4/08/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 46 & 47

பகுதி - 46 (06.04.2009):
அசோக்கின் பூணல் கல்யாணத்துக்கு சிங்காரம் பின்தொடர வையாபுரி வருகிறார். “ஐயர் வூட்டு சாப்பாடு நல்லாருக்கும், வா போய் சாப்பிட்டுடுவோம்” என சிங்காரம் பறக்கிறான். தான் நெட்டுரு செய்து வந்த திருக்குறளை சொல்ல வேண்டியதுதான் தனது கடமை என வையாபுரி கொக்குக்கு ஒன்றே மதி என்பதற்கேற்ப நாதனிடம் சென்று, “அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுகலான்” என்னும் குறளை பிடித்து அதையும் அதன் பொருளையும் நெட்டுரு செய்ததை இங்கு எடுத்து விடுகிறார்.

திருக்குறளில் வருவது போல வேறெங்காவது அந்தணர் பற்றி வருகின்றனவா என சோவின் நண்பர் கேட்க, சோ அவ்வாறு வரும் விவரங்களையெல்லாம் பட்டியலிடுகிறார். அந்தணருக்குரிய அறுதொழில்களை திருவள்ளுவர் குறிப்பிட்டதைக் கூறி அவை என்னென்ன என்றும் கூறுகிறார். அவை மறை ஓதுதல், மறை சொல்லித் தருதல், யாகங்கள் செய்தல், அவற்றைச் செய்வித்தல், தானம் பெறுதல், தானம் அளித்தல் ஆகியவையாகும்.

உமா அசோக்கை பார்க்க வருகிறாள். “எப்படியிருக்கே பிரும்மச்சாரி” என அவ்ள் வேடிக்கைக்காக கேட்க, அதே தொனியில் “நான் நல்லா இருக்கேன் கன்னிகையே” என அவன் பதிலளிக்கிறான். ஆனந்தமாகக் கூட பேசத் தெரியுமா அசோக்குக்கு என உமா வியக்க, ஆனந்தம், பிரும்மானந்தமே மானிடரின் நோக்கம் என அசோக் கூறுகிறான். அசோக்குக்கு பரிசாக ‘யோக வாசிஷ்டம்’ என்னும் புத்தகத்தை உமா பரிசாக அளிக்கிறாள். வசிஷ்டர் ராமருக்கு செய்த உபதேசங்கள் என்று வேறு கூறுகிறாள். அப்புத்தகத்தைக் கையில் எடுத்ததுமே அசோக்கின் முகபாவத்தில் மாறுதல் ஏற்படுகிறது. மெய்சிலிர்த்து நிற்கிறான். என்னவென்று புரியாத உமா கவலையுடன் அவனை அது பற்றி விசாரிக்க, அவன் இப்புத்தகத்தைப் பார்த்ததுமே தனக்குள் ஏதோ பிரளயம் போல ஏற்பட்டது என்கிறான்.

அசோக் இப்புத்தகத்தை பார்த்து இப்படி ஏன் திடுக்கிட வேண்டும் என சோவின் நண்பர் கேட்க, அவன் திடுக்கிடுறான் என்பதை விட அவனுக்குள் பழைய ஞாபகங்கள் கிளர்ந்தெழ முயல்கின்றன எனக் கூறுவதே சரியாக இருக்கும் எனக்கூறுகிறார். இந்த யோக வாசிஷ்டம் வால்மீகி ராமாயணத்து அனுபந்தமாக பிரும்மாவின் ஆக்கிஞைக்கு உட்பட்டு இயற்றியது. வசிஷ்டர் ராமருடைய சந்தேகங்களை தீர்க்கும் முகமாக அவருக்கு உபதேசித்தது எனக் கூற, ராமருக்கேவா சந்தேகம் என நண்பர் கேட்கிறார்.

மகாவிஷ்ணுக்கு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு ரிஷிகளால் மூன்று சாபங்கள் உண்டு என்றும், அவையே ராமாவதாரத்தில் நிறைவேறின என்றும் சோ கூறுகிறார். அதன் பின்புலனை மேலும் விஸ்தாரமாகக் கூறுகிறார். அவற்றின் சுருக்கத்தையே நான் இங்கு தருவேன். நேரடியாக வீடியோ பார்ப்பதே அதிகப் பயனுடையதாக இருக்கும்.

விஸ்வாமித்திரர் தான் செய்யும் யாகத்துக்கு பாதுகாவலாக ராமரை தன்னுடன் அனுப்புமாறு தசரதரிடம் கேட்க, தசரதர் தயங்க, வசிஷ்டர் மன்னரை ஆஸ்வாசப்படுத்தி முனிசிரேஷ்டர் விஸ்வாமித்திரருடன் ராமர் செல்வது ராமருக்குத்தான் நல்லது என எடுத்துக் கூறுகிறார். தசரதரும் அதை ஏற்று, ராமரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். அச்சமயம் ராமர் ஒரு பெரிய மனக்கிலேசத்தில் உள்ளார். இந்த மனித வாழ்க்கையின் பயன் என்ன என்ற அடிப்படையையே ஆட்டுவிக்கும் கேள்வி அவர் மனதை ஆட்கொண்டிருந்தது. அவற்றை ராமர் வெளிப்படையாக கூற, ராமருக்கு வந்திருப்பவை சாதாரண சந்தேகங்கள் இல்லை என்றும் அவற்றை நிவர்த்தி செய்ய சரியான நபர் ராமரது குலகுரு வசிஷ்டரே என்றும் கூறுகிறார் விஸ்வாமித்திரர். முன்னொரு காலத்தில் தானும் வசிஷ்டரும் விவாதம் செய்தபோது பிரும்மதேவர் தம்மிருவருக்கும் உபதேசித்ததையே இங்கு கூறுமாறும் அவருக்கு ஆலோசனை கூறுகிறார் விஸ்வாமித்திரர். அதன்படியே வசிஷ்டர் ராமருக்கு செய்யும் உபதேசம்தான் யோக வாசிஷ்டம் என்னும் பெயரில் உள்ளது என சோ கூறுகிறார். வசிஷ்டர்தான் பரமன் ஆணைப்படி இங்கு அசோக்காக அவதரித்ததையும் அவர் ஞாபகப்படுத்துகிறார்.

சீன் மீண்டும் அசோக் மற்றும் உமாவிடம் செல்கிறது. அசோக்குடன் சேர்ந்து பழகியதில் தானும் பக்தையாகவே மாறிவிட்டதாகவும், ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றதாகவும் உமா கூற, ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமைகள் பற்றி இருவரும் பேசுகின்றனர். மண்ணையும் செல்வத்தையும் ஒன்றாக பாவிக்கும் ராமகிருஷ்ணரின் பெருமையை அசோக் சிலாகிக்க, இங்கு தான் ஒரு முரண்பாட்டைக் காண்பதாக உமா கூறுகிறாள்.

பகுதி - 47 (06.04.2009):
அது என்ன முரண்பாடு என அசோக் கேட்க, உமா பேசுகிறாள். செல்வத்தை எவ்வாறு ஒழிக்க முடியும். அதுவும் ஒரு சக்தியே. பலர் அதை தவறாகப் பிரயோகம் செய்வதாலேயே அதை தீய சக்தி எனக் கூறவியலுமா. உதாரணத்துக்கு செக்ஸால் தொல்லை என்றால், ஒரேயடியாக ஒழிப்பது, அதே போல பிரச்சினைகள் வரும் என்பதால் பல விஷயங்களை வெட்டி எறிவது என்பதே அவள் சிந்தனை. அசோக் பதிலளிக்கிறான். மனிதர்கள் பலவகை, மார்க்கங்களும் அனேகம். பணத்தை துச்சமாக மதிப்பது ஞானியர் செயல், அதை எல்லோராலும் செய்யவியலாது. பல மர்க்கங்கள் இருக்கையில், மனிதர்கள் தமக்கு தேவையான நடுநிலையை எடுத்து கொள்ளலாமே இதில் எங்கிருந்து வருகிறது வெட்டி எறிவது?

நாதன் அசோக்கிடம் அவன் பூணலுக்காக மொய் எழுதப்பட்டு வந்த 50000 ரூபாயை அவனிடம் தந்து, அதை வைத்து ஒரு லேப்டாப் வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். அதனால் அவனது தேடலில் உதவி கிடைக்கும் என்றும் கூறுகிறார். ஒரு கையில் பணத்தையும், இன்னொரு கையில் மண்ணையும் வைத்து ஒரு நிமிடம் பார்க்கும் அசோக், இரண்டையுமே அப்பால் எறிய, பலர் வந்து பணத்தை பொறுக்கிச் செல்கிறார்கள்.

நாதன், நீலகண்டன், பாகவதர் அமர்ந்திருக்க, வசுமதி கைகளைப் பிசைந்த வண்ணம் நிற்க நாதன் மனக்கொதிப்புடன் அசோக்கை அவன் ஏன் அவ்வாறு செய்தான் என கேள்வி கேட்கிறார். தன்னைப் பொருத்தவரை பணமும் மண்ணும் ஒன்றுதான் என்று வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதை நினைத்ததாகவும், அவாறே செய்து பார்த்ததாகவும் அசோக் அலட்டிக் கொள்ளாமல் கூறுகிறான். ஐம்பதாயிரம் ரூபாயில் சமையற்கார மாமி பாடுபட்டு நாற்பதாயிரம் ரூபாய் வரை சேகரித்து வந்து வசுமதியிடம் தந்திருக்கிறார். நீலகண்டன் அசோக்கை நன்கு கோபித்து, கையில் ஒரு பிடி மண்ணை எடுத்துப் போய், அரிசி, பருப்பு ஆகியவற்றை கடைக்காரனிடம் கேட்டு வாங்கி வர முடியுமா என சவாலிட்டு கேட்க, அன்னத்தை உண்ணும் நாம் கடைசியில் மண்ணுக்குத்தான் போகிறோம். ஆக மனிதனை விட மண்ணே உயர்ந்தது என அசோக் கூறுகிறான்.

இதென்ன, இந்த அசோக் பைத்தியமா என சோவின் நண்பர் கேட்க, சோ அவரிடம் அசோக் இப்போது தேடுதலில் இருக்கிறான். பலவற்றை படிக்கிறான் அவற்றை சோதிக்கிறான். அதே போல ராமகிருஷ்ணர் செய்ததையும் அவன் சோதித்து பார்த்தான் அவ்வளவே எனக் கூறுகிரார். எப்போதுமே அசோக் பணத்தை இப்படித்தான் விட்டெறிவான் என்றும் கூறவியலாது எனவும் கூறுகிறார்.

பாகவதர் அசோக் மெதுவாக ஆன்மீகப் பாதையில் செல்வது போல தோன்றுகிறது எனக்கூற, நீலகண்டன் பாகவதரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவரால்தான் அசோக் கெட்டுப் போனான் என குற்றம் சாட்டுகிறார். அதனால் மனம் நொந்த பாகவதர் இனிமேல் தான் நாதன் குடும்பத்திலிருந்து தள்ளி நிற்கப் போவதாகவும், மற்றவர்களே இனிமேல் கூடிப் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறும் கூறி விடுகிறார். நாதன் எவ்வளவு கேட்டுக் கொண்டும் அவர் கேட்பதாக இல்லை.

இந்த பாகவதர் இவ்வளவு ஞானம் உடையவர், அவர் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட வேண்டும் என சோவின் நண்பர் கேட்கிறார். எடுத்த எடுப்பில் சோ பதில் கூறி விடுகிறார், பாகவதர் ஞானி என்று இந்த சீரியலில் எங்குமே கூறப்படவில்லை என. நிறைய படித்திருக்கிறார், அவ்வளவே என்கிறார். ஞானம் என்பது கடவுள் அருளால் மட்டுமே வரும் எனக் கூறிவிட்டு. ஆனானப்பட்ட வியாசரே அவர் மகன் சுகருடன் ஒப்பிடும்போது ஞானி இல்லை என்பதை அவரிடம் சாதாரண பெண்களே கூறிய கதையையும் சோ இங்கு எடுத்துரைக்கிறார்.

ஆக, மிகப்படித்த விஞ்ஞானிகளோ, அறிஞர்களோ டீஃபால்ட்டாக ஞானிகள் ஆவார்கள் எனக் கூறவியலாது (பொறியாளர் - மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களில் அடக்கம் எனக் கூறும் முரளி மனோகர் சரியாகவே சொல்கிறான்). ஞானம் என்பது பிரும்மமும் தானும் ஒன்று என்னும் அறிவு. இந்த பாகவதரிடம் அது இல்லை. அவர் மெத்த படித்தவர் அவ்வளவே என்கிறார் சோ.


எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

Anonymous said...

கேள்விகள்:

எம். கண்ணன்

1. தினமும் ஜெயலலிதாவிடம் மாவட்ட / வட்ட செயலாளர்கள், பேரவை ஆட்கள் 25 லட்சம் பணப்பெட்டிகளை கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்களே - எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு பணம் ? ஒரு சின்ன சூட்கேசுக்குள் 25 லட்சத்தை அடக்க முடியுமா ? இல்லை இதெல்லாம் கருப்பை வெளுப்பாக்கும் உத்தியா ?

2. திமுக இன்னும் டீ குடிக்க காசு ஏற்பாடு செய்யவில்லை போலிருக்கிறதே ?

3. பாமகவை தோற்கடிக்க புகையிலை/சிகரெட்/மதுபான கம்பெனிகள்/அதிபர்கள் வியூகம் செய்துள்ளார்கள் போலிருக்கிறதே ? பாமக 7 இடங்களிலும் தோற்றால் என்ன ஆகும் ?

4. கலைஞர் டிவியில் இரவு 10.30மணிக்கு வெட்டிப்பேச்சு லீக் (விபிஎல்) என ஐபிஎல்லுக் போட்டியாக ஆரம்பித்துள்ளனரே ? சரியான அறுவையாக இருக்க்கிறதே ? அதெப்படி எல்லோரும் பிராமணராக பிடித்துப் போட்டார்கள் ? (பாஸ்கி, நீலூ, நாநி.. மற்றுமொருவர்)

5. கடைசியில் மாலனும் ஜெயாடிவியில் ஐக்கியமாகிவிட்டாரே ? (இரவு 9.30மணி அரசியல் விவாதங்கள்). சன் குழுமத்திலிருந்து ஆட்டோ வரும் என்ற பயமில்லையா ?

6. தமிழ் சானல்களில் செய்திவாசிக்கும் பெண்மணிகளில் உங்களுக்குப் பிடித்த செய்தி வாசிப்பாளர் யார் ? ஷோபனா ரவி ? சந்தியா ? ஃபாத்திமா பாபு ? ஜெயஸ்ரி ? ரத்னா ? உஷா ? ரமணி மணி ? ஏன் ?

7. 10 வருடங்கள் முன்பு வரை பிரா, ஜட்டி, பனியன்கள் என விற்று வந்த பல பெருங்கடைகளும் தற்போது 'லிங்கரி' என எஃப் டிவி தாக்கத்தில் புதுபுது விதங்களில் பெண் உள்ளாடைகளை அறிமுகப்படுத்துகின்றனரே ? எஃப் டிவியால் கிடைத்த அறிமுகம் தானே இது ?

8. வைரமுத்து தற்போதெல்லாம் படங்களுக்கு பாட்டெழுதுவது இல்லையா ? பிரபல இசை அமைப்பாளர்கள் ஏன் அவரை விட்டு விட்டனர் ?

9. அழகிரி மத்தியில் அமைச்சராகிவிட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார் ? எம்.பி.க்குப் போட்டியிடுவது தயாநிதி மாறனுக்கு டெல்லியில் செக் வைக்கத்தானே ?

10. தமிழ்நாட்டில் கள்ள உறவுகள் / தொடர்புகள் அதனால் ஏற்படும் கொலை போன்ற செய்திகளுக்கு தமிழ் டிவி சீரியல்கள் தானே காரணம் ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது