4/08/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 64 & 65)

எபிசோட் - 64 (07.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சோ அவர்கள் ஹிந்து மதத்தின் பெருமைகளை மேலும் அடுக்கிக் கொண்டு போகிறார். மற்ற மதங்களில் அந்த மதத்துக்காரர்கள் நம்புவதற்கென்று ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நிறுவிவிடுவார்கள். அதைத்தான் நம்ப வேண்டும், மற்ற தெய்வங்களை நம்பலாகாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்

(சீரியலில் சொல்லாது டோண்டு ராகவன் சேர்ப்பது இப்போது.
பத்துக் கட்டளைகளில் இது சம்பந்தமாக ஜேம்ஸ் மன்னன் பதிப்பு விவிலியத்திலிருந்து பெறப்பட்டவை பின்வருமாறு.
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளாவன;
(1) உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. (2) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (3) மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; (4) நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். (5) என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். (6) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்).

இது சரியா தவறா என்பதற்குள் நான் போகவில்லை, ஆனால் ஹிந்து மதத்தில் அவ்வாறு இல்லை என்று மட்டும் சொல்ல வேண்டும். அதாவது முழு சுதந்திரம். கீதையில் அருச்சுனனிடம் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்றால், யார் எந்த தெய்வத்தைத் தொழுதாலும் அத்தனையும் தன்னையே வந்து சேரும் என்று. ஆகவே அவர் பொறாமை பிடித்த கடவுள் (jealous God) இல்லை. அதே போல இவ்வளவு ஞானத்தையும் அருச்சுனனுக்கு வழங்கி விட்டு அவன் அதையெல்லாம் ஏற்பதும் ஏற்காததும் அவனது முடிவுக்குட்பட்டே என்றும் கூறுகிறார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், தற்கால ஆரியசமாஜத்தினர் சிலர் செய்வதை தவிர்த்து ஹிந்து மதத்துக்கு மதமாற்றம் மூலம் ஆள் சேர்ப்பது என்பது நமது சாஸ்திரப்படி கிடையாது. ஒருவன் பிறப்பால் ஹிந்து அல்லது ஹிந்து அல்ல, அவ்வளவுதான். (டோண்டு ராகவன் சேர்ப்பது: இஸ்ரவேலர்களின் யூத மதமும் அவ்வாறுதான்)

மொத்தத்தில் ஹிந்து மதம் ஒரு மஹாசமுத்திரம் என்றும் தான் அதன் கரையோரம் நின்று வெறுமனே கால்களை நனைப்பவன் என்றும், அதிலேயே தனக்கு பல விஷயங்கள் புலப்படுகின்றன எனவும் சோ கூறுகிறார்.

பார்வதி ஷோபனாவின் பேச்சு தொடர்கிறது. தான் தன்னிடம் சாரியார் சொன்னபடி காஞ்சி காமாட்சியிடம் “எனது ஆரோக்கியம், வியாதி ஆகிய இரண்டையும் நீ எடுத்துக் கொள், எனக்கு உன்னையே தந்து விடு” வேண்டிக் கொண்டதுமே தனக்குள் ஏதோ சக்தி புகுந்து கொண்டது மாதிரி உணர்வு வந்ததென்றும், அப்படியே அங்கேயே தான் மயங்கி வீழ்ந்ததாகவும், சென்னைக்கு வந்து மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டதில் தன்னுடைய கேன்சரில் பின்னடைவு (regression) வந்ததாகவும் பார்வதி கூறுகிறாள். தனக்கு 75% குணமாகி விட்டதாகவும் அது முழுக்க முழுக்க காமாட்சியின் கருணை என்றும், மீதி 25% குணம் பெற தனது நம்பிக்கை இன்னும் பலப்பட வேண்டும் என்று அவள் ஷோபனாவிடம் கூறுகிறாள்.

சாம்பு சாஸ்திரிகளின் இரண்டாம் மகன் சந்துரு தான் அக்கௌண்டண்டாக வேலை செய்யும் கேட்டரரின் பிள்ளை பட்டபிக்கு தன் தங்கை ஆர்த்தியை மணம் முடிக்கலாம் என சாம்புவிடம் ஆலோசனை கூற, அவரும் ஆர்த்தியின் ஜாதகத்தை எடுத்து கொண்டு வருகிறார். பட்டாபி அதை அடுத்த அறையிலிருந்து ஆவலாக கவனிக்கிறான். ஆர்த்தியின் போட்டோவை பெற்றுக் கொண்ட கேட்டரர் தன் மகன் பட்டாபியின் போட்டோவை பின்னால் அனுப்புவதாக கூற, பட்டாபியோ தனது மொபலிலிருந்து சந்துருவின் மொபைலுக்கு ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் அனுப்புவதாக முடிவு செய்து கொள்கிறான்.

வையாபுரியின் சகோதரர் தங்கள் தொகுதியில் நின்று வெற்றிபெற கைலாஷ் நகரவாசிகள் ஒத்துழைப்பதா வேண்டாமா என்பது பற்றி அசோக், சாரியார், ஜட்ஜ் ஜகன்னாதான் ஆகியோர் ஆலோசிக்கின்றனர். தாங்கள் செய்யும் உதவிக்காக அந்த வேட்பாளரை அந்த தொகுதியில் உள்ள பராமரிப்பின்றி பாழாக நிற்கும் கோவில்களின் பராமரிப்பை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும் என்றும் பேசுகின்றனர். எதற்கும் ஜட்ஜ் ஒருவார காலம் அவகாசம் கேட்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 65 (08.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நீலகண்டன் வீட்டில் உமா, பர்வதம், நீலகண்டன், வசுமதி மர்றும் நாதன் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரமேஷின் கைது சம்பந்தமாக இரண்டு குடும்பங்களுக்குமிடையே வந்த மனத்தாங்கல் சற்றே தணிந்து ஒவ்வொரு தரப்பினரும் மாற்று தரப்பினரது நிலைப்பாடு குறித்து புரிதல் தெரிவிக்கின்றனர். அசோக் மாதிஒரியே உமாவும் பேசுகிறாள் என பேச்சு வரும்போது அவள் அசோக்கின் சிஷ்யை, விவேகானந்தருக்கு நிவேதிதா மாதிரி என நாதன் கூறுகிறார். இப்போதெல்லாம் உமா பிறந்த வீட்டில்தான் இருக்கிறாள்.

கேட்டரர் வீட்டிலிருந்து சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு கேட்டரர், அவர் மனைவி மற்றும் பட்டாபி ஆர்த்தியை பெண் பார்க்க வந்திருக்கின்றனர். அவள் மன்னி பிரியாவும், அண்ணன் கிருபாவும் கூட வந்திருக்கின்றனர். க்ஜட்ஜ் வீட்டில் சாம்பு வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதை ஊகித்து பேசுகின்றனர். காட்சிகள் மாறி மாறி ஒரு தொடர்ச்சியோடு காட்டப்படுகின்றன. கல்யாணம் வரும் தை மாதம் வைத்துக் கொள்வதாக முடிவாகி, கேட்டரரின் சொந்த கல்யாண மண்டபத்திலேயே நடத்தலாம் என தீர்மானமாகிறது.

வேம்பு சாஸ்திரிகள் தெருவில் செல்லும்போது மயக்கம் அடித்து கீழே விழுகிறார். அருகில் வந்த சிங்காரம் அவரைத் தாங்கி தன் கையில் இருக்கும் பாட்டிலில் தன்ணீர் அளிக்கிறான். அவரும் குடிக்கிறார். ஒரு ஆசாரம் பார்க்கும் வைதீக பிராமணர் சிங்காரம் போன்ற வேர்று சாதிக்காரனிடம் தன்ணீர் கேட்டு குடிக்கலாமா என சோவின் நண்பர் கேட்க, உயிர் ஆபத்து என வரும்போது அதை செய்யலாம் எனக்கூறி, ஒரு ரிஷியும் அவர் மனைவியும் உயிர் போகும் தருவாயில் ஒரு யானைப்பாகனிடமிருந்து கொள்ளை வாங்கி உண்டதையும், உயிருக்கு அபாயம் நீங்கியவுடன் மேலே அவனிடமிருந்து குடிக்க தண்ணீர் வேண்டாம் என்பதையும் கூறுகிறார்.

வேம்புவின் வீட்டுக்கு அவரை சைக்கிளில் வைத்து அழைத்துவரும் சிங்காரம், அவரது வீடு மாற்றுவது சம்பந்தமான பிரச்சினையை கண்டறிகிறான். அவன் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வதாகக் கூறிவிட்டு அசோக்கை அனுப்புகிறான். அசோக்கும் அவரிடம் வந்து தங்கள் வீட்டில் பூஜை செய்யும் வேலையை அவருக்கு வாங்கித் தருவதாகவும், வீட்டுக்கு பின்னால் உள்ள அவுட்ஹவுஸிலேயே அவர் தங்கவும் ஏற்பாடு செய்வதாகவும் கூற, வேம்பு அவனது ஆஃபருக்கு நன்றி தெரிவித்து விட்டு, உதவியை மறுத்து விடுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Anonymous said...

Thiru Dondu

Correction on Cancer being cured away: They have to mention that as "Remission" and not "Regression"

Regards
-Venkat

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது