6/30/2007

"சந்தோஷமா கடன் வாங்குங்க"

உலகில் பல விஷயங்கள் யதேச்சையாகவே நடக்கின்றன. அப்படித்தான் நான் இம்மாதம் 24ஆம் தேதி வலைப்பதிவர் சந்திப்புக்கு போனபோதும் நடந்தது. இந்த அழகில் நான் அங்கு போவதே கடைசி தினத்தன்றுதான் நிச்சயம் ஆயிற்று. சந்திப்பு நடந்த வித்லோகா புத்தகக் கடையில் சிறிது நேரம் சுற்றிப் பார்த்தேன். சிவஞானம்ஜி அவர்கள் திடீரென என் கவனத்தை நம்ம ஜோசஃப் சார் எழுதிய புத்தகத்தின் மேல் திருப்பினார். அவருக்கு என் நன்றி. புத்தகத்தின் விவரங்கள்:

புத்தகத்தின் தலைப்பு: சந்தோஷமா கடன் வாங்குங்க, ISBN 978-81-8368-319-7
எழுதியது: டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், Website: www.nhm.in, email: support@nhm.in
பக்கங்கள்: 160
விலை: ரூ. 70

வெளிநாடுகளில் இருப்பவர்கள் புத்தகத்தைப் பெறுவதற்காக விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சரி புத்தகத்துக்கு வருவோம். போன ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோசஃப் சார் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் "கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கம்பர் பாடியது ராமாயணத்தில் எந்தக் கட்டத்தில் வருகிறது என்று என்னைக் கேட்டிருந்தார். நானும் அதற்காக சிலரைக் கேட்டு விவரம் அளித்து, என் தரப்பில் ஒரு பதிவும் இட்டேன். அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஒரு முக்கிய உண்மை புலப்பட்டது. அது என்னவென்றால், கடன்பட்டார் நெஞ்சம்போல என எழுதியது கம்பன் இல்லையாம். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது புத்தகத்துக்கு திரும்புவோம்.

முன்னுரையை ஆசிரியர் அப்பாடலுடனேயே துவக்குகிறார். பலர் (நான், ஜோசஃப் சார் உள்பட) இத்தனை நாளாக கொண்ட கருத்துப் பிழை இதிலும் வந்து விட்டது. இதில் எனக்கும் ஒரு சிறிய பங்கு இருப்பது விசனத்துக்குரியது. மன்னித்து விடுங்கள் ஜோசஃப் சார். அடுத்த பதிப்பில் நீங்கள் அதை திருத்துவீர்கள் என நம்புகிறேன்.

"கடன் வாங்குவது தவறு என்று சொல்கிறவர்கள், பணத்தின் மதிப்பை சரியாக உணர்ந்த புத்திசாலிகளாக இருக்கமுடியாது. காரணம், கடனாக வாங்கும் பணத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிப்பது எப்படி, வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்கிற தெளிவு உங்களுக்கிருந்தால், கடன் ஒரு தடை அல்ல; வரப்பிரசாதமே", என்று ஆணித்தரமாக கூறி புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். அதுவும் இரண்டாம் வரி ரொம்ப முக்கியம். ஆக்கபூர்வமாக செலவழிப்பது மட்டும் இருந்து விட்டால் அதற்கு ஈடு இல்லைதான். அவரே இப்புதகத்தின் நடுப்பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பெர்சனல் கடனைக் கேட்டு வருபவர்களை விட தொழில் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் கேட்டு வருபவர்கள் அதிக வரவேற்பை பெறுகின்றனர் என்று கூறி இருப்பதையும் இதே லாஜிக்கால் புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தருணத்தில் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்தில் 1982-ல் ஆசிய விளையாட்டு போட்டிகள் தில்லியில் நடந்த போது இந்திய அரசு ஐ.எம்.எஃப். இடமிருந்து வாங்கிய 5 பில்லியன் டாலர் கடன்களின் பெரும்பகுதி ஆசிய விளையாட்டை ஆடம்பரமாக நடத்தவே உபயோகப்படுத்தப்பட்டதால், இந்தியாவின் கடன் பளுதான் அதிகமாயிற்று. ஆக, கடனை வாங்கி அதன் மூலமாக அதிகப் பொருள் ஈட்டி, கடனையும் உரிய காலத்தில் அடைத்து, முன்னேற்றமும் பெறுவது என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இம்மாதிரி புத்தகங்களில் ஒரு உள்ளடங்கிய பலவீனம் உண்டு. அவை வெகு சீக்கிரம் வழக்கற்று (obsolete) போய் விடுகின்றன. ஆனால் அது ஆசிரியர் கட்டுப்பாட்டை மீறியது. முக்கியக் காரணம் அரசின் இடைவிடாது மாறும் நிதிக் கொள்கைகள்தான். இப்போதைய அரசு கொள்கைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்புத்தகமும் இதற்கு விதி விலக்கல்ல. உதாரணத்துக்கு இந்த வடிவில் இப்புத்தகத்தை அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ எழுதியிருக்கவே முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இவற்றில் தரப்படும் தகவல்கள் பல காணாமல் போகலாம், புதுத்தகவல்கள் அவற்றின் இடத்தை பிடித்து கொள்ளலாம். ஆனால் சில விஷயங்கள் அப்படியே இருக்கும், ஏனெனில் மனித இயற்கையுடன் சம்பந்தப்பட்டவை அவை. இவற்றில் அடங்குவன முன்னுரையும் முதல் இரு அத்தியாயங்களும்.

மற்ற அத்தியாயங்களில் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்கும் எண் உதாரணங்கள்தான் முதலில் இம்மாற்றங்களில் அடிபடும். அதற்காக அவற்றைக் கூறாமல் இருக்க முடியாது. மிக அழகாக ஆசிரியர் அவற்றை அடுக்கியிருக்கிறார். என்ன இருந்தாலும் அவரது வங்கியின் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் அல்லவா? இப்போதும் கணினி பிரிவின் தலைவராக இருந்து வங்கியின் எல்லா மட்டத்திலும் உள்ள அதிகாரிகளின் கணினி பிரச்சினைகளை தீர்த்து வைப்பவரும் கூட. ஆகவே பலருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அந்த பயிற்சி எல்லாம் வீணாகப் போகுமா என்ன? ஆகவே புத்தகத்தில் போர் என்று கருதும் புள்ளிவிவரங்களையும் அழகுபட அடுக்கியுள்ளார் அவர். அதையும் அழகான, அதே சமயம் எளிமையான தமிழில் செய்தது பாராட்டுக்குரியது. சில ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கம் மிக உபயோகமானது என்று கூறுவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.

தனி நபர் கடன் என்பதிலிருந்து ஆரம்பித்து, பெருந்தொழில் கடன் வரை படிப்படியாக செல்வது மிக அருமையாக உள்ளது. புத்தகத்தை படிக்கும்போது, அதிலும் தொழில் கடன்களைப் பற்றிப் பேசும்போது, அவருடைய 'என்னுலகம்' வலைப்பூவில் வந்த "திரும்பிப் பார்க்கிறேன்" பதிவுகளின் பல பகுதிகள் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாக ஒரு குடும்பம் பரம்பரையாக செய்து வந்த வியாபாரத்தில் இளைய தலைமுறையில் சகோதரர்கள் ஒத்துப் போகாததால் அந்த வியாபாரமே எப்படி நொடித்துப் போனது என்பதும் ஞாபகத்துக்கு வந்தது. கடன்களுக்கு பல விதிமுறைகள் இருந்தாலும் எப்படி மேலிட நிர்ப்பந்தங்கள் குறுக்கிடுகின்றன என்பதையும் அவர் முதலில் கிளை மேலாளராக பதவியேற்று திறந்த கிளையில் பெற்ற அனுபவங்களும் நினைவுக்கு வந்தன. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனாலும் நான் கூறுவதை விட புத்தகத்தை விலைக்கு வாங்கி படிப்பதே அதிகப் பலனைக் கொடுக்கும்.

குறைபாடுகள்? என் மனதுக்கு பட்டவற்றைக் கூறுவேன். எல்லோருக்குமே அவை குறைகளாகத் தெரியவேண்டும் என்பதும் அவசியமில்லை.

இம்மாதிரி புத்தகங்களில் இண்டெக்ஸ் ரொம்ப முக்கியம். அது இல்லை என்பது குறையாகவே படுகிறது. அடுத்தப் பதிவுகளில் இதை சரி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

நான் இப்பதிவில் குறிப்பிட்டது போல இப்போதெல்லாம் டெலிமார்கெட்டிங்கில் போன் போட்டு கடன் வாங்குமாறு தொந்திரவு செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் கந்து வட்டியையே நாணச் செய்யும் அளவுக்கு செயல்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாசகர்களை உஷார்படுத்தியிருக்கலாம் என எனக்கு படுகிறது. (இப்பதிவு ஜோசஃப் சாருடன் பேசியதன் ஒரு விளைவு என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்).

இன்னும் சில வங்கிகளில் கடனை தவணைக்கு முன்னமே செலுத்த (preclosing) விடுவதில்லை. அப்படியே விட்டாலும் அபராதம் போல போடுகிறார்கள். இது சரியா? இதன் லாஜிக் என்ன? இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. டிபாசிட்டுகளுக்கு வட்டி தரும்போது, உதாரணத்துக்கு 3 வருட டிபாசிட் 10 % என்றால் மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள டிபாசிட்டுகளுக்கு வட்டி 9 % என்று கூறுவதன் தாத்பர்யம் புரிந்ததே இல்லை.

இன்னும் ஒரு கடன் ஊழியர்களுக்கு தரும் பண்டிகை கடன்கள். இதற்கு வட்டியில்லை என அறிகிறேன். ஆனால் அதை வாங்குவதற்கும் ஜாமீன் கையெழுத்து கேட்கிறார்கள். யாராவது சக ஊழியர் போட வேண்டும். நான் கேட்கிறேன், நிறுவனத்தில் வேலை செய்பவர் மேல் ஏன் இந்த நம்பிக்கையின்மை? அதற்கு இன்னொரு ஊழியர் ஏன் பலிகடாவாக வேண்டும்? நடைமுறையில் நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் பார்த்தது என்னவென்றால், ராமு கோவிந்தனுக்காக கையெழுத்திடுவான், கோவிந்தன் ராமுவுக்காகக் கையெழுத்திடுவான். இது என்ன கூத்து? என்னைப் பொருத்தவரை நான் ஒரு பைசா கூட பண்டிகைக் கடன் வாங்கியதில்லை. அப்படி வாங்கி தங்களுக்கு கடனாகக் கொடுக்குமாறு பலர் தொல்லையும் செய்தனர். அது நடக்கவில்லை என்பது வேறு விஷயம். இருப்பினும் இது சம்பந்தமான எரிச்சல் அப்படியே உள்ளது.

கடன் தராதவர்களின் பெயர், பெயர், போட்டோ எல்லாம் இப்போதுதான் ரெகுலராகப் போடுகிறார்கள் என அறிகிறேன். அதுவும் தொழிலாளர்கள் யூனியன் ரொம்பப் போராடி இதை நடைமுறைக்கு கொண்டு வந்தது என்பதையும் அறிகிறேன்.

ஆங்கிலத்தில் spanner in the works என்று கூறுவார்கள். அதற்கு உதாரணமாக நான் குறிப்பிட நினைப்பது கடன் வழங்கும் விழாக்கள், அதிலும் மந்திரிகள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் என்னவோ தன் அப்பன் வீட்டுப் பணம் போல வங்கிப் பணங்களை தங்கள் ஜால்ராக்களுக்கு கடனாக வழங்கச் செய்வது. கடன் எப்படித் தரக்கூடாது என்பதற்கு உதாரணங்கள் இந்த நிகழ்ச்சிகள். அவ்வாறு பொது பணத்தை ரூட் விட்ட ஒரு மந்திரியால் தண்டனை மாற்றம் பெற்ற இந்த ஆசிரியர் இம்மாதிரி விஷயங்களை குறைந்தபட்சம் எதிர்மறை உதரணங்களாகக் காண்பித்திருக்கலாம். அதே போல ஓட்டு அரசியலுக்காக சகட்டு மேனிக்கு கடனை ரத்து செய்வதால், அவற்றை முதலில் நாணயமாகத் திருப்பித் தந்தவர்கள் முட்டாள் ஆக்கப்படுதலையும், அது எப்படி வங்கிகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன என்பதைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்.

யார் கண்டது, இவையெல்லாம் வேறொரு புத்தகத்தில் வருமோ என்னவோ.

இம்மாதிரி புத்தக மதிப்புரையை பதிவாகப் போடுவதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மதிப்புரையை நீட்டிக் கொண்டே போகலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/24/2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 24.06.2007

இந்த சந்திப்புக்கு வரமுடியுமா என்று இன்று காலை வரை எனக்கு நிச்சயமாகத் தெரியாததால் நான் வருவது பற்றி எங்கும் பின்னூட்டம் இடவில்லை. கடைசியாக காலை 10 மணிக்கு எனது மொழிபெயர்ப்பு வேலைகளில் சற்று ஓய்வு எடுக்க முடியும் என்பது தெரிந்தது.

எனது கார் வித்லோகா புத்தகக் கடைக்கு வந்த போது மணி சரியாக நாலரை. கடை பூட்டியிருந்தது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பக்கத்தில் இருந்த மாடிப்படியில் ஏறிப் பார்த்தேன், ஒரு வேளை அங்கு ஏதாவது ஹால் இருக்குமா என்று. இல்லை. சற்றே யோசனையுடன் கீழிறங்கி வாசல் பக்கம் வந்தால் எதிரே பாலபாரதி, பொன்ஸ் மற்றும் இகாரஸ் பிரகாஷ் வந்தனர். பிறகு கடையைத் திறந்து உள்ளே சென்றோம். சிறிது நேரத்தில் விருவிருவென்று பதிவர்கள் வர ஆரம்பித்தனர்.

வந்தவர்கள் லிஸ்ட் சிவஞானம்ஜி பதிவில் பார்க்கலாம்.

சந்திப்பு ஆரம்பிக்கும் முன்னால் புத்தகக் கடையில் சுற்றிப்பார்த்ததில் நம்ம ஜோசஃப் சார் அவர்களின் புத்தகம் ஒன்று கிடைத்தது. உடனடியாக அதை வாங்கி விட்டேன். "சந்தோஷமா கடன் வாங்குங்க" என்று அவர் அதில் கூறுகிறார்.

பிறகு சந்திப்பு ஆரம்பமாயிற்று. மா.சிவகுமார் அவர்கள் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடத்தப்படவிருக்கும் பதிவர் பட்டறை பற்றி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வந்திருந்தார். அதில் unconference என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் தமிழாக்கத்தை நானும் அவரும் இன்னும் சிலரும் அலசி கடைசியில் முறைசாரா சந்திப்பு என்று ஒரு யோசனை வந்தது. வேறு யோசனைகளையும் எதிர்ப்பார்க்கிறேன்.

பிறகு இந்த சந்திப்பில் முழுக்க முழுக்க அந்தப் பட்டறையில் என்ன செய்யலாம் என ஒவ்வொருவரும் ஆலோசனை கூறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்பட்டறைக்கு கூடுதல் புரவலர் சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறை. அத்துறையின் மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும். கூடவே பதிவர்கள் வேறு. ஆக 100-லிருந்து 150 வரை எதிர்ப்பார்ப்பு. பாலராஜன் கீதா எல்லா கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களையும் கூப்பிடலாம் என்று கூற இகாரஸ் பிரகாஷ் அவர்கள் அதற்கு அரங்கத்தில் இடப் பற்றாக்குறை என்பதை சுட்டிக் காட்டினார். அவ்வாறு அழைப்பை விரிவுபடுத்துவதை அடுத்தப் பட்டறைக்கு வைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரமூர்த்தி அவர்கள் பட்டறைக்கு வருபவர்க்கு ஏதேனு சான்றிதழ் மாதிரி தந்தால் நன்றாக இருக்கும் அன அபிப்பிராயப்பட்டார். இகாரஸ் இந்த யோசனையை குறித்து கொண்டார். இலக்கு பார்வையாளர்களை தீர்மானிக்க வேண்டும் என்று ஒருவர் (கப்பிப்பயல்?) கூற இன்னொருவர் (வெட்டிப் பயல்?) மாணவர்களை விட நாம் குறிவைக்க வேண்டியது மென்பொருள் நிபுணர்களே என்றார். அதற்கான மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டது. (இந்த இருவர் பெயரில் குழப்பம், ஒரு வேளை மாற்றிச் சொல்கிறேனா என்று தோன்றுகிறது. தவறிருந்தால் பின்னூட்டத்தில் கூறவும்).

அருள்குமார் அவர்கள் யாஹூ குழுக்களில் உள்ளவர்களையும் இழுக்கலாம் என்றார். கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றுக்கு விஷயதானம் செய்ய பலர் விரும்பலாம். அவர்களில் பலருக்கு தமிழில் தட்டச்ச முடியும் என்பதே தெரிந்திருக்காது என்பதுதான் நிஜம். என்ன பிரசண்ட் செய்வது என்பதன் பொருளடக்கத்தை நிச்சயித்து கொள்வது முதல்படி, பிறகு அதை பலருக்கு அனுப்புவது இரண்டாம் படி என்பதை சுட்டிக் காட்டினார். தமிழி அவர்கள் பலருக்கு வெப்சைட் மற்றும் வலைப்பூ நடுவில் உள்ள வேறுபாடு தெரியவில்லை என கருத்து கூறினார். தில்லியிலிருந்து வந்த முத்துலட்சுமி அவர்கள் தான் எப்படி வலைப்பூவில் ஆர்வம் எடுத்துக் கொண்டார் என்பதை விளக்கினார்.

பத்ரி அவர்கள் பிரிண்ட் மீடியாவிலிருந்து ஒலி ஊடகத்துக்கு செல்லத் தருணம் வந்து விட்டது எனக் கூறினார். சாதாரணமாக தமிழ் எழுதுவதில் தகராறு இருப்பவர்கள் ஆடியோ உபயோகிப்பத்து நலம் என்றும் கூறினார். உதாரணர்த்துக்கு உள்ளூர் செய்திகள் க்ளிப்பிங்குகள் தயாரிக்கலாம் எனக் கூறினார். சுந்தரமூர்த்தி அவர்கள் இத்தருணத்தில் ஒரேயடியான நீளமான பதிவுகள் இன்றி பத்து நிமிட செக்மெண்டாக இருப்பது நலம் எனக் கூறினார். செல்பேசியை உபயோகித்து ஃபோட்டோக்களை எடுக்கும்போதே பதிவில் போடுவது சுலபமான தொழில் நுட்பம் என பத்ரி அவர்கள் கூற்றினார். அவ்வாறே நம்ம ஓசை செல்லா அவர்களும் செய்வதாக நான் கூறினேன். இதைப் பற்றியெல்லாம் பட்டறையின் இரண்டாம் அமர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை வைக்கப்பட்டது. இந்த அமர்வுக்கு செல்லா முக்கியமாக வரவேண்டும் என நான் கருத்து தெரிவித்தேன்.

முக்கியமாக தாய்மொழியில் எழுதுவது என்பதே ஒரு இன்பம் என்பதை மற்றவருக்கு உணர்த்த வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்தேன்.

இப்போது மாசிவகுமார் அவர்கள் மூன்றாம் அமர்வைப் பற்றி பேச ஆரம்பித்தார். பல பதிவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் திறமைகளை ஒருவலைப்பின்னல் போல வைத்து பல அரிய செயல்கள் புரியலாம் எனக் கூறினார். இது சம்பந்தமாக் ஒரு விக்கி பக்கம் திறக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. ஆர்வம் உள்ளவர்கள் அப்பக்கத்தில் தங்கள் பங்களிப்பு பற்றி எழுதலாம் என்றும் கூறப்பட்டது.

இதற்குள் மணி ஆறை நெருங்க நான் இன்னொரு முக்கிய சந்திப்புக்காக கிளம்ப வேண்டியதாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/23/2007

ரஷ்டி பேரைச் சொன்னாலே அதிருதுல்ல!

முரட்டுக் காளைக்கு சிவப்புத் துண்டு போல ரஷ்டியின் பெயர் இசுலாமியருக்கு. இப்போது அவரை சர் ரஷ்டீன்னு கூப்பிடணும்னு பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது ஈரானையும் பாக்கிஸ்தானையும் சீண்டி விட்டுள்ளது. ஈரானிய அதிபர் அவசர அவசரமாக பழைய ஃபத்வாவை தூசி தட்டி எடுத்துள்ளார். சமீபத்தில் 1988-ல் தான் வந்தது என்றாலும் ரொம்பத்தான் தூசி சேர்ந்து விட்டது போல.

முதலில் ஒன்று கூறிவிடுகிறேன். ரஷ்டியின் எழுத்துக்களை என்னால் சில பக்கங்களுக்கு மேல் படிக்க முடிந்ததில்லை. அவ்வளவு குழப்பமான எழுத்து மனிதருக்கு. அவருடைய சாத்தானின் கவிதைகள் என்னும் புத்தகம் சாதாரணமாக மறக்கப்பட்டிருக்கக்கூடியதே என்று அக்காலத்தில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார். ஆனால் அது மிகவும் பிரசித்தி பெற்று, பல நாடுகளால் தடை செய்யப்பட்டு அதன் விற்பனை கோடிகளை எட்டியது. அக்கால ஈரானியக் கோமாளி அயதுல்லா கோமேனியால்தான் அப்புத்தகம் பிரசித்தியாயிற்று என்றால் மிகையாகாது. மற்றப்படி காலணா பெறாத அந்தப் புத்தகத்துக்கு கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமானமுள்ள விளம்பர விழாவையே கோமாளி நடத்தினார்.

அச்சமயம் பாக்கிஸ்தானில் ஒரு உருது படமே தயாரித்தார்கள். படத்தின் பெயர் "International guerilley" (சர்வதேச கொரில்லாக்கள்). தமாஷான கதை. வில்லன் ரஷ்டியைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட ஒரு பேர்வழி. அவர் இசுலாமியருக்கு எதிராக பெரிய சதி செய்கிறார். அவருக்கு துணையாக இஸ்ரவேலர்களைத் தவிர யாரைக் கூற முடியும்? கடைசி காட்சிதான் ரொம்பத் தமாஷ். திடீரென எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான புனித குரான் புத்தகங்கள் குண்டு போல சீறி வந்து ரஷ்டியை மோதி அழிக்கின்றனவாம். இதைவிட புனித குரானை அதிகம் அவமதிக்க முடியாது என்று கருதுகிறேன்.

கடைசியில் என்ன ஆயிற்று? பத்வா போட்ட கோமேனி, மேலும் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட மற்ற இசுலாமியத் தலைவர்களில் பலர் இப்போது மறைந்து விட்டனர். ரஷ்டி மட்டும் நிற்கிறார். இந்த கோமாளித்தனமான வேலையில் ஈரானின் இழப்பை டாலர்களிலும் யூரோக்களிலும் எண்ண ஆரம்பித்தால் பல ஆண்டுகள் அதற்கே ஆகும். எல்லாம் எதற்காக? அப்படியே விட்டிருந்தால் மறக்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகத்துக்காக.

இப்போது பிரிட்டன் விஷயத்துக்கு வருவோம். ரஷ்டி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். சர் பட்டம் வழங்குவது பிரிட்டன். இதில் பாக்கிஸ்தானியருக்கும் இரானியருக்கும் என்ன வேலை? பட்டது போதாதா ஈரானுக்கு? இப்போது ஏன் பத்வாவை தூசி தட்ட வேண்டும்? தேவையின்றி ரஷ்டியை தூக்கிப் பிடிப்பதுதான் இவர்கள் மறுபடி செய்யப்போகும் வேலை.

கடைசியாக ஒரு வார்த்தை. பல இசுலாமிய தேசங்கள் செய்யும் முன்னரே நமது அக்காலத்தைய இந்திய அரசு முந்திரிக்கொட்டை போல் புத்தகத்தை தடை செய்து அதன் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தது. இப்போதாவது ஏதேனும் கூறி குட்டை குழப்ப மாட்டார்கள் என நம்புவோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/11/2007

உண்மை கற்பனையை விட விந்தையானது

மேலே உள்ள தலைப்பு ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. இன்று காலை கூகள் மின்னஞ்சல் பெட்டியில் அருமை நண்பர் ஜெயகமலிடமிருந்து இரு அஞ்சல்கள் வந்தன. அவற்றுள் ஒன்றுதான் இப்பதிவை போடத் தூண்டியது.அவருக்கு என் நன்றி.

கடந்த காலத்துக்கு செல்வது பலரது கற்பனையில் உள்ளது.எனக்கும் அது உண்டு. அது பற்றி பதிவே போட்டுள்ளேன். எஸ்.வி.சேகர் நாடகத்திலும் அது வரும். பாரதியார் காலத்துக்கு இரு நண்பர்கள் கால யந்திரத்தில் செல்ல மவுண்ட் ரோடுக்கு வருகிறார்கள். அதில் ஒருவன் திடீரென கூவுகிறான், டேய் எல்.ஐ.சி. எங்கேடா என்று. இன்னொருவன் இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை ஆகவே அது இல்லை என்று கூற ஒரே தமாஷ்தான்.

அதாவது கடந்த காலத்துக்கு செல்ல இயலாது. எதிர்காலத்துக்கு? அதைத்தான் நாம் தினசரி செய்கிறோமே என்றால், அதை நான் குறிப்பிடவில்லை. திடீரென நான் இப்போது 2077க்கு சென்று சமீபத்தில் 2007 என வலைப்பதிவில் எழுதி, மடிப்பாக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞர் "நம்ம கொள்ளுத்தாத்தா சொன்னது போல நிஜம்மாவே இந்த ஆள் இருந்திருக்கான் போலிருக்கே" என்று வேறு எங்காவது பின்னூட்டத்தில் புலம்புவாரோ? தெரியாது. ஆனால் நான் கூறவரும் இன்னொரு கண்டிஷன் 2077-லும் நான் இப்போது இருப்பது போல 61 வயது வாலிபனாகவே இருக்க வேண்டும். அது மட்டும் நடக்காது என நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்துக்கு போவது பலமுறை நடந்துள்ளது, இப்போது நடந்துள்ளது போல.

போலந்தில் 1988-ல் கோமாவில் விழுந்த ஒருவர் இப்போது விழித்திருக்கிறார்.

அவர் கோமாவில் விழுந்தபோது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இப்போது இல்லை. உணவுப்பொருள் ரேஷனிங் இல்லை. கடைகளில் தேயிலையும் ஊறுகாய் மட்டும் கிடைத்து வந்த காலம் போய் இபோது பொருள்கள் மண்டுகின்றன. ஜான் க்ரெப்ப்ஸ்கி (Jan Grzebski), வயது 65, 1988-ஆம் ஆண்டு ரயிலில் அடிப்பட்டு கோமாவில் விழுந்தார்.

"இப்போது தெருக்களில் ஆளாளுக்கு செல்போன் வைத்து கொண்டு திரிகிறார்கள். கடைகளில் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இருந்தாலும் ஜனங்கள் புகார் செய்த வண்ணம் உள்ளனர்," என்று ஆச்சரியப்படுகிறார் அவர். (புகார் செஞ்சாத்தான் மக்கள் என டோண்டு ராகவன் கருதுகிறான்).

இந்த கலாட்டாவில் அவர் மனைவியின் விடாநம்பிக்கையையும் தியாக மனப்பான்மையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். மருத்துவர்கள் இன்னும் சில ஆண்டுகளே இருப்பான் என்று கைவிட்ட கேஸை சாவித்திரி கணக்கில் எமனுடன் போராடிய ஜெர்ட்ரூடா (Gertruda) பெயர் பொன்னெழுத்துக்களில் அச்சடிக்கப்பட வேண்டியவை. அவரது போராட்டம் ஒரு காவியம். இருந்தாலும் அவரைப் பற்றி மேலும் மேலும் எழுதி அவரை கூச்சப்பட வைக்க நான் விரும்பவில்லை.

அவர் கோமாவில் சென்ற ஆண்டுக்கு அடுத்த ஆண்டு கம்யூனிஸ்ட் அரசு வீழ்ந்தது. போலந்து நாட்டோவில் 1999-ல் சேர்ந்தது. ஐரொப்பிய ஒன்றியத்தில் 2004-ல் இணைந்தது.

"மற்றவர்கள் புகார் செய்யலாம். ஆனால் நான் செய்ய மாட்டேன் என கூறுகிறார் இந்த போலந்துக்காரர்".

எதிர்காலக் கற்பனை சம்பந்தமாக பல நாவல்கள் வந்து விட்டன. எட்வேர்ட் பெல்லாமியின் "பின்னோக்கிப் பார்க்கும்போது", ஜார்ஜ் ஆர்வல்லின் 1984, ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "புதிய தைரியம் மிக்க உலகம்", எச்.ஜி. வெல்ஸின் "கால யந்திரம்" ஆகியவை உடனேயே மனதுக்கு வருகின்றன.

அவை எல்லாமே நிகழ்காலத்தில் இருப்பனவற்றை எதிர்காலத்துக்கு நீட்டிக்கின்றன. ஆனால் இம்மாதிரி கேஸ்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் கற்பனையெல்லாம் மிஞ்சி விடுகின்றன. அந்த போலந்து தொழிலாளியை பொருத்தவரை அவர் நேரடியாக எதிர்காலத்துக்கே சென்று விட்டார்.

அதனால்தான் கூறுகின்றனர், "உண்மை கற்பனையை விட விந்தையானது" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/08/2007

சம்பவாமி யுகே யுகே

தலைப்பை பின்னால் நியாயப்படுத்துகிறேன்.

அமரர் தேவன் அவர்கள் எழுதிய நாவல், "கல்யாணி" என்று நினைக்கிறேன். (இல்லை அது கோமதியின் காதலன் என திருத்தியவருக்கு நன்றி) அதில் இரு சகோதரர்கள். அப்பா ஒரு கோபக்கார மிராசுதார். ஊரில் இல்லை. அப்போது அண்ணன் தம்பிகளுக்குள் பயங்கர சண்டை. தம்பி கோபித்து கொண்டு சென்னை செல்கிறான். இப்படி போகிறது கதை. கதை அப்படியே போகட்டும், நாம் ஒரு நிமிடம் இந்த சகோதரர்களின் தாயார் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்போம். அவருக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை. வீட்டில் அண்ணன் தம்பிகள் இப்படி அடித்து கொள்கிறார்களே, அதுவும் கணவர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து என நொந்து போகிறார். இளைய மகன் எங்கிருக்கிறானே என்று வேறு கவலை. அடுத்த நாள் காலை ஜோசியர் வீட்டுக்கு செல்கிறார். அப்போதுதான் ஜோசியர் மனைவி தன் கணவரின் சாமர்த்தியத்தைப் பற்றி தனது வெளிப்படையான எண்ணங்களைத் தெரிவித்து விட்டு, சமையலறைக்கு சென்றிருக்கிறார்.

இந்த நேரம் பார்த்து வந்த மிராசுதார் மனைவியின் முகத்தில் ஏகப்பட்டக் கவலை. ஜோசியருக்கோ அவர் கவலை. இருந்தாலும் நல்ல சம்பாவனை கிடைக்குமே. ஆகவே வரவேற்கிறார்.

ஜோ. வாங்கம்மா, என்ன கவலையா இருக்கீங்க? காளை விஷயம்தானே (அந்த ஊரில் மாட்டுக் கொள்ளை சர்வ சாதாரணம்)?
மி.ம. ஆமாம் ஜோஸ்யரே, இளையக்காளைதான் எங்க வீட்டு மூத்தக்காளையிடம் சண்டை போட்டுண்டு போயிட்டான்.
ஜோ. (திடுக்கிட்டு, ஆனால் சுதாரித்து கொண்டு) அடேடே, நான் பயந்தா மாதிரியே ஆயிடுத்தே. உங்க கிரக நிலை சரியில்லை. ஒரு பூஜை போடலாம்.
மி.ம. (அவருக்கு 100 ரூபாய் கொடுத்து விட்டு கேட்கிறார்): எதுக்கும் நம்ம சேதுவை பட்டணத்துக்கு அனுப்பி பார்க்கச் சொல்லட்டுமா?
ஜோ: (பணத்தை வேட்டியில் முடிந்து கொண்டே, விட்டேத்தியாக): பேஷா செய்யுங்கோ.

'சேதுவுக்கு மூளை லேது' என்று பெயர் வாங்கியிருந்த அந்த சேது பிறகு அக்கதையில் செய்யப் போகும் குளறுபடிகள்... அதை அந்த நாவலில் போய் படித்து கொள்ளவும். நான் பதிவுக்கு போக வேண்டும்.

வைகுந்தத்தில் விஷ்ணுவைப் பார்க்க ஒரே நெரிசல். நாரதர் தலைமையில் தேவர்கள் அரக்கர்கள் பண்ணும் அக்கிரமங்களை பற்றி புகார் செய்து மூக்கால் அழ, பகவான் எப்போதெல்லாம் அதர்மம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் வருவேன் என்று பொருள்பட ஸ்லோகம் கூறுகிறார். அது "சம்பவாமி யுகே யுகே" என்று முடியும். (ஏம்பா அவசரப்படறீங்க, இது தலைப்பை நியாயப்படுத்துகிறதுன்னு நான் எப்போ சொன்னேன்)?

இப்போது மேட்டருக்கு வருவோம். இன்று ஆனந்த விகடனில் ஒரு தலையங்கம். ஹெல்மட் கூத்து பற்றி. இதில் என்ன குழப்பம் எனத் தெரியவில்லை. ஹெல்மட் வியாபாரிகள் பிழைக்க வேண்டாமா? அவர்கள் சம்பாதித்தால்தானே கமிஷன் எல்லாம் கிடைக்கும்? கட்டாயப்படுத்தாமல் நம்மூர்க்காரர்கள் வாங்குவார்களா? அதுதான் ஜூன் 1 வரைக்கும் இத்தனை பந்தா. பிறகு? ஜூன் ஆரம்பித்து விட்டது. கட்சித் தலைவர்கள் வருவார்களே, "தலைவா இதனால் ஓட்டிழப்பு நிச்சயம்" என்று கூறிக் கொண்டு. அதனால் என்ன? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கெடுபிடி தேவையில்லை என்று தாயுள்ளத்துடன் ஆணை பிறப்பித்தால் போயிற்று. எதற்கும் வரவேண்டியதெல்லாம் வந்து விட்டதல்லவா? அப்புறம் என்ன புடலங்காய் சட்டம்? இப்போது ஓட்டுத்தானே முக்கியம்? பிறகு தேவைப்பட்டால் மொத்த சட்டத்தையும் அதிகாரபூர்வமில்லாது கிடப்பில் போடுவது. அப்போதுதானே தேவைப்பட்டால் போலீஸ் மாமூல்கள் கேட்க முடியும்?

அது சரி. இது வரை வாங்கியவர்கள் மனநிலை? அதற்கு என்ன செய்ய முடியும்? சட்டம் என்று இருக்கிறதல்லவா? அதை மதித்தவர்கள் நல்லவர்கள். அவர் பொருட்டு பெய்யெனப் பெய்யும் மழை என்று உணர்ச்சியால் கரகரக்கும் குரலில் ஒரு குறுநகையோடு கவி சம்மேளனம் ஒன்றில் கவிதை நடையில் விளம்பினால் போயிற்று.

இத்தனையும் ஏற்கனவே நடந்து முடிந்திருக்கிறது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால். அப்போதும் அதே கெடுபிடிகள். ஹெல்மெட்டை கையில் பிடித்துக் கொண்டுதான் ஸ்கூட்டர் லிஃப்டே கேட்க முடியும். இதே போல எல்லோரும் ஹெமெட்டுகள் வாங்கியதும் சட்டத்தின் ஜபர்தஸ்து தானே குறைந்தத்து. ஒரே ஒரு வித்தியாசம். அப்போது அதிமுக அரசு. இப்போது திமுக அரசு.

ஆக, எப்போதெல்லாம் கட்சிக்கு பணம் தேவைப்படுகிறதோ, இம்மாதிரி சட்டங்கள் காமதேனுவாகின்றன.

சம்பவாமி யுகே யுகே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/07/2007

வெண்ணிற ஆடை நிர்மலா வழக்கு

வெண்ணிற ஆடை நிர்மலா வருமான வரி வழக்கில் அவரை இவ்வளவு ஆண்டுகாலம் இழுக்கடித்து விட்டு இப்போது அவரது சிறை தண்டனையை ரத்து செய்துள்ளார்கள். விவரங்கள் இப்பதிவில்.

இதில் பல விஷயங்கள் உண்டு. அதாவது வெண்ணிற ஆடை நிர்மலா எம்.எல்.சி.யாக இருந்தார். அவர் ஒரு முறை மஞ்சள் கடுதாசி கொடுத்தவர். அப்படிப்பட்டவர் எம்.எல்.சி.யாக இருக்க முடியாது என்பது பொது விதி. இதை வைத்து பெட்டிஷன் கோபாலன் என்ற சைதாப்பேட்டைக்காரர் ரிட் பெட்டிஷன் போட, நிர்மலாவின் பதவி பறிமுதல் ஆனது. அதே சமயம் கருணாநிதியும் எம்.எல்.சி.யாக இருந்தார். இப்போது எம்.ஜி.ஆர். ஒரு காரியம் செய்தார். லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலையே ஒழித்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தன் சினேகிதி இல்லாத கவுன்சிலை அழித்தது. அதே சமயம் அதில் மெம்பராக இருந்த தனது விரோதி கருணாநிதியையும் மட்டம் தட்டியது. இந்த மாதிரி தனிமனித மட்டம் தட்டல்கள் எல்லாம் அக்காலத்தில் சர்வ சாதாரணம். உதாரணத்துக்கு அதிமுக பத்திரிகையில் கருணாநிதியை சூச்சூ, பிப்பீ என்றெல்லாம் குறித்து விட்டு அவர் கையில் நாதஸ்வரம் கொடுத்து கார்ட்டூன் வரைவார்கள். திமுக பத்திரிகையில் எம்ஜிஆரை ராத்திரி வண்டி எனக் குறிப்பிட்டு (மலையாளி), அவர் கையில் டீ கெட்டில் எல்லாம் கொடுத்து கார்ட்டூன் போடுவார்கள்.

சரி, வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் திரும்ப வருவோம். அவர் மஞ்சக்கடுதாசி கொடுத்த களங்கத்தை துடைக்கவே எம்ஜிஆர் அவர்கள் அவருக்கு பணம் கொடுத்தது. ஆனால் அது அப்போதைக்கு பிரயோசனப்படாது போயிற்று. பதவி போனது போனதுதான், மஞ்சக் கடுதாசி கொடுத்தது கொடுத்ததுதான் என நிலை எடுக்கப்பட்டது. ஆனால் கொடுத்த பணம்? இங்குதான் வருமான வரிக்காரர்கள் உள்ளே புகுந்தார்கள். பத்தாயிரத்துக்கு மேல் காசோலை சட்டம் எல்லாம் வேறு துணைக்கு வந்தது. கேஸ் நடந்தது. 1987-ல் எம்ஜிஆர் மறைய சிக்கல் அதிகமாகியது. பிறகு நடந்தது மேலே சுட்டிய பதிவில் கூறப்பட்டது போலத்தான். அதே போல நடிகை சாவித்திரி நொடித்துப் போய் படுத்த படுக்கையாக இருந்த காலத்திலும் அவரது பழைய பாக்கிக்காக இந்த துறை தொந்திரவு ரொம்ப கொடுத்தது. அதெல்லாம் ஒரு மோசமான காலக்கட்டம். இப்போது நிலைமை எவ்வளவோ தேவலை.

ஒரு தொலைக்காட்சி பேட்டி இது சம்பந்தமாக வெண்ணிற ஆடை நிர்மலா அளித்துள்ளார். பாவம் ரொம்பவே நொந்து போயிருந்தார். இரண்டு ஆண்டுகால சிறை தண்டனை அவர் தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக இருந்தது. அது ரொம்ப கொடுமையானது. இப்போதாவது அது விலகியதே என்று நிம்மதியாக இருந்தாலும் அந்த நல்லப் பெண்மணி இதுவரை பட்ட துயரங்களுக்கு என்ன சமாதானம் கூற முடிய்ம்?

மனது கனமாகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பிறகு சேர்க்கப்பட்டது:
வெண்ணிற ஆடை நிர்மலா எம்.எல்.சி. இல்லை, ஆக முயன்றவர் என திருத்திய அனானிக்கு நன்றி.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது