7/25/2006

டாட்டா இண்டிகாமின் பொறுப்பற்றத்தனம்

டாட்டா இண்டிகாம் அகலப்பட்டை சேவை அளிப்பவர்களுக்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. அரை வேக்காட்டுத்தனமாக வந்த அரசு ஆணையை அதற்கு மேல் அரை வேக்காட்டுத்தனமாகப் புரிந்து கொண்டு ஒட்டு மொத்தமாக பிளாக்ஸ்பாட் பதிவுகளுக்கு தடா போட்ட சேவை அளிப்பாளர்களில் டாட்டா இண்டிகாமும் ஒன்று.

அரசே தன் கோமாளித்தனத்தை உணர்ந்து ஆணையை வாபஸ் பெற்றாலும், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகியோர் இந்தத் தடையை நீக்கினாலும் டாட்டா இண்டிகாம் மட்டும் அடம் பிடிக்கிறது. இன்னும் பிகே தயவுடனேயே பதிவுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இது இப்போதைய நிலை (25 ஜூலை, இரவு மணி 11.42).

என்ன செய்வது என்று புரியவில்லை. டாட்டா இண்டிகாம் கால் செண்டரில் கேட்டால் அவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி பழைய ஆணையைப் பற்றியே பேசுகிறார்கள். இன்னும் அரசின் திருத்தப்பட்ட ஆணை வரவில்லையாம். தடை செய்யும்போது மட்டும் வாய் மொழி உத்தரவை ஏற்று நடத்தியவர்கள் இப்போது மட்டும் ஏன் இவ்வளவு அழும்பு செய்ய வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/24/2006

மனதைக் கவர்ந்த வைகைப்புயல்

கடந்த 50 நாட்களாக நெட்டி முறிக்கும் வேலை. ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்குக் குறையாமல் கணினியில் அமர்ந்து மொழிபெயர்க்கும் வேலை. புது பதிவுகள் போட முடியாமல் போன நிலை. அப்பதிவு போடும் நேரத்தில் ஏதாவது மொழிபெயர்ப்பு செய்யலாமே என்று தயக்கத்திலேயே போட முடியாமல் போனது. இம்சை அரசனை பற்றிய முந்தைய பதிவு கூட ஒரு திடீர் இன்ஸ்பிரேஷனில் சில நிமிடங்களில் போடப்பட்டது.

நேற்று எதிர்பாராத ஒரு போனஸ். இன்று காலைதான் முடிவடையப் போகிறது என்று நினைத்த வேலை நேற்று முற்பகல் 11 மணிக்கு முடிந்து விட்டது. எனக்கு ஏதாவது பரிசு வேண்டாமா? நானே எனக்கு அதை அளித்துக் கொண்டேன். மொழிபெயர்ப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விட்டு கணினியை மூடினேன். பக்கத்தில் இருக்கும் வெற்றிவேல் தியேட்டருக்கு சென்றேன். உள்ளே நுழையவும் படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் ஆரம்பமே களை கட்டியது. முதல் காட்சியில் அரசன், ராஜ குரு, மந்திரி ஆகியோரைக் காட்டியது காமெரா. கூடவே படம் வரைந்து பாகம் சொன்னது போல அரசன், மந்திரி என்றெல்லாம் காட்டி விட்டு, சேவகனிடமும் சென்றது. கடைசியில் ஒரு பல்லியைக் காண்பித்து "அரண்மனை பல்லி" என்று கேப்ஷன் காண்பிக்க தியேட்டரில் ஒரு சிரிப்பலை. ஒரு அறுபது வயது இளைஞனும் அதற்கு காண்ட்ரிப்யூட் செய்தான். பிறகு படம் முழுதும் ஒரே சிரிப்புத்தான். அந்த இளைஞன் சிரித்த சிரிப்பில் பின் சீட்டில் அழுது கொண்டிருந்த குழந்தை ஒன்று அழுகையை நிறுத்தி அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது.

கதை என்னவோ உத்தம புத்திரன் கதைதான். அதாவது "The man in the iron mask", Alexandre Dumas எழுதிய நாவல். ஒரே காட்சியில் வந்த நாகேஷ் அமர்க்களம் செய்து விட்டுச் செல்ல அவர் வாரிசாகக் கருதக்கூடிய வடிவேலு டேக் ஓவர் செய்கிறார். முட்டாள் அரசனாக வந்து வடிவேலு செய்யும் காமெடிகள் சிரிக்க வைக்கின்றன. அதுதான் அவருக்குக் கைவந்த கலையாயிற்றே. தன் தந்தையின் படத்துக்கு மலரஞ்சலி செய்து விட்டு (பின்னணி இசை கர்ணனின் 'ஆயிரம் கரங்கள் நீட்டி ...' என்ற பாடலை நினைவுபடுத்துகிறது), அன்னையின் ஆசி பெற்று, மாடிப்படி கைப்பிடிச் சுவரில் சர்ரென்று வழுக்கி வந்து அமர்க்களம் செய்கிறார் வடிவேலு. அந்தப்புரத்தில் ஜலக்கிரீடை செய்யும் காட்சியில் உத்தம புத்திரனின் யாரடி நீ மோகினி பாடலை நினைவு படுத்தும் காட்சி வேறு.

ஆனால் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இன்னொரு வடிவேலுதான். காமெடி வாடையே இல்லாத இவ்வளவு சீரியஸ் நடிப்பை அவர் எங்கே ஒளித்து வைத்திருந்தார்? உணர்ச்சிபூர்வமான அவரது இப்பாத்திர நடிப்பு நான் எதிர்பாராத போனஸ். அதற்கே டிக்கட் காசு ஜீரணமாயிற்று (பால்கனி டிக்கெட் 40 ரூபாய்). மனோரமாவுக்கு அவ்வளவு சான்ஸ் இல்லை. நாசர் நன்றாக நடித்துள்ளார். இரண்டு வடிவேலுக்களுக்கும் ஜோடியாக வந்தவர்கள் முகம் கூட மறந்து விட்டது. அவ்வளவு குறைந்த அளவில் அவர்கள் ஃபிரேமில் வருகின்றனர். பாட்டுகள் எல்லாமே சமீபத்திய ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளை நினைவுபடுத்தின. இப்படத்துக்கு அவை பலம் சேர்க்கின்றன.

வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்துக் கதை. அவருக்கு நேர்ந்த முடிவுதானே இக்கதை மாந்தருக்கும் ஏற்படப்போகிறது என்பதை அறிந்த நமக்கு சற்று மனம் கனமாயிற்று. இருப்பினும் பாத்திரங்களுக்கு அது தெரியாதல்லவா, ஆகவே அவர்களை பொருத்தவரை சுபமான முடிவே.

வெற்றிவேல் தியேட்டர்காரர்கள் தியேட்டருக்கு வெளியே நன்றாக ஏர் கண்டிஷன் செய்திருந்ததால் படம் முடிந்து வெளியே வரும்போது அதை நன்றாக அனுபவிக்க முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/18/2006

இம்சை அரசன் தூண்டிய நினைவுகள்

இம்சை அரசன் புலிகேசி படம் வந்ததுமே நான் எதிர்பார்த்தது ஒன்றைத்தான். அது நடந்து விட்டது. அதாவது அப்படத்தை கர்னாடகாவில் தடை செய்து விட்டார்கள்.

நான் சமீபத்தில் எழுபதுகளில் பம்பாயில் இருந்தபோது எனது நண்பன் ஸ்ரீனிவாசமூர்த்தி கூறியது நினைவுக்கு வருகிறது. அவன் ஷிமோகாவைச் சேர்ந்தவன். "கர்னாடகாவில் உள்ள பள்ளிகளில் இப்போது கூட (எழுபதுகளில்) சரித்திரப் பாடங்களில் புலிகேசிதான் ஹீரோ. வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லவன் கொடுங்கோல் மன்னனாகவே சித்தரிக்கப்படுகிறார்." எழுபதுகளில் உள்ள நிலைமைதான் தற்போதும் என்று உறுதியாக நினைக்கிறேன்.

இதே போல பழைய சரித்திரங்கள் இன்னும் நமது தற்கால நம்பிக்கைகளின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்பதையும் பார்க்கிறேன். உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

இன்னொரு உதாரணம் "தர்பண் (Dharpan)" என்ற தொடரில் காண்பித்த ஒரு கதையே. (பை தி வே, இந்த தர்பண் சமீபத்தில் எண்பதுகளில் வந்த ஒரு அருமையான தொலைக்காட்சித் தொடர். அது பற்றி பிறகு, வேறொரு பதிவில்). அதில் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் வந்த சிறந்த சிறுகதைகள் படமாக்கப்பட்டன. அதில் ஒரு கதை பற்றி இங்கே கூறுவேன்.

அது ஒரு ஒரியமொழிக்கதை. புவனேஸ்வரில் ஓர் அலுவலகத்தில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர், இன்னொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இருவரும் ஒரிஸ்ஸாக்காரர் வீட்டில். ஒரிஸ்ஸாக்காரர் கிருஷ்ணதேவராயரை பற்றி இகழ்ச்சியாகப் பேசி தங்கள் பழங்காலத்து கலிங்கதேசத்து மன்னரை உயர்த்திப் பேச சீறி எழுகிறார் ஆந்திராக்காரர். பேச்சு தடித்து விரோதமாகப் போகும் நிலையில், ஒரிஸ்ஸாக்காரரின் மனைவி பேச்சில் குறுக்கிடுகிறார்.

அவர் கேட்கிறார்: "இந்த விஷயங்களெல்லாம் நடந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. உங்கள் வாதத்தில் கிருஷ்ணதேவராயர் அல்லது ஒரிய மன்னர்தான் சிறந்தவர் என்று ஸ்தாபிப்பதால் உங்களில் ஒருவருக்கேனும் ஏதேனும் பிரயோசனம் உண்டா? இப்போதைக்கு பே கமிஷன் அரியர்ஸை கிருஷ்ணதேவராயரோ, கிருஷ்ணராஜுவோ வாங்கித்தர இயலுமோ? என்ன இது சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு." (கடைசி வாக்கியத்தை நிச்சயமாகவே வடிவேலு பாணியில் அவர் கூறவில்லை என்பதை நான் இங்கு கூறிவைக்கிறேன்). இரு நண்பர்களும் சிரிக்க, கதை சுமுகமாக முடிகிறது.

இம்மாதிரித்தான் உள்ளூர் மக்களின் செண்டிமெண்ட்டில் சரித்திரம் தப்ப இயலவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/02/2006

ஜூலை 2-ஆம் தேதி, 2006, உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில்

என் கார் டிரைவ் இன்னின் உள்ளே நுழையும்போது சரியாக மாலை 6 மணி. நான் வந்த சில நிமிடங்களுக்குள் சிமுலேஷன் உள்ளே வந்தார், அவருக்கு சில நிமிடங்களுக்கு அப்புறமாக ரவி பாலசுப்பிரமணியன். பிறகு விறுவிறுவென்று மரபூர் சந்திரசேகர், கூடவே அவர் நண்பர் மதன், பிறகு சிவஞானம்ஜி வந்தனர்.

ஜோசஃப் அவர்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன், ஏனெனில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அவரை ரொம்ப டிஸ்டர்ப் செய்யக் கூடாது. சில நிமிடங்களில் அவர் கால் வந்தது டிராஃபிக் ஜாமில் இருப்பதாக. ஆனால் அதையும் தாங்கிக் கொண்டு அவர் அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டார். கடைசியாக வந்தவர் 6.20-க்கு வந்து விட்டார். வந்தவர்கள்:

1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. சிவஞானம்ஜி
3. டி.ஆர்.சந்திரசேகரன்
4. ஜி. தங்கவேல்
5. ரவி பாலசுப்பிரமணியன்
6. மதன்
7. பாலா
8. மரபூர் சந்திரசேகரன்
8. ஜெயராமன்
9. சிமுலேஷன்
10. கோ. ராகவன்
11. டோண்டு ராகவன்

பாலா தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால், அது போலி டோண்டுவின் செந்தமிழ் மடல்கள்தான். பல நாட்களுக்குப் பிறகு எனக்கும் வந்ததுதான் தமாஷ். வழக்கமான குப்பைதான். பாலா அவர்கள் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதால் தப்பித்தார்.

இந்தத் திட்டில் சிவஞானம்ஜி சற்று டிஸ்டர்ப் ஆனதாகக் கூறினார். நானும் மற்ற சிலரும் அவருக்கு தைரியம் சொன்னோம். எந்த இழிபிறவிக்காகவும் வலைப்பதிவை விட்டுவிட வேண்டாம் என்று நான் அழுத்தந்திருத்தமாகக் கூறினேன்.

சிமுலேஷன் அவர்கள் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்ததால் அரை மணியில் போய் விடுவேன் என்றார். அவரை இப்படி அப்படியாகப் பேசி 7 மணிக்குத்தான் போக விட்டோம்.

மரபூர் சந்திரசேகரன், மதன் ஆகியோர் பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்தவர்கள். தஞ்சைக் கோவிலை பற்றி சுவாரசியமாகப் பேசினர். கோ. ராகவன் அவர்கள் கையில் மாவுக்கட்டுடன் வந்தார். பாலா அவர்கள் சத்யம் கணினி சேவையில் சீனியர் கன்சல்டண்டாகப் பணிபுரிய, மதன் மென்பொருள் துறையச் சார்ந்தவர். சிமுலேஷன் சங்கீதம் பற்றி புத்தகம் போட்டிருக்கிறார். சிவஞானம்ஜி பொருளாதாரப் பேராசியராக அரசுக் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்றவர். பொருளாதாரப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். தங்கவேல் மருத்துவ ஆய்வாளர், இந்திய மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். ரவி பாலசுப்பிரமணியன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற பெயரில் பதிவு போடுபவர். அவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலை வைத்துத்தான் நான் இந்தப் பதிவு போட்டேன்.

டி.ஆர். சந்திரசேகரன் இந்தியன் வங்கியில் டி.ஜி.எம். ஆக இருந்து முந்தாநேற்றைக்குத்தான் ரிடயர் ஆகியிருக்கிறார். சிறப்பு சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆக வங்கியில் 1976-ல் சேர்ந்த அவர் சென்னையிலேயே முப்பது செர்வீஸ் வருடங்களையும் கழித்து ஆடிட்டராகவும் இருந்து கௌரவமான முறையில் ஓய்வு பெற்ற முதல் அதிகாரி என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். ஜோசஃப், கோ. ராகவன் மற்றும் ஜெயராமனை பற்றி நான் கூறி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மூவருமே எல்லோருக்கும் பரிச்சியமானவர்கள்.

வெயிட்டர் வந்ததும் முதலில் பாசந்தி ஆர்டர் செய்தோம். பிறகு மைசூர் போண்டா, பிறகு என்ன என்று கேட்டால் எல்லோருமே போதும் என்று கூற, நான் மட்டும் மசால் தோசை ஆர்டர் செய்தேன். இதற்காகவே காலி வயிற்றில் சென்றிருந்தேனாக்கும். ஜோசஃப் அவர்கள் பாசந்தி வேண்ட்டாம் எனக் கூறிவிட, அதில் பாதி பாசந்தியை என் கப்பில் எடுத்துக் கொண்டு பாதியாவது சாப்பிடுங்கள் என்று கூற அவரும் சாப்பிட்டார். நண்பருக்காக நான் செய்த தியாகமாக்கும் இது! பிறகு காப்பியுடன் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.

பேச்சு அதிகமாக போலியின் சகிக்கமுடியாத வேலைகளை சுற்றியே இருந்தது. அவன் யார், பின்னணி என்ன என்பதை நான் புதியவர்களிடம் விளக்கினேன். எல்லோருமே அவன் மெயில்களை அனுபவித்தவர்கள். பாலா அவனுடன் வெவேறு பெயரில் சண்டையிட்டிருக்கிறார். ஆகவே நான் சொன்னதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.

ஜெயராமன் ஆசையுடன் தன் காமிராவை இயக்கப் பார்த்தால், அதன் பேட்டரி உயிர் விட்டிருந்தது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

மீட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே டட்ச் ட்ரீட்டைப் பற்றி நான் கன்ஃபர்ம் செய்தேன். எல்லோருமாக சேர்ந்து பணம் போட்டதில் மொத்தச் செலவு சுமையாகவே இல்லை. ஆனால் என்ன, எல்லோருமே எப்படி காசு பற்றி பேசுவது என்று யோசிக்க, அதற்கெல்லாம் கவலையேபடாத ஒருவன் கிடுகிடுவென்று வசூல் செய்தான். அதுதான் டோண்டு ராகவன்.

சிமுலேஷன், டி.ஆர்.சி., கோ.ராகவன் ஆகியோர் ஒவ்வொருவராக விடை பெற்று சென்றனர். நான் பணம் வசூல் செய்ததும்தான் என்பதையும் கூறவேண்டுமோ?

பிறகு பேச்சு பலவிஷயங்களைத் தொட்டது. நேரம் போனதே தெரியவில்லை. ஜெயராமன் அவர்கள் அடுத்த முறை குடும்பத்தினரையும் சேர்த்துக் கொண்டு பிக்னிக் எங்காவது போகலாம் என ஆலோசனை கூறினார். பார்க்கலாம்.

சரியாக 7.50 அளவில் சிவஞானம்ஜியின் மகன் வண்டியெடுத்துவர அவரை வழியனுப்பி வீட்டு அவர்வர் வாகனம் என்றோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது