வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4
மேலே செல்வதற்கு முன்னாலேயே ஒன்றைக் கூறி விடுகிறேன். நான் கூறியவை, கூறவிருப்பவை எல்லாமே எல்லோருக்கும் பொருந்தும். நான் என்னுடைய அனுபவத்திலிருந்துக் கூறுவதால் மொழி பெயர்ப்பு வேலை முன்னிறுத்தப்படுகிறது, அவ்வளவுதான். படிப்பவர்கள் தங்கள் தேவைக்கேற்ப அவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.
நிறுவனத்துக்கு கடிதம் எழுதி அவர்களும் உங்களை அழைத்துள்ளனர். இப்போது நிறுவனத்தினுள்ளே இருக்கிறீர்கள். சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். காத்திருத்தலும் ஒரு கலையே. சிலர் தேவையில்லாது டென்ஷன் அடைகிறார்கள். நகத்தைக் கடிப்பது, அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது போன்ற சேஷ்டைகள் இருக்கும். அவற்றையெல்லாம் தவிர்க்கவும்.
நான் அவ்வாறு காத்திருக்கும் நேரத்துக்காகவே கையில் ஒரு குண்டு புத்தகம் எடுத்துச் செல்வேன். நான் பாட்டுக்கு படித்துக் கொண்டிருப்பேன். நேரம் போவதே தெரியாது. அவ்வாறு படித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் என்னப் பேச வேண்டும் என்பதை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன். நிர்வாகி எம்மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்பார், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்றும் யோசிப்பேன். நானே சில ஓபனிங்குகளைக் கொடுத்துப் பேச்சுவார்த்தையை ஒரு மாதிரி என் கட்டுக்குக் கீழே கொண்டு வர ஏற்பாடு செய்வேன்.
நிறுவனத்தில் இருக்கும் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். யாரைப் பார்த்துப் பேச நேரினும் ஒரு புன்னகையுடன் பேச்சைத் துவங்கல் நலம். அது ரிஷப்ஷனிஸ்டாகக் கூட இருக்கலாம். நிறுவனத்துடன் வேலைத் தொடர்பைப் பெற்றப் பிறகு, எல்லார் தயவும் தேவைப்படும். ஆகவே சுமுகமாக இருப்பதை முதலிலேயே துவங்கல் நலம்.
இப்போது அலுவகங்களில் புகை பிடிப்பது அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் எண்பதுகளில் நிலை வேறு. நிர்வாகி சிகரெட்டை ஆஃபர் செய்தால் முதல் தடவை நான் மறுப்பதில்லை. இதற்காகவே என்னுடைய சிகரெட் கோட்டா 12 - ஒரு வருஷத்துக்கு. அவர் சிகரெட்டை நீட்ட அதை ஏற்றுக் கொண்டாலே ஒரு சுமுக உறவு ஏற்படுகிறது. இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. சாதாரணமாக சிகரெட் புகைப்பவர்கள் அதை எப்படியாவது விட வேண்டும் என்ற அழுத்தத்தில் இருப்பார்கள். அப்போது நான் சிகரெட்டே பிடிப்பதில்லை என்று கூறினால் தேவையில்லாது அவரை நான் மட்டம் தட்டுவதாகத் தோன்றலாம். அதனால் எதற்கு வம்பு? இப்போதெல்லாம் அவ்வாறு நிர்ப்பந்தம் வருவதில்லை என்பதில் சந்தோஷம்.
நிர்வாகி சொலவதை கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள். நிறுவனத்தின் தேவை என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் அளிக்க வேண்டிய சேவைகளைப் பற்றி நம்பிக்கையுடன் பேச முடியும்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி பல நேரத்தில் தலைமை நிர்வாகி எப்படி ஒருவன் பொறியாளனாக வேலை செய்து கொண்டே மொழிபெயர்ப்பாளனாகவும் செயல்படுகிறான் என்பதை அறிய ஆவலாக இருப்பார். பொறியாளனின் மொழி அறிவைப் பற்றி எங்குமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தவறானக் கண்ணோட்டம்தான், ஆனால் பலருக்கு இந்த அபிப்பிராயம் உண்டு என்று நான் கூறினால் நீங்கள் நம்புவதை தவிர வேறு வழியே இல்லை. ஆகவே தவறின்றி ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். சிறு விஷயம் என்று எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லாம் சேர்ந்துதான் உங்களுக்கு ஆதரவான நிலை உருவாக வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலநேரத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். வாடிக்கையாளருக்கு எப்போதுமே அவசரம்தான். எப்போது வேலையை முடிக்க வேண்டும் "நேற்றைக்கு" என்று பதில் வரும். உங்களால் முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்ட மற்ற வேலைகளை மறக்கக் கூடாது. அதற்காக இப்போது முரட்டுத்தனமாகப் பேசக்கூடாது. மறுப்பை நாசூக்காக்த் தெரிவிக்க வேண்டும். நான் செய்வது என்ன? எப்போதுமே சற்று முன்சாக்கிரதையுடனேதான் செயல் படுவேன். ஆகவே தேவையானால் அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஒரு முறை இவ்வாறு அவசரம் என்று கூறியவரிடம் "ஐயா, என்னால் 10 நாட்களில் வேலையை முடிக்க முடியும். நீங்கள் ஒரு வாரத்திலேயே கேட்கிறீர்கள். ஆகவே அதிக நேரம் உழைக்க நேரிடும். உங்களுக்கான விலை 50% அதிகரிக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா?" என்று கேட்க, அவரோ அவசரமாக "10 நாட்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் விஷயம். ஆனால் ஒன்று. ஒத்துக்கொண்ட நேரத்துக்குள் வேலையை முடித்துத் தரவேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
புது வாடிக்கையாளருடன் ரேட் பேசும்போது மிகக் கவனம் தேவை. இதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
19 hours ago
1 comment:
Thanks for sharing your Experience
Post a Comment