7/02/2006

ஜூலை 2-ஆம் தேதி, 2006, உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில்

என் கார் டிரைவ் இன்னின் உள்ளே நுழையும்போது சரியாக மாலை 6 மணி. நான் வந்த சில நிமிடங்களுக்குள் சிமுலேஷன் உள்ளே வந்தார், அவருக்கு சில நிமிடங்களுக்கு அப்புறமாக ரவி பாலசுப்பிரமணியன். பிறகு விறுவிறுவென்று மரபூர் சந்திரசேகர், கூடவே அவர் நண்பர் மதன், பிறகு சிவஞானம்ஜி வந்தனர்.

ஜோசஃப் அவர்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன், ஏனெனில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அவரை ரொம்ப டிஸ்டர்ப் செய்யக் கூடாது. சில நிமிடங்களில் அவர் கால் வந்தது டிராஃபிக் ஜாமில் இருப்பதாக. ஆனால் அதையும் தாங்கிக் கொண்டு அவர் அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டார். கடைசியாக வந்தவர் 6.20-க்கு வந்து விட்டார். வந்தவர்கள்:

1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. சிவஞானம்ஜி
3. டி.ஆர்.சந்திரசேகரன்
4. ஜி. தங்கவேல்
5. ரவி பாலசுப்பிரமணியன்
6. மதன்
7. பாலா
8. மரபூர் சந்திரசேகரன்
8. ஜெயராமன்
9. சிமுலேஷன்
10. கோ. ராகவன்
11. டோண்டு ராகவன்

பாலா தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால், அது போலி டோண்டுவின் செந்தமிழ் மடல்கள்தான். பல நாட்களுக்குப் பிறகு எனக்கும் வந்ததுதான் தமாஷ். வழக்கமான குப்பைதான். பாலா அவர்கள் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதால் தப்பித்தார்.

இந்தத் திட்டில் சிவஞானம்ஜி சற்று டிஸ்டர்ப் ஆனதாகக் கூறினார். நானும் மற்ற சிலரும் அவருக்கு தைரியம் சொன்னோம். எந்த இழிபிறவிக்காகவும் வலைப்பதிவை விட்டுவிட வேண்டாம் என்று நான் அழுத்தந்திருத்தமாகக் கூறினேன்.

சிமுலேஷன் அவர்கள் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்ததால் அரை மணியில் போய் விடுவேன் என்றார். அவரை இப்படி அப்படியாகப் பேசி 7 மணிக்குத்தான் போக விட்டோம்.

மரபூர் சந்திரசேகரன், மதன் ஆகியோர் பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்தவர்கள். தஞ்சைக் கோவிலை பற்றி சுவாரசியமாகப் பேசினர். கோ. ராகவன் அவர்கள் கையில் மாவுக்கட்டுடன் வந்தார். பாலா அவர்கள் சத்யம் கணினி சேவையில் சீனியர் கன்சல்டண்டாகப் பணிபுரிய, மதன் மென்பொருள் துறையச் சார்ந்தவர். சிமுலேஷன் சங்கீதம் பற்றி புத்தகம் போட்டிருக்கிறார். சிவஞானம்ஜி பொருளாதாரப் பேராசியராக அரசுக் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்றவர். பொருளாதாரப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். தங்கவேல் மருத்துவ ஆய்வாளர், இந்திய மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். ரவி பாலசுப்பிரமணியன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற பெயரில் பதிவு போடுபவர். அவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலை வைத்துத்தான் நான் இந்தப் பதிவு போட்டேன்.

டி.ஆர். சந்திரசேகரன் இந்தியன் வங்கியில் டி.ஜி.எம். ஆக இருந்து முந்தாநேற்றைக்குத்தான் ரிடயர் ஆகியிருக்கிறார். சிறப்பு சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆக வங்கியில் 1976-ல் சேர்ந்த அவர் சென்னையிலேயே முப்பது செர்வீஸ் வருடங்களையும் கழித்து ஆடிட்டராகவும் இருந்து கௌரவமான முறையில் ஓய்வு பெற்ற முதல் அதிகாரி என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். ஜோசஃப், கோ. ராகவன் மற்றும் ஜெயராமனை பற்றி நான் கூறி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மூவருமே எல்லோருக்கும் பரிச்சியமானவர்கள்.

வெயிட்டர் வந்ததும் முதலில் பாசந்தி ஆர்டர் செய்தோம். பிறகு மைசூர் போண்டா, பிறகு என்ன என்று கேட்டால் எல்லோருமே போதும் என்று கூற, நான் மட்டும் மசால் தோசை ஆர்டர் செய்தேன். இதற்காகவே காலி வயிற்றில் சென்றிருந்தேனாக்கும். ஜோசஃப் அவர்கள் பாசந்தி வேண்ட்டாம் எனக் கூறிவிட, அதில் பாதி பாசந்தியை என் கப்பில் எடுத்துக் கொண்டு பாதியாவது சாப்பிடுங்கள் என்று கூற அவரும் சாப்பிட்டார். நண்பருக்காக நான் செய்த தியாகமாக்கும் இது! பிறகு காப்பியுடன் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.

பேச்சு அதிகமாக போலியின் சகிக்கமுடியாத வேலைகளை சுற்றியே இருந்தது. அவன் யார், பின்னணி என்ன என்பதை நான் புதியவர்களிடம் விளக்கினேன். எல்லோருமே அவன் மெயில்களை அனுபவித்தவர்கள். பாலா அவனுடன் வெவேறு பெயரில் சண்டையிட்டிருக்கிறார். ஆகவே நான் சொன்னதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.

ஜெயராமன் ஆசையுடன் தன் காமிராவை இயக்கப் பார்த்தால், அதன் பேட்டரி உயிர் விட்டிருந்தது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

மீட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே டட்ச் ட்ரீட்டைப் பற்றி நான் கன்ஃபர்ம் செய்தேன். எல்லோருமாக சேர்ந்து பணம் போட்டதில் மொத்தச் செலவு சுமையாகவே இல்லை. ஆனால் என்ன, எல்லோருமே எப்படி காசு பற்றி பேசுவது என்று யோசிக்க, அதற்கெல்லாம் கவலையேபடாத ஒருவன் கிடுகிடுவென்று வசூல் செய்தான். அதுதான் டோண்டு ராகவன்.

சிமுலேஷன், டி.ஆர்.சி., கோ.ராகவன் ஆகியோர் ஒவ்வொருவராக விடை பெற்று சென்றனர். நான் பணம் வசூல் செய்ததும்தான் என்பதையும் கூறவேண்டுமோ?

பிறகு பேச்சு பலவிஷயங்களைத் தொட்டது. நேரம் போனதே தெரியவில்லை. ஜெயராமன் அவர்கள் அடுத்த முறை குடும்பத்தினரையும் சேர்த்துக் கொண்டு பிக்னிக் எங்காவது போகலாம் என ஆலோசனை கூறினார். பார்க்கலாம்.

சரியாக 7.50 அளவில் சிவஞானம்ஜியின் மகன் வண்டியெடுத்துவர அவரை வழியனுப்பி வீட்டு அவர்வர் வாகனம் என்றோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

47 comments:

பாலசந்தர் கணேசன். said...

பிடியுங்கள் பங்க்ஸ் பார்ட்டியின் அவார்டை...
தமிழ் வலைபதிவின் வசூல்ராஜா- டோண்டு ராகவன்

புகைபடம் இல்லாமல் போனது ஒரு சிறிய குறை தான் இந்த பதிவிற்கு.

siva gnanamji(#18100882083107547329) said...

டோண்டுவை நன்றாக அறிவேன்
அதனால்தான் இரவே பதிவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.முதல் பின்னூட்டம் நமதாக இருக்கவேண்டுமே!
இரண்டாவது முறை காபி அருந்தியதை மறந்தது முறையா?
இனிதே முடிந்ததில் மகிழ்ச்சி!

dondu(#11168674346665545885) said...

ஏற்கனவே ஒரு வசூல் ராஜா இருக்கிறார். அவர்தான் நம் எல்லோருக்கும் தெரிந்த என்றென்றும் அன்புடைய பாலா அவர்கள். ஆனால் என்ன, அவர் வசூல் செய்தது ஒரு ஏழைப் பெண்ணின் படிப்புக்காக. இங்கு டோண்டு ராகவன் செய்தது போண்டாவுக்காக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இரண்டாம் காப்பி சொல்லாமல் விட்டுப் போனது குறைதான். பதிவு போடும்போது மணி கிட்டத்தட்ட 11. "தூக்கமும் கண்களை தழுவட்டுமா" என்றது. அமைதியில் நெஞ்சும் உறங்கப் போய் விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலை ஆரம்பம். திரும்ப மாலை ஆகி விடும். ஆகவே கணினியை இன்னும் 30 நிமிடத்தில் அணைக்க வேண்டியிருக்கும்.

பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு சற்று தாமதமாகலாம் மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ravi Bala said...

ஏதாவது ஒரு தலைப்பை அல்லது பிரச்சினையை முன்னிறுத்தி இந்த சந்திப்பில் விவாதமிட்டிருந்தால் இதை விட மிக உபயோகமாக இருந்திருக்கும்.
அடுத்த தடவைக்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறன்.

இரவி பாலசுப்பிரமணியன்.

டிபிஆர்.ஜோசப் said...

சார்,

நடந்தத அப்படியே படம் பிடிச்சி காட்டிட்டீங்க.. அந்த ரெண்டாவது காப்பிய தவிர..

அதே மாதிரி எல்லா மாசமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மீட் பண்ணலாம்னு ஒரு சஜ்ஜஷன் வந்ததையும் குறிப்பிட்ட்டிருக்கலாமோன்னு தோணுது.

சென்னையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைஞர்கள் இருக்கறதுனால இன்னும் கொஞ்சம் பேர் வந்திருக்கலாமோன்னு எல்லோரும் ஆதங்கப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

ஆனாலும் கடந்த மீட்டிங்குக்கு நாலே பேர் வந்திருந்ததுக்கு இந்த மீட்டிங்குக்கு மூனுமடங்கு அதிகமாக வந்திருந்தது மகிழ்ச்சிதான்..

கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் பண்டைய கோவில்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது..

மேலை நாடுகளில் வலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் பத்திரிகை நிரூபர்களுக்கு நிகரான அங்கீகாரம் கிடைத்திருப்பதுபோல் இங்கும் கிடைக்க என்ன செய்யவேண்டும் என்றும் பேசிக்கொண்டோம்..

அதற்கு நம்முடைய வலைஞர்கள் அடங்கிய ஒரு சங்கத்தை முறைப்படி ரிஜிஸ்டர் செய்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றேன். அதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டால் நலமாக இருக்கும் என்றும் கூறிக்கொள்கிறேன்..

சென்னை வலைஞர்கள் இந்த மாதாந்தர கூட்டம் நடத்துவதைப் பற்றி சிந்தித்தால் நன்றாக இருக்கும்..

நம்முடைய பலம் நமக்கே தெரிவதில்லை. சிறிய, சிறிய குழுக்களாக பிரிந்து நிற்பதைவிட்டுவிட்டு நாம் ஒன்று சேர்ந்தால் நம்மால் பலவும் சாதிக்க முடியும்..

சிந்தியுங்கள் நண்பர்களே..

Hariharan # 03985177737685368452 said...

வலைப்பதிவு உலகின் வித்தியாசமான நண்பர்களின் நல்ல "தமிழ்மணமிக்க" மாலைநேர சந்திப்பு இனிமையான முறையில் நடந்ததில் மகிழ்ச்சி.

உட்லண்ட்ஸ் மசால்தோசை பதிவின் ஊடாக மணக்கிறது.

dondu(#11168674346665545885) said...

Friends,

Sorry for the delay in responding/publishing comments. Fact is, am at the client's office and have stolen a few moments to publish and dash off these lines. Will reply later in the evening in more detail, in leisure and in Tamil as soon as I reach home in the evening.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

என்ன ரவி அவர்களே. அதுதான் தமிழ்மணத்தை பீடித்திருக்கும் புல்லுருவியாம் இழிபிறப்பு போலி டோண்டுவை பற்றிப் பேசினோமே. அந்த ராகு/கேது விலகினாலே, தமிழ்மணம் எனும் சூரியன் இன்னும் பிரகாசிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் ஜோசஃப் அவர்களே. நான் தூக்காக் கலக்கத்தில் இருந்ததால் சில விஷயங்கள் விட்டுப் போய்விட்டன. அதுதான் நீங்கள் அழகாக சம்மரைஸ் செய்து தந்து விட்டீர்களே. நீங்கள் கூறுவது போல ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மீட்டிங்க் போடலாம். பகலில் வைத்துக் கொண்டால் எப்படியிருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜோக் பார்ட்டி மற்றும் ஹரிஹரன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

நான் பிறர் பின்னூட்டங்களை பார்த்துவிட்டு எழுதலாம் என்று இருந்தேன். இப்போ நீங்கள் 'ரிலீஸ்' பண்ணின கமெண்ட்களை பார்த்ததும் எழுத ஆரம்பிக்கிறேன்....

=========

இன்னொரு மனதுக்கு இனிமையான சந்திப்பை முடித்துவிட்டு வீடு வந்தேன். அந்த சந்தோஷத்துக்கு இடையிலும், படம் எடுக்க முடியாமல் போன வருத்தம் மனசை நெருடியது. தனிப்பட்ட என் disappointment மற்றும் பிறர் எதிர்பார்ப்பையும் வீணாக்கிய “I let them down” உணர்வு.

ஒருவேளே வாஸ்து சரியில்லையோ என்று நினைத்தேன். :-) இந்த தரம் டேபிளை வேற பக்கமா திருப்பிப்போட்டது தப்போ!!

வீட்டுக்கு வந்தேன். வீட்டில் Home Minister அம்மையார் கோலை வைத்துக்கொண்டு பையனுக்கு பாடம் எழுத வைத்துக்கொண்டிருந்தார். டிவியை போட ரிமோட்டை எடுத்தேன். வேலை செய்யவில்லை. திறந்து பார்த்தேன். பாட்டரி தீர்ந்திருந்தது.

பையனை கூப்பிட்டு கேட்டேன். “இதுக்கெல்லாம் ஏன்பா கூப்பிட்டு கேக்கற!” என்று சலித்துக்கொண்டான். “ஆமாம், என் வீடியோ கேம்ஸ் விளையாட பாட்டரி தீர்ந்துவிட்டது. உங்க காமிரா, டிவி ரிமோட் என்று எடுத்துதான் விளையாட வேண்டியிருந்தது.’ என்று சலித்துக்கொண்டான்.

Home ministry வேறு என்மேல் பாய்ந்தாள். “இப்ப டிவி பார்க்காவிட்டால் என்ன போச்சு. கிடுகிடுன்னு நடந்து போய் புதிய பாட்டரி வாங்கிட்டு வாங்க” என்று சொல்லி தன் பிரிய பையனை இழுத்துக்கொண்டு படிப்பு அறைக்கு போய்விட்டாள்.

இதுதான் என் காமிரா பாட்டரியின் மர்மம்.

உலகம் உருண்டை என்று நிறைய கதைகளில் தெரிந்திருக்கும். அதாவது, கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் ஒருவருக்கு ஒருவர் எப்படியாவது தெரிந்திருப்பார்கள். அவர்கள் எந்த கண்டத்தில் அல்லது எத்தனை வருட இடைவெளியில் இருந்தாலும். ..

அதுபோல மீட்டிங்கிலும் இந்த பூகோள கொள்கை நிரூபிக்கப்பட்டது. சிமுலேஷன் தன் ஆபீஸில் ஒன்றாய் வேலை பார்க்கும் இன்னொரு பிளாக்கரை இந்த பிளாக்கினால்தான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னார். G.ராகவன் என் கம்பெனி பிராஜக்ட் பண்ணியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். நான் ஆத்மார்த்தமாக ஈடுபடும் temple cleaners க்ருப் நிர்வாகம், எனக்கு நெருங்கிய மரபூர் சந்திரசேகர், மதன் இவர்களால் தான் நடத்தப்படுகிறது என்று தெரிந்துகொண்டேன். சிவஞானம் என் வீட்டுக்கு பத்து வீடு தள்ளிதான் வசிக்கிறார் என்று ஞானம் பெற்றேன்.

எல்லோரும் என்னை துக்கம் விசாரித்தார்கள். தமிழ்மணத்தில் சமீபத்தில் அதிகம் பெயர் ‘அடிபடுகிறது’ என்று வருத்தம் போல. சிவஞானம் ஐயா நான் நுழையும்போதே “சார், அந்த (பரிதாபமான) உலகரட்சகர் நீங்கதானா’ என்று கேட்டார். ஜோசப்சார் ‘ஆமாம், பாக்கிறதுக்கும் எழுதறதுக்கும் சம்பந்தமே இருக்காது’ என்றார். ‘அதாவது, இவர் பார்த்தா ரொம்ப சாது மாதிரி...’ என்று மழுப்பினார். ;-) புதிதாக வந்த Indian bank சந்திரசேகர் மற்றும் சிலரும் ஜயராமனை பரிதாபமாக விசாரித்தார்கள்.

மரபூருக்கு ஐக்கிய ஐரோப்பாவின் ஹானரரி கன்சல்டன்டாக பணியாற்றும் உயர்ந்த பதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த இளைஞர்களின் passion, determination என்னை வியக்க வைத்தது. நம் கலாசார கருவூலங்கள் கோயில்கள். அவை காக்கப்படவேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார்கள். முயற்சிகளில் இருக்கிறார்கள்.

ஐக்கிய ஐரோப்பாவின் பல நட்ட திட்டங்களை grant மற்றும் subsidy கிடைக்க ப்ராஜக்ட்களை யாராவது கொடுத்தால் பரிந்துரைப்பதாக மரபூர் சொன்னார். இன்று காலை அதை அனுப்பியும் விட்டார். அதை என் ஆபீஸ் intranet ல் ஏத்தவும் சொல்லிவிட்டேன். 1200 இஞ்சினியர்களில் யாருக்காவது தேவை என்றால் உதவும் இல்லையா.

மத நல்லிணக்கத்தை பற்றி பேசினோம். ஜோசப்சார் தூத்துக்குடி கதை சொன்னார். ஜோசப்சார் அவர் ஊர் கிருத்துவர்களை பற்றி பல விஷயங்களை எனக்கு தெரியப்படுத்தினார். டோண்டு தேரெழுந்தூர் கதை சொன்னார். அந்த என் கண்ணை விட்டகலாத ஆராவதமுனின் ஊரின் தற்கால நிலை, சீரழிந்த அக்ரஹார வீடுகள், கம்பன் பிறந்த இடத்தை கழிப்பறையாக ஆக்கும் கேடுகெட்ட அரசாங்கம் எல்லாம் பேசினோம். .

வழக்கம்போல டோண்டுவின் அட்டகாசத்துடன் மீட்டிங் நடந்தது :-) புதிதாய் வந்தவர்களுக்கு போலியுடன் போரிடும் முறைகளை, யுத்த தந்திரங்களை உபதேசித்தார். போலி அரக்கனின் பத்து தலைகள், இருபது கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

உலகம் மட்டுமா உருண்டை. போண்டாவும்தான்.
மைசூர் போண்டா என்றால் என்ன, இங்கு கிடைப்பது மைசூர் போண்டாவா என்று காரசாரமான விவாதம் நடந்தது. அதில் ஜெயித்தவர் g. ராகவன் தான்

வலிப்பதிவர்களின் மீது போண்டாவை திணிக்கும் அடக்குமுறையை திராவிடர்களின் சார்பாக நான் கடுமையாக சாடினேன். “இந்த போண்டா, தமிழ் வலைஞர்களை அடிமை படுத்த ஏற்பட்ட சதி. ஆரியர்களின் இந்த போண்டா திணிப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று டோண்டுவிடம் போராடினேன். ஆனால் பலிக்கவில்லை. ஆரியர்களின் சதி வென்றது. நான் பேசினதுக்கு நேர் விரோதமாக போண்டாவை ருசித்து சாப்பிட்டேன்.

மொத்தத்தில், இம்மாதிரி சந்திப்புகள் ஒரு மனித நேயத்தை வளர்ப்பது கண்கூடாக அறிந்து மகிழ்ந்தேன். ப்ளாக் என்னும் திரைக்கு பின்னால் இருக்கும் சிறுசிறு உரசல்கள் நேரில் மறைகின்றன. ப்ளாக் நேயர்களை நேரில் பார்ப்பதால், அவர்களை அவர்கள் எழுதிய கருத்துவாரியாக பகுக்காமல், முழு மனிதரகளாக உணர்ந்து அவர்களின் ஆசாபாசங்களை ஒருவாறு அறிந்து இன்னும் நெருக்கமாகிறோம். இதுவே மற்ற ப்ளாக் அன்பர்கள் இழப்பது. பல பொது நட்புக்கள் ஏற்பட்டு ப்ளாக் என்பது ஒரு கிரியாஊக்கியாக (catalyst ஆக) மட்டுமே நின்றுவிடுகிறது. இதனால்தான், நாம் இந்த சந்திப்புகளை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்ல ஒத்த மனம் உள்ளவர்கள் ஒரு பிக்னிக் போடலாம் என்று சொன்னேன். பெங்களூரில் காலை முதல் மாலை வரை சந்திக்கிறார்களாம். அது பிக்னிக் மாதிரிதான் (வேலே ரொம்ப குறைச்சலோ அங்க!)

நன்றி

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் ஜெயராமன் அவர்களே. உங்கள் காமெரா பேட்டரி மர்மம் கேட்டதும் நான் சமீபத்தில் 1959-ல் குமுதத்தில் படித்த ஜோக் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

அப்பா ஷேவ் செய்து கொண்டிருக்கிறார். முகமெல்லா வேட்டுக் காயம். "சே, என்ன மட்டமான பிளேட்" என அவர் அலுத்துக் கொள்ள, பையனும் அதை ஆமோதிக்கிறான், "ஆமாம் அப்பா, என் பென்சிலைக் கூட சரியாக உன் பிளேட் சீவவில்லை" என்று.

ஜோசஃப் அவர்கள் முக்கியமாகக் கூறியது தூத்துக்குடியில் ஒரு மதத்தினரின் விழாவை மற்றவர்களும் ஊர்க்காரர்கள் என்ற முறையில் சந்தோஷமாக பாவிப்பது பற்றிக் கூறினார். தேரெழுந்தூரில் உள்ள கோவிலி ஓடாத தேரை ஒட்டிய கோவில் கமிட்டியில் உள்ளூர் இசுலாமியர் அதிகம் இடம்பெற்றிருந்ததையும் நான் நினைவு கூர்ந்தேன்.

இம்மாதிரி சந்திப்புகளில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் நட்பு அதிகமாகிறது. கருத்து வேறுபாடு அதுபாட்டுக்கிருக்கட்டும், பிறகு வேறு எதைத்தான் பேசுவதாம்? ஆனால் இந்த நட்பு மிக அருமையானது.

அடுத்த மீட்டிங்கிற்கு இன்னும் நிறைய பேர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

அடுத்த சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பை உட்லண்ட்ஸில் வைக்காமல் "ஆரிய"பவனில் வைத்து, அந்த "ஆரிய" போண்டா திணிப்பு சதியை நிரைவேற்றுவீர்களாக...!! ;D

ஜெயராமன் சாரையாவது உலக ரட்சகர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறான். எனக்கு "வக்கிர பஞ்சர்" என்று பெயரை பஞ்சர் செய்திருக்கிறான்.

dondu(#11168674346665545885) said...

என்ன சொன்னாலும் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னை மிஞ்ச வேறு இடம் இல்லைதான். டிபன் மட்டுமல்ல, அந்த இடமும்கூட ரம்யம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Technology Buff, Entrepreneur said...

haha, nice one, Dondu-sir. You missed me out... I haven't gotten those senthamil madalgal either.

(I beleive I would be making my statement a false positive by commenting here, wouldnt I? ;)

siva gnanamji(#18100882083107547329) said...

டோண்டு ட்டிபிஆர் ஜயராமன் சொல்லாதவை(07/02/06 சந்திப்பு}

உட்லேண்ட்ஸ் அமைந்துள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ஸ்டெல்லா மாரிஸிலிருந்து அண்னா
மேம்பாலம் வரையில் கலர் கலராய் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன
நம் சந்திப்பை முன்னிட்டா என்று அமைப்பாளாரைக் கேட்டேன்."இல்லை வேறு ஏதொ விழா" என்றார்
2)சர்வரிடம் டோண்டு 7 வாசந்தி 7 வாசந்தி கொடு என்று கேட்டார் சர்வருக்கும் புரியவில்லை;எங்களுக்கும் புரியவில்லை;ட்டிபி ஆர் சுற்று முற்றும் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்.பிறகுதான் புரிந்தது;வங்காளத்திலிருந்து தமிழிற்கு
மொழி பெயர்க்கும் வேலையை அப்பொழுதுதான் முடித்துவிட்டு டோண்டு வந்திருக்கார்.வங்காள மொழியில் "வ"வும் "ப"வும் ஒன்றுதானாம்(உ-ம்:விஷ்னுராம் மேதி=பிஷ்னுராம்)அதே நினைவில்
பாசந்தி என்பதற்குப பதில் வாசந்தி என்று கூறியிருக்கின்றார்
3)இந்த பெயர் குழப்பத்தில் வா(பா)சந்தி வேண்டாமென்றுமறுத்துவிட்டார்.அவருக்கு எப்பொழுதும் உள்துறை
கண்காணிப்பு பற்றி விழிஆக இருப்பாராம்
4)அவரிடமிருந்து பாசந்தியை பாதி பெற்றுக்கொண்ட டோண்டு எந்தலையில் பாதியைக் கட்டிவிட்டார். அதன் விளைவு இன்று மதியம் 12 க்குதான் தூக்கம் கலைந்தேன்,இந்த பின்னூட்டத்தை
இவ்வளவு லேட்டாக போடுகிறேன்.......ம்..ஹூம்..
கடலில் பெய்த மழையாகிவிடுமோ?
5)டச்சு பார்ட்டி யின் வசதி மசால் தோசயில் தான் புரிந்தது

மகேஸ் said...

//7 வாசந்தி //
நல்ல வேளை டோண்டு சார் 7 வசந்தியைக் கொண்டுவா என்று சொல்லாமல் விட்டாரே.

:))

dondu(#11168674346665545885) said...

"You missed me out... I haven't gotten those senthamil madalgal either"
How can you get any mail from that lowlife Polidondu as your profile is not accessible?

By the way that creep has given a kneejerk reaction in his blog. Do have a look at it.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

வாசந்தி நல்ல ஜோக் சிவஞானம்ஜி அவர்களே. உங்கள் வர்ணனை நன்றாகவே இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மகேஸ் அவர்களே, வாசந்தியாவது பரவாயில்லை, வாசந்தியை கூப்பிட்டு விட்டு பாசந்தியைக் கூப்பிட்டேன் எனக் கூறி தப்பிகொள்ளலாம். ஆனால் வசந்தி விவகாரத்தில் ஒன்று வசந்தியின் கணவனிடம் உதை வாங்க வேண்டும், இல்லாவிட்டால் பசந்தியின் கணவனிடம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

G.Ragavan said...

சந்திப்பு இனிதாக நடந்தது. வலைப்பதிவர்கள் பலர் இருக்கையில் இன்னும் அதிகமானோர் வந்து கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருக்கும். அடுத்த முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

கையில் கட்டோடு இருந்ததால் என்னால் போண்டாவைச் சாப்பிட முடியவில்லை. அதாவது பிய்த்துச் சாப்பிட முடியவில்லை. மரபூரார்தான் தாமாகவே முன் வந்து போண்டாக்களைப் பிய்த்துத் தந்து உதவினார். நன்றி மரபூரார்.

திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்ல என்னுடைய நண்பர்கள் வந்ததால் நான் விரைவில் செல்ல வேண்டியதாயிற்று. அடுத்த முறை இன்னும் சற்று நேரம் செலவிட வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

கண்டிப்பாக, ராகவன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ravi Bala said...

இன்று காலை mail box'ல் செந்தமிழ் ரசம் சொட்ட சொட்ட 4 பின்னூட்டங்கள் இட்டிருக்கிறான் நம் நெருங்கிய எதிரி.சிவஞானம்ஜி சொன்ன மாதிரியே filter ஒன்றை set செய்து விட்டேன்.

dondu(#11168674346665545885) said...

Thanks Joke Party. Am in client's place. Will give reply in Tamil as soon as I reach home.
Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

/////வலிப்பதிவர்களின் மீது போண்டாவை திணிக்கும் அடக்குமுறையை திராவிடர்களின் சார்பாக நான் கடுமையாக சாடினேன். “இந்த போண்டா, தமிழ் வலைஞர்களை அடிமை படுத்த ஏற்பட்ட சதி. ஆரியர்களின் இந்த போண்டா திணிப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று டோண்டுவிடம் போராடினேன். ஆனால் பலிக்கவில்லை. ஆரியர்களின் சதி வென்றது.///// - உலகரட்சகர்


////அடுத்த சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பை உட்லண்ட்ஸில் வைக்காமல் "ஆரிய"பவனில் வைத்து, அந்த "ஆரிய" போண்டா திணிப்பு சதியை நிரைவேற்றுவீர்களாக...!!//// -வக்கிர பஞ்சர்

இதுபோன்ற நக்கல்கள் திராவிடத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.... இதுபோன்ற இழிவுகள் தொடருமானால் உங்களது வலைப்பதிவர் கூட்டங்களில் என்னைப் போன்ற திராவிட உணர்வு கொண்டவர்கள் கலந்து கொள்ளவே யோசிப்பார்கள்.... மொத்தத்தில் வலைப்பதிவர் கூட்டம் "ஆரிய வலைப்பதிவாளர்கள் கூட்டமாக" மாற வாய்ப்பிருக்கிறது....

திராவிடன் என்ற முறையில் இந்த நக்கல்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.....

டிபிஆர்.ஜோசப் said...

ஜயராமன்,

ரொம்ப நல்லாருந்தது ஒங்க ரிப்போர்ட்.

இந்த பாட்டரி மாயமெல்லாம் எல்லார் வீட்லயும் நடக்கறதுதான்..

இருபது, இருபத்துமூனு வயசு பசங்களே இந்த மாதிரி செய்யும்போது ஒங்க பையன் செஞ்சது தப்பேயில்லை..

இந்த மாதிரி கூட்டத்துல கலந்துக்கிட்டவங்க எல்லாருமே மத்தவங்க மறந்துபோனத எழுதும்போது படிக்கறதுக்கு எவ்வளவு சுவையா இருக்கு..

சிவ.ஜி, ஜி.ரா உங்களுடைய பங்குக்கு நீங்க எழுதுனதும் ரொம்ப ஆப்ட்டா இருந்தது..

சென்னை வலைஞர்களுள் பெரும்பாலோனோர் கலந்துக்கொள்வதாயிருந்தால் டோண்டு சார் சொல்றா மாதிரி இத பகலுணவு கூட்டமாகவும் நடத்தலாம்..

இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலா செலவழிக்கலாம்..

siva gnanamji(#18100882083107547329) said...

ஆமாங்க ஜோஸப் அது நல்ல ஐடியா
பகலுண்வுன்னா அதுதான் சரியான டச்சு பார்டியா இருக்கும்...இப காfஇ மட்டும் சாப்டவங்க, காfஇயும் போண்டாவும் ம்ட்டும் சாப்டவங்க,காfஇ போண்டா மசால் தோசா சாப்டவங்க, ஒண்ணுமே சாப்டாதவங்க எல்லோரும் சமமா கொடுக்க வேண்டியிருக்கு....
(என்ன நான் சொல்றது சரிதானே டொண்டு சார்?)

ஜயராமன் said...

லக்கி சார்,

என் விளையாட்டு சொற்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்கிறேன். போண்டாவை ஏன் திணிக்கிறேன் எங்கள் மேல் என்று நான் டோண்டுவை விளையாட்டாக கேட்கப்போக, பேச்சு வளர்ந்து இவ்வாறு இடக்காக பேசினேன் அங்கே. அதையே நான் இங்கு குறிப்பிட்டேன்.

என் எழுத்தில் திராவிடர்களை கிண்டலடிப்பது ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது. ஆரிய திணிப்பு கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம்.

திராவிடர்களை கிண்டல் அடிக்கும் எண்ணம் இல்லை. நானும் திராவிடன் தானே!

தங்கள் மனத்தில் தவறாக தோன்றுமானால் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

Friends,

Thanks for the comments. Like yesterday, today too I am in client's office. Will come home and reply in Tamil towards evening.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

///என் விளையாட்டு சொற்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்கிறேன்.///

அப்படியே ஆகட்டும்... நன்றி!!!!

:-)

வஜ்ரா said...

//
இதுபோன்ற நக்கல்கள் திராவிடத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது....
//

ஐயோ!!
ஆரியன், திராவிடன் எல்லாம் உடான்ஸ் என்பது என் கருத்து. அதை இந்த "வக்கிர பஞ்சர்" திராவிடத் தமிழர்களை பஞ்சர் செய்வதற்க்காக பயன் படுத்தவில்லை. அந்த விடாது வக்கிர வெறுப்பை துப்புபவரை நக்கலடிப்பதர்காகச் சொன்னேன்.

dondu(#11168674346665545885) said...

"இப காfஇ மட்டும் சாப்டவங்க, காfஇயும் போண்டாவும் ம்ட்டும் சாப்டவங்க,காfஇ போண்டா மசால் தோசா சாப்டவங்க, ஒண்ணுமே சாப்டாதவங்க எல்லோரும் சமமா கொடுக்க வேண்டியிருக்கு...."

இம்மாதிரி டட்ச் ட்ரீட்டைப் பற்றி முதலிலேயே கூறியதுதானே. சற்று வயிற்றைக் காலியாக வைத்திருக்கலாமே. மற்றவர்கள் ரொம்ப சாப்பிடாததால் நான் மேலும் சாப்பிட நினைத்த வெங்காய ஊத்தப்பத்தை விட வேண்டியதாயிற்றே, ஊஊஊ (அழுகை).

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜெயராமன் மற்றும் வஜ்ரா அவர்களே,

லக்கி லுக் ஜோக்காக அடித்ததை நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

////லக்கி லுக் ஜோக்காக அடித்ததை நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா?////

தேங்க்ஸ் டோண்டு சார்... எப்படியோ என்னைக் காப்பாத்திட்டிங்க...

dondu(#11168674346665545885) said...

நல்லது லக்கி லுக் அவர்களே, அடுத்த மீட்டிங்கிற்கு உங்களை நிச்சயம் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

ஏங்க...போலி ரயிலில் விழுந்து தற்கொலை செஞ்சிகிட்டான்னு என்கேயோ பின்னுட்டம் போட்டுட்டீங்க...
ஆனா, அந்த ஆள் பதிவைத் தேடிப்பார்த்தா...7ன் தேதி கூட ஒரு பதிவு போட்டுருக்கான்...!!

He is not mentally unstable to do such sick activities...he has hatered unlimited on you and on any body who has a faint support for your views. He very well knows what he is doing.

He has to be in Jail. Not in asylum.

dondu(#11168674346665545885) said...

"ஆனா, அந்த ஆள் பதிவைத் தேடிப்பார்த்தா...7ன் தேதி கூட ஒரு பதிவு போட்டுருக்கான்...!!"

இன்றைக்கு தேதி என்ன?

எனக்கு இன்று காலையில் வந்த மின்னஞ்சலில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நான் போலி டோண்டு இறந்ததற்காக பால் பாயசம் வினியோகித்ததாகக் குறிப்பிட்டிருக்கப்பட்டிருந்தது. அதைதான் நான் ஆட்சேபித்தேன், அது ஒரு குரூரமான கற்பனை, டோண்டு ராகவன் அவ்வாறெல்லாம் செய்பவன் அல்ல என்பதற்காக. அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

அப்புறம் ஜூலை கடைசீல சென்னைச் சந்திப்பு இருக்குதா? ஏற்பாட்டத் தொடங்குங்க இப்பவே. நல்ல ஓட்டலாப் போயி மதியச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கட்டும். //

டோண்டு சார்.

இது நம்ம கோ.ராகவனுடைய கேள்வி..

என்ன செய்யலாம்?

ஒரு தனிபதிவு இப்பவே போட்டுடறீங்களா?

dondu(#11168674346665545885) said...

I am at a browsing cafe as my Internet is down. How about Woodlands drive-in itself? Lunch is supposed to be good.

We can assemble under the trees, exchange views for one or two hours and then go in for lunch, which is quite good. And then continue talking under the trees. Chairs can be arranged.

Regards,
Dondu N.Raghavan

siva gnanamji(#18100882083107547329) said...

.//...chairs can be arranged.....//

cant we have tables?

dondu(#11168674346665545885) said...

Why not?

Dondu N.Raghavan

பொன்ஸ்~~Poorna said...

மேலே இருக்கும் பின்னூட்டம் என்னோடதில்லை.. மொத்தமாக நீக்கினால் மகிழ்வேன்

dondu(#11168674346665545885) said...

மன்னித்துக் கொள்ளுங்கள் பொன்ஸ் அவர்களே. உங்களுக்கும் போலியார் வந்து விட்டாரா?

நல்ல வேளையாக நான் அனானி ஆப்ஷன் அனுமத்ப்பதில்லை, ஆகவே எலிக்குட்டியை வைத்துப் பார்த்து உடனுக்குடன் சரி பார்க்க முடிந்தது. ஆபாசமோ இல்லையோ, இன்னொருவர் பேரில் யாரும் பின்னூட்டமிடக்காடாது என்று நான் கூறுவதன் பொருள் இப்போது புரியும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

எல்லாம் சரி.. அந்த பாதி பாஸந்திக்கு காசு யாரு கொடுத்தாங்கன்னு சொல்லாம விட்டுட்டிங்களே?! ('பாசந்தி'யை மிஸ் பண்ணிட்டேன்!)

dondu(#11168674346665545885) said...

பாதி பாஸந்தியோ, முழு பாசந்தியோ மொத்தமாக பில் போட்டு எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டோம் அவ்வளவே. பணம் கையில் சற்று மீந்ததால் இரண்டாம் முறை காபி ஆர்டர் செய்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது