12/17/2005

C.P.W.D அனுபவங்கள் - 1

ஜோஸஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.
"கலக்கிட்டீங்க ஜோஸஃப் அவர்களே. என் C.P.W.D. அனுபவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது."

மத்தியப் பொதுப்பணித்துறையில் நான் பத்து ஆண்டுகள் இளநிலை மின் பொறியாளராக இருந்தேன். கடைசி 7 ஆண்டுகள் ஆவடியில் உள்ள மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் போஸ்டிங். கட்டிடங்களுக்கு மின்சார வையரிங் செய்தல், தெரு விளக்கு போடுதல், நிலத்தடி கேபிள் இடுதல் ஆகிய பணிகள். எல்லா வேலைகளையும் ஒப்பந்தப் புள்ளிக்காரர்கள் செய்ய நாங்கள் செய்த வேலைகளை அளந்து அளவை புத்தகத்திலிட்டு, பில்கள் தயார் செய்து மேலே அனுப்ப வேண்டும். செம வேலை. கட்டிடங்கள் பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன. என் மேற்பார்வையில் 10 கட்டிடங்களுக்கு மேல். கேம்பஸ் முழுக்க ஒவ்வொரு கட்டிடமாகச் சுற்ற வேண்டியது.

விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கான பாயின்டுகள் short, medium & long என்று பிரிக்கப்படும். மூன்று மீட்டர்கள் நீளத்துக்கு குறைவானவை ஷார்ட் பாயிண்டுகள், 3-6 வரை மீடியம் மற்றும் 6 மீட்டர்களுக்கு மேல் லாங்க் பாயிண்டுகள். இங்கு நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள இந்த தகவல் அவசியம், ஆகவே கூறினேன்.

120 போலீஸ்காரர்களை தங்க வைக்க வசதி உடைய 7 பேரக்ஸ்கள் கட்ட வேண்டும். அதில் பல ஹால்கள் உண்டு. ஹாலின் நடு வரிசையில் வரும் விளக்குகள் லாங்க் பாயிண்டுகள். அவற்றின் நீளம் 6.35 மீட்டர்கள்.ஆனால் ட்ராயிங்கில் அவை மீடியம் பாயிண்டாகக் குறிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் என்ன அளவு நேரடியாக எடுக்கப்படுகிறதோ அதைத்தான் அளவைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். அந்த முறையில் நான் லாங்க் என்றே அவற்றைக் குறிப்பிட்டேன். திடீரென பொருளாதார நெருக்கடியால் இரண்டு பேரக்ஸ்களுடன் அப்போதைக்கு வேலையை நிறுத்தி விட்டனர். ஆகவே அவற்றுக்கான பில் மட்டும் போட்டு கணக்கை முடிக்க வேண்டியிருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு மீதி ஐந்து பேரக்ஸுகள் கட்டுவதற்கு க்ளியரன்ஸ் வர அவற்றுக்கான வேலைகள் ஆரம்பித்தன. இங்குதான் விதி விளையாடியது. சிவில் தரப்பில் திடீரென ஒவ்வொரு மாடிக்கும் ஒரு அடி உயரத்தைக் குறைத்து விட்டனர். அது எங்களுக்குத் முதலில் தெரியாது. மீதி எல்லாம் ரிபீட் ஆகவே நான் முதல் இரண்டு பேரக்ஸ்கள் போலவே இங்கும் பாயிண்டுகளை வகைப் படுத்தி விட்டேன். ஆனால் இந்த லாங்க் பாயிண்டுகள் நீளம் 30 செ.மீ. அளவில் குறைந்து 6.05-லிருந்து 5.95 வரை வந்து விட்டன. அவற்றை பார்டர்லைன் பாயிண்டுகள் என்போம். சாதாரணமாக மீடியம் என்றே குறிப்பிடுவோம். எனக்கு உயரம் குறைத்த விஷயம் தெரிந்திருந்தால் அவ்வாறே எல்லாவற்றையும் மீடியமாக அளந்திருப்பேன். எல்லாவற்றையும் போட்டு இரண்டு பில்கள் வந்தவுடந்தான் எனக்கு உயரம் குறைந்த விஷயம் தெரிந்தது. இப்போது அளவை புத்தகத்தில் போட்டதை மாற்றவும் முடியாது. அதற்குள் இந்த விஷயத்தை மேலிடத்திற்கு யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

எதிர்ப்பாராத வகையில் இந்த பாயிண்டுகளை செக் செய்ய E.E. அவர்களே வருவதாகக் கூறி விட்டார். எங்கள் A.E. அவர்கள் என்னிடம் இது பற்றிக் கூறி, "என்ன ராகவன், உங்களைக் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே" என்றார். இந்த அழகில் முகத்தில் ஒரு புன்முறுவல் வேறு. எனக்கு எரிச்சலான எரிச்சல். இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் கூறினேன். "ஆமாம் சார், நாம் இருவருமே கஷ்டத்தில் இருக்கிறோம்" என்றேன். ஸ்விட்சை அணைத்தது போல புன்னகை மறைந்தது. "துரதிர்ஷ்டவசமாக நீங்களும் அதே பாயிண்டுகளை செக் செய்து கையெழுத்திட்டிருக்கிறீர்கள்" என்று அவரிடம் அன்புடன் எடுத்துரைத்தேன்.

அப்புறம் என்ன, இ.இ. வந்த போது, இவரே டேப்பைப் பிடித்து சார் 6.12 மீட்டர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூற இ.இ. யும் திரும்பிச் சென்றார். ஆக என் ஞாபகசக்தி என்னைக் காப்பாற்றியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/08/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி - 2

"என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி" என்றத் தலைப்பில் வந்த இந்தப்பதிவு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. இதுவரை அதில் 537 பின்னூட்டங்கள் வந்து விட்டன. அவற்றில் பெரும்பான்மையானவை நான் மற்றப் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களின் நகல்களே. இப்போதைய நிலையில் அது மிகப் பெரிதாகி விட்டது. அதைத் திறந்து மூட நேரம் பிடிக்கிறது. ஆகவே அதே நோக்கத்துடன் இரண்டாம் பதிப்பை இங்கு துவக்குகிறேன்.

அதில் கூறியவற்றை இங்கு மறுபடியும் நகலிடுகிறேன். போலி டோண்டு என்ற இழிபிறவி செய்த லீலைகள் புதியவர்களுக்குத் தெரிய வேண்டாமா?

"அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html

"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிறக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."


கெட்டதிலும் நல்லது என்பது போல அப்பதிவு இட்டதும் எனக்கு அலை அலையாக ஆதரவு பின்னூட்டங்கள் வந்தன. என் கருத்துகளில் ஒப்புதல் இல்லாதவர்களும் எனக்கு ஆதரவு காண்பித்த அதே சமயம் போலி டோண்டுவும் தன் பங்குக்கு வெறுப்பைக் காண்பித்தான். அவனுடைய பின்னூடங்களில் மிக இழிவனவற்றை அழிக்க வேண்டியதாயிற்று. அதுவே ஐம்பதுக்கு மேல் இருக்கும். ஆக கிட்டத்தட்ட 600 பின்னூட்டங்கள் அப்பதிவிற்கு.

இப்போது இந்திய நேரம் காலை 10.23, டிஸம்பர் 8 -ஆம் தேதி. இந்த நிமிஷத்திலிருந்து நான் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களின் நகல் இப்பதிவிலும் இடப்படும். பழைய பதிவுக்கு ஓய்வு. (a well deserved rest!)

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/04/2005

என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை

1971, செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை. என் பார்வைக் கோணத்தையே புரட்டிப் போட்ட அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. விடிகாலை 6 மணிக்கு பம்பாய் மாதுங்காவில் நான் தங்கியிருந்த சரஸ்வதி நிவாஸில் என் ரூம் மேட் குளத்து ஐயர் வழக்கம் போல "டோண்டு" எங்கள் வேலைக்காரனைக் கூப்பிட, நானும் வழக்கம்போல "என்ன" என்று கேட்டு எழ, எல்லாம் வழக்கம் போலவே நடந்தது. (வேலைக்காரனின் பெயரும் டோண்டுதான், அவன் ஒரு மஹாராஷ்ட்ரியன்).

எங்கள் ஃப்ளேட்டில் மொத்தம் பத்து தமிழர்கள் குடியிருந்தோம். இதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே இந்தப் பதிவில் போட்டுள்ளேன். ஆகவே இப்போது வேறு விஷயம் கூறுவேன்.

இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அந்த ஞாயிறு வரை என் நடத்தை எனக்கு அறுவை மன்னன் என்று பெயர் வாங்கித் தந்தது என்றால் மிகையாகாது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் காலங்களில் நான் கூறிய அறுவை ஜோக்குகள் மகாபிரசித்தம். அவற்றில் ஒன்றை நான் இந்தப் பதிவில் கூறியுள்ளேன். இம்மாதிரி நாளொரு வண்ணமும் பொழுதொரு அறுவையாக வாழ்ந்த நான் படிப்படியாக நண்பர்களால் தவிர்க்கப்பட்டேன். எனக்குத்தான் முதலில் அது புரியவில்லை. என்னைப் பார்த்த உடனேயே நண்பர்கள் ஓடுவது எனக்கு ஒரு விதமானப் பெருமை தருவதாகவே நம்பினேன்.

ஜனவரி 1971-ல் பம்பாய்க்கு வந்த நான் வழக்கமான அறுவை ஜோக்ஸ் சொல்ல இங்கும் என் மேல் ஒரு வித விரோத பாவமே உண்டானது. இப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். இருப்பினும் தவறு என் பேரில் இருப்பதாக நினைக்கவேயில்லை. எப்படியிருக்கும்? நான் என்னவோ ரொம்ப பெர்ஃபெக்ட் ஆசாமி என்ற எண்ணத்தில்தானே நான் இருந்தேன். ஆகவே நான் மாறவில்லை.

மறுபடியும் இந்த குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைக்கே வருகிறேன். நிதானமாக எழுந்து பிறகு 11 மணி அளவில் கன்ஸர்ன்ஸுக்கு சாப்பிடச் சென்றேன். வழக்கம் போலத் தனியாகத்தான், ஏனெனில் என் சக அறைவாசிகள் என்னைத் தவிர்த்தனர்.

சாப்பாட்டுப் பந்தியில் ஒருவன் மிகப் பரிச்சயமாகத் தோன்றினான். ஆனால் அவனை நான் அதுவரை பார்த்ததேயில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. இதை பற்றி யோசித்துக் கொண்டே அவன் தன் நண்பர்களுடன் பேசுவதைக் கவனித்தேன். அவன் மட்டுமே அதிகம் பேசினான். மற்ற நண்பர்கள் அவன் பார்வையை தவிர்த்தனர். இவனோ அதைப் பற்றியெல்லா கவலையற்று அறுவை ஜோக்குகளாக அடித்து தன் ஜோக்குகளுக்கு தானே சிரித்துக் கொண்டிருந்தான்.

திடீரேன எனக்கு மின்னல் போல் ஓர் எண்ணம் வந்தது. "அடேடே இவன் என்னைப் போலவே நடந்து கொள்கிறானே" என்று தோன்றியது. அதுவும் அறுவை ஜோக்குகள் கூறும்போது அவன் செய்த முக சேஷ்டைகள் எனக்கு அறுவெறுப்பாக இருந்தன. அவன் கூட வந்த நண்பர்கள் சங்கடத்தில் நெளிந்ததைப் பார்த்ததும் என் நண்பர்கள் பலர் என் நினைவில் வந்தனர். அடடா இது வரை நாமும் இம்மாதிரித்தானே மற்றவரைப் படுத்தினோம் என்று தோன்றியது. அந்த வினாடியிலிருந்து என் வாழ்க்கை முறையே மாறியது.

சாப்பிட்டு முடிந்ததும் அறைக்குத் திரும்ப மனதில்லை. ஆகவே அரோராவில் காலைக் காட்சிக்கு சென்றேன். படம் புதிய பூமி. எம்.ஜி.ஆர். படம். மூளைக்கு வேலையில்லை. ஆகவே நான் பாட்டுக்கு என்னைப் பற்றியச் சிந்தனையில் ஆழ்ந்து போக முடிந்தது.

இது வரை நடந்ததை மாற்ற முடியாதுதான். இனிமேல் எவ்வாறு நடந்து கொள்வது என்பதைத்தானே பார்க்க வேண்டும். என்ன செய்வதென்று உடனே புலப்படாததால் அமைதி காக்க முடிவு செய்தேன். பேச்சைக் குறைத்தேன். கேட்டக் கேள்விக்கு நேரடியான பதில், இடக்கான கேள்விகளுக்கு மௌனமே பதில் என்று இருக்க ஆரம்பித்தேன். இன்னும் அதிகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன், அறையை விட்டால் கன்ஸர்ன்ஸ், அங்கிருந்து அலுவலகம், மாலை துரை லெண்டிங்க் லைப்ரரி, இரவு கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டப் பிறகு திரும்பவும் அறைக்கு செல்வது என்று ஒரு வழக்கம் செய்து கொண்டேன். ஏதாவது பேச நினைத்தால் அதை கூறத்தேவைதானா என்பதை என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டு பல முறை அதைக் கூறாமலேயே விட்டதில் பல தகராறுகள் தவிர்க்கப்பட்டன.

சரியாக ஒரு மாதம் கழித்துத்தான் என் அறை மற்றும் அலுவலக நண்பர்கள் எனக்குள் ஏற்பட்ட மாறுதல்களை உணர ஆரம்பித்தனர். என்ன ஆயிற்று என்று கேட்டவர்களுக்கு புன்னகை மட்டுமே பதிலாக அளித்தேன். மெதுவாக நண்பர்கள் என்னை ஒதுக்காமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் அவர்களைப் பேச விட்டு நான் காது கொடுத்து கேட்டேன். முடிந்தவரை என்னால் ஆன உதவிகள் செய்தேன். தேவையற்று என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவருடன் தர்க்கம் செய்து அவர்கள் முடிவை மாற்றும் என் வழக்கமான முயற்சியை அடியோடு கைவிட்டேன். ஒருவருடைய கருத்தை மற்றவர்கள் மாற்ற இயலாது, அதற்கு தேவையும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் விரோத பாவம் கொண்டவர்களை அலட்சியம் செய்தேன். அது அவர்கள் எடுத்த முடிவு, நான் யார் அதை மாற்ற என்றுதான் எனக்குப் பட்டது. அதனால் ஏற்படும் கால விரயங்களும் இப்போது இல்லை. நான் பேசும்போது எதிராளி கவனிக்கவில்லை என்று தோன்றினால் பேச்சை அப்படியே நிறுத்தி விடுவேன்.

இன்று இப்பதிவை போடும்போது 34 வருடங்களுக்கு முந்தைய அந்த ஞாயிற்றுக் கிழமை இப்போதும் பசுமையாக என் மனக்கண்களின் முன்னே தோன்றுகிறது. ஏன் அந்த தினம் மட்டும் எனக்கு அவ்வாறு நடந்தது? அந்த முகம்தெரியா அறுவை மன்னனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவன் அல்லவோ என்னை நானே உணரச் செய்தான்?

இன்று வரை அதைப் பற்றி நான் பேசியதோ எழுதியதோ இல்லை. அதை என் மனத்துக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தேன். இப்போது வெளியே எழுதியது மனத்துக்கு நிறைவை தருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/02/2005

மறுபடியும் வெள்ளம்

பார்த்திப ஆண்டில் மழை வரும் என்று எந்த வேளையில் அம்மா கூறினாரோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் மூன்றாம் முறை வெள்ளம். இம்முறை போன தடவையை விட சற்று அதிகமே.

காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. இரவில் வேகம் அதிகரித்தது. அதுவரை ஒரு சமன்பாட்டில் இருந்தவை எல்லாம் அதை இழந்தன. விறு விறுவென்று தண்ணீர் ஏறியிருக்கிறது. இப்போது கட்டிலுக்கு சற்று கீழ் வரை வீடெங்கிலும் தண்ணீர். வீட்டம்மாவையும் பெண்ணையும் அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பியாகி விட்டது. நான் மட்டும் தனியே வீட்டில்.

இவ்வளவு தண்ணீர் காலை நனைக்க பதிவிடுவதும் ஓர் அனுபவம்தானே. இதற்கு முந்தைய பார்த்திப ஆண்டில்தான் பங்குனி மாதம் பிறந்தேன். அந்த வருடம் 1945-46 ல் நல்ல மழை என்று கேள்வி. எனக்கு ஞாபகம் இல்லை.

சென்னையில் பாதுகாப்பாக இருக்கும் நமக்கே இது தாங்கவில்லை என்றால் காவிரிக் கரையில் வாழும் மக்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?

இப்போது மணி இரவு 10.08. மழை அடுத்தப் பாட்டம் ஆரம்பித்து விட்டது. பார்க்கலாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்ன திருவுள்ளம் கொண்டான் என்று. மழை வலுக்கிறது. மேலும் தண்ணீர் விறுவென்று வர ஆரம்பித்து விட்டது. இன்று இரவு சிவ ராத்திரிதான் போலிருக்கிறது.

மெரினா பீச்சில் வேறு சர்வீஸ் சாலை வரை கடல் நீர் வந்ததாமே. இந்த அழகில் கிரிக்கெட் போட்டி வேறு. அறிவுக் கொழுந்துகள்தான் இந்திய கிரிக்கெட் போர்டில் கோலோச்சுகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது