6/17/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 3

இடம்: அயோத்தி அரசர் மந்திரியை தனியாகச் சந்திக்கும் இடம். (ராமரின் ஆலோசனை தொடர்கிறது).
ராம்ர்: பரதா, நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் கூறு. 


பரதன்: அரசே, அரச நிந்தனைதான் இது இலக்குவன் கூறுவது போல. இருப்பினும் உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் பிரஜைகள் ஏன் இவ்வாறு பேச வேண்டும்? அதை நாம் முதலில் ஆராய வேண்டும்.


ராமர்: ஆம், அதுதான் சரி. சுமந்திரரே பரதன் கூறும் வழியில் விசாரியுங்கள். பிறகு சந்திப்போம். இலக்குவா, பரதா இது பற்றி நம் அன்னையரிடம் எதுவும் கூற வேண்டாம். ஜானகியிடம் கூறவே கூடாது.


சில நாட்கள் கழித்து சுமந்திரர் ராமரை சந்திக்கிறார்.கூடவே இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்னன்.


சுமந்திரர்:அரசே எவ்வாறு கூறுவது எனத் தெரியவில்லை. இருப்பினும் கூற வேண்டிய கட்டாயம். வண்ணானின் அபிப்பிராயம்தான் பலருக்கும் உள்ளது.


(ஃபிளாஷ்பேக்)


சுமந்திரர்: கீர்த்தி வர்மா, சீதையின் மேல் தவறு இல்லை என அக்னியே சாட்சி சொன்னதைக் கேட்டுமா மக்கள் மனம் இவ்வாறு உள்ளது?


கீர்த்திவர்மன்: அதையும் கேட்டாகி வ்ட்டது அமைச்சரே. அக்னி பேசியதற்கு சாட்சிகள் குரங்குகளும், ஒரு கரடியும், அரக்கர்களும், ராம லட்சுமணரும்தானே. எங்களில் யாரும் அங்கு இல்லையே. நேரிடையாக சாட்சி இல்லாத நிலையில் நாங்கள் இதை எப்படி நம்புவது? மேலும் வண்ணானையும் வண்ணாத்தியையும் சிறை பிடித்தது பற்றியும் கசப்புடனே பேசினாகள். மனதில் பட்டதைக் கூறினால் தண்டனையா? இதற்கு பரத ராஜ்யமே மேல் என்றும் கூறினார்கள்


ராமர் சிந்தனையில் ஆழ்கிறார்.


ராமர்: சரி நாளை முழு அரசவை கூடட்டும். அங்கு எனது முடிவைத் தெரிவிக்கிறேன்.


மறு நாள் அரசவை. வந்திருப்போர் வசிஷ்டர், மந்திரிகள், அரச மாதாக்கள் மூவரும், ராமரும் அவரது மூன்று சகோதரர்களும்.


ராமர் மூத்தோர்களை வணங்கி விட்டு பேச ஆரம்பிக்கிறார். 


ராமர்: நான் ஒரு சங்கடமான நிலையில் உள்ளேன். இதுதான் நடந்தது.


ராமர் நடந்ததைக் கூறுகிறார். எல்லோருமே அதிர்ச்சியில் மௌனமாகின்றனர்.


கைகேயி: அருமை மகனே ராமா, இதென்ன அக்கிரமம். நம் குல மருமகளுக்கு இந்த அவப்பெயரா? மக்களுக்கு பைத்தியமா பிடித்து விட்டது?


சுமித்திரை: மகனே, மக்களின் அபிப்பிராயங்களை செவி மடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. இது அவ்வித எல்லா எல்லைகளையும் மீறியதாக உள்ளது. ராவண சம்ஹாரத்தைக் கூடத்தான் யாருமே நேரில் பார்க்கவில்லை. அதனால் அது நடக்கவேயில்லை எனக் கூறி விடுவார்களாமா? என்ன அபத்தம்? தெருவில் போகிறவன் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தினால் ராஜ்யம் நடந்த மாதிரித்தான்.


கோசலை: அதானே, அந்த வண்ணானுக்கு உன் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் தாராளமாக் வேறு நாட்டுக்கு செல்லட்டும். அவன் மாதிரி பேர்வழிக்கெல்லாம் நம் நாட்டில் இடமில்லை என்றுதான் கூற வேண்டும்.


ராமர்: அன்னைகளே, அமைதி வேண்டும். என்னை திட்டுவது உங்களுக்கு வருத்தம் தருகிறது என்பதை நான் அறிகிறேன். ஆனால் அதையெல்லாம் செயலாக்கினால் நான் அரசனே இல்லை. பிரஜைகளின் குறைகளையும் களைய வேண்டும். அதை செய்யத்தான் நான் இச்சபையை கூட்டியுள்ளேன். குலகுரு வசிஷ்டரே, நீங்கள் ஒன்றுமே கூறாமல் இருக்கிறீர்களே.


வ்சிஷ்டர்: ராமா, இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அயோத்தி அரசின் விதிப்பயனும் இதில் கலந்துள்ளது. மேலும் பல தேவ ரகசியங்களும் உண்டு. அவற்றையெல்லாம் நான் இங்கு வெளியே கூறுவது முறையாகாது. 


ராமர் (யோசனையுடன்): தேவ ரகசியங்களா? என்னிடம் கூட தனியாகக் கூறக்கூடாதா? அப்படியென்றால் கூற வேண்டாம். பரதா, அருமை தம்பியே, நீ உனது கருத்தைக் கூறு.

பரதன்: அண்ணா, அன்னையரின் கருத்துத்தான் என் கருத்தும். உங்கள கடமை ஆட்சி செலுத்துவதே. அதில் கவனம் செலுத்துங்கள். 


இலக்குவனும் சத்ருக்னனும் பரதன் கூறியதற்கு வேகமாகத் தலையாட்டுகிறார்கள்.


திடீரென சீதை அரசவைக்குள் பிரவேசிக்கிறார்.


ராமர்: சீதே நீ இங்கு எப்படி? 


சீதை: அரசே உங்களுக்கு வந்த கெட்டப் பெயர் என்னால்தான் வந்தது. வண்ணான் கூறிய்து பற்றி நானும் அறிந்தேன். நாம் இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன்னால் காட்டுக்கு சென்றபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்களே இப்போது இவ்வாறு பேசுகிறார்கள் என்றால் அது யோசிக்க வேண்டியதே.


ராமர்: சீதே, என்ன கூறுகிறாய்?


சீதை: ஆர்ய புத்திரரே, மனதைத் தளர விடாதீர்கள். எனக்கு வனவாச ராசி உண்டு என என் தந்தை ஜனகர் கூறியிருக்கிறார். நான் மீண்டும் வனம் செல்வதே முறை.


சீதை சொன்ன சொற்களை மறுக்கும் வலிமை எவருக்கும் இல்லை. ஆகவே எல்லோருமே மௌனமாக இருக்க, ராமர் பேசுகிறார்.


ராமர்: எல்லோருமே வண்ணான் பேசியதைத்தானே கூறுகிறீர்கள்? அவன் மனைவி கூறியதை மறந்து விட்டீர்களா? வனவாசத்தில் இருந்திருந்தாலும் நான் அரசனே. எனது பிரஜையாகிய என் மனவியை மாற்றான் கவர்ந்து சென்றான் என்றால், நான் அரசனாக இருக்கும் தகுதியற்றவன் என்றுதானே ஆகிறது? 


அரசவையில் அதீத மௌனம் நிலவுகிறது. ராமர் அதை கவனியாது மேலும் பேசுகிறார்.


ராமர்: இஷ்வாகு குலத்தில் பிறந்த இந்த ராமன் கூறுகிறேன். நாட்டின் பொறுப்பை பரதனிடம் ஒப்படைக்கிறேன். நானும் சீதையும் வனவாசம் செல்வோம்.


(தொடரும்)


அன்புடன்,
டோண்டு ராகவன்
  

2 comments:

Cinema Virumbi said...

டோண்டு சார்,

இன்றைய தேதியில், 'வண்ணான், வண்ணாத்தி' போன்ற சொற்பிரயோகங்கள் 'Politically incorrect' இல்லையா ?

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

dondu(#11168674346665545885) said...

வண்ணான், வன்ணாத்தி என்பதில் நான் ஒரு பொலிடிகல் கரெக்ட்னஸ் இல்லாததை பார்க்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது