4/08/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 64 & 65)

எபிசோட் - 64 (07.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சோ அவர்கள் ஹிந்து மதத்தின் பெருமைகளை மேலும் அடுக்கிக் கொண்டு போகிறார். மற்ற மதங்களில் அந்த மதத்துக்காரர்கள் நம்புவதற்கென்று ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நிறுவிவிடுவார்கள். அதைத்தான் நம்ப வேண்டும், மற்ற தெய்வங்களை நம்பலாகாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்

(சீரியலில் சொல்லாது டோண்டு ராகவன் சேர்ப்பது இப்போது.
பத்துக் கட்டளைகளில் இது சம்பந்தமாக ஜேம்ஸ் மன்னன் பதிப்பு விவிலியத்திலிருந்து பெறப்பட்டவை பின்வருமாறு.
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளாவன;
(1) உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. (2) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (3) மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; (4) நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். (5) என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். (6) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்).

இது சரியா தவறா என்பதற்குள் நான் போகவில்லை, ஆனால் ஹிந்து மதத்தில் அவ்வாறு இல்லை என்று மட்டும் சொல்ல வேண்டும். அதாவது முழு சுதந்திரம். கீதையில் அருச்சுனனிடம் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்றால், யார் எந்த தெய்வத்தைத் தொழுதாலும் அத்தனையும் தன்னையே வந்து சேரும் என்று. ஆகவே அவர் பொறாமை பிடித்த கடவுள் (jealous God) இல்லை. அதே போல இவ்வளவு ஞானத்தையும் அருச்சுனனுக்கு வழங்கி விட்டு அவன் அதையெல்லாம் ஏற்பதும் ஏற்காததும் அவனது முடிவுக்குட்பட்டே என்றும் கூறுகிறார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், தற்கால ஆரியசமாஜத்தினர் சிலர் செய்வதை தவிர்த்து ஹிந்து மதத்துக்கு மதமாற்றம் மூலம் ஆள் சேர்ப்பது என்பது நமது சாஸ்திரப்படி கிடையாது. ஒருவன் பிறப்பால் ஹிந்து அல்லது ஹிந்து அல்ல, அவ்வளவுதான். (டோண்டு ராகவன் சேர்ப்பது: இஸ்ரவேலர்களின் யூத மதமும் அவ்வாறுதான்)

மொத்தத்தில் ஹிந்து மதம் ஒரு மஹாசமுத்திரம் என்றும் தான் அதன் கரையோரம் நின்று வெறுமனே கால்களை நனைப்பவன் என்றும், அதிலேயே தனக்கு பல விஷயங்கள் புலப்படுகின்றன எனவும் சோ கூறுகிறார்.

பார்வதி ஷோபனாவின் பேச்சு தொடர்கிறது. தான் தன்னிடம் சாரியார் சொன்னபடி காஞ்சி காமாட்சியிடம் “எனது ஆரோக்கியம், வியாதி ஆகிய இரண்டையும் நீ எடுத்துக் கொள், எனக்கு உன்னையே தந்து விடு” வேண்டிக் கொண்டதுமே தனக்குள் ஏதோ சக்தி புகுந்து கொண்டது மாதிரி உணர்வு வந்ததென்றும், அப்படியே அங்கேயே தான் மயங்கி வீழ்ந்ததாகவும், சென்னைக்கு வந்து மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டதில் தன்னுடைய கேன்சரில் பின்னடைவு (regression) வந்ததாகவும் பார்வதி கூறுகிறாள். தனக்கு 75% குணமாகி விட்டதாகவும் அது முழுக்க முழுக்க காமாட்சியின் கருணை என்றும், மீதி 25% குணம் பெற தனது நம்பிக்கை இன்னும் பலப்பட வேண்டும் என்று அவள் ஷோபனாவிடம் கூறுகிறாள்.

சாம்பு சாஸ்திரிகளின் இரண்டாம் மகன் சந்துரு தான் அக்கௌண்டண்டாக வேலை செய்யும் கேட்டரரின் பிள்ளை பட்டபிக்கு தன் தங்கை ஆர்த்தியை மணம் முடிக்கலாம் என சாம்புவிடம் ஆலோசனை கூற, அவரும் ஆர்த்தியின் ஜாதகத்தை எடுத்து கொண்டு வருகிறார். பட்டாபி அதை அடுத்த அறையிலிருந்து ஆவலாக கவனிக்கிறான். ஆர்த்தியின் போட்டோவை பெற்றுக் கொண்ட கேட்டரர் தன் மகன் பட்டாபியின் போட்டோவை பின்னால் அனுப்புவதாக கூற, பட்டாபியோ தனது மொபலிலிருந்து சந்துருவின் மொபைலுக்கு ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் அனுப்புவதாக முடிவு செய்து கொள்கிறான்.

வையாபுரியின் சகோதரர் தங்கள் தொகுதியில் நின்று வெற்றிபெற கைலாஷ் நகரவாசிகள் ஒத்துழைப்பதா வேண்டாமா என்பது பற்றி அசோக், சாரியார், ஜட்ஜ் ஜகன்னாதான் ஆகியோர் ஆலோசிக்கின்றனர். தாங்கள் செய்யும் உதவிக்காக அந்த வேட்பாளரை அந்த தொகுதியில் உள்ள பராமரிப்பின்றி பாழாக நிற்கும் கோவில்களின் பராமரிப்பை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும் என்றும் பேசுகின்றனர். எதற்கும் ஜட்ஜ் ஒருவார காலம் அவகாசம் கேட்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 65 (08.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நீலகண்டன் வீட்டில் உமா, பர்வதம், நீலகண்டன், வசுமதி மர்றும் நாதன் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரமேஷின் கைது சம்பந்தமாக இரண்டு குடும்பங்களுக்குமிடையே வந்த மனத்தாங்கல் சற்றே தணிந்து ஒவ்வொரு தரப்பினரும் மாற்று தரப்பினரது நிலைப்பாடு குறித்து புரிதல் தெரிவிக்கின்றனர். அசோக் மாதிஒரியே உமாவும் பேசுகிறாள் என பேச்சு வரும்போது அவள் அசோக்கின் சிஷ்யை, விவேகானந்தருக்கு நிவேதிதா மாதிரி என நாதன் கூறுகிறார். இப்போதெல்லாம் உமா பிறந்த வீட்டில்தான் இருக்கிறாள்.

கேட்டரர் வீட்டிலிருந்து சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு கேட்டரர், அவர் மனைவி மற்றும் பட்டாபி ஆர்த்தியை பெண் பார்க்க வந்திருக்கின்றனர். அவள் மன்னி பிரியாவும், அண்ணன் கிருபாவும் கூட வந்திருக்கின்றனர். க்ஜட்ஜ் வீட்டில் சாம்பு வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதை ஊகித்து பேசுகின்றனர். காட்சிகள் மாறி மாறி ஒரு தொடர்ச்சியோடு காட்டப்படுகின்றன. கல்யாணம் வரும் தை மாதம் வைத்துக் கொள்வதாக முடிவாகி, கேட்டரரின் சொந்த கல்யாண மண்டபத்திலேயே நடத்தலாம் என தீர்மானமாகிறது.

வேம்பு சாஸ்திரிகள் தெருவில் செல்லும்போது மயக்கம் அடித்து கீழே விழுகிறார். அருகில் வந்த சிங்காரம் அவரைத் தாங்கி தன் கையில் இருக்கும் பாட்டிலில் தன்ணீர் அளிக்கிறான். அவரும் குடிக்கிறார். ஒரு ஆசாரம் பார்க்கும் வைதீக பிராமணர் சிங்காரம் போன்ற வேர்று சாதிக்காரனிடம் தன்ணீர் கேட்டு குடிக்கலாமா என சோவின் நண்பர் கேட்க, உயிர் ஆபத்து என வரும்போது அதை செய்யலாம் எனக்கூறி, ஒரு ரிஷியும் அவர் மனைவியும் உயிர் போகும் தருவாயில் ஒரு யானைப்பாகனிடமிருந்து கொள்ளை வாங்கி உண்டதையும், உயிருக்கு அபாயம் நீங்கியவுடன் மேலே அவனிடமிருந்து குடிக்க தண்ணீர் வேண்டாம் என்பதையும் கூறுகிறார்.

வேம்புவின் வீட்டுக்கு அவரை சைக்கிளில் வைத்து அழைத்துவரும் சிங்காரம், அவரது வீடு மாற்றுவது சம்பந்தமான பிரச்சினையை கண்டறிகிறான். அவன் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வதாகக் கூறிவிட்டு அசோக்கை அனுப்புகிறான். அசோக்கும் அவரிடம் வந்து தங்கள் வீட்டில் பூஜை செய்யும் வேலையை அவருக்கு வாங்கித் தருவதாகவும், வீட்டுக்கு பின்னால் உள்ள அவுட்ஹவுஸிலேயே அவர் தங்கவும் ஏற்பாடு செய்வதாகவும் கூற, வேம்பு அவனது ஆஃபருக்கு நன்றி தெரிவித்து விட்டு, உதவியை மறுத்து விடுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/07/2010

தியாகம் versus அசட்டுத் தியாகம்

தியாகம் செய்வதுதான் அல்லாவுக்கு பிடித்தமான செயல் என்பது ஒரு பிரசித்தி பெற்ற இசுலாமிய சொலவடை. அதை தேனினும் இனிய உருதுவில் குர்பானி என குறிப்பிடுவார்கள்.

சமீபத்தில் 1980-ல் வந்த உருது படம் குர்பானியில் வரும் குர்பானி குர்பானி குர்பானி, அல்லா கோ ப்யாரீ ஹை குர்பானி என்னும் இந்த இனிய பாடலைக் கேளுங்கள். கதை கூட ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்காக செய்யும் உயிர்த்தியாகத்தில்தான் முடிகிறது.

தியாகத்தின் பெருமை பல கலாசாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது. ஹாரி பாட்டர் கதையே தியாகத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அவனைக் காப்பாற்ற அவன் அன்னை கைவசம் மந்திரக்கோல் இல்லாத நிலையில் கூட வோல்தமோற் எதிரில் நின்று அவன் உயிருக்காக இறைஞ்சுகிறாள். தன் உயிரையும் இழக்கிறாள். அடுத்த நொடியில் ஒரு வயது குழந்தை ஹாரி பாட்டரை நோக்கி வோல்தமோற் மந்திரக்கோலை நீட்டி குழந்தை சாவதற்கான மந்திரம் சொல்ல, அது அவனையே பீடிக்கிறது. உயிர் ஒட்டிக் கொண்டிருந்தாலும் மிக க்ஷீண நிலையை அடைகிறான். பிறகுதான் அவனுக்கு தெரிகிறது, ஹாரியின் அன்னையின் உயிர்த்தியாகம் குழந்தைக்கு கவசமாக அமைந்தது என்று. அதை பற்றி பல முறை அலுப்புடன் பேசி இந்த மிக பழமையான மந்திரசக்தியை அலட்சியப்படுத்தியதற்கு நொந்து போகிறான்.

ஏழாவது புத்தகத்தில் ஹாக்வேர்ட்ஸ் பள்ளியில் வோல்தமோறுக்கு எதிரான கடைசி போரில் அத்தனை நல்ல மந்திரவாதிகளின் சார்பாகவும் ஹாரி தன்னுயிரையே பயணம் வைக்கிறான். கதையில் உணர்ச்சிகரமான கட்டங்களில் முக்கியமானது இதுவே. ஆனால் அவனும் இறக்கவில்லை, அதே சமயம் அவன் செய்த தியாகம் பள்ளியில் உள்ள அனைவரையுமே காக்கிறது. அந்த கடைசி சண்டையில் அவன் வோல்தமோறுக்கு இதை எடுத்துக் கூற, அப்போதும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியே புரிந்து கொண்டிருந்தாலும் அது அவனைப் பொருத்தவரையில் டூ லேட் என்பதுதான் நிஜம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை என செயல்பட்ட ஸ்னேப் தியாகத்துக்கு இன்னொரு உதாரணம்.

இன்று ஜூனியர் விகடனில் தங்கள் ஆசிரியரின் உடல்நலம் வேண்டி அவரது மாணவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு பிரார்த்தனை நிறைவேற்றியதை பற்றிய ஒரு அருமையான கட்டுரை வந்துள்ளது (“அன்புடையார் எல்லாம்”, ஜூனியர் விகடன் 11.04.10 இதழ், பக்கம் 29). ஆசிரியரும் குணமடைந்து விட்டார், மருத்துவர்களே அதிசயிக்கும் அளவுக்கு.

இம்மாதிரியான தியாகங்கள் பிரதிபலன் ஏதும் எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை. மனப்பூர்வமாக சுய விருப்பத்துடன் செய்யப்படுகின்றன. ஆனால் ஒன்று ரொம்ப முக்கியம். இத்தியாகத்தை சகட்டுமேனிக்கு செய்ய முடியாது. அதாவது கோலங்கள் அபி, தொல்காப்பியன்கள் செய்தது போல. அவை அசட்டுத் தியாகத்தின் கீழ் வரும். அம்மாதிரி ஏமாந்த சோணகிரிகள் செய்யும் தியாகத்தின் பலனை பெறுபவர்களோ என்னமோ இது தங்களது உரிமை என்ற ரேஞ்சுக்கு நடந்து கொள்வார்கள்.

வேறு வழியில்லை என்னும்போதுதான் தியாகம் செய்ய வேண்டும். அதற்கான நல்ல மனநிலையும் முக்கியமே.

பல படங்களை/சீரியல்களை இம்மாதிரி அசட்டு தியாகங்கள் வருகின்றன என்ற ஒரு காரணத்துக்காகவே நான் பார்க்காமல் இருந்திருக்கிறேன். சுமைதாங்கி, குலவிளக்கு, தியாகம், ஆறிலிருந்து அறுபது வரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிலும் முக்கியமாக குடும்பத்தின் மூத்த மகனோ மகளோ தனக்கென ஏதும் செய்து கொள்ளாது தம்பி தங்கைகளுக்காவே உழைப்பதாக காட்டினாலே எனக்கு டைரக்டர் மேல் கோபம் பற்றிக் கொண்டு வரும். அரங்கேற்றம் படத்தையே எடுத்து கொள்வோமே. மூத்த பெண் உயிரை கொடுத்து வேலை பார்த்து, விபசாரம் கூட செய்து குடும்பத்துக்காக பணம் அனுப்ப, அவள் பெற்றோர் வெட்கமேயில்லாமல் ஒரு புது குழந்தையை உருவாக்கும் முயற்சியில் இருப்பார்கள். கடைசியில் காரியம் எல்லாம் முடிந்ததும் மூத்த பெண்ணை பைத்தியமாக வைத்து விடுவார்கள்.

இம்மாதிரி தருணங்களில் எல்லாம் எனது கோபம் முழுக்க முழுக்க அந்த அசட்டு தியாகிகள் மேல்தான்.

ஆக, நான் கூற நினைப்பது? தியாகம் என்பது டீஃபால்ட்டாக தவிர்க்க வேண்டிய விஷயம். அப்படியே செய்ய நினைத்தாலும் யாருக்காக தியாகம் செய்கிறோமோ அவர்கள் அதற்கு லாயக்கானவர்களாக இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 62 & 63)

எபிசோடு - 62 (05.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இந்த எபிசோடில் நிகழ்வுகள் என்று பார்த்தால் ரொம்பவும் குறைவுதான். ஆரம்பத்திலேயே சோ அவர்கள் சாரியாரின் தென்கலை நாமம் சரியான முறையில் காட்டப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டு வருத்தம் தெரிவிக்கிறார். பிறகுதான் எபிசோடே தொடங்குகிறது.

கைலாசநகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார் வையாபுரியின் சகோதரர். அவருக்கு பிரச்சாரம் செய்யும்படி அசோக்கை கேட்டுக் கொள்ள அவர் சிங்காரத்துடன் கூட வருகிறார். சிங்காரம் அசோக் தங்கியிருக்கும் வேதபாடசாலைக்கு அவரை அழைத்து வந்திருக்கிறான். அசோக்குக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன். வையாபுரி தனது கோரிக்கையை வைக்கிறார். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அசோக் ஏன் தமிழுடன் வடமொழிச் சொற்களை இவ்வாறு கலந்து பேசுகிறான் என கேட்கிறார்.

அதானே இது என்ன பிராப்ளம், டமிலோட சான்ஸ்கிரீட்டை ஏன் மிக்ஸ் செய்யணும்னு சோவின் நண்பர் கேட்கிறார். நண்பர் பேசிய வாக்கியத்தைல் அவர் ஆங்கிலத்தை மிக்ஸ் செய்ததை சோ கிண்டலுடன் சுட்டிக் காட்டி விட்டு மேலே பேசுகிறார். வடமொழி தமிழுடன் ஏற்கனவே ஒன்றி விட்டது என சோ சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலம் போன்ற மொழியிலும் இலத்தீனம், ஜெர்மன், ஃபிரெஞ்சு சொற்கள் தாராளமாக புழலுவதையும் அவர் மேற்கோளாக காட்டுகிறார். தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ள வடமொழிச் சொற்களை அவர் காலகட்டம் வாரியாக வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

அசோக்கும் கிட்டத்தட்ட அதே தொனியில் வையாபுரியின் சகோதரருக்கு தெரிவிக்கிறான். பிறகு அவர் கேட்ட ஆதரவை தன்னால் தன்னிச்சையாக தரவியலாதென்றும், கைலாசநகர்வாசிகளையும் கலந்து பேச வேண்டும் எனக்கூறி அவர்களுக்கு விடையளிக்கிறான்.

உமா வீட்டுக்கு போலீஸ் வந்து ரமேஷை கைது செய்து போகின்றனர். உமா அமைதியாக இருக்க, மற்றவர்கள் பதட்டமடைகின்றனர்.

(தேடுவோம்)

எபிசோடு - 63 (06.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்புவின் தமக்கை மகாதேவ பாகவதரை எதேச்சையாக சந்திக்கிறாள். அவரிடம் வேம்புவுக்கு வீடு காலி செய்ய வேண்டிய பிரச்சினையை கூறிவிட்டு, வேம்பு தனது மனைவி சுப்புலட்சுமிக்காக ஒன்றுமே சேர்த்து வைக்கவில்லை என கூற, பாகவதருக்கு சுருக்கென படுகிறது. தானும் தனது மனைவி ஜானகிக்கு ஒன்றுமே சேர்த்து வைக்கவில்லை என வருந்துகிறார்.

நீலகண்டன் வீட்டில் அவரும் பர்வதமும் அசோக்கை காட்டிக் கொடுத்ததற்காக உமாவை சாடுகின்றனர். இதற்கெல்லாம் அசோக்கின் தூண்டுதலே காரணம் என பர்வதம் அபிப்பிராயப்படுகிறாள். கடைசி முடிவு தன்னுடையதே என உமா தெளிவுபடுத்துகிறாள். ரமேஷுக்கு அவமான என்பது உண்மையானாலும், அவன் மனைவி என்ற ஹோதாவில் தனக்கும் அதே அவமானம்தானே எனவும் அவள் கூறுகிறாள்.

பாகவதர் வீட்டில் அவர் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார். அவரது மருமகள் ராஜி விஷயம் அறிந்து கொண்டு மேலும் அவரை குத்திக் காட்டிப் பேசுகிறாள். அவர் தனிமையில் அமர்ந்திருக்க, மெதுவாக வீட்டில் எல்லா அறைகளிலும் விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக அணைகின்றன.

சிகாமணி முதலியாரின் பெண்கள் பார்வதியும் ஷோபனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஷோபனாவின் மாமனார் சாரியாரின் அறிவுரைப்படி பிரார்த்தனையில் ஈடுபட்டதில் தனது புற்றுநோய் குணமாகும் அறிகுறிகள் தென்படுகின்றன என அவள் குதூகலிக்கிறாள். பல ஆன்மீக புத்தகங்களை படித்ததில் இந்து மதத்தின் பெருமையை உணர்ந்ததாக அவள் கூறுகிறாள்.

அது என்ன சார் மத்த மதங்களில் இல்லாத பெருமை இந்து மதத்துக்கு என சோவின் நண்பர் கேட்க, மற்ற மதங்களை பற்றி இப்பெண் பேசவேயில்லை, இந்து மதம் பெருமை வாய்ந்தது என்று மட்டும் கூறுகிறாள் என சோ தெளிவுபடுத்துகிறார். பிறகு அவர் இந்து மதத்தின் பெருமைகள் பற்றி விளக்குகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/05/2010

நீயும் நானும் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பு

Disclaimer: This is a politically incorrect post.

இப்பாடல் இது குறுந்தொகையில் வருவதாக அறிகிறேன்.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"


"உன் தாய்க்கும் என் தாய்க்கும் என்ன தொடர்பு? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்? நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் பார்த்து கொண்டது இல்லையே. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன" என்பது இப்பாடல்.

ஆனால், சங்ககாலத்து காதலுக்கு உதாரணமாக இதை உணர்ச்சிவசமாகப் பேசி விளக்கும் தமிழாசிரியர்கள், இலக்கியச் செம்மல்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் ஞாபகமாக தத்தம் மக்களுக்கு திருமணம் செய்துவைக்க முனையும்போது மட்டும் கீழ்க்கண்ட பாடல் கூறிய ரேஞ்சுக்கே செயல்பட விருபுவர்.

உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லூர்
நீயும் நானும் ஒரே மதம் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட
உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள் மைத்துனன்மார்
எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடைய நெஞ்சம் கலந்தனவே.


மேலே குறிப்பிட்டுள்ள கவிஞர் மீரா (மீ.ராஜேந்திரன்)வின் புகழ் பெற்ற வரிகள் கேட்கத் தமாஷாக இருந்தாலும், அவற்றில் உள்ள யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அவரே அதை உணர்ந்துதான் மனம் நொந்து பாடியுள்ளார் என நினைக்கிறேன். ஆகவே மேலே குறிப்பிட்ட தமிழாசிரியர்கள், இலக்கியச் செம்மல்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரும் அதைச் செய்வதில் என்ன ஆச்சரியம்?

செய்யட்டும், அதில் ஆட்சேபமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் அதை அறிவுறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதைக் கேட்டால் மட்டும் ஆட்டோக்கள் அனுப்பப்படும்.

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. அது ஆணின் குடும்பத்தையும் பெண்ணின் குடும்பத்தையும் வெளிப்படையாக/மறைமுகமாக இணைக்கும் சங்கிலிகளை உள்ளடக்கியது. ஆகவே இதில் போய் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அக்கறையின்றி பேசாமல் பொறுப்புணர்ச்சியுடன் பேசுதல் நலம்.

நம்ம ஜெயமோகன் சாதி அமைப்பு பற்றி எழுதிய பதிவு வரிசையில் ஒரு இடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் சொன்னவற்றை இங்கு முதற்கண் விவாதத்துக்கு வைக்கிறேன்.

“சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.

ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவர்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்”.

===========================================================================================

“இந்தக் கோணத்தில்தான் நாம் காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.
காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.
இந்திய சமூகம் மீது நெடுங்காலமாக நிகழ்ந்த பல அன்னியத் தாக்குதல்களை வெல்லவும் தாக்குபிடிக்கவும் அது உதவியிருக்கிறது. மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழில்குழுவாகத் திரண்டு ,ஒரே உடலாக தங்களுக்கு வாழ்க்கை விடுத்த கடுமையான சவால்களை சமாளிக்க சாதியமைப்பு வழியமைக்கிறது. ஆகவே மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உதவி இல்லாமலேயே மக்கள் தங்களை சிறிய சுயநிர்வாக அமைப்புகளாக தொகுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள சாதி உதவியிருக்கிறது. சாதியாசாரங்களும் சாதிவிதிகளும் அவ்வாறு உருவாகி வந்தவையே”.


நான் கூறவருவது இதுதான். இப்போது கூட கல்யாணங்களை பெற்றோர்கள் நிச்சயிப்பது என வந்தால் சொந்த சாதியில்தான் பென்ணோ பிள்ளையோ தேடுவார்கள். ஏனெனில் கைவசம் இருக்கும் சௌகரியமான ஏற்பாட்டை மீறிக்கொண்டு ஏன் தூரத்தில் இருக்கும் ஏதோ கற்பனை சமத்துவம் எல்லாம் பார்த்து, பிறரிடம் நல்ல பெயர்/சான்றிதழை கோரி (அந்த சான்றிதழை வைத்துக் கொண்டு நாக்கைக்கூட வழிக்க முடியாது) செயல்பட வேண்டும் என நினைக்க வேண்டும் என்பthee பெரும்பாலானோரது எண்ணம். அதில் தவறில்லை எனச் சொல்வதே இப்பதிவு.

எழுத்தாளர் எஸ்.வி.வி. அவர்கள் சென்ற நூற்றாண்டு முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பிரசித்தி பெற்றவர். அவரது நாவல்களைப் பார்த்தால் காதலனும் காதலியும் எது எப்படியானாலும் ஒரே சாதியைத்தான் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களை வைத்துத்தான் கவிஞர் மீரா அவர்கள் நொந்து போய் அக்கவிதையை எழுதியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் ஏன் மனம் நோக வேண்டும் எனத் தெரியவில்லை. அவரவர் நலனை அவரவர்தானே பார்த்துக் கொண்டு போக வேண்டும்? அதை செய்பவர்களை பார்த்து இவர் ஏன் மனம் நோக வேண்டும்?

சொந்த சாதியில் திருமணமோ, கலப்புத் திருமணமோ கேஸ் பை கேஸ் ஆக பார்க்க வேண்டியனவே. இதில் மூன்றாம் மனிதர்களுக்கு என்ன வேலை? எல்லா ஆப்ஷன்களும் இருக்கட்டும்.

திருமணத்துக்கு தயாராகும் இளைஞர்களும் பெண்களும் இதையும் சிந்தித்துப் பார்த்து தத்தம் நலனுக்கு ஏற்ப செயல்படுவதே புத்திசாலித்தனம். அப்படியும் கலப்பு மணம் செய்தால் அது உங்களுடைய சொந்த முடிவாகத்தான் இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது