5/02/2012

சிட்டியும் சுட்டியும் - ஒரு சிறுகதை, குழந்தைகளுக்காக

சிறுகதைக்கு போகும் முன்னால் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இக்கதையின் மூலம் ஆங்கிலத்தில் உள்ளது. இதை எழுதியவர் பெயர் சுந்தர். தனது குழந்தைகளுக்கு கூறவே பல கதைகளை உருவாக்கியுள்ளார். அவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வது:

I am a passionate father, all-right, Wanted to grow my 
daughter right, Borrowed ideas from the Bright, Made up 
parables for her to fight; This World, And be a leading light, 
Took the effort to write, And share with equal delight, To do 
well, is beyond my might, Forgive me for my plight.

அதன்படி அவர் சில கதைகளையும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றை மொழிபெயர்க்க அவர் என்னை தொழில்முறையில் அணுகினார்.நானும் செய்து கொடுத்தேன். ஒரு சிறுகதையை தொழில்ரீதியாக நான் மொழி பெயர்ப்பது இதுவே முதல்முறை.

சுந்தர் அவர்களது மூலக்கதைக்கு சுட்டி கொடுத்துவிட்டு, அதன் மொழிபெயர்ப்பை எனது வலைப்பூவில் இடுவதற்கான அனுமதியை பெற்று இங்கு வெளியிடுகிறேன்.

இக்கதையின் மொழிபெயர்ப்புக்காக நான் சில லோக்கலைசேஷன் செய்து கொண்டேன், சுந்தரின் அனுமதியோடு. அதில் வந்த மீர்க்கட் என்னும் மிருகத்தை தமிழில் முயலாக்கினேன். இக்கதையின் தீம் பற்றி சுந்தர் கூறுவதையும் பார்ப்போம்:

A little girl gets inspiration from the story of a meerkat, who tries to solve a problem, by thinking up-side down. But you are encouraged to read right-side up.

இப்போது மொழிபெயர்ப்புக்கு செல்வோம். சிட்டியும் சுட்டியும் என்னும் தலைப்பு நான் சமீபத்தில் 1960-ல் பார்த்த ஒரு சோவியத் சிறுவர் திரைப்படத்தின் தலைப்பு. ஓவர் டு தி ஸ்டோரி.


சிட்டியும் சுட்டியும் 
ஆந்தையாருக்கு ஒரே ஆச்சரியம். “விளையாட்டு மைதானத்துல தனியா உக்காந்துண்டு அழற அந்தச் சின்னப் பெண் யாராக இருக்கும்? ஏன் பள்ளிக்கு போகாம இங்கே உட்கார்ந்திருக்கா அவள்” என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது..
அவள் அருகில் சென்று அமர்ந்த ஆந்தையார் அவள் கண்ணீரைக் கண்டு வருந்தினார்.

“ஏம்மா அழறே குட்டிப் பெண்ணே?”
“எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கல்லே” எனக் கேவினாள் அவள்.
“அதான் ஏன்?”
“யாருமே என்னைத் தங்கள் விளையாட்டுகளில் சேத்துக்கிறதில்லே.”
“ஏன்?”
“ஏன்னாக்க எனக்கு நண்பர்களே இல்லை.”
“அதான் ஏன்?”
“நான் இங்கே புதுசா வந்திருக்கும் மாணவி”
“அதுக்காகவா அழுதுண்டிருக்கே?”
“ஆமாம், என்ன செஞ்சு அவங்களை நண்பர்கள் ஆக்கிக்கிறதுன்னு தெரியல்லே.”
“சரி, உன் பேர் என்னம்மா?”
“என் பேர் மீரா”
“நல்லது! கவலை வேண்டாம் மீரா. இப்போ நான் உனக்கு ஒரு கதை சொல்லறேன். அதைக் கேட்டதும் உன் பிரச்சினை தீர என்ன பண்ணணும்னு நீயே தெரிஞ்சுப்பே.”
அந்தச் சின்னப் பெண் கண்களை துடைத்துக் கொண்டு குழந்தைக்குரிய ஆவலுடன் கதை கேட்கத் தயாரானாள். ஆந்தையார் கதை சொல்ல ஆரம்பித்தார்....

இந்தக் கதை ஏதோ ஒரு மோசமான தினத்திலோ அல்லது அழகில்லாத இடத்திலோ ஆரம்பிக்கவில்லை. அன்றைய தினம் அபாரமாக விடிந்திருந்தது. கதை துவங்கும் இடமும் அருமையானது..
இந்தக் கதை சிட்டி, சுட்டி எனப் பெயர்களையுடைய இரு சகோதரர்கள் பற்றியது. அவர்கள் முயல்கள் என்பதும் கதைக்கு முக்கியமே.
இக்கதை ஆரம்பிக்கும்போது அவர்கள் தூங்கிக் கொண்டோ, ஓய்வெடுத்துக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ இல்லை. அவங்க பள்ளிக்கு போவதற்கான ஆயத்தங்களில் இருந்தாங்க.

முயல்கள் பள்ளியில அன்னிக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்கன்னு நினைக்கிறே? கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலா? கிடையவே கிடையாது. முயல்களுக்கான பொந்துகளை எவ்வாறு செய்வது என்பதைத்தான் அன்று கற்று கொண்டார்கள். அந்தப் பொந்துகள் முயல்கள் வசிக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய ஷரத்து.
எல்லா முயல்களுக்குமே நல்ல மதிப்பெண்கள் எப்போதுமே கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனால் தேவையான உற்சாகங்களும் ஊக்குவிப்புகளும் தாராளமா கிடைக்கும். ஆனா அன்றைக்கு சுட்டி மட்டும் விதிவிலக்கு. அவன் உண்டாக்கிய பொந்து அபாரம். அவனுக்கு மட்டும் நல்ல மதிப்பெண் கிடைத்தது.

அன்றைக்கு அந்த முயல்கள் குடியிருப்பில் வசிக்கும் ஏனைய முயல்களுக்கு சீதோஷ்ண நிலை பற்றியோ தங்கள் அண்டைவீட்டார் பற்றியோ வம்பு பேச நேரமே இல்லை. எல்லோருமே சுட்டி உருவாக்கிய அழகான பொந்தைப் புகழ்ந்தனர். அவன் தோண்டும் அழகையும், பொந்தை அருமையாக வடிவாக்கிய திறமையையும் கண்டு வியந்தனர்.
அவனுக்கு இப்போ ராக்காவல் வேலையோ, குட்டி முயல்களை பாதுகாக்கும் வேலையோ தரவில்லை. அவன் வேலை காலனியில் எப்போதெல்லாம் பொந்துகள் தேவைப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை உருவாக்க வேண்டியது என்றாயிற்று.


அவன் மேல் வைத்த நம்பிக்கை பொய்யாகவில்லை. மற்றவர்கள் எதிர்பார்த்தது போலவே அழகான மற்றும் உபயோகரமான பொந்துகளை அவன் உருவாக்கலானான்.

அவன் தம்பி சிட்டி என்ன செஞ்சான் அப்போன்னு நினைக்கிற? வெட்டியா விளையாடாம அண்ணனுக்கு துணையா அண்ணன் தோண்டத் தோண்டக் குவியற மணல்களை அப்புறப்படுத்தறது போன்ற சுற்று வேலைகளை செய்து வந்தான்.
வேலை ரொம்பவும் இல்லாத சமயங்களில் சிட்டி தூங்கியோ சோம்பி உட்காரவோ இல்லை. பொந்தின் சுவர்களை அழகுபடுத்துவதில் ஈடுபட்டான். அவற்றில் இலைகள், குச்சிகள், சிறு கற்கள் ஆகியவற்றை பொருத்தி அவற்றைச் சுற்றி ஒரு சட்டமும் பொருத்தினான். இதை கலை என அழைத்தான்.

முதல்ல இதையேல்லாம் காலனிக்காரங்க யாருமே கவனிக்கலை. ஆனாக்க மெதுவா அவர்கள் கவனம் சிட்டியின் வேலையால் ஈர்க்கப்பட்டது. யாரும் சிட்டியை அவன் முயற்சிக்காக கேலி செய்யவில்லைங்கறதையும் சொல்லியாகணும்..
இது சுத்தமா சுட்டிக்கு பிடிக்கவில்லை. “சிட்டி கஷ்டமான வேலையெல்லாம் செய்யறதேயில்லை. வெறுமனே காலிச் சுவரைப் பார்த்துக்கொண்டு மணிக்கணக்கா காலத்தைக் கழிக்கிறான் அவ்வளவுதான்” என்பது அவன் புகார். தம்பி மேல் மெதுவாக ஒரு பொறாமை உருவாயிற்று.

நாட்கள் கழிந்தன. சுட்டியின் பொறாமையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது,.
சிட்டி செய்யும் வேலைகளை அவன் புகழவில்லை. அதற்கு மாறாக அவன் தனது தம்பியை அவனது சோம்பேறித்தனத்துக்காக கண்டபடி திட்ட ஆரம்பித்தான்.

இந்த விஷயமும் அவர்களுக்குள்ளே அடங்கவில்லை. சுட்டி தன் தம்பி பற்றிய புகார்களை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தான். அவன் தம்பி ஒரு உதவாக்கரை, ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவன் என்றெல்லாம் அவனைப் பற்றி ஏச ஆரம்பித்தான்.
கடைசியில் சிட்டி எல்லா பொறுமையயும் ஒரு நாள் இழந்தான். சவாலாக தன் அண்ணனை தன்னுடன் பொந்து அமைக்கும் போட்டிக்கு அழைத்தான்.
“நம்ம ரெண்டு பேருமே ஆளுக்கொரு பொந்தை உருவாக்குவோம். அவற்றில் எது மிக அழகான, உபயோகமான பொந்து என்பதை காலனிக்காரங்களே தீர்மானிக்கட்டும்” என்றான் அவன்.

சுட்டியும் தயங்காமல் சவாலை ஏற்றுக்கொண்டான்.
சகோதரர்களிடையே இந்தப் போட்டி பற்றிய செய்தி காட்டு நெருப்பு போல பரவியது. காலனி டிவி சேனலில் அன்றைய மாலை செய்தியில் இது பற்றி பேசப்பட்டது. செய்தி தொகுப்பாளர் கிண்டலுடன் கூறினார்,
“இதையே ஒரு சமையல் போட்டி என கற்பனை செய்து கொண்டால் ஒரு சமையல் நிபுணருடன் ஒரு வெத்துவேட்டு சாப்பாட்டு ராமன் போட்டி போடறது போல இருக்கும். சிட்டிக்கு சாப்பிடத்தான் தெரியும் அவன் போய் சுட்டியுடன் போட்டி போடுவதா?”

அடுத்த இரு நாட்களுக்கு சிட்டிக்கு தூக்கமே வரவில்லை.எவ்வாறு பொந்து அமைப்பது என்ற ஆலோசனையிலேயே அவன் நேரம் கழிந்தது. உண்மையைச் சொல்லணும்னா அது பற்றி ஒரு உபாயமும் தோணவேயில்லைதான்.
ஆலோசனையில் மூழ்கியிருந்த சிட்டி தன்னைக் கொல்லும் நோக்கத்துடன் ஒரு நரியார் வருவதைக் கூட கவனிக்கவில்லை. நரியார் என்ன அவனுடன் விளையாடவா வந்தார். அவனை உண்ணத்தானே வந்தார்.

சுற்றிலும் என்ன நடக்கிறயது என்பதைக்கூட கவனியாது இருக்கும் சிட்டியைப் பார்த்து நரியாருக்கு ஒரே ஆச்சரியம். அவருக்கு பசிதான், இருந்தாலும் சிட்டி அவ்வாறு இருப்பதன் காரணத்தை அறியும் ஆவல் அதிகமாயிற்று. அம்மாதிரி தான் வரும்போதே துள்ளிக் குதித்து தப்பித்து, ஒளிந்து ஓடாத முயலை இப்போதுதான் அவர் பார்க்கிறார் என்பதும் அவரது ஆவலைத் தூண்டியது.
“இதைத்தான் நம்ப பெரியவங்க மகிழ்ச்சியா சாப்பிடறதுன்னு சொல்லறாங்களோ?” எனச் சிந்திக்க ஆரம்பித்தார்.
இப்போ ஆவல் போய் குழப்பம் வந்தது.

“என்ன முயல் தம்பி! உன் பிரச்சினை என்ன?” என இப்போது நரியார் கேட்டார்.
சிட்டி தனக்கும் தன் அண்ணனுக்கும் இடையில் எழுந்த போட்டி பற்றிய முழு விவரங்களையும் கூறினான். கூடவே ஒரு நல்ல பொந்துக்கு தேவையான விஷயங்கள் பற்றிய தனது அறியாமையையும் ஒத்துக் கொண்டான்.
“என் அண்ணன் சொல்லறது போல நான் இந்த வேலைக்கே லாயக்கில்லாதவனேங்கறதுதான் நிஜம்” என சோகத்துடன் சிட்டி கூறினான். “நாளை போட்டியிலே இது எல்லோருக்கும் தெரியப் போகிறது” எனப் பெருமூச்சு விட்டான்.

“கவலை வேண்டாம்” என்றார் நரியார். “நான் உனக்கு உதவி பண்ணறேன். ஒரு அருமையான யுக்தி சொல்லித் தரேன் கேட்டுக்கோ. இதே யுக்தியை எனக்குத் தெரிஞ்ச கணக்கு வாத்தியார் தனது மாணவர்களுக்குச் சொல்லி நான் கேட்டிருக்கேன்.”
சிட்டியின் துயரம் பறந்தது. அவன் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது.
“பிரச்சினையை தலைகீழாய் புரட்டிப் போடு, விடை கிடைக்கும் என்றார்” நரியார்.
“அது எவ்வாறு?” என மயங்கினான் சிட்டி.
“ஒரு உபயோகமில்லாத பொந்தை எப்படி அமைப்பது என்பது பற்றி யோசிக்க முடியுமா உன்னால்?”

சற்றே யோசித்த சிட்டி படாலெனக் கூறலானான், ஒரு மோசமான பொந்தில்
“ 1. ரொம்பக் குறைச்சலா வாசல்கள் இருக்கும்,
  2. அதுல உள்ளே ரொம்பக் குறைச்சலா வழிகள் மற்றும்.பூமிக்கு அடியில் சுரங்கப் பாதைகள் இருக்கும்,
  3. வாசல்களோ வழிகளோ ஒரு முயலுக்கு ஏற்ற அளவில் இருக்காது. இத்யாதி, இத்யாதி” ...
என சிட்டியின் பட்டியல் அவனால் நிறுத்த முடியாமல் நீண்டு கொண்டே போயிற்று.


மூச்சு வாங்க சிட்டி தன் பட்டியலை கூறி முடித்தான். நரியார் கூறினார்,
“இந்த மாதிரியான தவறான விஷயங்களை தவிர்த்தால் நீ உருவாக்கும் பொந்து அழகாக உபயோகமானதாக அமையும் அல்லவா.”
ஆசுவாசத்துடன் சிட்டி புன்முறுவல் செய்தான். நரியார் சொன்னதன் அர்த்தம் புரிந்தது அவனுக்கு. நேரத்தை வீணாக்காமல் பொந்து அமைப்பதில் ஈடுபட்டான்.

சகோதரர்களின் முயற்சிகளை அவதானித்து எது சிறந்தது எனத் தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் வந்த போது குடியிருப்புக்காரகளுக்கு ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு பொந்துகளுமே அருமையாக இருந்தன. ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை. ஆக, அவர்களில் ஒரு சகோதரன் தனது அனுபவத்தால் கற்றதை இன்னொரு சகோதரன் தான் எதைச் செய்யக்கூடாது என்பது பற்றி கற்பனை செய்து கற்றான் என்பது குடியிருப்புக்காரர்களுக்கு புரிந்தது.

ஆந்தையார் இவ்வாறு கதையை முடிக்க, குட்டிச் சிறுமி மீராவின் முகத்திலும் பிரகாசம் வந்தது,
“என்ன செய்யக் கூடாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்” என்றாள் மீரா, “என் வகுப்புத் தோழர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும்”.
“அதே அதே, அப்போத்தான் நீங்க எல்லோருமே எப்போதுமே நண்பர்களாக இருப்பீங்க”.


மீண்டும் டோண்டு ராகவன். அனுமதி அளித்த சுந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 


அன்புடன்,
டோண்டு ராகவன்


3 comments:

virutcham said...

good story

mohan said...

Hi, I read these posts சூரியின் ஜெஸ்டஸ் today. They are very good and damn interesting. Can you plz post the remaining chapters in your blog? -Mohan

D. Chandramouli said...

I enjoyed this little story aimed at not only the kids but also adults. 'How one can arrive at a goal by an elimination process' is well presented in simple Tamil. As they say that a sculptor makes a statue by chipping away the unnecessary stone bits.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது