நாட்கள் செல்லச் செல்ல கூகிளின் மேல் என் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. என் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அது இன்றியமையாத கருவியாகி விட்டது. சில நாட்களுக்கு முன் நான் கார்களில் பொருத்தப்படும் ரேடியோ ஆம்ப்ளிஃபையர்கள் சம்பந்தமாக ஒரு operating manual-ஐ ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட வணிகப் பெயரைத் தாங்கிய கருவி அது.
இந்த இடத்தில் நான் மொழி பெயர்ப்பு எவ்வாறு செய்கிறேன் என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது. ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை என்னைப் போன்றவர்கள் நேரடி மொழி பெயர்ப்பு என்று கூறுவோம். அதாவது வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்கோ அல்லது அதன் ஈடான மொழிக்கோ (ஆங்கிலம்) மொழி பெயர்ப்பதுதான் அது. அதுவே ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கொ அல்லது பிரெஞ்சுக்கோ மொழி பெயர்ப்பது ரிவர்ஸ் மொழி பெயர்ப்பு என்று ஆகிவிடும். இது உலகளாவிய நிலை. ஜெர்மனை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு நிலைமை நான் எனக்கு கூறிக் கொண்டதற்கு தலைகீழ் ஆகும்.
மொழிபெயர்ப்பு உலகில் இப்போதைய நிலை என்னவென்றால் முடிந்த வரை வேறு மொழியிலிருந்து தாய்மொழிக்குத்தான் மொழி பெயர்க்க வேண்டும், ரிவர்ஸ் மொழிபெயர்ப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும் நான் பல முறை அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது பற்றி நான் ஏற்கனவே போட்ட பதிவை மீள்பதிவு செய்துள்ளேன்.
இப்போது கூகிளுக்கு வருவோம். நான் மேலே கூறியபடி ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வாக்கியத்தை பிரெஞ்சில் எழுதியதும் அது சரியா, அதாவது பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒத்துக் கொள்வார்களா என்று பார்ப்பது முக்கியம். இல்லாவிட்டால் வாக்கியம் இலக்கண சுத்தமாக இருந்தாலும் அதற்கு உயிர் இருக்காது என்பதே உண்மை. அதற்காக இந்த இடத்தில் நான் பிரெஞ்சு கூகிளை திறந்து வைத்துக் கொண்டேன். நான் மொழி பெயர்த்த ஒரு வாக்கியத்தை தேடு பெட்டியில் போட்டு க்ளிக் செய்தேன். கிட்டத்தட்ட 10 hits கிடைத்தன. அதாவது நான் எழுதிய வாக்கியம் ஒத்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் இங்கு இன்னொரு சோதனை முக்கியம். அந்த வாக்கியம் வரும் தளங்கள் பிரெஞ்சுத் தளங்களாக இருக்க வேண்டும். ஆங்கிலத் தளங்களாக இருந்தால் அவையும் என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்த வேலையையே குறிக்கும். அவ்வளவு சிலாக்கியமானதாக அவற்றைக் கருத முடியாது. ஆகவே தளம் தளமாக அதையும் பார்க்க வேண்டியிருந்தது. என்ன ஆச்சரியம் அவற்றில் ஒன்று நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த கம்பெனியின் ஆம்ப்ளிபையரைப் பற்றியதே. ஆனால் என்ன பொருளின் நம்பரில் சிறிது மாற்றம் அவ்வளவே. மற்றப்படி பத்திகள் எல்லாம் அப்படியே இருந்தன. தளமும் பிரெஞ்சுத் தளமே.
பிறகு என்ன, வேலை சுலபம்தானே. அந்த சுட்டியில் குறிப்பிட்டிருந்த கட்டுரையை அப்படியே ஒரு word கோப்பில் நகலெடுத்துக் கொண்டு, நம்பர்களை மட்டும் தேவைக்கெற்ப மாற்றியதில் என் வேலைக்கான மொழிபெயர்ப்பு தயார். மூன்று நாள் எடுத்திருக்க வேண்டிய வேலை இப்போது ஒரே நாளில் முடிந்தது. சம்பந்தப்பட்ட கட்டுரை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவரால் செய்யப்பட்டிருந்ததுதான் இன்னும் உபயோகமான விஷயம். வாடிக்கையாளருக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி.
முன்பெல்லாம் பல நூலகங்களுக்கெல்லாம் சென்று படிக்க வேண்டியிருந்தது. இப்போது அதற்கானத் தேவை மிகவும் குறைந்து விட்டது. வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது. இதற்கு கூகிள் உதவுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
13 minutes ago
15 comments:
ஆம் உண்மையில் கூகுள் தேடுதல்சேவை மிகுந்த பலனளிக்கிறது. உங்கள் துறையில் உதவுவதை விட மேலாகவே மென்பொருள்துறையில் இருப்பவருக்குப் பயன்படுகிறது. இப்போதெல்லாம் மென்பொருள் மேற்கோள், கட்டளைகளுக்கு பெரிது பெரிதாக மேனுவல்களை அடுக்கி வைத்து - புதிது வரும்போதெல்லாம் தூக்கிப்போடும் நிலையில்லை. ஒரு சொடுக்கில் கூகுளாண்டவர் புண்ணியத்தில் தேடி, வெட்டி/மாற்றி/ஒட்டி உடனே வேலையைத்தொடர முடிகிறது. கணிணியுலகில் இணையம் ஒரு மைல்கள் என்றால்... அதை துண்டைக்காட்டி வழிபாட்டுப்பொருளாக ஆக்காமல் ஆக்கரமாக மாற்றியதில் கூகுளுக்கு பெரும்பங்குண்டு.
அதிலும் இப்போது ஒருங்குறி/எ-கலப்பை/கூகுள் கூட்டணியில் தமிழிலும் மிக அழகாக தேட இயலுகிறது. இப்போது வலைப்பதிவுகளில் தேட கூகுள் கூடுதல் சேவையும் வழங்குவதாலும், அந்த கூகுளெர்த் பார்த்தபின்னரும் அதன் மதிப்பு என்னுள் மென்மேலும் பலமடங்கு கூடிவருவது உண்மை.
கூகுளுக்கு நன்றி சொல்ல வாய்ப்பு அளித்தமைக்கு உங்களுக்கும் நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - உங்களுக்கும், குடும்பத்தாருக்கும்.
பி.கு: அதெப்படி அதே பொருளின் புதிய வெளியீட்டுக்கு ஏற்கனவே வெளியிட்டதை மாற்றாமல் உங்களிடம் வந்தார்கள்!? ஒருவேளை வெவ்வேறு விநியோகிப்பாளர்களாய் இருந்தால்கூட இதுபோன்ற product launch user guide localize செய்யும்போது சம்பந்தப்பட்ட நிறுவன தலைமையிடமே செய்யாதா?
"பி.கு: அதெப்படி அதே பொருளின் புதிய வெளியீட்டுக்கு ஏற்கனவே வெளியிட்டதை மாற்றாமல் உங்களிடம் வந்தார்கள்!? ஒருவேளை வெவ்வேறு விநியோகிப்பாளர்களாய் இருந்தால்கூட இதுபோன்ற product launch user guide localize செய்யும்போது சம்பந்தப்பட்ட நிறுவன தலைமையிடமே செய்யாதா?"
இதில்தான் உலகமயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் கூறுவதைச் செய்ய அவர்களிடம் முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. அதற்கான சம்பளம் மற்ற செலவுகள் யூரோவில் கொடுத்து கட்டுப்படியாகாது.
இதில் இன்னொரு விஷயம். எந்த கம்பெனியிலும் (உலகத்தில் எந்த நாடாயினும் சரி) மொழிபெயர்ப்புத் துறை எப்போதுமே சவலைக் குழந்தையே. கம்பெனியில் சிக்கன நடவடிக்கை வந்தால் முதலில் மூடப்படுவது அத்துறையே.
ஆகவே இந்தப் பதிவில் நான் கூறிய விஷயத்தில் பழைய மொழிபெயர்ப்பாளர் அப்படியே வேலையில் இருப்பது துர்லபமே.
வாழ்க உலகமயாக்கல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்த்திருக்கிறேன் சௌந்தர் அவர்களே. ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை. சம்பந்தப்பட்ட மொழி தெரியாதவர்கள் கொடுக்கப்பட்ட பத்தியில் என்ன கூறுகிறார்கள் என்பதை குன்ஸாக அறிந்து கொள்ள முடியும். அவ்வளவே. இயந்திர மொழிபெயர்ப்பு அது. அதையே பிடித்து கொண்டு இருக்க முடியாது. மொழி பெயர்ப்பு செய்ய மனித வளம் முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் சார்,
கூகிள் ஒரு காமதேனு மாதிரி ஆயிருச்சி. எங்கள மாதிரி வங்கி அதிகாரிகளுக்கும், முக்கியமாக கடன் வழங்கும் இலாக்காவில் பணிபுரிபவருக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். வங்கிகளுக்கு கடன் கேட்டு வரும் பி.லிட், லிட் நிறுவனங்களின் முழு சரித்திரத்தையும் அறிந்துக்கொள்ளவும், எந்த வணிகத்திற்கு அல்லது தொழிலுக்கு கடன் கோருகிறார்களோ அவற்றைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ளவும் கூகுள் தேடுதல் ஒரு அளவிடமுடியா வரப்பிரசாதம். அதுசரி, சமீப காலமாக நம் தமிழ்மணம் திரட்டி பதிவுகளை லிஸ்ட செய்ய மிகவும் தாமத்மாகிறதே. என்ன காரணம்?
நீங்கள் கூறுவது உண்மைதான் ஜோசஃப் அவர்களே. கூகிளின் உபயோகம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
தமிழ்மணம்? அதன் பயனாளர்களும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். மேலும் புதுப் பதிவுகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதுவும் நம்மை மாதிரி பெருசுகள் இப்போது அடிக்கும் கொட்டம் வேறு. திரட்டி திக்குமுக்காடித்தான் போகிறது. இப்போதெல்லாம் புது பதிவு ஒன்று திரட்ட ஐந்து மணி நேரம் கூட ஆகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதாவது நம்மள மாதிரி பெருசுங்களோட கொட்டத்துனாலதான் தமிழ்மணம் திரட்டி திக்குமுக்காடுதுன்னு சொல்றீங்க? ஹூம்..பாவம் தமிழ்மணம். நீங்க சொன்னத வச்சி இவங்கள்மாதிரி ஆளுங்களோட வலைப்பூக்கெல்லாம் ரெட் லைட் போட்டுருங்க சார்னு யாராச்சும் கொடி புடிக்கப் போறாங்க சார்.
"நீங்க சொன்னத வச்சி இவங்கள்மாதிரி ஆளுங்களோட வலைப்பூக்கெல்லாம் ரெட் லைட் போட்டுருங்க சார்னு யாராச்சும் கொடி புடிக்கப் போறாங்க சார்."
செஞ்சாலும் செய்வாங்க, அதிலும் பல பெயரில் வரும் ஒரு முக்கியமான நபர் அதை பல பெயரில் செய்யக்கூடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சக கூகுள் விசிறியிடம் இருந்து கூகுளுக்கு ஒரு ஜே! என் வலைப்பதிவிலும் கூகுள் பற்றி எழுதி இருக்கிறேன். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கூகுள் தமிழ்த் தளத்தை தன்னார்வத்தின் பேரில் தொகுக்கலாம். விவரம் காண:http://services.google.com/tcbin/tc.py
ரவிசங்கர் அவர்களே,
தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வத்தைக் குலைப்பது போல கூகிளின் ஷரத்துகள் உள்ளன. முக்கியமாக எல்லா மொழிபெயர்ப்புகளும் இலவசமாக செய்ய வேண்டியுள்ளது. கீழே உள்ள ஷரத்து 3-ஐ பாருங்கள்.
3. No Compensation. Google may, in its sole discretion, use your translations to facilitate searching in various foreign languages with Google's search engine. Google makes no guarantee about whether or not your translations will be used, however, and you understand and acknowledge that Google is in no way obligated to compensate you for the translations that you provide.
அதே நேரத்தில் அப்படியே வரும் தன்னார்வலர்களின் உற்சாகத்தை மற்ற ஷரத்துகள் ஒரு வழி பண்ணி விடுகின்றன. நான் கூறுவது என்னவென்றால் ஏற்கப்பட்ட மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு விலை போட்டு தரவேண்டும். ஏற்கப்படாதவைக்கு வேண்டாம். ஆக, இதுவே ஒரு ரிஸ்க்தான். ஏற்கப்பட்டாலும் பணம் தர மாட்டோம் என்னும் போது என்னை மாதிரி தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் இதை திரும்பிக்கூட பார்க்க மாட்டோம்.
அதென்னவோ மொழிபெயர்ப்பு வேலை மட்டும் பலருக்கு கிண்டலாய் போயிற்று. விளம்பரம் மூலம் பணம் அள்ளுகிறது கூகிள். அது தவறு என்று கூற மாட்டேன். அதே நேரத்தில் ஓசியில் எனக்கு வேலை செய் என்ற தோரMஐயில் இருப்பது த்ரீ மச்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வத்தைக் குலைப்பது போல கூகிளின் ஷரத்துகள் உள்ளன. முக்கியமாக எல்லா மொழிபெயர்ப்புகளும் இலவசமாக செய்ய வேண்டியுள்ளது //
தன்னார்வலர் என்றால் தானே விரும்பி (காசு கிடைக்கிறதோ இல்லையோ) செய்யும் வேலை என்றல்லவா நினைத்திருந்தேன். இதில் காசு தர மாட்டேன் என்பது எப்படி உற்சாகத்தை குலைக்கும்?
கண்டிப்பாக குலைக்கும் முகன்மூடி அவர்களே, நீங்கள் மற்ற ஷரத்துக்களையும் சேர்த்துப் பார்த்தால். முக்கியமாக இண்டெம்னிஃபை செய்யும் ஷரத்தைப் பார்க்கவும்.
என்னை மாதிரி மொழிபெயர்ப்பே தொழிலாக வருபவர்கள் இவற்றுக்கெல்லாம் ஒத்துக்கொள்வது என்பது காரியத்துக்காகாது. கூகிள் செய்யும் உதவியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரத்தில் நான் ஒவ்வொரு முறை க்ளிக் செய்யும்போதும் ஏதாவது ஒரு விளம்பரதாரர் பயனடைகிறார் என்பதும் நிஜம். அதற்காகவே கூகிளுக்கு அவர்கள் பணம் செலுத்துகின்றனர்.
பணம் குறைவாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது மொழிபெயர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படாதபோது பணம் கிடைக்காது என்பதை கூட ஒத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பணம் கிடையாது, அதே சமயம் வழக்கு போன்ற தொந்திரவுகள் வந்தால் சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரே பார்த்து கொள்ள வேண்டும் என்கிறபோது உள்ளே செல்ல நான் காதில் பூ வைத்திருக்கிறேனா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் நாட்டாமை அவர்களே,
என் மேல் உள்ள அபிமானத்தில்தான் அவ்வாறு கூறுகிறீர்கள். நீங்கள் சொன்னதை சோதித்துப் பார்த்தேன். வெறுமனே dondu என்று ஆங்கிலத்தில் அடித்து பார்த்தேன். என் வலைப்பதிவு வரவில்லை. dondu chennai என்று அடித்தால் வருகிறது.
N.Raghavan என்று அடித்து பார்த்தால் முதலில் என் மொழிபெயர்ப்பு பக்கங்கள் வருகின்றன, வலைப்பூவும் வருகிறது.
ஆனால் "டோண்டு" என்று அடித்து பார்த்தால் 99 சதவிகிதத்துக்கு மேல் என்னுடைய வலைப்பதிவுகள்/பின்னூட்டங்கள்/என் பெயர் மற்றவர்களால் குறிப்பிட்டிருப்பதுவே வருகின்றன.
அதையெல்லாம் பார்த்துவிட்டு வந்ததில் இங்கு நேரம் ஆயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
test
இன்று உங்கள் உபயத்தால் ஒரு புது விஷயம் கற்று கொண்டேன். நான் பார்த்தது google.co.in நீங்கள் பார்த்ததோ google.com
சரி என்று google.com-ல் பார்த்தாலும் நான் முன்பு பார்த்தது போலவேதான் வருகிறது. ஆக நீங்கள் கூறுவது போல கூகிளும் நாட்டுக்கு நாடு வேறு results தருகிறது.
நீங்கள் "டோண்டு" என்று தமிழில் அடித்துப் பாருங்கள். அப்போது என்ன வருகிறது என்று பார்க்கலாம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி நாட்டாமை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment