Showing posts with label கலப்பு திருமணம். Show all posts
Showing posts with label கலப்பு திருமணம். Show all posts

2/08/2007

ஐயன் காளி அவர்களுக்கு நன்றி

ஐயன் காளி அவர்கள் தனது இந்தப் பதிவு மூலம் நான் செய்ய நினைத்து ஆனால் செய்ய மறந்ததை நினைவுபடுத்தினார். அவருக்கு முதற்கண் என் நன்றி.

//2005ம் ஆண்டு ஒரு நாள் யூரோப்பா கண்டத்திலுள்ள அரசியல், சமூக, மதத் தலைவர்கள் எல்லாம் நாட்ஸி அடையாளங்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்கள். காரணம்: ஆங்கில அரச பரம்பரையின் மூன்றாவது வாரிசாக அறியப்படுகின்ற இளவரசர் ஹாரி ஒரு வினோத ஆடை அணியும் நிகழ்ச்சி ஒன்றில் நாட்ஸி அடையாளங்கள் கொண்ட ஆடையை அணிந்தது.//

இதை எதற்கு என் சம்பந்தப்பட்ட பதிவை குறிக்கும்போது சொல்கிறீர்கள்? நாஜிகள் எனது முதல் எதிரிகள் அல்லவா? தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனான இந்த டோண்டு ராகவனை அவர்களுடன் சம்பந்தப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் வேறொரு சின்னம் உலக அரங்கில் நாஜிகளின் அழிவுக்கு பிறகு உலக அரங்கில் பெருமிதம் கொண்டு எழுந்தது. தாவூதின் நட்சத்திரம் அது. இஸ்ரேலிய கொடியில் உள்ளது. ரெட் கிராஸுக்கு பதிலாக இஸ்ரேலிய ஆம்புலன்சுகளில் உள்ளது. அதை பார்க்கும்போதெல்லாம் என்னை பரவசம் செய்வதில் அது நம் மூவர்ண கொடிக்கு மட்டுமே அடுத்ததாக என்னை பொருத்தவரை உள்ளது. அந்த மறுமலர்ச்சி எப்படி நடந்தது என்பதை அறிவீரா ஐயன் காளி அவர்களே?

யூதர்கள் கிட்டத்ததட்ட 2000 ஆண்டுகள் பலதுன்பங்களுக்கு ஆளாக்கப் பட்டனர். அவர்கள் மறுமலர்ச்சி பெற்றதில் அவர்களது மதத்தை பற்றிய பெருமிதமே ஆகும்.

//எந்த ஜாதி வெறியை ஹிந்து சமுதாயத்தின் இழிவாக எம் அண்ணல் அம்பேத்கார் "பார்ப்பனீயம்" என்கின்ற அடையாளப் பெயரால் அழிக்கத் துடித்தாரோ, அந்த வார்த்தைக்கு வடிவு கொடுக்க வந்திருப்பவராக தோன்றுபவர் இந்த "ராகவ ஐயங்கார்". கலப்புத் திருமணத்தால் பிரச்சினைகள் உண்டாம். அதுபற்றி விளக்கமாய் ஒரு கட்டுரை எழுதப் போவதாயும் ஒரு அறிவிப்பு - விளம்பரம் எனலாமா இஃதை?//
விளம்பரம் இல்லை. ஒரு முன்னறிவிப்பே. இது கவனத்தை விட்டு போயிருந்தது. அதை நினைவு படுத்தியதற்கு மீண்டும் நன்றி.

//பெரும் புகழ் எடுக்கும் விருப்பத்தால் பிரச்சினைகள் எழாதா?//
என்ன உளறல். கல்யாணம் என்பது யோசித்து செய்ய வேண்டிய விஷயம். பல பிரச்சினைகளை உள்ளடக்கியது. இப்போது இளமை ஜோரில் முடித்து விட்டு, பிற்காலத்தில் வருத்தப்படுபவர் எத்தனை பேர் என்பதை அறிவீரா? அவர்கள் குழந்தைகளுக்கு மணமுடிக்க முடியாமல் வெம்புவரை அறிவீரா?

//ஸ்மார்த்தனாய் பிறந்த ராமானுஜன் வைணவம் ஸ்தாபித்தான். அதன் வழித் தோன்றல் இதைத் தவறு என்கின்றார்.//
எனது இப்பதிவில் அது சம்பந்தமில்லாததுதான். இருப்பினும் கூறுகிறேன். ராமானுஜர் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. 12 ஆழ்வார்கள் அத்தனை பேரையும் நான் பூஜிக்கிறேன். இதில் எத்தனை பேர் பார்ப்பனர் என எண்ணுகிறீர்கள்?

//கலப்பு மணம் பிரச்சினைகள் உள்ளது எனும் இம்முதியவர், அந்தண ஆண்டாள் ஆயனை மணம் புரிந்ததை எதிர்ப்பாரா? ஆயன் என்பதால் வணக்கமில்லை. எம் தெய்வம் அந்த மகர நெடுங்குழைக்காதனன்றி வேறில்லை என்பீரெனில், அந்த திருமால் தங்கையின் கணவன் சுடுகாட்டில் அலையும் சூத்திரன் அன்றோ?//
என்ன உளறல் இந்த இளைஞனைப் பற்றி? சூடிக்கொடுத்த சுடர்க்கொடியோ, அவளை ஆட்கொண்ட பாம்பணை மேல் படுத்திருப்பவனோ என் தெய்வங்கள் அல்லவா.

இருந்தாலும் இங்கு ஒரு வார்த்தை சொல்வதால் எனது அப்பன் அரங்கநாதனோ, மகர நெடுங்குழைகாதனோ, திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனோ, ஒப்பற்ற மாதர்கள் வாழும் திருவல்லிக்கேணியில் அருள் பாலிக்கும் மீசைக் கடவுள் பார்த்தசாரதியோ கோபித்து கொள்ள மாட்டார்கள். ஆண்டாள், அவள் ஆண்டாள். ஐயனுடன் ஐக்கியமானாள். ஆனால் திரும்ப வந்து குடும்பம் நடத்தவில்லை. ஆனால் நான் இங்கு குறிப்பிடும் விஷயம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஆரம்பிக்கிறது சுவாமி.

//அத்தனை சாதியிலும் அரியின் காதலர் அனைவரும் வைணவரே என்று பறையரையும், பள்ளரையும் பார்ப்பனராக்கியதில் உண்டானதன்றோ ஐயங்கார் எனும் குலம்? உமது மரபணுக்களில் இந்தச் சூத்திரர்களின் ஜீன் சுருண்டுள்ளதென்பது சுகமான உண்மையன்றோ?//
அப்படியிருக்க உங்கள் ஜீன்களுடன் தொடர்பு கொண்டவரை மட்டும் ஏன் துவேஷிக்கிறீர்கள்?

//கற்பென்பது கற்பனை என்பீர். ஆயினும் கலப்பு மணம் எனில் கடினம் கடினம் என்கிறீர். அடுக்குமா?//
கற்பு என்பது கற்பனை என்று நான் எங்கு சொன்னேன் ஐயா? ஆனால், கலப்பு மணம் கடினம் என்றுதான் மறுபடியும் கூறுவேன்.

//பதிலாய், "இது எம் சொந்தக் குரல். வைணவத்தின் கூற்றை வெளியிட அடியேனுக்கு பாத்தியம் இல்லை" என்பீர்.//
எப்போது அவ்வாறு சொன்னேன்?

//தனி மனிதரின் குரல் ஒரு சமூகத்தின் தவறுக்கு ஆதரவாகும்போதும் அது தனிமனிதக் குரலாகுமோ? அப்படியே ஆயினும் உம் குரலை ஊருக்கு முன் உரத்துச் சொல்லல் அவசியம் ஏனோ? உமக்கு மட்டும் கேட்கும்வரைதானே உம் குரல்? ஊர்ச்சந்தியில் உரத்து உளறுவது உமக்கு மட்டும் கேட்கவேண்டும் என்பதற்கா? டோண்டு ராகவனாய் சொல்லுவதற்கும், ராகவ ஐயங்காராய் சொல்லுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா.//
உளறுவது யார் என்பதை இப்போது பார்க்கத்தானே போகிறோம்? ராகவையங்கார் என்று கூறிக்கொண்டது பற்றி பல முறை எழுதியாகி விட்டது. இங்கு மறுபடியும் கூறுவதாக இல்லை.

//"எம் கருத்து இஃது, யாரும் ஏற்றுக்கொள வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எமக்கில்லை" என்பீர்.//
நான் கூறுவதாக அதை நீங்கள்தான் சொல்கிறீகள். ஆனால் நீங்கள்தான் பார்ப்பன துவேஷம் என்ற அழுக்கு ஆடை அணிந்துள்ளீர்கள்.

//நன்மை செயவே நான் நினைதேன் என்பீராயின், விட அறைக்குள் யூதர்களின் பிண அறை காணப் பணித்த நீதிபதியே தான் அவர்களுக்கு நன்மை செய்ததாகத்தான் நம்புவதாகக் கூறினான் - படித்திருப்பீர்//.
என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கு. நாஜிகள் எனது ஜன்ம விரோதிகள். அவர்களை நான் ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்?

//பரந்தாமன் மெய்தழல் பற்றியதன்றி பற்றுவது ஏதுமிலை எனச் சொல்லி சாதியில் கடையராயினும் பக்தர்கள் தாள் தூசியைத் தலையில் தரித்து, உண்மை பலம் அருளும் உணவாய் கொண்ட தொண்டரடிப்பொடியனும் வைணவனே. வைணவனாய் இருப்பதைவிட தனிமனிதனாய் இருப்பதே சிறந்தது என்பது உம் வாதம் எனில், உமது முன்னோருக்கல்லவா இழுக்கு.//
எனது வைணவ பக்தியில் என்ன குறை கண்டீர்கள்? அப்படி ஏதேனும் இருந்தால் தக்க உதாரணத்துடன் நிரூபியுங்கள்.

//கலப்பு மணத்தால் காழ்ப்புகள் உண்டு. நன்மைகளோடு, தீமைகளுமுண்டு. அவற்றை உரத்துச் சொல்லுவதை சாதி வெறி என்பீரோ?" என்றும் நீங்கள் கேட்கலாம்.//
தீமைகள் என்ன என்பதையும் அறிந்தால்தானே, அவற்றுக்கு சரியான எதிர்வினை தரமுடியும்? அதை பற்றி பேசவே கூடாது என்றால் எப்படி ஐயா?

//தொல்லைகள் இருப்பதாலேயே நன்மைகளை நசுக்கிவிடவேண்டுமா?//
நான் அப்படி சொல்லவில்லையே?

//கலப்பு மணத்தின் கனிகளை கண்டதுண்டா? சாதி சங்கிலிகளை தூளாக்கி மணம் புரிந்தவர்களின் மகவுகளைக் கொஞ்சியதுண்டா தாங்கள்?//
இல்லை என்பதை கண்டீர்களா? எனது மனைவியின் அத்தை கலப்பு மணம் புரிந்தவர். அவர் குழந்தைகள் என் செல்ல பிள்ளைகள். நீங்களாகவே அனுமானம் செய்து உளறக்கூடாது.

//அன்பு கொண்டுவிட்டவள் முகம்மதிய வாரிசு என்று அழித்தா விட்டனர் வைணவர்கள்? அரங்கனுக்கு அருகில் துலுக்க நாச்சியாராய் துணை வைத்ததன்றோ நம் சமயம். அபச்சாரம் செய்துவிட்டீர் எனப் புரிந்து துலுக்க நாச்சியாரிடம் அபராதம் செய்வதன்றோ மனவலிமையின் அடையாளம்.//
துலுக்க நாசியாரை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்?

//பார்ப்பான் நான் எனப் பகல்வதால் பற்றி எரியப்போவதென்ன? ஒன்றுமில்லை. கொங்கணனுக்காவது கொக்கிருந்தது//

//"என் சாதி இதுவென இயம்புவதை எதிர்க்கிறார். அன்பற்று அழிக்கவும் துடிக்கிறார். இவர் முன் இறுமாந்திருப்பதற்கு இரும்பு இதயம் வேண்டும்" என்பீராயின் அது வெறும் பம்மாத்து என்பதை யாம் பகலவும் வேண்டுமோ? ஐயங்கார் என்று எடுத்தும்பியவது ஏளனத்திற்குரியதுதான் எல்லோர்தம் பார்வையிலும். முதியவரின் மீசைமுடியை முற்றிப் போன கனவுக் கயிறுகளால் முறுக்கப்பெறும் முயற்சி என்பதுதான் தங்களை எள்ளாதவரின் எண்ணம். அற்றை இரவு அருந்திய கூழ் பட்டு மீசையை முறுக்கிய கதையை நீங்கள் சொல்லலாம். கூழ் குடித்த பெருமை உங்களுக்கு. குறை காணும் வாய்ப்பு மற்றோருக்கு.//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை.

//தன் சாதி இதுவென்று கூறி தன் பலம் காட்டும் தரணியில் எம் சாதி இதுவென்பதில் நேர்வழி ஏற்றம் எதேனும் உண்டா?//

சரி, நான் கூற நினைத்ததை கூறிவிட்டு போகிறேன். நீங்கள் கூறுவதெல்லாம் ஆதர்சம். யதார்த்தம் என்று ஒன்று உண்டு. உம்மை மாதிரி பலர் இம்மாதிரி ஊருக்கெல்லாம் அறிவுரை கூறிவிட்டு தத்தம் முறை பெண்ணை மணப்பர். அவர்கள் பேசியதை கேட்டு கலப்பு மணம் செய்தவர் படும் கஷ்டங்கள் முன்னவருக்கு ஒரு பொருட்டல்ல.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் மட்டும் சேர்வதல்ல. அவரவர் குடும்பங்களும் நல்ல உறவில் இருக்க வேண்டும். இது சாதாரணமாக நடப்பதில்லை. என் நண்பர் ஒருவர். அவர் பர்ர்ப்பனரில்லை, ஒரு மேல் சாதி என்று அழைக்கப்படும் சாதியை சேர்ந்தவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை மணந்தார். இருவருமே நன்கு படித்தவர்கள். நண்பரின் தாய் இத்திருமணத்தை ஒத்து கொள்ளவேயில்லை. இன்னும் தன் பேரக் குழந்தையை பார்க்கக் கூட இல்லை. இந்த குழந்தை தந்தை வழி பாட்டியின் அன்பில்லாமல் வளரப் போகிறது. அது பெரியவளாகி, திருமண வயதை எட்டும்போது மணமகன் தேடும்போது எழப்போகும் பிரச்சினை பூதாகாரமாகப் போகப் போகிறது. அவ்வாறு நடக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். இது காதல் திருமணம். அவர்கள் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். ஆனால் இரு வழி உறவினர்களுக்குள் சுமுகமான போக்குவரத்து இல்லை. கலப்பு திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு காதல் திருமணம்தான் முக்கிய வழி. தாய் தந்தையர் நிச்சயம் செய்யும் திருமணம் கடினம். எல்லா பத்திரிகைகளிலும் வரும் திருமண விளம்பரங்களையே பாருங்கள் நான் சொல்வது புரியும்.

கலப்பு திருமணத்தின் இன்னொரு பிரச்சினை வேறுபடும் உணவு பழக்கங்கள். காதல் மயக்கத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சில நாட்களிலேயே மோகம் மறைந்து விடும். பிறகு இல்லாத பிரச்சினைகள் எல்லாம் வரும். மற்ற பழக்க வழக்கங்களும் மாறும்.

உண்மை காதல் இவற்றையெல்லாம் முறியடிக்கும் என கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு வருவது அபூர்வம்.

//குற்றப் பரம்பரையாய் ஆங்கிலக் கொள்ளையர் கூறிய வனஜாரி சாதியில் பிறந்த கோபினாத் முண்டே ஒரு மாநில முதல்வராவது ஈ வே ரா பிறந்த மண்ணில் என்றாவது நிகழுமோ? கோபினாத் முண்டேயை மணந்தது ஒரு பார்ப்பனப் பெண் என்பதறிவீரோ? இவர்களது கலப்பு மணத்தால் என்ன பிரச்சினை வந்தது?
காந்தி கிராமம் கண்ட பார்ப்பனப் பெண்ணின் கணவர் தலித் என்பதை அறிவீரோ? அங்கு சுயமாய் தொழில் செய்து வளமாவாய் வாழ்வோருக்கு இந்த கலப்பு மணத்தால் நேர்ந்த கடுமை என்னவோ?
அரசியல் மேதையாய் ராவும் பகலும் ஆராதனை செய்கிறீர்கள் ராஜாஜியை. அவர் தன் மகளை மணமுடித்தது வைசிய காந்தியின் மகனுக்கன்றோ?//
ஐயா நீங்கள் கூறுபவை அளவில் சிறியவை. அதை பார்த்து எல்லோருக்கும் முடியும் என மனப்பால் குடிக்காதீர்கள். கலப்பு திருமணம் வேண்டாம் என கூற நான் யார். பிரச்சினைகளை உணர்ந்து முடிவெடுக்க சொல்கிறேன். நீங்கள் என்னவோ பிரச்சினைகள் என்னவென்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று சொல்வது போல படுகிறது. அது உண்மையாயின் அது தவறே.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். கல்யாணம் செய்து கொள்பவரை பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும். சொந்த சாதியில் திருமணம் செய்தலில் நான் மேலே பட்டியலிட்ட அபாயங்களின் சாதியக்கூறுகள் குறைவு. கலப்புத் திருமணங்களில் அவை அதிகம்.

இதை உணர்ந்து, சாதக பாதகங்களி ஆராய்ந்து மணம் புரிவதே புத்திசாலித்தனம்.

//வாழும் முறைகளும், வாழ்வின் நோக்கங்களும் சாதி அடிப்படையைச் சாராது இருக்கும்போது ஒத்த வாழ்நெறியும், ஒன்றிற்கு மற்றொன்று உவமையாய் அமையும் நோக்கங்களும் கொண்டவர் கலந்தால் எதிர்த்து விண்டுவது டோண்டுவிற்குத் தகுமோ?//
எனக்கு வேறு வேலையில்லையா? இரண்டு வகை திருமணங்களிலும் உள்ள சாதக பாதகங்களை பார்த்து செயலாற்றுதல் நலம் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

//ஐயங்கார் எனச் சொல்லுவதில் இருக்கும் பாதுகாப்பும் சமூகப் பெருமையும் ஹிந்து என்பதில் இல்லை என்பதை சமத்காரமாய் தாங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், இதை வெளிப்படையாய் சொன்னால் வாழ்க்கையை அழிப்பார் என்பதறிந்து குறுகிய பானையில் குதிரையோட்டுவதில் குன்றா பாதுகாப்பு இன்று மட்டும் உண்டுதான். ஐயங்கார் என்று சொல்லி குறுகிய வாழ்க்கை வாழ்வதைவிட இன்பம் நல்கும் ஹிந்துவே நான் எனச் சொல்லுவதற்கு வீரமும், தீரமும், விவேகமும் வேண்டும்தான்.//
இது பற்றி ஏற்கனவே அதிகம் பேசியாகி விட்டது.

இப்பதிவுக்கு பின்னூட்டமிடுபவர் தாங்கள் பரிந்துரைப்பதை தாங்களே செய்கிறார்களா அல்லது உபதேசம் எல்லாம் மற்றவருக்குத்தானா என்பதை சுய பரிசோதனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

மறுபடியும் கூறுகிறேன், திரும்ணம் என்பது சம்பந்தப்பட்டவரது சொந்த விஷயம். முடிவு அவர்கள்தான் எடுக்க வேண்டும். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய பல பிரச்சினைகளை பற்றி பேசவே இப்பதிவு. இதில் என் கருத்ஹ்துக்களை கூறியுள்ளே. படிப்பவர்கள் அவரவர் விரும்புவதை எடுத்து கொள்ளட்டும் அல்லது மொத்தமாகவே நிராகரிக்கட்டும்.

அது சரி, இந்துக்கள் மற்ற மதத்தினரில் பெண் எடுப்பது பற்றி என்ன கருத்து கொண்டுள்ளீர்கள்? இங்கு கூட நீங்கள் துலுக்க நாச்சியாரை விடுத்து வேறு மதக்கலப்புகளை பற்றி பேசாமல் தவிர்த்து விட்டீர்கள் போல?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது