5/03/2011

இந்தப் பெண்களை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை

டிஸ்கியை பதிவின் கடைசியில் தருகிறேன்.

சடகோபராமானுஜம் வீட்டு காலிங் பெல்லை அழுத்தியபோது சத்தியமாக அங்கு ஏதோ ஏடாகூடமாக நடந்து அப்போதுதான் முடிந்திருந்தது என்பதை நான் அறியவில்லை.

“வாடா” என என்னை வரவேற்ற சடகோபராமானுஜம் முகம் சுரத்தாகவே இல்லை. “வாங்கோ டோண்டு அண்ணா” என வரவேற்ற அவன் மனைவி ஜெயாவின் முகமும் கோபத்தால் சிவந்திருந்தது.

“ஜெயா, டோண்டுவுக்கு காப்பி கொடு” என்று சொன்ன சடகோபராமானுஜனை அவள் லட்சியமே செய்யாது உக்கிரமான முகத்துடன் உள்ளே விருட்டென சென்றாள்.

“என்னடா ஏதாவது அசந்தர்ப்பமான நேரத்தில் வந்து விட்டேனா” என நான் கவலையுடன் கேட்க, “ஆமாம் ஆனால் இல்லை” என, வரும் ஆனா வராது பாவனையில் பதிலளித்தான். நான் அமைதி காத்தேன், அவனாகவே சொல்லட்டும் என.

சிறிது நேரம் ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. பிறகு அவனாகவே ஆரம்பித்தான். “எல்லாம் இந்த ஜெயா கணினியை இயக்கக் கற்றுக் கொண்டதால் வந்த விபரீதம்” என பூடகமாக ஸ்டேட்மெண்ட் விட மேலும் அமைதி காத்தேன்.

“என் புத்தியைத்தான் செருப்பால் அடிக்கணும். நான் பாட்டுக்கு நான் உண்டு, கணினி உண்டு, தமிழ்மணம் உண்டுன்னு இருந்திருக்கணும். என்னோட வலைப்பூவை ஜெயாவும் படிக்கணும்னு பிடிவாதம் பிடித்ததுதான் தவறாகப் போய் விட்டது” என்றான். மேலும் விளக்கினான்.

முதலில் பிகு செய்த ஜெயா பிறகு கணினியில் மூழ்கிப் போயிருக்கிறாள். அப்போது கூட அவனுக்கு அதனால் எல்லாம் பிரச்சினை வரவில்லை. திடீரென இன்று காலை சற்று நேரத்துக்கு முன்னால்தான் எதிர்ப்பார்க்காத வகையில் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

கணினியை திறந்து தனது பதிவுக்கு செல்ல கடவுச்சொல்லை உள்ளிட்டிருக்கிறான். கண்கொத்திப் பாம்பாக அவன் டைப் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த ஜெயாவை அவன் கவனிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவனை அவள் ஒரு கேள்வி கேட்டாள்.

“யார் இந்த சகுந்தலா? உங்கப்பாவின் நண்பர் கே.ஆர்.டி. யின் மகள்தானே” என்று கேட்டபோதும் அவனுக்கு வரும் புயல் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதான். ஆமாம் திடீரென ஏன் அவளைப் பற்றிக் கேட்கிறாள் என கேட்டதும்தான் பாம்ப்ஷெல் வெடித்தது. “அதான் பாஸ்வேர்ட் அடிச்சீங்களே sakunthalaa_1961-ன்னு எனக் கூறிய்தும் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.

எனக்கும்தான். சகுந்தலாவை எனக்கும் தெரியும். எங்களை விட 15 வயது இளையவள் (1961-ல் பிறந்தவள்). நானும் சடகோபராமானுஜமும் பள்ளி நாட்களிலிருந்தே நண்பர்கள். நாங்கள் காலேஜில் படித்த போது சகுந்தலா ஒரு 4 வயதுக் குழந்தை. சடகோபராமானுஜம் என்றால் அவளுக்குப் பிடிக்கும். பிறகு நாங்கள் காலேஜ் முடிந்து வேலைக்காக பம்பாய் சென்றபோது கே.ஆர்.டி. குடும்பத்தாருடன் தொடர்பு விட்டுப் போயிற்று.

சடகோபராமானுஜத்தின் முழியே சரியில்லை. “ஏண்டா அவளோட பெயரை கடவுச்சொல்லா வச்சிருக்கே” ந்னு கேட்டதும் திருதிருவென விழித்தான். சகுந்தலாவை அவன் சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் சந்தித்திருந்திருக்கிறான். அப்போது நான் தில்லியில் இருந்ததால் எனக்கு அது பற்றிக் கூறவில்லை. சிறு வயதில் அவன் மேல் அவளுக்கு ஒரு கிரஷ் இருந்திருக்கிறது. அதை இப்போது அவள் அவனிடம் சொல்லிவைக்க, அவனுக்கும் சற்றே சபலம் தட்டியிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு பிரெண்ட்லியாகக் கூட இருந்திருக்கிறார்கள். ஏடாகூடமாகவெல்லாம் எதுவும் நடந்து விடவில்லைதான். பிறகு அப்பெண்ணே அவனை விட்டு விலகி விட்டாள். இப்போது அந்த நிகழ்வு கடவுச்சொல் வடிவத்தில் மட்டும்தான் மிச்சமிருந்திருக்கிறது. அதுவும் ஜெயாவுக்குத் தெரிந்து விட்டது. என்ன செய்வது என அவன் என்னைப் பரிதாபமாகக் கேட்டான்.

ஜெயா அவனது மாமா பெண். சிறுவயதிலிருந்தே அவள்தான் தன் மனைவியாக வரப்போகிறவள் என்ற விஷயத்தில் அவன் தெளிவாகவே இருந்திருக்கிறான். கிட்டத்தட்ட எனது கதைதான். ஆகவே இருவரது நட்பும் மேலும் உறுதிப்பட்டது. நிற்க.

ஜெயா கையில் ஒரே ஒரு கோப்பை காப்பியுடன் வெளியே வந்து என்னிடம் கொடுத்தாள். சடகோப ராமானுஜத்துக்கு காப்பி இல்லை. “வீட்டிலே கறிகாயே இல்லை, வீட்டு ஆம்பிளைக்கு அதெல்லாம் தெரிய வேண்டாமா?” என சுவற்றில் ஒட்டியிருந்த பல்லியைப் பார்த்த வண்ணம் அவள் என்னுடன் பேசினாள்.

சடகோப ராமானுஜம் வேகவேகமாக பையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த உழவர் சந்தைக்கு கிளம்பினான். நானும் கிளம்ப, “நீ இருடா, இதோ வந்துட்டேன்” எனக் கூறியவாறு என்னை இறைஞ்சும் பாவனையில் பார்த்து விட்டு சென்றான். “ஏதாவது பேசி ஜெயாவின் மனதை மாற்று” என்னும் கோரிக்கை அவனது பார்வையில் இருந்ததை நானும் புரிந்து கொண்டேன்.

அவனது கணினியை ஓப்பன் செய்து பதிவுகள் பார்த்தேன். அச்சுப்பிழைகள் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரை கண்ணில் பட்டது. “போச்சு, நீங்களும் ஜெயமோகனின் விசிறியா” என அலுத்துக் கொண்டே ஜெயா அப்பால் சென்றாள். கட்டுரையில் இருந்த சில வரிகளைப் படித்து நான் வழக்கம்போல கெக்கெக்கே என சிரிக்க, “அப்படியே உங்க நண்பரைப் போலத்தான் நீங்களும்” என ஜெயா அலுத்துக் கொண்டாள். இருந்தாலும் நான் விடாது அவளுக்கு அக்கட்டுரையிலிருந்து சில வரிகளை படித்துக் காட்ட அவளும் சிரித்தாள்.

என்னுள் உறங்கும் ஹைப்பர்லிங் திடீரென உயிர் கொண்டது. நானும் சடகோபராமானுஜமும் சமீபத்தில் 1957-58 கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி திடீரென நினைவுக்கு வந்தது.

அன்று காலை முதல் பீரியட் தமிழ் வகுப்பு. நாங்கள் முந்தைய நாளன்று சப்மிட் செய்திருந்த கட்டுரை நோட்டுகளுடன் தமிழாசிரியர் நரசிம்மாச்சாரியார் ஆஜர். கோபக்காரர், அன்று க்ஷவரம் வேறு செய்திருந்தார். உள்ளே வந்ததுமே “அடேய் சடகோபராமானுஜம்” என சப்தம் போட, அவன் சப்த நாடியும் ஒடுங்க நின்றான். அவனை சற்று நேரம் கூர்ந்து கவனித்து விட்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்த வண்ணம், “ஏண்டா உனக்கு ஜயான்னு யாராவது மாமா பெண் இல்லை அத்தைப் பெண் இருக்கிறாளா” எனக் கேட்க, அந்த அப்பாவியும் ஆமாம் சார் என உளறினான்.

“ஏண்டா மேலதிகாரிக்கு எழுத வேண்டிய கடிதத்தைக் கட்டுரையாக எழுது என்றால், அதை ஏன் ஜயாவுக்கு எழுதினாய்? அதுவும் அன்புள்ள ஜயா என்று” எனக் கேட்ட வண்ணம் அவர் அவனது காது தலையில் சரியாக ஒட்டப்பட்டிருக்கிறதா என பரிசோதிப்பது போல அதைத் திருகினார்.

பிறகு அவனை விட்டு விட்டு, அன்புள்ள ஐயா என்பதை அன்புள்ள ஜயா என தவறாக எழுதுவது மாணாக்கர்கள் வழக்க்ம் எனவும் கூறி, சாதாரணமாக அவர்கள் செய்யும் வேறு எழுத்துப் பிழைகளையும் உதாரணமாகக் கூறினார்.

“ஆக, உனக்காக இந்த பிருகஸ்பதி ரொம்பநாளைக்கு முன்னாலேயே அடி வாங்கியிருக்கிறான்” எனக் கூறி நான் சிரிக்க அவளும் அச்சிரிப்பில் கலந்து கொண்டாள். அப்போது கறிகாய் கடையிலிருந்து சடகோபராமானுஜமும் திரும்ப வந்தான். என்னை பார்வையாலேயே கேட்டான், நான் ஏதாவது கூறி அவள் மனதை மாற்றினேனா என. இல்லை என நானும் பார்வையாலேயே கூற அவன் முகம் வாடியது.

நான் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப அவனும் என்னுடன் கிளம்ப ஆயத்தமானான். “கறிகாயெல்லாம் யார் நறுக்குவதாம்” என உள்ளேயிருந்து பெண்புலியின் உறுமல் கேட்க, அவன் பெட்டிப் பாம்பாய் அடங்கினான்.

நான் வீட்டுக்கு சென்று சில மணி நேரம் கழித்து அவன் என்னைப் பார்க்க வந்தான், ஒரு கேனத்தனமான சிரிப்புடன். நான் போனதும் அப்பெண் அவனை கறிகாய் நறுக்கவே விடவேயில்லையாம். கதவையெல்லாம் சாத்திவிட்டு ஒரே மஜாவாம். கடைசியில் அவள் தன் தலையைத் தடவியவாறே “என் மேல் இவ்வளவு ஆசையான்னு” கொஞ்சினாள் என்றான். ஏன் என்றுதான் புரியவில்லை என்றான்.

எனக்கு புரிந்தது, ஆனால் அவனிடம் சொல்லவில்லை.

இந்தப் பெண்களை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

டிஸ்கி:
1. ஜெயமோகனின் அக்கட்டுரைதான் இக்கதைக்கு இன்ஸ்பிரேஷன்.
2. இது எனது முதல் சிறுகதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

ஜீவி said...

ஐயா, ஜயா ஆனது சரி.

அதே போல், அந்த பாஸ்வேர்ட்,
ஆங்கில 'sakunthalaa'-வை சாகுந்தலா என்றும் படிக்கலாமில்லையா? அதற்கும் காளிதாஸனை துணைக்கு அழைத்து ஏதாவது செய்திருக்கலாம். அப்புறம் அந்த 1961?-- அதற்கும் கொஞ்சம் யோசித்தால், ஏதாவது கிடைக்கமலா, போய்விடும்?

கதையின் ஆரம்ப வரி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைச் சரியாகச் செய்திருக்கிறீர்கள். முதல் சிறுகதை என்பதே தெரியாமல், கதை எழுதும் அந்த நெளிவு சுழிவும் கைவந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

எல் கே said...

நல்ல முயற்சி.

dondu(#11168674346665545885) said...

பஞ்சதந்திரம் படத்தில் வெறுமனே கமல் ஃபோனில் பேசியதற்கே சிம்ரன் சரியாக புரிந்து கொண்டு தேவயானியின் ஹோட்டலுக்கே வரவில்லையா? சகுந்தலா யார் என்பதை ஜயா அறிந்த நிலையில் சடகோபராமானுஜம் பாவம் இல்லையா? சமாளிக்கும் நிலையிலா இருந்திருக்கிறான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ana Times said...

நல்ல சிறுகதை..
சற்றே கணவன் மனைவியின் Roleஐ ரிவர்ஸ் செய்து பாருங்கள்..
The consequences would have been severe..(if at all that happens in real life)

D. Chandramouli said...

A short and sweet story, with an apt message how to tackle ticklish situations (but a third person was needed, though). If the husband had told the incident from the school days, the wife wouldn't have bought it. Since you, apparently a good friend and well-wisher of the couple, narrated it, the wife's mood got totally changed towards the husband. A feel-good, yet, simple story.

D. Chandramouli said...

By the way, I missed quite a few episodes of Engay Brahmanan - I'm slowly catching up with it through your commentary. The abrupt ending of the serial was very un-Venkat like, though, in a way, it was a sigh of relief for me as I didn't have to be tied to serials any longer.

RV said...

முதல் சிறுகதை என்று நம்பமுடியவில்லை. வாழ்த்துக்கள் டோண்டு!

ரமணா said...

1.தருமனுக்கு நேர்ந்த இக்கட்டு என எதைச் சொல்கிறார் கருணாநிதி அவர்கள்?
2.கருத்துகணிப்புகள் திமுகவுக்கு சாதகமாய் இருப்பதாய் வரும் செய்திகள் பற்றி?
3.கனிமொழி கைது ஆவார் எனச் சொல்லப்படும் விவகாரம் வதந்தியா?
4.ராகுல் அடுத்து என்ன செய்வார்?
5.அதிமுக தோல்விகண்டால் அடுத்த மூவ்?

Ganpat said...

கதை கருத்து நன்றாக உள்ளது.
ஆனால் presentation needs a lot of improvement.Good Luck
அச்சுப்பிழைகளின் சிகரம் என நான் கருதுவது திரு ஜெயகாந்தன் ஒரு கதையில் எழுதியுள்ள..
கல்யாண பத்திரிகை ஒன்றில் வாழ்க்கை த்துணை எனும் சொல் வாழ்க்கைத் துளை என்று போடப்பட்ட கற்பனைதான்!

ILA (a) இளா said...

கதை நல்லாபோகுதுங்க. கொஞ்சம் சுருக்கி எழுதியிருக்கலாம். வழவழான்னு போவுது

Unknown said...

டோண்டு.
இப்பொழுது தான் முதல் கதையை எழுதுகிறீர்களா?

புன்னகையை வரவழைத்தது. அந்த ஹைப்பர்லிங்க் நல்ல டச்.

Bags

Arun Ambie said...

முதல் சிறுகதை என்று நம்பமுடியவில்லை.

Gopal said...

Kanimozhi kavalaikalukku idayil oru karuthulla kathai. For the first attempt it is nice.

பாரதசாரி said...

inspriration வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், இது உங்கள் முதல் கதை என்பது எங்கள் காதில் பொக்கே வைக்கும் பெறும் கதை :-). உண்மையாக இருக்கும் பட்சத்தில் ,தொடர்ந்த்து கதை எழுதுங்கள் என்று வேண்டுகிறேன்.
-நன்றி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது