5/27/2009

தோழர் அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல்

முதலில் ஆங்கிலத்தில் வந்த இந்த நேர்க்காணலின் தமிழாக்கம் புகலியின் இந்த உரலில் வந்தது. விஷயம் முக்கியமானதாக எனக்கு பட்டது. ஆகவே இது இன்னும் பரவலாக அறியப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புகலி ஆசிரியர் குழுவிடம் இதை எனது வலைப்பூவிலும் பதிவிட அனுமதி கேட்டிருந்தேன். அவர்களிடமிருந்து சற்று முன்னால் எனக்கு அந்த அனுமதி கீழே காணப்படும் மின்னஞ்சல் மூலம் கிடைத்தது.

from editors
to raghtransint@gmail.com
date Wed, May 27, 2009 at 5:54 PM
mailed-by puhali.com
5:54 PM (9 minutes ago)
தொடர்பு கொண்டமைக்கு நன்றி. எமது இணைப்பை வழங்கி பதிவிடுங்கள்.
புகலி


அவர்களுக்கு என் நன்றி. எனது கமெண்டுகள் பின்னால் வரும்.

முன்னால் வடக்கு கிழக்கு மாகான முதலமைச்சராக இருந்தவரும், EPRLF இன் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், தற்போது இந்தியாவில் வசித்து வருபவருமான தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணலின் தமிழ் வடிவம்

கேள்வி: பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?
வ.பெ: நிச்சயமாக. அது குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. எல்லோரும் பார்க்கக்கூடியதாக புகைப்படங்கள் இருக்கின்றன. அடுத்து, கருணா அந்த இடத்திற்குச் சென்று பிரபாகரனுடைய உடலை அடையாளம் காட்டி இருக்கின்றார்.

கேள்வி: கருணா ஒரு காலத்தில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக இருந்தாரா?
வ.பெ: 2004ம் ஆண்டுவரையும் அவர் விடுதலைப்புலிகளுக்கு 2வது தளபதியாக இருந்தவர். அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லவேண்டிய எந்தக் காரணமும் இலங்கை அரசுக்கு இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி: இது உண்மை என்றால், விடுதலைப் புலிகள் இன்று அநாதையாகிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?
வ.பெ: இன்னும் 500 தொடக்கம் 600 வரையிலான விடுதலைப்புலிகளில் எஞ்சியவர்கள் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் வன்னிக் காடுகளிலும் உலாவிக்கொண்டிருக்கின்றபோதும், விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் முடிந்துவிட்டார்கள்.

கேள்வி: அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றதா?
வ.பெ: சில ஆயுதங்கள் இருக்கின்றன.

கேள்வி: அவர்களுக்கு ஏதாவது தலைமை இருக்கின்றதா?
வ.பெ: அவர்களுக்கு அப்படி யாரும் இல்லை. எனவே இவர்கள் சில காலத்திற்கு ஆயுதக் குழுக்களாக இயங்குவார்கள். அதற்கு மேல்செல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பராமரித்துக் கொள்ள எப்படி முடியும்?

கேள்வி: இந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு யார் தலைமை கொடுப்பார்கள்?
வ.பெ: இலங்கைத் தமிழ் மக்களிற்கு இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகள் தலைமை கொடுத்தார்கள் என்ற தப்பபிப்பிராயத்திற்கு நாங்கள் இடம் கொடுக்கக்கூடாது. உண்மையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு. அது தமிழ்த் தலைமைகளைக் கொன்றொழித்தது. இது 1986இல் ரெலோ சிறீ சபாரட்ணத்தின் படுகொலையில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து அமிர்தலிங்கம் (தவிகூ), பத்மநாபா (ஈபிஆர்எல்எவ்), நீலன் திருச்செல்வம் (தவிகூ), கேதீஸ்வரன் (ஈபிஆர்எல்எவ்) போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1986ம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளில் இருந்த தலைவர்களும் போராளிகளுமாக 10 000 க்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் எந்தவொரு அறிவுஜீவிகளின் அபிப்பிராயத்தையும் நசுக்கியே வந்தனர். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களிடையே திகிலைப் பரப்பினார்கள். அதாவது, எங்கு வாழுகின்ற தமிழ் மக்களாக இருந்தாலும் அவர்கள் மனத்தில் அச்சத்தைச் செலுத்தி இருந்தார்கள்.

கேள்வி: ஆனால் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்த மக்கள் ஆதரவை, குறிப்பாக புகலிடத் தமிழர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவை, அதற்கான அடிப்படையை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
வ.பெ: நல்லது. நீங்கள் தமிழ் சமூகம் அப்படி இருக்கின்றதென்று கருதினால், அவர்கள் இந்த விடயங்களைத் தர்க்கரீதியாகவோ பகுத்தறிந்தோ பார்த்திருக்கவில்லை. தீவிரமான உணர்ச்சிப் பெருக்கினாலும் சிங்கள எதிர்ப்பு உணர்வினாலுமே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள்.
புலம்பெயர் தமிழர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருந்து தொலைந்து போன மக்கள். அவர்களுடைய சொந்த நலன்களும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. தாங்கள் வசிக்கும் நாடுகளில் அவர்கள் தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து தேவை. அது இலங்கையில் நடைபெறும் முடிவுறாத யுத்தத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யுத்தம் அவர்களை நாட்டுக்குத் திரும்ப முடியாதிருப்பதை உறுதி செய்கின்றது.

கேள்வி: இனிமேல் இலங்கையில் என்ன நடக்கும்?
வ.பெ: தமிழர்கள் ஜனநாயகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான முக்கியமான தடங்கல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின் படுகொலையுடன் அகற்றப்பட்டுவிட்டது. ஜனநாயகத்தை விரும்பும் தலைமைகள் இப்போது அங்கு சென்று தங்கள் மக்கள் மத்தியில் எந்த இடையூறும் இன்றி பணிபுரியக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

கேள்வி: ஆனால் இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர்கள் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லவா?
வ.பெ: இலங்கை அரசின் குறிக்கோளும் அவர்களின் மனித உரிமை மீறல்களும் சந்தேகத்திற்கிடமில்லாமல் முக்கியமானவைதான். ஆனால் முதன்மையான விடயம் தமிழர்களின் பிரச்சினை. இன்றுவரை தமிழர் பிரச்சினையானது பிரிவினை என்ற பதாகையின் கீழ் விடுதலைப்புலிகளினால் திசைதிருப்பப்பட்டிருந்தது.
பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பிரிவினை அல்லது தனியாகப் போதல், அதாவது ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது தெரியும். ஆனால் அவர்கள் எல்லோரும், விடுதலைப்புலிகள் போராடி சிங்களத் தலைமைகளிடம் இருந்து தங்களுடைய கோரிக்கைகளைப் பிடுங்கித் தருவார்கள் என்று நினைத்தார்கள். எப்படி இருப்பினும் விடுதலைப்புலிகளால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமிழ்த்தலைமைகளை படுகொலை செய்ததன் மூலம் எந்தத் தமிழத் தலைமை உருவாவதையும் தடைசெய்தது. விடுதலைப்புலிகளுடன் அணிசேராத எந்தவொரு அமைப்பபையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

கேள்வி: ஈழம் சாத்தியமற்றது என்று சொல்கின்றீர்களா?
வ.பெ: தனியே பிரிந்து போவதற்கான போராட்டம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டது. விடுதலைப்புலிகள் ரெலோ அமைப்பை 1986இல் தாக்கி அழித்தபோது பிரிவினைக்கான இயக்கம் அகால மரணத்தைத் தழுவியது.

கேள்வி: ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தடவை ஈழத்திற்கான கோரிக்கை எழமாட்டாதா?
வ.பெ: விஷயம் என்னவென்றால், தமிழ்மக்கள் ஒரு சுயாட்சி முறையை அனுபவிக்கின்ற ஒரு அரசியல் சூழலை சிங்களத் தலைமைகள் உருவாக்காமல் இருந்தால் தமிழ் மக்களுடைய போராட்டம் தொடரும்.

கேள்வி: இனி வரும் காலங்களில் தமிழர்களின் போராட்டம் வன்முறை சார்ந்து இருக்குமா அல்லது ஒரு அகிம்சைப் போராட்டமாக இருக்குமா?
வ.பெ: எதிர்காலத்தில் அநேகமாக வன்முறை சாராத அகிம்சைப் போராட்டமாகத்தான் இருக்கும். நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் எற்கனவே வன்முறை சார் போராட்த்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அறவழியிலான போராட்டம் மட்டுமே வழிவகுக்கும்.

கேள்வி: 1990ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை நீங்கள் முதலமைச்சராக இருந்திருக்கின்றீர்கள்? தமிழ்ப்பகுதிகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயத்தில் உங்கள் அனுபவம் எப்படியானது?
வ.பெ: அந்த நேரத்தில் பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதி ஜயவர்த்தனா பதவியில் இருந்த காலத்தில், 13வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. அது அதிகாரப் பகிர்வு தொடர்பான செயன்முறையைத் தடுத்தது. இந்த 13வது திருத்தச் சட்டம் நிறைய போதாமைகளைக் கொண்டுள்ளது. அதில் அதிகாரங்களுக்கான பற்றாக்குறை உள்ளது. அது ஒரு நல்ல சட்டமல்ல. அதில் தவறான அர்த்தப்படுத்தல்களுக்கு நிறைய இடம் இருக்கின்றது. அதேவேளை இது 1987இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கும் அதிகாரப் பகிர்விற்கும் எதிராக இருந்தது. அந்த நேரம் அதிகாரப் பரவலாக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்தச் சிங்களத் தலைமையும் அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முதலமைச்சர்கள் இயங்கியது போன்று நிலைமை அந்தக் காலப் பகுதியில் எனக்கு அங்கு இருக்கவில்லை. எல்லா அதிகாரங்களையும் கொண்ட முதலமைச்சராக நான் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற முதலமைச்சராகத்தான் நான் இருந்தேன்.
எப்படி இருப்பினும் நேர்மையாகச் செயற்படும் ஒரு ஜனாதிபதி இருந்தால், அவரால் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் அர்த்தப்படுத்த முடியும். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் ஒரு புதிய அதிகாரப் பகிர்வுப் பொதி முன்வைக்கும் நோக்கம் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு கூட்டாட்சி அமைப்புமுறையை ஏற்றுக் கொண்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வினைக் கொண்டு வருவதற்குப் பாவிக்க முடியும். உண்மையில், ஒரு தீர்வுப்பொதிக்கான சாத்தியத்தைக் காணுமாறு விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சர் திஸ்ஸவிதாரண அவர்கள் தலைமையில் ஒரு சர்வகட்சிகள் குழு ஒன்று ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டது.

கேள்வி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அதிகாரப்பகிர்வை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
வ.பெ: நிச்சயமாக. எதுவும் இன்னும் முற்றுப் பெறவில்லை.

கேள்வி: இதில் இந்திய அரசாங்கம் என்ன மாதிரியான அனுகூலமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள?
வ.பெ: இப்போது இலங்கை-இந்திய அரசுகளிற்கிடையில் நல்ல உறவொன்று இருக்கின்றது. இரண்டு அரசுகளும் தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைமைகளுடன் பேசி ஒரு ஒழுங்குக்கு வரவேண்டும். தமிழ்நாட்டுத் தலைமைகளும் இதில் கணிசமான பங்களிப்பை வழங்கும்படி பார்க்க வேண்டும.;

கேள்வி: பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னாக இப்போதிருக்கும் இந்தச் சூழலில், தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய பாதைகள் திறந்துவிடப்பட்டிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
வ.பெ: ஓம். வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகள் தங்களுடைய வன்செயல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுதல் சாத்தியமற்றது என்று இன்றுவரை சிங்களத் தலைமைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சாக்குப் போக்கு இப்போது இல்லாமற் போய்விட்டது.
தனிப்பட்ட முறையில் நான் உணர்வது என்னவென்றால் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ்நாட்டுத் தலைமைகளுக்கும் இடையில் ஒருவிதமான நம்பிக்கை வெகுவிரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். அது நிச்சயமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.

கேள்வி: விடுதலைப்புலிகளை அழிப்பதென்னும் பிரமாண்டமான ஒரு கடமையை எவ்வாறு மகிந்த ராஜபக்ச செய்து முடித்தார்? அவருக்கு முன்பிருந்தவர்கள் எல்லோரும் இந்த முயற்சியில் தோல்வியடைந்த பொழுது? நீங்கள் இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
வ.பெ: ஜனாதிபதி ராஜபக்சவிற்கு விடுதலைப்புலிகளை அழிப்தென்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது. அவருக்கு முதல் இருந்த ஜனாதிபதி சந்திரிக்காவும் உண்மையிலேயே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் சமாதானம் நிலவவேண்டும் என்றும் விரும்பிச் செயற்பட்டவர். ஆனால் அவர் பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டிருந்தார்.
இன்னும் ஒரு விடயம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.

கேள்வி: ஆனால் இந்திய அரசு இன்று இலங்கைத் தமிழர்களுக்கு முன்பிருக்கும் மனித அவலங்கள் பற்றிக் கவலை கொள்கின்றதா?
வ.பெ: இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையிலான சகல உதவிகளையும் வழங்குவதைச் சாத்தியப்படுத்துகின்றது. இந்த அலுவல் இந்தியாவினால் மட்டுமல்ல முழு சர்வதேச சமூகத்தினாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதிலும் அவர்களை மீள்குடியேற்றுவதில் பெருந்தன்மையாக இருக்கவேண்டும.;
கேள்வி: பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் இலங்கையில் பயங்கரவாதச் செயல்கள் ஊடுருவும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
வ.பெ: அது நீண்ட காலத்திற்கு இல்லை. இலங்கை அரசு கண்டிப்பாக இருந்தால் அப்படியான செயல்கள் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது.

கேள்வி: உங்களுக்கு பிரபாகரனை நீண்ட காலமாகத் தெரியும். நீங்கள் அவரை எப்படி விவரிப்பீர்கள்?
வ.பெ: அவர் உலகின் மிகப் பெரிய ஈவிரக்கமற்ற பயங்கரவாதத் தலைவர்களில் ஒருவர். அதேநேரம் அவர் அரசியல் ரீதியாக கோழைத்தனமுடையவர்.

கேள்வி: தயவுசெய்து எப்படி என்று சொல்லுங்கள்?
வ.பெ: அவர் எந்த ஒரு அரசியல்ரீதியான போட்டியையோ அல்லது விமர்சனங்களையோ எதிர்கொள்ளமுடியாதவராய் இருந்தார்.

கேள்வி: இன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 18வது ஆண்டு நினைவு தினம். அவர் பிரபாகரனின் கட்டளைப்படி 21.05.1991 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கின்றதென்று நீங்கள் சொல்வீர்களா?
வ.பெ: ஓம் நிச்சயமாக. ராஜீவ் காந்தி பத்மநாபா கேதீஸ்வரன் மற்றும் பிரபாகரனினால் படுகொலை செய்யப்பட்ட ஏனையோர்களின் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் கடவுள் தீர்பு வழங்கி இருக்கிறார்.
நான் இன்று ராஜீவ் காந்தியுடனான என்னுடைய பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மீட்டுப் பார்க்கிறேன். ஏனெனில் அவர் இலங்கையுடனான உறவில் அக்கறையாக இருந்த அதேவேளை இலங்கைத் தமிழர்களின் அரசியல் ரீதியான நன்மைகளைக் கொண்டு வரவும் தனிப்பட்ட முறையில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இலங்கை, இந்திய மக்களுக்கு இவ்வளவு துன்னப்தைக் கொண்டு வந்த பிரபாகரனின் அழிவை இன்று ராஜீவ்காந்தி இருந்து பாரத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் முன்னே உள்ள பணி என்ன?
வ.பெ: அவர்கள் அதிகாரப் பகிர்வைக் கொண்டு வருவதற்கான ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துப் போராடக்கூடிய தலைமைகளை இப்போது கண்டடைய வேண்டும்.
[ஆங்கில மூலம்
மொழிபெயர்ப்பு: லக்ஷ்மி]

மீண்டும் டோண்டு ராகவன். எல்லாம் நடக்கிறபடி நடந்திருந்தால் 1987-ல் வந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இன்னேரம் நன்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் என்னும் ஆதங்கத்தை என்னால் அடக்க இயலவில்லை. இதை கெடுக்க பிரேமதாசாவுடன் சேர்ந்து புலிகள் போட்ட ஆட்டம் மறக்கக் கூடியதா என்ன? எல்லாம் ஒரு தனி மனிதனின் ஈகோவுக்காக பலி கொடுக்கப்பட்டது என்பதில் எனக்கு ஒரு ஐயமுமில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எங்கே பிராமணன் - பகுதி - 80

பகுதி - 80 (26.05.2009):
சிகாமணியும் அவர் மனைவி ஸ்ரீமதியும் அவரது அண்ணா நடேச முதலியார் வீட்டுக்கு வருகின்றனர். அவரது அண்ணி அதை தன் கணவரிடம் கூறி, வெளியே வந்து தம்பியுடன் பேசுமாறு கேட்டு கொள்கிறாள். முதலில் மிக தீவிரமாக மறுத்த நடேச முதலியார் பிறகு மனைவியின் பேச்சை தட்ட முடியாமல் வெளியே வருகிறார். தம்பியுடன் தனது குத்தலான பேச்சைத் தொடர, தம்பி அசாத்திய பொறுமை காட்டுகிறார். அதே சமயம் தனது மகன் கிரி கல்யாணத்துக்காக அவரை அழைக்க வந்த காரியத்திலும் கண்ணாக இருக்கிறார். அண்ணனுக்கு கோபம் இருக்கும் அதே தருணத்தில் தம்பி மேல் பாசமும் இருக்கிறது. அது வெளியே வருவதற்கு முன்னால் தன் தம்பி சாதி விட்டு திருமணம் செய்ததை எல்லாம் சாடி விட்டு, சாதியின் மகத்துவத்தை அவருக்கு புரிந்த வண்ணம் விளக்குகிறார்.

பொறுமையுடன் அடங்கும் சிகாமணியின் அன்புக்கு முன்னால் அவரும் தணிந்து போவது சீரியலில் நன்றாகவே காட்டப் பட்டுள்ளது. இருப்பினும் கடைசி ஷாட்டாக தனது நண்பர் சாரி என்னும் ஐயங்கார் ஸ்வாமியை குறிப்பிட்டு, அவர் நண்பராக இருந்தாலும் அதற்காக அவர் குடும்பத்துடன் எல்லாம் சமப்ந்தம் வைத்துக் கொள்ள இயலுமா என அவர் ஒரு பந்தை bowl செய்ய, பந்தை ஸ்லிப் வழியாக பவுண்டரிக்கு அடிப்பது போல அவருக்கும் தான் பத்திரிகை வைக்கவிருப்பதை குறிப்பிட்டு, அவ்வாறு செய்யலாமா என அண்ணாவிடம் பவ்யமாக கேட்க, அவரும், சாரி வீட்டில்தான் இருக்கிறார், அங்கு உடனே போனால் அவரை பார்க்கலாம் என கூறுகிறார். கடைசியில் தம்பியும் அவர் மனைவியுமாக அளிக்கும் தட்டை வாங்கி மனைவியிடம் தருகிறார்.

நீலகண்டன் அனுப்பிய கடிதத்தை வைத்து கொண்டு நாதனும் வசுமதியும் விவாதிக்கின்றனர். அசோக்கை அனுப்பி உமாவுடன் பேசி அவள் மனதை மாற்றி அவள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண ஏற்பாட்டுக்கு ஒத்து கொள்ளுமாறு செய்ய நீலகண்டன் கடிதம் மூலமாக நாதனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை எவ்வாறு எதிர்க்கொள்வது என நாதன் குழம்ப, வசுமதியோ தெளிவாகவே இக்கோரிக்கையை நிராகரித்தாள். அப்போது தன் கடிதத்துக்கான எதிர்வினை பற்றி அறிய நீலக்ண்டன் அங்கு வந்து சேர, நாதன் அவரிடம் இதெல்லாம் சரியாக வராது என தயக்கம் காட்டுகிறார். நீலகண்டன் வற்புறுத்த மெதுவாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் வசுமதி அங்கு வந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி விடுகிறாள். அசோக் வந்து உமாவுடன் பேசினால் மேலும் அதிக பிரச்சினைகள்தான் வரும் என்பதையும் அவள் விளக்குகிறாள். நீலக்ண்டன் மேலே வற்புறுத்தாமல் செல்கிறார்.

நடேச முதலியார் தனது நண்பர் சாரியார் வீட்டுக்கு வருகிறார். அவர் வீட்டில் அவருக்கு அதிதி போஜனம் நடக்கிறது. சாரியாரின் மகன் பார்த்தசாரதி மூளை வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு வாலிபன். குழந்தை மாதிரி தன் தந்தையிடம் சினிமா போக 50 ரூபாய் கேட்கிறான். அவர் தனது மகன் சுலோகம் எல்லாம் கூறுவான் என நடேச முதலியாரிடம் கூறி விட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் அவனுக்கு நன்றாக பாடம் ஆகியுள்ளது என தான் கூறுவதை தானே நம்புகிறார்.

சோவின் நண்பர் விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி கேள்வி கேட்கிறார். அதை யார் எழுதியது என்ற கேள்விக்கு சோ அவர்கள் அது ஏற்கனவே இருந்ததாகவும், அதை வியாசர் உணர்ந்து பீஷ்மர் வாயால் யுதிஷ்டிரருக்கு சொல்ல வைத்தார் என கூறுகிறார். அம்பு படுக்கையில் பீஷ்மர் இருந்த நிலையில் அவரிடம் யுதிஷ்டிரருக்கு பாடம் சொல்ல பீஷ்மரை விட்டால் சரியான ஆள் கிடையாது என கிருஷ்ணர் கூற பீஷ்மர் உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார். அவர் போதித்த பல விஷயங்களில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒன்று. அது முக்தியை தரக்கூடியது, செல்வம் அளிக்கக் கூடியது, பயத்தை போக்கக் கூடியது, பிறவிப் பெருங்கடனை நீக்கக் கூடியது என அதன் பெருமைகளை பற்றியும் சோ கூறுகிறார். விஷ்ணூ சஹஸ்ரநாமத்துக்கு மேல் இன்னும் மேலதிக பலன் அளிக்கக் கூடிய “நமோ வசிஷ்டாய..” என கம்பீரத் தொனியில் துவங்கும் ஒரு மந்திரத்தையும் சோ கூறுகிறார். ஆனால் அதன் பெயரை சொல்லவில்லை என்பதில் எனக்கு சற்று வருத்தம்தான்.

அதனால் என்ன, அந்த ஸ்லோகத்தை ஒரு அனானி நண்பர் அனுப்பியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அந்த சுலோகம் இதோ:

நமோ வசிஷ்டாய மஹா வ்ரதாய
பராசரம் வேத நிதிம் நமஸ்யே
நமோஸ்து அனந்தாய மஹோரகாய
நமோஸ்து ஸித்தேப்ய இஹாஷயேப்ய:
நமோஸ்து ரிஷிப்ய: பரமம் பரேஷாம்
தேவேஷூ தேவம் வரதம் வராணாம்
ஸஹஸ்ரஷீர்ஷாய நம சிவாய
ஸஹஸ்ரநாமாய ஜனார்தனாய

பார்த்தசாரதிக்கு சாரியார் 50 ரூபாய் கொடுத்து அனுப்புகிறார். அவனும் குழந்தை மாதிரி “சாந்தாகாரம், புஜங்க சயனம்...” என விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஓரடியை உரக்கக் கூறிய வண்ணம் செல்கிறான். பிறகு அவர் நடேச முதலியாரிடம் அவர் தம்பி சிகாமணி தன் வீட்டுக்கு வந்து தன் மகன் கிரியின் திருமணத்துக்கு அழைத்ததை கூறுகிறார். அதில் அவ்வளவு சுவாரசியம் காட்டாத நடேச முதலியாருக்கு அவ்வாறு இருக்கலாகாது என மிருதுவாக போதிக்கிறார். என்ன இருந்தாலும் அவரது ஆசிகள் அவரது தம்பி மகன் திருமணத்துக்கு மிகவும் தேவை என அவர் வலியுறுத்துகிறார். நடேச முதலியார் மசிய மறுத்ததால் மேலே சாரியார் அவருக்கு பல விஷயங்களை கூறுகிறார். வைணவர்களில் ஒரு பிரிவினர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி என்னும் பெயரில் அழைக்கப்படுகிறவர்கள் எனக் கூறி மேலும் சொல்கிறார்: தாழ்ந்த சாதி என கருதப்பட்ட ஒருவன் மரணமடைய அந்திம சடங்கு செய்ய யாரும் கிடைக்காத நிலையில் ஒரு வைணவர் துணிந்து முன் வந்து அவனுக்கான அந்திமச் சடங்குகளை செய்ததை எடுத்துரைக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு சாதி முக்கியமாக படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“யார் சார் இந்த திருமலை நல்லான் சக்கரவர்த்தி?” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பதிலளிக்க தயாராகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/26/2009

சோ அவர்களது செவ்வி தூண்டிய கஸாண்ட்ரா பற்றிய எண்ணங்கள்

சோ அவர்கள் ET-க்கு தந்த பிரத்தியேக நேர்காணலை பார்த்ததும் என்னுள் பல எண்ணங்கள் கிளர்ந்தெழுந்தன. பிரெஞ்சில் déjà vu என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருள் ஏற்கனவே பார்த்தது என்று வரும். அதை கடைசியில் விளக்குகிறேன்.

கஸாண்ட்ரா (Cassandra) என்னும் பாத்திரம் ஹோமரின் இலியாடில் வரும். அது ட்ராய் மன்னன் ப்ரியாமின் பெண்ணின் பெயர். அவளது சகோதரர்கள்தான் பாரிஸ் மற்றும் ஹெக்டார். கிரேக்க ராணி ஹெலனை பாரிஸ் ஓட்டி வந்து விடுகிறான். அது ட்ராயின் பத்து ஆண்டுகால முற்றுகையில் உருவெடுத்து ட்ராய் நகரம் அழிவதற்கே வழிகோலுகிறது. இந்த கஸாண்ட்ராவால் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூற இயலும் என்பது அவள் பெற்ற வரம். அதே நேரத்தில் அவள் கூறுவதை யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் அவளுக்கு செக் வைக்கப் படுகிறது.

ஹெலனை அழைத்துவரக்கூடாது, அவ்வாறு செய்தால் ட்ராய் அழியும் என்று அவள் கூறுகிறாள், யாருமே நம்பவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முடிவில் ஒரு மரக்குதிரையை மட்டும் விட்டு விட்டு கிரேக்கர்கள் ட்ராயிலிருந்து பாய் விரித்து கப்பலை செலுத்துவது போல போக்கு காட்ட, அந்த குதிரையை ட்ராயுக்கு உள்ளே இழுத்து வரலாகாது என்றும் அதே கஸாண்ட்ரா கூறுகிறாள். அப்போதும் யாரும் அவள் சொல்வதை லட்சியம் செய்வதில்லை. அப்புறம் என்ன ஆயிற்று என்பதை பார்க்க இலியாட் படிக்கவும். ஹெலன் ஆஃப் ட்ராய் என்னும் தலைப்பில் படமும் எடுத்துள்ளார்கள்.

இப்போது இக்கதையெல்லாம் ஏன் என கேட்கிறான் முரளி மனோஹர். விஷயத்துக்கு வருகிறேன்.

சோ சொன்ன பல விஷயங்கள் இப்போது ரொட்டீனாக பலிக்க ஆரம்பித்துள்ளன. முதலில் புலிகள் விஷயத்தைப் பார்ப்போம்.

புலிகள் வந்த நாள் முதலிலிருந்தே சோ அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் இல்லை என சொல்லி வந்தார். ஆரம்பத்தில் புலிகளை விரும்பிய பலருக்கு அவரை இதனால் பிடிக்காமல் போயிற்று. மற்ற காரணங்கள் இருந்தாலும் இதுவும் அதற்கு ஒரு முக்கிய காரணமே. இப்போது புலிகள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையில் அவர் சொல்லி வந்த உண்மைகள் பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளன. இந்திய தேர்தலில் புலிகள் பிரச்சினை பெரிய பங்கு வகிக்காது என்றார். அப்படியில்லை என பலர் சீன் காட்டினாலும் அவர் சொன்னதுதான் நடந்தது. ஒரு சராசரி தமிழக வாக்காளனுக்கு ஆயிரத்தெட்டு கவலைகள், ஆனால் அவற்றுள் புலிகள் உள்ளே வரவில்லை என்பதே நிஜம்.

அவர் மேலே சுட்டப்பட்டுள்ள செவ்வியில் சொன்னது போல இங்குள்ள சில விளிம்பு நிலை மனிதர்கள் வேண்டுமானால் ஏதேனும் போராட்டங்களில் ஈடுபடலாம், சிலர் தீக்குளிக்கும் அளவுக்குக்கூட போகலாம். ஆனால் அப்போராட்டங்கள் எல்லாமே மாநில அரசால் சுலபமாக அடக்கப்பட்டு விடும். ஏனெனில் அம்மாதிரியான போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு கிட்டாது. காரணம், அவர் ஏற்கனவேயே கூறி வந்ததைப் போல இது எப்போதுமே எந்த தேர்தலிலும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இப்போது முடிந்த தேர்தலிலும் கூட அதே நிலைதான். எதிர்க்கட்சிகள் கோஷம் போட சில வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதனால் எல்லாம் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

புலிகள் ஒடுங்கிய நிலையில் இங்குள்ள இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சக உணர்வு போராட்டங்களாக வெடிக்காதா எனக் கேட்டால், தமிழனுக்கு தமிழன் என்னும் அளவில் ஒரு ஈழத் தமிழனுடன் சக உணர்வு இருக்கும். ஆனால், கோபமுள்ள போராட்டமாக அவை மாற வாய்ப்பில்லை என்பதை மறுக்க இயலாது. புலிகளை பொருத்தவரை இங்குள்ள தமிழர்களுக்கு அவர்களுடன் சக உணர்வு இல்லை. ஒரு வேளை தேர்தலில் வெறுமனே பேசப்படும் பிரச்சினையாக வேண்டுமானால் அது பின்னால் அது உருவாகலாம், அவ்வளவே என சோ கூறுவதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

புலிகள் ஆதரவு தொல். திருமாவளவன் ஓரிடத்தில் ஜெயிக்கும் அதே நேரத்தில் இன்னொரு புலி ஆதரவாளர் வைக்கோ தோற்கிறார். இதுவும் சோ சொன்னதைத்தான் ஊர்ஜிதம் செய்தது.

புலிகளின் தோல்வியால் தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரிக்கக் கூடும். ஆனால் அகதிகளுடன் அகதிகளாக எஞ்சியுள்ள புலிகளும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். இலங்கை அரசும் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் கூறுவது சரியே என நான் நினைக்கிறேன்.

கூட்டிக் கழித்து பார்த்தால் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்னும் பெருமூச்சு எழுவதை தடுக்கவியலாதுதான். ஏனெனில், தமிழர்களுக்கு அதிக அனுகூலங்களை அது தன்னுள் கொண்டிருந்தது. அதை கெடுத்தது புலிகளே. இதையெல்லாம் சோ அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சொல்லி வந்திருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எது எப்படியானாலும் தனி ஈழம் என்பது எதிர்க்கத் தக்கதே. இலங்கையின் உள்ளே ஒரு தமிழ் மாநிலம், இருக்க வேண்டும், சிங்களவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளோடு என்பதுதான் சரியாக அமையும் என சோ சொன்னது சரியே.

ஆகவே இந்திய அரசு தேவையானால் அழுத்தம் கொடுத்து ஸ்ரீ லங்கா அரசு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இலங்கை அரசுதான் என்பதையும் நம் மறக்கக் கூடாது. இதையெல்லாம் சோ சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதே.

மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.

வி.பி.சிங்கை எல்லோரும் கொண்டாடும் காலத்திலிருந்தே அவர் நம்பத் தகாதவர் என்பதை சோ வலியுறுத்தி வந்திருக்கிறார். அந்த மனிதர் செய்த சொதப்பல்களால் இந்திய அரசியலில் விளைந்த குழப்பங்கள், முக்கியமாக மண்டல் விஷய பிரச்சினைகள் இன்னும் நாட்டை பீடிக்கின்றன.

இந்தியாவை சோவியத் யூனியன் அடிமைபடுத்த முயற்சிக்கிறது என்பதை அவர் ஆதாரங்களுடன் எழுபதுகளிலேயே கட்டுரைகளில் எழுதியபோது பலர் அவரை நம்பத்தான் இல்லை. இருப்பினும் சோவியத் யூனியன் அழிந்ததும் வெளியான பல ஆவணங்கள் எவ்வாறு நம் நாட்டின் பல தலைவர்கள் சோவியத் யூனியன் பேச்சுக்கு தாளம் போட்டனர் என்பது தெரிந்து கொண்டபோதுதான் அவர் சொன்னதன் உண்மை பலருக்கு புலப்பட்டது.

என்ன செய்வது, கஸாண்ட்ரா சொல்லும்போது யாரும் நம்பவில்லை. உண்மை தெரிந்தபோது எல்லாமே டூ லேட் என ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் இம்மாதிரி நடப்பதை பார்த்தால் இந்த déjà vu எண்ணங்களை தவிர்க்க இயலாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எங்கே பிராமணன் - பகுதி - 79

பகுதி - 79 (25.05.2009):
நீலகண்டன் வீட்டில் தன் பெற்றோருடன் உமாவின் வாக்குவாதம் தொடர்கிறது. தான் மேஜர் என முதலில் கூறும் உமா, அப்படி தன் பெற்றோர்கள் தான் அசோக்கை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என முடிவு செய்தால், தனக்கு கல்யாணமே வேண்டாம் என தன்னால் இருக்க முடியும் என்றும் கூறுகிறாள். அதனால் எல்லாம் அசராத நீலகண்டன் தான் நாதனிடம் அவரது ஆஃபீசிலேயே போய் பேசுவதாக சொல்லி கிளம்புகிறார். பெண்ணின் பயமுறுத்தலை அவர் சீரியசாக எடுத்து கொள்ளவில்லை.

அவ்வளவு பெரிய மனிதர்கள் நாதனும் வசுமதியும், அவர்களே வந்து பெண் கேட்கும்போது அதை ஏன் கோட்டை விட வேண்டும் என உமா கேட்டு விட்டு, அப்பாவின் செல்போனுக்கு கனெக்‌ஷன் தந்து அவரை திரும்ப அழைக்குமாறு அம்மாவிடம் கூறுகிறாள். பர்வதமும் போனில் பேசி நீலகண்டனை வீட்டுக்கே வரச்சொல்லி விடுகிறாள். உமா மகிழ்ச்சியடைகிறாள், ஆனால் அது நீடிப்பதில்லை. ஏனெனில் அதே மூச்சில் அன்று மாலை தாங்கள் இருவருமாக சேர்ந்து போய் சொல்வதே மரியாதையாக இருக்கும் என அபிப்பிராயப்படுகிறாள். உமா திகைக்கிறாள்.

கிருபா வீட்டில் அவன் மாமனார் ஜட்ஜ் தன மகள் பிரியாவுடன் பேசி கொண்டிருக்கிறார். அன்று மாலை அவள் அன்னை அவளை பார்க்க வருவாள் என அவர் கூறுகிறார். சேர்ந்து வந்திருக்கலாமே என பிரியா கூற, அவள் அன்னை மஹிலா மண்டலி வேலையாக வெளியே சென்றிருப்பதாகவும், மாலை தனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும் கூறுகிறார். அது என்ன மீட்டிங் என பிரியா கேட்கிறாள். பால்ய விவாகம் ஒன்று கும்பகோணத்தில் நடந்ததாகவும் அது சம்பந்தமான கேஸ் தன் முன்னால் வந்துள்ளதாகவும், அது பற்றிய பல விவரங்கள் தெரிந்து கொள்ளவே மீட்டிங்கிற்கு போகப் போவதாகவும் கூறுகிறார்.

“இது என்ன சார் பால்யவிவாகம், சின்ன பசங்களை அவங்களுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாலேயே கல்யாணம் பண்ணித் தருவது? இதில் சென்ஸே இல்லையே” என சோவின் நண்பர் அங்கலாய்க்கிறார். சென்ஸ் இல்லைன்னு நண்பர் சொல்வதாலேயே அதில் ஒரு சென்ஸ் இருந்ததை சுட்டிக்காட்ட முற்படுகிறார் சோ. பால்ய விவாகம் தற்காலத்துக்கு ஒத்து வராது, முக்கியமாக இளம் விதவைகள் பிரச்சினை என ஒத்து கொள்கிறார் சோ அவர்கள். அதே சமயம் அது சமூகத்தில் புகுத்தப்பட்ட நாட்களில் அது ஒரு சென்சிபிளான நோக்கத்திலேயே நடந்தது எனவும் கூறுகிறார். அதாவது 25 வயதுக்கு மேல் ஒரு பென்ணை திருமணம் செய்து வைக்கும் நேரத்தில் அவள் தன் பிறந்தகத்து பழக்க வழக்கங்களில் அப்படியே ஊறிவிடுகிறாள். பிறகு புகுந்த வீட்டுக்கு சென்று முற்றிலும் மாறுபட்ட வழக்கங்களை கடைபிடிக்கும் காலக் கட்டத்தில் மனத்தளவில் பல இடையூறுகள் ஏற்பட்டு பல டென்ஷன்களுக்கு வழி வகுக்கிறது. இவை எல்லாமே பெண்ணை சிறு வயதில் மணம் செய்து தரும்போது ஏற்படாது, ஆகவே பால்ய விவாகத்தில் இந்த விஷயத்தில் சென்ஸ் இருந்தது என சோ சொல்கிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன், வசுமதி மற்றும் நாதன் பேசுகின்றனர். அசோக் உமா திருமண சம்பந்தத்திற்கு நீலகண்டன் சம்மதித்ததாக நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைகிறார் நாதன். ஆனால் அப்படியில்லை என நீலகண்டன் நாசுக்காக தெரிவிக்க்க நாதன் புரிந்து கொண்டு அதை வசுமதிக்கும் தெரிவிக்கிறார். மனதுக்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்து கொண்டு வசுமதி தான் ரொம்ப ஏமார்றம் அடைந்தது போல பேசுகிறாள். நாதனுக்கு நிஜமாகவே ஏமாற்றம் இருப்பினும் சுதாரித்து கொள்கிறார். வழ்க்கம் போல நீலகண்டன் தன் வீட்டுக்கு போகவர இருக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறார். உமாதான் இன்னும் பிரச்சினை செய்வதாக நீலகண்டன் குறைபட்டு கொள்கிறார். அதுவும் தனது தவறாலேயே என நாதன் மீண்டும் வருந்துகிறார்.

நாதன் அசோக்குடன் இது சம்பந்தமாக பேசுகிறார். இந்த வீட்டில் நடப்பது என்னவென்று அவன் அறிவானா என அவர் கேட்க, ஏற்கனவே குப்பை போல பல விஷயங்கள் மனதை ஆக்கிரமிக்கும்போது மேலும் விஷயங்களை தான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என அசோக் திட்டவட்டமாகக் கூறுகிறான். அவனை உலக வாழ்க்கைக்கு திருப்ப உமா அசோகை தனக்கு மணமுடித்து தருமாறு கேட்டது தெரியுமா என நாதன் கேட்க, அவன் தெரியாது என்கிறான். அதே போல வசுமதி நீலகண்டன் வீட்டிற்கு போய் உமாவை அசோக்குக்காக பெண் கேட்டது, அவர்கள் மறுத்தது ஆகிய எதுவுமே தெரியாது என மறுக்கிறான். அதே சமயம் உமா அசோக்கை மணமுடிக்க பிடிவாதம் காட்டுகிறாள் என நாதன் கூற, அசோக் அது வெறும் infatuation, அவள் வயதுக்கு வருவது புரிந்து கொள்ளக் கூடியதே என கூறிவிடுகிறான். தனக்கு உமாவை மட்டுமல்ல, வேறு எந்த பெண்ணையுமே மணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்பதையும் வெளிப்படையாகவே கூறுகிறான்.

இனிமேல் இங்கே உமா வரமாட்டாள் என நாதன் கூற, ஏன் அவளை தடுக்க வேண்டும், அவள் பாட்டுக்கு வந்து போய் கொண்டிருக்கட்டுமே என அசோக் கூறுகிறான். அசோக்கும் அவளை போய் பார்க்கக் கூடாது என நாதன் கூற, தான் அவ்வாறு செய்யப் போவதில்லை எனவும் அவன் கூறுகிறான். அதே சமயம் நாதனிடம் மேலும் கூறுகிறான். முதலில் உமாவின் உதவி கேட்டு லெட்டர் எழுதியது முதல் தவறு, தன்னை அவளுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தது இரண்டாம் தவறு, அவள் வீட்டுக்கு போய் பெண் கேட்டதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தவறு என அவன் அடுக்க, நாதன் திகைக்கிறார். எல்லா விஷயங்களும் தெரிந்தும் அவன் ஏன் ஒன்றும் தெரியாது மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என அவர் திகைக்கிறார்.தனக்கு இது தேவை இல்லாததாலேயே தனக்கு ஏன் இந்த விவகாரம் என த்ள்ளியிருந்ததாகவே அவன் கூறுகிறான். முதலில் தன் மேல் லேசான அபிப்பிராயம் உமாவுக்கு இருந்திருக்கலாமென்றும், அதை ஊதி ஊதி பெரிதாக்கியது பெரியவர்கள் தவறு என்றும், இப்போது வெறும் சாதாரண தீப்பொறி பெரிய எரிமலையாக உருவெடுத்துள்ள நிலையில் அவர்கள் அதை வெறுமனே ஊதி அணைக்க விரும்புகின்றனர், முடிந்தால் ஊதுங்கோ அப்பா, ஊதுங்கோ எனவும் கூறுகிறான்.

உமா வீட்டில் நீலகண்டன் அவளுக்கு வரன் பார்க்க பேப்பரில் விளம்பரம் தந்திருக்கிறார். அதை அறிந்த உமா கோபப்படுகிறாள். தான் நர்சிங் படிக்கப் போவதாகவும், ஆஸ்திரேலியாவில் வேலை செய்யப் போவதாகவும் கூறும் அவள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன என சொல்கிறாள்.

நீலகண்டன் நாதன் செய்ததையே தானும் செய்யப் போவதாகக் கூறி நாதனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை தங்கள் பிள்ளை ராம்ஜியிடம் கொடுத்து, நாதன்வீட்டில் கொடுத்து விடுமாறு பர்வதத்திடம் கூறுகிறார். பர்வதம் கடிதத்தை படிக்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது