5/25/2009

இலங்கை பிரச்சினை பற்றி சோவுடன் நேர்காணல் - 19.05.2009

சோ அவர்கள் ET-க்கு தந்த பிரத்தியேக நேர்காணலில், அவர் ஸ்ரீலங்காவின் லேட்டஸ்ட் நிகழ்வுகள், தமிழகத்தில் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு, ஸ்ரீ லங்காவின் தமிழர்களுக்கு வந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக இந்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கிறார். அதன் சுட்டியை எனக்கு அனுப்பிய நண்பர் சந்திரசேகருக்கு நன்றி. நேர்காணலுக்கு செல்வோமா?

தமிழக தேர்தலில் ஒரு பிரச்சினையாக காணப்பட்ட ஸ்ரீலங்கா யுத்தத்தின் முடிவு இப்போது தமிழகத்தில் எம்மாதிரியான எதிர்வினைகளை கொண்டு வரும் என எண்ணுகிறீர்கள்?
இங்குள்ள சில விளிம்பு நிலை மனிதர்கள் சில போராட்டங்களில் ஈடுபடலாம், சிலர் தீக்குளிக்கும் அளவுக்குக்கூட போகலாம். ஆனால் அப்போராட்டங்கள் எல்லாமே மானில அரசால் சுலபமாக அடக்கப்பட்டு விடும். ஏனெனில் அம்மாதிரியான போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு கிட்டாது. நான் ஏற்கனவேயே கூறி வந்ததைப் போல இது எப்போதுமே எந்த தேர்தலிலும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இப்போது முடிந்த தேர்தலிலும் கூட அதே நிலைதான். எதிர்க்கட்சிகள் கோஷம் போட சில வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

இங்குள்ள இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சக உணர்வு போராட்டங்களாக வெடிக்காதா?
தமிழனுக்கு தமிழன் என்னும் அளவில் சக உணர்வு இருக்கும். ஆனால், கோபமுள்ள போராட்டமாக அவை மாற வாய்ப்பில்லை. புலிகளை பொருத்தவரை இங்குள்ள தமிழர்களுக்கு அவர்களுடன் சக உணர்வு இல்லை. ஒரு வேளை தேர்தலில் பேசப்படும் பிரச்சினையாகலாம் ஆனால் கட்சிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் அளவுக்கு அது போகாது.

அரசியல் பக்கத்தைப் பார்ப்போம். புலிகள் ஆதரவு தொல். திருமாவளவன் ஓரிடத்தில் ஜெயிக்கும் அதே நேரத்தில் இன்னொரு புலி ஆதரவாளர் வைக்கோ தோற்கிறார். இது எதை காட்டுகிறது?
அதான் சொன்னேனே, புலிகள் ஒரு தேர்தல் பிரச்சினயாக பார்க்கப்படவேயில்லை என. அவர்கள் ஆதரவாளர் என்ற ஒருவரை தேர்ந்தெடுப்பதோ அதே காரணத்துக்காக நிராகரித்ததோ இங்கு நடக்கவில்லை, அவ்வளவுதான்.

புலிகளின் தோல்வியால் தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரிக்குமா? இதில் பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ஸ்ரீலங்கா ராணுவம் அவர்களை கொடுமையாக நடத்தினால் இங்கு அகதிகள் வரும் வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் அகதிகளுடன் அகதிகளாக புலிகளும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். அங்கும் பல சிவிலியன்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்றுள்ளனர், அவர்களில் எத்தனை புலிகள் அடங்குவர் என்பதை நான் அறியேன். ஆயுதங்களை பிற்கால உபயோகத்துக்காக எங்காவது புதைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். ஆகவே இலங்கை அரசும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு தீர்வாக எதை காண்கிறீர்கள்?
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழர்களுக்கு அதிக அனுகூலங்களை அது தன்னுள் கொண்டிருந்தது. அதை கெடுத்தது புலிகளே. மெதுவாக ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு அங்கு உருவாக வேண்டும்.

தனி ஈழம் அமைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
தனி ஈழம் என்றால் இலங்கையை துண்டாட வேண்டும். அதற்கு நான் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்தவன். இலங்கை துண்டாடப்பட வேண்டும் என்பது எனது ஆலோசனை அல்ல. இந்தியர்களும் அதை கோரக்கூடாது. இலங்கையின் உள்ளே ஒரு தமிழ் மாநிலம், சிங்களவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளோடு என்பதுதான் சரியாக அமையும்.

இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?
இந்திய அரசு தேவையானால் அழுத்தம் கொடுத்து ஸ்ரீ லங்கா அரசு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற செய்ய வேண்டும். படைகளை அனுப்பக் கூடாது. இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இலங்கை அரசுதான். அவர்கள் தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தியதே இதற்கெல்லாம் காரணம். அதனால்தான் தீவிரவாதமும் தலை தூக்கிற்று. ஆனால் பிரச்சினையை மேலும் எடுத்து பெரிதாக்கியது பிரபாகரனே. தமிழ் தலைவர்கள் மற்றும் மக்களை கொன்று குவித்து அவரே பிரச்சினையாகிப் போனார்.


மீண்டும் டோண்டு ராகவன். இந்த நேர்காணலின் சுட்டியை எனக்கு அனுப்பிய நண்பர் சந்திரசேகரனுக்கு மீண்டும் நன்றி.

இத்தருணத்தில் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.05.2009 பதிவில் நான் எழுதிய இந்த வரிகளை இங்கு மீண்டும் தருகிறேன்.

“அவர் (பிரபாகரன்) இருக்கிறார் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். இன்னும் அறிக்கை போர்கள் விடாமல் நடக்கின்றன. இதுவரை நம்பகத்தன்மை கொண்ட பத்மநாதன் துரோகி என்கிறார் வைக்கோ. என்ன நடக்கிறது இங்கே? ஸ்ரீலங்கா அரசை பொருத்தவரை அவர் இறந்து விட்டார் எனக் கூறி விட்டது. போட்டோக்களையும் காட்டியது, உடலையும் எரித்து விட்டது. அதை பொருத்தவரை தீர்ந்தது விஷயம். அதே சமயம் புலிகள் தரப்பு இன்னும் ஒத்துக் கொள்ளாதது அவ்வரசுக்குத்தான் சாதகமாக முடியும்.

ஏனெனில் இதை வைத்து எஞ்சி இருக்கும் தமிழர்களை சந்தேகத்தின் பார்வையில் வைக்க இயலும். வீரம் பேசும் நேரம் இதுவல்ல”.


அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.05.2009

பிரபாகரன் - தொடரும் மர்மங்கள், இன்னும் செய்ய வேண்டியவை என்ன?:
அவர் இருக்கிறார் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். இன்னும் அறிக்கை போர்கள் விடாமல் நடக்கின்றன. இதுவரை நம்பகத்தன்மை கொண்ட பத்மநாதன் துரோகி என்கிறார் வைக்கோ. என்ன நடக்கிறது இங்கே? ஸ்ரீலங்கா அரசை பொருத்தவரை அவர் இறந்து விட்டார் எனக் கூறி விட்டது. போட்டோக்களையும் காட்டியது, உடலையும் எரித்து விட்டது. அதை பொருத்தவரை தீர்ந்தது விஷயம். அதே சமயம் புலிகள் தரப்பு இன்னும் ஒத்துக் கொள்ளாதது அவ்வரசுக்குத்தான் சாதகமாக முடியும்.

ஏனெனில் இதை வைத்து எஞ்சி இருக்கும் தமிழர்களை சந்தேகத்தின் பார்வையில் வைக்க இயலும். வீரம் பேசும் நேரம் இதுவல்ல. ஹிட்லர் இன்னும் இறக்கவில்லை, நேச நாடுகளுக்கு எதிராக இன்னும் கொரில்லா போராட்டம் நடத்தலாம் என்ற நோக்கில் ஒரு சிறுமுயற்சி நடந்ததாகவும் ஆனால் ஜெர்மானிய பொதுமக்கள் அதற்கு மசியாததால் அது சீக்கிரமே பிசுபிசுத்து போயிற்று என்றும் படித்திருக்கிறேன். இப்போது தேவை புனரமைப்பு முயற்சிகளே. ஸ்ரீலங்கா அரசு வெற்றி பெற்ற நிலையில் அதன் கடமை மிக அதிகம்.

அமெரிக்கா தனது மார்ஷல் திட்டத்தில் பழைய அச்சு நாடுகளையும் சேர்த்து கொண்டது ராஜதந்திரச் செயல். மேற்கு ஜெர்மனி நேட்டோவில் மிக பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்தது. அதுவே ரஷ்யா கிழக்கு ஜெர்மனியை சுரண்டி அதன் வளங்களை தன் நாட்டுக்கு கொண்டு போயிற்று. ஆகவே சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக கிழக்கு ஜெர்மானியர் சொட்டுக் கண்ணீர் கூட வடிக்கவில்லை.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்ததும் தென் மாநில மிலிட்டரி கமாண்டர்களை லிங்கன் அரசு கௌரவமாகவே நடத்திற்று. இப்போது கூட தென் மாநிலங்களில் தெற்கில் உள் நாட்டு யுத்தத்தை நடத்தியவர்கள் பிறந்த நாள்/நினைவு நாள் ஆகியவை விடுமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. அமெரிக்க வெளியுறவு மந்திரி அட்லாய் ஸ்டீவன்ஸன் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தாராம். அதில் ஓரிடத்தில் உங்கள் மூதாதையர் யாராவது அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனரா என கேள்வி இருந்ததாம். ஸ்டீவன்ஸன் சிறிதும் தயங்கவில்லையாம். “எனது தாய்வழி/தந்தைவழி பாட்டனார்கள் என்று உள்ளிட்டாராம். அதனால் அவருக்கு ஒரு பாதகமும் இல்லை என்பதுதான் நிஜம்.

வலைப்பூவில் விட்ஜட்டுகள் பொருத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்:
இப்போதுதான் NTamil.com widget களை தத்தம் வலைப்பூவில் பொருத்தி கொண்டவர்கள் சந்தியில் நின்றார்கள். அவர்களது பக்கங்களுக்கு போனாலே அது மால்வேர் கொண்டது என கூகள் குரோமும் நெருப்பு நரியும் எச்சரிக்க, வேகவேகமாக அப்பக்கங்களை மூடினோம். இண்டெனெட் எக்ஸ்ப்ளோரரோ சுத்தம், வார்ணிங் எதுவும் தரவில்லை ஆகவே பலரது கணினிகள் பாதிக்கப்பட்டன. ஒவ்வொன்றாக வைரஸுடன் கூடிய வலைப்பூக்கள் திரும்பப் பெறாத அளவுக்கு மூடப்பட்டன. இப்போது ஒருமாதிரி அசௌகரியமான சமநிலை உருவாகியுள்ளது என நினைக்கிறேன். இதிலிருந்து நான் பெற்ற பாடங்கள் பின்வருமாறு:

1. குடுகுடுவென எல்லா விட்ஜட்டுகளையும் பொருத்தி கொள்ளலாகாது. 2. இணையத்தில் என்ன புது ஆஃபர் வந்தாலும் உடனே போய் விழக்கூடாது. 3. இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை பாவிக்கவே கூடாது. அது பாட்டுக்கு எங்காவது ஓரமாக கிடக்கட்டும். அதை சீந்தாதீர்கள். நமக்கு நெருப்பு நரி அல்லது கூகள் க்ரோம்தான் பாதுகாப்பானது. 4. அவ்வப்போது உலாவிகள் பாவிப்பதால் உருவாகும் தற்காலிக கோப்புகள், குக்கீஸ் ஆகியவற்றை அழித்துக் கொண்டே இருக்கவும். 5. மால்வேர்களை இனம்காண உதவும் Ad aware போன்ற கருவிகளை நிறுவி தினம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்து கொள்ளவும். 6. AVG போன்ற antivirus நிரலிகளை நிறுவி அவற்றை அப்டேட் செய்த வண்ணம் இருக்கவும். தினசரி ஒருமுறை முழு கணினியையும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

நான் மேலும் பாவிக்கும் முன்சாக்கிரதை நடவடிக்கைகள்:
போலி டோண்டுவால் பல தொல்லைகள். இருப்பினும் என்னை பலவிஷயங்களுக்கு தயார் செய்தது இந்த விவகாரமே. கூகள் டாக்கில் அவனது கூட்டாளி (தலையில் முக்காடு போட்ட ஒரு உருவம் அவரது ஐக்கான்) ஒருவர் அடிக்கடி ‘நட்பு கொள்ள விரும்பி’ வருவார். அவர் பெயரைப் பார்த்ததுமே முடியாது என டிக் செய்து விடுவேன். அப்படியும் ஐந்து முறைகள் வந்தார். அதே போல யாஹூ மெசெஞ்சரில் ஒருவன் தன்னை பிருந்தா என்னும் 13 வயது பெண் என சொல்லிக் கொண்டு வந்தான். என்னதான் செய்கிறான் என பார்த்தேன். “அப்பெண்ணின்” பேச்சு சற்றே விரசமான எல்லைக்கு சென்றது. பேசாமல் ஆஃப் செய்தேன்.

அமெரிக்காவில் இம்மாதிரி சிறுமிகள் பெயரில் பெண்போலீசார் சேட் செய்து சம்பந்தப்பட்ட ஆணை ஓரிடத்துக்கு வரச் செய்து விடுவார்கள். பிறகு என்ன சங்குதான். அங்கெல்லாம் இக்குற்றத்துக்கு தண்டனை பல ஆண்டுகள் பரோலே இல்லாத சிறை. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லையே என கூறலாம். யார் கண்டது, என்னை கன்னாபின்னாவென்று பேச செய்து விட்டு “பாரீர் டோண்டு ராக்வனின் யோகியதையை” என்று கூட பதிவுகள் ஏதேனும் போட்டிருக்கலாம். தேவையா அது எனக்கு? ஆகவே அந்த சேட்டில் ரொம்பவும் பொதுவான விஷயங்களை பேசினேன். அதற்கு எனது இந்த உள்ளுணர்வே காரணம்.

போலி டோண்டு விவகாரம் சம்பந்தமாக சைபர் கிரைமில் உதவி ஆய்வாளருடன் பேசியபோது அவரும் நான் இந்த நிகழ்ச்சியை கூறி எனது சந்தேகங்களை கூறியபோது அவை உண்மையாக இருக்கும் சாத்தியக் கூற்றை ஊர்ஜிதம் செய்தார். மின்னஞ்சலில் தெரியாதவர்கள் தரப்பிலிருந்து வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் அழிப்பதே உத்தமம். அப்ப்டியே திறந்தாலும் அட்டாச்மெண்ட் கோப்புகளை திறக்கவே கூடாது. அப்படி ஏதேனும் செய்து தொலைத்தால் உங்கள் கணினி வன்தகட்டில் உள்ள விஷயங்கள் மற்றவருக்கு போய் சேரும் அபாயம் உண்டு. முக்கியமாக phishing மின்னஞ்சல்களை அடையாளம் காண வேண்டும். திடீரென் நீங்கள் பல மில்லியன் பவுண்டுகள் லாட்டரியில் ஜெயித்ததாக மின்னஞ்சல் வந்தால் அதை தாட்சண்யமே இல்லாமல் அழிக்க வேண்டும்.

இப்போது என்ன ஆயிற்றென்றால் ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற சோஷல் நெட்வொர்க்குகள் எனக்கு அலர்ஜியாகி விட்டன. அவை சம்பந்தமான எந்த மின்னஞ்சல் வந்தாலும் அதை ஜிமெயில் ஆர்கைவ்சில் போட்டு விடுகிறேன், ஆளை விடுங்கள் என்று. ப்ரோஸ். காம் மூலம் வரும் தொடர்புகள் எனது மொழிபெயர்ப்பாளருக்கான தொழில்முறை வாழ்க்கைக்கு எதேஷ்டம். இருக்கவே இருக்கிறது எனது தமிழ் வலைப்பூ. மீதி எதுவும் இப்போதைக்கு தேவையில்லை என்று நிம்மதியாக இருக்கிறேன். தொடர்புகள் தேவை என்றால் வலைப்பதிவர் சந்திப்புகள் இருக்கவே இருக்கின்றன.

வால்பையன் மூலம் கற்ற ஒரு விஷயம்:
நேற்று வால்பையனிடமிருந்து ஒரு ஃபோன். Kerchiefக்கு ஸ்பெல்லிங் கேட்டார். சொன்னேன். அது பிரெஞ்சு வார்த்தையா என கேட்க, முதலில் இருக்கவே முடியாது என கூறினேன், ஏனெனில் பிரெஞ்சில் சாதாரணமாக் k யில் வார்த்தைகள் துவங்காது. பிறகு எதற்கும் பார்த்து விடுவோம் என கூகளிட்டால் அது couvre-chef (head cover) என்னும் பிரென்சு சொல்லின் மருவிய உருவமாம். தலையை மூடும் துணி என்று பொருள். மறுபடியும் அவரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். இதை நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் போடச் சொல்லி கேட்டு கொண்டார். போட்டு விட்டேன். ஓக்கேதானே வால்பையன்? என் பேத்திக்கு என் அன்பை தெரிவிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/24/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 77 & 78

பகுதி - 77 (21.05.2009):
உமா அசோக்கிடம் தான் அவனுடன் வந்து பழகியதின் பின்புலனை விவரிக்க, விஸ்வாமித்திரரை மயக்க மேனகையை அனுப்பியது போல உன்னை அனுப்புகிறார்களா என அவன் கூறுகிறான்.

“இந்த மேனகா கதையை நானும் கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன சார் கதை” என சோவின் நண்பர் குழந்தை மாதிரி கேட்கிறார். சோ பேசுகிறார். “சாதாரணமாக நமக்கு தெரிந்த மேனகா விவரங்கள் எல்லாம் காளிதாசனின் சாகுந்தலை நாடகத்திலிருந்துதான் வருகின்றன. ஆனால் மேலதிக விவரங்கள் ராமாயணத்திலேயே கூறப்பட்டுள்ளன. மிதிலைக்கு ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரரை தொடர்ந்து வருகின்றனர். அங்கு ராமருக்கு அகல்யையின் புத்திரரும், ஜனகரின் புரோகிதருமான சதானந்தர் விஸ்வாமித்திரரின் பெருமைகளை கூறுகிறார். அதில் ஒரு அரசர் என்னும் நிலையிலிருந்து தன்னை பிரும்ம ரிஷியாக அவர் உயர்த்திக் கொண்ட வரலாறு இருக்கிறது. அவ்வாறு அவர் ஆவதற்காக கடுமையான தவங்கள் மேற்கொள்ள, பல முறை அவர் தவத்துக்கு பங்கம் வருகிறது. பலமுறை அதற்கு காரணம் தேவர்களின் தலையீடுதான். அத்தலையீடுகளில் ஒன்றுதான் மேனகாவை அனுப்பி அவர் மனதை கலைத்தது. அவற்றையெல்லாம் மீறி அவர் பிரும்மரிஷியானார் என்பதுதான் அவர் சாதனை”.

அசோக் இங்கு உமாவிடம் அவளை மேனகா மாதிரி தன்னை அனுப்பித்தார்களா எனக் கேட்டு, வாய்விட்டு சிரிக்கிறான். “நீ இந்த மாதிரி மனம் விட்டு சிரிப்பதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்” என உமா ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறாள். “மாயையை ஜயித்தால்தால்தான் ஆத்மானுபூதிகை கிடைக்கும். அந்த மாயை உன் அன்பு ரூபத்தில் வந்தால் வரட்டுமே. பொன்னிலிருந்து மாசை எடுக்க அதை தீயில் காண்பித்தது போல என்னை எரித்து என் ஆன்மாவை மாயையிலிருந்து இறைவன் காப்பாறுகிறான். எனக்கு அது தேவையே” என கூறுகிறான்.

“உனக்கு என் மேல் இரக்கம் வரவில்லையா” என உமா கேட்க, “அதனால் உனக்கு என்ன பலன்? உன் மேல் அன்பு இருப்பதால்தான் உன்னிடம் வந்தேன்” என்கிறான். “இதுதான் காதல்” என உமா கூற, “நீ சொல்வது அன்பை கொடுத்து அன்பைக் கேட்கும் செயல். அது எதிர்ப்பார்ப்பில் அளிக்கப்படுகிறது. எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லையென்றால், டிப்ரஷனுக்கு காரணமாகிறது. ஆனால் தன்னலம் கருதாது எல்லோரிடமும் செலுத்தும் அன்பால் அம்மாதிரி தொல்லைகள் எல்லாம் வராது” என்கிறான் அசோக். “இந்த மாதிரி விதவிதமான அன்பெல்லாம் வேண்டாம், என்னைப் பொருத்தவரை எனக்கு உன் அன்பு போதும்” என உமா கூறுகிறாள். “அதனால் உனக்கு என்ன லாபம்? சரி, என்னுடன் வா” எனக்கூறி அவளை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.

உமாவுடன் தன் வீட்டுக்கு வருகிறான். அசோக். திகைத்து நிற்கும் வசுமதியிடம் தான் போய் அழைத்ததால்தான் அவள் வந்ததாகவும், இனிமேல் அவள் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பார்க்கலாம் என்றும் கூறி விட்டு அசோக் உள்ளே போகிறான். அவனை பின் தொடர்வதற்கு முன்னால் உமா வசுமதியிடம், தான் கூறுவதை அவள் எதிர்ப்பதமாக புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டு பேசுகிறாள். “எனக்கு இந்தாத்துக்கு வர பரம இஷ்டம். உங்க மூஞ்சியெல்லாம் பார்க்க குஷியா இருக்கு. அசோக் என்னை வரவே கூடாது என்றான். வேறே வழியில்லாதுதான் வந்தேன். நான் இங்கே வருவது உங்களுக்காகத்தான். அசோக்குக்காக இல்லை. நான் வெளியே போறேன்” என்றெல்லாம் கூறி விட்டு, “ஸ்வீட் மாமி” என செல்லமாக அவள் கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே திருப்தியுடன் செல்கிறாள்.

உள்ளே வந்து இம்மாதிரி தன்னை உமா பழி தீர்த்து கொண்டது பற்றி வசுமதி சமைய்ற்கார மாமி கோமதியிடம் புலம்ப, அவள் முன் ஜாக்கிரதையாக தான் வெறும் சமையற்காரி என்றும், இது சம்பந்தமாக கருத்தெல்லாம் சொல்வதற்கில்லையென கூறுகிறாள். வேறு வழியின்றி வசுமதி கோமதிக்கு பேச்சு சுதந்திரம் தர, அதற்காகவே காத்திருந்தது போல கோமதி தன் மனதில் பட்டதையெல்லாம் படவென கூறி வசுமதியை மேலும் வெறுப்பேற்றுகிறாள்.

பேச வேண்டியதை பேசிவிட்டு உமா புறப்படுகிறாள். அசோக்கிடம் மட்டும் சொல்லிக் கொண்டு போகும் அவள் வசுமதியை கண்டு கொள்ளாமல் போகிறாள். அது வேறு வசுமதிக்கு கடுப்பை உருவாக்குகிறது. அசோக்கிடம் அவன் உமாவை திருமணம் செய்யும் விருப்பத்தில் உள்ளானா என கேட்க, அவன் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு, அந்த கர்ம விதிப்பயனும் பாக்கி இருந்தால் அதுவும் நடக்கட்டுமே எனக் கூற வசுமதி இன்னும் குழம்புகிறாள். அவன் என்ன கூறுகிறான் என கோமதி மாமியிடம் கேட்க, அவள் தன் பங்குக்கு, “அதான் சொன்னானே, கர்மா, விதி, பயன் அப்படீன்னு. யாருக்கு புரியறது” என நொடித்து விட்டு போகிறாள்.

நீலகண்டன் வீட்டுக்கு சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். தன் தங்கை காசிக்கு போய் கங்கை சொம்பு கொண்டு வந்ததாகவும், அதை தனது நாத்தனார் வீட்டில் கொண்டு தருமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதால், தான் அந்தப் பக்கம் வந்ததாகவும், இவர்களையும் அப்படியே பார்க்க வந்தாகக் கூறுகிறார். தஙளாத்துக்கும் ஒரு சொம்பு கொண்டு வந்திருக்கலாகாதா, தாங்களும் சிறிது கங்கை ஜலத்தை தங்கள் மேல் தெளித்து கொண்டிருக்கலாமே என ஆதங்கப்படுகிறாள் பர்வதம். அதனால் என்ன ஆகப்போகிறது என நீலகண்டன் இடக்காக கேட்க, கங்காஜலத்தின் பெருமைகள் பற்றி சாம்பு சாஸ்திரி ஒரு கிளாஸே எடுக்கிறார். நீலகண்டன் சற்றும் எதிர்பாராவண்ணம் ஃபிசிக்ஸ் தியரிகள் பற்றி எல்லாம் பேசி, ஸ்டெப் பை ஸ்டெப்பாக நீலக்ண்டனை தான் சொல்வதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்.

திடீரென நீலகண்டன் பிள்ளையாரின் வாகனமாகிய இந்த சிறிய மூஞ்சூறு அவ்வளவு பெரிய பிள்ளையாரை துதிக்கையுடன் சேர்த்து எவ்வாறு செல்லும் என கேள்வியை எழுப்புகிறார். “அதானே” என ஆமோதிக்கிறார், சோவின் நண்பர். சோ அவர்கள் ஹிந்து மதத்தில் உருவகமாக பலவிஷயங்கள் குறிப்பிடப்படுவதை சுட்டுகிறார். இந்த வாகனங்களும் அப்படித்தான் என்கிறார். மூஞ்சூறு எதிரில் இருக்கும் எல்லாவற்றையும் வர்ஜா வர்ஜமில்லாமல் உண்ணும் இயல்புடையது. மனிதனின் புத்திக்கு அது உருவகமாக அமைகிறது. அந்த புத்தியை அடக்கி நல்வழிப்படுத்துபவர் விநாயகர், ஆகவே அது அவரது வாகனம். கர்வம் மிக்க பறவையான மயிலை முருகர் வைத்திருப்பது எல்லோரும் கர்வத்தை அடக்கிச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே.

இப்போது சாம்பு சாஸ்திரிகள் நீலகண்டனை ஒரு கேள்வி கேட்கிறார். கார் ரிப்பேரானால் ஜாக்கியை போட்டு தூக்குகிறோம் அல்லவா, அந்த சிறிய ஜாக்கி எப்படி அவ்வளவு பெரிய காரை தாங்குகிறது என கேட்க, நீலகண்டன் அது mechanism என்கிறார். அதே போல தான் சொல்வது occultism எனக் கூறி சாஸ்திரி சிக்சர் அடிக்கிறார். பர்வதத்தின் முகத்தில் புன்னகை.

பகுதி - 78 (22.05.2009):
நாதன் கோபமாக சாப்பிடாமல் அமர்ந்திருக்கிறார். வசுமதியிடம் அவள் உமாவிடம் நடந்து கொண்டது பற்றி தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். தான் உமாவுக்கு வாக்கு தந்தது பற்றி அவர் நினைவுபடுத்த, அது வெறும் வாய் வார்த்தையாகக் கூறப்பட்டதென்று என்று வசுமதி கூற, தன்னைப் பொருத்தவரை சொன்ன சொல்தான் முக்கியம் எனக் கூறிவிடுகிறார் நாதன்.

“ஆஃப்டர் ஆல் வெறும் வார்த்தைதானே” என நண்பரும் ஆமோதிக்க, சோ பேச ஆரம்பிக்கிறார். நல்லோர் அளிக்கும் வாக்கு வாய் வார்த்தையாக இருந்தாலும் கல்மேல் எழுதப்பட்டது போல. அதே சமயம் கீழோர் தரும் வாக்கு சபதமாகவே இருந்தாலும், எழுத்து ரூபத்தில் தரப்பட்டிருந்தாலும் அது நீர் மேல் எழுதியது போலவே எனக் கூறுகிறார். இதற்கு வேரியேஷனாக, “வாயால் ஆயிரம் வார்த்தை சொல்லிக் கொள், ஆனால் மறந்தும் அதை எழுத்தில் வைக்காதே” என்று பேசும் பெரியவர்களும் உண்டு. இந்த நாதன் வாய் வார்த்தையை மதிப்பவர், மேலும் அவர் நீலகண்டனுக்கு எழுதிய கடிதம் வேறு இருக்கிறது எனக்கூறி கலகலப்பு ஊட்டுகிறார் சோ.

வேறு வழியின்றி வசுமதி பணிந்து போக வேண்டிய நிர்ப்பந்தம். நீலகண்டனுக்கும் ஃபோன் செய்து தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறாள். நாதனுக்கே ஆச்சரியம், அவளது இந்த துரித மனமாற்றத்தைப் பார்த்து. அசோக் விரும்பினால் உமாவை அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்னும் அளவுக்கு அவள் இறங்கி வந்து விடுகிறாள்.

வசுமதி வீட்டுக்கு வரும் அவள் சினேகிதி மைதிலி அசோக் உமா பற்றிய அவளது கவலைக்கு தூபம் போடுகிறாள். நேராகப் போய் பர்வதத்திடம் திருமணப் பேச்சை வசுமதி எடுக்க வேண்டும், பர்வதத்துக்கே இந்த சம்பந்தத்தில் இஷ்டம் இல்லாததால் வசுமதிக்கு ஏதும் அவள் கணவரிடம் கெட்டப் பெயர் வராத வண்ணம் பர்வதம் நீலகண்டனே மறுத்து விடுவார்கள் என ஒரு அபார யோசனை கூறுகிறாள். அப்படி பர்வதம் செய்யாவிட்டால் தான் தனது காதுகளை அறுத்து கொள்வதாகவும் சூளுரைக்கிறாள் அந்த மாது சிரோன்மணி. அவள் தன் காதுகளை அறுத்து கொள்வதால் எனக்கு என்ன லாபம் என வசுமதி அலுத்து கொண்டாலும் அந்த ஆலோசனையை செயல்படுத்த முடிவு செய்கிறாள்.

“இதென்ன சார், நல்ல பெண் கைகேயியை மனம் மாற்றிய கூனி போல இந்தப் பெண்மணி செயல்படுகிறாள்” என நண்பர் அலுத்துக் கொள்ள, கைகேயி அப்படியெல்லாம் பலர் கூறுவது போல நல்ல பெண்மணி இல்லை என்பதை சோ அவர்கள் நிறுவுகிறார். அவளுக்கே அடிமனதில் ராமர் பட்டாபிஷேகம் பற்றிய பயங்கள் இருந்திருக்கின்றன, கூனி பேசியதால் அவை குபீரென தூண்டப்பட்டன, அவ்வளவே என கூறும் சோ, இங்கும் வசுமதிக்கு ஏற்கனவே இருந்த அந்தஸ்து மோகம் மைதிலியால் தூண்டப்பட்டது அவ்வளவே எனக் கூறுகிறார்.

தன் வீட்டுக்கு திடீரென வந்த வசுமதியை வரவேற்கிறாள் பர்வதம். “என்ன விஷயமா வந்திருக்கே, எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு, ரெண்டே வார்த்தைகளில் சொல்லு” என அவள் கூற, வசுமதி “சரி சம்பந்தி” என பதிலளிக்கிறாள். பர்வதம் திக்குமுக்காடிப் போகிறாள். இப்போது வசுமதி அசோக் உமா சம்பந்தத்தின் அனுகூலம் பற்றி பாயிண்டுகளை அடுக்குகிறாள். அதாகப்பட்டது: உமாவும் விரும்புகிறாள். அசோக்குக்கு பைத்தியம் குணமாகும்னு தோணலை, இருந்தாலும் உமாவை அவனூக்கு கல்யாணம் செஞ்சுவச்சு முயற்சிக்கலாம். உமா மாதிரி ஒரு பெண் அசோக்குக்காக தியாகம் செய்வது பாராட்டத்தக்கது, and so on.

பர்வதம் தன் பங்குக்கு தன் கணவர் நீலகண்டனை கலந்து பேசித்தான் முடிவு செய்ய இயலும் எனக்கூறி அவளை வழியனுப்புகிறாள். நீலகண்டன் கேரளா டூர் முடிந்து வரும் போது அவள் இப்பிரச்சினையை கணவன் முன்னால் வைக்கிறாள். தனக்கும் இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லை என அவர் கூற, பர்வதம் நிம்மதியடைகிறாள். இப்போதே போய் நாதன் வீட்டில் இந்த சம்பந்தம் சரிப்படாது எனக் கூறிவிட்டு வருவதாக நீலகண்டன் புறப்பட, உமா வந்து அவரைத் தடுக்கிறாள். தான் மேஜர், ஆகவே தனது திருமணம் தன் விருப்பப்படியே அமையும் எனக்கூறுகிறாள் அவள். அப்படியே அசோக்குக்கு அவளை திருமணம் செய்து வைக்காவிடில் தான் திருமணமே செய்யப் போவதில்லை எனவும் உறுதியாகக் கூறுகிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/23/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 23.05.2009

பிரபாகரன் கொலையுண்டாரா, உயிருடன் இருக்கிறாரா?
இதுதான் இப்போது எல்லோர் மனதையும் ஆக்கிரமிக்கும் விஷயம். பி.இராயகரன் புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார் என்பது பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்:

“திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.

இந்தச் சதி நன்கு திட்டமிட்டு திணிக்கப்பட்டது. இந்த துரோகம் வெளித்தெரியாது இருக்க, புலித் தலைவரை உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம், துரோகிகளே இன்று புலித் தலைமையாகியுள்ளது.

யார் இதை நன்கு திட்டமிட்டு சரணடைய வைத்தனரோ, அவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை தலைவர் இருப்பதாக கூறி இன்று மூடிமறைகின்றனர்.

தங்களைத் தாங்களே இராணுவத்திடம் ஓப்படைத்து பலியான அந்த புலி அரசியல் அடிப்படை என்ன? தனிமனித வழிபாடும், சர்வாதிகாரமும் மேலோங்கிய ஒரு அமைப்பு, இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயலாற்றவும் அவர்களால் முடியவில்லை. தான் சரியாக இருப்பதாகக் கருதிக்கொண்டு, தன்னைத்தானே பலி கொடுத்துள்ளது. இதைத்தான் நோர்வே சமாதான முகவர் எரிக்சூல்கெய்ம், எதையும் சிந்திக்கும் நிலையில் பிரபாகரன் இருக்கவில்லை என்கின்றார்.

இந்த சதிக்கு உதவியது, மாபியாக் குழுக்களுக்கு இருக்கக் கூடிய விசுவாசம் தான். அதைக் கைவிடும் போது, அது உள்ளிருந்தே கழுத்தறுக்கின்றது.

இன்று புலிப் போராட்டங்கள், நம்பிக்கைகள், விசுவாசங்கள் அனைத்தும் மந்தைத்தனத்தை அடிப்படையாக கொண்டது. புலித்தலைமை மக்களை வெறும் மந்தையாக பயன்படுத்தியது. இதில் துயரம் என்னவென்றால், அதே மந்தைத் தனத்தடன் புலித்தலைமை இலங்கை அரசிடம் சரணடைந்து பலியானதுதான்.

மந்தைத்தனம் தலைமை வரை புரையோடிக் கிடந்தது. இது தன்னைத்தானே பலியிட அழைத்துச் சென்றது. மூன்றாம் தர மாபியாக்கள், இலகுவாக கழுத்தறுக்க முடிந்தது. இடைக் காலத்தில் தப்பி செல்ல முற்படா வண்ணம், அவர்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு பற்றிய நம்பிக்கையை ஊட்டி, அவர்களை சுற்றிவளைக்கப் பண்ணிய பின் அதுதான் இது என்று சரணடைவை வைத்து கழுத்தறுத்துள்ளனர். மக்களை முட்டாளாக்கி மந்தையாக்கிய புலியின் பின், இந்தத் துரோகம் இலகுவாக ப+சி மெழுக முடிந்துள்ளது.

மக்கள் எவ்வளவு முட்டாளாக மந்தைகளாக உள்ளனர் என்பதை பார்க்க, நக்கீரன் வெளியிட்ட மோசடிப் படத்தை புலி கொண்டாடிய விதம் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நாள் கூட அந்த படம் உயிர் வாழமுடியாது போனது. பாலசிங்கத்துடன் அமர்ந்து இருந்து பிரபாகரன் உரையாடும் அந்தப் படத்தை வைத்து, நக்கீரன் அரங்கேற்றிய மோசடி அம்பலமாகின்றது. மக்களை மந்தையாக்கி, அதை நம்பவைத்து நக்கீரன் போன்ற பொறுக்கிகள் பணம் சம்பாதிக்கின்றனர். ஒரு விடுதலைப் போராட்டத்தில் பல மாபியாக்கள். இறந்தவர்களை வைத்து பிழைப்பு”.


இப்போது இந்த வெர்ஷனை கிட்டத்தட்ட முழுமையாகவே ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்டரும் உறுதி செய்துள்ளன. பிரபாகரன் எப்படி தப்பினார், சுரங்கப்பாதை வழியாக எவ்வாறு கடலுக்கருகில் சென்று அங்கிருந்து மிக வேகப் படகுகளில் பத்திரமான இடத்துக்கு தப்பினர் என்றெல்லாம் கூறப்படுபவை, அவ்வாறு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற தோரணையில் கூறப்படுபவனாகவே தோற்றம் தருகின்றன. நக்கீரன் செய்த ஃபோட்டோஷாப் கூத்து ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டதும், அதற்கும் ஒரு சப்பைக்கட்டு வைத்திருக்கிறார்கள். இம்மாதிரி தருணங்களில் உண்மையை கண்டறிவது கடினம். இதற்கு முன்னால் பலமுறை பிரபாகரன் இறந்ததாக்க் கருதப்பட்டு பிறகு அவர் உயிருடன் வெளிப்படுவது என்ற precedents இருந்ததாலேயே இந்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. பல புலி ஆதரவாளர்களுக்கோ இது தன்னம்பிக்கை பிரச்சினையாகப் போய் விட்டது. ஆகவே பிரபாகரன் இனி இல்லை என்பதையே யோசித்து பார்க்கவும் அவர்கள் தயாராக இல்லை.

சதாம் ஹுசைன், முசோலினி, ருமானிய அதிபர் சோசெஸ்கூ, ஜெர்மனியின் Göringg, Goebbels, Von Ribbentropp ஆகியோர் இறந்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மரணத்தில் சந்தேகம் இல்லை. அதே சமயம் ஹிட்லர் இறக்கவில்லை என சில கோஷ்டிகள் ரொம்ப ஆண்டுகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். மேற்கு ஜெர்மனி அரசு ஹிட்லருக்கெதிரான கைது உத்திரவை ரொம்ப நாளைக்கு நிலுவையில் வைக்கும் அளவுக்கு இந்த வதந்தி சக்தி வாய்ந்ததாக இருந்தது. இப்போது பிரபாகரன் மரணத்தில் சிறிதளவு சந்தேகம் கூட இருக்கும் வரை இந்திய அரசும் அவரது பெயரை ராஜீவ் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில்ருந்து நீக்கக் கூடாது.

பிரபாகரன் உயிரோடு இன்னும் இருக்கிறார் என்று சொல்பவர்கள் அவ்வாறு சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவை பின்வருமாறு. இன்னொரு முக்கிய விஷயம், ஒன்றுக்கு ஏற்பட்ட காரணங்களும் சிலர் விஷயத்தில் நடக்கும்.

1. மேலே ரயாகரன் கூறியது போல புலித் தலைமையை காட்டிக் கொடுத்த துரோகிகள் தாம் செய்த துரோகத்தை இவ்வாறு மறைக்க முற்படலாம். அவர்களை தப்பிக்க வைத்ததே தாங்கள்தான் என சீன் கூட காட்டுவார்கள். பின்னால் புலிததலைமை வெளியே வராமலே போனாலும் அவர்கள் தங்களுடன் பிற்பாடு தொடர்பு கொள்ளவேயில்லை எனக்கூறி, அவர்களுக்கு என்னாயிற்றோ என அவர்களும் மற்றவர்களுடன் முதலைக் கண்ணீர் வடிக்கலாம்.

2. புலிகளின் தலைமை உயிரோடு இருந்தால்தான் அவர்கள் பெயரைச் சொல்லி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் வசூல் செய்யலாம். உண்மை முழுமையாகத் தெரியும்வரை வந்த வரையில் லாபம் எனவும் செயல்படலாம்.

3. புலிகள் தப்பிவிட்டனர் என உண்மையாகவே நம்பி ஆறுதல் அடையலாம். அவர்களில் பலர் புலித்தலைமை அழிந்திருக்கலாம் என்பதை வாதத்துக்குக் கூட ஒப்புக் கொள்ள மறுக்கலாம்.

4. புலி செத்தது, புலி செத்தது என்று சொல்லி சொல்லி ஏமாற்றியதாலேயே கூட இப்போ புலி செத்தது என்பதை நம்ப மறுப்பவர்களும் இருக்கலாம்.

மத்தியில் காங்கிரஸ் - திமுக இடையே மந்திரி பதவிக்காக இழுபறிகள்:
எங்களூர் கவுன்சிலர் காங்கிரஸ்காரர். அவர் இது விஷயமா ஒரே வார்த்தைதான் சொன்னார். “இந்த திமுக காரங்களுக்கு எப்போதுமே தாங்கதான் சாப்பிடணும்னு குறி. மாநிலத்தில் மந்திரி பதவி காங்கிரசுக்குத் தர துப்பில்லை. இங்கே மட்டும் வந்திடறாங்க” என்றார் அவர். தமிழக காங்கிரசார் மூன்றாண்டுகளாக மனதில் வைத்து புழுங்கியதைத்தான் அவர் சரேலென சொன்னார். 2004 நிலைமை வேறு, இப்போது நிலைமை வேறு. அப்போது காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. ஆகவே அக்கட்சி செய்ததையெல்லாம் பொறுத்துப் போக வேண்டியதாயிற்று. இப்போது நிலைமை தலைகீழான பிறகும் திமுக அதே மாதிரி தங்களுக்கு கேட்ட பதவிகள் கிடைக்கும் என எப்படி நம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வேறு ஏதேனும் உள்ளடி விவகாரங்கள் உள்ளனவோ என்பதை யாரறிவார் பராபரமே! அதையும் பார்ப்போம்.

பை தி வே, 1971-ல் இந்திரா காங்கிரசுக்கு வெறுமனே பாராளுமன்றத்தில் மட்டும் சீட்கள் ஒதுக்கி அசெம்பிளியில் ஒரு சீட்டும் தராது அழிச்சாட்டியம் செய்தார் கருணாநிதி. அப்போதைக்கு அந்த அவமானத்தை வேறுவழியின்றி இந்திரா விழுங்கினார். பிறகு 1976-ல் சர்காரியா கமிஷன், மிசா கைதுகள் என்றெல்லாம் சொல்லி சொல்லி அடித்தார். 1980-ல் கருணாநிதியே வேறு வழியின்றி “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என கெஞ்ச வேண்டியதாயிற்று. இப்போதும் சரித்திரம் லேசாகத் திரும்புகிறது என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

ஆனால் ஒன்று. முக அவர்கள் இப்போதைய பிரபாகரன் விஷயத்தில் என்ன கூறுகிறார் என்பதை எங்குமே பார்க்க இயலவில்லை. யாரேனும் எங்கேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமாக தெரிவியுங்கோ சாமியோவ். ஓக்கே அவரோட குடும்பக் கவலை அவருக்கு. புலிகளா முக்கியம்னு சொல்லறீங்களா? சரி சரி, கண்டுக்கலை.

சோ அவர்களைப் பார்த்து சீறுபவர்களுக்கு:
இதில் சோ அவர்களை பல சேனல்கள் பேட்டி எடுக்கின்றன, அவர் கருத்துக்களையும் கேட்கின்றன, அவரும் சொல்கிறார். சீறி எழுகிறார்கள் திராவிட குஞ்சுகள். பார்ப்பன கொழுப்பு என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்கள் வருகின்றன. சோவை ஏன் நொந்து கொள்கிறீர்கள் பார்ப்பன துவேஷிகளே? அந்தந்த சேனல்களுக்கு எழுதுங்கள், சோவையெல்லாம் பேட்டி காணக்கூடாது என. அவர்களுக்கும் துடைத்துக் கொள்ள காகிதங்கள் கிடைத்த மாதிரி இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது