அவர்கள் திருமணம் 1943-ல் நடந்தது. ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு பையன். ஆர்.என். என்று அவர் கூட வேலை செய்பவர்களால் அறியப்படும் நரசிம்மன் ஹிந்து நாளிதழில் ஒரு நிருபர். ருக்மிணி ஹவுஸ்வைஃப். வீட்டை நன்கு நிர்வாகம் செய்பவர். மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருந்தாலும் பிரைவேட்டாகத் தன் அண்ணன் துணையுடன் தானே படித்து இன்டர் வகுப்பு லெவலுக்கு பாடங்கள் கற்றவர். தன் மகனுக்கும் மகளுக்கும் ஆங்கில மற்றும் ஹிந்தி இலக்கணங்களின் அடிப்படையைக் கற்றுத் தந்தவர்.
ஆர். என். எழுதும் ரிப்போர்ட்கள் ஹிந்துவில் பை-லைன் இல்லாமல் வரும். மிஞ்சிப் போனால் "நமது நிருபரிடமிருந்து" என்றுப் போடுவார்கள். அவரைப் போல பல ரிப்போர்டர்கள் அங்கு உண்டு. அவர்கள் ரிப்போர்டுகளும் வரும். இந்தப் பெண்மணி இரவில் கணவர் வீட்டிற்கு வரும் போது அவரிடம் ஒரு குறிப்பிட்டக் கட்டுரையைக் காட்டிக் கேட்பார்: "ஏன்னா இது நீங்கள் எழுதியதா" என்று. முதல் முறை அவ்வாறு நடந்தப் போது ஆர். என். ஆச்சரியத்தில் மூழ்கினார். "எப்படிக் கண்டு பிடிச்சே" என்று மனைவியைக் கேட்க, அவர் "இல்லேன்னா, இது எனக்கு சுலபத்தில் புரிஞ்சுது, அதனால்தான்" என்றுக் கூறினார்.
அதன் பிறகு மனைவி அம்மாதிரி பல முறை தன் கணவரைக் கேள்வி கேட்க, ஒவ்வொரு முறையும் அவர் 100% சரியாகவே தன் கணவர் எழுதியக் கட்டுரையை அடையாளம் காண்பது ஒரு விளையாட்டுப் போலவே நடந்து வந்தது. தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ராஜாஜி அவர்களே பாராட்டியதைக் கூட ஆர்.என். பெரிசாக நினைக்கவில்லை. மற்றவர்கள் சட்டென்றுப் புரிந்துக் கொள்ளும் முறையில் எளிய ஆங்கிலத்தில் எழுதுவது என்பது எல்லாருக்கும் கைக்கூடாது. அது தனக்கு லகுவாக வந்ததை அவர் மனைவி வாயிலாகவே தெரிந்துக் கொள்வதை விட ஒரு கணவனுக்கு வேறு என்ன வேண்டும். அதைத்தான் அவர் பெருமையாகக் கருதினார்
1960, திசம்பர் 29-ஆம் நாள் ருக்மிணி அவர்கள் காலமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட 19 தனிமையான ஆண்டுகளைக் கழித்து செப்டம்பர் 9, 1979 அன்று ஆர்.என். தன் அருமை மனைவியிடம் சென்றார்.
இந்தத் தனிமை நிறைந்த ஆண்டுகளில் அவர் பல முறை தன் மகனுடன் அவன் அம்மாவைப் பற்றிப் பல விஷயங்கள் கூறுவார். தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்னால் ஆஸ்பத்திரியில் வைத்து தன் மகனிடம் இவ்வாறுக் கூறினார்:
"மற்றவர்களை பிரமிக்க வைக்கும் சொற்களைப் போடுவதால் எந்த மொழியும் சிறப்பதில்லை. மற்றவர்களுக்கு எளிதில் புரிய வேண்டியது மிக அவசியம். இதைத்தான் உன் அம்மா எனக்குச் சொல்லாமல் கூறியது. இதை எப்போதும் மறக்கக் கூடாது, டோண்டு".
அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. இன்று திசம்பர் 29. இது ஒரு மறுபதிவு.
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
12 hours ago
12 comments:
(அந்த) அப்பா சொன்ன படியே செய்கிறீர்களா?
செய்கிறேனா, அதில் வெற்றிப் பெறுகிறேனா என்பதை மற்றவர்கள்தான் கூற வேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்கிறேன் என்றுதான் கூற முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
sent a mail dondu !
நல்ல சிறுகதை படித்ததைப் போன்ற உணர்வைத் தந்தது பதிவு. குறைந்தபட்சம் இந்தப் பதிவில் உங்கள் தந்தை சொன்ன படியே செய்திருக்கிறீர்கள்
நன்றி செந்தில் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மற்றவர்களை பிரமிக்க வைக்கும் சொற்களைப் போடுவதால் எந்த மொழியும் சிறப்பதில்லை. மற்றவர்களுக்கு எளிதில் புரிய வேண்டியது மிக அவசியம். //
நூத்துல ஒரு வார்த்தை சார். மொழி ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளத்தானே. எழுத்தாளனுடைய மனதில் தோன்றியதை அவனுடைய பேனா மூலமாக (இப்போது கீ போர்ட் என்று சொல்லலாமா?) வாசகனை சென்றடையும்போதுதான் அந்த எழுத்தாளனுடைய எழுத்து வெற்றியடையும்.
"நூத்துல ஒரு வார்த்தை சார். மொழி ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளத்தானே. எழுத்தாளனுடைய மனதில் தோன்றியதை அவனுடைய பேனா மூலமாக (இப்போது கீ போர்ட் என்று சொல்லலாமா?) வாசகனை சென்றடையும்போதுதான் அந்த எழுத்தாளனுடைய எழுத்து வெற்றியடையும்."
இதே கருத்தை பலர் பல இடங்களில் கூறி அவற்றையெல்லாம் நான் படித்திருந்தாலும், என் அன்னை மற்றும் தந்தையின் காதல் வாழ்க்கையில் அதை நேரிடையாக உணர்ந்தது போல வேறு எங்கும் உணரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"புரிந்து கொள்ளதான் மொழி" - நெத்தியடி.
உங்கள் நினைவு கூறல் டச்சிங்காக இருந்தது டோண்டு சார்...சில "மெஸேஜ்"களும் இருந்தது போனஸ்
நன்றி முத்து அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லேன்னு இன்னொருதடவை உணர்த்தியது உங்க பதிவு.
மொழி, மற்றவர்களைப் புரிஞ்சுக்க மட்டுமே.
பாக்கியை எல்லாம் டிபிஆர்ஜோ சொல்லிட்டார்.
உண்மைதான் துளசி அவர்களே. என்னுடைய ஆங்கில ஆளுமைக்கு முக்கியக் காரணம் நான் அதன் இலக்கணத்தை நன்கு கற்றதே. அதற்கு அடிகோலியவர் என் அன்னை. அதை மேலும் மெருகேறச் செய்தவர் என் எட்டாம் வகுப்பாசிரியர் ஜயராம ஐயங்கார் அவர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment