5/21/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 75 & 76

பகுதி - 75 (19.05.2009):
வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு கிரியின் தாத்தா கணேசன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஜயந்தி-கிரி திருமணப் பேச்சை மறுபடி பேச வந்திருப்பதாகக் கூறுகிறார். உள்ளேயிருந்து சுப்புலட்சுமி “அதெல்லாம் முடிந்துபோன கதை” எனச் சீற, கணேசனும் விடாப்பிடியாக தனது தரப்புக்கு ஆதாரமான விஷயங்களை அடுக்குகிறார். அதனாலெல்லாம் அசராத சுப்பு தன் பங்குக்கு பாயிண்டுகளை வீசுகிறாள். கடைசியில் கணேசன், “குரல் மட்டும் கேட்கிறது, ஆனால் நேரில் பார்க்க இயலவில்லை” எனக் கூறியதும் வெளியே வருகிறாள், கணேசனைப் பார்த்து அப்படியே திகைத்து நிற்கிறாள்.

“நமஸ்காரம், நீங்களா மாமா” என ஆச்சரியமாக கேட்கிறாள். முதலில் திகைக்கும் கணேசனும் எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறது என்றும் ஆனால் சட்டென அடையாளம் தெரியவில்லை என தயக்கத்துடன் சொல்ல, சுப்புலட்சுமி தான் தூத்துக்குடியில் அவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த லட்சுமியின் பெண் என தன்னை சந்தோஷமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். கணேசன் அக்காலகட்டத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு செய்த உதவிகள், தன் தந்தையாகிய சாஸ்திரிகளை மிக கௌரவமாக நடத்தியதில் இருந்த பெருந்தன்மை ஆகியவற்றை தொண்டையடைக்கும் நெகிழ்ச்சியுடன் தன் கணவரிடம் பட்டியலிடுகிறாள். கணேசனும் தனது பழைய நினைவுகள் வந்த நிலையில் சுப்புவை இது பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாமே என கூச்சத்துடன் தடுக்கிறார். சுப்புலட்சுமியோ கேட்பதாக இல்லை. அவளை சற்றே திசை திருப்பும் நோக்கத்தில் அவளது அன்னை, அண்ணா, தங்கைகள் எல்லோரையும் பற்றி விசாரிக்க, அவளும் அவர்கள் பற்றிய விவரங்களை கணேசனிடம் இற்றைப்படுத்துகிறாள். இதையெல்லாம் கேட்கும் வேம்பு சாஸ்திரிக்கோ மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். சுப்பு மேலே பேசுகிறாள். கிரிதான் கணேச மாமாவின் பேரன் என்று தெரிந்த இந்த நிலையில், தன் மகள் ஜெயந்தி அவனுக்குத்தான் என திட்டவட்டமாக தெரிவிக்கிறாள்.

இப்போது தயங்குவது கணேசனின் முறை. வேண்டாமே என அவர் கூற, தன் மகள் ஜெயந்தி அவர் வீட்டு சமையற்காரியின் பேத்தி என்பதால் கணேசன் தயங்குகிறாரா என அவள் ஆதங்கத்துடன் கேட்க, அப்படியெல்லாமில்லை என திட்டவட்டமாக கணேசன் மறுக்கிறார். தான் அந்த வீட்டுக்கு வரும்போது எப்படியாவது இக்கல்யாணத்தை முடிக்கும் மனநிலையில் வந்ததாகவும், ஆனால் இக்கல்யாண விஷயத்தில் பல மனநெருடல்கள் வைத்திருந்த சுப்புலட்சுமி, இப்போது தனக்கு கடன்பட்டதாக நினைத்து தனது நிலையிலிருந்து கீழிறங்கி வர வேண்டாமே என்பதுதான் அவரது தயக்கத்துக்கு காரணம் என அவர் கூற, சுப்பு இப்போது தனது சம்மதம் மனப்பூர்வமானதே என திட்டவட்டமாகக் கூறி அவரை வேம்புவின் அருகில் உட்காரச் சொல்லி, அவருக்காக காப்பி தயாரிக்க செல்கிறாள்.

டோண்டு ராகவனின் சில வார்த்தைகள் இங்கே. தான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ள கணேசனைப் பார்த்ததுமே சுப்புவின் மனநெருடல்கள் நொடியில் காணாமல் போய் அவள் திருமணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதித்த நிலையில் கணேசன் மிகப்பெருந்தன்மையுடன் அவளிடம் வெறுமனே நன்றிக்கடனுக்காக அவள் சம்மதத்தைப் பெறுவதில் தனக்கு இருக்கும் மனத்தடையை நாசுக்காக வெளிப்படுத்துவது ஆகிய இரு விஷயங்களுமே சீரியலின் இப்பகுதியின் மகுடம் எனக் கூறலாம். இரு பாத்திரங்களுமே போட்டி போட்டுக் கொண்டு தத்தம் பங்களிப்பை தந்தனர். வேம்பு சாஸ்திரிகளோ மௌன சாட்சியாக நின்று, தன் முகபாவத்திலேயே அத்தனை எதிர்வினையையும் காட்டியது அந்த நடிகரின் திறமைக்கு அத்தாட்சி.

நாதனின் வீட்டில் வசுமதியின் கிளப் தோழி மைதிலி வந்திருக்கிறாள். பல நாட்களுக்கான வம்பையெல்லாம் பேசிய திருப்தியில் மைதிலி கிளம்பத் தயாராக இருக்கும் நேரத்தில் அசோக்கை தேடி உமா வருகிறாள். உமா அங்கு வருவதன் பின்னணியை தூண்டித் துருவி விசாரிக்கும் மைதிலி வசுமதியிடம் அவள் ஜாக்கிரதையாக இல்லையென்றால் அந்த சின்னப் பெண் அசோக்கை தன் வசப்படுத்துவாள் என எச்சரிக்கிறாள்.

சாம்பு வீட்டில் அவர் தன் மனைவி செல்லம்மாவிடம் நாதன் வீட்டில் மைதிலி மாமி வந்து குழப்பம் செய்து விட்டு போன சமாச்சாரத்தை கூறுகிறார். செல்லமாவோ சாம்பு அந்த வீட்டிற்கு பூஜைதானே செய்யப் போனார், இந்த வம்பையெல்லாம் ஏன் கேட்கிறார் என கேட்க, அவர் நாதன் வீட்டு பெண்டுகள் உரக்கவே எல்லா விஷயங்களையும் பேசுவதால் தான் விரும்பாமலேயே அவை தன் காதில் விழுகின்றன என கூறுகிறார்.

அச்சமயம் செல்லம்மாவின் தோழி ஸ்ரீமதி அங்கு வர அவளிடம் அவள் பெண் கல்யாணத்தில் நடந்த சலசலப்புக்கு காரணம் கேட்கிறாள். தனது பெண்ணுக்கு ஏற்கனவேயே வேறிடத்தில் நிச்சயம் ஆகி, பிள்ளையாத்துக்காரர்கள் திடீரென அதிக வரதட்சணை கேட்டதால் அந்த சம்பந்தம் நின்று போனதை மாப்பிள்ளை வீட்டாருக்கு இவர்கள் சொல்லாமல் மறைத்ததையும், பிறகு வேறு யாரோ பிள்ளை வீட்டாரிடம் இது பற்றிப் போட்டுக் கொடுக்க, சற்றே பிரச்சினை எழுந்ததாகவும், தான் அவர்கலுக்கு விவரமாக எடுத்து சொன்ன பிறகு பிள்ளைவீட்டார் சமாதானமானதையும் கூறி, இம்மாதிரி விஷயங்களை மறைத்தது தவறாகப் போய் விட்டது என அங்கலாய்த்து விட்டு செல்கிறாள். சாம்புவும் இம்மாதிரி விஷயங்களை மறைப்பது உசிதம் இல்லை என அபிப்பிராயப்படுகிறார்.

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கலாம்” என கூறப்படுவதை சோவின் நண்பர் எடுத்துரைக்க, சோ அவரிடம் அது வெறுமனே ஒரு expediency ஆக கூறப்படுகிறதே அன்றி அது சரியல்ல என அபிப்பிராயப்படுகிறார். நல்ல பெயர் பெற பெறும் அவதியாக இருக்கும் அதே சமயம், அந்த நல்ல பெயர் ஒரே நொடியில் கீழிறங்கி போவதும் நடக்கிறது என்று கூறுகிறார். எப்படியுமே தெரியப்போகும் விஷயங்களை தேவையின்றி மறைத்தால் எப்போதுமே தொல்லைதான் எனவும் கூறுகிறார். மேலும் சத்தியம் தேவைதான் ஆனால் அது அதே சமயம் மனதை புண்படுத்துவதாக இருக்கலாகாது என்பதை சில உதாரணங்களுடன் விளக்குகிறார். இன்னும் உள்ளே போனால், மனதுக்கு இதம் என்பதற்காக அசத்தியத்தை கூறுவதும் தவறுதான் என்றும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் வசுமதி மட்டும் இருக்கிறாள். அசோக்கைப் பார்க்க உமா வருகிறாள். வசுமதி அவளிடம் தனியாகப் பேச வேண்டும் எனக்க்கூறி அவள் அங்கு வருவதையும், அசோக்குடன் பழகுவதையும் தான் விரும்பவில்லை என்பதை ஒரு புதிய முறையில் கூறுகிறாள்.

தான் சொல்லப்போவது அவள் மனதை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது என நினைப்பதால் தான் இப்போது கூறப்போவதையெல்லாம் உமா எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி, பேச ஆரம்பிக்கிறாள்.

“நீ வருவது எனக்கு பிடிச்சிருக்கு ..., உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ..., அசோக்குடன் நீ தினமும் பேசுவது எனக்கு பிடிச்சிருக்கு ..., அசோக்குக்கு நீ நல்ல மனைவியாக இருப்பாய் ..., உனக்கு அசோக்கை விட்டால் வேறு மாப்பிள்ளை கிடைக்காது ..., உன்னை என் மருமகளாக்கிக் கொண்டால் எனது அந்தஸ்து மிக உயரும்..., உடனே உள்ளே வா”

உமா ஒன்றுமே பேசாமல் வீட்டை விட்டு வெளியே செல்கிறாள்.


பகுதி - 76:
நீலகண்டன் வீட்டில் அவர் பர்வதத்திடம் ஏதேனும் நியூஸ் உண்டா என கேட்க, அவள் உமாவிடம் பேசும்படி கூற நீலகண்டனும் பர்வதத்துடன் மாடியில் உமா இருக்குமிடத்துக்கு செல்கிறார். அங்கு உமா ஒரு கொந்தளிக்கும் எரிமலை போல அமர்ந்திருக்கிறாள். நீலகண்டன் அவளிடம் என்ன விஷயம் என கேட்க அப்படியே பொங்குகிறாள். நீலகண்டனிடம் வசுமதி தன்னிடம் நடந்து கொண்டதை சொல்லி கோபப்படுகிறாள். நீலகண்டன் அவளை சில பொதுவான வார்த்தைகளால் சமாதானப்படுத்துகிறார். நாதன் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அவருக்கு தெரியாமல் வசுமதி விஷம வேலை செய்கிறாள் என்பது அவருக்கு தெரிய வேண்டும் என உமா கொதிப்புடன் பேச, அது தங்களது வேலையில்லை என நீலகண்டன் அவளை தடுக்கிறார். “நீங்கள் சொல்லித்தான் நான் அங்கு போனேன், அவர்கள் சொல்லித்தான் அசோக்குடன் பழகினேன். இந்த அவமானம் வந்தது. இனிமேல் நாதன் வந்து என்ன மாதிரி கெஞ்சினாலும் என்னை அங்கே மறுபடி போகச் சொல்லக்கூடாது” என இப்போது உமா கண்டிப்பாகவே கூறுகிறாள். அவரும் ஒத்து கொள்கிறார். நீலகண்டனும் பர்வதமும் கீழே செல்கின்றனர். பிறகு பர்வதம் சொல்லி மீண்டும் மேலே செல்லும் நீலகண்டன் உமாவை தேற்றும் வேலையைத் தொடருகிறார்.

திடீரென ஒரு ஆவேசத்தில் உமா நீலகண்டனின் செல்ஃபோனை பிடுங்கி, வசுமதியிடம் தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டுகிறாள். பதறிப் போன நீலகண்டன் அவளிடமிருந்த தனது செல்ஃபோனை திரும்ப பிடுங்கி வசுமதியிடம் மன்னிப்பு கேட்க முயல, உமா தான் வசுமதியிடம் பேசியது டயல் செய்யாத ஃபோனை வைத்துதான் எனவும் ஆகவே தனது மதிப்பு நாதன் வீட்டில் போய்விட்டதோ என நீலகண்டன் பதற வேண்டாம் என கூற, அவருக்கும் நிம்மதி. தந்தை மகளை தேற்றும் காட்சி மேலும் தொடர்கிறது.

சாம்பு வீட்டில் வேம்பு சாஸ்திரியின் மனைவி சுப்புலட்சுமி சாம்பு சாஸ்திரி மனைவி செல்லமா விடம் தனது கருத்துக்களை கூறுகிறாள். முதலில் கிரிக்கு தன் பெண்ணை எந்தெந்த காரணங்களுக்காக தர யோசித்தாளோ அவை அனைத்துமே அவன் கணேசமாமாவின் மகன் என தெரிந்ததும் பஞ்சாய் பறந்து விட்டன என்கிறாள். செல்லம்மா அவள் சொன்னதை ஆமோதிக்கிறாள். கணேசனிடம் தனக்கு இருக்கும் நன்றியுணர்ச்சியை அவள் மீண்டும் தெளிவாக்குகிறாள். இருப்பினும் தனது உறவினர்கள் மத்தியில் இந்த சம்பந்தத்தால் என்னென்ன எதிர்வினைகள் வருமோ என அவள் தனது பயத்தை வெளிப்படுத்துகிறாள். சுப்பு தைரியமாக எடுத்த முடிவு தன்னால் கூட சாத்தியமாக இருந்திராது என வெளிப்படையாகவே கூறும் செல்லம்மா, அவளுக்கு தைரியம் தரும் வார்த்தைகளை கூறுகிறாள். இருவரது நட்பும் இந்த நிகழ்ச்சியால் பலப்படுகிறது.

அசோக் கோமதி மாமியிடம் உமா ஏன் இப்போதெல்லாம் இப்பக்கம் வருவதில்லை என கேட்க, முதலில் தயங்கும் கோமதி மாமி அசோக் வற்புறுத்துவதால் உள்ளதைக் கூறிவிடுகிறாள். அசோக் தன் தாயாரிடம் அவள் உமாவிடம் இவ்வாறு ஏன் மரியாதைக் குறைவாய் பேசினாள் என கேட்கிறான். இதை அவனுக்கு யார் சொன்னது என வசுமதி கேட்க, சமையற்கார மாமிதான் கூறியதாக வெள்ளந்தியாக கூறிவிட உள்ளே கோமதி மாமிக்கு தூக்கிவாரிப் போடுகிறது. உமா பற்றி வசுமதி கூறியது எல்லாவற்றையும் புறம் தள்ளுகிறான் அசோக். அவள் அவன் மேல் சுயநலத்துடனேயே அன்பு காட்டுகிறாள் என வசுமதி கூற, அவள் வழியில் அவள் அன்பு காட்டுகிறாள், அதில் வசுமதிக்கு என்னக் கஷ்டம் என கேட்டுவிட்டு, ஒருவரை வீட்டுக்கு வராதே என எப்படி அவள் கூறப்போயிற்று என்பதை சாதாரண குரலிலேயே கேட்கிறான். தான் உமாவைப் போய் பார்க்கப் போவதாக அவன் கூறுகிறான். அப்படியெல்லாம் அவாத்துக்கு போய் அவன் தனது மதிப்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என வசுமதிசொல்ல, நாம் எல்லோருமே பரப்பிரும்மத்திலிருந்தே வந்துள்ளோம். அந்த பரப்பிரும்மம் அதிலிருந்து சில பகுதி எடுக்கப்படுவதால் குறைவதில்லை, அதே போல அத்துடன் எதையாவது சேர்ப்பதால் அது அதிகமாவதும் இல்லை என அவன் கூறுகிறான்.

அதென்ன பரப்பிரும்மம், எடுத்தாலும் குறையாது, சேர்த்தாலும் அதிகரிக்காது என கூறப்படுகிறது என்று சோவின் நண்பர் கேள்வி எழுப்புகிறார். சோ வழக்கமான புன்முறுவலுடன் விளக்குகிறார். ஈசாவாஸ்ய உபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இறைவன் முழுமையானவன். அவனிடமிருந்து உருவாவது முழுமையான உலகம். அவ்வாறு உருவானாலும் இறைவன் முழுமையாகவே இருக்கிறான். என்ன பொருள்? உலகம் என்பது மாயை. ஆகவே அது எடுக்கப்பட்டாலும் இறைவன் அதே முழுமையாகவே இருக்கிறான். இதையெல்லாம் நாம் உணர்ந்துதான் அறிய வேண்டும், சொல்லிக் கொடுத்தோ, படித்தோ வராது எனவும் சோ கூறுகிறார். நாம் எல்லாம் பரப்பிரும்மத்தை சேர்ந்தவர்கள். இதைத்தான், தத்வமசி, அகம் பிரும்மாஸ்மி என்றெல்லாம் கூறுகிறார்கள் எனவும் சோ கூறுகிறார். மேலும் கூறுகிறார், கண்டறியும் அனுபவமே இறைவன் என. இதை கவியரசு கண்ணதாசன் மிக அழகாக கவிதையாக இவ்வாறு கூறுகிறார் என்பதையும் எடுத்துரைக்கிறார். வரிகளை கூகளிட்டு பார்த்தில் எனக்கு காதலாகி என்னும் வலைப்பூ கிடைத்தது. அப்பதிவருக்கு என் நன்றி.

பிறப்பெனில் யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பெனில் யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வெனில் யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்
ஆண்டவன் அருகில் வந்து அனுபவமே நான்தான் என்றான்


இப்போது அசோக் அவ்விடத்தை விட்டு அகலுகிறான். சமையற்கார மாமி வசுமதியிடம் நல்ல டோஸ் வாங்குகிறாள்.

உமா வீட்டுக்கு வருகிறான் அசோக். பர்வதத்திடம் உமாவிடம் பேச அனுமதி கேட்கிறான். அவள் அனுமதி மறுக்கிறாள். அதை ஏற்று அவன் அப்பால் செல்கிறான். தெருவில் செல்லும் அவனை மாடியில் இருந்து பார்க்கும் உமா அவனை உள்ளே அழைக்கிறாள். நடந்தது முழுமையாக தனக்கு தெரியாதென்றாலும் தன் அன்னை அவளை மனம் புண்பட பேசியதை தன்னால் ஊகிக்க முடிகிறது எனக் கூறுகிறான். “இண்டீசண்ட்” என ஒரு வார்த்தையில் தன் கருத்தை உமா வெளிப்படுத்த, அவள் தன்னுடம் நெருக்கமாக பழகுவதை கூட தன் அன்னை இண்டீசண்ட் ஆக நினைத்திருக்கலாம் அல்லவா என அசோக் கேட்கிறான். அட்டாச்மெண்ட் கூடாது என்றெல்லாம் பேசும் அசோக் இப்போது தன் அன்னை சம்பந்தப்பட்ட விஷயம் என்று வரும்போது மட்டும் இவ்வாறெல்லாம் விளக்கம் ஏன் கூற வேண்டும் என உமா தன் பங்குக்கு கேட்கிறாள். உமா மேலே பேசுகிறாள்.

அசோக் நார்மல் இல்லை என அவன் குடும்பத்தினர் தீர்மானித்ததாகவும், ஆகவே அவனை உலக வாழ்க்கைக்கு திருப்ப உமா தனது சாதுர்யத்தைப் பயன்படுத்த வேண்டும் என அவர்களே தன்னை கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக என்ன விலையானாலும் தான் தருவதாக நாதன் கூற அசோக்குடன் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என தான் கேட்டதாகவும், நாதன் அவ்வாறே வாக்குறுதி தந்ததாகவும் கூறுகிறாள். ஆனால் இவ்வாறு தான் கேட்டதுமே வசுமதி மாமியின் முகத்தில் ஈயாடவில்லை எனவும், ஆகவே முதலிலிருந்தே தன் எதிர்ப்பைக் காட்டியதாகவும் அவள் கூறுகிறாள். எல்லோருடைய சம்மதத்தையும் பெற்றுத்தான் காதல் வரவேண்டும் என்பதில்லை தான் கருத்து கொண்டிருந்ததால் வசுமதியின் எதிர்ப்பைத் தான் பொருட்படுத்தவில்லை என்றும், அதனால் தன் மேல் இன்னும் அதிகமாக வசுமதி எரிச்சல் கொண்டாள் எனவும், அந்த தினம் தன்னிடம் கடுமையாக அவள் பேசினது அதன் வெளிப்பாடே எனவும் உமா கூறுகிறாள்.

அசோக் நிதானமாக புன்முறுவல் செய்கிறான். விஸ்வாமித்திரர் மனதை மாற்ற மேனகையை அனுப்பியதுபோல அவளை தன்னிடம் அனுப்பினார்களா என கேட்கிறான்.

இப்பகுதியில் வரும் எல்லா காட்சிகளுமே அருமை.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 21.05.2009

ராஜு:
(1) Do you believe in Astrology and pariharams? Does it work? There is one Chennai jyotish promising results @ Rs 2000. Personally I have felt whatever he has told to date, has happened (5 years)...
பதில்: எங்கோ இருக்கும் கிரகங்கள் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க இயலும் என்பதுதான் எனக்குள் வெகு நாட்களாக இருக்கும் கேள்வி. அவற்றின் கதிரியக்கங்கள் வந்து தாக்குமாம். வாதத்துக்கு அப்படியே வைத்து கொண்டாலும் அது எந்த விதமாகத் தாக்கும் என்பதை கண்டறிந்தவர்கள் யார்? ஏதேனும் பரிசோதனை செய்து பார்த்தார்களாமா? சூரியனும் ஒரு பாதையில் நகர்கிறது. அது மூடிய பாதை என்பதையும் படித்துள்ளேன். ஆகவே சில ஆண்டுகள் வித்தியாசத்தில் அது பழைய இடத்தை அடையலாம். இது ஒரு சுழற்சி முறை என்று வைத்து கொள்ளலாம் என்பதே ஜோசியத்தின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது மிக குழப்பமான அடிப்படை என்பதே என் குழம்பிய மனதுக்கு படுகிறது. அதே பழைய கேள்விதான் மீண்டும். இந்த பாதையில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் தனிப்பட்ட மனிதர்களை எங்கனம் பாதிக்க இயலும்? அப்படியே பாதிப்பதாக வைத்து கொண்டாலும் அதை துல்லியமாக கணித்து சொல்வதாக கூறிக்கொள்ளும் ஜாதகத்தின் அடிப்படை ஞானம் எங்கிருந்து வந்தது? யாராவது எக்காலத்திலாவது அதை கண்டறிந்து குறித்து வைத்துள்ளார்களா?

பரிகாரங்கள்? பலர் கூறுகிறார்கள், ஜோசியம் என்பது பிற்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை கூறுகிறது என்று. அப்போது முன்கூட்டி நடவடிக்கை செய்து வைத்து கொண்டால் அவற்றின் விளைவுகளை குறைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்குத்தான் பரிகார பூஜைகள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவற்றின் அடிப்படை என்னவென்றால் மனதில் தன்னம்பிக்கை பெறுவதே.

மாமன் மகள் என்னும் படத்தில் ஜெமினி கணேசன் கோழையாக இருக்க, அவருடைய பாட்டி தனது கணவன் உபயோகித்தது என்று கூறி தாயத்து போன்ற ஒன்றை அவரிடம் தர, அவரும் தைரியம் பெற்று வெற்றியும் பெறுகிறார். கடைசியில்தான் பாட்டி அப்பொருள் தாத்தாவின் பொடி டப்பி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

அதனால் என்ன, விளைவு என்னவோ நல்லதுதானே? ஆகவே, ஏதேனும் கோவில் பிரகாரங்களை குறிப்பிட்ட அளவுக்கு தினமும் சுற்றுங்கள் எனக் கூற அதை நம்பிக்கையுடன் நிறைவேற்றும்போது வாக்கிங் செய்த பலனும், அதனால் மூச்சுவிடுவது சீராகி, உடல் நலம் பெற்று தன்னம்பிக்கை வருவதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் தைரியம் ஏற்பட்டு வெற்றியும் அடையலாம். கோவில், கடவுள் எனக் கூறினால் அதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்னும் மனோதத்துவக் காரணமே இங்கு ஆட்சி செய்கிறது.

அதைவிடுத்து ஆயிரக்கணக்கில் பூஜைக்காக பணம் கேட்டு அதையும் தந்தால், பணம் பெறும் ஜோசியரைத் தவிர யாருக்கும் பிரயோசனம் இல்லை. அதனால் வரும் தன்னம்பிக்கையை ஜோசியம் கேட்டவர் காலணா காசு செலவின்றி உள்ளூர் கோவிலை சுற்றி வந்தே பெற இயலும்.

நான் இவை பற்றி மேலும் எழுதியதை இப்பதிவில் பார்க்கவும்.

(2) What should Vijayakanth do to gain more popularity? Should he combine with other Cine stars like Karthik (Mukkulathor) and Sarathkumar (Nadar) and make a winning combination with his Nayakkar votes? Does BJP have a say?
பதில்: விஜயகாந்த் இதுவரை செய்ததே அவருக்கு போதுமானது. வரும் அசெம்பிளி தேர்தலில் கண்டிப்பாக அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே திமுகவும் அதிமுகவும் போட்டி போடும். எங்கு நல்ல வேட்டை கிடைக்கிறதோ அங்கே போய்க்கொள்ள வேண்டியதுதானே. கார்த்திக், சரத்குமார், பாஜக? சிரிப்பு மூட்டாதீர்கள்.


பொரியாளன்:
1. தேவை இல்லாமல் ஆண்களுக்கு ஏன் முலைக்காம்புகள் உள்ளன ? அப்படி இருக்கிறதென்றால் நாமும் ஒரு காலத்தில் குழந்தைக்கு பாலூட்டினோமா ? அல்லது ஒரு உடலில் இருந்து இரு உயிர்கள் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் உருவானதா ? ஒரு செல் உயிரி அமீபாவையும் இதனையும் எவ்வாறு இணைத்து பார்க்கலாம்?
பதில்: அப்படியில்லை. கரு உருவான முதல் சில வாரங்கள் வரை அதன் பால் நிர்ணயிக்கப்படுவதில்லை. எக்ஸ்.எக்ஸ்/ஒய்.ஒய் மற்றும் எக்ஸ்.ஒய் குரொமோசோம்கள் பாகுபாடு முதலிலேயே நிகழ்ந்து விட்டாலும் அச்செய்தி லேட்டாகத்தான் ட்ரிக்கர் ஆகிறது. ஆகவே அதுவரை கரு இரு பாலினருக்கான உறுப்புகளையும் வைத்திருக்கும். அவற்றில் முலைக்காம்புகளும் அடக்கம். ஆகவேதான் ஆண்களுக்கும் முலைக்காம்புகள் அமைகின்றன. இது ஒரு எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமே. மருத்துவர் புரூனோ இன்னும் சிறப்பாக விளக்குவார்.

அஸ்வினி:
1. சார், EVMல் எந்த அடிப்படையில் வேட்பாளர் பெயர் வரிசைப்படுததப்படுகிறது . உதா: தென்சென்னை தொகுதியில் அ இ அ தி மு க வேட்பாளர் பெயர் (ராஜேந்திரன்) முதலிலும் - கணேசன் பெயர் இரண்டாவதாகவும், பாரதி பெயர் மூன்றாவதாகவும் இருந்தது.alpahbetical வகையிலும், உதைக்கிறது.பிற வேட்பாள்ர் பெயர் தேடுவதற்க்குள் விடிந்துவிடும். மொத்தம் 42 பேர். இதற்கு எதேனும் அடிப்படை விதிகள் உள்ளதா? விளக்கவும். (அ) தெரிந்தவர் மூலம் கேட்டு விளக்கவும்.
பதில்: விளக்கம் ரொம்ப சுலபம். பெயரை இனிஷியலுடன் பார்க்க வேண்டும், அதுவும் விரிவாக்கிய நிலையில் இருக்க வேண்டும். நான் ராகவன், இனிஷியலுடன் சேர்த்து நரசிம்மன் ராகவன். ஆகவே என்னை நரசிம்மனுக்கான ஆங்கில எழுத்தின் அடிப்படையில்தான் வரிசைப் படுத்துவார்கள். அதுவே என் பெயரின் இனிஷியலில் ஊர்ப்பெயரும் இருந்தால், உதாரணத்துக்கு அழகியசிங்கபுரம், இப்போது என் பெயர் அழகியசிங்கபுரம் நரசிம்மன் ராகவன். என் பெயர் முதலில் வந்து விடும். என்ன சரிதானே?


சிவகுமார்:
1. நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து எங்கே பிராமணன் எவ்வாறு வேறுபடுகிறது? உதாரணங்கள்?
பதில்: 76 எபிசோடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை ஒரு சராசரி மெகா சீரியல் டைரக்டரால் 300 எபிசோடுகளுக்கு இழுக்கப்பட்டிருக்கும். பாகவதரின் மருமகள் கணவனின் கையெழுத்தைப் போட்டு மகனின் ஹாஸ்டல் வார்டனிடம் லெட்டர் கொடுத்த ஒரு நிகழ்ச்சியை பயங்கர கண்ணீர்க் காட்சிகளாக மாற்றியிருப்பார், சாதாரண தயாரிப்பாளர். பல எபிசோடுகள் அதிலேயே போயிருக்கும். அது இங்கு இரண்டு எபிசோடுகளில் சிறு பகுதிகளில் முடிக்கப்பட்டது. அசோக் காணாமல் போன காட்சியில் பல மிரகிள்ஸ் காட்சிகளைக் காட்டியிருந்திருக்கலாம். ஆனால் சோ அவ்வாறெல்லாம் செய்யவில்லை. எல்லாவற்றையும் ஒருவித தார்மிகப் பொறுப்போடு எடுத்து சென்றிருக்கிறார். அசோக்கை லௌகீக வாழ்க்கைக்கு கொண்டுவர உமா மேற்கொள்ளும் முயற்சிகள், அசோக் மற்றும் உமா பேசும் காட்சிகள் ஆகியவை துளிக்கூட விரசமின்றி எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். நாந்தான் ஒவ்வொரு எபிசோடையும் ரிவ்யூ செய்து அதன் வீடியோ லிங்கையும் தருகிறேனே. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நான் கூறியதை சோதித்து பார்க்கவும் இதுவே நல்ல தருணம். பை தி வே, 72 மற்றும் 73-ஆம் பகுதிகளுக்காக நான் எழுதிய பதிவின் சில வரிகளை இங்கே மீண்டும் தருவேன்.

“இந்த சீரியலில் ஒவ்வொரு காட்சியும் சிற்பியின் நேர்த்தியோடு செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வாடிக்கையாளரை அணுகும் முறை பற்றி பத்து பதிவுகள் போட்ட இந்த டோண்டு ராகவன், பணமின்றி எந்த வேலையும் செய்யலாகாது என எல்லோரிடமும் கூறி தானும் அதை கடைபிடிக்கும் இந்த டோண்டு ராகவன் முதன்முறையாக எந்த எதிர்பார்ப்புமின்றி, சுயவிருப்பத்துடன் மனதை ஈடுபடுத்தி செய்யும் முதல் முயற்சிதான் இந்தத் தொடர் பற்றிய பதிவுகள். இந்த பதிக்கும் வேலை தரும் மனத்திருப்தியே அவனுக்கு இதில் கிடைக்கும் சம்பளம் என்பதையும் அவன் மகிழ்ச்சியாகவே உணர்கிறான். அதற்கு ஈடில்லை எனவும் அவன் உணர்கிறான். சோ அவர்களின் இந்த மகாயாகத்தில் அவனால் இயன்ற சிறுபங்களிப்புதான் இது, அதாவது ராமகாரியத்தில் அணில் உதவியது போல என்பதையும் வலியுறுத்துகிறான்”.

2. யாரும் எதிர்பாராத முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது - இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேற்றியை எதிர்ப்பார்த்த எனக்கு இம்முடிவு எதிர்பாராததே.

3. இந்தியா முழுமையும் திருமங்கலமாக மாறி விட்டதா?
பதில்: பண வினியோகம் அம்மாதிரி ஒரே விதமாக நடந்தது என்றா நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டை சொல்லுங்கள், அதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம்.

4. நான்காவது முன்னணியும் தோற்று விட்டதே? லாலுவின் கொட்டம் இனியாவது அடங்குமா?
பதில்: மூன்றாம் அணியே சிங்கி அடிக்கும்போது நான்காவது அணி பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? ஆனால் ஒன்று. லாலுவை அப்படியெல்லாம் ஒதுக்கிவிட இயலாது.

5. கடைசியில் கருணாநிதியின் சாதுர்யம் வென்று விட்டதே?
பதில்: அதில் அவருக்கு நல்ல பயிற்சிதானே.

6. இனி ஈழ விடுதலை பற்றிய செய்திகள் என்ன ஆகும்?
பதில்: புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தெளிவு பிறக்கும், பிறக்க வேண்டும்.

7. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - இந்த தேசம் என்ன ஆகும்? காங்கிரஸ் மீண்டும் இந்தியாவின் நம்பிக்கையான கட்சி என்பது என்பது நிருபணமாகி உள்ளதே?
பதில்: அதே நேரத்தில் மிருகபல பெரும்பான்மை அதனிடம் இல்லை என்பதும் ஒரு நல்ல விஷயம். பொருளாதாரக் கொள்கைகளை பொருத்தவரையில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அதே நேரத்தில், இடது சாரிகள் இம்முறை மன்மோகன் சிங்கை பிளாக்மெயில் செய்ய இயலாது என்பதும் ஒரு பிளஸ் பாயிண்டுதானே.

8. பல கட்சி ஆட்சி முறை என்பது தவறான நடைமுறை தானே? எவ்வாறு இதை சீரமைக்கலாம்?
பதில்: இந்தியாவில் மத்தியில் 1989 வரை ஒரு கட்சிமுறை ஆட்சிதான் நடந்து வந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறைதான் நடந்து வந்துள்ளது. ஆனால் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி ஆட்சி நடந்து வந்துள்ளது. இதில் எது சரி, எது தவறு எனப்பார்ப்பது கடினமே. கேஸ் பை கேஸாகத்தான் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, சர்வதேச அளவில் இஸ்ரேலில் முதலிலிருந்தே கூட்டணி கட்சிகள் ஆட்சிதான். அதனால் என்ன குடி முழுகி விட்டது? இத்தாலியில் சில மாதங்களுக்கு ஒரு முறை அரசு சர்வ சாதாரணமாகக் கவிழ்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் பொருளாதார முன்னேற்றத்தில் குறைவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் காலை வாரும் முயற்சிகளில் இருந்ததால், அவர்களது தலையீடின்றி நிர்வாகம் அதிகாரிகள் மேற்பார்வையில் நன்றாகவே நடந்தது என்று கூட அங்கு ஒரு முறை கூறப்பட்டதாக எங்கள் இத்தலிய மொழி ஆசிரியர் கார்லோ புல்ட்ரீனி சமீபத்தில் 1987-ல் எங்களுக்கு வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

9. என் தேசத்தை கூறு போடுகின்ற எவரையும் எனக்கு பிடிப்பதில்லை (மத இன மொழி வாரியாக) என்னைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள்?
பதில்: நீங்கள் நல்ல மனிதர். தேசபக்தியுள்ளவர். ஆகவே பா.ஜ.க.வில் சேரவும்.


எம்.கண்ணன்
1. சூப்பரின்டெண்டென்ட் (Super-in-tendant) என்பதை ஏன் பலரும் சூப்ரண்டு என சொல்கின்றனர்? இந்த பதவியின் பெயர் எப்படி வந்தது?
பதில்: பலருக்கு தேவையான அளவு நாக்கு சுழலாது. ஆகவே அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். இதன் மூலம் intendant என்னும் பிரெஞ்சு சொல்லிலிருந்து வருகிறது. அதன் பிறகு ஒவ்வொரு தேசத்திலும் அது வெவ்வேறு நிலைகளில் உறைந்து போனது. அமெரிக்காவில் அபார்ட்மெண்ட் பிளாக்குகளில் பராமரிப்புக்கு பொறுப்பாக இருப்பவர்களை கூட சூப்பரின்டெண்டென்ட் என அழைக்கும் வழக்கம் உண்டு.

2. அரசு அதிகாரிகளின் hierarchyயில் எதற்கு இத்தனை துணை, இணை, கூடுதல் கமிஷனர் போன்ற பதவிகள்?
பதில்: அப்போதுதானே பலருக்கு பிரமோஷனே தரவியலும்?

3. பிரிடிஷார் வைத்திருந்த பதவிப் பட்டியலையே ஏன் இன்னும் வைத்துள்ளோம் ? இதற்கெல்லாம் Reform கமிஷன் வைத்து மாற்ற மாட்டார்களா?
பதில்: மாற்றத் தேவையிருந்தால் மாற்றலாம். மற்றப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக எல்லாம் யாரும் ரூம் போட்டு யோசிப்பதில்லை.

4. போலீஸ் துறையின் hierarchy கீழிருந்து மேலே வரை சொல்ல முடியுமா? எனக்குத் தெரிந்த வரை - கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் (ஏட்டு), சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி, துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், கமிஷனர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி?
பதில்: எனக்கு தெரிந்தவரை நான் இவ்வாறு வரிசைப்படுத்துவேன். கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் (ஏட்டு), சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், டி.எஸ்.பி, எஸ்.பி, கமிஷனர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி.

5. தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக பணி புரியும் போலிசுக்கு எவ்வளவு மாதச் சம்பளம் (தற்போது)? அதனால் தான் அவர்கள் கிம்பளம் வாங்குகிறார்களா?
பதில்: 10 மணி நேரமா, எந்த ஊரில் இருக்கிறீர்கள்? பலர் 36 மணி நேரம் கூட ரிலீவ் செய்யப்படாமல் டியூட்டி பார்க்கிறார்கள். அதையெல்லாவற்றையும் விட இந்த உபயோகமற்ற அரசியல்வியாதிகளுக்காக பாதுகாப்பு, பந்தோபஸ்து ஆகிய வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. அடிநிலை போலீஸ்காரர்கள் தத்தம் மேலதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலையும் செய்ய வேண்டியுள்ளது. இவையெல்லாமுமே அவர்தம் மனோபலத்தை குறைத்து கிம்பளம் வாங்கும் நிலைக்கு தள்ளிவிடுவதிலும் பங்காற்றுகின்றன.

6. அழகிரி அமைச்சராகிவிட்டால் மற்ற மாநிலங்களுக்கு ஏதேனும் செய்வாரா இல்லை குண்டு சட்டியான மதுரையிலேயே இன்னும் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பாரா?
பதில்: அவரது செயல்பாட்டை பார்த்தவுடந்தான் சொல்லவியலும். இப்போதே ஊகிக்க முடியாது.

7. தயாநிதி மாறனுக்கு பதவி கொடுக்காவிட்டால் மீண்டும் சன் டிவி, தினகரன் அம்மா புகழ் பாட ஆரம்பிக்குமா? ஒருவருடம் முன்பு தினகரனில் 'அழகிரி ரவுடி' என்றெல்லாம் எழுதிவிட்டு இன்று அவர் பக்கத்தில் பாராளுமன்றத்தில் அமர்ந்து மத்த எம்பிக்களின் இந்தி பேச்சுக்களை மொழிபெயர்ப்பு செய்யும் நிலை பற்றி தயாநிதி என்ன எண்ணுவார்?
பதில்: என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

8. டி.ஆர்.பாலு துணை சபாநாயகர் ஆகிவிட்டால் எப்படி வரும்படி பார்க்க முடியும்? தமிழ்நாட்டுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ள அவருக்கு ஏன் பதவி கொடுக்க பிளான் இல்லை?
பதில்: துணைசபாநாயகராகவா ஆக்கப் போகிறார்கள்? அடப்பாவமே. அது சரி, என்னதான் இருந்தாலும் அவர் முகவின் குடும்ப உறுப்பினர் இல்லையே.

9. இனிமேல் ஜெ. வைகோ, ராமதாஸ் எல்லாம் - அண்ணன் எப்போ மறைவார் திண்ணை எப்போ காலியாகும் - என காத்திருக்கத்தான் வேண்டும் அல்லவா?
பதில்: தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அடுத்த அசெம்பிளி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறலாம்.

10. இப்போதே ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி வழங்க கருணாநிதி ஏன் இன்னும் தயங்குகிறார்?
பதில்: சொத்தின் மீது தனது பிடியை தளர்த்த எந்த குடும்பத் தலைவருமே தயங்குவார். ஆகவே கருணாநிதி அவர்களை புரிந்து கொள்ள இயலுகிறது.


வஜ்ரா:
1. பிரபாகரனை 22 வருடம் அறிந்த கருணா பார்த்து இது பிரபாகரன் தான் என்று சொல்லியும் சிலர் இன்னும் இது ஸ்ரீலங்காவின் கபட நாடகம் என்கின்றனரே. ஏன்?
பதில்: அறிவுக்கும் இதயத்துக்கும் இடையில் போட்டியென்றால் ஜெயிப்பது அநேகமாக இதயமாகத்தான் இருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததையே ஒப்புக் கொள்ளாது பலர் இருந்திருக்கிறார்கள். ஹிட்லர் இன்னும் உயிருடன் இருந்ததாக ஒரு நம்பிக்கை இருந்ததாலேயே மேற்கு ஜெர்மனியின் அரசு ஹிட்லருக்கு எதிரான கைது வாரண்டை அப்படியே பல ஆண்டுகளுக்கு நிலுவையில் வைத்திருந்தது.

இந்த நிலையில் இந்திய அரசும் ராஜீவ் கொலை வழ்க்கிலிருந்து அவசரப்பட்டு பிரபாகரன் பெயரை விலக்கலாகாது என்பதுதான் எனக்கும் உசிதமாகப் படுகிறது. அதை பிரபாகரனின் மரணம் முழுமையாக நிரூபணம் ஆனபிறகே செய்ய வேண்டும்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/20/2009

பதிவர்கள் கவனத்துக்கு

இந்தப் பதிவில் பதிவர் ஜாக்கி சேகர் கூறுவதை இங்கே தருகிறேன்.

“நான் புகைப்படம எடுக்கும் போது என் வலைதளத்தில் ஓப்பன் செய்ய முடியவில்லை என்றும் அதில் வைரஸ் இருப்பதாகவும் அது என் தமிள் எச்டிஎம்மளை எடுத்து விட சொன்னார்கள். எடத்து விட்டேன் அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் dtsphotography@gmail.com என்ற எனது வலை முகவரியில் தயவு செய்து தெரிவிக்கவும்.”

இப்போது இப்பிரச்சினை பல பதிவுகளில் இருக்கிறது. கூகள் குரோமில் அவர்களது பதிவைத் திறந்தாலே வைரஸ் எச்சரிக்கை வருகிறது, ஆகவே மூட வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு இப்போதுதான் சுரேஷ் குமார் பதிவில் (வதந்திகள் வரும் உலகமடா) இந்த எச்சரிக்கையை கண்டேன். அதே எச்சரிக்கையை வேல் தர்மாவின் “பிரபாவின் இறந்த உடல் - சில சந்தேகங்கள்” பதிவிலும் பார்த்தேன்.

நீங்களும் ஜாக்கி சேகர் போலவே அந்த தமிள் எச்டிஎம்எல் விட்ஜட் மாதிரி ஏதேனும் போட்டிருந்தால் அதை உடனே எடுத்து விடுங்கள். ஏற்கனவேயே இருக்கும் டென்ஷனில் இதெல்லாம் தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2009

எங்கே பிராமணன் - பகுதி 74

பகுதி - 74 (18.05.2009): (வீடியோ லிங்க் கிடைக்கவில்லை)
முரளி மனோகர் கூறுகிறான், பகுதி 74-க்கான லிங்க் இதோ இப்பத்தான் கிடைச்சது என்று. அவனுக்கு என் நன்றி.
அசோக்கைப் பார்க்க டாக்டர்கள் ஹம்சாவும் மார்க்கபந்துவும் வருகின்றனர். அசோக்கை தனக்கு ஆன்மீக விஷயங்களில் குருவாக இருக்குமாறு ஹம்சா கேட்க, அவன் மரியாதையாகவே தனக்கு அதற்கான யோக்கியதை இல்லையென்கிறான். “அன்னிக்கு நடந்த சம்பவத்துக்குப் பிறகு மேடம் ஆன்மீகத்துக்கே மாறிட்டாங்க” என மார்க்கபந்து கூறுகிறார். “ஆண்டவனை அடையும் மார்க்கத்துக்கு போவதே நல்லது” என அசோக் கூறுகிறான். தனது எதிர்காலம் எப்படி இருக்கும் என குழம்பும் ஹம்சாவிடம், எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம் என்பதெல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவையே என்றும் eternity மட்டுமே உண்மை என கூறும் அசோக், அது மனிதமனதின் புரிதலுக்காகத்தான் யுகங்கள், நூற்றாண்டுகள், ஆண்டுகள், மாதங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள், விநாடிகள் என குறுக வைக்கப்பட்டதாகக் கூற இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிதாக இவன் விளக்குகிறானே என ஹம்சா வியக்கிறார். தான் இனிமேல் எப்படி தனது கேஸை டீல் செய்வது என அவர் கேட்க, அவர் சேவை இன்னமும் நோயாளிகளுக்கு தேவை. அவர் படித்த வைத்திய முறைக்கும் குறைவொன்றுமில்லை என அசோக் கூறுகிறான்.

ரமண மகரிஷிக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை தேவைப்பட்டபோது அவர் மயக்க மருந்தை புறக்கணித்து தன் யோக சக்தியால் உயர் நிலைக்கு சென்று வலிக்கு அப்பாற்பட்டவராக தன்னை நிறுத்தி கொண்டார், ஆனால் சாதாரண நோயாளிகள் அதை செய்ய இயலாதததால்தான் அவர்களுக்கு மயக்க மருந்து போன்றவை தேவைப்படுகின்றன என்றும் ஹம்சா தனது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அசோக் கூறுகிறான்.

எல்லோருமே யோகிகளாக மாறிவிட்டால் டாக்டர்களுக்கு வேலை இருக்காது என ஹம்சா குறிப்பிட, ஆகவே அதுவரை டாக்டர்கள் தேவை, அதே போலத்தால் நீதித்துறை, கல்வித்துறை விஷயங்களிலும் என பதிலளிக்கிறான் அசோக். ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யணுமா என ஹம்சா கேட்க, அவர் ட்ரீட் செய்யும் மனோதத்துவ பிரச்சினைகள் சாதாரணமாக ஏழைகளுக்கு வருமா என அவன் எதிர்க்கேள்வி போட, அவர் யோசித்து பார்த்து விட்டு தன்னிடம் நோயாளிகளாக வருபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே எனக் கூறுகிறார். அதற்குக் காரணமே பணம் பெறும் முயற்சியில் அவர்கள் அதிகம் ஈடுபடுவதால், அதன் மேல் அட்டாச்மெண்ட் ஏற்படுகிறது, அதுவே மற்ற குழப்பங்களுக்கு இட்டுச் செல்கிறது என அசோக் கூறுகிறான்.

சோவின் நண்பர் அட்டாச்மெண்ட் இல்லாம மனிதன் இருக்க முடியுமா என வியக்க, சோ அவருக்கு இது சம்பந்தமாக பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருச்சுனனுக்கு கூறியதை சொல்கிறார். பற்று ஆசைக்கு வழிவகுக்கிறது. ஆசையால் உருவாகும் கோபம், அதன் மூலம் வருவது வெறியாகிய பெருமோகம், ஆகவே நாம் காண்பது நல்ல நினைவுகள் இல்லாமை, அதன் விளைவு புத்தி நாசம், அது அழைத்து வருவது பூரண அழிவு. ஆகவே பற்றில்லாமலேயே இருத்தல் அவசியம். அவாறு இருந்தால் இருக்கும் சுகங்களை அனுபவித்தாலும் தவறில்லை. இந்த நிலைய அடைய முடியாது என்றில்லை, ஆனால் அதை அடைய பெரும் பயிற்சி தேவைப்படும். என்னுடையது என்னும் எண்ணம் ஒழிய வேண்டும். அது ஜனகரால் முடிந்ததால்தான் மிதிலை எரிந்த போதும் அவர் பாட்டுக்கு வேதாந்த ஆராய்ச்சி செய்த வண்ணம் இருந்தார்.

அசோக் தொடர்கிறான். பக்கத்து வீட்டில் சாவு ஏற்பட்டால் ஐயோ பாவம் என கூறிவிட்டு நம் காரியங்களை கவனிக்க முடிந்த நம்மால் அதே சாவு நம் வீட்டில் ஏற்பட்டால் அதே விட்டேத்தியான மனோபாவம் வருமா? அப்படி வந்தால் ஞானி என கொள்ளலாம். தூரத்தில் இருந்து இம்மூவர் பேசுவதை எல்லாம் “இது என்ன கூத்து” என்னும் முகபாவத்துடன் பார்த்த வண்ணம் இருக்கின்றனர் நாதனும் வசுமதியும். இப்படியே போனால் இவன் ஜே.கே. மாதிரி கிளாஸ் எல்லாம் எடுக்க ஆரம்பித்து விடுவானோ என சலிப்புடன் நாதன் கூற, அது யார் ஜே.கே. என வசுமதி கேட்கிறாள். அவளிடம் ஜே.கே. என்னும் ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி விளக்குகிறார்.

இந்த இடத்தில் டோண்டு ராகவன் ஒன்று கூற ஆசைப்படுவான். No general is hero to his butler; no man is hero to his mistress; a prophet gets his worst detractors from among his own kith and kin என்றெல்லாம் பலர் பலமுறை கூறியுள்ளனர். இது ஒரு மனோதத்துவ பிரச்சினையே. John the Baptist தனக்கு முன்னால் கூடியிருந்த மக்களின் நடுவில் முதன் முறையாக ஏசுவை ரட்சகராக அடையாளம் கண்டு எல்லோருக்கும் அடையாளம் காட்டி, அவரை தன்னிடம் வரச்சொல்லி அவருக்கு ஞானஸ்நானம் செய்தபோது, ஏசுவின் அண்டை வீட்டார் “இது நம்ம தச்சன் ஏசு அல்லவா, இவனா ரட்சகனாக இருக்கமுடியும்” என ஐயப்பட்டு அதை வார்த்தைகளில் வெளியிடவும் செய்தனராம். இதை இங்கே எதற்கு சொல்கிறேனென்றால் அதுவும் மனித இயற்கைகளில் ஒன்று என்பதை தெளிவு படுத்தத்தான். போயும் போயும் நாம் பார்த்து வளர்ந்த பையன், அவனா மகான் என உறவினர்கள் வியப்பது போலத்தான்.

நீலகண்டன் வீட்டுக்கு வரும் பாகவதர் பர்வதத்துடன் உமா அசோக் விஷயம் பற்றி கவலையுடன் பேசுகிறார். பர்வதமும் கவலையுடன் என்ன செய்வது என தானும் தனது கணவர் நீலக்ண்டனும் திகைப்பதாகவும், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமலும் திகைப்பதாகக் கூறுகிறாள். பத்ம வியூகத்தில் சிக்கிக் கொண்டதாக தான் உணர்வதாக அவள் உரைக்கிறாள்.

“அது என்ன பத்மவியூகம், நான் நிறையதடவை அச்சொல்லை கேட்டுள்ளேன். அப்படி என்றால் என்ன”? என சோவின் நண்பர் கேட்கிறார். மகாபாரதத்தில் 14-ஆம் நாள் யுத்தத்தில் துரோணர் தலைமையில் கௌரவ சேனை. யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்துத் தருவதாக அவர் துரியனுக்கு வாக்கு தந்திருக்கிறார். அருச்சுனனை திசை திருப்பி சம்சப்தகர்கள் அவனுடன் சண்டையிட அவனை போர்முனையின் இன்னொரு கோடிக்கு அழைத்து சென்று விட்டனர். இங்கே துரோணர் பத்மவியூகம் அமைக்கிறார். அதில் உள்ளே நுழைந்து வெளியே வரும் வழி தெரிந்தது இருவர் மட்டுமே, அருச்சுனன் மற்றும் கிருஷ்ணர். உள்ளே மட்டும் நுழையத் தெரியும் ஆனால் வெளியில் வரத்தெரியாது என்னும் நிலையில் அருச்சுனனின் வீரமைந்தன் அபிமன்யு. அவனிடம் யுதிட்டிரன் உதவி கேட்க, இந்த உண்மையை அவன் உரைக்கிறான். அவன் உள்ளே நுழைந்தால் போதும், பின்னாலேயே தாங்களும் புகுந்து விடுவதாக யுதிட்டிரர் கூற அவ்வாறே செல்கிறான் சுபத்திரா மைந்தன். ஆனால் அவன் பின்னால் மற்றவர்கள் செல்லும் முன்னமேயே பத்ம வியூகத்தில் அவனால் உருவாக்கப்பட்ட திறப்பு கௌரவ வீரர்களால் அடைக்கப்படுகிறது. உள்ளே கோர யுத்தம் புரிந்து வீரமரணம் எய்துகிறான் அபிமன்யு. அதிலிருந்து ஏதேனும் ஒரு விவகாரத்தில் எக்கச்சக்கமாக உள்ளே நுழைந்து வெளியேறும் வழி இன்றி இருப்பதைத்தான் பத்மவியூகத்தில் சிக்கியது மாதிரி என்பார்கள். இதே பத்ம வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி அபிமன்யுவுக்கு எவ்வாறு தெரியாமல் போயிற்று என்பதற்கான ஒரு சுவாரசியமான கதையையும் சோ அவர்கள் கூறுகிறார்.

பாகவதர் மேலே பேசுகிறார். அசோக் மிகவும் மன வலிமையுடையவன். ரம்பா ஊர்வசி போன்ற தேவ அழகிகிளாலும் அவனை மயக்கவியலாது என பாகவதர் கூற, தன் பெண்ணை அவர்களுடன் அவர் ஒப்பிடுவதற்காக தன் வருத்தத்தை வெளிபடுத்துகிறாள் பர்வதம். தான் சொல்ல வந்ததே வேறு, உமாவின் நோக்கம் நிறைவேறாமல் அவள் பெரிதும் ஏமாற்றமடைவதை தடுக்கவே தான் அவ்வாறு கூறியதாக பாகவதர் சொல்ல, அவள் அரைமனதுடன் ஏற்கிறாள். தான் உமாவுடன் இது பற்றி பேச விரும்புவதாக பாகவதர் கூற, பர்வதம் அவளை கீழே அழைத்து பாகவதருடன் பேசச் சொல்கிறாள்.

உமாவிடம் தான் பர்வதத்திடம் சொன்னதையே பாகவதர் கூறி, அவளை இம்முயற்சியை கைவிடுமாறு கூறுகிறார். அசோக்கை சைக்கியாட்ரிஸ்டிடம் அழைத்து செல்ல எல்லோரும் செய்த முயற்சியெல்லாம் பலிக்காமல் போனதில் தான் மட்டும் அவனை அதற்கு சம்மதம் சொல்லவைத்ததை உமா சுட்டிக்காட்டுகிறாள். தான் அவனை காதலிப்பதாகவும் தனது காதல் அவனை வசப்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கிறாள். ஜெயிக்கப்போவது அவனது பிரும்மச்சரியமா அல்லது தனது வைராக்கியமா என்பதை இப்போதே அறுதியிட்டு கூறவியலாது என்பதைய்ம் சுட்டிக் காட்டுகிறாள். அது காதல் எல்ல, வெறும் இன்ஃபாசுவேஷன் என பாகவதர் கூறுகிறார். நெருப்போடு அவள் விளையாடலாகாது எனவும் பாகவதர் எச்சரிக்க, நெருப்பைக் கண்டு தான் பயப்படவில்லை எனவும், நெருப்புக்குத்தான் ஏதேனும் ஆகிவிடப்போகிறதோ என பாகவதர் தவிப்பதாகத்தான் தனக்கு தோன்றுகிறது எனக்கூறுகிறாள் உமா. அவ்வாறெல்லாம் நினைப்பதை விடுத்து தனக்கு ஆசி வழங்குமாறு கூறி, சரேல் என அவர் பாதம் பணிந்து அப்பால் செல்கிறாள் அந்த சுட்டிப் பெண்.

பாகவதர் திகைக்க, அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பர்வதமும் பாகவதரிடம் வந்து தன் பங்குக்கு அங்கலாய்க்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது