10/31/2007

The law of supply and demand

நண்பர் மதுசூதனன் அவர்களது இப்பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை இங்கு விரிவாக்குகிறேன். முதலில் அங்கு இட்ட பின்னூட்டம் இதோ. (பதிவை எழுதும் இத்தருணத்தில் அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது).

"ஏதாவது ஒரு துறையில் திடீரென பெரிய முன்னேற்றம் வந்து அதில் வேலை செய்பபர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதில் வேலை செய்பவர்களை அதிக சம்பளம் கொடுத்துத்தான் அமர்த்துவார்கள். உதாரணத்துக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பே. ஆகவே அவ்வாறு வேலைக்கு வருபவர்களுக்கு அதிக சம்பளம். அதே போல ப்ளம்பர்களுக்கு நல்ல கிராக்கி. அவர்கள் வருவாய் பல சமயங்களில் கல்லூரி பேராசிரியரின் சம்பளத்தையும் மிஞ்சி விடும். இது பற்றி பாதி நகைச்சுவையாகவும் பாதி வயிற்றெரிச்சலாகவும் அங்கு பலர் எழுதி விட்டனர்.

இப்போது இங்கே பொட்டி தட்டும் வேலைக்கு வருவோம். நமது மதிப்பு நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம். நமக்கு இயற்கையாகவே லாஜிக்கில் திறமை உண்டு. அத்துடன் ஆங்கில அறிவையும் சேர்த்து கொள்ளுங்கள். ஆகவேதான் அவுட்சோர்சிங்கிற்கு இந்தியாவை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். வெளிநாட்டு கம்பெனிகளில் உள்ள ரொட்டீன் வேலைகளுக்கெல்லம் அவுட்சோர்சிங் வந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு இந்த நிலை அப்படியே இருக்கும் வாய்ப்பு உண்டு.

ஆக சம்பளம் கூடக்கூட வசதிகளை பெருக்கி கொள்கின்றனர். அதற்கான விலையையும் தரத் தயாராக உள்ளதால் பல சேவைகளின் விலைவாசிகள் கூடுகின்றன என்பது ஓரளவுக்கு உண்மையே. அதற்கு என்ன செய்ய முடியும்?

இது பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் வருகிறது. அங்கு இன்னும் விரிவாக எழுதுகிறேன்".

இப்போது இப்பதிவுக்கு வருவோம்.

சமீபத்தில் 1956-ல் "அமெரிக்கா அழைக்கிறது" என்னும் தலைப்பில் திருமதி காந்திமதி அவர்கள் தனது அமெரிக்க அனுபவங்களை ஆனந்த விகடனில் ஒரு தொடரில் எழுதி வந்தார். அவர் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரி இவரை தான் வேலை செய்யும் இடங்களுக்கு தனது படகு போன்ற காரில் ஏற்றிச் சென்றார். ஆம், இடங்கள்தான். அப்போதுதான் காந்திமதி அவர்களுக்கு வீட்டு சொந்தக்காரி பல வீடுகளில் பாத்திரம் கழுவி, துணி தோய்த்து, வீடு மெழுகி சம்பாதிப்பவர் என்ற உண்மை உறைத்ததாம். பல இடங்களில் வீடுகளில் உள்ள மனிதர்கள் வெளியே சென்றிருப்பார்கள். இந்த அம்மணி தனக்கு கொடுக்கப்பட்ட மாற்று சாவியை வைத்து வீட்டைத் திறந்து வேலை செய்து விட்டு செல்ல வேண்டியது. வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (உதாரணத்துக்கு ஒரு மணி நேரம்). ஆகவே அதற்கான சம்பளம் ஏற்கனவே ஒரு கவரில் வைத்து விட்டு சென்றிருப்பார் வேலை தருபவர். இந்த அம்மணி அதை தன் பையில் போட்டு கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான் பாக்கி. காந்திமதி அவர்கள் கூடச் சென்ற தினம் வேலை செய்த் பெண்மணி அவரை ஹாலில் உட்கார வைத்து விட்டு டி.வி.யை ஆன் செய்து விட்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு கூல் ட்ரிங்கை இவர் கையில் திணிக்கிறார். அந்த உரிமையும் உண்டு.

காரணம் என்ன? மேலே கூறிய ஆள் பற்றாக்குறைதான். அங்கும் ஓரளவுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை என்னும்போது வெளிநாடுகளிலிருந்து வேலையாளர்களள வருவித்து கொள்கின்றனர். மெக்சிகோக்காரர்கள் பலர் சாரிசாரியாக வருகின்றனர். அவர்களில் பலரிடம் தேவையான வேலை அனுமதி ஆவணங்கள் இருக்காது. ஆகவே அவர்கள் ரகசிய முறையில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டை சம்பளம்தான். வேலை உத்திரவாதமும் இல்லை. ஏனெனில் இருக்கும் குறிப்பிட்ட வேலைகலுக்கு பலர் போட்டி இடுகின்றனர். இதுதான் ஐயா உலகம். இது சரியா தவறா என்று கூற நாம் யார்?

இன்னொரு சுவையான உதாரணம் அகாதா கிறிஸ்டியின் "4.50 from Paddington" என்னும் நாவலில் பார்க்கலாம். அதில் வரும் லூசி என்னும் பெண்மணி கணிதத் துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் அக்காலக்கட்டத்திற்கேற்ப இங்கிலாந்தின் நிலையை அவதானித்து தேர்ந்தெடுத்த வேலை மேலே சொன்ன வீட்டுவேலைதான். அவர் விஷயம் வேறு. அவர் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஹவுஸ்கீப்பராக செல்வார். அக்காலத்தில் சம்பந்தப்பட்ட வீட்டினர் சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வர். பல சமயங்களில் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பர். அவர்கள் வீட்டு நிர்வாகத்தை அவர் அச்சமயத்தில் சரியான நிலையில் நடத்துவார். ஆனால் அவரிடம் என்ன கஷ்டம் என்றால் எங்குமே நிரந்தரமாக இருக்க மாட்டார். எவ்வளவு சம்பளம் தருவதாகக் கூறினாலும் அவரிடம் அது நடக்காது. ஏனெனில் அடுத்து பல மாதங்களுக்கு அவரை ஏற்கனவே பலர் புக் செய்திருப்பார்கள். பெண்மணியின் சௌகரியத்துக்கு ஒரு குறையும் இல்லை. அவர்பாட்டுக்கு வேலைகளை கச்சிதமாகச் செய்துவிட்டு தனது கணித அறிவை மேம்படுத்தும் வேலையில் இருப்பார். இது பாட்டுக்கு இது, அதுபாட்டுக்கு அது என்று இருக்கும் இவர் என்னைக் கவர்ந்தார். அகாதா கிறிஸ்டியின் அந்த நாவலை நான் சமீபத்தில் 1966-ல் படித்ததிலிருந்து இவரே என் ரோல் மாடல்.

அவரைப்போல நான் இருக்க முயற்சி செய்ததைப் பற்றி எனது ஐ.டி.பி.எல். நினைவுகளில் எழுதியுள்ளேன். என்ன, அவரைப் பற்றி அங்கு பெயரிட்டு குறிப்பிடவில்லை. ஆகவே இத்தருணத்தில் கூறிவிட்டேன். இப்போது மட்டும் என்ன, அதே நிலைதான் தொடர்கிறது.

அதாவது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவைப்படும் என்பதைத் தீர்மானித்து அதை அவர்களுக்கு அளிப்பதுதான் அது. அதே சமயம் அதற்கான விலையையும் பெற்றுவிட வேண்டும். அதைத்தான் நண்பர் மாசிவக்குமாரிடம் கூறினேன். சில நாட்களுக்கு முன்னால் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவருக்கு சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்படி ஒரு கோரிக்கை வந்துள்ளதால் என்ன ரேட் கேட்கலாம் என்பதைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் அவருக்கு கூறிய ஆலோசனையின்படி நடந்து அவர் அந்த வேலையும் செய்து பணமும் பெற்றதை பிறகு எனக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரிடம் கூறிய முக்கிய ஆலோசனையே ரேட்டை கணிசமாக உயர்த்திச் சொல்ல சொன்னதுதான். அதில் உறுதியாக இருக்குமாறு அறிவுரை கூறினேன். அவ்வாறே செய்தார். ஏனெனில் சீன மொழிபெயர்ப்பாளர்கள் அதுவும் நண்பர் சிவகுமார் அளவுக்கு பொறியியல் பின்னணி உள்ளவர்கள் சென்னையில் இல்லை என்றே கூறிவிடலாம். சாதாரணமாக அவர் ரொம்ப சாஃப்ட் பேர்வழி. அவரை விட்டால் அடிமாட்டு விலைக்கு செய்திருப்பார். ஆகவேதான் எனது அறிவுரையை வலியுறுத்தி கூறினேன். அதே சப்ளை மற்றும் டிமாண்ட் கோட்பாடுதான்.

அதே போலத்தான் மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அதிக சம்பளம். இதை பொறாமையுடன் பார்த்து விமரிசனம் செய்வது "கற்றது தமிழ்" என்னும் படத்தில் இருப்பதாக அறிகிறேன். இதில் இன்னொரு வேடிக்கை. படத்தை எடுத்தவரோ, அதில் நடித்தவர்களோ பெறுவது பெரிய சம்பளங்கள். அது யாருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் ஜெமினி நிறுவனம் எடுத்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. அவர்களது பல படங்களில் ஏழைகள் நல்லவர் எனவும் பணக்காரர்கள் சாதாரணமாகக் கெட்டவர்கள் என்றும் படமாக்கப்பட்டிருக்கும். அதைக் கூறியே வாசன் இன்னும் பெரிய பணக்காரர் ஆனதுதான் நடந்தது. தனது படங்களில் புரட்சி பேசும் தங்கர் பச்சான், ஒரு மேக்கப் பெண்மணி தனது சம்பளத்தை தருமாறு வற்புறுத்தியதால் அப்பெண்மணி செய்தது வேசித்தனம் என்னும் கூறும் அளவுக்கு சென்றது பெரிய நகைமுரண்தானே. அதே சமயம் அப்படத்தில் அவர் பெற்றது என்னவோ பெரிய சம்பளம்தானே.

வாசனை பற்றி எனது கருத்து? அவர் மேதை. அவரைத்தான் நாம் ரோல்மாடலாக வைத்து கொள்ள வேண்டும். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மார்க்கெட் ரேட்டை விட அதிக சம்பளம் கொடுத்தவர் அவர். அதே சமயம் தனது விஷயங்களையும் பார்த்து கொண்டவர் அவர். அவரிடம் மேலே நான் இப்பதிவில் குறிப்பிட்ட விஷயத்தை குறித்து சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவர்வ் அளித்த பதிலை நினைவிலிருந்து தருகிறேன். "ஐயா ஒரு சராசரி மனிதன் வேலையிலிருந்து களைத்து வரும்போது அவனுக்கு உல்லாசம் தேவைப்படுகிறது. அவன் மனதுக்கு பிடித்த விஷயத்தை சொன்னால்தான் அவன் படத்துக்கு வருவான். நான் குறி வைப்பது தரை டிக்கெட்டுக்கு வரும் ரசிகர்களே. படம் பிடித்திருந்தால் பல முறை பார்ப்பார்கள். ஆனால் பால்கனி சீட்காரர்கள் ஒரு முறைக்கு மேல் ஒரே படத்துக்கு வருவது அபூர்வம். அதிலும் அவர்கள் முடிதால் ஓசி பாஸ் பெற முயற்சிப்பவர்கள்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/26/2007

அவசர அறிவிப்பு - உங்கள் பிளாக்கர் கணக்கு ஜாக்கிரதை

இன்று காலை நண்பர் அருண்குமாரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் ஆர்க்குட் சுட்டி ஒன்றைத் தந்தார். ஞாநி பற்றி தான் ஒரு மன்றப் பதிவுபோட்டதாகக் கூறி, அதை பார்த்து எனது பிளாக்கில் அது பற்றி கருத்து கூறுமாறு கூறியிருந்தார். எனக்கு ஆர்க்குட்டில் கணக்கு இல்லை. ஆகவே அருண்குமாருக்கு ஃபோன் செய்து கட் அண்ட் பேஸ்ட் செய்து தனது அந்த இடுகையை எனக்கு அனுப்புமாறு கேட்டேன். அவர் அதற்கு தான் அப்படி ஒரு மின்னஞ்சலும் அனுப்பவில்லை எனக் கூறி விட்டார்.

பிறகு என்னார் அவர்கள் சேட்டில் வந்தார். அவருக்கும் அதே மின்னஞ்சல் வந்திருந்தது. ஆனால் எனது மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறி நான் அதை அனுப்பினேனா எனக் கேட்டார். மெயிலும் எனது socalled மெயிலை ரிப்ளை செய்வது போல அனுப்பி கேட்டார். அவரிடம் உடனே தொலை பேசினேன். இது ஒரு கடவுச்சொல் திருடும் முயற்சி என்பதை தெளிவுபடுத்தினேன். அவரும் சுதாரித்து கொண்டார். என்றென்றும் அன்புடன் பாலாவுடன் பேசியபோது அவருக்கும் இதை தெரிவித்து அவரை எச்சரிக்கை செய்தேன். ஐந்தே நிமிடத்தில் அவருக்கும் இதே மெயில் வந்தது. அருண்குமாரின் மின்னஞ்சலிலிருந்து.

இப்போது இட்லி வடைக்கும் அது நடந்துள்ளது. அவரது பிளாக்கர் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். அவர் இது சம்பந்தமாக இட்ட பதிவுகள்:

1. "I have one login session and I am using that to post it here, I dont have access to my gmail account. If you receive any mails from my account then it fake. Be cautious.
இனிமேல் அப்டேட் செய்ய முடியாமல் போகலாம்.
அதே போல் என்னிடம் gtalk உள்ள அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.
நன்றி.
இட்லிவடை"

2. "என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(

உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்துவிட்டது., என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html
வந்தால் உள்ளே போகாதீங்க
Posted by IdlyVadai at 10/26/2007 03:10:00 PM"

3. "பாஸ்வோர்ட் ஹாக் செய்யபட்டது
என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(
உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்து விட்டது, என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html
வந்தால் உள்ளே போகாதீங்க
Posted by IdlyVadai at 10/26/2007 02:19:00 PM
Labels: அறிவிப்பு
2 Comments:
We The People said...
என்ன கொடும சரவணா இது!!"
October 26, 2007 2:48 PM
Anonymous said...
Fake site for you?, you are either so popular or
notorious (for some) :)

இப்போது வாத்தியார் சுப்பையா அவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி சுட்டிக்கு நன்றி வேறு தெரிவிக்கிறார். போய் பார்க்கப் போவதாக வேறு கூறியுள்ளார். உடனே பதில் போட்டு அவரை எச்சரிக்கை செய்துள்ளேன். மறுபடியும் செய்கிறேன். சுப்பையா அண்ணாச்சி ஜாக்கிரதை.

மற்ற சகபதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து என் பெயரில் யாருக்கேனும் இம்மாதிரி மின்னஞ்சல் வந்தால் நம்பாதீர்கள்.

இன்னொருவர் அனுப்புவது போல மின்னஞ்சல் அனுப்ப பிராக்ஸி தளங்கள் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அல்வாசிடி விஜய் அனுப்புவது போல திருமலை அவர்களுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை அவர் ஒரு பதிவில் கூறியுள்ளார். அப்போது அதை அனுப்பியது போலி டோண்டு மூர்த்தி. இப்போதும் அவனுடைய அல்லது அவனது அள்ளக்கைகளின் கைங்கர்யம்தான் இது என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜாக்கிரதை, ஜாக்கிரதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இந்த நேரம் பார்த்து தமிழ்மணத் திரட்டியில் தொழில்நுட்பப் பிரச்சினை. திரட்டாமல் எர்ரர் மெசேஜ் வருகிறது. தேன்கூடு ஏற்று கொண்டு விட்டது.

ஞாநிக்கும் அப்பால்

தனது பார்ப்பன வேர்களை மறுத்து இயங்கிவரும் ஞாநியைக் கூட விட்டுவைக்காமல் அவர் தங்களது புனித பிம்பத்தை குலைத்தார் என நினைத்த சில அரைகுறை கேசுகள் ஞாநியின் பாப்பார புத்தி, பனியனுக்குள் நெளியும் பூணூல் என்றெல்லாம் பழித்து பதிவிட்ட பல பதிவுகள் பல registered பார்ப்பன விரோதிகளையே நெளியச் செய்து விட்டதைத்தான் பார்க்கிறோம்.

ஆனால் இது பனிக்கட்டியின் (iceberg) வெளியில் தெரியும் பத்தில் ஒரு பாகமே. ஞாநி சொன்னதை நானும் ஒத்துக் கொள்ளவில்லைதான். அதை எனது இப்பதிவிலேயே வெளிப்படையாக எழுதியவன். இது வரை ஞாநி தங்களுக்கு விருப்பமான கருத்தை கூறியபோதெல்லாம் அவர் பார்ப்பனர் என்பதை சௌகரியமாக மறந்து, இப்போது மட்டும் அதை வெளிக்காட்டும் அவலத்தை அதில் குறித்திருந்தேன்.

இந்த அழகில் அவரை கண்ணியமாக கண்டித்த மீட்டிங் என்று ஒரு பதிவு. எது அம்மா கண்ணியம்? ஞாநியின் ஜாதியை இங்கு இழுத்ததுதானா, அல்லது இந்தமட்டில் ஞாநியின் பெண் உறவினர்களை திட்டாமல் விட்டார்களே என்ற உணர்ச்சியா? அதாவது ஒரு தகப்பனிடம் உன் நான்கு பிள்ளைகளில் எவன் நல்ல பிள்ளை எனக்கேட்க அதற்கு அவன் கூரைமேல் நின்று கொண்டு வீட்டுக்கு நெருப்பு வைக்க நினைக்கும் அப்பிள்ளைதான் இருப்பவர்களிலேயே உத்தமமானவன் எனக் கூறுவது போலத்தான் இருக்கிறது இந்த உணர்ச்சி.

இந்த ஞாநி விஷயத்தில் இந்த ஆஸ்பெக்டை இப்பதிவு நன்றாகக் கையாளுகிறது.

ஆனால் இப்போது கூற நினைப்பதே வேறு. தமிழ் இணையத்தில் ஆ ஊ என்றால் திட்டு பார்ப்பனனை என்ற எண்ணப்போக்கு ஒரு வயிற்றுப்போக்கு போல அமைந்து விட்டது விசனிக்கத்தக்கது. தலித்துகள் இரட்டை தம்ளர் முறையா, திட்டு பார்ப்பனர்களை. சம்பந்தப்பட்ட டீக்கடைக்காரர்கள் பார்ப்பனர்கள் இல்லையே என்று தோன்றினால் இருக்கவே இருக்கிறது பார்ப்பனீயம் என்னும் ஜல்லி. கவுண்டனீயம், தேவரீயம், முதலியாரீயம், நாயுடுயிசம் (கீழ்வெண்மணி) என்றெல்லாம் கூறினால் செருப்பால் அடிக்கப்படுவோம் என பயந்து பார்ப்பனீயம் என்று இவர்களாகவே ஒரு டெஃபினிஷன் செய்து விடுவது. பிறகு டிஸ்கி வேறு. உயர்சாதீயம் என்று அதை புரிந்து கொள்ளவேண்டுமாம். அது பார்ப்பனருக்கு எதிரானதாக இல்லையாம். ஏன் ஐயா, உயர்சாதீயம் என்றே போட்டு தொலைப்பதுதானே என்றால், கோசாம்பி என்ற விளங்காத ஒருவர் கொடுத்த டெஃபினஷன் என்ற சுய புத்தியேயில்லாத சமாதானம் வேறு.

இதில் சில socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களே ஈடுபடுவதுதான் சோகம். மற்றவர்களுக்கு முன்னால் தாமே சகபார்ப்பனரை திட்டிவிட்டால் தாங்கள் தப்பிக்கலாம் என எண்ணுபவர்கள். பாவம், செருப்படி இவர்களுக்கும் அவர்கள் எதிர்ப்பார்க்காத தருணங்களில் கிடைக்கும் என நம்பாதவர்கள். அப்படியே கிடைத்தாலும் அதை துடைத்துப்போட்டு தங்கள் சுய கௌரவத்தை குலைத்து கொண்டவர்களாகத்தான் அவர்களை நான் பார்த்து பரிதாபப்படுகிறேன். அதனால்தான் ஞாநிக்கு இது தேவையா என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன்.

ஹிட்லர் காலத்தில் சில யூதர்கள் தங்கள் இனத்தினருக்கு எதிராகவே பேசினர். என்ன, அவர்கள் கடைசியாக உயிர்க்கொல்லும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், அவ்வளவே. யூதர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேல் அவ்வாறு நடுநிலையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அறிவு முத்துக்களை தமது இனத்தவருக்கு எதிர்ப்பாகவே உதிர்த்த யூதர்கள் பலரை சரித்திரம் பார்த்துள்ளது. Dobi ka kuththaa, naa ghar kaa, naa gaat kaa (வண்ணனின் நாயை வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள், வண்ணான் துறையிலும் சேர்க்க மாட்டார்கள் என்பதைக் கூறும் ஹிந்தி சொலவடை இது). நல்ல வேளையாக இஸ்ரேல் உருவாகி இம்மாதிரி அபத்த காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்று எனக்கு ஒரு ஆறுதல்.

ஜோசியத்தில் நம்பிக்கையில்லாத ஒரு பதிவர் தனது தந்தை தனக்காகப் பெண்பார்க்க ஜோசியரை நாட அவர் எங்கோ சொறிந்து கொண்டே இவரது ஜாதகத்துடன் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி வருவதாகக் கூற, அதற்கு ஜோசியனை எத்தாலோ அடிக்க வேண்டும் என்று இவர் பதிவுபோட, எய்தவனிருக்க அம்பை நோகலாமோ என்று பொருள் வருமாறு நான் பின்னூட்டமிட, "ஆகா என் தந்தையை அத்தால் அடிக்கச் சொல்லும் உன்னை எத்தால் அடிப்பது" என குற்ற உணர்ச்சியுடன் என்னை ஒருமையில் திட்டினார் அப்பதிவர். இந்த மட்டில் தன் தந்தைக்காக அவரைப் பரிந்து பேசவைத்த எனது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் நான் வேறுவேலை பார்க்கப் போனேன். இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் நம்மவரை நாமே விட்டுக் கொடுப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை வலியுறுத்தத்தான். அவ்வாறெல்லாம் செய்தால் இப்பதிவு மாதிரி பல பதிவுகளை பார்க்க நேரிடும்.

All lawyers are dishonest, because all the lawyers I have seen are charlatans. இந்த வாக்கியம் தர்க்க சாத்திரப்படி Fallacy of hasty generalization என்ற பிரிவில் வரும் தவறான வாதமாகும். அதைத்தான் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் செய்து வருகின்றனர். அதற்கு இந்த socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களும் துணை போவதுதான் பெரிய நகைமுரண். அதை எடுத்து சொன்னால், "என்ன செய்ய வேண்டும்? பிராமண சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கி இதுவரை செய்ததெல்லாம் தவறு என்று இம்போஸிஷன் எழுத வேண்டுமா"? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நான் கூறுவது இதுதான். நீங்கள் நுனிமரத்திலிருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறீர்கள். சொன்னால் புரிந்து கொள்ளாது போனால் நீங்களே விழும்போது புரிந்து கொள்வீர்கள். ஆனால், அப்போதும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோலத்தான் இருக்க முயலுவீர்கள் என அஞ்சுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வாய்ஸ் மெயில் செர்வீஸ்

இப்போது நான் கூறப்போவது எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை. ஆகவே சற்று விவரமாகவே கூறி விடுகிறேன்.

தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை டெலிஃபோன் வைத்து கொள்வது என்பது சொகுசாகக் கருதப்பட்டது. பொருளாதாரத்தில் மூன்றுவித தேவைகள் கூறுவார்கள். அத்தியாவசியம் (necessities) சௌகரியங்கள் (comforts) மற்றும் சொகுசுகள் (luxuries) என்பவை அவை. இப்போது ஏதாவது ஒரு வகையில் டெலிஃபோன் பலரிடம் உள்ளது. ஆனால் தொண்ணூறுகளில் டெலிஃபோன் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்ற மாயை இருந்து வந்தது. 1997-ல் டெலிஃபோன் வைத்திருப்பவர்கள் நிச்சயம் வருமான வரி ரிடர்ன் தர வேண்டும் என்றே அக்கால நிதி மந்திரி சிதம்பரம் ஒரு ஸ்கீம் கொண்டு வந்தார். அதாவது ஆறு வகை காரணிகள். வெளி நாட்டுக்கு பயணம் செய்தவர்கள், டெலிஃபோன் வைத்திருப்பவர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், கிளப்புகளில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள் (மீதி இரண்டு வகைகள் மறந்து விட்டன) என்றெல்லாம் அமர்க்களப்பட்டது.

டெலிஃபோன் இணைப்பு பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருப்பு வேறு. 1987-ல் Own Your Telephone (OYT) விண்ணப்பித்த நான் 1990-ல்தான் இணைப்பு பெற முடிந்தது. வீடு மாற்றினால் வரும் தொல்லைகள் தனி. டெலிஃபோன் இணைப்பை புது இடத்துக்கு மாற்றுவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இந்தப் பிண்ணனியில்தான் நான் சொல்ல வரும் வாய்ஸ் மெயில் செர்வீஸ் என்னும் குரல் வழி அஞ்சல் சேவையின் முக்கியத்துவம் தெரியும். 1992-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு டெலிஃபோன் இணைப்பு தேவையில்லை. 376 என்று ஆரம்பிக்கும் எண் தருவார்கள். 376-க்கு பின்னால் நான்கு எண்கள் வரும். உதாரணத்துக்கு எனது எண் 3760602. என்னை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். அதில் முதலில் ஒரு ரிகார்டட் அறிவிப்பு வரும். தேவையானால் நீங்களே உங்கள் குரலில் இதை ரெகார்ட் செய்து கொள்ளலாம். பிறகு ஒரு பீப் வரும். பீப்புக்கு பிறகு உங்கள் மெசேஜை சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட வேண்டியதுதான். நான் இந்த செய்திகளை பெற 3770602-க்கு டயல் செய்ய வேண்டும். எனது சங்கேத எண்ணை டயல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவேன். அவ்வாறு செய்ததும் மெசேஜுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். ஆன்சரிங் மெஷின் போலத்தான். ஆனால் நாம் டெலிஃபோன்களில் வைக்கும் ஆன்சரிங் மெஷின்களுக்கும் இந்த ஏற்பாட்டுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. முதலாவதில் நீங்கள் உங்கள் வீட்டுக்கு போய்த்தான் ஆன்சரிங் மெஷினை ஓட விட்டு செய்திகளைக் கேட்க முடியும். ஆனால் வாய்ஸ் மெயில் செர்வீஸில் அதற்கு அவசியமே இல்லை. நகரத்தில் உள்ள எந்த டெலிஃபோனில் வேண்டுமானாலும் அவற்றை நீங்கள் பெறலாம். ஒரே ஒரு தேவை என்னவென்றால் நீங்கள் அதற்காக உபயோகிக்கும் டெலிஃபோன் DTMF வசதியுடன் இருக்க வேண்டும். அக்காலக் கட்டத்தில் வந்த எல்லா புது டெலிஃபோன்களுமே அவ்வசதியுடந்தான் வந்தன. ஆகவே நீங்கள் அவற்றை அணுகுவதில் கஷ்டமே இல்லை.

சொந்த டெலிஃபோன் இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே. எனது வாடிக்கையாளர்களிடம் இந்த எண்ணை கொடுத்து விடுவேன். ஒரு நாளைக்கு பலமுறை 3770602-க்கு டயல் செய்து செய்திகளை பெறுவேன். மாத வாடகை 100 ரூபாய்கள் மட்டுமே. அதற்கு 500 மெமரி யூனிட்டுகள் செய்தி இலவசம். அப்படியே மெமரி யூனிட்டுகளுக்கு மேல் செய்திகளை சேமித்தாலும் ஒவ்வொரு அதிக யூனிட்டுக்கும் பத்து பைசாதான். செய்திகளை கேட்டவுடன் அவற்றை அழிப்பது நல்லது. எவ்வளவு காலம் சேமிக்கிறீர்களோ அவ்வளவு மெமரி யூனிட்டுகள் செலவழியும். எது எப்படியோ நான் இந்த செர்வீசை வைத்திருந்தவரை ஒரு முறை கூட 100 ரூபாய்க்கு மேல் பணம் கட்டியதில்லை. எனக்கு இந்த அழகில் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

சொந்த டெலிஃபோன் வந்து விட்ட நிலையிலும் எனக்கு இது வரப்பிரசாதமே. எனது டெலிஃபோனுக்கு வரும் கால்களை வாய்ஸ் மெயிலுக்கு மாற்றினால் தீர்ந்தது விஷயம். எந்த வாடிக்கையாளரும் என்னை மிஸ் செய்தார் என்ற நிலை வராது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சேவைக்கு பல விரோதிகள் இருந்தனர். அவர்களுக்காக செயல் புரிய சக்தி வாய்ந்த லாபிகள் உண்டு. முக்கியமாக செல்ஃபோன் மற்றும் பேஜர் சேவைகளே அவை. வாய்ஸ் மெயில் காரணத்தால் என் போன்ற கூட்டாளிகள் செல்ஃபோன் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டோம். வெறும் 100 ரூபாய் எங்கே, ஆயிரக்கணக்கில் வரும் அப்போதைய செல்ஃபோன் பில்கள் எங்கே. ஆகவே தேவையின்றி இந்த சேவையை அழித்தார்கள். அதுவும் ஒரு அறிவிப்பும் இல்லை. 2000 ஆண்டு வந்த போது இச்சேவை நிறுத்தப்பட்டது.

பிறகு செல்ஃபோன்கள் விலை குறைந்து, இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று ஆனதில் வாய்ஸ் மெயில் சேவையின் தேவையும் மறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் அச்சேவை வெற்றி பெறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அத்தனையும் செய்யப்பட்டன.

தன்னால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, இன்னொருவன் வெற்றி பெறக்கூடாது என்ற கேவலமான மனப்பான்மையைத்தான் இதில் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/20/2007

அப்பாடி ஒரு வழியாக முடிந்தது

முந்தா நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கணினி அறையிலிருந்து நடு ஹாலுக்கு வந்து "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "சலக்கு சலக்கு சிங்காரி" என்று பாடிக் கொண்டே போட்ட டப்பாங்குத்தைப் போட்டேன். கொலுவுக்கு அழைக்க வந்திருந்த பக்கத்து வீட்டு குழந்தை வீல் என்று கத்தியபடி தன் அம்மாவின் மடியில் தஞ்சம் புகுந்தது. எதற்கும் அப்பாட்டையும் கீழே பார்த்து விடுங்கள்.



"என்ன திருக்குறள் வேலையை முடித்து விட்டீர்களாக்கும்" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார் என் வீட்டம்மா. பிறகு குழந்தை பயந்த அளவுக்கு குறையாமல் பயந்த அதன் அன்னையையும் சமாதானப்படுத்தினார். "ஒண்ணுமில்லை எங்காத்து மாமா கடந்த பத்து மாதங்களாக இந்த வேலையை செஞ்சுண்டு வரார். ஏதோ தடங்கல்கள் வந்துண்டே இருந்தன. இன்னிக்குத்தான் 133-ஆம் அதிகாரத்தை முடித்தார் என்று கூறி விட்டு வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தார். வீட்டில் நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் வெளியில் வந்து டப்பாங்குத்து போட்ட நான் சுதாரித்து கொண்டு கணினி அறைக்குள் மீண்டும் தஞ்சம் புகுந்தேன்.

நான் இந்தப் பதிவில் குறிப்பிட்ட இந்த வேலை போன ஆண்டு திசம்பர் மாதம் ஆரம்பித்தது.

அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது. நடுவில் மற்ற மொழிகளின் வேலை வேறு. அவற்றை கொடுப்பவர்கள் நேற்றே வேலையை முடிக்க வேண்டும் என்ற ரேஞ்சில் பேசுபவர்கள். இந்த வேலை தள்ளி போட்டு கொண்டே சென்றது. நல்ல வேளையாக எனக்கு இந்த வேலையைக் கொடுத்தவர் உறவினராகப் போனதால் எனக்கு நெருக்கடி எதுவும் தரவில்லை. மேலும் இது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய வேலையாக அவருக்கு பட்டுள்ளது. ஆகவே நிறுத்தி நிதானமாக வேலை செய்ய முடிந்தது.

அதே சமயம் இதை நான் இலவசமாகச் செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். ஆகவே இதில் உண்டாகும் தாமதம் எனது குற்ற உணர்ச்சியை தூண்டி வந்தது. இப்போதுதான் நிம்மதி. நேற்று இந்த வேலையை என்னிடம் ஒப்படைத்த என் மனைவியின் அத்தையன்பர் வேறு விஷயமாக தில்லியிலிருந்து சென்னைக்கு வந்தவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் கணினியில் இருந்த குறள்களை காட்டினேன். இனிமேல் பிழை திருத்தும் வேலைகள்தான் பாக்கி. அவரும் எனது வேலையில் திருப்தி தெரிவித்தார்.

அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 35 + 35 ஆக 70 அதிகாரங்கள் மற்றும் காமத்துப் பால் 25 அதிகாரங்கள். ஆக மொத்தம் 133 அதிகாரங்கள். ஆயிரத்து முன்னூத்து முப்பது குறள்களையும் பாயிரத்தொடு பயின்றால் கவலையே இன்றி எந்த அரசரது அவைக்கும் சென்று ஆஸ்தானப் புலவராய் வீற்றிருக்கலாம் என்னும் பொருள்பட ஒரு பிரசித்தி பெற்ற புலவர் எழுதியுள்ளார். அவர் பெயர் திடீரென நினைவுக்கு வரவில்லை. நான் அவ்வாறு சொன்னதாகவும் நினைவில்லை. :)

அறத்துப்பால் கடினம் என்று நினைத்திருந்தேன். திருவள்ளுவர் குறிப்பிட்ட பல லட்சியங்கள் இக்காலத்துக்கு பொருந்தாது என்ற அச்சம் ஏற்பட்டது. பொருட்பால் அந்த விஷயத்தில் யதார்த்தத்துக்கு மேலும் அருகாமையில் வந்தது. ஆனால் சும்மா சொல்லப்படாது, காமத்துப்பாலில் பின்னி பெடல் எடுத்து விட்டார். பரிமேலழகரே திக்கு முக்காடி போய் விட்டிருக்கிறார். அதுவும் கடைசி இரண்டு அதிகாரங்கள் தூள். காமத்துப் பாலில் வரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு குறளுக்கும் பின்புலன் தரவேண்டிய அவசியம்.

ஊடல் பற்றிய அதிகாரங்களில் வரும் தலைவியிடம் தலைவன் படும்பாடு இருக்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்.

திடீரென தலைவன் தும்ம தலைவி தன்னையறியாது "நீடூழி வாழி" என்று வாழ்த்துகிறாள். திடீரென நினைத்து கொண்டு "எந்தச் சிறுக்கி உன்னை நினைத்தாள்? இவ்வாறு திடீரென ஏன் தும்மினாய்" எனக் கேட்டு டார்ச்சர் செய்கிறாள்.
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தும்மலை அடக்கினால் "யாரை என்னிடமிருந்து மறைக்கிறாய்"? என்ற கேள்வி அம்பாக வருகிறது.
"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

அவள் அழகையே கூர்ந்து பார்த்தால் கூறுகிறாள் வேறு எந்த பொம்பளையோட என்னை ஒப்பிடுகிறீர் என்று
"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினர் என்று"

ஆகா தலைவன் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம். அப்படி இருக்க, எப்போது ஊடல் முடிவது, தன்னுடைய மற்றது தலைவியின் மேல் படுவது என்ற ஆயாசத்தில் போகிறான் தலைவன்.

தோழி அவளை காரணம் கேட்க, இதெல்லாம் பிறகு வரும் புணர்ச்சியின் இன்பத்தை அதிகரிக்க என்று கூறி விடுகிறாள் தலைவி.
"இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு"
"ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்"

ரொம்ப விவரமான தலைவிதான்.

இவ்வாறெல்லாம் வாட்டி விட்டு திருவள்ளுவர் கடைசியில் கூறுகிறார்:
"ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்"

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: இப்பதிவை போட்டது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது. அவரது கணினியில் இகலப்பை இல்லை. சுரதா பெட்டியைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆகவே நிறைய எழுத இயலவில்லை. இப்போது வீட்டிற்கு வந்ததும்தான் முடிகிறது.

10/16/2007

கிருஷ்ணரை பற்றிய பின்னூட்டங்கள்

எனது இப்பதிவில் செந்தழல் ரவி அவர்கள் விளையாட்டாகப் போட்ட இப்பின்னூட்டத்தை குறித்து மதுமேகம் என்ற பெயரில், அனானி ஆப்ஷனில் வந்த பதிவர் ஒருவர் குறை கூறியுள்ளார். ஏட்டிக்கு போட்டியாக அவர் ஏசுபிரானை பற்றி இட்ட பின்னூட்டத்தை நான் ஏற்காதது அவருக்கு தவறாகப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விஷயங்களை விளக்குவதே இப்பதிவு. கூடவே கிருஷ்ணர் புராணமும் வரும்.

முதலில் செந்தழல் ரவி அவர்கள் பின்னூட்டத்தைப் பார்ப்போம்.

"கிருஷணன் ஒரு நீக்ரோ. அதனால் தான் கோபியர்கள் சுற்றிச்சுற்றி வந்தனர். கிருஷ்னர் அலாவுதீன் கில்ஜி மாதிரி அடிமை வம்சத்தை சார்ந்த மன்னர். அவர் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஆப்ரிக்க அடிமை நீக்ரோ குழந்தை...
பகுத்தறிவோடு சிந்தித்தால் மேலும் விளங்கும்...
அரசன் கம்சன் கணவன் மனைவி இருவரையும் அடைத்து வைத்ததாக சொல்கிறார்கள்...
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தால் அவர்களை ஒரே செல்லில் பூட்டி வைக்க அவன் என்ன அவ்வளவு மாங்கா மடையனா ?

கிருஷ்ணன் பிறந்தபோது ஏதும் ஆதாரம் இல்லை...கிருஷ்னன் பிருந்தாவனத்துக்கு 'கொண்டு வரப்பட்ட' ஒரு குழந்தை...
கிருஷ்னன் நீக்ரோ என்பதால் இயல்பாக இருந்த 'பெரிய' விடயம் காரணமாக பெண்கள் சுற்றி சுற்றி வந்தனர் என்கிறது ஒரு ரகசிய செப்பேடு.

டோண்டு சார் இதற்கு என்ன சொல்கிறார்?

இதற்கு நான் அளித்த பதில்:
"//பகுத்தறிவோடு சிந்தித்தால் மேலும் விளங்கும்...
அரசன் கம்சன் கனவன் மணைவி இருவரையும் அடைத்து வைத்ததாக சொல்கிறார்கள்...
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தால் அவர்களை ஒரே செல்லில் பூட்டி வைக்க அவன் என்ன அவ்வளவு மாங்கா மடையனா?//

வாருங்கள் ரவி. உங்கள் கேள்விக்கு எனது விடை இப்பதிவில் ஏற்கனவே போடப்பட்டு விட்டது.
பெரிய விஷயம் பற்றி ஒரு சுவாரசிய தகவல். பிறகு கூறுகிறேன்".

இப்போது பெரிய விஷயம் பற்றி கூறி விடுகிறேன்.

பாரத யுத்தம் முடியும் தருவாயில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தையே அழிக்க விட்ட பிரும்மாஸ்திரம் அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை அடைகிறது. குழந்தை பிண்டமாக வெளியில் வந்து பேச்சு மூச்சற்று கிடக்கிறது. அதன் உயிரைக் காக்க வேண்டுமானால் ஒரு பிரும்மச்சாரி வந்து தான் கால் கட்டை விரலால் அப்பிண்டத்தைத் தொட வேண்டும் என கண்ணன் கூற, குந்தி தேவியும் பல பிரும்மச்சாரிகளை வரவழைக்கிறார். ஒரு பிரயோசனமும் இல்லை. என்ன செய்வது என்று எல்லோரும் திகைக்கும்போது கண்ணனே தான் குழந்தையை தொடுவதாகச் சொல்லி முன்னுக்கு வர, குந்தி தேவியே அவரிடம் இது சற்று ஓவர் இல்லையா எனக் கேட்கிறார். இருப்பினும் கண்ணன் கால் பட்ட குழந்தை உடனே உயிர் பிழைக்கிறது.

இப்போது கண்ணன் விளக்குகிறார், தான் நிஜமாகவே பிரும்மச்சாரி என்று. தன்னுடன் உறவு கொண்ட பெண்கள் எல்லாமே சுகம் பெற்றனர். தான் மட்டும் ஒரு உணர்ச்சியும் இன்றி எல்லாவற்றையும் கடமையாகவே எண்ணியதாகக் கூறுகிறார். ஒரு தூணின் மேல் மாடு உரசினால் மாட்டுக்குத்தான் சுகம், தூணுக்கு ஒன்றும் இல்லை என்ற ஒப்பீட்டை இங்கு வியாசர் தருகிறார். ஆகவே ரவிக்கு நான் கூறுவேன், இது பெரிய விஷயமே அல்ல.

இப்போது கோபப்பட்ட அனானி வாசகரிடம் வருவோம். அவரது முதல் பின்னூட்டம் ஏசுபிரானை தாக்கி வந்தது. நான் மிகவும் மதிப்பவர் ஏசுபிரான். ஆகவே அப்பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. அது சம்பந்தமாக எங்கள் பின்னூட்டப் பரிமாறல்கள்:

"Mr. மதுமேகம் said...
டோண்டு,
நீங்கள் இதற்கு முன் இடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை இது வரை பார்க்கவில்லையா?
ஒருவேளை நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைவிட அருவருப்பாக ஏதேனும் அதில் இருக்கிறதா?
கீழான ஜந்துக்களோடு தைரியமாக மோதிய நீங்கள் இப்போது யாருக்காக அல்லது எதற்காக அஞ்சுகிறீர்கள்?
ஒருவருடைய பலகீனத்தை வைத்து நடக்கும் ப்ளாக் மெயில்கள் போல வேறு ஏதேனும் ப்ளாக்மெயில்களில் சிக்கியுள்ளீரா?
October 14, 2007 8:24 AM

dondu(#11168674346665545885) said...
//நீங்கள் இதற்கு முன் இடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை இது வரை பார்க்கவில்லையா?
ஒருவேளை நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைவிட அருவருப்பாக ஏதேனும் அதில் இருக்கிறதா?//
உங்கள் பின்னூட்டத்தை நான் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பிரசுரம் செய்யவில்லை.
1. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டம். அதைக் கூட பொறுத்து கொள்ளலாம், தமாஷ் கும்மியாக இருக்கும் பட்சத்தில், ஆனால்
2. நான் மிகவும் மதிக்கும் ஏசுபிரானை பற்றி மிக அவதூறுகள் அப்பின்னூட்டத்தில் உள்ளன. ஆகவே அதை நான் அனுமதிக்கவில்லை.
மற்றப்படி டோண்டு ராகவனை பிளாக்மெயில் செய்ய ஒருவர் இனிமேல் பிறந்துதான் வர வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
October 14, 2007 8:34 AM

Mr. மதுமேகம் said...
டோண்டு,
தங்களுடைய ஜல்லி பதிலுக்கு நன்றிகள்.
>>>> 1. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டம். <<<<
அப்படியா? அப்படியானால் கிருட்டிணன் பின்னால் பெண்கள் சுற்றினார்கள் என்பது தங்களுடைய "என் நாடக மற்றும் சாரண இயக்க அனுபவங்களோடு" எங்கனம் தொடர்புடையது என்பதை விளக்க முடியுமா?
>>>> ஆனால்
2. நான் மிகவும் மதிக்கும் ஏசுபிரானை பற்றி மிக அவதூறுகள் அப்பின்னூட்டத்தில் உள்ளன. ஆகவே அதை நான் அனுமதிக்கவில்லை. <<<<
அவை கிருட்டிணனுக்கு 'பெரிய' விடயம் இருந்தது என்பதைவிட மோசமான அவதூறாக எங்கனம் ஆகிவிட்டது?
கவனித்துப் பார்த்தால் கிருட்டிணனைப் பற்றி வந்திருக்கும் அதே கருத்து மற்றும் வாக்கிய அமைப்பில்தான் இந்த ஏசு பற்றிய கருத்தும் வாக்கியங்களும் அமைக்கப்பட்டன.
மேலும் கைக்கு வந்தபடி கசுமாலம் எழுதியதுபோல இல்லாமல் ஆதாரங்களும் அளிக்கப்பட்டிருந்தன. ஆதாரங்களோடு பேசப்படுகிற ஒரு விடயத்தைவிட ஆதாரமில்லாமல் அவதூறு சொல்வது மட்டுமே காரணமாக இருக்கக்கூடிய விடயம் எங்கனம் உயர்ந்ததாகிவிட்டது?
கண்ணன் பெயரை சொல்லிக்கொள்ளுவது உங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக மட்டுமே இருக்கலாம். அவனுக்காக உருகி வாழ்க்கையை அர்ப்பணித்த உங்களுடைய முன்னோர்களைப் போல எளிமையான, நேர்மையான அந்தணனாக இருக்கவேண்டும் என்று உங்களிடம் சமூகம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், உங்களைப் பெற்ற உத்தமர்களும், அவர்களது முன்னோர்களும் தங்கள் குலத்தில் பிறந்த ஒருவர் கிருட்டிணனைப் பற்றிய இந்த கேவலமான அவதூறை மக்கள் மத்தியில் மார்க்கெட்டிங் செய்து மகிழும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ?
ஒருவேளை முன்னோர்கள் எல்லாம் இல்லை. அதெல்லாம் பொய். உடல் நீத்த முன்னோர்கள் எல்லாம் "இறுதித் தீர்ப்பு நாளுக்காகவும்" "நரகத்தில் உழல்வதற்காகவும்" காத்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் நம்பலாம்.
கண்ணனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஏசு ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதுபற்றி மட்டும் சொல்லக்கூடாது என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.
கொஞ்சம் விளக்குவீர்களா?
இதை ஏன் நான் கேட்கிறேன் என்றால், கண்னன் என் நண்பன். காலம் கடந்தும் என் போன்ற சாதாரண மனிதர்களை வழிநடத்தும் நண்பன். அவனைப் பற்றி அவதூறினை நீங்கள் பரப்புவதால் விளக்கம் வேண்டுகிறேன்.
இது தவறு என்று தோன்றினால் நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடியது கண்ணனுக்காக வாழ்ந்த, கண்ணனின் பக்தர்கள் என்பதற்கு அடையாளமாக தங்களது திருமேனியில் சங்கு சக்கர அடையாளங்கள் நெருப்பினால் பதித்துக்கொண்ட உங்களுடைய முன்னோர்களிடம்தான் இருக்கும்.
இந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிப்பீர்களா என்பது தெரியவில்லை.

dondu(#11168674346665545885) said...
//இதை ஏன் நான் கேட்கிறேன் என்றால், கண்னன் என் நண்பன். காலம் கடந்தும் என் போன்ற சாதாரண மனிதர்களை வழிநடத்தும் நண்பன். அவனைப் பற்றி அவதூறினை நீங்கள் பரப்புவதால் விளக்கம் வேண்டுகிறேன்.//
இது சீரியசான அப்சர்வேஷனாகப் பட்டதால் எனது பதிலை தாமதித்தேன்.

1. கண்ணனை பற்றி பின்னூட்டம் இட்டது செந்தழல் ரவி, தன்னுடைய சொந்தப் பெயரில்.
2. அதில் அவர் முதலில் கம்சன் சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருந்தது. ஆகவே அதை அனுமதித்து கேள்விக்கும் பதில் சொன்னேன்.
3. மற்றப்படி அவர் நீக்ரோ சம்பந்தமாகப் பேசியது அப்பட்டமான உளறல். கண்ணன் பக்தர்கள் (நானும் அவர்களில் வருவேன்) இதை உணர்வார்கள். எதிர்வினை கொடுக்கக் கூட லாயக்கில்லாதது அது.
4. ஆனால் செந்தழல் ரவி ஏன் அதை கூறினார்? அவரே கூறியபடி இப்பதிவில் கும்மியடிக்கத்தான் வந்தார். அதில் இதை சும்மா கலாய்த்தலுக்காக போட்டிருக்கலாம். ஏனெனில் அவர் என்னுடைய சிறந்த நண்பர். நேரிலேயே பார்த்து பேசி பழகியிருக்கிறேன்.
5. ஆனால் உங்களை பற்றி என்ன கூறுவது?வெறுமனே மதுமேகம் என்ற பெயரில் அனானியாக வந்தீர்கள். உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருந்தால் பெரிய கலாட்டாவாகியிருக்கும். நீங்கள் யாரென்றே தெரியாத நிலையில் நான்தான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது எனக்கு தேவையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

Mr. மதுமேகம் said...
//உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருந்தால் பெரிய கலாட்டாவாகியிருக்கும். நீங்கள் யாரென்றே தெரியாத நிலையில் நாந்தான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது எனக்கு தேவையா?//
கலாட்டா நடக்காது என்பதால் கிருட்டிணனை இகழும் பின்னூட்டத்தை, உளறல் என்று தெரிந்தாலும் வெளியிடுவீர்கள்.
கலாட்டா நடக்கும் என்பதால் ஏசுவிற்கும் அவரது சீடர்களுக்கும் ஓரினச் சேர்க்கை உறவு இருந்திருக்கலாம் என்கிற பின்னூட்டத்தை வெளியிட மறுத்துவிட்டீர்கள்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கலாட்டா, வன்முறை இவற்றிற்குப் பயந்து செல்லும் வாழ்க்கைதான் பெரும்பாலான மனிதர்களுடையது. நேர்மை, எது தவறு எது சரி என்பது குறித்த தெளிவு இருப்பினும் வன்முறையே சிலருடைய முடிவுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.
ஆனால், இந்த கிருட்டிணனோ சுயதர்மம் என்று பேசுகிறான். வெளியிலிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள், இகழ்ச்சிகள், கலாட்டாக்கள் இவற்றின் அடிப்படையில் இல்லாமல், ஒவ்வொருவரும் தன்னுடைய சுயதர்மத்தை செயல்படுத்தவேண்டும் என்கிறான்.
அப்படிப்பட்ட கிருட்டிணன் வழி நடப்பவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லுவதும், அதே சமயம் கலாட்டாவிற்கு அஞ்சுவதுமாக எதிரெதிர் செயல்பாடுகள் கொண்டிருப்பது சராசரி மனிதர்கள் செய்வது இல்லையே.
சுயதர்மம் பயிலும் சிலர் நீங்கள் வெளியிட மறுத்த பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு கிருட்டிணன் அருள் உண்டு என்பது தெரிகிறது.
தமிழ் இணையம் குறித்த ஆராய்ச்சிக்காக நான் எடுத்துக்கொண்ட பதிவுகளில் தங்களுடையதும் ஒன்று.
நடைமுறை உலகைவிட, இணையம் அதிக சுதந்திரம் தருகிறது என்பது உண்மையல்ல என நிறுவவும், இணையம் நடைமுறை உலகைவிட வன்முறையை அதிகம் வெளிப்படுத்தும் ஒரு கருவி எனவும் நிறுவுவதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
என்னுடைய தீஸிஸில் தங்களுக்கும் நன்றிகள் செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
மற்றபடி, சிங்கமுத்து என்கிற பெயரில் புத்திமட்டாய் எழுதப்பட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்த எதிர்விளைவு மற்றொரு நகைச்சுவை.
நான் எந்த சாதி பற்றியும், மதம் பற்றியும் குறிப்பிடாதபோது, சாதி மதம் பற்றி எழுதியுள்ளதாக அடித்திருப்பது அக்மார்க் கப்ஸா.
அந்த கப்ஸாவிற்கு நீங்கள் செய்யும் வக்காலத்துதான் கவலைக்குரியது.
இந்த சமுதாயம் எங்கே போகிறது?
உங்களுடையது நியாயமற்ற விளக்கம் என்பது தெரிகிறது. அதுகுறித்து என்னுடைய கருத்தோடு இந்த கேள்வி-பதில் விளையாட்டை நிறுத்திக்கொள்ளலாம். இப்பதிலை உங்களது பதிவில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுமானால், இதைப் படிப்பவர்கள் எது சரி, எது தவறு என்று அவர்களே முடிவு செய்துகொள்வர்.
இப்பதிலை வெளியிடத் தேவையான தைரியம் உங்களிடம் இன்னும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.
October 16, 2007 7:46 AM

dondu(#11168674346665545885) said...
//இப்பதிலை வெளியிடத் தேவையான தைரியம் உங்களிடம் இன்னும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.//
என்னிடம் நிச்சயமாக தைரியம் உண்டு. ஆனால் அது அசட்டு தைரியம் ஆக முடியாது. நான் ஏற்கனவே சொன்னபடி கிருஷ்ணன் நீக்ரோ என்பது அப்பட்ட உளறல். அது பதில் பெற லாயக்கில்லாதது.
அதே சமயம் ஏசு பிரான் பற்றி நீங்கள் சொன்னதை சொந்த அடையாளங்களுடன் நீங்கள் சொல்லத் தயாரில்லை என்பது உங்கள் "தைரியத்தின்" நிரூபணமாகிறது.
நீங்கள் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இப்பதிவை படிக்கும் மற்றவர் அங்கு போய் பார்த்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
October 16, 2007 8:01 AM

இவ்வளவுதான் விஷயம். மறுபடியும் கூறுவேன். கிருஷ்ண பக்திக்கு நான் யாருக்கும் குறைந்தவன் அல்ல. அதே சமயம் கிருஷ்ணர் ஒரு நல்ல நண்பர். கலாய்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். அவரைப் பற்றிய பின்னூட்டத்தை நான் வெளியிட்டதே செந்தழல் கேட்ட கேள்வி ஒன்றை வைத்து நான் ஏற்கனவே பதிவைப் போட்டதே காரணம். மற்றப்படி நீக்ரோ விஷயம் பிதற்றல் என்பதே நிஜம்.

கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது வேறு சில விஷயங்களையும் கூறுவேன். இப்போது நாத்திகவாதிகள் திட்டுவதெல்லாம் ஜுஜூபி என்ற அளவில் அவர் சமகாலத்தவரே திட்டியுள்ளனர். அவர்களில் உதங்கர் முக்கியமானவர். பாரத யுத்தம் முடிந்த பிறகு அவர் கிருஷ்ணரை சபிக்கவே துணிந்தார். ஆயினும் மாயக் கிருட்டினன் அவரை சாந்தப்படுத்தினார். துரியோதனன் வாய்மொழியாக வியாசரே திட்டியதாக ராஜாஜி அவர்கள் தனது "வியாசர் விருந்தில்" குறித்துள்ளார். ஆயுதமே ஏந்த மாட்டேன் என்றிருந்த கிருஷ்ணரை வேண்டுமென்றே தீவிரமாக சண்டை செய்து கிருஷ்ணரே சங்கு சக்கிரத்துடன் தன்னை கொல்ல வரும் அளவுக்கு உசுப்பி மகிழ்ந்தவர் பீஷ்மர். ஆனால் ஒன்று கிருஷ்ணரை புகழ்பவரும் சரி இகழ்பவரும் சரி ஒருவித பந்தத்தையே உணர்ந்தனர்.

ஆக டோண்டு ராகவன் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்ததால் கிருஷ்ணர் பெருமைக்கு பங்கம் வந்து விடுமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/12/2007

என் நாடக மற்றும் சாரண இயக்க அனுபவங்கள்

நான் நடித்த நாடகங்கள் எல்லாமே - அவற்றில் இரண்டு நாடகங்கள் தவிர - நான் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது நடந்தவை. முதலில் அந்த விதிவிலக்கு நாடகங்களை பற்றி கூறிவிட்டால் பிறகு பதிவில் சாரணர் இயக்கத்தைப் பற்றி எழுத தோதாக இருக்கும். நான் இந்தப் பதிவில் குறிப்பிட்ட அபிமன்யு வேடம் இதில்தான் போட்டேன். மாயா பஜார் கதை. சமீபத்தில் 1954-ல். அப்போது எனக்கு வயது 8. வத்சலாவாக நடித்தது ஒரு ஆறு வயது பெண். அதிலிருந்து அபிமன்யு எனக்கு மகாபாரதத்தில் மிகப் பிடித்த பாத்திரமாகிப் போனான். மாயா பஜார் (1957), வீர அபிமன்யு (1965) ஆகிய படங்கள் எனக்கு பிடித்த படங்கள்.

எனக்கு சுமார் ஆறு வயதாக இருக்கும் போது அப்போது படித்த வகுப்புக்குள்ளேயே ராமாயண நாடகம் போட்டார்கள். நான் டீச்சரின் ஃபேவரைட் மாணவன் ஆனதாலும், என் பெயர் பொருத்தத்தாலும் எனக்கு ராமர் வேடம், என்னுடன் கூடவே திரிந்து கொண்டிருக்கும் வெங்கடேசனுக்கு லட்சுமணன் வேடம், மைதிலி என்ற பெயர் இருந்ததால் அப்பெண்ணுக்கு சீதை வேடம், அன்று வெள்ளிக் கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்து கூந்தலை விரித்து போட்டு வந்ததால் கீதா என்ற அப்பெண்ணுக்கு கைகேயி வேடம். மற்ற சாய்ஸ்கள் ரேண்டமாக வந்தன. விஸ்வாமித்திரர் ராமனை தன் யாகத்தைக் காக்க அழைத்து போவதிலிருந்து ராமர் வனவாசம் செல்லும் வரை நாடகம். மேலும் நடந்திருக்கும், அதற்குள் பெல் அடித்து விட்டார்கள். அதில் நான் கடைசியாக பார்த்தபோது, ராமர் காட்டுக்கு போவதால், தசரதர் (கணேசன்) குப்புற படுத்துக்கொண்டு மயக்கமாக இருந்தார். விசுவாமித்திரரும் (ரங்கநாதன்) ராவணனும் (சந்தானம்) குனிந்து பார்த்து கொண்டு தசரதருக்கு கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தார்கள். பெல் அடிக்க, தசரதர் உட்பட எல்லோரும் பைகளை தூக்கிக் கொண்டு ஓவென்று கத்திக் கொண்டே வீட்டுக்கு ஓடினோம்.

சாரணர் இயக்கத்தில் cubs (7 - 12 வயது), scouts (> 7 - 12 வயது) மற்றும் rovers (> 18 வயது) பிரிவுகள் உண்டு. 7 லிருந்து 16 வயது வரை முதல் இரண்டு பிரிவுகளில் செயலாற்றியிருக்கிறேன். கேம்புகளுக்கு செல்லுவோம். இரவுகளில் கேம்ப் ஃபயர் நடக்கும். நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். cubs பிரிவில் அறுவர் கொண்ட குழுக்களாக பிரிந்திருப்போம். குழுத்தலைவருக்கு சிக்ஸர் என்று பெயர். ஒவ்வொரு குழுவாக வந்து ஏதேனும் பெர்ஃபார்மன்ஸ் தர வேண்டும். அவை பாடல்களாக இருக்கலாம் கத்தல்களாக (yelling) இருக்கலாம். சிறு நாடகங்களாகவும் இருக்கலாம். மேக்கப் ஒன்றும் கிடையாது.

கேம்புகள் பெரும்பாலும் ஆவடியில் டோனக்கேலா என்ற இடத்தில் நடக்கும். ஆவடி வரை ரயிலில் சென்று கேம்ப் நடக்கும் இடத்துக்கு நடந்து செல்வோம். போகும் போது களைப்பு தெரியாதபடி பாட்டுகள். உதாரணத்துக்கு:

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே சில நாய்கள் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே பாத்தா லொள் லொள் இங்கே பாத்தா லொள் லொள்
எங்கே பாத்தாலும் லொள் லொள்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே சில பூனைகள் உண்டு ஆவடி பக்கத்திலே
அங்கே பாத்தா மியாவ் மியாவ் இங்கே பாத்தா மியாவ் மியாவ்
எங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்

இதே வகையில் கிளிகள், காக்காய்கள் என்றெல்லாம் வெவ்வேறு சுருதியில் கத்திக்கொண்டே செல்வோம். உள்ளூர் நாய்கள் பின்னணி இசையாக ஊளையிடும். இன்னும் ஓரிரு பாட்டுகள்:

We all belong to Bharat Scouts
We all belong to Bharat Scouts
We all belong to Bharat Scouts
And so say all of us.

Maugli is hunting
Kill Sherkhan
Skin the cattle eater
Kill Sherkhan

இரண்டாம் பாட்டில் ஒரு விசேஷம். கப்ஸ் ஆக இருக்கும்போது பல பதவிகள் Rudyard Kipling எழுதிய Jungle Book-ல் வரும் பாத்திரப் பெயர்களே. தலைவர் பெயர் அகேலா, உபதலைவர் பெயர் வைட் வூட் (நாங்கள் வைட்டூட்டு என்று கூப்பிடுவோம், போன மாதம்தான் என் அக்கால நண்பன் அதன் சரியான பெயரை எனக்கு சொன்னான்), பகீரா, பாலு, ஹாத்தி என்றெல்லாம் கூட இருந்தனர். மேலே உள்ள பாட்டில் வரும் ஷேர்கான் ஒரு புலி. அக்கதையின் ஒரே வில்லன் கூட.

யெல்லிங் எனப்படும் கத்தல் வேறுவகை. கேம்ப் ஃபயர் சமயம் இரவுக் குளிரை மறக்க செய்யப்படுவது. ஒரு உதாரணம்:

பூம சக்கா பூம சக்கா பூம் பூம் பூம்
ரக்க சக்கா ரக்க சக்கா ரா ரா ரா
பூம சக்கா ரக்க சக்கா
யார் நீங்கள்
நாங்கள் பாரத் ஸ்கௌட்ஸ் இது தெரியாதா?

எவ்வளவு உரக்க முடியுமா அவ்வளவு உரக்க கத்த வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் கையை டப்பாங்குத்து போடும் ஸ்டைலில் ஆட்ட வேண்டும். கடைசி அடி வரும்போது ஒரு கை விரலை உயர்த்தி ஒற்றைக் காலில் நின்று தன்னைத் தானே சுற்ற வேண்டும். பார்க்க வேடிக்கையாக இருக்கும். சுற்ற முடியாது பேலன்ஸ் தவறி சிலர் கீழே விழுவதும் உண்டு.

இப்போது நாடகங்கள். இவையும் கேம்ப் ஃபயர் போதுதான் அனேகமாக நடத்தப் படும். கற்பனை வரட்சி காரணமாக் பல நாடகங்கள் ரிபீட்டு என்று பலமுறை போடப்படும். ஒரு முறை எல்லா குழுக்களும் ஒரே நாடகத்தை ஒருவர் பின் ஒருவராக போட ஸ்கௌட் மாஸ்டர் டரியல் ஆனார். உதாரணத்துக்கு சில நாடகங்கள்:

முட்டாள்கள் வகுப்பு:
வாத்தியார்: சோமு பூமி உருண்டை என்பதற்கு ஆதாரம் கொடு.
சோமு: சார் ஆரஞ்சு பழத்தின் மேல் எரும்பை விட்டால் அது சுறிக் கொண்டு புறப்பட்ட இடத்துக்கே வரும். ஆகவே பூமி உருண்டை.
வாத்தியார்: கரெக்ட், சபாஷ்.
மாணிக்கம்: சார், வாழைப்பழத்தின் மேல் எறும்பை விட்டாலும் அப்படித்தான் ஆகும். ஆகவே உலகம் வாழைப்பழ வடிவமே.
ஆசிரியர்: (ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு): கரெக்ட். உட்கார்

ஒரு பையன் லேட்டாக வர, ஆசிரியர் கேட்கிறார். இசக்கி, ஏன் லேட்?
இசக்கி: சார் ஸ்கூலுக்கு வரும்போது ஒரு கிழவி ஜானி ஜான் தெருவுக்கு வழி கேட்டாங்க. அவங்களை போய் கொண்டு விட்டேன். ஆனால் திரும்ப வரும் வழியை மறந்து விட்டேன்.
ஆசிரியர்: அப்புறம் என்ன ஆச்சு?
இசக்கி: அந்தக் கிழவிதான் சார் திரும்ப கொண்டு வந்து விட்டாங்க

இன்னொரு முக்கியமான நாடகம் "ஒற்றுமையில் உண்டு வாழ்வு" என்பதை விளக்குவதாகும்.
மரணப் படுக்கையில் தந்தை. அவருக்கு மூன்று பிள்ளைகள், ஒற்றுமையில்லாதவர்கள். தந்தை எல்லா பிள்ளைகளையும் அழைத்து, ஆளுக்கு ஒரு சுள்ளி கொடுப்பார். அதை உடைக்கும்படி கூறுவார். அவர்களும் சுலபமாக உடைப்பார்கள். பிறகு பல சுள்ளிகள் அடங்கிய காட்டு ஒன்றை கொடுப்பார். அதை உடக்க இயலாது. பின்னாலிருந்து ஒரு ஆழ்குரல் கேட்கும், "ஆகவே ஒற்றுமையில் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு" என்று. ஒரே ஒரு நாள் மட்டும் சற்று வேறு சீன். நான் மரணப்படுக்கையிலிருக்கும் அப்பா வேடம் போட்டேன். ஒற்றை சுள்ளிகளை உடைத்தார்கள் பிள்ளைகள். கட்டு சுள்ளியை முதல் இரண்டு பிள்ளைகள் உடைக்க முடியாது மூன்றாம் பிள்ளையிடம் தர, அவன் தம் பிடித்து அதையும் உடைத்து தொலைத்தான். பிறகு என்ன எல்லோரும் (மரணப்படுக்கையில் இருக்கும் அப்பா உள்பட) எழுந்து ஓட்டம்தான்.

கை தட்டுவது கூட ஒரு கணித ஒழுக்கத்தில் இருக்கும். டக்டக்டடடக் டக்டக்டடடக் டக்டக்டடடக் (12123 12123 12123) என்பதற்கேற்ப தட்டி விட்டு அப்படியே விட வேண்டும் மூன்று முறைக்கு மேல் தட்டக்கூடாது. அவ்வாறு தட்டுவதற்கும் ஸ்கௌட் மாஸ்டர் Scout claps go என்று முதலில் கூற வேண்டும்.

அதெல்லாம் ஒரு கனாக்காலம். சாரணர் இயக்கம் பற்றி மேலும் அறிய நீங்கள் இந்த பக்கத்துக்கு போகலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/10/2007

என் நாடக அனுபவங்கள்

நாடகத்தில் நான் நடித்த அனுபவங்களை பற்றி இங்கு கூற வரவில்லை. அவை அவ்வளவாக இல்லை. சாரணர் இயக்கத்தில் இருந்த போது போட்ட நாடகங்களை பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன். நான் இங்கு கூற வருவது மற்றவர் போட்ட நாடகங்களைப் பார்க்க நான் சென்ற சமயங்களில் நிகழ்ந்தவை பற்றித்தான்.

சமீபத்தில் 1972-ல் பம்பாயில் ஷண்முகானந்தா ஹாலில் மேஜர் சுந்தரராஜன் குழுவினரின் நாடகங்கள் நடந்தன. அவற்றில் ஒன்று டைகர் தாத்தாச்சாரி. இரண்டாம் பால்கனியில் நான் பைனாக்குலருடன் ஆஜர் (அது என் தந்தை சமீபத்தில் 1956-ல் ரூபாய் 4.50 க்கு வாங்கியது). இரண்டாம் பால்கனியில் ஒரு சௌகரியம் என்னவென்றால் மேடையின் முழு அகலமும் நம் பார்வைக்கு வரும். அதோடு பைனக்குலர் வேறு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நடிக நடிகையர் முகபாவங்கள் எல்லாமே க்ளோசப்பில் பார்ப்பது போல பார்க்கலாம். என்ன, பைனாக்குலரை வெகு நேரம் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். அந்த நாடகம் போட்ட போது ஒரு தவறை கண்டுபிடித்தேன்.

நாடகம் முடிந்தது. நேராக க்ரீன் ரூமுக்குள் சென்றேன். சுந்தரராஜனிடம் சென்று நான் "சார் நான் இரண்டாம் பால்கனியிலிருந்து பைனாக்குலர் மூலம் உங்கள் நாடகம் பார்த்தேன். அதில் ஒரு குறை கண்டேன்" என்றேன். அவரும் சிரித்த முகத்துடன் என்னை மேலே கூறுமாறு சொன்னார். "உங்கள் மனைவியாக நடித்தவர் அழகாக ஐயங்கார் மடிசார் கட்டு புடவை கட்டியிருந்தார். சாதாரணமாக ஐயர் கட்டுதான் போட்டு சொதப்புவார்கள். ஆனால் இங்கு அந்த தவறு நடக்கவில்லை. வேறொரு தவறுதான் நடந்தது. அதாவது உங்கள் மனைவியாக வந்த நடிகை மெட்டி போடவில்லை" என்றேன். அவ்வளவுதான் மேஜர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. இடிக்குரலில் அந்த நடிகையை அழைத்தார். அவரும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தார். "என்ன நளினி, நீ மெட்டி போடவில்லையா" என்று கர்ஜிக்க அவரும் பயந்த குரலில், "இல்லீங்க அது தொலைந்து போயிற்று. கடைசி 3 ஷோக்களாக போடவில்லை என கூறினார். "என்னம்மா இது ஒரு ஆறேமுக்காலணா விஷயம், ஏதாவது வாங்கி போட்டிருக்கலாமே. இப்ப சாரைப் பாரு (என்னை சுட்டிக் காட்டியபடி) இரண்டாம் பால்கனியிலிருந்து பைனாக்குலர் வச்சு பாத்துட்டு சொல்றார்" என்றார் சுந்தரராஜன். நளினி அவர்கள் என்னை பாதகா என்பது போல பார்த்தார்.

சமீபத்தில் 1981. விஜயகுமார் மற்றும் மஞ்சுளா குழுவினரது நாடகம் "சிவசக்தி". அதில் மஞ்சுளா ஒரு கவிஞர், அவர் எழுதிய கவிதைகளுக்கு விஜயகுமார் மெட்டமைத்து பாடுபவர். நல்ல வெற்றிகரமான ஜோடி. அவர்களுக்குள் தகராறு வந்து விஜயகுமார் இன்னொரு கவிஞரை ஏற்பாடு செய்கிறார். அவர் ஒரு தெலுங்கு கவிஞர். அவர் ஒரு கவிதை தெலுங்கில் கூற, விஜயகுமார் அதை செலக்ட் செய்ய, ஒத்திகை பார்க்கும் சமயத்தில் மஞ்சுளா அக்கவிதை தான் ஒரிஜினலாக தமிழில் எழுதியதின் தெலுங்கு மொழிபெயர்ப்பு என்ற உண்மையை ராபணா என்று உடைக்கிறார். பிறகு நாடகம் அதன் போக்கில் செல்ல கடைசியில் மஞ்சுளாவே கவிதை எழுத, விஜயகுமார் அதைப் பாட என்று கதை போகிறது. இதில் என்ன வேடிக்கை மஞ்சுளா எழுதியதாகச் சொல்லப்பட்ட அத்தனை கவிதைகளும் வடமொழியில்தான் இருந்தன. தமிழில் அல்ல. வழக்கம்போல கிரீன் ரூமில் நாடகம் முடிந்ததும் டோண்டு ராகவன் ஆஜர். முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன். "என்ன சார் தமிழ் கவிஞர்னு கதையில் சொன்னீர்கள், ஆனால் அத்தனையும் வடமொழியில் அல்லவா இருந்தன" என்று கேட்டேன். விஜயகுமார் அசந்தாலும் சற்று சுதாரித்தார். என்ன சார் இவங்களுக்கு வடமொழி தெரியாதுன்னு எங்கேயுமே சொல்லவில்லையே" என்றார். அது சரி அதுக்காக பகவத் கீதை ஸ்லோகங்களை அப்படியே போடணுமா என்று கேட்டதும் திகைப்படைந்தார். நான் மேலும் கூறினேன், "ஸ்திதப் பிரக்யனை பற்றிய ஸ்லோகங்கள் அவை" என்றேன். உங்களுக்கு எப்படித் தெரியும் என்று மஞ்சுளா என்னைக் கேட்க, அந்த ஸ்லோகங்கள் ஒப்பிக்கும் போட்டியில் நான் மூன்றாம் பரிசை சமீபத்க்தில் 1955-ல் பெற்றதை பற்றி கூற, கணவன் மனைவி இருவருமே மெர்சல் ஆனார்கள். விஜயகுமார் என்னை அப்படியே அணைத்து சற்று தள்ளி அழைத்து போய், "சார், இதெல்லாம் யார் பார்க்கப் போறாங்கன்னு நினைத்து விட்டோம். நீங்கள் சொல்லி வைத்தது போல வந்தது அதிர்ச்சிதான், கண்டுக்காதீங்க" என்று கூறினார். என்ன செய்வது, அவர்கள் இருவருமே எனக்கு ஃபேவரைட் ஜோடி. ஆகவே இனி வரும் காட்சிகளிலாவது யாராவது தமிழ் கவிஞரை வைத்து தமிழ்க் கவிதைகள் போட்டு கொள்ளுமாறு கூறிவிட்டு வந்தேன். அவரும் அவ்வாறே செய்கிறேன் என்றார். அவ்வாறே செய்தாரா இல்லையா எனத் தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/09/2007

மதன் சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?

எனது இப்பதிவில் மதனைப் பற்றி ஒரே ஒரு ரெஃப்ரன்ஸ்தான் செய்தேன். அப்பதிவு ஞானிக்காக போட்டது. இப்பதிவில் மதன் கூறியதை பற்றி இன்னும் விரிவாகக் கூறுகிறேன்.

மதனுக்கு வந்த கேள்வி பதில் ஒன்றில் பண்டைத் தமிழக வரலாற்றை எழுதத் தேவையான நூல்கள் இல்லை எனக் கூறினார். உதாரணத்துக்கு தில்லி சுல்தான்கள் பற்றி அவர் எழுதிய தொடர் பல புத்தகங்களைப் படித்து போடப்பட்டது. அதே போல தமிழில் இல்லை எனக் கூறுகிறார். உடனே அவர் பார்ப்பனர் என்பது ஞாபகத்துக்கு வந்து எல்லோரும் சாமியாடுகிறார்கள்.

இப்போது எனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன். நான் அப்போது தில்லியில் இருந்தேன். சாலமன் பாப்பையாவும் அவர் குழுவினரும் ஒரு பட்டி மன்றத்துக்காக வந்திருந்தனர். என் மனைவியின் அத்தையன்பருக்கு சாலமன் பாப்பையாவை நன்கு தெரியும். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு சற்று முன்புதான் சென்னை தொலைகாட்சியில் புகழேந்திப் புலவர் சீரியல் முடிந்திருந்தது. அதில் புகழேந்திப் புலவர் இளைஞனாக வருகிறார். ஒட்டக்கூத்தர் இருக்கிறார். ஆனால் கம்பர் இல்லை. அவர் இவர் காலத்துக்கு முந்தியவர். கதை நடக்கும்போது உயிருடன் இல்லை. ஆனால் சிவாஜி மற்றும் பானுமதி நடித்த அம்பிகாபதி படத்தில் புகழேந்திப் புலவர் மிக வயதானவர். கம்பருக்கு ஈடு. அவர் மகள் கம்பரின் தத்து புத்திரியாக வளர்கிற்தாள். சாலமன் பாப்பையாவிடம் நான் கேட்டது இதுதான். இதில் எந்த வெர்ஷன் உண்மையானது. சாலமன் பாப்பையாவோ தனக்கும் அது தெரியாது என்றே கூறிவிட்டார். மேலும் இதெல்லாம் யாரும் சரியாகக் குறிக்கவில்லை என்றும், தானும் மற்றவரும் செவிவழிச்செய்திகளை வைத்து கொண்டே ஒப்பேற்றுவதாகவும் கூறி விட்டார்.

பொதுவாகவே புலவர்கள் பரிசிலுக்காக அரசர்களை இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து பாடுவதுதான் நடந்திருக்கிறது. யாருக்குமே தினசரி நிகழ்ச்சிகளை குறித்து வைத்து கொள்ளும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

இதுவே அக்பர் காலத்து விஷயங்கள் பல ஆவணங்களை சரியாக வைத்ததாலேயே வெளியில் வந்துள்ளன. உதாரணத்துக்கு ரா.கி. ரங்கராஜனின் "வாளின் முத்தம்" என்ற நாவலில் அக்பர் அளித்த விருந்தில் என்னென்ன பரிமாறினார்கள் என்பது முதற்கொண்டு எழுதப்பட்டிருந்தது.

ஆனால் நம் தமிழகத்தில் இம்மாதிரி ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவ்வளவு ஏன், 1949-ல் ஈவேரா அவர்கள் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டது பற்றி போட்ட பதிவுக்காக அந்த ஆண்டு ஹிந்து பத்திரிகைகளை பார்க்க போன போது ரொம்பவும்தான் அலைகழித்தார்கள். அதுவும் தேதி எல்லாம் நான் சொன்னால்தான் சம்பந்தப்பட்ட பேப்பரை பார்க்க இயலும் என்றும் கூறினார்கள். அதுவே நியூ யார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் தனியாக இண்டக்ஸே உண்டு. வெறுமனே பெரியார் என்ற பெயரில் தேடினாலே சம்பந்தப்பட்ட ஆண்டில் அவரைக் குறித்த அத்தனை செய்திகளை பற்றியும் குறிக்கும் களஞ்சியம் கிடைக்கும். ஹிந்துவிலும் இருந்திருக்குமாயிருக்கும் ஆனால் அதை எனக்கு தர அழும்பு செய்தனர். நான் கூற வருவது என்னவென்றால், இங்கு விஷயங்களை குறித்து வைத்து கொள்ளும் கல்சரே கிடையாது.

விதிவிலக்காக புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களது நாட்குறிப்புகளை கூறலாம். அது 18 ஆம் நூற்றாண்டின் புதுவையின் நிலையை அழகாக படம் பிடித்து காட்டியது.மற்றப்படி விஷயங்களை குறித்து கொள்வதில் நமக்கு சமத்து போதாது என்றுதான் கூறவேண்டும்.

சேர சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்களை பற்றி நம்பத் தகுந்த ஆதாரங்கள் மிக அரிதாக உள்ளன. எந்த ராஜா முதலில் வருகிறான், எவன் பின்னால் வருகிறான் என்பதெல்லாம் புரிய முடியாமல் தலை பிய்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.

புகழேந்திப் புலவர் விஷயத்திலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/07/2007

ஞானி சொன்னது என்ன?

அதை இப்போதைக்கு விடுங்கள். சமீபத்தில் 1984 தேர்தலில் கருணாநிதி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்றே நினைத்து பாருங்கள். அச்சமயத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயம் கருணாநிதி என்ன சொன்னார்? நினைவிலிருந்து எழுதுகிறேன். அதற்கு முன்னால் சில வார்த்தைகள்.

மொத்தமாகப் பார்த்தால் எம்ஜீஆர் பிரிந்து சென்று தேர்தலில் நின்றதிலிருந்து கருணாநிதியால் எம்ஜீஆர் உயிருடன் இருந்தவரை முதலமைச்சராகவே வர இயலவில்லை.

இவ்வளவு ஆண்டுகள் கொடுத்த தண்டனை போதாதா என்று 1984 தேர்தலில் அவர் அழுதும் பார்த்து விட்டார். அப்போது எம்ஜீஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.

அதே எம்ஜீஆர் பெயர்தான் அவரை 1991-லும் 2001-லும் தோற்கடித்தது.

ஆனால் கருணாநிதி 1984-ல் இன்னொன்றும் செய்து பார்த்தார். அதாவது இப்போது ஞானி செய்தது போல.

"எம்ஜீஆர் உடல்நலம் மோசமாகி விட்டது. அவர் ஒரு கறிகாய் நிலைக்கு போய் விட்டார் (ஆங்கிலத்திலத்தில் vegetable state என்று கூறுவார்கள்). ஆக அவரால் பதவி பிரமாணம் கூட எடுத்து கொள்ள முடியாது. என்னைத் தேர்ந்தெடுங்கள். அப்படியே அவர் திரும்பி வந்தால் நான் என் பதவியை அவருக்கு விட்டுத் தர சம்மதிக்கிறேன்" என்றெல்லாம் கதறி அழுதார். ப்ரூக்ளின் மருத்துவ மனையில் இருந்த எம்.ஜீ.ஆர். அவர்களின் புகைப்படத்தை வேறு போஸ்டர் அடித்து ஒட்டினார். கொடை வள்ளல் எம்.ஜீ.ஆரை பற்றி கேவலமாக, எள்ளல் தொனியில் கருணாநிதி குறிப்பிட்டார் என்று திடமாக எண்ணிய தமிழக மக்கள் தி.மு.க. வுக்கு படுதோல்வியை அத்தேர்தலின் போது அளித்தனர். ஆகவே "சோற்றால் அளித்த பிண்டங்களாம்" தமிழக மக்கள் அவரை நம்பவில்லை என்பதில் அவருக்கு ஒரே கோபம். அவ்வப்போது அவர் தேர்தல்களில் தோற்கும்போதெல்லாம் அது வெளிப்பட்டு விடுகிறது.

இப்போது ஞானி கூறியதற்கு வருவோம். அவர் எழுதியது ரசிக்கத் தக்கது அல்ல. கருணாநிதி அவர்கள் என்ன சின்ன குழந்தையா? ஞானிக்கு என்ன வந்தது? அவர்பாட்டுக்கு கூறிவிட்டு போய் விடுவார். ஆனால் கருணாநிதி அவர்களது பிரச்சினை கருணாநிதிக்குத்தானே தெரியும். ஆனால் ஒன்று. 1984-ல் கருணாநிதி அவர்கள் செய்தது அப்பட்டமான அவரது சுயநலமே. ஞானிக்கு அம்மாதிரி ஏதேனும் கம்பல்ஷன் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஒன்றும் தேர்தலுக்கெல்லாம் நிற்கவில்லையே.

இத்தனை நாளாக ஞானி என்பவர் பெரியார் பாசறை தளபதி என்ற ரேஞ்சில் புகழ்ந்தவர்களுக்கு இப்போது ஞானி ஒரு பார்ப்பனர் என்ற விஷயம் உறுத்துகிறது. இப்போது அதைச்சொல்லி அவரை சாடுகின்றார்கள். பார்ப்பனர்கள் ஏற்கனவே ஞானி தம்மவர் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இவ்வாறான நிலை அவருக்கு தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது