நான் ஏற்கனவே முதல் பகுதியில் எழுதியபடி பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் எனக்கு அதிகம் பிடிக்கும். இந்தத் தொடரில் ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர்கள் என்று பிரிக்காவிட்டாலும், இதில் அதிகம் வரப்போவது பெண் எழுத்தாளர்களே.
இங்கு நான் குறிப்பிடப் போவது ஜோகிர்லதா கிரிஜா அவர்கள். ரமணி சந்திரன் அவர்கள் அமைதியாக எழுதுவார் ஆனால் கிரிஜாவின் எழுத்துக்களில் ஒரு தார்மீகக் கோபம் கொப்பளிக்கும். இவரது "மறுபடியும் ஒரு மகாபாரதம்" திண்ணையில் எழுதப்பட்டு வந்து இப்போதுதான் முடிந்தது. அதை படித்து அதன் தாக்கத்திலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.
1916-ல் பிறந்த இக்கதையின் நாயகி தனது கதையை தன் தோழியிடம் கூற அந்தத் தோழி இவர் கதையையும் இவரது அன்னையின் கதையையும் மிக அழகான முறையில் முதலில் பாரல்லெல்லாக எழுதி, அவ்வப்போது அக்கதைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும் முறையில் காண்பித்து, பிறகு தாயும் மகளும் ஒன்று சேர்ந்து போராடுவதாக குறிப்பிட்டு என்றெல்லாம் சித்து வேலை காட்டியுள்ளார் ஜோகிர்லதா கிரிஜா அவர்கள். இவரது கதைகளை நான் எழுபதுகளிலிருந்தே படித்து வந்திருக்கிறேன் என்றாலும் நான் இப்பதிவில் பேசப்போவது அவரது "மறுபடியும் ஒரு மகாபாரதம்" மட்டுமே.
இக்கதையின் நாயகி துர்கா 11 வயதாக இருக்கும்போது கதை ஆரம்பிக்கிறது. அவருடைய திருமணம் சிவகுருவுடன் நிச்சயமாகிறது. வழமையான சீர்வரிசைகள், சம்பந்தி மாமியின் அல்பத்தனம், தேவையின்றி வரதட்சிணையை பேசிய அளவுக்குமேல் கூட்டுவது எல்லாம் அபரிதமாக நடக்கின்றன. 1927-ஆம் வருடத்திய அரசியல் நிலைமையும் பேசுபவர்கள் நிலைப்பாட்டிற்கேற்ப கையாளப்படுகிறது. கல்யாண காரியத்துக்கு வந்து சேர்கிறார் பங்கஜம், துர்காவின் உண்மையான அன்னை. பங்கஜத்துக்கு மூன்றும் பெண்ணாக பிறக்க, அதிலும் முதல் இரண்டு குழந்தைகளும் இறந்து பிறக்க, மூன்றாவது பெண்ணையும் கொன்றுவிட பங்கஜத்தின் மாமியார் ஏற்பாடு செய்ய, அக்குழந்தை வேலைக்காரி சின்னக்கண்ணுவால் இன்னொருவரிடம் கொடுக்கப்பட்டு துர்காவாக வளர்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை நான் கூற வேண்டும். 35 வாரங்களாக வந்த இக்கதையின் முதல் சில அத்தியாயங்களை மேம்போக்காகத்தான் படித்தேன். அதிலும் பங்கஜத்துக்கு நேர்ந்த கொடுமைகள் அவற்றை படிக்க என்னை விடவில்லை. ஆகவே துர்காதான் ப்ங்கஜத்தின் பெண் என்ற விஷயம் அப்போது அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது தெரிந்திருக்கவில்லை. இப்போது ரெவ்யூ செய்வதற்காகப் படிக்கும்போதுதான் நான் படிக்காமல் விட்ட விஷயங்கள் நன்கு புலப்படுகின்றன. எவ்வளவு திறமையாக அவற்றை ஆசிரியை கையாண்டிருக்கிறார் என்ற பிரமிப்பு இப்போது மேலோங்கி நிற்கிறது.
பங்கஜத்தின் கணவன் தாசரதி. குணம் கெட்டவன். மூன்று குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்ததற்கு பங்கஜம்தான் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புபவன். சர்வ சாதாரணமாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள ஒப்புகிறான். ஆகவே பங்கஜம் வாழாவெட்டியாக தந்தை வீட்டிற்கு திரும்பநேரிடுகிறது. சமையல் வேலைக்குப் போன இடத்தில் பண்பில்லாத எஜமானனிடமிருந்து தப்பித்து, பக்கத்து வீட்டு காந்தியவாதி சாமிநாதனின் ஆதரவு பெற்று என்று கதை சரளமாகச் செல்கிறது.சாமிநாதனை மணம் புரிந்து, சிறிது காலம் நல்ல முறையில் வாழ்க்கை வாழ முடிகிறது. ஒரு பிள்ளை குழந்தையும் பெறுகிறாள். ஆனால் சாமிநாதன் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட, பங்கஜம் மறுபடியும் அநாதையாகிறார். அவள் பிள்ளை முதல் கணவன் தாசரதி கண்களில் பட அக்குழந்தையை அப்பாதகன் மனம் நடுங்கும் முறையில் கொன்று விடுகிறான். பங்கஜம் தாம்பரத்தில் மஹிளா மண்டலி நடத்தி வந்த டாக்டர் முத்துலட்சுமியிடம் அடைக்கலம் பெறுகிறாள். சில காலம் கழித்து அவள் பெண் துர்காவும் தன் கணவன் சிவகுருவால் வஞ்சிக்கப்பட்டு அதே மண்டலியில் வந்து சேர தாயும் மகளும் தங்கள் உறவு தெரியாமல் முதலில் நல்ல தோழியாகின்றனர். பிறகு உண்மையை துர்கா முதலில் அறிந்து, தன் அன்னையிடம் உண்மை கூறி என்று விறுவிறென நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பிறகு கதை சற்று வேறு தளத்தில் நடக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்வுகள் கதைப்போக்கில் கூறப்பட ஆரம்பிக்கின்றன. இதன் பிறகு காலச்சுழற்சி வெகுவேகமாக நிகழ்கிறது. சுதந்திரம் வந்ததும் ஆசிரமத்துக்கு வந்து சேரும் சுவாமினாதன் பங்கஜத்துக்கு உதவியாகச் செயலாற்ற கதை தாய் மகளையே சுற்றி வருகிறது. ஒரே அத்தியாயத்தில் 1995 -ஆம் ஆண்டு வந்து விடுகிறது. நடுவில் பங்கஜமும் மற்றும் சுவாமினாதனும் காலம் ஆகின்றனர். துர்கா தனித்து ஆசிரமத்தை நிர்வகிக்கிறார். கதையின் முடிவில் அவள் கணவன் சிவகுரு அவரிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆசிரமத்திலேயே ஒட்டிக் கொள்ள ஆசைப்படுகிறான். நல்ல வேளையாக (என் கருத்தில்) துர்கா அசட்டுத்தனமாக அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை.
கதையின் முப்பத்தைந்து அத்தியாயங்களையும் இச்சுட்டியில் பார்க்கலாம்.
இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவை என்னைச் சேரும். நிறைவாக ஏதேனும் தென்பட்டால் அதன் பெருமையெல்லாம் ஜோகிர்லதா கிரிஜாவையே சாரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
22 hours ago
11 comments:
டோண்டு ஸார்,
அம்மணி எங்களுக்கு பக்கத்தூர் (வத்தலக்குண்டு) என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவர் வாஸந்தி மாதிரியான எழுத்தாளினிகள் வந்த கால கட்டத்தை சேர்ந்தவரா? அதற்கு முற்பட்டவரா?
ஜோகிர்லதா கிரிஜா மற்றும் வாசந்தி சமகாலத்தவரே. இப்போது நான் குறிப்பிட்ட, கிரிஜாவின் நாவலும் இப்போதுதான் திண்ணையில் நிறைவு பெற்றது. சோம்பல் பார்க்காமல் 35 அத்தியாயங்களையும் படித்து கருத்து கூறவும், தமிழகத்தின் வினோத் துவா அவர்களே. சுட்டி கொடுத்திருக்கிறேன். அம்மணி தீப்பொறி பறக்க எழுது எழுத்தாளர். அவர் கதைகள் என்னைக் கவர்ந்தன.
அடுத்தது வாசந்தியைப் பற்றித்தான் எழுத வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
ஜோதிர்லதாவின் ரசிகன் என்று கூறமுடியாவிட்டாலும் அவருடைய பல கதைகளைப் படித்திருக்கிறேன்.
எனக்கென்னவோ அவருடைய கதைகள் எல்லாமே ஏதோ ஆண்வர்க்கத்தினரை சாடவேண்டுமென்றே எழுதியதுபோல தோன்றியதுண்டு.
வாசந்தியைப் போலவோ, லக்ஷ்மியைப் போலவோ அமைதியாக சமுதாயத்தை ஒரு நடுநிலையான பார்வையுடன் எழுதக்கூடிய பக்குவம் இல்லாத ஆசிரியையாகவே அவரைக் காண முடிந்திருக்கிறது.
மிகைப்படுத்தப் பட்ட கொடுமைகள், அவலங்கள் என்பதைப் பற்றி எழுதுவதால் யாருக்கு என்ன பலன்? ஒரு குடும்பம் என்றால் எல்லாம் இருக்கும். ஆனால் இவருடைய கதைகளில் மக்ழ்ச்சி, சந்தோஷம், என்பது மருந்துக்குக் கூட இருந்து நான் படித்ததில்லை.. எங்கோ ஒன்றிரண்டு கதைகளில் இருந்திருக்கலாம்..
அவருடைய எழுத்துக்களிலும் கூட கோப உணர்ச்சியே மேலோங்கி நிற்கும்..
ஆகவே அவருடைய எழுத்துக்களில் எனக்கு அவ்வளவாக பிரியம் இருந்ததில்லை..
ஜோசஃப் அவர்களே,
எது எப்படியானாலும் நான் சுட்டிய இக்கதையைப் படியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். 35 அத்தியாயங்கள். திண்ணை தளத்தில். கணினியிலிருந்தே படித்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார்,
கிரிஜா அம்மையாரின் ஒரிரு கதைகளையும், பெண் விடுதலை பற்றிய ஒரு புத்தகத்தையும் படித்திருக்கிறேன். மதிப்பிற்குரிய டி பி ஆர் ஜோஸஃப் ஸாரின் கருத்துக்கள்தான் எனக்கும்.
நான் வாஸந்தியின் காலம் பற்றி கேட்டதற்கு காரணமும் அதுதான். அந்த காலத்திலிருந்து வந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஒரு மாதிரியான முறைத்த பார்வையுடன், கையில் எதையோ (பேனா அல்லது விளக்குமாறு), விறைப்பான தோற்றத்துடன், "புர்ஜி பெண்" பாத்திரங்களுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் கொடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். (வாஸந்தியையும் சேர்த்து.) அது பற்றி தங்களின் கருத்து என்ன?
சோம்பல் பார்க்காமல் 35 அத்தியாயங்களையும் படித்து கருத்து கூறவும்,
அது சரி. படிக்க வேண்டுமானால் முயற்சி செய்வேன். ஆனால் தாங்கள் சொல்லியிருந்த சோம்பல் பார்க்காமல் வகையில் இல்லை. சங்கத்தில் பிரச்சினை ஆகிவிடும்.
ம்யூஸ்
தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர் (தற்போதைக்கு வேறு யாரும் இல்லை)
அகில உலக சோம்பேறிகள் சங்கம்,
பெங்களூர்.
அது சரி. படிக்க வேண்டுமானால் முயற்சி செய்வேன். ஆனால் தாங்கள் சொல்லியிருந்த சோம்பல் பார்க்காமல் வகையில் இல்லை. சங்கத்தில் பிரச்சினை ஆகிவிடும்.
எப்படியானாலும் படித்தால் சரி என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சம்மிங் அப்பை படிக்க ஆவலாக உள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரமணி சந்திரன் கதைகள் படித்திருக்கிறேன். Typical Mills & Boons type கதைகள். இந்த கதைகளை டி.வி சீரியலாக எடுத்தால் தாய்க்குலம் ஆதரவு தரும் என்று நினைக்கிறேன்.
சிவசங்கரியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரமணி சந்திரனின் கதைகள் டிவி சீரியல்களாக வெற்றி பெறும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.
சிவசங்கரியும் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரே. அவரைப் பற்றியும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
நீங்கள் சுட்டிய இக்கதையை படித்தேன். கொலையாளி தாசரதி அதே இடத்தில் அதே மாதிரி ரயிலில் அடிப்பட்டு இறப்பது மனத்துக்கு ஆறுதலைத் தந்தது.
ஃப்ளெமிங்கோவை நானும் பின் மொழிகிறேன். சிவசங்கரி அவர்களைப் பற்றியும் எழுதவும்.
கிருஷ்ணன்
சரி, அடுத்தது சிவசங்கரிதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உஷா சுப்ரமணியத்தை மறந்துவிட்டீர்களே?..
இன்னும் ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணா இவர்கள் முன்னால்
ரமணி சந்திரன் எல்லாம் நினைத்துக்
கூடப் பார்க்க முடியாதவர்கள்.
Post a Comment