6/11/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 2

இடம்: அயோத்தி அரசர் மந்திரியை தனியாகச் சந்திக்கும் இடம்.

பாத்திரங்கள்: அமைச்சர் சுமந்திரர், ஒற்றர் தலைவன் கீர்த்தி வர்மன், அரச்ர் ராமர், பரதன், இலக்குவன் ஆகியோர்.

கீர்த்தி வர்மன்: மகா மந்திரியாரே அரசரிடம் நீங்கள்தான் பேச வேண்டும், அவர் வரும் நேரம் நெருங்கி விட்டது.

சுமந்திரர் (பெருமூச்சுடன்): வேறு வழி? நானேதான் பேச வேண்டும்.

அரசர் வருவதை அவர் மெய்க்கீர்த்திகளுடன் கட்டியங்காரன் அறிவிக்கிறான்.

“ரவிகுல திலகன், கோதண்டபாணி, ராவண சம்ஹாரி அயோத்தி அரசர் மாண்புமிகு ராமபிரான் வருகிறார். நிசப்தம்!!!”

அரசர் ராமர் புன்னகையுடன் வருகிறார். மண்டபத்தின் வெளி வரை அவருடன் வந்த இலக்குவனும் பரதனும் வெளியேயே நின்று கொள்கின்றனர். இலக்குவனுக்கும் உள்ளே செல்லத்தான் ஆசை, ஆனா பரதன் அவனைத் தடுக்கிறார்.

பரதன் : கவனம் இலக்குவா. இப்போது அவர் நம் அருமை அண்ணன் என்பதைவிட அரசர் என்பதே முக்கியம். மந்திரிகளுடன் ஆலோசனையில் அவர் வேண்டுமானால் நம்மையும் அழைத்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமை காப்போம்.

இலக்குவன்: ஆம் பரதண்ணா, நீங்கள் சொல்வதுதான் சரி.

அரசர் ராமர்: வணக்கம் சுமந்திரரே. அடேடே கூட இருப்பது கீர்த்தி வர்மன் அல்லவா? எங்கே இவ்வளவு தூரம்? உன் மனைவி மக்கள் நலமா?

சுமந்திரர்: அரசே....

ராமர்: ஏன் தயக்கம் அமைச்சர் பெருமானே. தயங்காமல் கூறுங்கள். கீர்த்தி வர்மன் கொண்டு வந்த செய்தியில் ஏதேனும் குழப்பமா?

சுமந்திரர் மென்று விழுங்குகிறார்.

ராமர்: கீர்த்தி வர்மா உனக்கு ஆணையிடுகிறேன். விஷயத்தை நீயே சுருக்கமாகக் கூறு. அவனும் மென்று விழுங்கிக் கொண்டே அவ்வாறே கூறுகிறான்.

ராமர் சிந்தனையில் ஆழ்கிறார்.

ராமர்: வண்ணானையும் அவன் மனைவியையும் காராக்கிருகத்தில் அடைக்கும் அற்புத யோசனை எவருக்கு முதலில் வந்தது? அவர்களை உடனே விடுவித்து வீட்டுக்கு அனுப்பவும். இந்த முடிவை எடுத்த அதிகாரிக்கு எமது அதிருப்தியை தெரிவிக்கவும். இதென்ன நாடா அல்லது வேறு ஏதாவதா?

சுமந்திரர்: அரச நிந்தனை....

ராமர்: என்ன அமைச்சரே அரச நிந்தனை? பிரஜைகளின் உண்மைக் கருத்தை அறியாமல் நாட்டை எப்படி ஆட்சி செய்வதாம்? .... சரி இருக்கட்டும். கீர்த்தி வர்மனை அனுப்பி விட்டு  இலக்குவனையும் பரதனையும் உள்ளே அழைக்கவும்.

அவர்களும் உடனடியாக விரைந்து வருகின்றனர். அவர்களிடம் விஷயத்தை சுமந்திரர் கூறுகிறார்.

இலக்குவனின் முகம் கோபத்தால் சிவக்கிறது. பரதன் முகம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது.

இலக்குவன்: அண்ணா இது அப்பட்டமான அரச நிந்தனை. மரண தண்டனைக்கு உரியது.

ராமர்: பரதா நீ என்ன கூறுகிறாய்.

பரதன்: அரசே இலக்குவன் கூறியது போல இது அரச நிந்தனைதான், இருப்பினும் தண்டனை கொடுப்பதில் அவசரம் ஆகாது. இதன் பின்புலனை தீர ஆராய வேண்டும்.

ராமர்: சபாஷ் பரதா, அதுதான் எனது எண்ணமும். நீ ராஜ்ய பரிபாலனத்தில் அனுபவம் பெற்றவன் என்பதை நிரூபிக்கிறாய். இலக்குவா, பொறுமை தேவை.

(தொடரும்)

அன்புடன்,
டோண்டு ராகவன்


1 comment:

Cinema Virumbi said...

டோண்டு சார்,

'என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா?' என்ற தலைப்பிலேயே தெரிகிறது. அவர் உண்மையிலேயே தவறு செய்திருந்தாலும் பலர் (நீங்கள், நான் உட்பட!) அதை ஒத்துக் கொள்ளாமல் சப்பைக்கட்டு கட்டத்தான் செய்வோம் (வாலி வதத்தில் பல பௌராணிகர்கள் இன்றளவும் செய்வது போல!)

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது