9/29/2007

அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே

அறுபதுகளில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ல்லாய்ட் சி. டக்லஸ் மிகவும் முக்கியமானவர். அவரது ஆங்கில நடை எளிமையாக இருக்கும். மனதைக் கவரும். எல்லாவற்றையும் விட முக்கியமாக கதைகளின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது 1929-ஆம் ஆண்டு அவர் எழுதிய Magnificent Obsession என்னும் நாவல்.

கதை சுருக்கம் பின்வருமாறு.

ராபர்ட் மெர்ரிக் என்னும் இளைஞனுக்கு படகு விடும்போது விபத்து ஏற்படுகிறது. அவனுக்கு திறமை வாய்ந்த மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்து அவனைக் காப்பாறுகிறது. ஆனால் அதே சமயம் சற்று அருகிலேயே இருத நோயால் அவதிப்பட்ட மருத்துவர் ஹட்ஸனை அக்குழுவால் காப்பாற்ற சமயமின்றி அவர் இறக்கிறார். ஹட்ஸன் சிறந்த மூளை சிகிச்சை நிபுணர். ராபர்ட்டோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் பணக்கார இளைஞன். வேலை செய்யாமலேயே வாழ்நாள் முழுதும் கழிக்கும் அளவுக்கு பணம் படைத்தவன். மருத்துவர் ஹட்ஸன் இறந்த அதே மருத்துவ மனையில்தான் உயிர் பிழைத்த ராபர்ட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தான். மருத்துவருக்கு பதிலாக இவன் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் இவன் காதுபடவே பேசுகின்றனர்.

முதலில் கோபப்பட்ட ராபர்ட், பிறகு ஹட்ஸனின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு துணுக்குறுகிறான். மற்றவர்கள் ஆதங்கப்பட்டதின் உண்மை அவனுக்கு உறைக்கிறது. நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன செய்வது என யோசிக்கிறான். ஹட்ஸன் இறந்ததால் பல நோயாளிகளின் நிலையில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என அவனுக்கு தோன்றுகிறது. இதே நிலைமையில் பலர் மருத்துவ மனைக்கு பெரிய நன்கொடையாகக் கொடுத்து தங்கள் மன நெருடலை நீக்க முயற்சித்திருப்பார்கள். ஆனால் இவன் சற்று வித்தியாசமாக சிந்தித்தான். ஹட்ஸன் இடத்தில் இன்னொரு மருத்துவர் அதே திறமைகளுடன் தேவை. இதை மனதில் இருத்தி தானும் ஹட்ஸன் மாதிரியே மூளை சிகிச்சை நிபுணனாக வேண்டுமென தீர்மானிக்கிறான்.

இடையில் இவனிடம் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டயரி கிடைக்கிறது. ஆனால் அதை டாக்டர் ஹட்ஸன் முழுக்க முழுக்க சங்கேதக் குறிகளாலேயே நிரப்பியுள்ளார். பிறகு அதனுடன் போராடி அதற்கான திறவுகோலை கண்டுபிடிக்கிறான். டாக்டர் ஹட்ஸனின் ரகசிய உலகுக்குள் பிரவேசிக்கிறான். அற்புத உலகம் அது.

ராபர்ட் மருத்துவ கல்லூரியில் சேருகிறான். தன்னை விட பல ஆண்டுகள் சிறிய மாணவர்கள் மாணவிகளுடன் கல்லூரிக்கு செல்கிறான். பலரது ஏளனத்துக்கு ஆளாகிறான். மனம் தளறாமல் படிக்கிறான். பலருக்கு பல உதவிகள் செய்கிறான். பொருள் ரூபத்திலோ, உடல் உழைப்பாகவோ அவன் செய்யும் உதவிகள் பலரது வாழ்வில் வசந்தத்தை மலரச் செய்கின்றன. உதவி அளிக்கும்போது ஒரே ஒரு நிபந்தனைதான் விதிப்பான். அது என்னவென்றால் தான் உதவி செய்தது, செய்வது செய்யப்போவது எல்லாமே ரகசியமாக இருக்க வேண்டும் என்பதே அது.

சில காலங்களுக்கு பிறகு அவனிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுடன் பிரதியுபகாரம் செய்ய வரும்போதோ, பெற்று கொண்ட பொருள் வசதிகளைத் திரும்பத் தர முயலும்போதோ ஒன்றே ஒன்றுதான் கூறுவான். "நான் இதை எப்படித் திரும்பப் பெறுவேன்? அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே"! என்று. அதற்கு மேல் கூற மாட்டான். விளக்கம் கேட்டாலும் சொல்ல மாட்டான்.

நாவலிலும் முதலில் விளக்கம் தரப்படவில்லை. வாசகனான நான் தலைமயிரைப் பிய்த்க்து கொண்டேன். நாவல் படித்து முடிந்ததும்தான் விளங்கிற்று.

எல்லாவற்றுக்கும் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டைரிதான் காரணம். அவர் பலருக்கு ரகசியமாக உதவிகள் செய்து வந்தவர். தன் பெயர் எக்காலத்திலும் வெளியில் வரலாகாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அவ்வாறு அவர் காரியங்கள் செய்து கொண்டு போகப் போக அவர் முனைப்புடன் செய்ய முயன்ற காரியங்களில் வெற்றி தேவதை சர்வ சாதாரணமாக அவருக்கு துணை இருக்க ஆரம்பித்தாள். தர்மத்தின் புண்ணிய பலன் அடுத்த பிறவி வரை காத்திராது இப்பிறவியிலேயே கிடைத்து விடும் என்பதுதான் கதையின் அடிநாதம். இதை உணர்ந்ததாலேயே அவர் பிரதியுபகாரங்களை மறுத்து வந்த்தார்.

வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியலாகாது என்னும் சொலவடையை இக்கதை விளக்குகிறது என்பதையே நான் புரிந்து கொள்கிறேன். மகாபாரதத்தில் வரும் கர்ணன் செய்த கொடைகளின் பலனாய் அவன் மேல் விடப்பட்ட பார்த்தனின் அம்புகள் பலனின்றி கீழே விழ, பார்த்தசாரதியாம் கண்ணன் அதைக் கண்டுணர்ந்து போரை நிறுத்தி விட்டு கர்ணனிடம் கிழ ரூபம் தரித்து தானம் கேட்கிறார். கர்ணன் ஒரே ஒரு வேண்டுகோளையே அவரிடம் விடுக்கிறான். "என்னால் மரணத்தின் வாயிலில் நிற்கும் இத்தருணத்தில் தரக்கூடியதையே கேளுங்கள்" என்கிறான். கண்ணனும் அவனது தானதருமங்களின் பலனைத் தருமாறு அவனிடம் யாசிக்கிறார். "எனது எல்லா தருமங்களின் பலனையும் தந்தேன். அத்தருமங்களுள் நான் இப்போது செய்யும் தருமமும் அடங்கக் கடவது" என்று கூறி தானம் அளிக்கிறான் கௌந்தேயனான கர்ணன்.

பிறகு கர்ணன் மாண்டதும் குந்தி மட்டும் அழவில்லை. தரும தேவதையுமே வந்து கதறுகிறாள், தான் இனி யாரிடத்தில் குடி கொள்வது என்று.

பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காது உதவி செய்ய வேண்டும், ஆனால் அதே சமயம் அவ்வாறு செய்வது வேறு யாருக்கும் தெரியக் கூடாது. சற்று கஷ்டமான காரியமே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/27/2007

What cannot be cured must be endured

இப்பதிவுடன் சம்பந்தம் உடைய சுட்டிகள்:

1
2
3
4

What cannot be cured must be endured என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. கஷ்டம் என்று வந்து விட்டால் அதற்காக புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதே அதன் பொருள். அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பது ஒரு காலத்தின் கட்டாயம். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இதை செயல்படுத்துவது கஷ்டம்தான்.

அறுபதுகளின் துவக்கத்தில் ஹவாய் சப்பல்கள் என்னும் பெயரில் செருப்புகள் சந்தைக்கு வந்தன. சிங்கப்பூர் செருப்பு என்றும் அதை கூறுவார்கள். அவை வந்ததில் செருப்பு ரிப்பேர் செய்யும் தொழிலாளிகளின் வாழ்வில் பிரச்சினை வந்தது. தோல் செருப்புகளையே கையாண்டு பழகிப் போன அவர்கள், இவ்வகை செருப்புகள் வந்ததும் திக்கு முக்காடி போயினர். அக்காலக் கட்டத்தில் விகடனில் ஒரு கருத்து படம் கூட வந்தது. காலையில் தொழிலுக்கு கிளம்பும்போது செருப்பு தைக்கும் தொழிலாளி தெருவில் ஒரு ஒற்றை சிங்கப்பூர் செருப்பைப் பார்த்து "சே இன்னிக்கு சகுனமே சரியில்லை" என நொந்து கொள்கிறான்.

ஆனால் சிலர் சற்று வித்தியாசமாக சிந்தித்தனர். என்னதான் இருக்கிறது அவற்றில் என்று ஆராய்ந்ததில் தங்கள் தொழிலுக்கு தோதான சில புது வழிமுறைகளையும் கண்டனர். மேல் வார்ப்பட்டை சர்வ சாதாரணமாக அச்செருப்புகளில் வெளியில் வந்து விடும். அதை மறுபடி உள்ளே நுழைக்க ஒரு கம்பியை பயன் படுத்தினர். அதை குத்துவதற்கும் ஒரு லாகவம் தேவைப்பட்டது. வார்ப்பட்டை சேதமடையாமல் செய்ய வேண்டும். ஆக அவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சிலர் வார்ப்பட்டைகளை மட்டும் தனியே விற்க ஆரம்பித்தனர். அதன் உற்பத்தியே ஒரு குடிசைத் தொழிலாக உருவெடுத்தது.

மேலே கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. தங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறிய ஒரு விஷயம் நடந்தால் அதற்காக புலம்பாமல் அதிலுள்ள தங்களுக்கு சாதகமான விஷயங்களை தேடி எடுப்பதே புத்திசாலித்தனம். அதையும் முதலில் ஒருவர் செய்யும்போது அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அலாதியானவை.

இப்போது இருக்கும் நிலையில் எந்த தொழில் நுட்பமும் நிரந்தரமாக இருப்பதில்லை. பல மாற்றங்கள் வருகின்றன. சில சமயங்களில் வேறு துறைகளில் மாற்றம் வரும்போது சம்பந்தப்பட்ட தொழில் நுட்பமே தேவையற்று போய் விடுகிறது. இது சம்பந்தமாக விகடனில் நான் படித்த கதையொன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு ஹோட்டல் முதலாளி மனித நேயம் மிக்கவர். கிரைண்டர்களை தன் ஹோட்டலில் வைக்கவில்லை. காரணம் கேட்கிறார் ஹோட்டல் தொழிலாளர் யூனியன் தலைவர் (அவர் ஒரு கிரைண்டர் கம்பெனியின் ஏஜென்ஸியை தன் மனைவி பெயரில் நடத்தி வருபவர்). முதலாளி கூறுகிறார், "அது ஒண்ணும் இல்லை சார், என் கிட்ட சீனுன்னு ஒரு பையன் வேலை செய்யறான். சற்றே மூளை வளர்ச்சி குறைவு. மாவரைக்கத்தான் அவனுக்கு தெரியும். இப்ப கிரைண்டரை வாங்கி போட்டுவிட்டால் என்னிடம் வந்த்து மலங்க மலங்க முழிச்சுண்டு நிற்பான்". ஆகவே அவர் சீனு தன்னிடம் வேலைக்கு இருக்கும் வரை கிரைண்டர் வாங்குவதாக இல்லை.

சீனு அதிர்ஷ்டம் செய்தவன். மனித நேயம் கொண்ட முதலாளி கிடைத்தார். அதே சமயம் முதலாளிக்கும் அதிகம் நட்டம் இல்லை. மாறாக லாபமே. ஏனெனில் கையால் மாவாட்டும் மாவுக்கு தனி ருசி என்று பலர் நினைப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் கும்பலுக்கு குறைவில்லை. மின்சார தட்டுப்பாடு வரும்போது அவரது இட்டலி வியாபாரமும் பாதிக்கப்படாது. ஆக எல்லோருமே இதில் பயனடைந்தனர். ஆனால் அது எப்போதுமே நடக்குமா? வேறு வகை உபகரணங்களை கையாளும் திறனை பெறுவதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நான் கூறியதற்கான உதாரணங்களை பார்க்கலாம். எனது மொழிபெயர்ப்பு துறையையே எடுத்து கொள்ளுங்கள். நான் ஆரம்பத்தில் பேப்பரில் கையால் எழுதிய மொழிபெயர்ப்புகளை தட்டச்சு செய்வித்து, பிழை திருத்தி வாடிக்கையாளரிடம் கொடுத்து வந்தேன். தட்டச்சு இயந்திரம் வாங்கவில்லல. தொழில் முறை தட்டச்சுக்காரர்களை பயன்படுத்திக் கொண்டேன். அதற்கான கட்டணம் அதிகம் இல்லை. அதற்கு மாறாக நானே தட்டச்சு செய்திருந்தால் நேரம் அதிகம் பிடித்திருக்கும். அந்த நேரத்தில் மொழி பெயர்ப்பு செய்திருந்தால் பல மடங்கு பணம் சம்பாதிக்க முடியும். ஆக, எனக்கும் தட்டச்சு செய்பவர் ஆகிய இருவருக்குமே லாபம். தட்டச்சு செய்பவர்கள் சரியாக அமையாத போது கைப்பட எழுதித்தான் மொழி பெயர்ப்பை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. அதற்குள் எனக்கு தில்லியில் மொழிபெயர்ப்பாளனாக நல்ல பெயர் கிடைத்து விட்டதால் அதையும் ஒத்து கொண்டனர் வாடிக்கையாளர்கள்.

மேலும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே சென்று பணியாற்றியதால் தட்டச்சு செய்யும் வேலையை வாடிக்கையாளரின் டைப்பிஸ்டே பார்த்து கொண்டார். எல்லாம் சரிதான். ஆனால் இப்போது? நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கணினிகள் உபயோகத்துக்கு வந்து விட்டன. தட்டச்சு செய்வதில் தவறு ஏற்பட்டாலும் சுலபமாக திருத்த முடிகிறது. இப்போது நான் யுக்தியில் மாறுதல் செய்ய வேண்டி வந்தது. நானே நேரடியாக கணினியில் தட்டச்சு செய்து விடுவதாலும், பிழை திருத்தங்கள் அவ்வளவாக எனது தட்டச்சில் இல்லததாலும் நேரம் மிச்சப்பட்டது.

மாற்றங்களுக்கு உட்பட மாட்டேன் என இருந்தால் பிரச்சினை நமக்குத்தான். மற்றவர்கள் நம்மிடத்திற்கு வந்து தீர்வு கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பது அறிவீனம்.

வேலை போய் விட்டதா, கவலை வேண்டாம் என கூறும் நிலை வேண்டுமானால் பல திறமைகளை வளர்த்து கொள்வது முக்கியம். நான் விருப்ப ஓய்வு பெறும் சமயம் மற்றவர்களைப் போல வேறு வேலை ஒன்றும் கைவசம் இல்லை. எனது மொழிபெயர்ப்பு திறனும் நான் வேலையில் இருந்த போதே தேடிக் கொண்ட எனது இந்த வேலைக்கான வாடிக்கையாளர் பட்டியலுமே எனக்கு துணையாக இருந்தன. வேலையை விட்டு மேலும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தில்லியிலேயே நன்கு பிழைக்க முடிந்தது. சென்னைக்கு வந்து ஆறு சொச்ச ஆண்டுகளிலேயே நான் தில்லியில் 20 ஆண்டுகள் இருந்து சம்பாதித்ததை விட மூன்று மடங்குக்கு மேல் சம்பாதிக்க முடிந்தது. இதெல்லாமே புது நிலைமைகள் உருவாகும் சமயம் நமக்கு சாதகமான விஷயங்களை தெரிவு செய்து கையகப்படுத்துவதாலேயே சாத்தியமாயிற்று.

உலகமயமாக்கல் நல்லதா கெட்டதா என வாதம் செய்வதில் என்ன உபயோகம்? அதெல்லாம் தியாகுகளும் அசுரர்களும், ராஜா வனஜ்களும் செய்யும் வேலை. வந்து விட்ட உலகமயமாக்கலை தவிர்க்க முடியாது என்னும் பட்சத்தில் அதன் மூலம் வாடிக்கையாளர் பட்டியலை பெருக்கிக் கொள்வது டோண்டு ராகவன், அதியமான், ஜெயகமல்களின் வேலை.

ஆகவே கூறுவேன்: "What cannot be cured must be taken advantage of".

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/23/2007

அதிகப் பிரசங்கித்தனமான தணிக்கைகள்

இப்பதிவு வெகு நாட்களாக என் மனதில் நிலை கொண்டிருந்தது. இன்று திடீரென அதன் உந்துதல் அதிகமானதற்கு காரணம் யாழ் சுதாகர் அவர்களின் இப்பதிவே காரணம். அவருக்கு என் முதன்கண் நன்றி. இனிமையான எம்ஜிஆர் பாடல்களை கேட்டு கொண்டே இங்கு எழுதுகிறேன். இங்கு இனிமை என்பது பாடல்களுக்கு மட்டுமல்ல எம்ஜிஆருக்குமே பொருந்தும் என கூறுவது அந்த உலகம் சுற்றும் வாலிபனின் 61 வயது இளம் ரசிகனான இந்த டோண்டு ராகவன்.

சமீபத்தில் 1967-ல் திமுக ஆட்சி ஏற்பட்ட சில மாதங்களில் இச்செய்தி குமுதத்தில் வந்தது. அதாவது "பெற்றால்தான் பிள்ளையா" என்னும் எம்ஜிஆர் படத்தில் உள்ள "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்னும் பாடலை நேயர் விருப்பத்தில் போட AIR சம்மதிக்கிறது என்பதை அச்செய்தி குறிக்கிறது. அதுவரை அப்பாடல் கீழ்க்கண்ட வரிக்காக தடை செய்யப்பட்டிருந்தது.

"மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்" என்பதுதான் அது. அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்ததும் இத்தடை அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தில் இம்மாதிரி அசட்டுத்தனமான தணிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. உதாரணத்துக்கு ஹார்மோனியம் பல ஆண்டுகள் இங்கு தடை செய்யப்பட்டிருந்தது. பிறகு காலத்தின் கட்டாயம் இத்தடையின் அபத்தத்தை உடைத்தது. அது இருக்கட்டும், நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கண்டுணர்ந்த சில அபத்தத் தடைகளை பற்றி இங்கு பேச உள்ளேன்.

"காதலிக்க நேரமில்லை" படத்தில் "அனுபவம் புதுமை", "என்ன பார்வை உந்தன் பார்வை" ஆகியவற்றுக்கு தடா. வெண்ணிற ஆடையிலோ "சித்திரமே சொல்லடி, முத்தமிட்டால் என்னடி" என்ற இனிமையான பாடலைக் கேட்டாலே அகில இந்திய ரேடியோவின் நிலைய இயக்குனருக்கு கொலைவெறி வரும் போலிருக்கிறது. அப்பாடலை நேயர் விருப்பமோ, வேறு எங்குமோ போட மாட்டார்கள். இப்போதெல்லாம் போடுகிறார்கள் போல. காலம் கடந்த நீதி என்றுதான் அவற்றை குறிப்பிட வேண்டும்.

என் நினைவிலிருந்து எழுதுகிறேன், அவ்வாறு தடை செய்யப்பட்ட பாடல்கள்:

1. "வாங்கோன்னா, வாங்கோன்னா", படம் பத்திரகாளி.
2. "ஒத்த ரூபா உனக்கு தாரேன்", படம் பத்திரகாளி
3. "பாதி நிலாவை விண்ணில் வைத்து, மீதி நிலாவை கண்ணில் வைத்து" எங்க வீட்டு பிள்ளை.

இன்னும் கூறிக்கொண்டே போகலாம், ஆனால் எனது கருத்தை நிலை நிறுத்த அவை போதும் என நினைக்கிறேன்.

அதே "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்னும் பாடல் திரையிலும் தணிக்கை செய்யப்ப்பட்டது. "மேடையில் முழங்கு திரு விகாவைப் போல்" என மாற்றப்பட்டது. (வி.க. --> வி. கல்யாணசுந்தரனார் என்பதை அறிக, வேறு யாரும் அல்ல). :)

அதே போல சுமைதாங்கி படத்தில் வரும் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்ற பாடல் வரி "எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்று மாற்றப்பட்டது.

அவசர நிலை அமுலில் இருந்த போது கிஷோர் குமார் சம்பந்த பாடல்கள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் தடை செய்யப்பட்டன. தொண்ணூறுகளில் இந்த அபத்தங்கள் தொலைக்காட்சியிலும் குறைவில்லாம இருந்தன. உதாரணத்துக்கு ஆலோக் நாத் என்னும் நடிகர் (புனியாத் மெகா சீரியலில் மாஸ்டர்ஜி பாத்திரத்தில் வருபவர்) நடித்த சீரியல்கள் தேர்தல் நேரத்தில் தடை செய்யப்பட்டன. ஏனெனில், அவர் முகஜாடை வி.பி. சிங்கின் முகஜாடையுடன் ஒத்திருக்கும். அதே போல காட்சிகளில் சைக்கிள்கள் மாஸ்க் செய்யப்பட்டன. காரணம்? அவை தெலுகு தேசத்தின் தேர்தல் சின்னமாம். அரிக்கேன் விளக்கும் மூடி மறைக்கப்பட்டது. அது என்ன கட்சியின் சின்னம் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

இப்போது பழைய படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வரும்போது சிகரெட்டை எதிர்க்கும் வாசகங்கள் வருவதும் ஒரு தணிக்கையே.

இப்போது முரளி மனோஹர் ஒரு கேள்வி வைக்கிறான். "அதெல்லாம் சரிடா டோண்டு, யாருக்கோ பின்னூட்டமிட்டால் வேறு யாருக்கோ பின்னால் பிடுங்கி கொண்டதே"?

டோண்டு ராகவன் - ஷ் ஷ் ஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: எம்ஜிஆர் பாடல்கள் கேசட் முடிந்து விட்டது. பதிவையும் இப்போதைக்கு முடிக்கிறேன்.

9/17/2007

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்

பதிவுலகில் மற்றவர்களுக்கு துன்பம் வரும்போதெல்லாம் நியாயஸ்தர்கள் மாதிரி பேசி பொறுமையை கடைபிடிக்குமாறு உபதேசம் செய்பவர்கள், விட்டேற்றியாக பேசுபவர்கள் ஆகியோர் தங்களுக்கும் அவ்வாறே துன்பம் வரும்போது பொறுமையை மிகத் துடிப்புடன் பொறுமையைத் தொலைப்பது வேடிக்கையாக உள்ளது. அப்போதும் அழுவாச்சிப் பதிவுகள், பார்ப்பனக் கூத்து என்றெல்லாம் திட்டிப் பதிவுகள் போடுவதில் மட்டும் குறைவில்லை.

ஐடிபிஎல்-லில் இருந்தபோது ஒரு தமாஷ் நடந்தது. ஒவ்வொரு மாதமும் 22-ஆம் தேதி வாக்கில் ஒரு அறிக்கை ஒவ்வொரு துறையிடமிருந்தும் கணக்காளர் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதில் துறைத்தலைவர் தன் மேற்பார்வையில் இருக்கும் ஊழியர்கள் அம்மாதம் ஒழுங்காக வேலைக்கு வந்தார்களா என்பதை தெரிவிக்க வேண்டும். யாரேனும் லீவில் (முழு சம்பள, பாதி சம்பள அல்லது சம்பளமில்லாத) இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். மற்றப்படி எல்லாம் நல்லபடியாக இருந்தால் அதை ஒரே வரியிலும் குறிப்பிடலாம். அப்போதுதான் அத்துறைக்கான சம்பளமே போடுவார்கள். அடுத்த மாதம் முதல் தேதி அது கிடைக்கும்.

நான் இருந்த பொறியாளர் பிரிவுக்கு தலைவர் மேனேஜர் இஞ்ஜினியரிங் என்னும் பதவியில் உள்ளவர். அந்தக் குறிப்பிட்ட மாதம் இந்த அறிக்கை செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது, ஏதோ ஒரு காரணத்தால். 28-ஆம் தேதிதான் போய் சேர்ந்தது. எல்லோருக்கும் அடுத்த மாதம் கொடுத்த பே ஸ்லிப்பில் சம்பளம் எல்லாம் குறிக்கப்பட்டு, கீழே ஒரு வரி எழுதியிருந்தார்கள். அதாவது சம்பந்தப்பட்டவருக்கு சம்பளம் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறித்திருந்தார்கள். இஞ்சினியரிங் துறையில் உள்ள எல்லோருக்கும் இது காணப்பட்டது. எனது ஸ்லிப்பிலும் அவ்வாறே இருந்தது. சம்பளம் எப்போதுமே எங்களது பேங்க் கணக்கில் ஏற்றப்பட்டு விடும். அதற்காகவே இந்தியன் வங்கியின் ஒரு extension counter எங்கள் வளாகத்திலேயே இருந்தது. இப்போது என்ன ஆயிற்றென்றால் இந்த ஸ்லிப்புக்குரிய மாத சம்பளம் கணக்கில் ஏற்றப்படவில்லை.

நான் உடனே கணக்குப் பிரிவின் தலைவரிடம் சென்று விளக்கம் கேட்க அவர் இதற்காக கவலை கொள்ள வேண்டாம் என்றும், கடைசி நிமிடத்தில் கணக்கில் சம்பளத்தை ஏற்றி விட்டதாகவும் கூறினார். நான் இதை தெரிவிக்க மேனேஜர் இஞ்சினியரிடம் சென்றேன். சற்று விவரமாக ஆரம்பித்தேன்.

நான்: சார், இந்த மாத ஸ்லிப்பில் எனது கணக்கில் சம்பளம் ஏற்றவில்லை என குறித்துள்ளார்கள்.
மேனேஜர் (மோகனப் புன்னகையுடன்): சில சமயம் அம்மாதிரி ஆகி விடும் ராகவன். பேசினால் சரியாகி விடும். என்ன கொஞ்ச நாள் பிடிக்கும். உங்களுக்கு பணத்துக்கென்ன குறைச்சல். சற்றே பொறுமையாயிருங்கள். எப்போதும் பணம் பணம் என அலையாதீர்கள். கம்பெனி வேலைகளைப் பாருங்கள்.

ஆக இவருக்கு ஒரு விவரமும் தெரியாது. அவர் இன்னும் தனது பே ஸ்லிப்பை பார்க்கவில்லை.

நான்: (சற்றே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு): ஓக்கே சார். எனக்கென்ன வருத்தம் என்றால் நம்ம துறையில் எல்லோருக்கும் அப்படியே செய்து விட்டார்கள், உங்களையும் சேர்த்து.
மேனேஜர் (தன் மோகனப் புன்னகையை உடனே தொலைத்தார்): ஆ, என்ன அப்படியா? மேடம் (அவரது க்ளார்க்), என்ன இது? என்ன அக்கிரமம்? என்ன செஞ்சீங்க?

இவ்வாறு கத்திக் கொண்டே, அவர் க்ளார்க் மற்றும் சில இஞ்சினியர்கள் புடை சூழ கணக்குப் பிரிவின் தலைவரை அணுகினார். அவரோ என்னிடம் கூறியதையே கூறி, இதை ராகவனிடம் ஏற்கனவே தெரிவித்ததாகக் கூறினார்.

முகத்தைத் துடைத்து கொண்ட மேனேஜர் அப்படியே தொழிற்சாலையின் வேறு பிரிவுக்கு மேற்பார்வை செய்யப் போவது போல பைய நழுவினார். என்னை பிறகு ஏண்டா பாவி இம்மாதிரி பயமுறுத்தினே என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எனக்கும் அவரிடம் தலைப்பில் இருக்கும் பழமொழியை கூறி அதற்கு பொழிப்புரை, பதவுரை எல்லாம் உரைக்க வாய்ப்பு இல்லாமல் போயிற்று. :).

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது