4/22/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 5

நான் பகுதி - 1-ல் ஏற்கனவே கூறியது:"உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்"

உங்களிடம் ஒரு திறமை உள்ளது, அதாவது மொழிபெயர்ப்பு. வாடிக்கையாளரிடம் அது இல்லை அல்லது இருப்பினும் நேரம் இல்லை. ஆகவே உங்களைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை நிலை. இப்போது அதற்கான விலை நிர்ணயிப்பதுதான் செய்ய வேண்டும். சில வாடிக்கையாளர்கள் கூறலாம்: "உங்களுக்கு பிடித்த வேலையிது. ஆகவே இதைச் செய்வதற்காக அதிகப் பணம் கேட்பது இக்கலையைக் கொச்சைப்படுத்துவதாக அமையும் அல்லவா?" அதற்கெல்லாம் அசரக் கூடாது. வாடிக்கையாளருக்கு அவர் பணச்செலவைக் குறைப்பதே நோக்கம். இதை நான் மரியாதையாகப் பேசியே ஒரே வாதத்தில் தகர்த்து விடுவேன்: "ஐயா நீங்கள் கலையை ஆராதிப்பவராகவே இருங்கள். நான் ஒரு வியாபாரி, அவ்வளவுதான்." அதற்கு மேல் இந்தத் தடத்தில் எந்த வாடிக்கையாளரும் மேலே செல்ல மாட்டார்கள். ஏனெனில் அவரும் உண்மையில் ஒரு வியாபாரிதானே!

வாடிக்கையாளரின் அடுத்தத் தாக்குதலுக்கு வருவோம். ஒரு 10 பக்கக் கட்டுரையில் சில வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வரும். முக்கியமாக பேட்டன்டுகளில் பார்க்கலாம். ஒரு விஷ்யத்தையே பல உதாரணங்களுடன் விளக்குவார்கள். மூக்கியமாக பேட்டன்ட் க்ளைம்ஸில் முதலில் சொன்னவை அனைத்தும் வார்த்தை பிசகாமல் அப்படியே வரும். இதை வாடிக்கையாளர் அறிந்து கொண்டால் உடனே திரும்ப வரும் வாக்கியங்களுக்கு பணம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் அவை நமக்கு சுலபமாம். இந்தக் கதை என்னிடம் நடக்காது. ஒரேயடியாக இக்கோரிக்கையை மறுத்து விடுவேன். திரும்ப வரும் வாக்கியங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு கட்டுரையாக வந்ததை மொழிபெயர்க்க அதற்கான மொத்த விலையும் வேண்டும் என்று கூறி விடுவேன். நான் குறிப்பிடும் விலை ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற அடிப்படையில்தான். வார்த்தைகளை எண்ண என்றே தனி மென் பொருட்கள் உள்ளன. அதைத்தான் நான் அடிப்படையாக எடுத்துக் கொள்வது. இதிலும் நிலைமைக்கேற்ப மாறுதல்கள் வரும், அவையெல்லாம் இப்போதைய பதிவின் வீச்சுக்கு அப்பாற்பட்டவை. ஆக வாடிக்கையாளரின் இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படவேண்டியதே.

அதைச் செய்யும் போதும் வார்த்தைகளில் கடுமையிருக்கக்கூடாது. சிரித்துக் கொண்டே உறுதியாகக் கூறிவிடலாம். அவர் ஒத்துக்கொள்ளவிடினும் சுமுகமாகவே அவ்விடத்தை விட்டு அகலுதல் நலம். அப்போதைக்கில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விலைகளை கோட் செய்வது முக்கியம். உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் என்னிடம் 100 பக்கம், மற்றும் 30,000 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை அவருக்கு வாய்மொழியாகக் கூற வேண்டும் என்றார். இதற்கு வார்த்தை சார்ந்த விலை சொல்ல இயலாது. அவரிடம் நான் இதற்கு ஒரு மணிக்கு இவ்வளவு ரூபாய்கள் என்ற அளவில்தான் பேச முடியும். இம்மாதிரியான நிலைக்கு நான் கோட் செய்வது, மணிக்கு ---- ரூபாய்கள் + போக வர கால் டாக்ஸி கட்டணம் + காப்பி, டீ மற்றும் சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு, மற்றும் முக்கியமாக குறைந்தப் பட்சமாக இரண்டு மணிநேரத்துக்கு சார்ஜ். வாடிக்கையாளருக்கும் சுமாராக எத்தனை குறைந்தபட்ச செலவு என்பது புரிந்து விடும். எவ்வளவு நேரத்தில் 100 பக்கத்தையும் கவர் செய்ய முடியும் என்பதை முதலிலேயே கூற இயலாது, ஏனெனில் வாடிக்கையாளரின் புரிதலும் நேரம் எடுத்துக் கொள்ளும், அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம், இது என்ன இவன் சாப்பாட்டைப் பற்றியெல்லாம் பேசுகிறான் என்று. அதுவும் முக்கியமே. என் நண்பன் ஒருவன் அது பற்றிப் பேசாததால் ரொம்ப லோல் பட்டான். திருச்சிக்கு அழைதுச் சென்றனர் அவனை. வாடிக்கையாளருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் தங்கும்படியாயிற்று. அவனுடைய பில்லை அவனே செட்டில் செய்ய நேர்ந்ததில் அவனுக்கு நிகர நட்டம் ரூ. 200. (இது 1981-ல்). மணிசார்ந்த விலையும் ஒரு அடிப்படையில்தான் கூறவேண்டும். ஒரு மணிக்கு என்னால் எவ்வளவு வார்த்தைகள் எழுத முடியும் என்று பார்த்து அத்துடன் வார்த்தையின் விலையைப் பெருக்கினால் தீர்ந்தது விஷயம்.

மற்றவை அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது