வருடம் 1959. ராஜாஜி, மசானி, பிலூ மோதி மற்றும் என்.ஜி.ரங்கா ஆகியோர் சேர்ந்து சுதந்திரா கட்சியை நிறுவினர். அப்போது எனக்கு வயது 13. வீட்டில் கல்கி, விகடன் இரண்டுமே வாங்கப்பட்டன. விகடன் காங்கிரஸை ஆதரித்தது, கல்கி சுதந்திரக் கட்சியை. தமிழகத்தின் இரு பெரிய பத்திரிகைகள் இவ்வாறு இரு வேறு கருத்துக்களைக் கூறி வந்தன.
நான் இதை முதலில் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அதாவது ஒரே ஒரு தரப்பு வாதங்களைக் கேட்டு என் நிலைப்பாட்டை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. விகடன் கூறிய வாதங்களையும் படித்தேன், கல்கியின் வாதங்களையும் கண்டேன்.
என் மனம் சுதந்திரா கட்சியையே ஆதரித்தது. அதற்கு ராஜாஜி அவர்களின் எழுத்துக்களும் காரணம். அந்த அளவில் காங்கிரஸ் ஆதரவு எழுத்தாளர்கள் என்னைக் கவரவில்லை. ஆக, நான் அப்போதிலிருந்தே சுதந்திரா கட்சி ஆதரவாளன். காங்கிரஸ் எதிர்ப்பாளன். கம்யூனிஸ்டுகளின் அதி தீவிர எதிர்ப்பாளன்.
அக்காலக் கட்டத்தில் பல தொழில்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள் மிகுந்த அதிகாரங்களைப் பெற்றிருந்தன. ராஜாஜி அவர்கள் கூறியது ரொம்ப எளிமையாக்கினால் இவ்வாறு வரும். "அரசின் வேலை ஆட்சி புரிவதே, வெற்றிலைப் பாக்குக் கடைகள் திறப்பது அல்ல." ஆனால் அரசு தரப்பில் அதைத்தான் செய்தார்கள். ஒரு நிறுவனம் அதிகம் லாபம் பார்க்கிறதா, உடனே அது தேசியமாக்கு என்பதே கோஷம். அதே போல ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறதா, அதையும் தேசீயமயமாக்கு என்றும் கோஷம். ஒரே குழப்பம்.
புதிதாகத் தொழில் துவங்க வேண்டுமா, பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ஆகியவை பெற வேண்டும். அவ்வாறு அவற்றை எப்படியோ அரசியல்வாதிகளுக்கு வாய்க்கரிசி போட்டு பெற்ற நிறுவனங்கள் பிறகு தனிக்காட்டு ராஜாவாகவே ஆட்டம் போட்டன. இவை எல்லாவற்றையும் ராஜாஜி அவர்கள் எதிர்த்தார். ஆனால் அவர் வாதங்கள் எல்லாம் அவை எல்லாவற்றாலும் பயன் பெற்ற vested interst குழுக்களால் மறைக்கப்பட்டன.
ஆடம்பரச் செலவுகளுக்கு வெளி நாடுகளிடம் கடன் வாங்காதே என்றார். அதையும் அரசு கேட்கவில்லை. கடன் சுமை ஏறியதுதான் மிச்சம். கட்டுப்பாட்டுடன் நடந்து கொள் என்றால் யாருக்குப் பிடிக்கும்? ராஜாஜி கூறியவை அப்போது எல்லோருக்கும் கசந்தன.
1959-ல் அரசியல் நிலை என்ன? நாட்டின் ஏறத்தாழ எல்லா மானிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான். கேரளா மட்டும் விதி விலக்கு, ஆனால் அதையும் காங்கிரஸ் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. தமிழக சட்ட சபையில் காங்கிரஸுக்கு 150 இடங்கள், தி.மு.க.வுக்கு 15. காங்கிரஸை எதிர்ப்பதுதான் சுதந்திரக் கட்சியின் அப்போதைய முதல் பிரச்சினை. ஆகவே தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. 1962-ல் காங்கிரஸுக்கு கிடைத்த இடங்கள் சுமார் 135, தி.மு.க. 50 இடங்கள் பெற்றது. சுதந்திரக் கட்சிக்கோ 6 இடங்களே கிடைத்தன. முழு அளவில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளாததால் இந்த நிலைமை. ஆனால் சுதந்திரக் கட்சிக்க்கு வட மாநிலங்களில் கணிசமான வெற்றி.
1962-லிருந்து நாட்டுக்குப் பல சோதனைகள். சீன ஆக்கிரமிப்பு அவ்வருட அக்டோபர் வாக்கில் நடந்தது. 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், 1966-ல் ரூபாய் மதிப்புக் குறைப்பு ஆகியவை நடந்தன.
1967 தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து மகா கூட்டணி போடப்பட்டது. காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகள் சிதறுவது தடுக்கப்பட்டது. அவ்வாறு காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகள் கூட்டணி போடுவது காலத்தின் கட்டாயம் ஆயிற்று. தேர்தலில் திமுக 130-க்கு மேல் இடங்கள் பெற்று தனிப்பட்ட ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மந்திரிகளில் பூவராகனைத் தவிர அனைவரும் தோற்றனர். திமுகவே எதிர்ப்பார்க்காத பெரிய வெற்றி. மக்கள் சபைக்குத் தேர்வு பெற்ற அண்ணா அவர்கள் அப்பதவியை விட்டு எம்.எல்.சி. ஆகி ராஜ்ய முதன் மந்திரியானார். 1969-ல் அவர் மறைந்தார். அதன் பிறகு மெதுவாக நிலைமை மோசமாகத் துவங்கியது. 1969-ல் காங்கிரஸ் பிளவின் போது கருணாநிதி அவர்கள் இந்திரா காங்கிரஸை ஆதரித்தார். சுதந்திரா கட்சியும் திமுகவும் மன வேறுபாடு கொண்டன.
1971-ல் இந்திரா அவர்கள் தேர்தலை ஒரு வருடம் முன்னால் நடத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். அதே மூச்சில் கருணாநிதி அவர்களும் கவர்னருக்கு தேர்தல் பரிந்துரை செய்தார். இ.கா. திமுக கூட்டை ராஜாஜியும் காமராஜரும் தமிழகத்தில் எதிர்த்தனர். ஆனால் படுதோல்வியையே அவர்கள் சந்தித்தனர். அதன் பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் தலை தூக்கவே இயலவில்லை.
நான் எல்லா விவரங்களையும் கூற முயலவில்லை, ஏனெனில் இப்பதிவு அதற்குப் போதாது. முடிந்தவரை தமிழகத்துடனேயே நிறுத்திக் கொள்கிறேன்.
ராஜாஜி அவர்கள் 1967-ல் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டதை இப்போது பலர் குறை கூறுகின்றனர். பின்னோக்கிப் பார்க்கும் போது எல்லாமே சுலபமே. ஆனால் அக்காலத்தில் நிலவிய அரசியலை நேரடியாகக் கண்டவன் என்ற முறையில் கூறுவேன். ராஜாஜி நடந்து கொண்டது காலத்தின் கட்டாயம். காங்கிரஸின் பலமே அந்தந்த மாநிலத் தலைமைகள் உள்ளூர் நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதில் இருந்தது. இந்திரா அவர்களோ தான் மட்டும் நாடு முழுதும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றத் தவறான எண்ணத்தால் காமராஜ் போன்றத் தலைவர்களை மட்டம் தட்டினார். அதன் பலனை காங்கிரஸ் இன்னும் அனுபவிக்கிறது. 1971 தேர்தலில் பிளவுபடாத காங்கிரஸ் இருந்திருந்தால் நிலைமையே வேறாயிருந்திருக்கும் ஆனால் நடந்ததை யார் இப்போது மாற்ற இயலும்?
ராஜாஜியிடம் வருவோம். 1972-ல் அவர் காலமானார். ஆனால் அவர் பொருளாதாரக் கொள்கைகள் இப்போதைய அரசால் ஏற்கப்பட்டு இந்தியா முன்னேற வழி செய்தன. சுதந்திரா கட்சி இவ்விஷயத்தில் கூறியதையே மன்மோஹன் சிங்கும் ப. சிதம்பரமும் செய்கின்றனர். அந்த வகையில் ராஜாஜி இன்னும் வாழ்கிறார். அது என்னைப் போன்ற அவர் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
11 hours ago
4 comments:
அந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் உணவுப் பஞ்சம் அரசு கிடங்கில் இருந்த அரிசியையே பக்கதவச்சலம் வழங்காமல் விட்டது ஒரு துரதிருஷ்டம்.
காங்கிரஸ்காரர்கள் தாம் வெற்றி பெருவோம் என்ற திமிர், மமதை ,தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என தமிழ்நாட்டு அரசியலை சற்று கவணிக்காதது ஒரு குறை. ராஜாஜி இந்தியாவை பணக்காரர்கள் கையில் கொடுத்து விடுவார் என கூறிவர்களே கூட்டணி வைத்துக்கொண்டனர்.
அது சரி தன்னோடு சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "பென்சன் வாங்கக் கூடாது அப்படி நாம் வாங்கினால் தியாகத் திற்கு அர்த்தமில்லாமல் போகும் ,சேவையாகாது" என மற்றவர்கள் வருமாணத்தையும் கெடுத்து விட்டாரே. காமராஜ் குருப் பென்சன் வாங்கினர்.
இன்று பாருங்கள் மொழி்ப்போரட்ட தியாகியாம் அவர்களுக்கு தமிழக அரசு பென்சன் வழங்குகிறது.
இந்திரா காந்தி ரூபாய் மதிப்பைக் குறைத்த உடனே காமராஜர் அந்த அம்மாவைக் கண்டித்தார்
நன்றி
என்னார்
எலக்ஷன் அன்று ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. காமராஜ் அவர்கள் துரதிர்ஷ்டவசமாக தில்லியில் மாட்டிக் கொண்டார். தமிழ்நாட்டின் நாடியைப் பார்க்க அவருக்கு வாய்ப்பு இல்லை. அவரே தோற்றது ஒரு பெரிய சோகமே.
"அது சரி தன்னோடு சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "பென்சன் வாங்கக் கூடாது அப்படி நாம் வாங்கினால் தியாகத்திற்கு அர்த்தமில்லாமல் போகும் ,சேவையாகாது" என மற்றவர்கள் வருமானத்தையும் கெடுத்து விட்டாரே."
எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டார்கள் என்று கூறிவிட முடியாது. பென்ஷன் பலர் வாங்கினார்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இல்லை எனக்குத் தெரிந்த ஈஞ்சூர் நாராயணசாமி நாட்டார் பென்சன் வாங்க வில்லை நான் கேட்டதற்கு நான் ராஜாஜி குரூப் நாங்கள் வாங்க வில்லை காமராஜ் கரூப் தான் வாங்குகிறாரர்கள் என்றார்.
என்னார்
ராஜாஜி அவர்களுடன் பழகுவது எளிது அல்ல. பென்ஷன் விஷயத்தில் கல்கி அவர்கள் அவரை முழுவதும் பின்பற்றினார். ஆனால் ஒன்று, வேறு வகையில் பொருளாதார ஆதரவு இல்லாதவர்களில் யாராவது பென்ஷன் வாங்காதிருந்தால் அது கொடுமையே. அந்த விஷ்யத்தில் காமராஜ் அவர்கள் more realistic.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment