7/11/2008

டோண்டு பதில்கள் - 11.07.2008

பாண்டிய நக்கீரன்:
1. தமிழ் புதின எழுத்தாளர்களில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?
பதில்: ரமணி சந்திரன் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர். நேர்மறை எண்ணங்களுடன், நிமிர்ந்த நடையும் கூர்மையான பார்வையும் கொண்ட அவரது கதாநாயகியர் எனக்கு மிகவும் பிடிக்கும். தார்மீக கோபம் கொப்பளிக்கும் ஜோகிர்லதா கிரிஜாவும் எனக்கு பிடித்தமானவரே. அதற்காக சுஜாதாவை மறந்துவிட முடியாதே, நாடோடி மட்டும் சாமானியமானவரா? இன்னும் பலர் உள்ளனர் யாரைக் கூற, யாரை விட?

2. பிடித்த புத்தகம்?
பதில்: தேவனின் மிஸ்டர் வேதாந்தம்.

3. தமிழ்வாணனின் துப்பறியும் கதையில் கல்லுரிக்காலத்தில் ஈடுபாடு உண்டா?
பதில்: உண்டு. ஆனால் கல்லூரிக் காலங்களில் அல்ல, எட்டாம் வகுப்பு காலம் வரைதான்.

4. அவர் ஆங்கில"சேஸ்" களை காப்பிஅடிப்பதாக சொல்வார்களே?
பதில்: சேஸை மட்டுமா காப்பியடித்தார், மற்றவ்ர்களையும் காப்பியடித்தார். முக்கியமானவர்கள் எட்கர் வேலஸ், செக்ஸ்டன் பிளேக் கதைகளை எழுதியவர்கள் ஆகியோர். அப்படியாயினும் தமிழில் சுவையாக எழுதியதை மறக்க இயலாது.

5. அந்த ஆங்கில "சேஸ்"களைப் படித்ததுண்டா?
பதில்: சில சேஸ் கதைகளை சமீபத்தில் அறுபதுகளில் படித்துள்ளேன், Soft center, World in my pocket etc. அவை என் மனத்தைக் கவரவில்லை. கெட்டவர்கள் ஜெயிப்பது போன்ற தீம்கள் எனக்கு பிடிக்காது.

6. ஆங்கில நாவல்களை தொடர்ந்து படித்த நண்பர்களின் ஆங்கிலப் புலமை இன்றும் ஜொலிக்கிறது?
பதில்: அப்படி ஒன்றும் தெரியவில்லையே. பலருக்கு சேர்ந்தாப்போல் நான்கு வரிகள் பிழையின்றி எழுத வரவில்லை என்பதைப் பார்த்துள்ளேன்.

7. இந்த வரிசையில் தாங்கள் உண்டா?
பதில்: ஏதோ ஆங்கிலம் எழுதுவேன், எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் மொழிபெயர்ப்பாளனாக எங்ஙனம் குப்பை கொட்டுவதாம்?

8. தற்கால எழுத்தாளர்களில் யார் பிரபலம் (விற்பனை அடிப்படையில்)?
பதில்: யாரோ சேத்தன் பகத்தாம். இன்றுதான் பேப்பரில் பார்த்தேன். எனக்கு பிடித்த வெற்றிகரமான எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங். அவரது ஹாரி பாட்டரை யாரால் மறக்க இயலும்?

9. புத்தக விற்பனை படுஅமர்க்களப்படுகிறதே?
பதில்: ஒரு நல்ல புத்தகம் வெற்றியடைவதை யாராலும் தடுக்க இயலாது என்பதுதான் உண்மை.

10. அதிலும் பிரபல புத்தங்களின் "டூப்பிளிக்கேட்" மலிவான வில்லக்கு விற்கப் படுவதை பற்றி?
பதில்: காலத்தின் அலங்கோலம்.


எழில் அரசு:
டோண்டு சார் இந்த பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)

1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
கம்யூனிஸ்டுகள் எப்போதுமே திருந்த மாட்டாங்க. அஞ்சுலே அறிவுக்கு வேலை கொடுக்காதவங்க ஐம்பதிலேயா கொடுப்பாங்க?

2. மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
நாத்தனார் உடைத்தால் என்ன குடம்?

3. நிறை குடம் நீர் தளும்பாது. குறை குடம் கூத்தாடும்
காலி குடமும் தளும்பாது, தெரியுமா?

4. ஆழம் பார்க்காமல் காலை விடாதே
பக்கத்து வீட்டு பையன் எதற்கு இருக்கான்? அவனை காலை விடச்சொல்லி பார்க்கோணும்னு சொல்ற ரேஞ்சுக்கு சில தலைவனுங்க இருக்காங்களே.

5. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
கொஞ்சம் கையில் பிடிக்கிற அளவுக்கு முள் இருத்தல் நலம். இல்லாவிட்டால் இந்த முள் கையில் குத்தி சங்குதான்.

6. யானைக்கும் அடி சறுக்கும்
பிறகு சறுக்கவே செய்யாது, ஏனெனில் அதனோட எடைக்கு கால் முறிவு நிச்சயம்.

7. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
காக்கைக்குத் தெரியுமா பொன்னின் விலை?

8. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)
சில இன்னா செய்தவருக்கு அவர் நடுங்கும் அளவுக்கு உதைத்தால்தான் சரிபட்டு வரும் போலிருக்கிறதே.

9. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
ஜாங்கிரி கூடத்தான் தின்னாது. அதுக்கென்ன இப்போ?

10. வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்.
12-B மாதிரி பஸ்களில் கடமையாற்றும் ஆஸ்தான ஜேப்படித் திருடர்களின் கூற்றா இது?


தென்காசி:
1. சென்னையில் நாடக சபாக்களின் தற்போதய நிலை என்ன?(வாசகர் வருகை, ஹைடெக் மாற்றங்கள்)
பதில்: நன்றாக இல்லை.

2. நாடகக் குழுக்களில் "பிசி"யாக உள்ள குழு யாருடையது?
பதில்: நண்பர் காஞ்சனா ராதாகிருஷ்ணனுக்கு இக்கேள்வி அனுப்பி வைக்கப்படுகிறது.

3. நாடகக் காவலர் மனோகர் வைத்திருந்த பிரமாண்ட அரங்க அமைப்புகளை என்ன செய்தார்கள்?
பதில்: அவர் பிள்ளை எடுத்து நடத்த முயல்வதாகக் கேள்வி. அப்படித்தானே ராதாகிருஷ்ணன் அவர்களே?

4. ரேடியோ நாடகங்கள் கூட தற்சமயம் சோபிக்கவில்லையே?
பதில்: ரேடியோவையே யார் கேட்கிறார்கள், எஃப்.எம். தவிர?

5. டீ.வி சிரியல்கள் எல்லோரையும் இழுத்துவிட்டதே?
பதில்: உண்மைதான். ஆனால் அவற்றில் வரும் கருத்துகள் பலரை பாதிப்பதால் அவற்றைத் தயாரிப்பவர்களின் கடமை அதிகரிக்கிறது. கோலங்கள் தொல்காப்பியனை இது சம்பந்தமாக நான் கேள்விகள் கேட்டேன்.

6. உங்களுக்கு சீரியல்கள் பார்க்கும் பழக்கம் உண்டா?
பதில்: ஆகா உண்டு.

7. அதை பற்றிய விமர்சனம் (பிடித்த அல்லது பிடிக்காத)
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி மிக நல்ல முறையில் எடுக்கப்படும் சீரியல்கள் உண்டுதான். ஆனால் அவற்றில் சொல்லப்படும் பல கருத்துகள் பொறுப்பின்றி டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக கூறப்படுவதுதான் கவலையளிக்கிறது.

8. திரைப்பட உலகம் பெரிய கார்பொரேட் கைகளில், செலவுகூட எகிறுதே?
பதில்: காலத்தின் கட்டாயம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்கே ஓடி கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே. அவர்கள் என்னதான் செய்வார்கள்?

9. 4 படங்களை தவிர மற்ற எல்லாம் ஊத்திக் கொண்டதாமே? (அஞ்சாதே, சந்தோஷ் சுப்பிரமணியம், சண்டை, யாரடி நீ மோகினி)
பதில்: மேலே சொன்ன படங்களில் ஒன்றைக் கூட நான் பார்க்கவில்லை. நோ கமெண்ட்ஸ்.

10. அடுத்த வருங்கால முதல்வர் கனவை அப்பாவுக்காக காண முயலும் விஜய்-ன் குருவி கூட ("நாளைய சின்ன தளபதி" இரண்டின் தயாரிப்பு- அரசு செல்வாக்கு etc)பாக்ஸ் ஆபீஸில் சோபிக்கவில்லையே?
பதில்: செல்வாக்கு ரொம்பவுமே ஓவராக இருந்தாலும் கஷ்டம்தான். மக்களுக்கே வெறுப்பு வந்து வேணுமடா இவர்களுக்கு என மகிழ்ச்சி கொள்ளும் காலம் இது.


ராமகிருஷ்ணஹரி:
1. What will happen to leftists if congresss breaks the understanding?
பதில்: ஆதரவு வாபஸ் என்ற பூச்சாண்டி வாபஸ் ஆகும்வரைதான் செல்லும். வாபஸ் ஆன பிறகு அது புஸ்வாணமே. அதுதான் இப்போது நடந்துள்ளது.

2. Will West Bengal Govt get threats of dissolving, based on law and order in the famous "Nandigraam"
பதில்: மாற்று சக்தி வரும்வரை தெரிந்த பிசாசே மேல் என்ற கோட்ப்பாட்டின்படி அங்கு அரசு பிழைக்கிறது. மமதா போன்றவர்கள் உழைத்தால் அரசு வீழ்வது நிச்சயம்.

3. It is told that leftist forces (all) will get less seats if election is ordered?Is it true?
பதில்: அதை மட்டும் முன்கூட்டியே சொல்ல இயலாது. அவசர நிலை பிரகடனம் செய்து நாட்டை திவால் நிலைக்கு கொண்டு சென்ற இந்திராவே மூன்றே ஆண்டுகளுக்குள் திரும்ப வந்துவிட்டாரே.

4. By joining hands with congress the leftists lost their mass base? Is it ok
பதில்: இடதுசாரிகள் மக்களுடன் தொடர்பை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

5. It seems wind blows in favour of BJP and next PM is Sri Advani?
பதில்: பா.ஜ.க. ஏதேனும் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு காரியத்தைக் கெடுக்காமல் இருக்க வேண்டும், மோடி போன்ற ஊழலற்ற மந்திரிகளை அக்கட்சி தரவேண்டும். அப்போது நீங்கள் சொல்வது நடக்கும்.


ரமணாஸ்திரம்:
1. கடைசியில் சிவப்பு கோழிகளின் சாயம் வெளுக்கப் போகிறதா?
பதில்: எப்போதோ வெளுத்தாகி விட்டதே.

2. ஒரு சில பதவிகளுக்காக காட்டி கொடுக்கும் முலாயம்சிங் யாதவ் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவரவர் அரசியல் நிர்ப்பந்தம் அவரவருக்கு.

3. அப்துல்கலாம் கூட எப்படி? யாரைத்தான் நம்புவதோ!
பதில்: ஏன், அவர் என்ன செய்தார்?

4. அணு ஒப்பந்தத்தை விட பயங்கரமான 123 (hide) பற்றி?
பதில்: அது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆகவே நான் இங்கு பேசாமல் இருப்பதே நல்லது.

5. சீனா கூட 123 ல் கையெழுத்து போடாமால் அணு ஒப்பந்தம் செய்த‌தாக தெரிகிறதே?
பதில்: தெரியாது, அப்படியா?

6. பா.ஜ.க. வின் நிலை தற்போது?
பதில்: அணுவிஷயத்தில் பாஜகவும் காங்கிரஸ் போன்றுதான் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

7. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன் நிலைப்பாடு?
பதில்: மேலே கூறிய பதிலே இதற்கும்.

8. அமெரிக்காவில் பெரும் கூட்டம் வீட்டுக் கடனால் அல்லலுருகின்றனர் என்பது உண்மையா, மிகைபடுத்தப்படுகிறதா?
பதில்: உண்மை நிலைதான். செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு என்று ஒரு சொலவடை உண்டு. இருந்தால் பாதுஷா இல்லாவிட்டால் பக்கிரிஷா. அமெரிக்க தேசமே கடனில் மூழ்கியுள்ளது.

9. காருக்கு பெட்ரோல் போட தன்னையே கொடுக்கும் (பலான சுகம்) போக்கு உள்ளதாமே?
பதில்: இது நான் கேள்விப்படாத கொடுமை.

10. பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாதது போல் தெரிகிறதே?
பதில்: எப்போது பெரும்பான்மை இருந்ததாம்?


ரமணா:
1. சன் டீவி, கலைஞர் டீவி கோழிச் சண்டை எப்படியுள்ளது?
பதில்: ஆழமாகியுள்ளது.

2. அரசு டீவிக்கு மதுரையில் இடமில்லை பார்த்தீர்களா?
பதில்: அரசின் மைந்தர் டி.வி. ஒன்றையும் வர விடாது.

3. நெல்லையில் சிறப்பு கவனிப்பு அரசு டீவிக்கு, கரன் டீவியை ஒழித்துகட்டவா?
பதில்: கரன் டீவி?

4. சன் டீவியில் காட்டவில்லை (வை.கோ, வி.காந்த், ச‌.கு) எனக் குற்றம் சாட்டிய அத்துணை பேரும் இப்போ சன் டீவிக்கு வக்காலாத்து? இது எப்படி இருக்கு?
பதில்: எதிரிக்கு எதிரி நண்பன், அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

5. நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் க.டீவி, ச.டீவிக்கு பின்னால்தான் இல்லையா?
அதில் எள்ளள்வும் ஐயம் இல்லை. கலைஞர் டி.வி. செய்வது அப்பட்டமான காப்பி. காப்புரிமை சட்டப்படி தண்ணி காட்டியிருப்பார்கள் இதுவே மேல் நாடாக இருந்தால்.

6. சன் டீவியின் டிடிஎச் சேவை வெற்றியா?
பதில்: இன்னும் அதன் விலை குறைய வேண்டும். அப்போதுதான் வெற்றி.

7. டாடா அதிபரை இதற்காகதானே மிரட்டியதாக செய்தி வந்தது?
பதில்: அது இப்போது பழைய கதையாகி விட்டதே.

8. மற்ற டீவிகளுக்கு முற்பகல் செய்தது (தீமைகள், இடையுறுகள்) இவர்களுக்கு இப்போ காலதேவன் அழகிரி வடிவில் கொடுக்கிறானா?
பதில்: அது என்னவோ உண்மைதான்.

9. இந்தியாவில் மூன்றாம் அணி கோவிந்தாவானாலும் இங்கே அது நடந்து விடும் போலுள்ளதே? (மருமகன் மாறன் பிள்ள‌களின் பணபலம்)
பதில்: இல்லை என்பது எனது அழுத்தமான கருத்து. மூன்றாவது அணி வெறுமனே ஓட்டுகளை மட்டும் பிளக்கும். அதனால் தொங்கு சட்டசபைகள் அல்லது பாராளு மன்றங்கள்தான் வரும்.

10. தொலைதொடர்பு மெஹா டெண்டரில் ஏதோ நடந்ததாக அரசல் புரசலாய் புய‌ல் கிளம்பியதே, அது மீண்டும் தூசு தட்டப்படுமா?
பதில்: தூசு தட்டினால் யாருக்கு லாபம் என்பதை பொருத்தது அது.


பாண்டிய நக்கீரன்:
1. இன்றைய பதிவுலக ஜாம்பவான்களில் முதல் பத்து பேரை வரிசைபடுத்தவும் (name with url)
பதில்: இது வேண்டாத வேலை. ஆளை விடுங்கள். முதல் ரேங்குகளில் நான் குறிப்பிடுபவர்களைப் பார்த்தால் வேறு வினையே வேண்டாம். ஏற்கனவே டோண்டு ராகவன் ரொம்பவும் பீற்றுகிறான் என்று பலர் எழுதி வருகின்றனர்.

2. தமிழ்மணத்தில் ஒரு சில நல்ல பதிவுகள் பலர் கண்ணில் படாமலேயே போகிறதே,ஏதாவது வழி உண்டா?
பதில்: மனம் இருந்தால் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுப்பது கடினமே அல்ல. அப்படி தேர்ந்தெடுத்த பதிவுகளுக்கு இணைப்பு தாருங்கள் அல்லது கூகள் ரீடரில் சேமியுங்கள்.

3. பாலுணர்வு சம்பந்த பதிவுகளுக்கு ஆதரவு குமிகிறதே?
பதில்: வயசுக் கோளாறு. இது எக்காலத்துக்கும் பொருந்தும்.

4. அதுவும் சமீபகாலமாக அவை கொத்து கொத்தாய் வந்து ஆலவட்டம் போடுகின்றதே? நல்லதற்கா?
பதில்: வரட்டுமே, பொழுது போகிறதல்லவா?

5. மலையாள சினிமா போஸ்டர் போல் தலைப்புகள் வைத்து வாசகர்கள் இழுக்கப் படுகிறார்கள் போலுள்ளதே
பதில்: கண் பார்த்து கை வேலை செய்யும் காலம் இது.

6. மலிவான தந்திர விளம்பர யுக்தியின் வெற்றி கண்டு சில நல்ல பதிவாளர் கூட அதை கையில் எடுக்க முயலுகிறார்களே?
பதில்: ஊரே சிரித்தால் கல்யாணம்.

7. இலைமறைவு காய்மறைவு என்பதெல்லாம் போய் பம்பாய் சிவப்பு விள‌க்கு கதைகள் போல் வலம் வருகிறதே?
பதில்: பாதியாவது மறைத்தால்தான் கவர்ச்சி. முழுக்க திறந்து காட்டினால் மிக சீக்கிரம் எல்லாமே கழண்டு வீழ்ந்து விடும்.

8. ஏற்கனவே இன்றைய இளைய தலைமுறையினர் இந்த சமாச்சாரத்தை"just like that " எனப் பாவிக்கும் போக்கு கண்கூடு.
பதில்: இன்றைய இளையதலைமுறை மட்டும் என்ன புதிதாகவா செய்கிறது. இது காலம் காலமாக நடப்பதுதான். ரோமானியர் காலத்து ஆர்ஜிகள் கேள்விப்பட்டதில்லையா?

9. திரைப் படங்கள், சின்னத் திரை ஆட்டங்கள், பத்திரிகைகளில் வரும் அந்த மாதிரிச் செய்திகள் இளைஞர்களுக்கு தூபம் போடுவது போலுள்ளதே?
பதில்: சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அல்லவா அவை.

10. உங்கள் பதில்கள் ஒரு பொறுப்புள்ள பண்பாடு காக்கும் குடும்பத்தலைவன்
பார்வையில் இருக்க வேண்டும். (வழக்கம் போல் வசதியும் வாய்ப்பும் இருந்தால் அனுபவி ராஜா அனுபவி (skin to skin no sin) என்பது போல் பதில்கள் இருக்கவேண்டாம்‍‍. கொஞ்சம் சீரியஸ் டோண்டு ராகவன் சாராக‌‌)

பதில்: மொக்கை மன்னன் டோண்டு ராகவனிடம் ரொம்பவும் அதிகமாகவே எதிர்ப்பார்க்கிறீர்கள் ஸ்வாமி. என்னது? சீரியஸ் டோண்டு சாரா? எங்கே, எங்கே?

11. பா.ம.க வின் கதை கொஞ்சம் சிரமம் போலுள்ளதே?
பதில்: சற்றே அவசரப்பட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

12. காடுவெட்டியாரை சும்மா விட்டுவிடுவது போல் பாவ்லா காட்டி கட்சியில் கைது படலம் ஆரம்பம்?
பதில்: கொள்ளையில் கூட்டு என்பது எப்போதுமே நிலைக்காது. சம்பந்தப்பட்டவர்கள்தான் பக்குவமாக காலத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

13. அறிவிக்கும் போராட்டங்கள் பிசுபிசுப்பதாக செய்திகள்?
பதில்: அவர்கள் நலனுக்காகவே போராட்டங்கள் என்பதை சரியாக மறைக்கவில்லை. ஆகவேதான் அப்படி.

14. இதெல்லாம் பார்த்தால் அம்மையார் கூட பிகு பண்ணுவாரே?
பதில்: அம்மையார் சரியானபடி காய்களை நகர்த்தல் நல்லது. ஒரேயடியாக பாமகவை ஒதுக்கினால் அவருக்குத்தான் நஷ்டம்.

15. ஏற்கனவே கொடநாடு பங்களாவில் மணி அவர்களுக்கு (சட்டசபை கட்சித் தலைவர்) தரிசனம் மறுக்கப்பட்டுள்ளது?
பதில்: அம்மையாரின் பலவீனமே இம்மாதிரியான செய்கைகள்தான்.

16. விஜயகாந்த், சரத்குமார், மாறன் பிரதர்ஸ் யாரு கூடவும் சேர முடியாதே?(விமரிசனத்தின் விபரீதம்)
பதில்: ஏன் முடியாது? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

7. மருத்துவர் ஐயா ஒரு கணக்கு போட்டால் அரசியல் வேறு ஒரு கணக்குப் போடுகிறதே?
பதில்: இப்படிப்பட்ட தருணங்கள்தான் ஜாதகங்கள் மேல் சம்பந்தப்பட்டவருக்கு நம்பிக்கை வரவழைக்கின்றன.

8. இந்த தடவை தனித்து விடப்படுவார் போலுள்ளது? (மகனும் கைவிடுவார்)
பதில்: நிலைமை அவ்வளவு மோசம் இல்லை போலிருக்கிறதே.

9. அவரது சம்பந்தியை கூட காங்கிரசின் தலைமையிலிருந்து தூக்கிவிட்டார்களே?முதலில் ராமதாசுக்கு கல்தா கலைஞரால், அடுத்து கிருஷ்ணசாமி சோனியா அம்மையாரால், அடுத்து யாருக்கு கல்தாவோ?
பதில்: வன்னியர்களுக்கு கொடுக்கப்படும் கரிசனம் அப்படியே உள்ளது போலிருக்கிறதே.

10. முலாயம்சிங் யாதவ் ஆதரவு கிடத்துள்ளதால் இனி அன்புமணி (அமைச்சர் பணி கோவிந்தாவா!(கலைஞர் அவர்களின் ராஜதந்திரம் மீண்டும்) கட்சிப் பணியாற்ற வேண்டியதுதான் போலுள்ளதே? உப்பை தின்னவர் தண்ணி குடிக்கவேண்டாமா!
பதில்: இப்போதாவது கட்சிப் பணியாற்றட்டுமே. அது ஒன்றும் செய்யாமல்தானே மந்திரியானார்? செய்யட்டும் செய்யட்டும்.


தென்காசி:
1. இன்று விற்கும் புத்தகங்களில் சோதிடம் சார்ந்த புத்தகங்களுக்குத்தான் கிராக்கி ஏன்?
பதில்: எப்போதுமே அம்மாதிரி புத்தகங்களுக்கு மார்க்கெட் உண்டு. இன்னமும் பஞ்சாங்கங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. "பத்திரிகைகள், சினிமா போன்றவை காலப்போக்கில் இவ்வாறு மாறுவது தவிர்க்க முடியாதது. இன்றைய ‘வெகு ஜனப்’பத்திரிகைகளின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், மாற்றம் புரியும். மாறாத பத்திரிகை என்று தேடினால், ஸ்ரீரங்கம் கோயில் வாக்கியப் பஞ்சாங்கம் ஒன்றைத்தான் உடனே சொல்ல முடிகிறது" என்று சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் கூறியதில் அர்த்தம் உண்டு. பஞ்சாங்கத்தை மாற்ற நினைத்தாலும் அதன் தீவிர வாசகர்கள் கோபித்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

2. முக்கால்வாசி டீ.வி.களில் வாஸ்து, பெயர் மாற்றுதல், கல் அணிதல் களைகட்டுகிறதே? அதிகம் பேர் நம்புவதனால்தானே?
பதில்: மூட நம்பிக்கைகளுக்கு காலமோ, இடமோ ஒரு பொருட்டே அல்ல.

3. பகுத்தறிவு சிங்கங்கள் கூட யாகம்,சோதிடம் என் அலைவதாக தகவல், உண்மையில்லையா?
பதில்: உண்மையே.

4. ஒரு சில கட்சிகள் ஜாதகம் பார்த்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர் இல்லையா?
பதில்: சில கட்சிகள்தானா?

5. மனிதன் எவ்வளவு நாத்தீகம், பகுத்தறிவு பேசினாலும் 50 வயதுக்கு மேலே கோயிலே சரணம் என்றுதானே இருக்கிறார்கள்-பக்தி என்று வரும் போது ஜாதகம், சகுனம் பார்ப்பது, சூலம் பார்ப்பது, எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதானே?
பதில்: பக்தி இருப்பதால் மட்டும் மூடநம்பிக்கைகள் இருக்கும் எனக் கூறுவது சரியில்லை. என்ன, வயதாக வயதாக மனமும் தளர்கிறது. வாழ்க்கையில் விழும் அடிகளும் அதிகம். எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலை.


அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/07/2008

நான் பிரிட்டனில் எப்போதுமே கன்சர்வேடிவ் கட்சியைத்தான் ஆதரிப்பவன்

அமெரிக்கா பற்றியும் ரிபப்ளிகன் கட்சி பற்றியும் பதிவு போட்டு படுத்தியாகிவிட்டது. இப்போது பிரிட்டனின் முறை ("யாரையும் விடமாட்டியா நீயி" என்று முரளி மனோஹர் கத்துகிறான்).

அப்பதிவில் உள்ளதுபோலவே இங்கும் என்னை ஒரு சராசரி ஆங்கிலேயனாக (John Bull) கற்பனை செய்து கொண்டுதான் எழுதுகிறேன். பிரிட்டனில் கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சிகளைத் தவிர லிபெரல் கட்சியும் உண்டு ஆனால் அவ்வளவு பெரிய அளவில் அல்ல. அதன் தலைவர் ல்லாய்ட் ஜார்ஜுக்கு பிறகு அக்கட்சியிலிருந்து யாருமே அரசு அமைக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்பதிவில் இதற்கு மேல் வேண்டாம்.

நான் அமெரிக்கா விஷயத்தில் கூறியது போலவே கன்சர்வேடிவ் கட்சியினர் ஆட்சி காலத்தில்தான் பிரிட்டன் பல பெருமைகளை அடைந்தது. மனதுக்கு வருபவர்கள் சர்ச்சில் மற்றும் மார்கரெட் தாட்சர். சர்ச்சில் பற்றி கூறவே வேண்டாம், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் அவர் பிரிட்டனுக்கு அளித்த திறமையான தலைமை சரித்திர புகழ் பெற்றது.

மார்கரெட் தாட்சர் பற்றி இப்போது கூறுவேன். அதற்கு முன்னால் சிறு டைவர்ஷன். "Yes Minister" "Yes Prime Minister" ஆகிய ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின் உள்ளர்த்ததோடு:

"It is quite a novel idea, Mr. Minister" (ஏன் சார் இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க!)

"It is quite a courageous step, Mr. Minister" (உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம் டோமரு!)

"That was really brave of you Mr. Minister" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான் எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா?)

அதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர் சிரிப்பை விளைவிப்பவை.

ஓக்கே, விட்டால் இந்த டோண்டு ராகவன் அந்த சீரியலைப் பற்றி கூறிக்கொண்டே போவான், அதற்கென்று தனிப்பதிவு வரும் என்று உங்களையும் முரளி மனோஹரையும் எச்சரிக்கிறேன்.

இந்த நிலையில்தான் பிரிட்டன் தாட்சர் பதவி ஏற்றபோது இருந்தது. சாண் ஏறினால் முழம் சறுக்கியது. அப்போது மார்கரெட் தாட்சர் நெடிந்து எழுந்தார். அவர் எண்பதுகளின் முழுதிலும் பதவியில் இருந்தார். நீண்ட கால பிரதமர். தனது குறுகிய கால அரசியல் எதிர்க்காலத்தை நினையாது தடாலடியாகச் செயல்பட்டார். 1982 வாக்கில் அர்ஜண்டைனாவுக்கு எதிராக ஃபால்க்லேண்டை மீட்டு பிரிட்டிஷாரின் சுயமதிப்பை அதிகரித்தார். முற்றிலும் அரசியல் செயல்பாடுதான் இது ஆனால் அந்த நேரத்துக்கு தேவைப் பட்டது. பிறகு அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கினார். அதன் பலனாக அதுவரை வெள்ளை யானையாக செயல் பட்டு பொது பணத்தை முழுங்கிய அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஆரம்பித்தன. அவர் செயல்பட்ட முறை மற்றவர்களாலும் கடைபிடிக்கத் தக்கவை. என்ன, அதற்கு நல்ல தில் வேண்டும் அவ்வளவே. அது அவரிடம் அபரிதமாக இருந்தது. "இரும்பு பெண்மணி" என ரஷ்யர்கள் அவரை அழைத்தனர். அதே காலக் கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரீகனுடன் சேர்ந்து அவரும் சோவியத் யூனியன் அழியக் காரணமாக இருந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுவேன்.

அந்த அளவுக்கு லேபர் கட்சி சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். பிரதமர் க்ளெமெண்ட் அட்லீயை பற்றி அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சர்ச்சில் கிண்டலுடன் கூறினார்: "Atlee is a very modest man, he has got a lot of things to be modest about"! (அட்லீ ரொம்பவும் அடக்கமான மனிதர். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் ரொம்பவுமே உண்டு)! அவரது காலத்தில்தான் பிரிட்டனின் சாம்ராஜ்யம் கரைய ஆரம்பித்தது. இதில் அவர் தவறு ஏதும் இல்லை என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன். ஆனால் ஒரு சராசரி ஆங்கிலேயன் இதை நினைத்து பார்க்காமல் இருக்க மாட்டான்.

சர்ச்சில், மார்கரெட் தாட்சர் அளவுக்கு லேபர் தரப்பிலிருந்து ஒரு பிரதம மந்திரியும் என் கண்ணில் படவில்லை. அப்படி இருந்தால் பதிவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.

பதிவை பப்ளிஷ் செய்த பிறகு இன்று வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு வேலை விஷயமாக செல்ல வேண்டியுள்ளது. சில மணி நேர வேலைகள், ஆகவே பின்னூட்டங்கள் வெளியிடப்படுவதில் தாமதம் வரலாம், மன்னிக்கவும். (என்னை அழைத்து செல்ல எனது கார் பத்து மணிக்கு வரும், அதுவரை கணினியை திறந்து வைக்க உத்தேசம்).

அது சரி, அடுத்து வரப்போகும் பதிவுகளில் ஜெர்மனியை பற்றி பேசும்போது டோண்டு ராகவன் எந்தக் கட்சியை ஆதரிப்பான் என்பதை ஊகிக்க இயலுமா?

வாழ்க மொக்கை!

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/04/2008

டோண்டு பதில்கள் - 04.07.2008

பாண்டிய நக்கீரன்
1. ஒருவேளை மாறன் சகோதரர்கள் செல்வி ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்தால்?
பதில்: அடுத்த தேர்தல் சுவாரசியமாகவே இருக்கும்.

2. கலைஞர் என்ன அறிக்கை விடுவார்?
(குறிப்பு:ஜெயலலிதாவும்,மாறன் மகன்களும்-பெரியாரின் பரம வைரிகளான இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள்)

பதில்: சூத்திரனான என்னை அழிக்கவே இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என அறிக்கை விட்டால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

3. தினகரன் பத்திரிகை, அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தினமலர், துக்ளக் பட்ட அவஸ்தையை அனுபவிக்கும் போல் உள்ளதே?
பதில்: எல்லா செயல்களுக்கும் எதிர்வினை ஒன்று இருக்குமல்லவா?

4. அண்ணா அவர்கள் சொன்னது போல் திமுகவை அவரது தம்பிகளே ......?
பதில்: தவறு, அவரது ஒரு தம்பியே என்று திருத்தி கொள்ளவும். அதுவும் பெரிய குடும்பஸ்தரான அந்த ஒரே ஒரு தம்பி!

5. மத்திய அரசில் அத்வானி பிரதமர் ஆனாலும் இதே கொள்கைகளைத்தான் கடைபிடிக்கப் போகிறார்கள்?
பதில்: எதை குறிப்பிடுகிறீர்கள்? அணு ஆயுத ஒப்பந்தம் அல்லது பொருளாதாரக் கொள்கைகள்? இரண்டுக்கும் பதில் ஆம்தான்.

6. புதிய மொந்தை பழைய கள் கதைதானே? மீண்டும்?
பதில்: ஆம்.

7. பா.ம.க.வை வெளியேற்றிவிட்டு விஜயகாந்த்தை காங்கிரஸ் துணையுடன் இழுக்க திமுக முயலுவதுபோல் உள்ளதே?
பதில்: கலைஞர் ஏதாவது இம்மாதிரி செய்து கட்சியை தேற்றினால்தான் உண்டு.

8. வை,கோ வின் எதிர்காலம் அவ்வளவுதானா?
பதில்: பாவம் அவர். புலிகளை அம்மாதிரி வெளிப்படையாக ஆதரிப்பதன் பலனை அறுவடை செய்கிறார்.

9. ஒருவேளை கலைஞருக்கு பின்னால் ஆட்சி அதிகாரம் மதுரை அழகிரியின் கைக்கு சென்றால்?
பதில்: திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாதிரி நடக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் திமுகவின் வெற்றிகள் பலவற்றுக்கு அழகிரிதான் காரணமாக இருப்பார்.

10. இலவு காத்த கிளி யாக மாறும் ஸ்டாலின் என்ன செய்வார்?
பதில்: சோகப்பாடல்?


ரமணா:
1. பணவீக்க விகிதம் மொத்த குறியீடு எண்ணின் அடிப்படையில் அதுவும் 1994 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் தவறாகக் கணக்கிடப் படுவதாக சொல்வது பற்றி தங்கள் கருத்து?
பதில்: எனக்கு சற்றே தகராறான விஷயம் இந்த புள்ளிவிவரங்கள். ஒன்று நிச்சயம், பணவீக்கத்தின் அடிப்படைகள் வேகமாக அப்போதைய அரசின் சௌகரியத்துக்கு ஏற்ப மாற்றப்படுபவை. ஆகவே ஒரு ஒட்டுமொத்தமான பிக்சர் கிடைப்பது கஷ்டம். நான் தேர்ந்தெடுக்கும் முறை தங்கத்தின் விலை. ஒரு பவுன் தங்கத்துக்கு 1932-ல் எவ்வளவு மூட்டைகள் அரிசி கிடைத்ததோ அதே அளவு அரிசி இப்போதும் கிடைப்பதாக தெரிகிறது. சமீபத்தில் 1979-ல் ஆகஸ்டு மாத அளவில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூபாய் 450. இன்று 9000-க்கும் மேல். ஆகவே 1979 விலைகளை போல இப்போதைய விலைகள் 20 மடங்குகள். அவ்வளவே எனக்கு சொல்லத் தெரியும்.

2. இந்தியாவின் இப்போதையை பணவீக்கம் (உண்மையாக 25% என்கிறது ஒரு தகவல்) நிலைமைக்கு காரணமான இரு மேதைகளும் வேறு ஒரு pay roll ல் உள்ளதாக வரும் தகவலில் உண்மை இருக்குமா?
பதில்: உண்மை இல்லை. அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் ரொம்பவுமே நேர்மையானவர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை அசைக்க முடியாமல் உள்ளது.

3. நிதி அமைச்சரை மட்டும் குறை கூறுவது உங்களுக்கு ஏற்புடையதா?
பதில்: இல்லை. அவரும் பாவம் இடதுசாரிகளால் ரொம்பவுமே பீடிக்கப்பட்டுள்ளார்.

4. பொதுவாக பங்கு வணிகம் சரிந்தால் முட்டுக் கொடுக்க கொள்கை பரப்புச் செயலாளர் போல வரும் நிதி அமைச்சர் இப்போது மெளனம் சாதிப்பது ஏன்?
பதில்: என்ன கூற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டா நம்மிடம் கூறாது வஞ்சனை செய்கிறார்? அவரே மூச்சு திணறுகிறார் இப்போது.

5. அரசின் தவறான (நியாயம், நேர்மை, தர்மம் இவையெல்லாம் பழங்கதையாய் ஆகிவிட்ட நம் பாரத தேசத்தில்) பொருளாதரக் கொள்கையினால் விலைவாசிகள் வெகுவாக ஏறி, உணவுக்காக உள் நாட்டு சண்டை, கலவரம், கொள்ளைகள் முதலிய நடந்தால் அதற்கு யார் காரணம்? (இது கற்பனையல்ல நடக்கப் போகும் நிதர்சனம்)
பதில்: இம்மாதிரி பொருளாதார நெருக்கடிகள் உலக பொருளாதாரத்தில் பல முறை நடந்து விட்டன. இந்தியாவும் உலகத்தின் ஒரு பகுதி அவ்வளவே.

7. கடைசியில் நமது கடலில் மீன் பிடிக்கும் உரிமையையும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளுக்கு தாரை வார்க்க அரசு முயலுகிறதே?
பதில்: ஓரளவுக்கு மேல் தீவிரமாக மீன் பிடிப்பதை செய்தால் நமக்குத்தான் சுற்றுப்புற சூழல் கெட்டு நஷ்டம். நீங்கள் சொல்வது நிஜமா எனத் தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் அரசு செய்வது கண்டிக்கத் தக்கது.

8. அரசு காண்டிரக்ட்களில் 30% கட்சிகாரங்களுக்கு,20% ஒப்பந்தக்காரருக்கு மீதம் உள்ள 50% ல் பணிகள் இவ்வளவு நடக்கும் போது கமிஷன் அற்ற ராம ராஜ்யம் இருந்தால் எப்படி இருக்கும்?
பதில்: மோடி பற்றிய இப்பதிவில் நான் எழுதியது இது. "மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்". ஒரு செக்போஸ்டுக்கே இப்படி என்றால் நாடு முழுக்க இதே மாதிரி நிலையிருந்தால் என்ன மாதிரி இருக்கும்?

9. திமுக அமைச்சர்களில் இந்த தடவை நல்ல அறுவடை யாருக்கு?
பதில்: இந்தியன் தாத்தாவோ ரமணாவோதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

10. கனிமொழியின் பதவி ஏற்பு (அமைச்சராக) தாமதம் என்ன காரணம் ( அழகிரியின் சுப்போர்ட் வேறு இருக்கே)?
பதில்: ஸ்டாலினை மறந்து விட்டீர்களே?


தென்காசி:
1. சைவக் கோவில்களைவிட வைணவக் கோயில்களில் கடவுளை வணங்கும் போது ஒரு பரவசம் வருவதன் காரணம்?
பதில்: அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லையே. பல கோவில்களை பார்த்தவன் என்ற முறையில் வேறொன்று கூறுவேன், அதாவது வைணவ கோவிகளில் வெகு சீக்கிரம் நடை சாத்தி விடுகிறார்கள். சைவ கோவில்கள் அப்படி அல்ல. நிறைய நேரம் திறந்திருக்கின்றன. மேலும் சன்னிதிகள் சாத்தியிருந்தாலும் பிரகாரங்களில் செல்ல இயலும். வைணவ கோவில்களை பற்றிய எனது இந்த விமரிசனத்தை இங்கே வைக்கிறேன்.

2. தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?
பதில்: தேசிகரை பின்பற்றுபவர்கள் வடகலை. ஆழ்வார்களை பின்பற்றுபவர்கள் தென்கலையினர். பின்னவர்கள் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள், திவ்யபிரபந்த பாராயணம் செய்து உற்சவருக்கு முன்னால் செல்பவர்கள். வடகலையினர் சம்பிரதாயமாக வேத பாராயணம் செய்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உற்சவருக்கு பின்னால் வேத கோஷம் செய்த வண்ணம் செல்வார்கள். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவங்களில் இந்த வேறுபாட்டை நன்கு காணலாம். மற்றப்படி இருபிரிவினருமே ஐயர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்.

3. சிவனை வழிபடுவர் பெருமாளை வணங்கும்போது வைணவர்கள் மாதிரி செயல்படுவது ஏன்?
பதில்: பெருமாளை வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் வைணவ சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றுவர். அதுவே சிவனை வழிபடுபவர்களுக்கும் பொருந்தும். அச்சமயம் அவர்கள் சைவர்கள். வேதபாடசாலைகள் நடத்துவதில் ஐயர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது.

4. ராமானுஜ சுவாமிகள் பிற ஜாதியினரையும் வைணவராக மாற்றினார் என்பது உண்மையா?
பதில்: அது என்னவோ உண்மைதான். திருவரங்கனின் சிலை மாலிக்காபூர் படையினர் வசம் போகாமல் இருக்க அதை எடுத்து கொண்டு ஊர் ஊராக அலைந்தபோது காட்டுவாசிகள் பலர் பக்தியுடன் உதவினர். அவர்களை எல்லாம் வைணவராக்கினார் அந்த மகான்.

5. பொதுவாகவே வைணவர்கள் முற்போக்கு கொள்கையுடன் இருக்கிறார்களே? இது பற்றி தங்கள் கருத்து?
பதில்: அப்படி ஒன்றும் பொதுப்படையாக கூற இயலாது.


ஆயிஷா LKG:
1) மதம் மாறினால் மரணதண்டனை என்று பதிவெழுதும் இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்தது எந்த அடிப்படையில் என்று ஒன்றுமே புரியவில்லை. இந்த குழப்பத்தை போக்குவீர்களா?
பதில்: மதமாற்றம் வேறுமதத்திலிருந்து தத்தம் மதத்துக்குத்தான் வரவேண்டும் என்று இசுலாமியர் மட்டுமல்ல போப்பாண்டவரே அந்த மனநிலையில்தான் இருக்கிறார்.

2) கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்து சாமியாடிய நமது அறிவுஜீவிகள் யாருமே "மதம் மாறினால் மரணதண்டனை" என்பதை பற்றி முணுமுணுக்க கூட செய்யவில்லை. இது பகுத்தறிவின்பாற்பட்ட கொள்கையா, அல்லது இன்டெலெக்சுவல் தொடை நடுங்கித்தனமா என்பதையும் விளக்கிடுங்கள் டோண்டு சாரே.
பதில்: தொடை நடுங்கித்தனமேதான்.


ரங்கன்:
1. மானுடம், மனிதநேயம், மனிதாபிமானம் போன்ற சொற்களை பற்றிய தங்கள் புரிதல் / வரையரை என்ன?
பதில்: கஷ்டப்படுபவர்களுக்கு தேவைக்கேற்ப உதவுதல் நலம். அதுவும் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர் தன் முயற்சியையும் செய்தால்தான் உதவ வேண்டும். எல்லாமே பிறர் பார்த்து கொள்வார்கள் என விட்டேற்றியாக இருப்பவரை கஷ்டப்பட்டு கொள் என விட்டுவிடுவது நல்லதே. அவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள்.

ஏகே. சுந்தர்:
1. பல மதத்தவர்களும் ஒன்றாக வாழும் ஈவேரா பிறந்த மண் தமிழ்நாடு. ஆனால், இங்கே மதச்சார்பின்மையை பின்பற்ற மறுத்து, இந்து மதத்தின் உயர்வைப் பற்றிய தகவல்களை மட்டுமே வெளியிட்டு, மதவெறியைப் பரப்புகிற இணையதளம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இசுலாமிய இணையதளங்கள், கிறித்துவ இணையதளங்கள் எத்தனை உள்ளன என்பதை அறிவீர்களா?

ரமணா:
1. வீதிகளில் கார்களில் தனியாகச் செல்பவர்களால் தான் பெட்ரோல்/டீசல் செலவு கட்டுபடுத்த முடியாமல் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
பதில்: ஒரு தலைவனுக்கு பின்னால் ஆயிரம் கார்கள் பவனிவரும் நிலையைப் பார்த்தால் நீங்கள் சொல்பவர்கள் செய்வது ஜுஜுபியே.

2. இது மாதிரி பொருளாதார சுனாமிகள் வரும் போது நம்மவர்களும் கொஞ்சமாவது தியாகம் செய்ய முயலுவது மாதிரி தெரியவில்லையே?
பதில்: எதில் தியாகம் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

3. அரசும் நியாயம் இல்லாமல் அதீதமான வரியை குறைக்க மறுப்பது தர்மமாகுமா? (ஒரு லிட்டருக்கு வரி இவ்வளவு என்று fixed ஆக வைக்கலாமே?
பதில்: போன பதிவிலேயே கூறிய பதில்தான் இங்கும். அரசுவரியை கணக்கில் எடுத்து கொண்டு பட்ஜட் போட்டாகிவிட்டது. இப்போது வரியை குறைத்தால் பட்ஜெட்டில் விழும் துண்டு வேட்டியாகும்.

4. அடித்தவரை லாபம் என்று அரசே நியாமில்லாமல் நடக்கும் போது இரும்பு. சிமிண்ட் வணிகர்களை கட்டுபடுத்த முயற்சி செய்வது "ஊருக்குதான் உபதேசம்" இல்லையா?
பதில்: ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது மனித இயல்புதானே.

5. இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
பதில்: எத்தனுக்கு எத்தன் இல்லாமலா இருப்பான்.


அனானி (02.07.2008 காலை 06.06-க்கு கேட்டவர்):
1. What will happen to the world if the crude oil price goes above 200 dollars?.
விலைவாசிகள் தாறுமாறாக ஏறும். பணப்புழக்கம் குறைந்து வீடுகள் கட்டுவது குறையும். கட்டிடத் தொழிலாளர்கள் வேலை இழப்பர். வாங்கும் சக்தி குறைவதால் பொருட்களை வாங்குவது குறையும். அப்போது ஒன்று விலை குறையும் அல்லது சம்பந்தப்பட்ட பொருளின் உற்பத்தி குறையும். மேலும் வேலையில்லாத நிலைமை அதிகரித்து, வாங்கும் சக்தி மேலும் குறைந்து, விடுங்கள் மூச்சு விட்டு கொள்கிறேன்.

2. Is it true, due to on line trading ,the present condition (shortage) for crude oil price, as said by our mof?
அவர் உண்மையில் அவ்வாறு கூறினாரா என்பதை நான் அறியேன். மேலும் ஊகவணிகம் பற்றி எனது அறிவு கம்மி, லேது என்றே கூறிவிடலாம்.

3. When will the govt pull up the culprits?
குற்றவாளி யார் என்பதை பொருத்து அரசின் நடவடிக்கை இருக்கும்.

4. Onion for BJP fall and now petrol for congress?
அப்படித்தான் தோன்றுகிறது. இரண்டுமே ஓவர் சிம்ப்ளிஃபிகேஷன்கள்தான்.

5. It is feared that the inflation will not come down to single digit,in the near future for the following reasons: 1. 6th pay commission to central staff from 1.1.2006; 2. Equal pay to all state govts from 1.1.2006; 3. Pay revision to all psus from 1.1.2007; 4. Free schemes by state govts to remain in office; 5. Farmres not ready to do farming due to their heavy losses; 6. Free on line trading in all posssible ways.
அப்படித்தான் என நானும் அஞ்சுகிறேன்.


எம். கண்ணன்:
1. ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSE) என இரண்டு கல்வித்திட்டங்கள் இருந்தால் போதுமே. தமிழ்நாட்டில் இன்னும் எதற்கு ஆங்கிலோ இண்டியன், மெட்ரிகுலேஷன் என விதவிதமாக கல்வித் திட்டங்கள்? இவற்றில் என்ன வேறுபாடு? எதற்கு இவை தொடர வேண்டும்?
பதில்: ஒவ்வொரு கல்விமுறைக்கும் சரித்திர சமுதாயக் காரணங்கள் உண்டு. உதாரணத்துக்கு ஓரியண்ட்டல் பள்ளியிறுதித் தேர்வு. மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகள் சிறுபான்மையினர் திட்டங்கள் கீழ் வருவன. எல்லாம் அப்படியே இருக்கட்டுமே என்ன பிரச்சினை. யாருக்கு எது விருப்பமோ அதை கற்கட்டுமே.

2. உங்களுக்கு நீச்சல் தெரியுமா? ஆற்று நீரில் நீந்தியதுண்டா?
பதில்: நீச்சல் தெரியும். என் தந்தை திருவல்லிக்கேணி மெரினா நீச்சல் குளத்தில் வைத்து சொல்லிக் கொடுத்தார். ஆறுகளில் நீந்த பயம்.

3. நங்கநல்லூர் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் பெட்டி பெட்டியாக உள்ளனவே? ஏன் அப்படி ? உங்கள் வீட்டில் காற்றோட்டம், வெளிச்சம் நன்றாக வருவதுண்டா?
பதில்: நங்கநல்லூரில் முதலில் வீடுகள் கட்டியது நடுத்தரவர்க்கத்தினரே. அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் காரியத்துக்காகும் வடிவமைப்பே போதுமானதாக இருந்திருக்கிறது. இப்போது வந்து பாருங்கள். பல பிரும்மாண்டமான அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனது வீடு தெற்கு பார்த்த வீடு. சமீபத்தில் 1969-ல் குடிவந்தபோது காற்று பிய்த்து கொண்டு போகும். ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றுக்கும் கொக்கிகள் போட்டு வைக்கும் நிலை. இப்போது சுற்றிலும் பெரிய கட்டிடங்கள் வந்து விட்டதால் அந்த அளவுக்கு காற்று இல்லாவிட்டாலும் நிலைமை பரவாயில்லைதான்.

4. சோ எழுதிய 'கூவம் நதிக்கரையினிலே' எம்.ஜி.ஆர்- கருணாநிதி காலத்திய அரசியலை வைத்து எழுதப்பட்டது. இன்றைய சூழ்நிலைக்கு ஜக்குவின் யோசனகள் பொருந்தி வருமா? 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' மாதிரி - கூவம் நதிக்கரையினிலேவிலிருந்து சிறப்புப் பகுதிகளை அவ்வப்போது பகிரமுடியுமா? இன்றைய பெரும்பாலான தமிழ்மண இளைஞர்களுக்கு அது ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்
பதில்: அதில் ஒரு சுவையான இடம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு குடும்பத்தின் பட்ஜட்டை அரசால் நடத்த முடியுமா என்று கந்தசாமி என்பவர் கேட்ட கேள்விக்கு ஒரு வளவினுள் வசித்த சில குடும்பங்களின் நிர்வாகத்தை அரசு ஏற்று கந்தரகோளம் செய்கிறது. அதை துவங்கும் நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். அதை கிட்டே போய் ஊதி அணைத்து அபசகுனம் உண்டாக்கலாம் என்னும் ஆர்வத்தில் கலைஞர் குத்து விளக்கை நோக்கி கேஷுவலாக நகர, அவர் என்னவோ விஷமம் செய்யப் போகிறார் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த எம்ஜிஆர், ஆனால் அது என்ன என்பது தெரியாது, கலைஞரை நோக்கி நகர்ந்து "என்ன சௌக்கியமா" என்று கேட்டு அவரை கட்டியணைத்து அந்தண்டை தள்ளிக் கொண்டு போகிறார். இதை படித்துவிட்டு பல நாட்களுக்கு எனக்கு நானே அவ்வப்போது சிரித்திருக்கிறேன். அவ்வப்போது பலமாக சிரித்து தில்லியில் பக்கத்துவீட்டு சர்தார்ஜியை துணுக்குற செய்திருக்கிறேன். அப்புத்தகம் கைவசம் இல்லை. வாங்கினால் நீங்கள் கூறுவது போல செய்தால் போயிற்று.

5. 'வியங்கோள் வினைமுற்று' பற்றி சொன்னீர்கள். தமிழ் இலக்கண விதிகளை சிம்பிளாக உதாரணங்களுடன் அவ்வப்போது பதிவுகளாக கொடுக்க முடியுமா ? உங்கள் உதாரணங்களில் மக்கள் மனதில் பச்சக் என்று பதியும்.
பதில்: அவ்வளவு இலக்கண ஆளுமை என்னிடம் இல்லை என அஞ்சுகிறேன்.

6. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலங்களில் அவருக்கு ஆட்சியை நடத்திச் செல்ல உதவிய முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார் ? (உதா: பண்ருட்டி டெல்லி விஷயங்களை கவனித்துக்கொண்ட மாதிரி). எப்படி எம்.ஜி.ஆரால் அதிகாரிகளை நம்பி ஆட்சியை ஒப்படைத்து வெற்றியும் காண முடிந்தது?
பதில்: எம்.ஜீ.ஆர். அவர்களுடைய வக்கீல் அவருக்கு பல நல்ல ஆலோசனைகளை பின்புலத்திலிருந்து தந்ததாக படித்துள்ளேன். விஷயம் அதற்குமேல் தெரியாது. இக்கேள்விக்கு சரியான பதிலை நண்பர் உண்மைத் தமிழன் போன்றவர்கள் இன்னும் சுவைபட தர இயலும். ஆனால் ஒன்று ஆட்சியை நடத்துவது என்பது ஒருவர் மட்டும் ஆடும் ஆட்டம் அல்ல. சுற்றிலும் நல்ல ஆலோசகர்களை வைத்து கொள்ளல் நலம்.

7. இந்திரா காந்தி இப்போது இருந்திருந்தால் இந்த நியூக்ளியர் டீல் மற்றும் இடது சாரிகளை எப்படி கையாண்டிருப்பார்? (கூட்டணி ஆட்சி நிலையில்)
பதில்: இந்திராவிடம் பல தவறுகள் இருந்தாலும் நல்ல ஆளுமை இருந்தது என்பதை மறுக்க இயலாது. சோஷலிசத்தை கட்டிக் கொண்டு அழாமல் இருந்தால் இன்னும் சோபித்திருப்பார். இப்போது இருந்தால் அதை இன்னேரத்துக்கு விட்டிருப்பார் என கூற இயலாது. ஆகவே இக்கேள்விக்கு சரியான விடை கூற இயலவில்லை.

8. சென்னையில் அதிமுக வளர்ந்ததற்கு (அதிக எம்.எல்.ஏக்கள்) காரணம் - திமுகவின் அராஜகத்தின் மீது மக்கள் வெறுப்பா இல்லை ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு, வீராணம் நீர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கையாண்டதா ? தற்போது சென்னை மக்களுக்கு திமுகவின் மீது அபிமானம் எப்படி உள்ளது? (வேலை வாய்ப்பு பெருகியுள்ள நிலையில்)
பதில்: நீங்கள் சொன்ன காரணங்கள் எல்லாமேதான். இப்போதைய நிலை என்னவென்றால் கலைஞரின் குடும்ப அரசியலால் திமுக தொண்டர்களே துவண்டு போயுள்ளனர். ஜெயலலிதா சரியாக காய்களை நகர்த்தினால் அவருக்கு வெற்றி நிச்சயம். ஈகோ எல்லாம் பார்க்காது ராமதாசை வளைத்து போடுவது காலத்தின் கட்டாயம். செய்வாரா என்பது பெரிய கேள்விக்குறி. மொத்தத்தில் ஜெயும் சரி கலைஞரும் சரி தத்தம் தவறுகளால் எதிராளிக்கு அதிக ஆதாயம் தருவதிலேயே நிற்கின்றனர். கலைஞர் அதிக தவறுகள் செய்தால் ஜேயின் வெற்றி நிச்சயம் and vice versa.

9. தமிழ் வலையுலகில் காமம் பற்றி துவங்கிவைத்தது (சமீபத்தில்) ஜெயமோகனின் 'கம்பனும் காமமும்' பதிவுகள் தானே ? யாருடைய காமம் பற்றிய பதிவுகள் சுவையாக இருக்கின்றன?
பதில்: ஜெயமோகன் மிக அழகாக எழுதுகிறார். அதை எழுதுவதும் ஒரு கலையே. இது பற்றி நானும் சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும் என்னும் தலைப்பில் பதிவு எழுதியுள்ளேன்.

10. வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு உங்கள் ஓட்டு விழுமா ? ஆம் என்றால் ஏன் ? இல்லை என்றால் ஏன்?
பதில்: பா.ஜ.க. அல்லது அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்குத்தான் என் ஓட்டு.


பாண்டிய நக்கீரன்:
1. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எங்கும் இதே பேச்சு.இதன் பாதிப்பில் இந்தியர் கதை அதோ கதி எனும் இடதுகளின் வாதம் உண்மையாய் விடும் போலுள்ளதே. 1. வீட்டு வாடகை ஏற்றம்; 2. பணவீக்கவிகிதம் 25 % மேலே மேலே; 3. கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்கும் மேலே; 4. பங்கு வர்த்தகம் பாதாளம் நோக்கி; 5. விவசாயிகளின் கையறு நிலை; 6. பட்டினிச் சாவு வருமோ என பதறும் பத்திரிக்கைகள்.
தங்களின் விரிவான பதில் இன்றைய சூழ்நிலை அடிப்படையில், நடு நிலையுடன்:

பதில்: உலகமயம் வராதிருந்தாலும் இதற்குமேல் கெடுதல்கள் வந்திருக்கும். 1991-ல் திவாலாகியிருப்போம். இது பற்றி நான் கூறுவதை விட நண்பர் அதியமான் கூறுவதைப் பார்க்கலாம்.


வெண்பூ:
1. நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக உணர்ந்தது எப்போது?
பதில்: இப்போது இக்கேள்விக்கு பதில் எழுதும் இத்தருணத்திலும் சந்தோஷமாகத்தான் உணர்கிறேன். என்ன குறை எனக்கு? மிகவும் பிடித்த வேலை படிப்பது, மொழிபெயர்ப்பது. அவற்றை செய்ய செம துட்டு வேறு தருகிறார்கள். வாழ்க்கையே அற்புதமயமானது.

2. உங்களுக்கு பல மொழிகள் தெரிந்ததால் Translator வேலை செய்கிறீர்களா? இல்லை Translator ஆவதற்காக பல மொழிகள் கற்றீர்களா? (ஏற்கனவே மற்ற பதிவுகளில் இதைப் பற்றி எழுதியிருந்தால் தவறாக நினைக்க வேண்டாம். சுட்டி மட்டும் கொடுக்கவும்)
பதில்: இது பற்றி ஜெயா டி.வி.யில் நான் பேட்டியில் கூறியபடி, படிக்கும் ஆர்வத்தாலும், பல பன்மொழி புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிக்கும் ஆர்வத்தாலும் அன்னிய மொழிகளை கற்றேன். மொழிபெயர்ப்பு என்பது அதன் கூடவே பின்னால் ஒரு துணைப்பொருளாக வந்தது.

3. இந்தியா உண்மையாகவே ஜனநாயக நாடு என்பது சரியா? ஏனெனில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முறையில், ஒவ்வொரு படிக்கட்டும் ஜனநாயக ரீதியாகவே ஏறப்படுகிறது (Primary elections for candidate selection by each party, then general election etc.) இங்கு அது கண்டிப்பாக சாத்தியமில்லை, மாநிலத்திலும், மத்தியிலும்.
பதில்: அங்கு அப்படி, இங்கோ, ஸ்டாலினா அழகிரியா என்ற சர்ச்சை. அமெரிக்கா அளவுக்கு ஜனநாயகத்தை பெற இந்தியா போக வேண்டிய தூரம் இன்னும் மிகவும் அதிகம்.


ரமணா:
1. பல தான தருமங்கள் ,கடவுள் கைங்காரியங்கள் ஆலயத் திருப்பணிகள்,ஆன்மீக அமைப்புகளுக்கு தாராள பொருளுதவி, யோக அமைப்புகளுக்கு எல்லா உதவிகளும் அவர்களது வளர்ச்சிக்கு செய்து பெரும் பேர் பெறும் ஆலை அதிபர்கள், பெரும் வணிக பிரமுகர்கள், தொழிற்சாலை முதலாளிகள் பல்ர் தங்களது பணியாளர்களை அடிமைபோல் நடத்தியும் மிகச் சொற்ப சம்பளம் (தினக் கூலி 100 க்கு கீழ்) கொடுத்தும் பெரும் பணம் ஈட்டுகின்றனரே, இவர்கள் செய்யும் மேலே சொன்ன அந்த புண்ணியங்கள் இவர்கள் போகும் வழிக்கும் உதவிடுமா? கடவுளை, சமுதாயத்தை ஏமாற்ற முயலும் இந்த கபட சன்னியாசிகளை பற்றி தங்களின் கருத்து?
அதாவது "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று அவ்வப்போது கூவி, பக்தியை வெளிப்பட காட்டிக் கொண்டு 910 ரூபாய்க்கு மேல் சம்பளம் தராத, "அன்பே சிவம்" நாசர் போன்றவர்களை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் செய்வது புண்ணியங்கள் என யார் சொன்னது? ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பூஜைக்காக ஒரு சீப்பு வாழைப்பழத்தை பக்தர் ஒருவர் தன் வேலைக்கார பையன் (பத்து வயதிருக்கும்) கையில் கோவிலுக்கு கொடுத்து அனுப்ப, பசியோடு இருந்த அச்சிறுவன் இரண்டு பழங்களை மட்டும் அதிலிருந்து பிய்த்து உண்ண, அதை கண்ட பூசாரி அப்பையனை நையப்புடைத்தார். பிறகு பூஜை நடந்தது. அன்று இரவு பக்தர் கனவில் வந்த கடவுள் அவரிடம், இரண்டு பழங்கள் மட்டுமே தன்னையடைந்ததாகக் கூறினார் என்று கதை போகிறது. இதை அப்படியே நம்பும் இந்த டோண்டு ராகவன் உங்கள் இக்கேள்விக்கு வேறு என்ன விடை தருவான் என நினைக்கிறீர்கள்?


பாண்டிய நக்கீரன்:
1. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தங்களை கவர்ந்தவர் யார்?
பதில்: கிருஷ்ணதேவராயர்.

2. முக்கியமான காரணம்?
பதில்: இசுலாமிய மன்னர்களின் ஆக்கிரமிப்புகளை அடக்கியவர்.

3. அவர் செய்த பெரிய நன்மை?
பதில்: இந்து மதத்துக்கு தன்னம்பிக்கை தந்தார்.

4. அவரை மீறி நடந்த பெரிய தவறு?
பதில்: அரசியல் யதார்த்தம் புரியாது இசுலாமியரை தம் படைகளில் நல்ல பதவிகளில் நியமித்தது. அவரது காலத்தில் உடனடி பாதிப்பில்லை, ஏனெனில் அவரது ஆளுமை அப்படிப்பட்டது. அவருக்கு பின்னால் வந்த ராமராயர் காலத்தில் பெரிய வீழ்ச்சி அதனால் உண்டாயிற்று.
இதனால் நான் இசுலாமியரை குறை கூறுவதாக எண்ண வேண்டாம். அவர்கள் மதத்துக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்கள். அவர்களை நம்பியது இவர்கள் தவறு. இக்காலத்தில் மதசார்பற்ற அரசு நடப்பதால் அந்தக் கண்ணோட்டம் இப்போது பொருந்தாது.

5. அவரது நினைவாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில்: திருப்பதி கோவிலுக்கு அவர் பல திருப்பணிகள் செய்துள்ளார்.

6. மன்னராட்சிக்கும் ,இன்றைய போலி மக்கள் ஆட்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு?
போலியாக இருந்தாலும் மக்களாட்சியில் தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை மாற்ற இயலும். மன்னராட்சியில் அது நடக்காது.

7. இன்னும் முடியாட்சி மீது ராஜ விசுவாசம் உள்ளவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: காலத்தோடு ஒட்டாதவர்கள்.

8. தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியோர் யாராவது இந்த உணர்வோடு உள்ளனரா? அவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: இல்லை, நல்ல வேளையாக.

9. இதே மாதிரி தற்சமயம் உலகில் எங்கெல்லாம் மன்னாராட்சி தொடர்கிறது?
பதில்: இங்கிலாந்து, ஸ்பெயின், சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள்.

10. சுதந்திர இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் "super star" யார்?
பதில்: சூப்பர் ஸ்டார் என்றால் ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான் கூறுவேன்.

11. தாங்கள் சொல்லும் காரணம்?
பதில்: எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர்தான் பிரதம மந்திரியாக இருந்திருக்கிறார். அவரது தலைமை ஒருபோதும் கேள்விக்குட்படுத்தப்படவில்லை. சொதப்பல்கள் பல செய்தார், காஷ்மீரத்தில் அவர் செய்த கந்தரகோளம் இன்னும் நம்மை வாட்டுகிறது என்பது உண்மையாயினும் அவர்தான் சூப்பர் ஸ்டார்.

12. அவரோடு அலுவலக விசயமாக (மொழிபெயர்ப்பு) தொடர்பு இருந்ததுண்டா? (அல்லது அவரது காரியதரிசியுடன்)அதில் ஏதாவது புதிய மகிழ்வான அனுபவம் உண்டா? கசப்பான அனுபவம் ஏதாவது? அதை (அந்த நெருக்கத்தை) நண்பர்கள் முன்னேற்றதிற்ககாக சிபாரிசுகள் செய்ய முயன்றதுண்டா? பழமா? காயா?
பதில்: அவர் சமீபத்தில் மே 27, 1964-ல் இறந்தபோது நான் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் இருந்தேன். அன்னிய மொழி ஏதும் தெரியாது. ஆகவே உங்களது இது சம்பந்தமான ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் லேது.

13. அவரையும் இப்போதைய பிரதமரை ஒப்பிட்டு கருத்து சொல்லவும். அவர் இப்போது இருந்தால் என்ன சொல்லுவார்? அது உங்களுக்கு ஏற்புடையதா?
பதில்: அவர் உண்மையிலேயே பிரதமர். இப்போதைய பிரதமர் பொம்மை பிரதமர். இப்போது இருந்தால் அவர் சொல்லக்கூடிய வார்த்தை ஒன்றுதான். அதுதான் "நான்சென்ஸ்". எனக்கு ஏற்புடையதே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/01/2008

கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப் பதிவு டோண்டு ராகவனிடமிருந்து

கம்பனைப் பற்றி வழங்கும் பல சிறு கதைகளில் இதுவும் ஒன்று. உண்மையா என்பது தெரியாது. நடந்தும் இருக்கலாம். யார் கண்டார்கள்? இதுபோல பல கதைகள் உண்டு. இட்டுக்கட்டி சொல்லப்பட்டவையே அதிகம். ஏதோ அக்பர் பீர்பால் கதைபோல நினைத்துக் கேட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

ஒரு சமயம் அரசனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், "கம்பரே இந்த நாடே எனக்கடிமை" என்று. கம்பரோ வாய்துடுக்காக "அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே" என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியதை நினைவுபடுத்த மன்னனுக்கு சுருக்கென்றது. பல நாட்கள் இது பற்றி எண்ணி எண்ணி அவன் மனம் புழுங்கினான். அதை எப்படியோ அறிந்து கொண்டனர் அரசவையில் இருந்த மற்ற ஜால்ரா புலவர்கள். அவர்களுக்கும் சோழனுடைய அரசவையில் கம்பர் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டு பொறாமைதான். நேரடியாகக் கம்பனை அவமதிக்கவோ வேறெதனையும் கெடுதலாகச் செய்யவோ முடியவில்லை. ஆகவே கம்பனுடைய பெயருக்கு இழுக்கைக் கொடுத்து, அரசனால் இன்னும் அதிகமாக வெறுத்து ஒதுக்கப்படச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர்.

கம்பனுக்கு சில பலவீனங்கள் உண்டு. அழகிய பெண்களின் அணுக்கத் தொடர்புகளும் அவற்றில் ஒன்று. அரசவையில் மிகச்சிறந்த நாட்டியக்காரி ஒருத்தி இருந்தாள். பொன்னி என்பதே அவள் பெயர். பொறாமைக்காரர்கள் அவளிடம் சென்று ஒரு சிறு திட்டத்தைக்கூறி அதற்காகக் கையூட்டும் கொடுத்தனர். அத்திட்டத்தின்படி, பொன்னி கம்பனைத் தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தெல்லாம் செய்வித்து மகிழ்வித்தாள். அந்த மகிழ்ச்சியின் போதையில் கம்பன் மயங்கிப்போனான். அத்தருணத்தில் பொன்னி அவனிடம் ஒரு வரம் கேட்டாள். தப்பாமல் தருவதாகக் கம்பனும் வாக்குக்கொடுத்தான்.

ஓர் ஓலை நறுக்கை எடுத்துவந்து கம்பனிடம் கொடுத்து, அதில் கம்பனுடைய கையாலேயே 'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை' என்றெழுதிக் கையெழுத்திடச் செய்தாள். அந்த ஓலை, பொறாமைக் குழுவின் கைக்குச் சென்றது.

அடுத்தநாள் அரசவையில் பலரும் கூடியிருக்கும்போது, அந்த ஓலை அரசனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசன் அதனைப் பார்த்து அதிர்ந்துபோனான். மனதில் சற்று மகிழ்ச்சியும் வந்தது.

'கம்பரே! இது உம் கையெழுத்துதானா, பாரும்?'

'ஆமாம். அதில் என்ன சந்தேகம்?'

'இப்படியெல்லாம் நீர் செய்வீர் என்று யாம் கனவிலும் நினைத்ததில்லை. உம்மை இந்த அரசவையில் வைத்திருப்பதேகூட எமக்குக்கேவலம்'.

'இருங்கள் அரசே! அதில் உண்மையைத்தானே எழுதியிருக்கிறேன்.'

'என்ன உண்மை?"

'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை என்பது உண்மை. தாயாகிய ஸ்ரீ அதாவது தாசி என்னும் பொன்னி - அதாவது பொன்மகள் - லட்சுமிக்குக்
கம்பன் அடிமை என்று எழுதியிருக்கிறேன். சாத்திரவிரோதமாய் நான் என்னத்தை இங்கு செய்தேன்?'

==================================================================================

தானும் புலவர்களைப் போல அரசனை வாழ்த்தி பாடி பரிசில் பெறவேண்டும் என்று சோழ நாட்டு தருமியாகிய ஒரு மகாமுட்டாளுக்கு ஆசை வந்ததாம். அதை பற்றி யோசித்து கொண்டே வரும்வழியில் காக்காய் கரைய, குயில் கூவுவதை ஒரு சிறுவன் "காவிறையே, கூவிறையே என குறிப்பிட்டான். மண்ணைத் தின்னும் தன் சகோதரியின் குழந்தையை அதன் மாமன் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே" என செல்லமாக கொஞ்சுவதையும் கேட்டான். பிறகு மனைவியுடன் ஆலோசிக்கையில் அவள் சலிப்புடன் "ஏதேனும் கனாபின்னா மன்னா தென்னான்னு எழுதிட்டு போங்க" எனக் கூறினாள். பக்கத்து வீட்டு கணவன் மனைவி ச்ண்டையில் அவ்வீட்டு பெண்ணின் பிறந்தகத்தை இழித்து அவள் கணவன் "உங்கள் அப்பான் கோவில் பெருச்சாளி மாதிரி எல்லாத்தையும் சுருட்டினான்" எனக் கூறி அவன் மனைவியால் அதற்காக அப்பளக் கட்டையால் அடிபடும் பாக்கியம் பெற்றான். கூடவே, "உம் அப்பனைப் போல என் அப்பன் சோழரங்க பிரும்மஹத்தி என எண்ணினீரோ" எனவும் அவளால் 'அன்புடன்' கொண்டாடப் பெற்றான். இதையும் நோட் செய்து கோண்டார் நம்மூர் தருமி. பாட்டு இவ்வாறு உருவாயிற்று.

"காவிறையே கூவிறையே மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்க பிரும்மஹத்தியே" என்று.

அவருக்கே பிறகு 'பிரும்மஹத்தியே' என்ற வார்த்தை ஓவராகப் பட்டதால் அதை 'பெருமானே' என மாற்றினார்.

ஆக, காகம் கரைதலைக் கண்டு 'காவிறைய' என்றும், குயில் கூவுவதைப் பார்த்து 'கூவிறைய' என்றும் அப்படியே............... சிறுவன் சொன்ன ஒரு வாக்கியம், குழந்தையின் மாமன் சொன்ன ஒரு வாக்கியம் என அங்குமிங்கும் ஏதேதோ எழுதி, கவிதையென்றெண்ணி, மன்னரின் அவையில் பாட, எல்லோரும் சிரிக்க, கம்பர் மட்டும் - "இது மன்னரைப் போற்றிப் புகழும் அற்புதமான பாடல்" என்று விளக்கம் தந்தாராம்.

காவிரி ஆற்றின் அழகிய கரையில், கூவும் குயிலனங்கள் நிறைந்த சோலைகளுக்கு அதிபதியும், மண்ணைத் தின்ன பெருமாள் கண்ணனின் மாப்பிள்ளை முருகனைப் போன்ற கீர்த்தியையுடையவனும், உங்கள் அப்பன் சிவபெருமானை நிகர்த்த அரசனுக்குரிய வில்லை ஏந்திய பெரிய யாளியே, கர்ணனுக்கு பின்னால் கொடையில் சிறந்த தென்னாட்டு மன்னா (கன்னா பின்னா மன்னா தென்னா), சோழநாட்டு திருவரங்கப் பெருமானுக்கு நிகரானவனே (உவமைப் புறத்து பிறந்த அன்மொழித் தொகை) என்று கூறினாராம்.

==================================================================================

தந்தை பெரியார் தமிழைக் 'காட்டுமிராண்டி மொழி' என்று சொன்னதை சுட்டிக் காட்டி, "இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்று கலைஞரைக் கேட்டார்கள். கலைஞரும் "அது சரிதான்" என்றார். கேட்டவர்கள் திடுக்கிட்டார்கள். கலைஞர் தொடர்ந்து சொன்னார். "ஆதிமனிதன் நாகரிகம் இல்லாத காலத்தில் காட்டுப் பகுதிகளில் திரிந்து வந்தான். தமிழும் அந்த அளவுக்கு முன்னோடியான மொழி என்பதைச் சுட்டிக்காட்டவே அதை காட்டுமிராண்டி மொழி என்றார், பெரியார். இதில் தவறேதும் இல்லை" என்றார்.

====================================================================================

முதலிரண்டு கதைகள் சமீபத்தில் 1880-களில் வீராசாமி செட்டியார் அவர்களால் தொகுக்கப் பெற்ற விநோதரச மஞ்சரியிலிருந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது நிகழ்ச்சி வாராந்தரி ராணி லேட்டஸ்ட் இதழிலிருந்து (06.07.2008 இதழ்) எடுக்கப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது