6/25/2006

எனக்கும் எம்.ஜி.ஆரு.க்கும் இடையில் என்ன பிரச்சினை?

தமிழ் பத்திரிகை உலகுக்கு சாவி அவர்களது பெயர் மிக்க பரிச்சயம். விகடன் ஆசிரியர் குழுவில் ரொம்பக் காலம் இருந்தார். ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் அவரும் மணியனும் விகடனில் தீவிரமாகச் செயல்பட்டனர். அக்காலக் கட்டத்தில் அவர் எழுதிய தொடர்கதைகள் மிகப் பிரசித்தம், உதாரணங்கள்: வழிப்போக்கன், வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை முதலியன.

எழுபதுகளின் துவக்கத்தில் தினமணி கதிரின் ஆசிரியராக இருந்தார். மனிதர் ரொம்ப உணர்ச்சி வசப்படுபவர். கருணாநிதி அவர்களின் நெருங்கிய நண்பர், ஆகவே எம்.ஜி.ஆருடன் தனிப்பட்ட விரோதம் பாராட்டினார்.

சாவியிடம் உள்ள குறை இதுதான். நட்பில் தீவிரமாக இருப்பார், விரோதத்திலோ அதை விட. எம்.ஜி.ஆரை அவர் இவ்வாறெல்லாம் வர்ணித்திருக்கிறார். "கிழட்டு நடிகர்", "அட்டைக் கத்தி வீரர்". கேள்வி பதில்களில் எம்.ஜி.ஆர். அவர்களை மட்டம் தட்டும் வாய்ப்பை விட்டதே இல்லை. உதாரணத்துக்கு:

கேள்வி: எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: அட்டை கத்தியை கையில் எடுத்துக் கொள்வேன்

கேள்வி: எம்.ஜி.ஆர். ஏன் தொப்பி போடுகிறார்?
பதில்: அவருக்கு தலை வழுக்கை, அதை மறைக்கத்தான்

கேள்வி: எம்.ஜி.ஆரிடம் ஒரு நல்ல விஷயமும் இல்லையா?
பதில்: நானும் முயன்று பார்த்தேன், ஒன்றும் தேறவில்லை

கேள்வி: எம்ஜிஆர் பொய் சொல்வாரா?
பதில்: அவர் குண்டடிபட்டு மருத்துவ மனையில் இருந்தபோது நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவரை சந்தித்தப் போது தான் ஆஸ்பத்திரி வரைக்கும் வந்ததாகவும் ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறியதால் அவரைப் பார்க்க முடியவில்லை என ஒரு டூப் விட்டேன். ஆனால் எம்ஜிஆரோ, நான் வந்தது பற்றி அவரது உதவியாளர் அவர் தூங்கி எழுந்த பிறகு கூறியதாகச் சொன்னார். இப்போது நீங்களே கூறுங்கள். யார் சொன்னது பெரிய பொய்?

1971-ல் வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்துக்கு 1974-ல் சுப்புடு அவர்களை விட்டு ஒரு விமரிசனத்தை தான் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் பத்திரிகையில் எழுதச் செய்தார். அதில் சுப்புடு அவர்கள் எம்.ஜி.ஆரை கிழி கிழி எனக் கிழித்திருந்தார். "ஊரார்" என்னும் தொடர்கதையில் "கிழட்டு நடிகன் போஸ்டர்களில் சிரித்துக் கொண்டிருந்தான்" (நினைவிலிருந்து கூறுகிறேன்) என்று எழுதியிருந்தார்.

ஏன் இந்த மாதிரி நடந்து கொண்டிருந்தார்? இதையெல்லாம் பற்றி அவர் சமீபத்தில் 1980 ஜனவரியில் சாவியில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு: "எனக்கும் எம்.ஜி.ஆரு.க்கும் இடையில் என்ன பிரச்சினை?"

(அதுதான் இப்பதிவின் தலைப்பு, ஹி ஹி ஹி.)

கட்டுரையிலிருந்து:

அன்பே வா படப்பிடிப்பு சிம்லாவில் நடந்தபோது சாவி அங்கு விகடனால் அனுப்பப் பட்டிருக்கிறார். அப்போது அவருடன் எம்.ஜி.ஆர். அன்புடன் பழகியிருக்கிறார். ஆனால் அதெல்லாம் வேஷம் என்று சாவி மேலே கூறிய கட்டுரையில் குறிப்பிட்டார். பிறகு தினமணி கதிரில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவர் எம்ஜிஆரிடம் அவர் முக ஜாடையில் ஒரு சாகச ஹீரோவை முன்னிருத்தி ஒரு படக்கதை தொடர் வெளியிட அனுமதி கேட்டிருக்கிறார். தனக்கே அந்த ஐடியா இருப்பதாகக் கூறிய எம்ஜிஆர் அனுமதி மறுத்திருக்கிறார். அதிலிருந்து சாவிக்கு எம்ஜிஆர் என்றாலே எரிச்சல் - இதை நான் கூறவில்லை, சாவியே கூறியது அது. எம்ஜிஆரை பொது நிகழ்ச்சிகளில் அதற்குப் பிறகு பார்த்திருக்கிறார். எம்ஜிஆர் அவருக்கு முகமன் கூற இவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கிறார். அதையும் சாவியே பெருமை என நினைத்துக் கொண்டு அதே கட்டுரையில் கூறியது. சில சந்தர்ப்பங்களுக்குப் பிறகு, எம்ஜிஆரும் அவருடன் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார்.

இப்போதுதான் நிஜமான தமாஷ் வருகிறது. சஞ்சய் காந்தி அவர்கள் விமான விபத்தில் இறந்தபோது அங்கு எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய இருவரும் சென்றிருந்தனர். உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது எல்லோரும் அவரவர் காரில் சென்றுவிட கருணாநிதி தனித்து விடப்பட்டார். அப்போது எம்.ஜி.ஆர். அவரைத் தன்னுடன் காரில் ஏற்றிச் சென்றார். இது நடந்தது ஜூன் 1980-ல்.

அதன் பிறகு வந்த சாவி இதழில் வந்த கேள்வி-பதில்:
கேள்வி: எம்ஜிஆர் கருணாநிதியை தன் காரில் அழைத்துச் சென்றதைப் பற்றி?
பதில்: அது எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைக் குறிக்கிறது (நிஜமாகத்தான் கூறுகிறேன்)

சாவிக்கே தன் பதில் ஒரு திடீர் பல்டி என்பது புரிந்ததால்தான் அந்த டிஸ்க்ளைமர். வாசகர்கள் தலை பிய்த்துக் கொண்டனர். ரொம்ப முடி கொட்டுவதற்குள் சாவியே இன்னொரு கட்டுரையில் அதை விளக்கினார்.

சாவி அமெரிக்கா செல்லவிருந்தார். அப்போது கருணாநிதி சட்டசபை தேர்தலில் நின்றார் (அண்ணாநகர் தொகுதி என்று நினைவு. சாவி தனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆகவே அவர் அமெரிக்கா செல்லும் முன்னால் கருணாநிதி வீட்டிற்கு சென்ற போது அவர் சாவியுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அது சாவிக்கு சுருக்கெனப் பட்டிருக்கிறது. ஆகவே எம்ஜிஆரின் பெருந்தன்மையைப் பற்றி அந்த பதில். அதற்குப் பிறகு எம்ஜிஆரைப் பற்றியக் கட்டுரையின் தலைப்பு: "கொடுத்துச் சிவந்தக் கரங்கள்".

சாவி ஒரு உணர்ச்சிகளின் குவியல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

41 comments:

ENNAR said...

சரி சார் எம்ஜியார் ஏன் கண்ணாடி அணிந்தார்

ராஜரிஷி சோ ரசிகன் said...

பின்னாளில் சாவி ஒரு ஆபாச படம் அட்டையில் போட்டதால் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டார் அல்லவா?அப்போது அவருக்கு 75 வயது இருக்கும்.

dondu(#4800161) said...

அவர் ஏன் கண்ணடி அணிந்தார் என்பதற்கு பதில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வந்த ஒரு கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. அதாவது அவருக்கு கிட்டப் பார்வையாம் அதற்கானக் கண்ணாடியை நேரிடையாகப் போடாது கருப்புக் கண்ணடியில் அதை பொருத்திக் கொண்டதாக அதில் சொல்லப்ப்பட்டிருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

அந்த ஆபாசப் படம் ஒரு அட்டைப்பட ஜோக்காக வந்தது. சாவியை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றதும் பின்னாலேயே கருணாநிதி போய் அவரை ஜாமீனில் மீட்டுக் கொண்டதாகப் படித்த ஞாபகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

சோ படத்தைப் பார்த்ததும் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது.

துக்ளக்கில் வந்த கேள்வி பதில் பகுதியில் ஒருவர் "தமிழ்நாட்டுக்கு தேவை தொப்பியா கண்ணாடியா என்று கேட்டு, சோ அவர்களால் அக்கேள்வி மிகவும் தரம்கெட்டது என்று கூறப்பெற்று மடி நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டு சென்றார்.

அதுதான் சோ. தரம் கெட்டக் கேள்வி கேட்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜரிஷி சோ ரசிகன் said...

அரிய தகவலுக்கு நன்றி.இதை என் வலைபூவில் சமர்ப்பித்து விட்டேன்http://chofan.blogspot.com/2006/06/blog-post_24.html

arumai said...

டோண்டு,
எம்.ஜி.ஆர் சாவி அட்டையில் இடம் பெறுவாரா? என்று சாவி இதழில் முன்பு ஒரு கேள்வி வந்திருந்தது. அதற்கு சாவி, வராது. வந்தால் சாவியில் தான் இல்லை என்று பொருள் என்று பதில் எழுதியிருந்தார்.

பின்னாளில் எம்.ஜி.ஆர். படம் சாவி அட்டையில் வந்திருந்தது. எம்.ஜி.ஆருடன் ஒருநாள் பொழுது தங்கி இருந்து அவரைப் பற்றிக் கட்டுரையும் சாவி எழுதியிருந்தார். ஆக நீங்கள் குறிப்பிட்டதன்படி சாவி ரொம்ப உணர்ச்சி வசப்படுபவர்தான்

Hariharan said...

வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறேன். அருமையான நகைச்சுவை எழுத்து.

எனக்குத் தனிப்பட்ட முறையில் திரு. எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். எந்த அறிமுகமும் இல்லாத எனக்குத் தெரிந்த நபருக்கு அவர் எழுதிய வேண்டுதல் கடிதத்திற்கு பதிலளிக்கும் வண்ணம், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து முறையாக பல நேர்முகத் தேர்வுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இறுதியாக நில அளவைத்துறையில் "ப்பிர்க்கா சர்வேயர் வேலை கிடைத்தது.

கடவுள் துவேஷம் இல்லாததால் எம்.கி.ஆரின் செயல்படுகள் கருணாநிதியினைவிட மிகவும் சிறப்பாக இருந்தன.

திரு. எம்.ஜி.ஆர் தொலைநோக்குடன் 1980க்ளில் நிறைய சுயநிதி பொறியியல் கல்லூரி, polytechnic-களுக்கு அனுமதி தந்து இட ஒதுக்கீடு B.E, B.Tech, 3year Engg diplomas படிப்பது இன்றுஅனைத்து சமூக மாணவர்களுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது. (தரம் வேறு விஷயம்! தரத்திற்கன காரணிகள் வேறு!)

தமிழகத்தில் திரு. காமராஜருக்குப் பிறகு கல்வித் தொலைநோக்கு இருந்த அரசியல் தலைவை எம்.ஜி.ஆர் மட்டுமே!

அம்மாதிரியே ஏழைகட்கு கொடுத்துச் சிவந்த அரசியல்வதியின் கரங்கள் எம்.ஜி.ஆருடைய கரங்களே!

சாவி உணர்ச்சிமயமனவர் என்பதைவிடவும் சந்தர்ப்பமயமனவரக இருந்திருக்கலாம்! ஒரு பத்ரிக்கையாளன்
தனிப்பட்ட நபரின் நல்ல செயல்பாடுகளை உரக்கவும், Personal matters like baldness etc இவைகளில் கவனமற்றும் இருத்தல் அவசியம்.

அன்புடன்,

குவைத்திலிருந்து-ஹரிஹரன்

manasu said...

தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

அவர் தைரியலட்சுமி.

என்னமோ இதான் நினைவு வந்தது பதிவை படித்த போது.

dondu(#4800161) said...

என்ன ஹரிஹரன் அவர்களே, தமிழில் எழுத ஆரம்பித்து விட்டீர்களே? வாழ்த்துக்கள்.

காமராஜ் அவர்களின் மதிய உணவுத் திட்டம் முதல் கோடு என்றால் எம்ஜிஆர் அவர்களின் சத்துணவுத் திட்டம் அதில் ரோடே போட்டு விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

நன்றி அருமை மற்றும் மனசு அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

உங்கள் பதிவுக்குப் போய் பின்னூட்டம் போட்டு விட்டேன் ராஜ ரிஷி சோ ரசிகன் அவர்களே.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan said...

டோண்டு சார்,

எல்லாம் தங்களது வழிகாட்டுதலில்!
வரும் நாட்களில் தமிழில் எனது ஐரோப்பிய நாடுகளிலான பயண அனுபவங்கள் , குவைத் வேலை அனுபவங்கள், மற்றும் இந்திய அனுபவங்களைத் தமிழில் பதியலாம் என நினத்திருக்கிறேன்.

அன்புடன்,
ஹரிஹரன்

dondu(#4800161) said...

நல்லது ஹரிஹரன் அவர்களே. உடனே நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தமிழ் வலைப்பூவை (blog) திறப்பதே. உங்களது தற்போதைய ப்ரொஃபைல் எண்ணிலேயே அதை நீங்கள் செய்யலாம். அதில்:
1. அனானி மற்றும் அதர் பின்னூட்டங்களை தூக்கவும்.
2. பின்னூட்டம் மட்டுறுத்தலை செயல்படுத்தவும்.
3. தமிழ்மணம் கருவிப்பட்டையை நிறுவவும். இதற்கு பார்க்க: http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=help
4. எல்லாம் செய்தவுடன் முதல் பதிவாக ஏதாவது லைட்டான விஷ்யமாக எடுத்துக் கொள்ளவும். தமிழ் தட்டச்சுக்கு அது உதவியாக இருக்கும். கனமான விஷயங்களுக்கு அப்புறம் வாருங்கள்.
5. எங்கெல்லாம் முடியுமா அங்கெல்லாம் பின்னூட்டம் இடுங்கள். அதையும் பிளாக்கர் பின்னூட்டமாகவே செய்யவும். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களைத் தவிர்க்கவும். நீங்கள் சொல்லும் விஷயங்களை உங்கள் பதிவாளர் எண்ணின் கீழேயே எழுதவும்.
6. உங்கள் போட்டொவை எனேபிள் செய்து ப்ரொஃபைலில் போட்டுக் கொள்ளவும். அப்போதுதான் அதர் ஆப்ஷனை உபயோகித்து உங்கள் பெயரில் யாராவது போலி பின்னூட்டமிட்டால், உங்களால் உறுதியாக அவை உங்களுடையவை இல்லை என நிறுவ முடியும்.

உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாக எனது ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan said...

டோண்டு சார்,

ஃபோட்டோ அப்லோடு செய்ய முயன்று முடியவில்லை. வழி காட்டவும்!

இள வயதில் கல்லூரியில் படிக்கும் போது பிறரால் "தொழிற்சார் மிண்ணணுவியல்" (Industrial Electronics) படிக்கும் உனக்கு ஆங்கில- higher, தமிழ்-Lower தட்டச்சு கோர்ஸ்கள் தேவையா? என நக்கலடிக்கப் பட்ட தட்டச்சுப் பயிற்சி பேருதவி புரிகிறது.

சில விஷயங்களை verify செய்துவிட்டுப் பதிவைப் தாங்கள் தந்த tips படி பதிகிறேன்!

அன்புடன்,
ஹரிஹரன்

dondu(#4800161) said...

அன்புள்ள ஹரிஹரன்,

படம் மேலேற்றிக் கொள்ள பிளாக்கரிலேயே வழி கொடுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய பிளாக்கர் பக்கங்கள் எல்லாம் ஜெர்மானிய மிழியில் இருப்பதால் அதௌ ஆங்கிலத்தில் மாற்றி உங்களுக்குத் தருகிறேன்.

புது பதிவு போடுவதற்கான பக்கத்தை திறக்கவும். அதில் restore post என்று இடது பாகம் மேலே இருக்கும். அதற்கு கீழ் 4 பட்டன்கள் இருக்கும். அவை: bold, italics, link, quotation mark, add picture. அதில் கடைசியாக இருப்பதை கிளிக் செய்யவும். உங்கள் கணினி வன் தகட்டில் உங்கள் படம் இருக்கும் அல்லவா, அதை பிரௌஸ் முறையில் தேர்ந்தெடுத்து புது பதிவு பக்கத்தில் ஏற்றவும். இப்போது உங்கள் பதிவு பக்கத்தில் ஒரு மீயுரை தெரியும். (HTML text). அதை நகலெடுத்துக் கொள்ளவும்.

இப்போது உங்கள் டேஷ் போர்டுக்கு போகவும். அங்கிருந்து புரொபைல் எடிட்டிங் பக்கத்திற்கு போகவும். அதில் போட்டோ பகுதியில் போட்டோ உரல் கேட்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் நகலெடுத்த மீயுரையை போடவும். உதாரணத்துக்கு எனது உரல் http://photos1.blogger.com/blogger/7841/505/1800/raghavan.jpg

அதாவது http என்று ஆரம்பிப்பதுதான் உரல். அதை இட்டு புரொபைல் மாறுதல்களை சேமிக்கவும். முழு வலைப்பதிவையும் ரீபப்ளிஷ் செய்யுமாறு கூறப்படும். அதை செய்யவும். அவ்வளவுதான்.

இன்னொரு விஷயம். எனக்கு தட்டச்சு தெரியாது, ஆங்கிலமோ தமிழோ. ஆனாலும் இப்போது தங்கிலீஷில் அடிப்பதால் பிரச்சினை இல்லை. இரு விரல் தட்டச்சுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

எனக்கும் எம்.ஜி.ஆரு. க்கும் பிரச்னை இருக்கிறது. அதை நான் வலைப் பூவில் பகிர்ந்து கொள்ளலாமா? இறந்தவரை குறை கூறுதல் சரியா?

உங்கள் ஆலோசனையைக் கூறவும்

dondu(#4800161) said...

உங்களுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன பிரச்சினை இருந்திருக்க முடியும்? அவர் இறந்தது 1987-ல். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு முன்னால். உங்களுக்கு அப்போது என்ன வயதிருந்திருக்கும்?

என்னை ஆலோசனை கேட்பதால், ஒன்று செய்யுங்கள். எனக்கு தனி மின்னஞ்சலிடவும். உங்களுக்கு ஆலோசனை மின்னஞ்சல் மூலமே கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Syam said...

நல்ல தகவல் டோண்டு சார்...ஒரு வழியாக தமிழ் பதிவு இட்டு விட்டேன், சமயம் கிடைக்கும் போது எட்டி பார்த்து கொட்டு வெச்சிட்டு போங்க, மோதிர கையால் கொட்டு வாங்க கொடுத்து வச்சுருக்கனும்....

dondu(#4800161) said...

வாழ்த்துக்கள் ஸ்யாம் அவர்களே. உங்கள் தமிழ் பதிவில் பின்னூட்டம் இட்டு விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SK said...

எம்.ஜி.ஆர். , சாவி பற்றிய தகவலகள் மிகவும் சுவையாக இருந்தது.

அதைவிட, வலைப்பூ பதிய நீங்கள் கொடுத்த ஆலோசனைகளும் மிகவும் உபயோகமானவை.

எல்லாவற்றையும் சேமித்துக் கொண்டேன்.

மிக்க நன்றி.

ராஜரிஷி சோ ரசிகன் said...

என் வலைபூவுக்கு இணைப்பு தந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களுக்கும் என் வலைபூவில் இணைப்பு தந்துள்ளேன்.

dondu(#4800161) said...

நன்றி ராஜரிஷி சோ ரசிகன் மற்றும் எஸ்.கே. அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்,

உங்களுக்கும், கலைஞருக்கு என்ன பிரச்சினை என்று ஒரு பதிவு போடுங்களேன்....

dondu(#4800161) said...

என்ன லக்கிலுக் சார், ஏமாந்தால் ஆட்டோ வருமளவுக்கு என்னை எழுத வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sivagnanamji(#16342789) said...

அத்தேதான் கொடுக்கச்சொன்னாங்க
"ஆடையில்லாத பால்..."
நினைவில் இல்லையா?

dondu(#4800161) said...

என்ன சிவஞானம்ஜி அவர்களே, அந்த ஜோக் நினைவில் இல்லாமல் இருக்குமா. என்ன, அதைப் போட்டால் சின்னப் பசங்க நம்ம மாதிரி பெருசுங்களை ஒருமாதிரி பார்வை பார்க்கக் கூடும் என்பதாலேயே போடவில்லை.

அந்த ஜோக் பட்ம் வரைந்தது ஜெயராஜ் அவர்கள். கணவின் முகத்தில் இருந்த அந்தத் திகைப்பு இன்னும் நினைவில் இருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 26491540 said...

டோண்டு ஸார்,

எனது தமிழ் வலைப்பதிவைத் துவக்கி, முதல் பதிவும் போட்டு விட்டேன்.

வருகை தரவும்.
http://harimakesh.blogspot.com

அன்புடன்,
ஹரிஹரன்.

dondu(#4800161) said...

வலைப்பதிவு உலகுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

குவைத் அனுபவங்களை எழுதுங்கள். ஈராக்கியரிடம் அந்த நாட்டவர்களுக்கு இன்னும் பயமிருக்கிறதா?

வெற்றியுடன் நீங்கள் அங்கு காலம் தள்ளுவதில் மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: மேலே கொடுத்திருப்பது உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டமாக இட நினைத்தது. ஆனால் பின்னூட்டம் குழு உறுப்பினர்களுக்கு மட்டும் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

செட்டிங்ஸில் மாற்றவும், அனானி பின்ந்த்டங்களைத் தவிர்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

///என்ன லக்கிலுக் சார், ஏமாந்தால் ஆட்டோ வருமளவுக்கு என்னை எழுத வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.///

சார் நீங்க என்ன ஜெயலலிதாவைப் பற்றியா எழுதப் போகிறீர்கள்? ஆட்டோ வருவதற்கு....

தமிழ்நாட்டிலே யாரு வேண்டுமானாலும் ஒருவரை நாக்கின் மேல் பல்லைப் போட்டு பேச முடியுமென்றால்... அது கருணாநிதி ஒருவரைத் தான்... நீங்களும் உங்க பங்குக்கு நடத்துங்க..... :-)

dondu(#4800161) said...

எம்ஜிஆரிடமோ கருணாநிதியிடமோ எனக்கு என்ன பிரச்சினை இருந்திருக்க முடியும்? இப்பதிவு சாவிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் இருந்த பிரச்சினை பற்றித்தான்.

அவரைப் பற்றியும் எழுதினால் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

சார் பின்னூட்டத்துக்கு நீங்கள் பதில் கொடுக்கிற ஸ்பீடு.... Excellent Sir...

ஐந்தே நிமிடத்தில் என் பின்னூட்டத்தையும் வெளியிட்டு அதுக்கு பதிலும் கொடுத்திருக்கிறீர்கள்.... நன்றி!

Hariharan # 26491540 said...

டோண்டு சார்,

நன்றிகள்! settings error-ஐச் சுட்டியதற்கு! சரி செய்து விட்டேன்.

அன்புலன்
ஹரிஹரன்

dondu(#4800161) said...

ஹரிஹரன் அவர்களே,

இட நினைத்தப் பின்னூட்டத்தை உங்கள் பதிவில் இட்டு விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

"சார் பின்னூட்டத்துக்கு நீங்கள் பதில் கொடுக்கிற ஸ்பீடு...."

இது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை. இன்று காலை 4.00 மணியிலிருந்து கணினியின் அருகில்தான் வாசம். ஒரு பெரிய மொழிபெயர்ப்பு வேலை ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு. அனல் மின்நிலையத்துக்கான பயனர் கையேடு, அல்ஜீரியாவுக்காக அனுப்ப வேண்டும்.

கூகள் டாக் செயலில் இருப்பதால் பின்னூட்டங்கள் வரவர பலூனில் சரசரவென்று மேலே வருகின்றன. பிரெஞ்சு மொழியில் வாக்கியங்களை உருவாக்குவதால் வரும் களைப்பு தேமதுரத் தமிழ் எழுதும்போது பகலவன் பார்வை பட்ட பனித்துளி பொல மறைந்து விடுகிறது.

அதை முடித்து விட்டு மறுபடியும் வேலை. அவ்வளவுதான். ஒரு நாளைக்கு 15-18 மணி நேரம் கணினி திறந்திருக்கிறது, இணையத்துடன் சேர்ந்து.

அன்புடன்,
டோடு ராகவன்

koottanchoru said...

டோண்டு, உங்கள் சாவி-கலைஞர்-எம்ஜிஆர் பற்றிய பதிவு மிக நன்றாக இருந்தது.

Santhose said...

//பின்னாளில் சாவி ஒரு ஆபாச படம் அட்டையில் போட்டதால் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டார் அல்லவா?அப்போது அவருக்கு 75 வயது இருக்கும்.//

It is during MGR period not Jaya period.

Chavi interviewed MGR and publish MGR's Photo without his famous kullah in chavi.

He did that one because Karunanidhi given an interview to Manian (Idhayam pesukirathu) who was his rival at that time. He mentioned this too.

ராஜ நடராஜன் said...

வாலிக்கும் சாவிக்கும் சண்டைன்னு ஊரெல்லாம் பத்தவைச்ச திரியில் இப்ப எம்.ஜி.ஆருக்கும்,வாலிக்கும் சண்டைன்னு இன்னுமொரு கிளைக்கதையா?

உங்க ரெட்டை தட்டச்சு விரல்கள் எவ்வளவு அழுதிருக்கும்:)

ராஜ நடராஜன் said...

லக்கி!அத்தனை பேரும் நாக்குல பல்லைப்போட்டுப் பேசுமளவுக்கா கருணாநிதியின் வினயம்?

dondu(#11168674346665545885) said...

//வாலிக்கும் சாவிக்கும் சண்டைன்னு ஊரெல்லாம் பத்தவைச்ச திரியில் இப்ப எம்.ஜி.ஆருக்கும்,வாலிக்கும் சண்டைன்னு இன்னுமொரு கிளைக்கதையா?//
நான் எங்கே அவ்வாறு சொன்னேன்?

//உங்க ரெட்டை தட்டச்சு விரல்கள் எவ்வளவு அழுதிருக்கும்:)//
விளக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜ நடராஜன் said...

டோண்டு சார்!நீங்க என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள்.சாவிக்கும்,வாலிக்குமான சக பதிவர் பதிவு ஒன்றுக்கு நீங்க போட்ட பின்னூட்ட தொடுப்பை பார்த்துத்தான் இங்கே வந்தேன்.அதனால்தான் இது கிளைக்கதையா என்றேன்.

என்னோட பாஸ் தட்டச்சு செய்யாமல் இரு விரல்களில்தான் டைப்புகிறார்.இப்படி தட்டினால் கைவலிக்குமே என்று கேட்டதால் பாஸை விட நீங்க அதிகம் தட்டுவதால் உங்களிடமும் அதே கேள்வியை பதிலாக வைத்தேன்.

பிளே ஸ்டேசனில் ஜாக்கியை இங்கேயும் அங்கேயும் திருப்புவதற்கு பதிலாக சோனி இரண்டு பெரும் விரல்களில் மட்டுமே தட்டச்சு செய்வது மாதிரி ஒரு சின்ன கீ போர்டை உருவாக்கியிருக்கிறது.ஆனால் உங்க வேகத்துக்கெல்லாம் அது சரிப்பட்டு வரும்ன்னு தோணல.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது