கடந்த 50 நாட்களாக நெட்டி முறிக்கும் வேலை. ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்குக் குறையாமல் கணினியில் அமர்ந்து மொழிபெயர்க்கும் வேலை. புது பதிவுகள் போட முடியாமல் போன நிலை. அப்பதிவு போடும் நேரத்தில் ஏதாவது மொழிபெயர்ப்பு செய்யலாமே என்று தயக்கத்திலேயே போட முடியாமல் போனது. இம்சை அரசனை பற்றிய முந்தைய பதிவு கூட ஒரு திடீர் இன்ஸ்பிரேஷனில் சில நிமிடங்களில் போடப்பட்டது.
நேற்று எதிர்பாராத ஒரு போனஸ். இன்று காலைதான் முடிவடையப் போகிறது என்று நினைத்த வேலை நேற்று முற்பகல் 11 மணிக்கு முடிந்து விட்டது. எனக்கு ஏதாவது பரிசு வேண்டாமா? நானே எனக்கு அதை அளித்துக் கொண்டேன். மொழிபெயர்ப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விட்டு கணினியை மூடினேன். பக்கத்தில் இருக்கும் வெற்றிவேல் தியேட்டருக்கு சென்றேன். உள்ளே நுழையவும் படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் ஆரம்பமே களை கட்டியது. முதல் காட்சியில் அரசன், ராஜ குரு, மந்திரி ஆகியோரைக் காட்டியது காமெரா. கூடவே படம் வரைந்து பாகம் சொன்னது போல அரசன், மந்திரி என்றெல்லாம் காட்டி விட்டு, சேவகனிடமும் சென்றது. கடைசியில் ஒரு பல்லியைக் காண்பித்து "அரண்மனை பல்லி" என்று கேப்ஷன் காண்பிக்க தியேட்டரில் ஒரு சிரிப்பலை. ஒரு அறுபது வயது இளைஞனும் அதற்கு காண்ட்ரிப்யூட் செய்தான். பிறகு படம் முழுதும் ஒரே சிரிப்புத்தான். அந்த இளைஞன் சிரித்த சிரிப்பில் பின் சீட்டில் அழுது கொண்டிருந்த குழந்தை ஒன்று அழுகையை நிறுத்தி அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது.
கதை என்னவோ உத்தம புத்திரன் கதைதான். அதாவது "The man in the iron mask", Alexandre Dumas எழுதிய நாவல். ஒரே காட்சியில் வந்த நாகேஷ் அமர்க்களம் செய்து விட்டுச் செல்ல அவர் வாரிசாகக் கருதக்கூடிய வடிவேலு டேக் ஓவர் செய்கிறார். முட்டாள் அரசனாக வந்து வடிவேலு செய்யும் காமெடிகள் சிரிக்க வைக்கின்றன. அதுதான் அவருக்குக் கைவந்த கலையாயிற்றே. தன் தந்தையின் படத்துக்கு மலரஞ்சலி செய்து விட்டு (பின்னணி இசை கர்ணனின் 'ஆயிரம் கரங்கள் நீட்டி ...' என்ற பாடலை நினைவுபடுத்துகிறது), அன்னையின் ஆசி பெற்று, மாடிப்படி கைப்பிடிச் சுவரில் சர்ரென்று வழுக்கி வந்து அமர்க்களம் செய்கிறார் வடிவேலு. அந்தப்புரத்தில் ஜலக்கிரீடை செய்யும் காட்சியில் உத்தம புத்திரனின் யாரடி நீ மோகினி பாடலை நினைவு படுத்தும் காட்சி வேறு.
ஆனால் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இன்னொரு வடிவேலுதான். காமெடி வாடையே இல்லாத இவ்வளவு சீரியஸ் நடிப்பை அவர் எங்கே ஒளித்து வைத்திருந்தார்? உணர்ச்சிபூர்வமான அவரது இப்பாத்திர நடிப்பு நான் எதிர்பாராத போனஸ். அதற்கே டிக்கட் காசு ஜீரணமாயிற்று (பால்கனி டிக்கெட் 40 ரூபாய்). மனோரமாவுக்கு அவ்வளவு சான்ஸ் இல்லை. நாசர் நன்றாக நடித்துள்ளார். இரண்டு வடிவேலுக்களுக்கும் ஜோடியாக வந்தவர்கள் முகம் கூட மறந்து விட்டது. அவ்வளவு குறைந்த அளவில் அவர்கள் ஃபிரேமில் வருகின்றனர். பாட்டுகள் எல்லாமே சமீபத்திய ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளை நினைவுபடுத்தின. இப்படத்துக்கு அவை பலம் சேர்க்கின்றன.
வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்துக் கதை. அவருக்கு நேர்ந்த முடிவுதானே இக்கதை மாந்தருக்கும் ஏற்படப்போகிறது என்பதை அறிந்த நமக்கு சற்று மனம் கனமாயிற்று. இருப்பினும் பாத்திரங்களுக்கு அது தெரியாதல்லவா, ஆகவே அவர்களை பொருத்தவரை சுபமான முடிவே.
வெற்றிவேல் தியேட்டர்காரர்கள் தியேட்டருக்கு வெளியே நன்றாக ஏர் கண்டிஷன் செய்திருந்ததால் படம் முடிந்து வெளியே வரும்போது அதை நன்றாக அனுபவிக்க முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
14 comments:
டோண்டு ஸார்,
>>>> தியேட்டருக்கு வெளியே நன்றாக ஏர் கண்டிஷன் செய்திருந்ததால் <<<
நல்ல நக்கல். பிடியுங்கள் "கேலியரஸர் முதலாம் டோண்டுகேஸி" பட்டத்தை.
//வெற்றிவேல் தியேட்டர்காரர்கள் தியேட்டருக்கு வெளியே நன்றாக ஏர் கண்டிஷன் செய்திருந்ததால் படம் முடிந்து வெளியே வரும்போது அதை நன்றாக அனுபவிக்க முடிந்தது.//
டோண்டு சார்,
ஹ்ஹ்.ஹா..ஹா..ஹா இம்சை படத்தினை திரையிட்ட தியேட்டர் விமர்சனம். :-))
//ஒரு அறுபது வயது இளைஞனும் அதற்கு காண்ட்ரிப்யூட் செய்தான்//
42 வயதில் 20+20 கிமீ சைக்கிள் ஓட்டிய "வெல் எக்ஸசைஸ்டு" ஆள், இன்றும் 16மணிநேரம் முனைப்பாக வேலை செய்யும் நபர் அவர் 60 வயதில் இளைஞராக இருப்பதில் ஆச்சர்யமில்லை:-))
எங்க சார் நம்ம வலைப்பூ பக்கமெல்லாம் வர்றதேயில்லை?
அன்புடன்
ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/
பட்டத்துக்கு நன்றி வினோத் துவா ம்யூஸ் அவர்களே. படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி ஹரிஹரன் அவர்களே. உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டுள்ளேன். மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது அது.
பை தி வே, பிகே சுட்டியில் h இல்லாததால் அதை தனியாகச் சேர்க்க வேண்டியிருக்கிறது. அது என்னவோ பிகே காரர்களுக்கு t, h ஆகிய இரண்டு எழுத்துக்களும் ஆவதில்லை.சிறிலின் theyn eyn ஆகவும், செல்வனின் holyox olyox ஆகவும் விழுகின்றன. அதே போலத்தான் harimakesh arimakesh ஆகிவிட்டார்.
பரவாயில்லை, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே. பிளாக்ஸ்பாட் சேவைகள் நம் சேவை அளிப்பாளர்களின் தளங்களில் நேரடியாக சுட்ட முடிந்தால் இந்த பிரச்சினை இருக்காதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்!
வழக்கம் போல என்னுடைய விமர்சனத்தையும் கொஞ்சம் பார்த்துடுங்களேன் :-)
http://madippakkam.blogspot.com/2006/07/23_10.html
லக்கி லுக் அவர்களே, உங்கள் பதிவைப் பார்க்கவியலவில்லை. பிகே ப்ளாக் உபயோகப்படுத்தியும் பயன் இல்லை.
உங்கள் வலைப்பூவில் ஜெயலைதா அவர்களைப் பற்றிய பதிவுக்குப் பின்னால் வேறு ஒன்றும் இல்லை.
நீங்கள் அங்கு எழுதியதை இங்கேயே நகலிட்டு விடுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - திரை விமர்சனம்
108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக.... இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!!
கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி.... முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது....
படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.... ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது.... அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்து தங்கள் முதுகெலும்பை வளைத்து கூன் போட்டுக் கொண்டிருந்த காலமும் அதுதான்.....
சோழர்பாளையம் எனும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் சிற்றரசர் மொக்கைய மகாராஜா... வாரிசு இல்லாமல் துன்பப்படுகிறார்.... அவருக்கு பிறந்த 22 குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல பிரசவத்தின் போது இறந்து விடுகின்றன.... 23வது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.... நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அரசரின் மைத்துனரும், ராஜகுருவுமாகிய சங்கிலிமாயன் ஜோசியம் பார்க்கிறார்.... ஒரு பிள்ளை சுயபுத்தியுடனும், ஒரு பிள்ளை சொல்புத்தியுடனும் நடந்துகொள்ளும் என ஜோசியர் சொல்ல.... சுயபுத்தி குழந்தையை எங்கேயாவது விட்டு விடுமாறு மருத்துவரிடம் சொல்கிறார்.... எதிர்பாராவிதமாக அந்தக் குழந்தை மருத்துவரிடமே வளர்கிறது.....
சொல்புத்தி குழந்தை வளர்ந்து வாலிபன் ஆகி சோழர்பாளையத்தை ராஜகுரு சங்கிலிமாயனின் ஆலோசனையுடன் வெள்ளையருக்கு சலாம்போட்டு ஆட்சி நடத்துகிறார்... முகம்மது - பின் - துக்ளக் ஸ்டைலில் 23ஆம் புலிகேசி நாட்டை ஆளுவது செம காமெடி..... வெள்ளையருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கோரி அண்டை நாட்டு மன்னன் புறா மூலம் கடிதம் அனுப்ப.... கடிதத்தை தூக்கிப் போட்டு விட்டு மன்னர் புறாவை ரோஸ்ட் செய்து தின்கிறார்....
ஆட்சியின் அலங்கோலத்தை கண்டு புரட்சிப்படை அமைக்கிறார் சொல்புத்தி குழந்தை.... இவர் உக்கிரபுத்தன் என்ற பெயரில் மருத்துவரால் வளர்க்கப்பட்டு நாளந்தா பல்கலைக்கழகம் சென்று படித்து வருகிறார்.... அந்நியரை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்களைத் திரட்டி மன்னருக்கு எதிராக கலகம் நடத்தி இறுதியில் மன்னரும் திருந்தி, ராஜகுருவும் திருந்தி சுபம்...
இம்சை அரசனாக வடிவேலு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.... "மன்னா" என்று யாராவது அழைத்தால் "என்னா" என்று கூறும் தெனாவட்டு, அரண்மனையில் வேலை செய்யும் சோம்பேறிகளிடம் மாரடிக்கும் போது காட்டும் முகபாவம் (வடிவேலு ஸ்டைலில் முடியலை), அந்தப்புரத்தில் அலங்கரித்த கன்னியர்களிடம் போடும் ஆட்டம் என்று செம சூப்ப்ப்ப்பபர்மா...............
உக்கிரபுத்தனாக வரும் இன்னொரு வடிவேலு செம சீரியஸ்.... கொஞ்சம் கூட காமெடி கிடையாது.... "பூட்டியச் சிறையினை உடைப்போம், புரட்சியின் கதவைத் திறப்போம்" என நீலமலைத்திருடன் ஸ்டைலில் குதிரை மீது பயணம் செய்தபடியே கம்பீரமாக பாட்டுப் பாடியப்படியே இவர் வரும் ஓபனிங்குக்கு ரசிகர்களின் விசில் சத்தத்தால் தியேட்டர் கூரை அதிர்கிறது..... ரஜினி, கமல் ஓபனிங்குக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.....
இயக்குனர் பிரபல கார்ட்டூனிஸ்ட் சிம்பு.... மதனின் சிஷ்யர்.... "மன்னா" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் நூற்றுக்கணக்கான ஜோக்குகள் வரைந்தவர்.... அந்த ஜோக்குகளையே படம் முழுக்க புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்.... வசனமும் இவரே.... அசத்தலாக இருக்கிறது.... தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்திருக்கிறார்....
வீரபாண்டிய கட்டபொம்மனுடன் மோதும் நிக்சன் துரை இந்தப் படத்துக்கும் வருகிறார்.... "வானம் பொழிகிறது" ஸ்டைலில் வசனமும் உண்டு.....
ஒருகாட்சியில் (ஜால்ரா) அமைச்சர் சொல்லும் ஒரு வசனம் செம நக்கல்... "எங்க பரம்பரையே போராக இருந்தாலும் சரி... சூழ்ச்சியாக இருந்தாலும் சரி.... எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பது தான் வழக்கம்" :-)
அதுபோலவே மன்னர் கரடி வேட்டைக்குப் போய் கரடியே மன்னர் முகத்தில் காரி உமிழ்வது செம காமெடி.... ஒரு கட்டத்தில் காரி உமிழப்பட்ட மன்னரே வெள்ளையர் கலெக்டர் முகத்தில் காறி உமிழும்போது அமைச்சர் சொல்கிறார் "கரடி காறி உமிழ்ந்த எங்கள் மன்னரே உன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டார்... இதைவிட என்னய்யா உனக்கு கேவலம் வேணும்?" - அமைச்சராக இளவரசு நடித்திருக்கிறார்.... சரியான தேர்வு....
படத்தில் குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம் ஆர்ட் டைரக்சன் மற்றும் இசை.... இரண்டுமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகிறது.... பின்னணிப் பாடகர்களின் குரல் 1960களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது....
ராஜமாதாவாக மனோரமா, ராஜகுருவாக நாசர், கொல்லனாக மனோபாலா, மருத்துவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, கதாநாயகிகளாக தேஜாஸ்ரீ மற்றும் இன்னொரு பெண் (அழகியில் "ஒளியிலே தெரிவது தேவைதையா" பாடலில் வரும் அதே தேவதை) நீண்டநாள் கழித்து ஜோசியராக வி.எஸ். ராகவன், தளபதியாக ஸ்ரீமன் என்று எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்....
வடிவேலு குதிரை ஓட்டுகிறார், கத்திச்சண்டை போடுகிறார், காதல் காட்சிகளில் கலக்குகிறார்... ஹீரோக்களே உஷார்.... உங்களுக்கு போட்டி சக ஹீரோக்கள் அல்ல....
இந்தப் படத்தில் சொல்லவேண்டிய விஷயங்கள் ரொம்ப இருந்தாலும் கூட விமர்சனம் நீண்டுக்கொண்டே போவதால் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..... இந்தப் படம் பார்ப்பது நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்....
இம்சை அரசன் - இடி முழக்கம்!
"வீரபாண்டிய கட்டபொம்மனுடன் மோதும் நிக்சன் துரை இந்தப் படத்துக்கும் வருகிறார்.... "வானம் பொழிகிறது" ஸ்டைலில் வசனமும் உண்டு....."
அது ஜாக்ஸன் துரை லக்கி லுக். புலிகேசியில் வேண்டுமென்றே பெயரை மாற்றியுள்ளனர். "நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?" என்று நடிகர் திலகத்தின் சிம்மக் குரலில் இதைக் கேட்காத காதும் காதோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் விமர்சனமும் அதன் பின்னூட்டங்களும் படத்தை உடனே பார் என்று என்னைக் கட்டாயப்படுத்துகின்றன
///"நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?" என்று நடிகர் திலகத்தின் சிம்மக் குரலில் இதைக் கேட்காத காதும் காதோ? ////
என் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்த..... :-)
கண்டிப்பாகப் பார்க்கவும் சிவஞானம்ஜி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜாக்ஸன் துரையை அவர்கள் நிக்ஸன் என்று மாற்றியதையும் ரசித்து அதற்கும் ஒரு அவுட்டுச் சிரிப்பை விட, பின் வரிசையில் இருந்த நான் சொன்ன அந்தக் குழந்தை இன்னும் அதிர்ச்சியுற்றது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வெற்றிவேல் தியேட்டர்காரர்கள் தியேட்டருக்கு வெளியே நன்றாக ஏர் கண்டிஷன் செய்திருந்ததால் படம் முடிந்து வெளியே வரும்போது அதை நன்றாக அனுபவிக்க முடிந்தது.//
மிகவும் ரசித்த வரிகள், கககபோ !!!
****
படத்தை நானும் பார்த்து விட்டேன், நாசர் ஒரு காட்சியில் சேவகன் விடும் அம்பை ஓர் வாளின் மூலம் இரண்டாக பிளப்பாரே, அப்போது வடிவேலு காட்டும் முகபாவம் அருமை !!!
****
இதுபோன்ற வடிவேலு ஸ்பெசல் நகைச்சுவைக் காட்சிகளை இன்னும் நிறைய சேர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து...
****
சும்மா சொல்லக் கூடாது, வடிவேலு பாடல் காட்சிகளில் கலக்குகிறார் :-)
****
வாருங்கள் சோம்பேறி பையன் அவர்களே,
நான் என்ன நினைக்கிறேன் எண்றால் வடிவேலுவிடம் இத்தகைய சீரியஸ் நடிப்பை நாம் எதிர்ப்பார்க்கவில்லை. ஆகவே நாம் pleasantly surprised என நினைக்கிறேன்.
இருந்தாலும் இப்பதிவுக்கான தலைப்பு நான் மனமாற இட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment