்தகத்தை விளையாட்டாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தேன். அதன் நாலாம் அத்தியாயம் இங்கே.

மேலும், என் மனைவியின் அத்தையின் கணவர் திருக்குறள் பரிமேலழகர் உரை சார்ந்து ஒரு ஆங்கில நூலை வெளியிட இருப்பதாகவும், அதை நான் சரிபார்த்து தட்டச்சிட வேண்டும் என்று அதிகாரபூர்வமாக வேலை கொடுத்தார். (அதற்கான முன் காசோலையை நேற்றுத்தான் அனுப்பியதாக தில்லியிலிருந்து தொலைபேசி மூலம் இப்போதுதான் தெரிவித்தார்). இந்த வேலை பற்றி இன்னொரு பதிவில்.

நான் புதன் அன்று காலை ஒன்பதரை மணியளவில் கலந்துரையாடல் நடக்கும் இடத்திற்கு செல்லும்போது ஏற்கனவே ஆரம்பமாகி இருந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பதில் இருக்கும் சில சங்கடங்களை பேச்சாளர் எடுத்துரைத்தார். அப்போதுதான் "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்னும் வாக்கியம் கூறப்பட்டது. தமிழர்களுக்கு உடனுக்குடன் பொருள் புலப்பட்டுவிடும் இந்த வாக்கியம் ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஒருவருக்காக எவ்வாறு மொழி பெயர்ப்பது. என்பதை வைத்துத்தான் பேச்சு. அதைக் கேட்ட உடனேயே என்னுள்ளே இருக்கும் மொழி பெயர்ப்பாளன் மனதுக்குள்ளேயே வேகமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். அந்த வாக்கியத்தை பதிவின் கடைசியில் தருகிறேன்.

கலந்துரையாடலுக்கு சிறப்பு விருந்தினர் ஜெயகாந்தன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி. அவர்களை நான் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஜெயகாந்தனின் புத்தகங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அங்கு வந்திருந்தார். அவருடன் பேச விருப்பமா என்ற கேள்விக்கு ஜெயகாந்தன் தேவையில்லை என்று கூறிவிட்டார். அவரைப் பொருத்தவரை தான் ஒருமுறை ஒரு கதையை எழுதிவிட்டால் அது எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்பதில் தனக்கு சுவாரசியம் இல்லை எனக் கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் இஸ்ரவேல எழுத்தாளரான Ephraim Kishon பற்றியும், அவரது ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர் Friedrich Torberg பற்றியும் என் எண்ணங்கள் எழுந்தன. அவர்களை பற்றி பேசலாம் என எண்ணியபோது ஜெயகாந்தன் அவர்கள் மேலே பேச ஆரம்பித்ததால் பிறகு கூறலாம் என்று விட்டு விட்டேன். பார்வையாளர்கள் அவர்கள் அறியாமலேயே இஸ்ரேல் சம்பந்தப்பட்ட எனது உரையிலிருந்து தப்பித்தனர். இங்கே அதை பற்றி கூறிவிடுகிறேன்.

Ephraim Kishon ஒரு ஹங்கேரிய யூத எழுத்தாளர். இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கு பிறகு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர். மத்திய ஐரோப்பாவை சேர்ந்த அவருக்கு பல ஐரோப்பிய மொழிகள் தாய் மொழி அளவுக்கு சரளமாக வரும். இஸ்ரேலுக்கு வந்ததும் ஹீப்ரூவில் எழுத ஆரம்பித்தார். அவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்படும். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்ப்பார். அந்த மொழியில் தானே எழுதியிருந்தால் எப்படியிருக்குமோ அதே மாதிரி தோர்பெர்க் மொழிபெயர்த்துள்ளார் என்று கிஷோன் அழுத்தம்திருத்தமாகக் கூறுவார். ஒரு மொழிபெயர்ப்புக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்கவே முடியாது என்பது இன்னொரு மொழிபெயர்ப்பாளனான எனக்கு தெரியும். தோர்பெர்க் மரணத்துக்கு பிறகு கிஷோனே தனது புத்தகங்களின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பை செய்தார்.

இப்போது கலந்துரையாடலுக்கு போவோமா. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நடுவில் கலாசார இடைவெளி மிகப் பெரியதுதான். அடிக்குறிப்புகள் கொடுப்பதை பலரும் விரும்பவில்லை. அது கதையின் போக்கை தேக்கிவிடும் என்று பலரும் கருதினர். அடிக்குறிப்பு எண்களை அங்கங்கே தந்துவிட்டு, விளக்கங்களை கடைசியில் கூறலாம் என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை நன்றாகத்தான் இருந்தது. தமிழர்கள், ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது என்றிருப்பவர்களுக்கு இக்குறிப்புகள் தேவையிருக்காது என்றும் கூறப்பட்டது. ஆகவே ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் டார்கெட் வாசகர்கள் யார் என்பதையும் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணமும் முன்வைக்கப்பட்டது.

நடுவில் என் செல்பேசி "அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்: என்று ஒலிக்க ஆரம்பிக்க, வெளியில் வந்து பார்த்தால் சகபதிவர் சுவனப்பிரியன் அழைத்திருக்கிறார். எதிர்பாராத போனஸ். அவரது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

தேனீர் இடைவேளை சமயத்தில் இ.பா. அவர்களுடன் சிறிது பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் எழுதிய "ஔரங்கசீப்" நாடகம் தில்லியில் மேடையேற்றப்பட்ட சமயம் அதில் ஷாஜஹானாக என் மனைவியின் அத்தையின் கணவர் (மேலே குறிப்பிடப்பட்ட திருக்குறள் வேலை தந்தவர்) நடித்ததை அவரிடம் கூறினேன். இ.பா.வும் என் அத்தையின் கணவரைத் தெரியும் என்று கூறினார்.

இடைவேளைக்கு பிறகு ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் திருமதி கௌரி நாராயணன் பேசினார்கள். பின்னவர் கல்கியின் எழுத்துக்களை மொழிபெயர்த்தவர். (அவர் பேத்தி என்று நினைக்கிறேன், தவறாயிருப்பின் யாராவது திருத்தவும்). கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டனர். ஒரு ரெஜிஸ்தரில் தத்தம் விவரங்களை பதித்தனர். நானும்தான். 12 மணி அளவில் கூட்டம் முடிந்தது.

இப்போது மேலே கூறிய "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற வாக்கியத்துக்கான எனது மொழிபெயர்ப்பு: "It should really have been an inauspicious moment, when she was married. She returned a widow to her parents, next month itself".

இதே வாக்கியத்துக்கான வேறு விதமான மொழிபெயர்ப்புகளை எதிர் நோக்குகிறேன். இந்த வாக்கியம் எந்த புத்தகத்தில் என்ன சூழ்நிலையில் வந்தது என்பது தெரியாது. கதையில் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது கதாசிரியர் இதை எழுதியிருக்கலாம். அல்லது கதையில், அந்த பாத்திரத்தின் அன்னையோ தந்தையோ மூன்றாமவருக்கு தன் மகளைப் பற்றி கூறும்போது இதை கூறியிருக்கலாம். இன்னும் வேறு சூழ்நிலைகள் இருந்திருக்கலாம். சூழ்நிலைக்கேற்ப வாக்கியங்களும் வேறுபடும்.

இந்தத் தருணத்தில் ஒரு ஹிந்தி சிறுகதை நினைவுக்கு வருகிறது. ஹிந்தி தலைப்பு: "உஸ்னே கஹா தா". அக்கதையை இரு மொழிபெயர்ப்பாளர்கள் தனித்தனி முயற்சியாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார்கள். ஒரு தலைப்பு "அவன் சொன்னான்", இன்னொரு தலைப்பு "அவள் சொன்னாள்". ஹிந்தி தலைப்பு இரு மொழிபெயர்ப்பையும் ஒத்துக் கொள்ளும். இந்த விஷயத்தை நான் தில்லியில் Indian Scientific Translators Association-னின் கருத்தரங்கில் போட்டு உடைக்க, ஒரு ஜப்பானிய மொழிபெயர்ப்பாளரும் ஒரு ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளரும் (இருவரது தாய்மொழியும் ஹிந்திதான்) இது குறித்து பத்து நிமிஷங்கள் காரசாரமாக விவாதம் செய்து குடுமிப்பிடி சண்டை செய்ய, நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஸ்ரீவாஸ்தவ் "பத்த வச்சுட்டயே பரட்டை" என்று கூறுவது போல என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆனி இரண்டாம் தேதி, 1965

ஒரு பிறப்பு சான்றிதழை ஈழத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்து கொண்டிருக்கிறேன். அதில் விண்ணப்பதாரரின் பிறந்த திகதி ஆனி இரண்டாம் தேதி 1965 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சமமான ஆங்கில தேதி தேவை. தமிழ்நாட்டில் நாங்கள் சித்திரை முதல் தேதி ஏப்ரல் 14 என்று வைத்து கொண்டுள்ளோம். அப்படியென்றால் ஆனி இரண்டாம் தேதி என்பது ஜூன 14/15 ஆக இருக்கும். ஈழத்திலும் அப்படித்தானா?

ஏன் அப்படி கேட்கிறேன் என்றால், சில ஈழ பதிவர்கள் ஜனவரியை சித்திரை என்று குறிப்பிட்டதாக ஞாபகம். எந்த பதிவர் என்பதை மறந்து விட்டேன். ஆக, ஈழத்தில் வழமை என்ன என்று யாராவது ஈழப் பதிவர்கள் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன். முக்கியமாக ஆனி இரண்டாம் தேதி 1965 ஆண்டு என்பதின் ஆங்கிலத் தேதி என்ன?

இது மிக அவசரமாக தேவைப்படும் உதவி.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/15/2006

ஈவேரா அவர்கள் சிலை விவகாரம்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

சமீபத்தில் 1961-ல்ல் திரையிடப்பட்ட "பார்த்தால் பசிதீரும்" படத்தில் கவியரசு எழுதிய இந்தப் பாடல் கூறுவதை விடவா இந்த டோண்டு ராகவன் கூறிவிட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 7

இதற்கு முந்தையப் பதிவை இங்கே பார்க்கலாம்.

நான் போன பதிவில் கூறியதை இங்கு விளக்குகிறேன். அங்கு கூறியது: "இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது."

மேலாண்மை பற்றி எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு அடிநாதம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதாவது வேலையை பங்கிட்டு தருதல். எல்லா வேலையையும் அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்பது போல தலைவனே செய்து கொண்டிருக்க முடியாது. திருவள்ளுவரும் அது பற்றி ஒரு குறள் எழுதியுள்ளார், "இதனை இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று. (குறள் சரியாக எழுதப்படாவிட்டால் தயவுசெய்து யாராவது திருத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்).

இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். அறுபதுகளின் துவக்கம் வரை காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருந்ததென்றால், மத்தியில் பொதுக் குழு, அந்தந்த மாநிலங்களுக்கு தனிக்குழு என்றிருக்கும். தமிழக காங்கிரசுக்கு காமராஜ் அவர்களது அற்புதத் தலைமை வாய்த்திருந்தது. அவரது உச்சக்கட்ட காலத்தில் அதிருப்தியினர் கோஷ்டி என்று அவ்வளவாக இல்லை. ஏனெனில் அம்மாதிரி கோஷ்டிகளை மத்தியக் குழு எப்போதுமே ஆதரித்ததில்லை. அதுவும் நேரு அவர்களிடம் அது நடக்கவே நடக்காது.

இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது 1963-ல் காமராஜ் திட்டம் என்று வந்து பல காங்கிரஸ் மந்திரிகள் கட்சி வேலைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் காமராஜர். ஆனல் அவர் பொருத்தமட்டில் ராஜினாமா அவராகவே செய்தார், ஏனெனில் திட்டத்தையே அவர் பெயரில், அவரை முன்னிருத்தி கொண்டு வந்திருந்தனர். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தில்லிக்கு சென்றார். அவர் கர்மவீரர். எங்கிருப்பினும் தனது தனித்தன்மை இழக்காமல் காரியமாற்றக்கூடியவர். ஆனால் இழப்பு என்னவோ தமிழகத்துக்குத்தான்.

அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானவை. 1964-ல் நேரு மறைந்தார். அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது காமராஜ் அவர்கள் திரைமறைவில் திறமையாகச் செயலாற்றி லால்பஹதூர் சாஸ்திரியை பிரதமராகும் பணியில் தன் பங்காற்றினார். சாஸ்திரி அவர்களும் தன் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை பொய்க்காத வண்ணம் கடமையை செய்தார். அவர் 1966 ஜனவரியில் இறந்தது நாட்டின் துர்பாக்கியமே.

இப்போது இருவர் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவர் மொரார்ஜி தேசாய் இன்னொருவர் இந்திரா காந்தி. மொரார்ஜி அவர்கள் பதவிக்கு வந்தால் தங்கள் கட்டுப்பாட்டில் அவர் இருக்க மாட்டார் என்று எண்ணியவர்களில் காமராஜும் ஒருவர். ஆகவே அவர்கள் ஆதரவு இந்திரா காந்திக்கு என்று ஆனது. அப்போது இந்திரா அவர்கள் மிகுந்த பணிவுடன் நடந்து கொண்டார். அவருக்கு மெழுகு பொம்மை என்று பெயர் உண்டு. அவரை தங்கள் கருத்துக்கேற்ப செயல்பட வைக்கலாம் என்பதே அவரை ஆதரித்த தலைவர்களின் எண்ணம். ஆனால் நடந்ததென்னவோ தலைகீழ். இந்திரா காந்தி அவர்கள் மெதுவாக காமராஜரையும் மற்றவரையும் ஒதுக்க ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக 1967-தேர்தலில் காமராஜ் அவர்கள் தோற்றது இந்திரா காந்திக்கு சாதகமாயிற்று. காமராஜ் அவர்கள் பல வகையில் இந்திரா காந்தியால் அவமானப்படுத்தப்பட்டார். 1969-ல் காங்கிரஸை இந்திரா காந்தி தன் சுயநலனுக்காக இரண்டாக உடைத்தார். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான சஞ்சீவரெட்டியின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

1966-ல் ரூபாயின் மதிப்பை குறைத்தபோதே அதை காமராஜ் எதிர்த்தவர். அதே போல பாங்குகள் நாட்டுடைமையாக்கல், மன்னர்களின் ப்ரீவி பர்ஸ் ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் இந்திரா காந்தி அவர்கள் தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே செய்தவை என்பதிலும் காமராஜ் உறுதியாக இருந்தார்.

தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அப்படியே காமராஜ் அவர்கள் வசமே இருந்தது. 1969-ல் கட்சி உடையாது இருந்திருந்தால் 1971 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, எல்லாமே இறைவன் கையில்தானே. பல ஆண்டுகள் தமிழகத்திலிருந்து விலகி இருந்த காமராஜ் அவர்களுக்கு உண்மை நிலை அவ்வளவாகத் தெரியாது போனது துரதிர்ஷ்டமே.

1971-க்கு பிறகு காமராஜ் நிலைமை இன்னும் மோசமானது. ஆனாலும் மனம் தளராது அவர் பணியாற்றினார். ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனம் வந்ததும்தான் அவர் நிஜமாகவே மனம் நொந்து போனார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அதே ஆண்டு காந்தி ஜெயந்தியன்று அவர் மறைந்தார்.

ஆகவே என்னை பொருத்தவரை 1963-ஆம் ஆண்டை ஒரு சகாப்த்தத்தின் முடிவுக்கான ஆரம்பம் என்றுதான் பார்க்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் பார்க்கீறேன். தமிழகத்தில் 1971-க்கு பிறகு காங்கிரஸ் மிகவும் தேய்ந்து போய் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது. அது இன்றைக்கும் அப்படியே உள்ளது. இதற்கு முழுபொறுப்பு இந்திரா காந்தி அவர்களின் செயல்பாடே ஆகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/12/2006

பொன்னியின் புதல்வர் - 1

சமீபத்தில் 1954-ல் கல்கியின் கடைசி தொடர்கதையான அமரதாரா முழுமையடைவதற்கு முன்னமேயே காலன் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டான். நல்லவேளையாக அவர் வைத்திருந்த கதை குறிப்புகளை வைத்து அவர் மகள் ஆனந்தி தொடர்கதையை முடித்து வைத்தார். என்னதான் அவர் முயற்சி செய்திருந்தாலும் கல்கியே எழுதியிருந்தால் போல இருக்குமா?

நேற்று கஸ்தூரி சீனுவாசன் நூலகத்திலிருந்து கல்கியின் வாழ்க்கை வரலாறாகிய "பொன்னியின் புதல்வர்" எடுத்து வந்தேன். எழுதியது சுந்தா அவர்கள். சமீபத்தில் 1974-ல் அது கல்கியில் வாராவாரம் தொடராக வந்தது. அச்சமயம் நான் சுந்தா அவர்கள் வீட்டுக்கு போய் இத்தொடர் சம்பந்தமாக பேசியது பற்றி எனது இப்பதிவில் போட்டுள்ளேன்.

சுந்தா அவர்களிடம் கி.ராஜேந்திரன் கல்கியின் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வேலையில் இறங்கினார். ரொம்ப விஸ்தாரமாகவே தகவல்கள் சேகரித்திருக்கிறார். கல்கி அவர்கள் தன் வாழ்நாளில் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நோட்டு புத்தகங்கள் போட்டுக் கொண்டு விவரங்கள் சேகரித்திருக்கிறார். கல்கி எழுதிய அத்தனை புத்தகங்களையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறார். அவருடைய சமகாலத்தவர்களை விவரமாக பேட்டி கண்டு பல அரிய தகவல்கள் சேர்த்துள்ளார். இப்போதெல்லாம் கூகளில் ஓரிரு க்ளிக்குக்ளில் விஷயம் பெறுகிறோம். அவர் இந்த நூல் எழுதிய காலத்தில் அவையெல்லாம் ஏது? ஒரு டாக்டரேட் என்ன, கல்கியை பற்றி பல விஷயங்களில் பல டாக்டரேட் பெறும் அளவுக்கு அவர் உழைத்தார்.

அவருடன் நான் மேலே கூறிய தருணத்தில் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் அவருக்கும் சிட்டி, கு.ப.ரா. மற்றும் தி.ஜானகிராமனிடம் ஏற்பட்ட விவாதங்கள் "சிறிது வெளிச்சம்" என்ற வாசகர் வட்ட வெளியீட்டு புத்தகத்தில் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு பிறகு தனது அடுத்த வீட்டுக்காரரிடம் போய் என்னை தருவிக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த மனிதரும் எனக்கு தகவல் அனுப்பி உடனே அவர் வீட்டிற்கு வரச் சொன்னார். என்னவோ ஏதோ என்று நானும் பதறி ஓடி வந்தேன். இருக்காதா பின்னே, அந்த பக்கத்து வீட்டுக்காரர் என் சொந்த பெரியப்பாவாயிற்றே. அவர் வீட்டிற்கு போனால் சுந்தா அவர்கள் முன்னறையில் அமர்ந்திருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட போது என்னிடம் சிறிது வெளிச்சம் புத்தக விவரம் கேட்டிருக்கிறார். அதாவது புத்தகப் பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் நான் வரவழைக்கப்பட்டேன். விஷயத்தை நான் மறுபடி கூற, உடனே கி.ராஜேந்திரனுக்கு ஃபோன் போட, அன்று இரவே புத்தகம் அவர் வீட்டிற்கு வந்து விட்டது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கல்கியின் வாழ்க்கை வரலாறுக்காக அவரும் கி.ராஜேந்திரனும் என்ன செலவை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருக்கிறார்கள்.

இப்போது புத்தக நாயகன் கல்கியிடம் வருவோம். சுந்தா அவர்களது புத்தகத்தை நான் ஆதாரமாக வைத்துக் கொள்ளப் போகிறேன். அப்படியே எனக்கு கல்கி சம்பந்தமாக இருக்கும் ஞாபகங்களும் உதவிக்கு வரும்.

அடுத்த பதிவில் பார்ப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/11/2006

நரகம் என்றால் என்ன?

சமீபத்தில் 1953-ல், எனக்கு ஏழு வயதாக இருந்தபோது என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் நரகம் என்றால் என்ன என்பதை புராணங்களிலிருந்து பல கதைகள் மூலம் விளக்கினான். வடமொழி அவனுக்கு தண்ணீர் பட்டபாடு. சுலோகங்களாக கூறி வேகமாக அவற்றுக்கு பொருள் கூறுவான். நரகம் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் பயமாக இருக்கும்.

அப்போதெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உற்சவ காலங்களில் கோபுர வாசலில் பல ஸ்டால்கள் போட்டிருப்பார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை. கோவிலுக்கு அருகில் தாண்டவராய முதலித் தெருவில் வீடு. திருவிழாக் காலங்களில் அந்த ஸ்டால்கள் பக்கம் சுற்றிக் கொண்டிருப்பேன். ஒரு பயாஸ்கோப் பெட்டியில் காலணா கொடுத்தால் (2 பைசாக்கள்) நரகம் பற்றிய காட்சிகள் காட்டுவார்கள். தீயில் போட்டு வாட்டுதல், எண்ணெய் கொப்பறையில் பொறித்தெடுத்தல் என்றெல்லாம் பார்க்கவே பயமாக இருக்கும்.

பல ஆண்டுகளுக்கு நரகம் என்றால் எனது எண்ணங்கள் மேலே கூறப்பட்டதையே பெரும்பாலும் சார்ந்து இருந்தன. மெதுவாக அவை மாறத் தொடங்கின. கல்லூரிக் காலங்களில் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell என்ற அமெரிக்க பெண்மணி. அவர் புத்தகங்களை வெறியுடன் தேடித் தேடி படித்திருக்கிறேன். அவர் நரகம் பற்றி கூறுவது ஏறத்தாழ கீழ்க்கண்ட முறையில் இருக்கும்.

நம் வாழ்க்கையிலேயே நாம் நரகத்தை அனுபவித்து வருகிறோம். நரகம் என்றால் துன்பங்கள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி ஜெயிப்போம் என்று எந்த நம்பிக்கையும் இல்லாது இருத்தல் என்று கூறி அதை பல மேற்கோள்கள் மூலம் விளக்கினார். அவர் கூற வந்தது கடவுள் நம்பிக்கை இருந்தாலே பெரும்பான்மையான தருணங்களில் ஜெயித்து விடலாம் என்ற உறுதி வந்து விடும் என்பதே. அப்போது நரகம் இனிமேல் இல்லை என்பதுதான் அவர் சித்தாந்தம்.

இதை நான் முதன் முறையாக அனுபவித்தது பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணக்கு பேப்பர் சமயத்தில். தொட்ட கணக்குகள் ஒன்றும் சரியாகவே வரவில்லை. பல சூத்திரங்கள் திடீரென நினைவுக்கு வராமல் போக அவற்றையெல்லாம் வேகமாக டிரைவ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நேர அளவு 3 மணிகள்தானே. கடைசி பெல் அடிக்கும்போதே தெரிந்தது பேப்பர் காலி என்று. அதே போல தேர்வில் தோல்வியுற்று ஓர் ஆண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. நிலைமை சரியாகும் என்றெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. இதுதான் நான் அனுபவித்த முதல் நரகம்.

என் மேலேயே கண்மண் தெரியாத கோபம் வந்தது. அதுவும் கணக்கில் போய் தோல்வியா என்ற எண்ணம் என்னை அறுத்தது. அப்போதுதான் குருட்டாம் போக்கில் எனது முரட்டுவைத்தியத்தை ஆரம்பித்தேன். ஆனால் அது மட்டும் போதாதே. கணக்கு இம்மாதிரி காலை வாரிவிடும் என்பதை நான் எதிர்ப்பார்க்காமல் தெனாவட்டாக இருந்திருக்கிறேன். ஆகவே அதை முதலில் சரி செய்ய என்ன செய்தேன் என்பதை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

கணக்கில் விட்டதை பிடிக்கலாம் என்ற நிலை வந்ததும் நம்பிக்கை வந்தது. கூடவே ஃபெயிலான பௌதிகம் மற்றும் ரசாயனத்தையும் படிக்கும் ஆர்வம் வந்து அதே ஆண்டு அக்டோபரில் வந்த பரீட்சை பாஸ் செய்ய முடிந்தது. கணக்கில் டிஸ்டிங்க்ஷன்.

அடுத்த நரகம் எனது கடைசி வருட பரீட்சை ரிசல்டுகள் வந்ததும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அது ஜூன் 1969. ஐந்தாம் ஆண்டு பரீட்சை ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங்களில் நான் தேறவில்லை - கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிகல் மெஷினெரி. நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைப்பு பாடத் திட்டத்தில் கடைசி 3 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் வாய்ந்தவையாகும். அதில் வரும் மதிப்பெண்களை வைத்துத்தான் எங்களுக்கு கிளாஸ் நிர்ணயம் செய்வார்கள். அதில் முக்கிய கண்டிஷன் மூன்று ஆண்டுகள் படிப்பை சரியாக 3 ஆண்டுகளில் எல்லா பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் இரண்டாம் வகுப்புதான். ஆகவே எனது முதல் வகுப்பு கனவுகள் கானல் நீராயின. ரொம்பவும் நொந்துப் போன நிலையில் இருந்தேன். அடுத்த பரீட்சை நவம்பர் மாதம்தான்.

அப்போதுதான் என் தந்தை என்னிடம் கூறினார், "பரவாயில்லை, இதற்காக ரொம்ப வருத்தப்படாதே. என்னிடம் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் க்ளாஸ் ஆரம்பிக்கப் போவதாக அங்கிருந்து கையேடு வந்திருக்கிறது. சும்மா வீட்டில் டிப்ரஸ்டாக உட்கார்ந்திருப்பதை விட பேசாமல் ஜெர்மன் க்ளாஸில் சேர்வதுதானே" என்று கேட்டார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. அது எப்படி என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்பதையும் அதில் பார்க்கலாம்.

இந்த அனுபவங்கள் எதிரில் போன ஆண்டு எனக்கு நேர்ந்த பெரிய பிரச்சினை என்னைப் பொருத்தவரை நரகம் இல்லைதான். ஏனெனில் முதலில் என்ன செய்வது என்று சற்றே மயங்கினாலும், என்னை ரொம்பநேரம் சோர்வடைய விடாது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்னை ஆட்கொண்டான். என்னென்ன செய்வது என்பதை ஒரு தந்தை குழந்தைக்கு சொல்வதுபோல எனக்கு காட்டினான். அதுவும் கடந்து போயிற்று.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் வருமா? கண்டிப்பாக வரும். ஏனெனில் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆனால் அச்சமயங்களில் என்ன செய்வது என்பதை யோசித்து நாம்தான் செயல்படவேண்டும், ஆண்டவனைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள உழைத்தால் நண்பர்களும் உற்சாகமடைந்து உதவிகள் செய்வார்கள் என்பதும் நிஜம். அதன்றி வெறுமனே அழுது கொண்டிருந்தால் நாம் இப்பதிவிலும் அதற்கு முந்தைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தபடி தவிர்க்கப்பட வேண்டிய நபர்களாகக் கருதப்பட்டுவிடும் அபாயம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/10/2006

சீரியல்கள், சங்கடங்கள்

சோப் ஆபெரா என்று செல்லமாக அழைக்கப்படும் மெகா சீரியல்கள் முதலில் அறிமுகமானது அமெரிக்காவிலேதான். ஐம்பது, அறுபது, எழுபதுகளில் பிரபலமான சீரியல்கள் I love Lucy, Dennis the menace, I love Jeannie, Bewitched, Dallas, Dynasty ஆகியவை. நான் இங்கு பேசப்போவது முழுக்கவும் அவற்றைப் பற்றியல்ல. அவற்றை எடுக்கும்போது எழுந்த சங்கடங்களைப் பற்றியே. உதாரணத்துக்கு Dennis the menace. இது சுமார் மூன்று வயதுடைய சிறுவனின் விஷமங்களை விவரிக்கும். ஆனால் இதெல்லாம் கார்ட்டூன்களில் மட்டுமே சாத்தியமாயிற்று. டைரக்டர் சொல்வதை சரியாக உள்வாங்கி பல எபிஸோட்கள் ஷூட் செய்ய தேவையான குழந்தையைக் கண்டுபிடிப்பது கடினமே. ஆகவே ஒரு வேலை செய்தார்கள். டென்னிசுக்கு வயது 11 என்று கதையை மாற்றினார்கள்.

இது முதல் மாடிஃபிகேஷன். இந்த சீரியல்கள் எல்லா எபிஸோடுகளிலும் வருபவர்கள், டென்னிஸ், அவன் தந்தை, தாய், பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டர் வில்ஸன் அவர் மனைவி மார்த்தா வில்சன் ஆகியோரே. பிற முக்கிய பாத்திரங்கள் ஜோயீ என்ற சிறுவன், டென்னிசுக்கு சிஷ்யன், மார்க்கரெட் என்னும் சிறுமி வயதுக்கு மீறிய அறிவு மற்றும் படிப்புடன், அவ்வப்போது வரும் ஜீனா என்னும் இத்தாலியச் சிறுமி, இவளை மட்டும் டென்னிசுக்கு பிடிக்கும். மார்க்கரெட் போன்ற இதர சிறுமிகள் அவனுக்கு பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்னால் ஐம்பதுகளில் வந்த இந்த சீரியலின் எபிசோட்களை மறுபடி டெலிகாஸ்ட் செய்தார்கள், ஹிந்தி டப்பிங்கில். திடீரென் வில்சன் பாத்திரத்தில் வந்த நடிகர் ஷூட்டிங்கிற்கு வரமுடியாமல் போக, வில்சன் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவர் அண்ணா வேலை விஷயமாக வில்சன் வீட்டுக்கு வந்து தங்குவதாகவும் கதைகள் எடுக்கப்பட்டன. திடீரென அவ்ரும் ஒரு எபிசோடில் இல்லாமல் போக உள்ளூர் மளிகைக் கடைக்காரர் பாத்திரத்தை இந்த பாத்திரத்துக்காக ஒப்பேற்றினர்.

நான் கூற வருவது என்னவென்றால், இம்மாதிரி நடிக நடிகையர் மாற்றம் வரும்போதெல்லாம் மெனக்கெட்டு சிரமம் எடுத்து கதையை எல்லாம் மாற்றினர்.

அதே போலத்தான் ஹிந்தி சீரியல்களிலும். எண்பதுகளில் வந்த "யே ஜோ ஹை ஜிந்தகி" என்ற சீரியலில் முக்கிய நடிகர் ஷாஃபி இனாம்தார் சீரியலை விட்டு சிலகாலத்துக்கு விலக, அந்த பாத்திரம் வெளிதேசத்துக்கு போனதாக கதையை மாற்றி ஒப்பேற்றினர். இன்னொரு சீரியல் "டைகர்". கதாநாயக நடிகரை மாற்ற கையாளப்பட்ட உத்தி தமாஷானது. அதாவது ஒரு விபத்தில் கதாநாயகனின் முகம் சிதைக்கப்பட, பிளாஸ்டிக் சர்ஜெரி செய்கிறார்கள். இப்போது இருக்கும் முகம் புது கதாநாயக நடிகருடையது.

இன்னும் அதிகக் கொடுமை "ஒரு பெண்ணின் கதை" என்னும் சீரியல். அதில் நடித்த நடிகர் பாரி வெங்கட் பஸ் விபத்தில் இறந்துவிட (சீரியலில் அல்ல, நிஜமாகவே), கதையை மேலே எப்படி எடுத்து செல்வது என்ற குழப்பம். சீரியலில் பாத்திரமும் விபத்தில் இறப்பது போலவே காட்டிவிடுகின்றனர். ஆனால் மனைவியாக நடித்த பாத்திரத்துக்கு புத்தி பிசகி விடுகிறதாம். துக்கம் விசாரிக்க வந்தவர்களில் ஒருவரது முகம் அவர் கண்ணுக்கு மட்டும் பாரி வெங்கட்டின் உருவமாகத் தெரிகிறதாம். ஆகவே கணவர் இறக்கவில்லை என்று கூறி அவருடன் வாழப்போவதாக பிடிவாதம் பிடித்து, மருத்துவ ஆலோசனைப்படி மற்றவரும் இந்த நாடகத்துக்கு ஒத்துக் கொண்டு,... இப்படி போகிறது கதை. அதற்குமேல் அந்த சீரியலை பார்க்க பொறுமையில்லை எனக்கு.

ஆனால் இப்போது? சர்வசாதாரணமாக திடீரென ஒரு நாள் பழைய நடிகரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டிவிட்டு மார்ஃபிங் செய்து புது நடிகரின் முகமாகக் காட்டுகின்றனர். கீழே ஒரு அறிவிப்பு: "இவருக்கு பதில் அவர்". தீர்ந்தது பிரச்சினை.

எனக்கென்னவோ இதுவே சரியான, நேர்மையான உத்தியாகத் தெரிகிறது. இம்மாதிரி பல சீரியல்களில் செய்து விட்டார்கள், செய்தும் வருகிறார்கள். உதாரணத்துக்கு: வரம், மலர்கள் (நடிகை வைஷ்ணவியின் மரணத்தால்), அலைகள், கோலங்கள், பல்லாங்குழி, முதலியன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/09/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6

இதற்கு முந்தைய பதிவு இதோ.

போன பதிவுகளில் சுட்டிய சோ அவர்கள் புத்தகத்தில் குமரி அனந்தன் அவர்கள் எழுதியதிலிருந்து சில தகவல்கள்.

காமராஜ் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் அளித்த MDT 2727 என்ற கார் பல ஆண்டு காலம் உபயோகத்தில் இருந்து வந்திருக்கிறது. மிகுந்த வற்புறுத்தல் பேரிலேயே இக்காரை புது காருக்காக மாற்றிக் கொண்டார். அதன் உரிம எண் கூட 2727தான், ஆனால் வேறு வரிசையில்.

(இந்த சந்தர்ப்பத்தில் சில தலைவர்களின் சில எண்களுக்கான விருப்பத்தைப் பற்றி பல சுவையான செய்திகளை நான், டோண்டு ராகவன், படித்திருக்கிறேன். உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு "ஏழு" ராசியான எண். அவர் கார் நம்பர்கள் எல்லாம் 4777 என்று கூட்டு எண் 7 ஆக இருக்கும். என்ன புது வரிசை பதிவுகள் வந்தாலும் அந்த எண் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும். அவருக்காகவே மராட்டிய மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரை வாங்கினார்கள். அதன் எண் MGR 4777).

மறுபடியும் காமராஜ். 1967-ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவருக்கு முழங்காலில் அடிபட்டது. ஆகவே இனிமேல் வர இருக்கும் தேர்தல்களில் பயன் படுத்துவதற்கு அவருக்காக பல வசதிகளுடன் கூடிய ஒரு வேன் லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு முறை கூட ஏற அவர் மறுத்து விட்டார்.

குமரி அனந்தன் அவர்களது வேதனை நிரம்பிய வரிகள்: "வேனில் ஏறித் தேர்தல் பயணம் செய்வார் என்று எண்ணினோம். ஆனால் அவர் வான் ஏறி தேவருலகு சென்று விட்டார்."

குமரி அனந்தன் அவர்கள் மேலும் கூறுகிறார்.

காமராஜ் அவர்கள் போன இடத்தில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த அமர்ந்து விட்ட பிறகும் அந்த வருவாய்த்துறை அதிகாரி, திரு. ராமதாஸ் என்பவர் நின்று கொண்டேயிருந்தார். அவரும் அமர்ந்தால்தான் தானும் சாப்பிட உட்காரப் போவதாக காமராஜ் அவர்கள் கண்டிப்பாகக் கூறிவிட, அவ்வாறே நடந்தது. இதன் பின்புலன் என்னவென்றால் அந்த ராமதாஸ் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவரை சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என தலைவர் காமராஜ் நினைத்து விட்டார்.

கும்பகோணத்தில் சக்கரவர்த்தி ஐயங்கார் பழைய தியாகி. காமராஜை சந்தித்தால் பாசத்தோடு வேர்க் கடலையை ஒரு காகிதத்தில் சுற்றிய பொட்டலமாகக் கொடுப்பார். காமராஜரும் அதை வாங்கிச் சுவைத்து மிக அன்னியோன்யமாக உரையாடுவார்.

அப்பக்கத்தில் சுற்றுப் பயணம் செய்யும் போது மாலைக்குப் பதிலாகவோ, பிற வகையிலோ தொண்டர்கள் அன்போடு அளிக்கும் பணத்தை வாங்கி சக்கரவர்த்தி ஐயங்காரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறுவார்.

மறுபடியும் டோண்டு ராகவன்.

இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/05/2006

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடிகள்

நான் கூறவருவது நாயக நாயகி ஜோடி அல்ல. வெற்றி நடிகர்கள் இருவரது ஜோடி. இது ஒரு மீள்பதிவு. கமலுக்கு ஷெவாலியே விருது வருவதாக பேச்சு எழுந்துள்ள இந்தத் தருணத்தில் இந்தப் பதிவும் ரெலெவண்ட் ஆகிறது.

சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் ஏதாவது இரு நடிகர்கள் நன்குப் பேசப் படுவார்கள்.

பி. யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர்.

முன்னவர் பின்னவரை விட அதிகத் திறமை வாய்ந்த நடிகர். இருந்தாலும் பின்னவருக்கு அதிக முகராசி (charisma?).

அடுத்த இருவர் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியார். அதே மேலே கூறப்பட்ட முன்னவர் பின்னவர் குணதிசயங்கள்.

இப்போது கமல் மற்றும் ரஜினி.

இப்போதைய நிலை சற்றே வித்தியாசமானது. ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு- கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும்.

சிவாஜியின் விஷயத்தில் எம்ஜியார் மாதிரித் தன்னை நல்லவனாக காண்பித்து கொள்ளச் செய்த முயற்சிகள் அனேகமாகச் சொதப்பலாயின. உதாரணம்: உத்தமன். ஆ கலே லக் ஜாவில் சஷி கபூர் மாதிரி லைட்டாக வர இயலவில்லை. ரொம்பவே பொறுமையைச் சோதித்தார். சிவாஜி தன் இயல்பிலிருந்துக் கொண்டு நடித்தப் படங்களே இன்றும் பேசப்படுகின்றன. உதாரணத்துக்கு கப்பலோட்டிய தமிழனில் அப்பாத்திரமாகவே மாறினீர்களா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு, இல்லை, அவ்வாறு நடிக்கத்தான் செய்தேன் என்று உண்மையாக கூறினார். திரும்பிப் பார் என்னும் படத்தில் முழு வில்லனாகவே வருவார். அதற்கெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.

அதே மாதிரி கமலும் ரஜினியைப் போல் ஸ்டைல் காண்பிக்க முயன்றால் தன் அடையாளத்தை இழப்பது நிச்சயம். அவ்வாறு செய்ய அவர் முயற்சிப்பதில்லை என்பது மனத்துக்கு ஆறுதலைத் தருகிறது. ரஜனி கூட கமல் மாதிரி இப்போதைய நிலையில் எல்லாவித ரோல்களையும் எடுக்க முயன்றால் தோல்விதான் கிடைக்கும். அவருக்கு இருக்கும் இமேஜை விட்டு வெளியே வர இயலாத நிலையிலேயே அவர் இருக்கிறார்.

இந்த இரட்டையர் ஜோடி எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதில்லை. 1977-ல் எம்ஜியார் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற பின்புதான் கமல் ரஜினி ஜோடி வந்தது. இருவருமே இன்னும் களத்தில் இருப்பதால் இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/04/2006

செந்தழல் ரவிக்கு கங்க்ராட்ஸ்

இவ்வார குங்குமம் இதழில் (10.12.2006 தேதியிட்டது, Page 106) நம்ம சகபதிவர் செந்தழல் ரவி அவர்கள் செய்து வரும் பலருக்கு வேலை பெற்றுத் தரும் சேவையை பற்றி வந்துள்ளது. பல பதிவர்கள் இம்மாதிரி சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது. அவருடன் இன்று காலை தொலைபேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பெங்களூரில் குங்குமம் சற்றே லேட்டாக வருவதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. He was pleasantly surprised.

இப்பத்தான் சில நாட்களுக்கு முன்னால் நம்ம பழூர் கார்த்தியை பற்றி இப்பதிவு போட்டேன்.

ஓராண்டுக்கும் மேலாக ஏழை மாணவ மணிகளுக்கு உதவி செய்யும் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல் ரவி மாதிரி இருப்பவர்களால் இக்கால இளைஞர் சமுதாயம் பீடு நடை போடுவது குறித்து இந்த அறுபது வயது சக இளைஞன் டோண்டு ராகவன் மிக மகிழ்ச்சி அடைகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/26/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 5

இதன் முந்தையப் பதிவில் குறிப்பிட்டபடி சோ அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்தே தொடர்கிறேன்.

இக்கால அரசியலை நேரில் கண்டுவரும் நாம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் விரோதம் பாராட்டுவதையும் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஆறுதல் இந்த அநாகரிகப் போக்கு தமிழகத்தில் மட்டும்தான், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அவ்வளவாக இல்லை. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனால் இப்பதிவுக்குத் தேவையானது இவ்வளவுதான்.

தமிழக அரசியலில் காமராஜரும் ராஜாஜியும் இரு துருவங்கள் என்பது தெரிந்ததே. ராஜாஜி அவர்களும் சத்தியமூர்த்தி அவர்களும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். சத்தியமூர்த்தி அவர்களைத் தன் குருவாக எண்ணியவர் காமராஜர் அவர்கள். ஆக ராஜாஜிக்கும் காமராஜருக்கும் கருத்து வேற்றுமைகள் அனேகம். ஆயினும் தனிப்பட்ட முறையில் இருவருமே ஒருவரை ஒருவர் மதித்தனர் என்பதையே இப்பதிவில் வலியுறுத்த விரும்புகிறேன்.

சோ அவர்கள் இது பற்றி குறிப்பிட்டது இதுதான்.

கடுமையான மோதல்கள், அவற்றால் ஏற்பட்ட மனகசப்புகளை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சி ராஜாஜியின் அரசியல் ஞானத்தையும் அவரது அறிவையும் மனதில் நிறுத்தி காமராஜர் அவரை வெகுவாக மதித்தார். ராஜாஜி ஒரு அறிவாளி என்பதை விட அவர் ஒரு மேதாவி என்பதே பொருந்தும். அரசியல் அறிவில் அவரை மிஞ்சக் கூடியவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். நிர்வாகத் திறமையிலும் அவ்வாறே. ஆனால், அறிவாளிகளுக்கெ உரித்தானப் பிடிவாதமும் ராஜாஜியிடம் உண்டு. அவர் ஒரு போதும் தனது கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆகவே வளைந்து கொடுத்து, எதிராளியைத் தட்டி வேலைவாங்குவதில் அவர் அவ்வளவாக ஈடுபாடு செலுத்தவில்லை. ஆனால் காமராஜரோ விட்டுப் பிடித்து காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்.

ஆகவே 1971 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் பழைய காங்கிரஸும் சேர்ந்து கூட்டமைத்ததுதான் அத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமா என்பது சோ அவர்களின் ஐயம். ஆகவே இந்த நிலையிலாவது ராஜாஜியுடனான கூட்டை முறிச்சிக்கலாமே என்ற மெல்லிய எண்ணம். இதை அவர் மெதுவாக காமராஜ் அவர்களிடமே கேட்டு வைக்க, சீறி எழுந்தார் அவர். சோ அவர்களது வார்த்தைகளில்:

"காமராஜின் பெரிய மனது திறந்தது. காமராஜ் என்ற அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டு நின்ற காமராஜ் என்ற மனிதர் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பெருந்தன்மை வார்த்தைகளாக உருவெடுத்து என் முன்னே நர்த்தனமாடியது. 'தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்லெ. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?"

"இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?"

"...காமராஜின் பரந்த உள்ளம் அலைகடல் போல் அங்கு பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல் விமரிசகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித் தலை குனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து, பாவத்தைக் கழுவிக் கொண்டேன்."

1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமசரித்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:

"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

மேலும் இப்புத்தகத்திலிருந்து எடுத்து வரும் பகுதிகளில் பேசுவேன்.

சோ அவர்களது புத்தக விவரம்:
காமராஜை சந்தித்தேன்
அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
நான்காம் பதிப்பு மார்ச் 2002.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/25/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 4

முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு

இனிமேல் என்ன, மாண்ட்மொரென்ஸியை அலட்சியம் செய்து, வரைபடங்களை பிரித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம்.

வரும் சனிக்கிழமை மாலை கிங்ஸ்டனிலிருந்து புறப்படுவது என்று தீர்மானித்தோம். ஹாரிஸும் நானும் வரும் சனிக்கிழமை காலையில் புறப்பட்டு படகை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செலுத்துவது, அங்கு ஜார்ஜ் எங்களுடன் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமாயிற்று. ஜார்ஜ் சனியன்று மதியம்தான் வர முடியும். (அவன் தினமும் காலை பத்திலிருந்து பிற்பகல் நான்கு வரை ஒரு பேங்குக்கு தூங்கச் செல்வான், சனிக்கிழமை தவிர, ஏனெனில் அன்றைக்கு அவனை பிற்பகல் இரண்டு மணிக்கே எழுப்பி வெளியில் துரத்தி விடுவார்கள்).

இரவுகள் எதில் கழிப்பது? சாவடிகளிலா அல்லது கூடாரம் அடித்து வெளியில் தங்கப் போகிறோமா?
எனக்கும் ஜார்ஜுக்கும் கூடாரம் அடிக்கும் யோசனை பிடித்திருந்தது. அது ரொம்ப சவால் நிறைந்ததாகவும் விடுதலை எண்ணத்தைத் தூண்டுவதாகவும் அமையும் என்று நாங்கள் இருவரும் அபிப்பிராயப்பட்டோம்.

மேகங்கள் சூரியனின் வெப்பத்தை மறந்த நிலையில் இரவு திருடன் போல வரும். உற்சாகம் இழந்த குழந்தைகள் போல் பறவைகள் பாடுவதை நிறுத்தி கூடுகளுக்குள் சென்று புகுந்து கொள்ளும். தூரத்தில் எங்கோ ஒரு சேவல் மாலையை காலையாக எண்ணி கொக்கரொக்கோ என்று கத்திப் பார்க்கும். மற்ற சேவல்கள் அந்தக் கத்தலை அலட்சியம் செய்ய, திகைப்புடன் கக் கக் என்று கத்திக் கொண்டே அது இங்குமங்கும் ஓடும். படகு நதியில் மெதுவாகச் செல்லும். துடுப்பு ப்ளக் ப்ளக் என்று தண்ணீரில் மூழ்கி எழ்ந்திருக்கும் ஒலி மட்டும் கேட்கும்.

நதியின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் கையெழுத்து மறையும் அந்த வேளையில் பெரிய பூதங்கள் போலக் காட்சி தரும்.



பிறகு நாங்கள் படகை ஒரு வாட்டமான இடத்தில் நிறுத்தி, கரையிலிருக்கும் ஒரு மரத்துடன் கட்டுவோம். பிறகு கூடாரம் அடிப்போம். எளிமையான உணவை சமையல் செய்து அமைதியான சூழ்நிலையில் உண்போம். பிறகு ஆளுக்கு ஒரு பைப் புகைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் மிருதுவானத் தொனியில் பேசிக் கொள்வோம். அவ்வப்போது எங்கள் பேச்சுடன் படகு அசைந்து தண்ணீரில் எழுப்பும் சளக் புளக் என்ற சப்தம் கேட்கும். மரத்தின் மேலிருந்து சிறுபழங்கள் தண்ணீரில் விழுந்து "குளுகு குளுகு" என்று சப்தம் எழுப்பும். இந்த நதியும் எவ்வளவு சரித்திர நிகழ்ச்சிகளுக்கு மௌன சாட்சியாக இருந்திருக்கிறது! அது மட்டும் கதை சொல்ல ஆரம்பித்தால்....

திடீரென ஹாரிஸ் கேட்டான், "ஆமா, மழை பெஞ்சா என்ன பண்ணறது?"

இந்த ஹாரிஸிடம் இதுதான் கஷ்டம். கவிதை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பான்.

"ஏனென்று கூற முடியாத மெல்லிய அழுகை" என்றால் என்ன என்று கேட்கக் கூடியவன் அவன். அவனுக்கு கண்ணீர் வந்தால் பயல் வெங்காயம் உரிக்கிறான் என்று பொருள்.



அவனுடன் நீங்கள் கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மாலை கையெழுத்து மறையும் நேரம். நீங்கள் கூறுகிறீர்கள், "கேள் ஹாரிஸ், தூரத்தில் அந்தக் கடல் கன்னி தன் காதலனை இசை ரூபத்தில் அழைப்பதைக் கேட்கவில்லையா. அந்த உருக்கமானக் கதையைக் கேட்டுள்ளாயோ? என்று".

ஹாரிஸ் உணர்ச்சிவசப்பட்டு உங்கள் கையைப் பற்றிக் கொள்வான். "மச்சி நான் பயந்தா மாறியே ஆச்சும்மா. உனக்கு ஏதோ ஜல்ப்பு பிடிச்சிருக்கு. இப்படியே இந்த ரோட்டோரம் போய் முக்கு திரும்பினா நமக்கு வேண்டப்பட்டவனோட சாராயக் கடை இருக்கு. ஆளுக்கு ஒரு கட்டிங்க் போட்டுக்கலாம், வா. உனக்கு உடனே குணமாயிடும்" என்பான். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஹாரிஸ் "முக்குத் திரும்பினா வரும்" சாராயக் கடையைக் கண்டுபிடித்து விடுவான். அவனை நீங்கள் சொர்க்கத்தில் சந்தித்தாலும் அங்கே உங்களைப் பார்த்து, "இப்படியே இந்த ஒத்தையடிப் பாதை வழியாப் போயி முக்குத் திரும்பினா அருமையான அமிர்தக் கடை ஒண்ணு இருக்கு" என்பான்.

எது எப்படியானாலும் இம்முறை ஹாரிஸ் கூறியதும் யோசிக்கத் தகுந்ததே. மழையில் மைதானத்தில் முகாமிடுவது ரொம்ப பேஜார் பிடித்த வேலையாக்கும்.

மாலை நேரம். எல்லோரும் களைப்பாக இருக்கிறீர்கள். நல்ல மழை. படகில் இரண்டு அங்குல உயரத்துக்குத் நீர் தேங்கியுள்ளது. எல்லாம் நனைந்த நிலையில். கரையில் சுமாராகத் தண்ணிர் தேங்காத இடத்தைக் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறீர்கள். அந்த இடத்தில் கூடார சாமான்களை இறக்குகிறீர்கள். உங்கள் மூவரில் இருவர் கூடாரம் அடிக்கும் வேலையில் ஈடுபடுகிறீர்கள்.

அது நொசநொசவென்று ஈரத்துடன் இருக்கிறது. உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது தொளபுளவென்று ஆடி உங்கள் மேல் அன்புடன் கவிந்து கொள்கிறது. மழையோ ஜோ எனப் பெய்கிறது. உங்களுக்கு கோபமாக வருகிறது. மழை இல்லாதபோதே கூடாரம் எழுப்புவது சள்ளையான வேலை. மழை இருந்தால்? சொல்லவே வேண்டாம். உங்களுக்கு உதவி செய்வதற்கு பதில் இன்னொருவன் வேண்டுமென்றே உங்களை வெறுப்பேற்றுகிறான். நீங்கள் உங்கள் பக்கம் ஒரு வழியாக ஆணி அடித்து பொருத்தினால், அடுத்தவன் அப்போதுதான் தன் பக்கம் வேகமாக இழுக்க, பொருத்தியது எல்லாம் பிடுங்கிக் கொண்டு வருகிறது.

"ஏய், என்ன பண்ணறே நீ!" என்று நீங்கள் கத்துகிறீர்கள்.

"நீ என்ன பண்ணறே, அதைச் சொல்லு முதல்லே?" என்று அவன் கத்துகிறான்; "கொஞ்சம் லூஸ் விடுப்பா, மாட்டியா?"

"நீ விடுப்பா; செய்யறதெல்லாம தப்பாயிட்டு், முட்டாளே!" இது நீங்கள்.

"நீதான் அது," அவன் பதிலுக்குக் கத்துகிறான்; "கொஞ்சம் லூஸு விடுடா கம்னாட்டி!"

அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு, கூடாரத்தை சுற்றி எதிர்ப்பக்கம் போகிறீர்கள், அவனை ஒரு வழி பண்ண. அவனும் அதே ஐடியாவுடன் இருக்க, இருவரும் உறுமிக் கொண்டு கூடாரத்தை சுற்றி இரு முறை செல்கிறீர்கள்.

இதற்கிடையில் படகில் இருப்பவன் மூடும் சொல்லிக் கொள்வது போல இல்லைதான். பத்து நிமிடங்களாக விடாப்பிடியாக உலகில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறான் அவன். படகிலிருந்து தண்ணீர் இறைத்து மாளவில்லை அவனுக்கு. கூடாரத்துக்கு அருகில் வந்து இத்தனை நேரம் என்ன பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று அன்புடன் வேறு கேட்கிறான்.

ஒரு வழியாக கூடாரம் எழும்பியாயிற்று. கரையில் சாமான்களை இறக்கியாயிற்று. விறகடுப்பு ஏற்ற வழியில்லை. கெரசின் ஸ்டவ் ஏற்ற வேண்டியிருக்கிறது. இப்போது சாப்பாடு. முக்கிய உணவு மழைத் தண்ணீர்தான். பிரெட், பீஃப், ஜாம், வெண்ணை, உப்பு நீர், என்று எல்லாம் மழை மயம். ஏதோ கைவசம் புட்டி இருந்ததோ பிழைத்தீர்களோ. அதிலும் மழைநீர் புகுந்து கொள்ளும் முன்னமே வேமாக விழுங்கி வைக்கிறீர்கள். பிறகு படுக்கச் செல்கிறீர்கள். நடு இரவில் ஒரு யானை வந்து உங்கள் மார்பு மேல் அன்புடன் உட்கார்ந்து கொள்கிறது. எரிமலை வெடித்து நீங்கள் கடலுக்கடியில் செல்கிறீர்கள். சட்டென்று விழித்துப் பார்த்தால் கூடாரம் உங்கள் மேல் விழுந்து விட்டிருக்கிறது. அப்படியும் இப்படியும் குதித்து பார்த்தால் மெதுவாக உங்கள் தலை கூடாரத்தின் ஒரு ஒட்டையிலிருந்து வெளியே வருகிறது. உங்களுக்கு இரண்டடி தொலைவில் ஒரு ரௌடி நின்றிருக்கிறன். அவனை அடிக்கப் போகிறார்கள். அவனும் உங்களை அடிக்க வருகிறான். கடைசி நிமிடத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்.

"நீயா", என்று ஒரு சேரக் கத்துகிறீர்கள்.

மூன்றாவது ஆளைத் தேடுகிறீர்கள, இருவரும் சேர்ந்து. சற்று பலவீனமாகக் கத்திக் கொண்டு அவன் தலையும் வெளியே வருகிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே அவ்வாறு செய்துள்ளதசக அவன் பலமாக நம்புகிறான்.

அடுத்த நாள் காலை மூவருக்கும் பயங்கர ஜல்ப்பு. பேசக் கூட இயலவில்லை. அடித்தொண்டையில் ஒருவர் இன்னொருவரைத் திட்டுகிறீர்கள்.

ஆகவே, மழை இல்லாத நாட்களில் டெண்ட்டில் தங்குவது என்றும், மழை இரவுகளில் சத்திரங்களில் தங்குவது எனத் தீர்மானித்தோம்.

மாண்ட்மரன்ஸிக்கு இந்த முடிவு ரொம்பப் பிடித்தது. அதற்கு தனிமையின் இனிமை எல்லாம் புரியாது. ஏதாவது பூனை, எலி, அணில் ஆகியவற்றைத் துரத்துவதே அதற்கு சொர்க்கம். முதல் தடவை அது என்னிடம் வந்தபோது அதைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருந்தது. இந்தப் பாவப்பட்ட உலகில் தேவதை போன்றிருந்த இந்த நாய் எவ்வளவு காலம் வாழப் போகிறதோ என்ற சோகமான நினைவு மனதைக் கவ்வியது. கண்களில் கண்ணீர் பெருகியது.

ஆனால் அது வந்த சில நாட்களிலேயே அது ஒன்பது அணில்கள், எட்டு கோழிகள், இரண்டு சேவல்கள் ஆகியவற்றைக் கொன்றது. பக்கத்து வீட்டுப் பாட்டியம்மாவை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு மரத்தின் மேல் கிளையில் எறும்புகள் கண்ட இடங்களில் கடிக்க உட்கார வைத்து கீழே காவல் புரிந்தது. பலருக்கு தண்டம் அழுத பின்னால் இந்த நாய் அவ்வளவு சீக்கிரம் கடவுளிடம் சென்று விடாது என்றும், நமக்கெல்லாம் சமாதி கட்டாமல் அது போகாது என்றும் ஆசுவாசம் ஏற்பட்டது.

தெருக்களில் வலம் வருவது, ஒரு குழு ரௌடி நாய்களுடன் கூட்டு சேர்ந்து, குழந்தைகள், பெரியவர்கள், தபால்காரர் என்று எல்லோரையும் பாரபட்சமில்லாமல் துரத்துவது ஆகிய நித்தியக் கடமைகளை செய்து விட்டு தினமும் திருப்தியுடன் அதே தேவதை முகத்துடன் உறங்கச் செல்வதுதான் தன் ஜன்மக் கடன் என்று அது நினைத்து உள்ளது. ஆகவே சத்திரங்களில் தங்குவதை அது பலமாக ஆமோதித்தது.

இதெல்லாம் முடிவு செய்த பிறகு என்னென்ன எடுத்துச் செல்வது என்பதில் விவாதம் ஆரம்பித்தது. ஹாரிஸ் சற்று நேரம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என்று அபிப்பிராயப்பட்டான். அதே தெருவில் முக்கு திரும்பினால் ஒரு கட்டிங்க் கடை புதிதாக வந்திருப்பதாக அவன் சித்தப்பா பையன் கூறியதாகக் கூறினான்.



ஜார்ஜும் தனக்கு ரொம்ப தாகம் எடுப்பதாகக் கூறினான். (ஜார்ஜுக்கு தாகம் இல்லாத நேரத்தை இதுவரை யாரும் கண்டிலர்); எனக்கும் சற்று ஏதேனும் அருந்தினால் தேவலை போல இருந்தது. ஆகவே எல்லோரும் தொப்பியை தலையில் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பினோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/24/2006

இந்த ஹைப்பர்லிங்க் மீள்பதிவுக்கு இட்லி வடைதான் பொறுப்பு

இட்லி வடையின் இப்பதிவைப் பார்த்ததும் எனது பழைய ஹைப்பர்லிங்க் பதிவு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் "ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே" என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் "நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ "மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்" என்றார்.



அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான். இது பற்றி மகாபாரதத்தில் அஞாதவாசம் துவங்கும் முன்னால் தௌம்ய முனிவர் யுதிஷ்டிரருக்கு விஸ்தாரமாகவே அறிவுரை கூறுகிறார். அது பற்றி பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/22/2006

சிக்கன் 65 எப்படி தயாரிப்பது?

எல்லோரும் அவரவர் சக்திக்கேற்ப சமையல் குறிப்புகள் தரும்போது நான் மட்டும் பின் வாங்கலாமா. அதான் ஏற்கனவே ஒரு குறிப்பு கொடுத்தாகி விட்டதே. அதை முன்னூட்டக் கயமை செய்து முன்னே தள்ளிக் கொண்டு வருவதுதான் நான் செய்யப் போவது. அதற்கு முன்னால் எனக்கு சமையல் கலையை சொல்லிக் கொடுத்த திரு. W:P:K: ஐயங்காருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். சமீபத்தில் 1968-ல் எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.

முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.

இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.

மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயைழும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.

அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.

எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.

இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.

இப்போது இப்பதிவுக்குரிய சமையல் குறிப்புக்குப் போவோமா. காலம் சென்ர அந்த ஐயங்கார் ஸ்வாமியின் ஆத்மா என்னை மன்னிக்கட்டும்.

எலிய முறையில் சிக்கன் 65 செய்வது பற்றிய இப்பதிவுதான் எனது இந்த இடுகைக்கு உந்துதல் அளித்தது.

சிக்கன் 65 செய்ய இயற்கையான், எளிய வழியை இப்போது இந்த 60 வயது இளைஞன் டோண்டு ராகவன் கூறுவான்.

1. குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

2. 7 கோழிகளாவது பிடித்துக் கொள்ளவும்.

3. ஒவ்வொரு கோழி அடியிலும் 9-10 முட்டைகளுக்கு குறைவில்லாமல் வைக்கவும்.

4. கோழிகளை இடம் மாற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.

5. சிக்கன் 65 வரும்.

6. மறுபடியும் குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

7. பழைய ஏழு கோழிகளையே வைத்துக் கொள்ளவும். ஏதாவது கோழி ஆட்சேபம் தெரிவித்தால் அதை எழுத்து ரூபத்தில் தரச் சொல்லவும்.

8. ஆட்சேபம் செய்த கோழிகளுக்கு சமமான எண்ணிக்கையில் மாற்றுக் கோழிகளை கூப்பிட்டுக் கொள்ளவும்.

9. ஆட்சேபம் செய்த கோழிகளை வைத்துக் குழம்பு செய்யவும்.

10. ஒவ்வொரு கோழி அடியிலும் 9-10 முட்டைகளுக்கு குறைவில்லாமல் வைக்கவும்.

11. கோழிகளை இடம் மாற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.

12. அடுத்த பேட்ச் சிக்கன் 65 வரும்.

மேலும் சிக்கன் 65 பேட்சுகள் எவ்வாறு செய்வது என்பதற்கு வழிமுறைகள் 6 முதல் 12 வரை பார்க்கவும். எவ்வளவு பேட்சுகள் தேவையோ அவ்வளவு முறை பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/21/2006

பீட்டா பிளாக்கர் செய்யும் சொதப்பல்கள்

பஜ்ஜி என்னும் பதிவாளர் இட்ட இந்தப் பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது. அவர் எனது பதிவு ஒன்றில் பின்னூட்டமிட முயன்றிருக்கிறார். அவர் பீட்டா பிளாக்கரில் தன் வலைப்பூவைத் திறந்திருக்கிறார் போல. அவரால் என் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை.

அது சம்பந்தமாக எனது இப்பதிவில் நடந்த விஷயங்கள்:

பஜ்ஜி என்பவர் போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுக்கிறது. ஆகவே கீழே அதை ஒட்டுகிறேன்.

"Bajji has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":
ஒங்களைத் தவிர நீங்க ஏன் வேறு யாரையுமே போட்டோவோட பொருத்தி அடையாளம் காட்டல்லே?
ஹமீத் அப்துல்லா தான் எங்கே இருக்காருங்கறதை சொன்ன பிறகு தோணிய கேள்வி இது.
பஜ்ஜி
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.

Posted by Bajji to Dondus dos and donts at 11/21/2006 09:26:58 AM
# எழுதியவர்: dondu(#4800161) : November 21, 2006 9:46 AM

--------------------------------------------------------------------------------

மறுபடியும் பஜ்ஜி அவர்களின் பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுத்து விட்டது. ஆனால் அது எனது ஜிமெயிலுக்கு என்னவோ வந்து விட்டது.

பீட்டா பிளாக்கர்கள் சாதா பிளாக்கர்களுக்கு பின்னூட்டம் இட முடியாதா? இது பற்றி மற்ற வலைப்பதிவாளர்கள் கருத்து என்ன?

Bajji(#07096154083685964097) has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":

Thanks Dondu. As soon as I tried to publish my last comment, I got an error message. I am a beta blogger. Perhaps this involves a problem of interfacing.

Perhaps this time I succeed?

Bajji
http://bajjispeaks.blogspot.com/

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.
# எழுதியவர்: dondu(#4800161) : November 21, 2006 11:20


இம்முறையும் பஜ்ஜி அவர்கள் வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். என்னவாக இருக்கும்?

பை தி வே சில நாட்களுக்கு முன்னால் கட்டபொம்மன் என்பவர் எனது இப்பதிவில் போட்டப் பின்னூட்டத்தையும் ஏற்றாலும் பப்ளிஷ் செய்ய ஒயலவில்லை. அது சம்பந்தமாக நான் அங்கு குறிப்பிட்டது:

கட்டபொம்மன் போட்ட கமெண்டை என்ன செய்தாலும் பப்ளிஷ் செய்ய இயலவில்லை. ஆகவே அப்படியே நகலெடுத்துப் போடுகிறேன். நன்றி கட்டபொம்மன்.

கட்டபொம்மன் has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4":

My opinions generally differ from Cho's. Yet I agree he is quite honest journalist. This cannot be said of others.

His writings are pungent but sincere. His views about Kamaraj are one of the few things I share with him. Difficult to believe that a person like Kamaraj was Tamil Nadu's chief minister.

Kattabomman

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.
# எழுதியவர்: dondu(#4800161) : November 18, 2006 5:01 PM


அன்புடன்,
டோண்டு ராகவன்

11/20/2006

புதிர்கள் புதுசு - 2

"புதிர்கள் புதிசு" போட்டு அஞ்சு நாளாச்சி. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். கேரி ஓவர் செய்யும்போது, குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன். என்ன கூறுகிறீர்கள்? முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. ஆடிட்டர் கோவிந்தாச்சாரியின் மனைவி லேடி டாக்டர் கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி கப்பலிலிருந்து நடுக்கடலில் அவரை வீசி எறிகிறார். ஆனால் ஆடிட்டர் கோவிந்தாச்சாரியோ திரும்பப் பறந்து வந்து கப்பலைச் சேருகிறார். என்ன நடந்தது? (அதாவது, அவர்கள் பறவை அல்ல சாமியோவ்).

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> --> --> --> --> -->

3. இதன் பொருள் என்ன?

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் ஓடி விட்டார்.

7. விடையில் மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

8. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/19/2006

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006

இன்று பாலபாரதி அவர்கள் ஆர்கனைஸ் செய்த வலைப்பதிவர் மகாநாடு எல்டாம்ஸ் சாலையில் கிழக்குப் பதிப்பகத்தின் எதிரே இருந்த பார்வதி மினிஹாலில் இனிதே நடைபெற்றது.

எனது கார் டி.டி.கே. சாலையிலிருந்து எல்டாம்ஸ் ரோடில் திரும்பும்போது மணி 4.08 ஆகி விட்டது. சற்றே தாமதம். காரிலிருந்து இறங்கி பார்வதி மினிஹாலில் நுழையும்போது உள்ளேயிருந்து பாலபாரதி வந்து வரவேற்றார். முதன் முறையாக அவரை நேரில் சந்தித்தேன். உள்ளே மா.சிவகுமார் தமிழ் வலைத்திரட்டிகளின் அடுத்த நகர்வு பற்றி தன் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தார். முகுந்த், தமிழ்மணம் காசி இன்னும் பல ஆர்வலர்கள் நமக்கு போட்டுக் கொடுத்த வசதிகளில் நாம் ப்ளாக்கிங்க் செய்கிறோம். அவ்வாறு நாம் சுலபமாகச் செய்யும்போது வலைப்பதிவருக்கும் சில கடமைகள் உண்டு என்பதை அவர் தனக்கே உரித்தான மிருதுவான தொனியில் கூறினார். அவருக்குப் பின் பேசிய பாலபாரதி அவர்கள் தமிழ்மணத்துக்குள் போய் ஒரு குறிப்பிட்டப் பதிவரை சர்ச் செய்ய அவ்வளவாக வசதிப்படவில்லை என்று கூறினார். அப்படி செய்ய வேண்டுமானால் கூகளைத்தான் நாட வேண்டியுள்ளது என்றும் கூறினார். பூங்கா மகத்தான சேவை செய்வதாகவும் கூறினார்.

சமீபத்தில் டைடல் பார்க்கில் பொது வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியவர்களில் ஒருவரான விக்னேஷும் வந்திருந்தார். மா.சிவகுமார் அவர்கள் தமிழ்மணம் மூல கோட் ஓபன் சோர்ஸாக இருந்தால் ஏதேனும் செய்ய இயலும் என அபிப்பிராயப்பட்டார். அவர், விக்னேஷ், இன்னும் சிலர் சேர்ந்த ஒரு தொழில்நுட்பக் கமிட்டி அமைக்கப்பட ஒரு ஆலோசனை எழுந்தது. அது பற்றி மா.சிவகுமார் மேலே கூறுவது பொருத்தமாக இருக்கும். இராம.கி. ஐயா ஆடியோ மற்றும் வீடியோ ப்ளாக்கிங் செய்வது பற்றியும் கூறினார்.

மிகவும் மனதை கனக்கச் செய்தவர் ஸ்ரீலங்கா கிளிநொச்சியிலிருந்து வந்த அகிலன் என்னும் பதிவர். அவரும் அவருடன் கூட வந்த இன்னொரு பதிவர் நிலவனும்தான் கிளிநொச்சியில் பதிவர்கள் என்றும் அவர்களும் இப்போது சென்னைக்கு வந்து விட்டதாகவும் கூறினார். அவர் குண்டு வீச்சுகளைப பற்றிக் கூறும்போது எல்லோருமே உறைந்து போனோம். அதுவும் அனாதைக் குழந்தைகள் குண்டுவீச்சுகளுக்கு பலியானது எல்லார் மனத்தையும் உருக்கி விட்டது. நாமெல்லாம் தமிழ்நாட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கதைத்துக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கையின் எல்லா கடுமைகளையும் இலங்கைவாழ் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அகிலன் அங்கு ஒரு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தார். ஆனால் பார்க்க ஒரு பள்ளி மாணவன் ரேஞ்சில் இளமையாக இருக்கிறார்.

சிவகுமார் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னும் சிலர் வந்து சேர்ந்தனர். நான் உள்ளே நுழைந்த போது இருந்தவர்கள் மா.சிவகுமார், இராம.கி. ஐயா, மரபூர் சந்திரசேகர், லக்கிலுக், முத்து தமிழினி, சிமுலேஷன், எஸ்.கே. ஐயா, வரவனையான், வினையூக்கி, ஓகை, ஜயகமல், சரவணன், வி தி பீபிள், அருள்குமார், முகம்மது ரஃபி, பிரியன், தமிழ்நதி ஆகியோர். எனக்குப் பிறகு வந்தவர்கள் ஜோசஃப் சார், சிவஞானம்ஜி, பொன்ஸ், ரோசா வசந்த் ஆகியோர்.

முதல் பேப்பர் படித்து முடிந்ததும் எல்லோருக்கும் தேனீர் மற்றும் பிஸ்கட்டுகள் தரப்பட்டன. சற்று நேரம் கழித்து வலைப்பூவில் சாதீயம் பற்றிப் பேச பால பாரதி எழுந்தார். அவர் சுருக்கமாக ஒரு உரை நிகழ்த்தினார். வலைப்பூவில் ஏன் சாதீயம் பேச வேண்டும், அதனால் ஆகப்போவதென்ன என்பதுதான் கேள்வி. ரோசா வசந்த் அவர்கள் முதலில் இதை பற்றி விவாதித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார். அவர் கருத்துப்படி இது சம்பந்தமான விவாதங்கள் வெகு சீக்கிரம் சூடு பிடிக்கக் கூடும் என்று அஞ்சினார். அவர் கூறுவதும் நியாயமாகப்பட்டது. அது பற்றி ரொம்பப் பேசவில்லை. மேலே இது பற்றி மற்றவர்களும் எழுதுவார்கள் என நம்புகிறேன்.

இப்பதிவர் சந்திப்பு நடக்கும்போதே பொன்ஸ் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாமக்கல் சிபி அவர்கள் ஏற்கனவே இட்லி வடை பதிவில் படங்கள் வந்து விட்டன என்று கூறினார். இட்லிவடை அனுமதியை எதிர்பார்த்து அவரால் எடுக்கப்பட்ட படங்களையும் இப்பதிவில் ஏற்றுகிறேன். அனுமதி கேட்டு அவருக்கு பின்னூட்டம் இட்டுள்ளேன். அவர் அனுமதி ம்றுக்கும் பட்சத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவை இப்பதிவிலிருந்து நீக்கப்படும்.

பல ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு படைப்புகளை, முக்கியமாக காப்புரிமை இல்லாத பழைய நூல்களை தமிழில் மொழிபெயர்க்க இயலுமா என என்னிடம் பாலபாரதி அவர்கள் கேட்டபோது, நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன், யாராவது வேலையாக எனக்கு இதை அளிக்காவிட்டால் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டேன. நானாகவே எனது பதிவில் 3 men in a boat புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினேன். ஆனால் வேலை ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற ப்ரொஃபஷனல்களிடம் இதுதான் பிரச்சினை. வேலை என்று வந்து, டெட்லைன் என்று வாடிக்கையாளர் தலைமேல் உட்கார்ந்தால்தான் வேலையே நகரும்.

மாலை 6.40 மணி அளவில் சந்திப்பு முடிவடையும் சமிஞைகள் வர நான் செல்பேசியில் என் காரை உடனே வரச் சொல்லிக் கூப்பிட்டேன். வண்டி வந்ததும் எல்லோரிடமும் விடை பெற்று சென்றேன்.

சந்திப்பை வெற்றிகரமாக நடாத்திய பாலபாரதிக்கும் மற்றவர்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிறகு சேர்க்கப்பட்டது: சந்திப்பை ஏற்பாடு செய்த பாலபாரதி அவர்கள் தன் பின்னூட்டத்தில் கூறியிருப்பதுவும் நியாயமே. அவர் கேட்டுக் கொண்டபடி படங்களை நீக்குகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்போது பாலபாரதி அவர்கள் அனுப்பியுள்ள படத்தை அவர் அனுமதியுடன் போடுகிறேன்.



படத்தில் இருப்பவர்கள்: டோண்டு ராகவன் (உட்கார்ந்திருப்பவர்களில் நடுவில, கையில் புத்தகத்துடன்), ஓகை, பாலபாரதி, எஸ்.கே., வி தி பீபபிள், முகம்மது ரஃபி, மரவண்டு கணேஷ், வினையூக்கி, மா.சிவகுமார், சிவஞானம்ஜி, முத்து தமிழினி, அகிலன், சீனு மற்றவர்கள் (பெயர் தெரியவில்லை). பெயர்கள் ஒரு வரிசையில் இல்லை. குறிப்பாக அடையாளம் காட்டப்பட்டவர் டோண்டு ராகவன் மட்டுமே.

11/15/2006

புதிர்கள் புதுசு

புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாச்சு. என்ன கூறுகிறீர்கள்? இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. கோவிந்தாச்சாரியின் மனைவி கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி நடுக்கடலில் அவரை எறிகிறார். ஆனால் கோவிந்தாச்சாரி திரும்பப் பறந்து வந்து கப்பலை சேருகிறார். என்ன நடந்தது?

2. சிறுவன் கிட்டுவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒருவரே நாற்காலியுடன் சேர்த்து கட்டுகிறார். ஆனாலும் கிட்டு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை.

3. நெருப்புக்குள் ஓடியவன் பிழைத்தான். நெருப்பில்லாத இடத்தில் இருந்தவன் இறந்தான், ஆனால் நெருப்பால் அல்ல.

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம்

6. பெட்டியில் பத்து வெள்ளை சாக்ஸுகளும் பத்து கறுப்பு சாக்ஸுக்களும் உள்ளன. கும்மிருட்டில் இருக்கிறீர்கள். விளக்கு கிடையாது. வெளியே செல்ல வேண்டும் எவ்வளவு குறைந்த பட்ச சாக்ஸுகள் எடுத்தால் ஒரு ஜோடி நிச்சயம்?

7. தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்த்து சென்னையில் இறந்தவரை என்னவென்று அழைப்பீர்கள்?

8. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்தால் இருபது ஆகிறது என்று உப்பிலி கூற ஆசிரியர் ரங்காராவ் அவனை பெஞ்சு மேல் ஏற்றுகிறார். ஆனால் உப்பிலி கூறியது சரியே.

9. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுற்றி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சியை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது?

10. மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

விடை கிடைக்காத புதிர்களை அடுத்தப் பதிவுக்கு கேரி ஓவர் செய்து, சில புதிர்களையும் புதிதாகச் சேர்த்துள்ளேன். எல்லா புதிர்களுக்கும் விடைகளை அங்கேயே அளிக்கவும். இப்பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன்.

11/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4

இதன் முந்தையப் பதிவு இங்கே.

காமராஜ் அவர்களைப் பற்றி மேலே பதிவுகள் போட ஏதுவாக நூலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நான் கைதவறுதலாக என் வீட்டில் எங்கோ வைத்திருந்த “காமராஜை சந்தித்தேன்” என்னும் புத்தகம் – சோ அவர்கள் எழுதியது – கைக்குக் கிட்டியது. இது போதுமே அடுத்த சில பதிவுகள் போட, ஆகவே இப்போதே இந்த வேலையை தொடர்கிறேன்.

சோ அவர்கள் காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். அவரைப் போலவே நேர்மை, நாணயம் மிக்கவர். நேர்மையான ஒருவரைக் குறித்து இன்னொரு நேர்மையானவர் எழுதும் போதுதான் உண்மையான செய்திகள் வரும் என்பது பதிப்பகத்தாரின் கருத்து. எனது கருத்தும் அதுவே.

காமராஜர் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிப் பழகியவர் சோ அவர்கள். ஆனால் அவர்களது முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

அறுபதுகளின் ஆரம்பம். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் அப்போது. சோ குழுவின் நாடகம் “பால மந்திர்”க்காக சென்னை ஆர்.ஆர். சபாவில் நடந்து கொண்டிருந்தது. நாடகத்தின் பெயர் இப்புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும் அது “சம்பவாமி யுகே யுகே” என்னும் விஷயத்தை நான் வேறொரு இடத்தில் படித்துள்ளேன். கிருஷ்ண பரமாத்மாவே அவதரித்து இந்தியாவில் ஊழலை ஒழிக்க முயலுவதாகவும், அதில் அவர் தோல்வியடைவதாகவும் எழுதப்பட்ட கிண்டல் நாடகம் அது. அந்த நாடகத்துக்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு எப்படியோ சமாளித்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாடகத்துக்கு காமராஜ் அவர்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருக்கிறார். யார் அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் என்ன போட்டுக் கொடுத்தார்களோ, அது பற்றி மேடையிலேயே சோவுக்கும் அவருக்குமிடையில் வாத-பிரதிவாதம் எழுந்து, காமராஜ் அவர்கள் மேடையை விட்டு நீங்கினார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி வருத்தப்பட்டு சோ அவர்கள் பலமுறை பிறகு வெவ்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளார். (என்னால் சோ அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது, அவர் இடத்தில் நானும் அவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் – அடேய் அடங்குடா டோண்டு ராகவா) ஆனாலும் சோ அவர்கள் உண்மையாகவே வருத்தப்பட்டிருக்கிறார். காமராஜ் அவர்களோ இந்த நிகழ்ச்சியைப் பற்றி பிறகு சோ அவர்களிடம் பிரஸ்தாபிக்கவேயில்லை. அதில்தான் அவரது பெருந்தன்மை வெளிப்படுகிறது. நடந்ததை மறைக்காமல் எழுதியதில் சோ அவர்களும் பெருந்தன்மையில் குறைவில்லாதவர் என்பதைக் காட்டுகிறது. (அடேய் டோண்டு!!! சாரி, பாஸ், நான் விடு ஜூட்).

கோணலாக முடிந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சோ அவர்கள் காமராஜரை 1968-ல் சந்தித்திருக்கிறார். பிறகு 1971-ல், பொதுத் தேர்தல்களுக்குப் பிறகுதான் அடுத்த சந்திப்பு. அதன் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள்தான் இப்புத்தகத்தில் வருகின்றன. இதில் சோ அவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். தான் கேட்டறிந்த ஒரு விஷயம் தவிர புத்தகத்தில் வருவன எல்லாம் அவரே நேரில் கண்டறிந்தவை என்று கூறியுள்ளார்.

கேட்டறிந்த விஷயம் சோ அவர்கள் தனது சித்தப்பாவிடமிருந்து கேட்டது. ரிசர்வ் பேங்க் எதிரே உள்ள சப்வேயை பற்றி. அது பற்றி சிறிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று. அதில் சோவினுடைய சித்தப்பாவும் ரயில்வேயின் சார்பில் கலந்து கொண்டார். சப்வே பற்றிய டெக்னிகல் விவரங்களைக் கூற வேண்டிய பொறுப்பு அவருக்கு. ஆங்கிலத்தில் கூறினால் காமராஜ் அவர்களுக்கு புரியுமோ புரியாதோ என்ற எண்ணத்தில் தட்டுத் தடுமாறித் தமிழில் அவற்றைக் கூற முயன்றிருக்கிறார். காமராஜ் அவர்கள் அவரை ஆங்கிலத்திலேயே கூறுமாறு பணித்து, எங்காவது சந்தேகம் ஏற்பட்டால் தான் கேள்வி கேட்டுக்கொள்வதாகக் கூற மீட்டிங் தொடர்ந்திருக்கிறது. அதே மாதிரி கூர்மையாக கவனித்து தேவையான விளக்கங்களையும் காமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அப்போது மத்திய அரசு சார்பில் வந்திருந்த ரயில்வே ராஜாங்க மந்திரி திட்டத்துக்கு அதிகச் செலவாகும் ஆகவே அதைக் கைவிட வேண்டும் என்று பொருள்படக் கூற, காமராஜ் அவர்கள் ஆவேசத்துடன் “சப்வே வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை எப்படி நிறைவேற்றுவது” என்று மட்டும் பார்த்தால் போதும் என்றும், இது பற்றி பிரதம மந்திரியிடம் தாமே பேசப் போவதாகக் கூறி மீட்டிங்கை சரியான திசையில் போக வைத்திருக்கிறார்.

இதில் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.
1. தனக்கு ஆங்கிலம் புரியாது என்ற நினைப்பில் செயல்பட்ட அதிகாரியைக் கடுமையாகப் பேசாது அவரை ஆங்கிலத்திலேயே பேச ஊக்குவித்தப் பெருந்தன்மை,
2. தனக்குப் புரியாத இடத்தில் தயங்காது கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட போலித்தனம் கலக்காத எளிமை,
3. முட்டுக்கட்டை போட முயன்ற மத்திய மந்திரியை சமாளித்து, மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் துடிப்பு,
4. பிரதம மந்திரியிடம் பேசுவேன் என்று கூறிய தன்னம்பிக்கை, அதாவது பிரதம மந்திரியை சம்மதிக்கச் செய்ய முடியும் என்ற நிச்சயமும் இதில் அடங்கும்,
5. சப்வேயை கட்டி முடித்த சாதனை.

காமராஜருடன் சோ நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது 1971 தேர்தலுக்கு முந்தைய மற்றும் அடுத்தக் காலக் கட்டம்தான். அது அடுத்தப் பதிவுகளில். அவற்றில் வரும் எல்லாமே சோ அவர்கள் கண்டறிந்தவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த பதிவு போடுவதற்காக இணையத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்கு இந்த அருமையான இடுகை கிடைத்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் நான் காமராஜ் அவர்களைப் பற்றிப் போடும் பதிவுக்காக கண்ணதாசனின் இந்த கவிதையானப் பாடலைப் பற்றிய இடுகையை உபயோகப்படுத்த அனுமதி கோரி பெற்றேன். நிலா அவர்களுக்கு என் நன்றி.

முதலில் இந்த இடுகையில் கண்ட பொருளை பதிவுக்கு மேலோட்டமாகத்தான் உபயோகிக்க எண்ணினேன். பிறகு அருமையான இந்த இடுகையில் எதை எடுக்க, எதை விட என்று மயங்கியதால், இப்பதிவையே அதற்கு அர்ப்பணிக்கிறேன். மேலும் இத்தொடரின் தலைப்பின் வரியும் நான் முதல் பகுதியில் கூறியபடி கண்ணதாசன் பாடல்தானே. இப்போது இடுகைக்குப் போவோமா? இப்பாடல் ஒரு வரிசையில் வருவதால் சில முன்குறிப்புகள் மற்றும் பின் குறிப்புகள் உள்ளன. அவற்றைத் தவிர்த்து இடுகையைத் தருகிறேன். காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன். தலைப்பைக் கூட மாற்றியிருக்கிறேன்.

"நான் தெரிவு செய்த பாடல் டி.எம்.எஸ்., சுசீலா குரலில் ஒலித்த "அந்த சிவகாமி மகனிடமும் சேதி சொல்லடி" எனும் பாடலாகும். இதற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது இந்த பாடல் பிறந்ததன் பின்னணியாகும்.காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் பிரிந்த காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர், அவரை மனதில் நிறுத்தி எழுதிய பாடலாம். அதாவது காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமியாகும். அத்தோடு அழகான காதல் வரிகள் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

காதலனின் பிரிவால் காதலி வருந்துகிறாள். அவனை எண்ணி மிகவும் மனம் நொந்து போகிறாள். அங்கே பிறக்கிறது அந்த அழகிய தமிழ்ப்பாடல்:

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?

தோழியின் மூலம் தன் காதலனுக்குச் சேதி அனுப்புகிறாளாம். தன் தலைவனிடம் போய்த் தன்னை மணமுடிக்க நாள் குறிக்கும்படிக் கூறுகிறாள். அது மட்டுமா?

மயிலின் தோகை எவ்வளவு அழகானது? அதன் வர்ணங்கள் உயிர் பெறுவது அந்தத் தோகை விரிக்கப்படும் போதே. ஆனால் அந்த மயில் தனது முழு அழகையும் தன் தலைவனான அந்த முருகப் பெருமான், வேலன், அவனுக்கு முன்னால் தானே காட்சிக்கு வைக்கும், அவனில்லா விட்டால் எப்படி அங்கே தோகையின் அழகு பெருமை பெறும்? அதே போலத் தன் தலைவனின் முன்னால் மட்டுமே மலரும் தன் அழகிற்கு, மயிலின் தோகையை ஒப்பிடுகிறாள் அந்தத் தலைவி.

தொடருகிறாள் காதல் வேதனையில் துவளும் தலைவி,

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணெனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

அவளுடைய விழிகள் பூ விழிகள் தானே, அவை மலர்வது எதற்காக? அவளது தலைவன் அவைகளைக் கோர்த்து மாலையாய் அணிந்து கொள்வதற்கே, அது மட்டுமா? கண் விழிகள் மலர்கள் என்றால் அவைகளைத் தாங்கி நிற்கும் கன்னங்கள் வேறென்ன சோலைதானே!

தன்மீது உள்ள காதலினால் உருகும் காதலியின் நிலையறிந்து காதலன் மனதில் உருவாகும் பாடல் வரிகள்

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலப் பரப்புக்களிலே உயர்ந்ததாம் மலையின் உச்சியில் பிறந்த சந்தனம், அதனடியில் வாழும் மனிதனின் மார்புக்குத் தானே சொந்தமாகிறது. அத்தகைய உயரிய இதயத்தைக் கொண்ட அவன் காதலியின் இதயம் தனக்கே சொந்தம் என்று பெருமையில் பூரிக்கிறான் தலைவன்.

தலைவனின் பதில் கேட்டுப் பூரித்த மங்கையவள் மனதில் ஒரு சிறு சந்தேகம், தனது இதயத்தை மலையின் உச்சிக்கும், தன்னை அதன் அடிவாரத்தில் இருக்கும் மனிதனுக்கும் ஒப்பிட்ட அந்தத் தலைவனின் நிலை உயர்ந்து வசதி பெருகி விட்டால், ஒருவேளை தன்னை மறந்து விடுவானோ?தாம் நெருங்கி விட்டால் தமக்குள் இருக்கும் அந்தஸ்து பேதமே தம்மைப் பிரித்து விடுமோ? துடிக்கும் இதயத்துடன் வினவுகிறாள்!

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ?

திடுக்கிட்டு விட்டான் அவன்! என்ன சந்தேகம் வந்து விட்டதோ தலைவிக்கு, தனது காதலின் மீது? அறுதியாகக் கூறுகிறான் தலைவன்

காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது! மாறாது இறைவன் ஆணை

கண்னுக்குத் தெரியாமல் காவல் இருக்கும் அந்த அனைவருக்கும் பொதுவான இறைவனைத் துணைக்கு அழைக்கிறான்.

மகிழ்ச்சியுடனே அவளும் இணைகிறாள்

என்றும் மாறாது! மாறாது! இறைவன் ஆணை

திரும்பவும் அவளுக்குத் தீர்மானமாகச் சொல்கிறான்.

இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேர நாள் பார்ப்பதேனடி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகையில்லாமல் வேலன் ஏதடி?

மிகவும் துணிச்சலாக மனதோடு சேர்ந்து விட்ட நீ என்னுடன் சேர்வதற்கு நாள் பார்க்க வேண்டுமா என்ன? என்னுடன் சேர்ந்து நின்றால் பிறகென்ன பிரிவு எனக் காதலன் எனும் அதிகாரத் தோரணையில் காதலிக்கு ஆறுதலளிக்கிறான்."

மேலும் சில தகவல்கள் இப்பாடலைப் பற்றி.

இப்பாடல் வந்த படம் "பட்டினத்தில் பூதம்", சமீபத்தில் அறுபதுகளில் வந்தது (1966?). ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜாவர் சீத்தாராமன் (ஜீபூம்பா) ஆகியோர் நடித்தது. நேயர் விருப்ப நிகழ்ச்சிகள் விடாமல் கேட்கப்பட்டப் பாடல். அறுபதுகள் சினிமாப்பாடல்களின் பொற்காலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 3

இந்த வரிசையில் முந்தையப் பதிவு இதோ.

நமச்சிவாயம் அவர்களது புத்தகத்தில் நான் குமுதம் தொடராகப் படித்ததிலிருந்து சில நிகழ்ச்சிகள் விட்டுப் போனதாகத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, உள்ளூர் தாதா ஒருவனால் துரத்தப்பட்ட ஒருவன் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, அந்த இடம் காமராஜ் அவர்களுக்கும் தெரியும். ஆயினும் தன்னை மிரட்டிக் கேட்ட தாதாவின் ஆட்களிடம் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று தைரியமாகச் சாதித்து ஒளிந்து கொண்டவரின் உயிரைக் காப்பாற்றினார். ஒரு வேளை நமச்சிவாயம் வேறு ஏதாவது புத்தகம் காமராஜரைப் பற்றி எழுதியதிலிருந்து நான் அதைப் படித்தேனா அல்லது, இப்புத்தகத்துக்கு ஏதேனும் தொடர்ச்சி உண்டா என்பது புரியவில்லை. ஏனெனில் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகான நிகழ்ச்சிகள் காணப்படவில்லை.

அதாவது காமராஜ் அவர்களது 18-ஆம் வயதுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் இப்புத்தகத்தில் இல்லை. இருந்தாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு பல ஆதாரங்கள் இப்புத்தகத்திலேயே காணப்படுகின்றன. முக்கியமாக மதிய உணவுத் திட்டத்திற்கான ஆதார நிகழ்ச்சியை நான் போன பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இப்புத்தகம் அக்காலக் கட்டத்தில் தமிழகம் இருந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அக்கால விலைவாசிகளைப் பார்த்து சுபிட்சமாக வாழ்ந்தார்கள் என்று எடை போடலாகாது. ரூபாய்க்கு 8 படி (10.2 கிலோ) அரிசி விற்றது என்று கூறுவார்கள். ஆனால் ஒரு ஆழாக்கு (8 ஆழாக்கு ஒரு படி, அதாவது 1400 கிராம்) அரிசி வாங்கக் கூட பணம் கையில் இருக்காது. சம்பளம் கூட 15-20 ரூபாய் அளவில்தான் இருக்கும். இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் காமராஜ் அவர்கள் சார்ந்த நாடார் குலத்தினர் தங்களை சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்ட கதையை விளக்கத்தான். பணவசதி இருந்தவர்கள் ஒவ்வொரு பிடி அரிசியாக தானம் செய்து சொந்தப் பள்ளிக்கூடம் ஏற்படுத்திக் கொண்டனர். அதுதான் பிடியரிசிப் பள்ளி என்று அறியப்பட்ட, 1885-ல் துவக்கப்பட்ட க்ஷத்திரிய வித்தியாசாலையாகும்.

இந்தப் பள்ளியைத் துவங்க விருது நகர் வியாபாரிகள் தங்களது வியாபார மகமைப் பணத்தைக் கொடுத்துப் பெரிதும் உதவினர். மகமைப் பணத்தோடு ஊர்கூடித் தேர் இழுக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டுப் பெண்மணிகளும் பள்ளி நிலை பெற வேளைதோறும் வித்திட்டு உதவினர்.

பள்ளிக்கூடச் செலவுக்காக ஒவ்வொரு நாளும் வேளையும் சமையல் செய்ய உலையில் அரிசி போடும்போது முதலில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு பானையில் போட்டு சேமித்தனர். இதை எல்லா வீட்டிலும் செய்தனர். சிறு துளி பெருவெள்ளமாகி மூட்டை மூட்டையாக அரிசி சேர்ந்தது. மலையென ஓங்கி உயர்ந்த அரிசி மூட்டைகள் விற்கப்பட்டன. பள்ளிச் செலவுக்கு பணம் கிடைத்தது. அதாவது தன் கையே தனக்குதவி என்று முனைப்புடன் செயல்பட்டால் என்னென்ன செய்யலாம் என்பதைக் குறிப்பிடவே இங்கே இதை கூறுகிறேன்.

பிடி அரிசியின் மகிமை பெரிது. மிகமிகப் பெரிது. இந்தப் பள்ளியில்தான் காமராஜ் படித்தார். ஆறாம் வகுப்பு வரை அப்பள்ளியில் அவர் பெற்ற அனுபவங்கள் அவரைப் புடம் போட்டன.

அப்போதே அவர் நடப்பு அரசியல்களை பற்றி தன் நண்பர்களுடன் விவாதிப்பார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. அது பற்றி விவாதங்கள் நடந்து வந்த தருணத்தில் ஒரு சடு குடு போட்டி நடந்தது. ஒரு முரட்டுப் பையன் தன்னை வெள்ளைக்காரன் என்று பீற்றிக் கொண்டு போட்டிக்கு வந்ததற்காகவே அவர் அவனது எதிர்க் கட்சியில் சேர்ந்து அவனைப் புரட்டி எடுத்து விட்டார். நல்ல உழைப்பாளியாதலால் உரம் பாய்ந்த உடல்.

ஒருமுறை ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளால் தாக்கப்பட்டு உயிரை இழக்க இருந்த ஒரு எட்டு வயது சிறுவனை தனது சமயோசித புத்தியால் காப்பாறினார் காமராஜ் அவர்கள். சிறுவனை அப்படியே கீழே தள்ளி, தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் காளையின் பார்வையிலிருந்து மறைத்தார். அந்த சில நொடிகளுக்கு தனது உயிரையே பணயம் வைத்தார்.

அதே போல எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெருவியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவனை அறுவறுப்பின்றி தொட்டுத் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தவர் காமராஜ் அவர்கள். அதுவும் அக்காலக் கட்டத்தில் பெருவியாதி என்றால் எல்லோருமே அலறுவர். நமது காமராஜரிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை.

நமச்சிவாயம் அவர்கள் காமராஜ் அவர்களது அறிமுகத்தைப் பெற்றது ஒரு சுவையான கதை. 1957-தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசி முடித்து அடுத்தக் கூட்டத்துக்கு செல்ல இருந்தவர் முன்னால் இவர் தயங்கி நின்றிருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட காமராஜரிடம் தான் அடுத்த மீட்டிங்கிற்கும் கவரேஜுக்காக வரவேண்டியிருக்கும் என்று மென்று விழுங்கியபடி கூற, காமராஜர் அவரை எல்லா மீட்டிங்கிற்கும் தனது காரிலேயே அழைத்துச் செல்ல என்று ஆரம்பித்து நமச்சிவாயத்தை கடைசியில் காமராஜ் அவர்களின் பாஸ்வெல் ஆக்கி விட்டது. வாழ்க்கையில் இம்மாதிரி பல பெரிய விஷயங்களுக்கு அடிப்படையாக சாதாரண நிகழ்ச்சியே அமைந்து விடுவதை இங்கே கூறத்தான் வேண்டும்.

அடுத்தப் பதிவில் நான் சமீபத்தில் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் காமராஜ் அவர்களைப் பற்றி கேட்டதையும் படித்ததையும் பற்றிக் கூறுவேன். சோ அவர்கள் கூட காமராஜருடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய புத்தகம் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இப்போது தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. அது கிடைத்தவுடன் அதிலிருந்து வேறு எழுத வேண்டும். பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது