4/15/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 2

நான் கூறும் ஆலோசனைகள் யாவையும் சொந்த முறையில் தொழில் செய்பவருக்கே. நீங்கள் ஒரு நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தால் வேலை உங்களை நாடி வரும். நான் ஐ.டி.பி.எல்லில் முழுநேர பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக இருந்ததைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

வாடிக்கையாளர்களை எங்கெல்லாம் பிடிக்கலாம்? எங்கிருந்து வேண்டுமானாலும் என்பதே என் பதில்.

1982. ஹிந்துஸ்தான் டைம்ஸைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்புகள் பகுதியை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒரு நிறுவனத்துக்கு அக்கௌண்டன்ட் வேலைக்கு ஆள் கேட்டு விளம்பரம். அதில் நான் பார்த்தது என்ன? அது ஒரு ஜெர்மானிய ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்துக்கானது என்பதே. ஷ்யாம் ஆன்டென்னா என்பது நிறுவனத்தின் பெயர். ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்தேன். அதில் தலைமை நிர்வாக அதிகாரி என்று விலாசமிட்டு ஒரு கடிதம் கையால் எழுதினேன். தட்டச்சிடவில்லை. என்ன ஆச்சரியம். உடனே பதில் வந்தது. போய் பார்த்தேன். வேலை கொடுக்கப்பட்டது. திரும்பத் திரும்ப வேலை கொடுத்தார்கள்.

இந்திய அரசு அனுமதிக்கும் வெளிநாடுகளுடனான கூட்டு முயற்சிகள் ஒரு அரசு மாதப்பதிப்பில் வரும். அதிலிருந்து ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுடன் கூட்டு முயற்சி அனுமதிக்கப்பட்ட, தில்லியில் உள்ள நிறுவனங்களின் பெயரை எடுக்க வேண்டியது. சம்பந்தப்பட்டத் தலைமை நிர்வாகிகளுக்கு எழுதுவது, போய் பேசுவது, வேலை கிடைத்தால் ஒழுங்காகச் செய்வது எல்லாம் கனவு போலவே நடந்தன.

இன்னொரு முறை, கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொள்வது. யாராவது அறிமுகமானால் அவர்கள் வேலை செய்யும் கம்பெனியைப் பற்றி விசாரிப்பேன். அந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளுடன் கூட்டு முயற்சிகள் உண்டா என்றுத் தெரிந்துக் கொள்ள முயற்சிப்பேன். தேவையானால் ஒரு கடிதத்தை அனுப்புவேன். பிறகு எல்லாம் வழக்கம் போல. இந்தோ-ஜெர்மானிய மற்றும் இந்தோ-ஃபிரெஞ்சு வணிக அமைப்புகளுக்குப் போய் தில்லியில் நிலைகொண்டிருக்கும் அவற்றின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பது கூட இவ்வேலையில் அடக்கம்.

எல்லாம் சரி, புது வாடிக்கையாளருக்கு அனுப்பும் முதல் கடிதத்தில் என்ன எழுதுவது? கடவுள் அருள் என்றுதான் கூற வேண்டும். நான் 1982-ல் எழுதிய முதல் கடிததின் உள்ளடக்கமே இப்போது நான் எழுதும் கடிதங்களிலும் ஏறக்குறைய அப்படியே உள்ளது. சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் உண்டு, அவ்வளவுதான். ஒரு மாதிரிக் கடிதத்தைப் பார்ப்போமா? இது 1982-ல் ஷ்யாம் ஆன்டென்னாவிற்கு எழுதப்பட்டது.

ஐயா,
பொருள்: ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைகள்
நான் சொந்த முறையில் தொழில் புரியும் ஒரு ஜெர்மானிய/பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளன் மற்றும் துபாஷி. இம்மொழிகளில் எனக்கு 7/4 வருடங்கள் அனுபவம் உண்டு. நான் கடந்த 11 வருடங்களாக ஒரு மின்பொறியாளனாகவும் பணி புரிகிறேன். ஆகவே நான் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.

ஜெர்மானியக் கம்பெனியுடன் கூட்டு முயற்சி வைத்திருக்கும் உங்களுக்கு என் சேவை அடிக்கடித் தேவைப்படும் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் மேற்கொண்டு பேசலாம்.

அன்புடன்,
ராகவன்.

ஒரு விஷயம். அப்போது என்னிடம் தொலை பேசி கிடையாது. ஆகவே எல்லாமே கடிதம் மூலம்தான். தொலைபேசி தொடர்பு கிடைத்ததும் அதையும் கடிதத்தில் குறிப்பிட ஆரம்பித்தேன்.

1982 விஷயத்துக்கு மறுபடி வருவோம். என்னைக் கூப்பிட்ட அந்த நிறுவனத்தின் தலைவர் என்னுடன் பேசும்போது நான் எழுதியக் கடிதத்தில் அவரை எது கவர்ந்தது என்பதைக் குறிப்பிட்டார். "பொறியாளராகத் தொழில் புரியும் ஒரு நபர் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதில் அவர் மிக வியப்பை அடைந்தார். அப்படிப்பட்ட ஒருவரை நேரில் காணவே என்னை முக்கியமாக அழைத்ததாகக் கூறினார். எந்தக் காரணமாக இருந்தால் என்ன? போனதில் வேலை கிடைத்தது. நான் தில்லியில் இருந்தவரை அவர் பல முறை வேலை கொடுத்தார்.

என்ன எழுதக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். அதையும் என் அனுபவத்திலிருந்தே அடுத்தப் பதிவில் கூறுவேன். வாடிக்கையாளரிடம் முதலில் என்ன பேசுவது, என்ன பேசாக்கூடாது என்பதையும் அதில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லை இகாரஸ் அவர்களே. அதனால் பிரச்சினையில்லை என்றுதான் நினைக்கிறேன். டெடாலுஸ் சௌக்கியமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

சன்னாசி said...

//டெடாலுஸ் சௌக்கியமா?//
??? Stephen Dedalus?

dondu(#11168674346665545885) said...

டெடாலுஸ் மற்றும் இகாரஸ் முறையே தந்தை மகன் ஆவர். இருவரும் மெழுகால் இறக்கைகளை ஒட்டிக் கொண்டு பறந்தனர். சூரியனுக்கு வெகு அருகே சென்றதால் இகாரஸின் சிறகுகள் மெழுகு உருகி கீழே விழுந்ததாகக் கதை. கிரேக்கப் புராணம்.
அவர்களில் ஒருவர் பெயரைக் கூற மற்றொருவர் உடனே நினைவுக்கு வருவார்.
பார்க்க: http://thanasis.com/icarus.htm
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது