முந்தா நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கணினி அறையிலிருந்து நடு ஹாலுக்கு வந்து "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "சலக்கு சலக்கு சிங்காரி" என்று பாடிக் கொண்டே போட்ட டப்பாங்குத்தைப் போட்டேன். கொலுவுக்கு அழைக்க வந்திருந்த பக்கத்து வீட்டு குழந்தை வீல் என்று கத்தியபடி தன் அம்மாவின் மடியில் தஞ்சம் புகுந்தது. எதற்கும் அப்பாட்டையும் கீழே பார்த்து விடுங்கள்.
"என்ன திருக்குறள் வேலையை முடித்து விட்டீர்களாக்கும்" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார் என் வீட்டம்மா. பிறகு குழந்தை பயந்த அளவுக்கு குறையாமல் பயந்த அதன் அன்னையையும் சமாதானப்படுத்தினார். "ஒண்ணுமில்லை எங்காத்து மாமா கடந்த பத்து மாதங்களாக இந்த வேலையை செஞ்சுண்டு வரார். ஏதோ தடங்கல்கள் வந்துண்டே இருந்தன. இன்னிக்குத்தான் 133-ஆம் அதிகாரத்தை முடித்தார் என்று கூறி விட்டு வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தார். வீட்டில் நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் வெளியில் வந்து டப்பாங்குத்து போட்ட நான் சுதாரித்து கொண்டு கணினி அறைக்குள் மீண்டும் தஞ்சம் புகுந்தேன்.
நான் இந்தப் பதிவில் குறிப்பிட்ட இந்த வேலை போன ஆண்டு திசம்பர் மாதம் ஆரம்பித்தது.
அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது. நடுவில் மற்ற மொழிகளின் வேலை வேறு. அவற்றை கொடுப்பவர்கள் நேற்றே வேலையை முடிக்க வேண்டும் என்ற ரேஞ்சில் பேசுபவர்கள். இந்த வேலை தள்ளி போட்டு கொண்டே சென்றது. நல்ல வேளையாக எனக்கு இந்த வேலையைக் கொடுத்தவர் உறவினராகப் போனதால் எனக்கு நெருக்கடி எதுவும் தரவில்லை. மேலும் இது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய வேலையாக அவருக்கு பட்டுள்ளது. ஆகவே நிறுத்தி நிதானமாக வேலை செய்ய முடிந்தது.
அதே சமயம் இதை நான் இலவசமாகச் செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். ஆகவே இதில் உண்டாகும் தாமதம் எனது குற்ற உணர்ச்சியை தூண்டி வந்தது. இப்போதுதான் நிம்மதி. நேற்று இந்த வேலையை என்னிடம் ஒப்படைத்த என் மனைவியின் அத்தையன்பர் வேறு விஷயமாக தில்லியிலிருந்து சென்னைக்கு வந்தவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் கணினியில் இருந்த குறள்களை காட்டினேன். இனிமேல் பிழை திருத்தும் வேலைகள்தான் பாக்கி. அவரும் எனது வேலையில் திருப்தி தெரிவித்தார்.
அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 35 + 35 ஆக 70 அதிகாரங்கள் மற்றும் காமத்துப் பால் 25 அதிகாரங்கள். ஆக மொத்தம் 133 அதிகாரங்கள். ஆயிரத்து முன்னூத்து முப்பது குறள்களையும் பாயிரத்தொடு பயின்றால் கவலையே இன்றி எந்த அரசரது அவைக்கும் சென்று ஆஸ்தானப் புலவராய் வீற்றிருக்கலாம் என்னும் பொருள்பட ஒரு பிரசித்தி பெற்ற புலவர் எழுதியுள்ளார். அவர் பெயர் திடீரென நினைவுக்கு வரவில்லை. நான் அவ்வாறு சொன்னதாகவும் நினைவில்லை. :)
அறத்துப்பால் கடினம் என்று நினைத்திருந்தேன். திருவள்ளுவர் குறிப்பிட்ட பல லட்சியங்கள் இக்காலத்துக்கு பொருந்தாது என்ற அச்சம் ஏற்பட்டது. பொருட்பால் அந்த விஷயத்தில் யதார்த்தத்துக்கு மேலும் அருகாமையில் வந்தது. ஆனால் சும்மா சொல்லப்படாது, காமத்துப்பாலில் பின்னி பெடல் எடுத்து விட்டார். பரிமேலழகரே திக்கு முக்காடி போய் விட்டிருக்கிறார். அதுவும் கடைசி இரண்டு அதிகாரங்கள் தூள். காமத்துப் பாலில் வரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு குறளுக்கும் பின்புலன் தரவேண்டிய அவசியம்.
ஊடல் பற்றிய அதிகாரங்களில் வரும் தலைவியிடம் தலைவன் படும்பாடு இருக்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்.
திடீரென தலைவன் தும்ம தலைவி தன்னையறியாது "நீடூழி வாழி" என்று வாழ்த்துகிறாள். திடீரென நினைத்து கொண்டு "எந்தச் சிறுக்கி உன்னை நினைத்தாள்? இவ்வாறு திடீரென ஏன் தும்மினாய்" எனக் கேட்டு டார்ச்சர் செய்கிறாள்.
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"
தும்மலை அடக்கினால் "யாரை என்னிடமிருந்து மறைக்கிறாய்"? என்ற கேள்வி அம்பாக வருகிறது.
"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"
அவள் அழகையே கூர்ந்து பார்த்தால் கூறுகிறாள் வேறு எந்த பொம்பளையோட என்னை ஒப்பிடுகிறீர் என்று
"நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினர் என்று"
ஆகா தலைவன் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம். அப்படி இருக்க, எப்போது ஊடல் முடிவது, தன்னுடைய மற்றது தலைவியின் மேல் படுவது என்ற ஆயாசத்தில் போகிறான் தலைவன்.
தோழி அவளை காரணம் கேட்க, இதெல்லாம் பிறகு வரும் புணர்ச்சியின் இன்பத்தை அதிகரிக்க என்று கூறி விடுகிறாள் தலைவி.
"இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு"
"ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்"
ரொம்ப விவரமான தலைவிதான்.
இவ்வாறெல்லாம் வாட்டி விட்டு திருவள்ளுவர் கடைசியில் கூறுகிறார்:
"ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்"
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பதிவை போட்டது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது. அவரது கணினியில் இகலப்பை இல்லை. சுரதா பெட்டியைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆகவே நிறைய எழுத இயலவில்லை. இப்போது வீட்டிற்கு வந்ததும்தான் முடிகிறது.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
37 comments:
வாழ்த்துக்கள் டோண்டு சார்..காமத்துபால் குறித்தான உங்களுது உதாரணம் நன்றாக இருந்தது
பாரட்ட வாங்க!!!
நம்ம சார் நல்லது செய்திருக்கார். பழசெல்லாம் மனதில வைக்காம ஒரு வார்த்தை நல்லது சொல்லுங்கப்பா! தப்புச் செய்தா திட்டுற உங்களுக்கு நல்லது செய்யிறபோது பாராட்டணுமப்பா. இப்படியே உம் என எத்தனை நாளுக்கு மூஞ்சியை திருப்பிக்கிட்டு ஊரில திரியறது. பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கிறீங்க நானா சொல்லனும்? எங்கே நம்ம பசங்க செந்தழல் ரவி, கோவிக் கண்ணு, மாசிலாப் பையன், குழலி, வெட்டியான், சோதிடர் சுப்பையா அண்ணாச்சி?
சிலோன்காற தம்பிகளா நீங்களுமா?
உங்களுக்கு தனியா வெத்தில பாக்கு வச்சா அழைக்கணும்?
திருக்குறள் வளர்ச்சியில நம்ம பய டோண்டு நல்லது செய்திருக்கான்.
மந்தார வாழ்த்திவிட்டு வாயாற, வயிறார கை நனைச்சிட்டுப்போங்கப்பா!!!!
//தன்னுடைய மற்றது தலைவியின் மேல் படுவது //
அச்சச்சோ
டோண்டு மேன்,
எதுக்கு இந்த கொலவெறி? வரதும் வராததும், பின்னூட்டம் இடறதும் இடாததும் அவங்கவங்க இஷ்டம்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காமத்துப்பால பத்தி எழுதியும் தமிழ்மண குஞ்சுகள் இன்னும் கும்மியடிக்கவில்லையா? என்னா கொடுமை சார் இது?
<--
Anonymous said...
காமத்துப்பால பத்தி எழுதியும் தமிழ்மண குஞ்சுகள் இன்னும் கும்மியடிக்கவில்லையா?
-->
அதானே
You should write european translation for our ancient literatures like Arthasasthiram,medical and astrological books of Gupta age and Kamasutra. So that our ancient history will be known to world.
Didnt 'pagutharivu thanthai'(!!) say thiruvalluvar was ayokkiyan?
Robert Mugabe
காமத்துப்பால் எழுதிய 70 வயது வாலிபன் வாழ்க .
பரதரசுவும் புரளிமனோகர் சார்வாளின் அவதாரமோ? :-)
இப்பதிவுக்கு ஒரே ஒரு தமிழ்மண ஸ்டாராவது மிஞ்சி இருக்கிறதே? நல்லவேளை கோவணத்தை உருவுவது போல அதையும் உருவாமல் விட்டார்களே?
//பரதரசுவும் புரளிமனோகர் சார்வாளின் அவதாரமோ? :-)//
புரளி மனோஹரின் காப்பிரைட்டை தன்வசம் வைத்திருக்கும் செந்தழல் ரவியையா குறிப்பிடுகிறீர்கள்?
சேச்சே இருக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யார்யா அது எம்பேருக்கு உரிமை கொண்டாடுரது ? பிச்சுபோடுவேன் , நான் அவ(ன்)ர் இல்லை ...
திராவிட குஞ்சுகள் இங்கே கும்மியடிக்கலாமா?
டோண்டு சார், காமத்துபாலை கரைத்து குடித்திருக்கிறீரோ, கலக்குறேள்.
டோண்டு சார் ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாப்பா
கர்ணாநிதி எளுதின திர்க்குரல் உறை படித்திருக்றீர்களா டொண்டு சர்
//கருணாநிதி அவர்கள் எழுதின திருக்குறள் உறை படித்திருக்றீர்களா டோண்டு சார்//
அவ்வப்போது குறளோவியம் குங்குமத்தில் வாராவாரம் படித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மனமார்ந்த பாராட்டுக்கள் டோண்டு சார்,
கருணாநிதி தன்னுடைய திருக்குறள் உரை முன்னுரையில் அந்த முயற்சியை "இமயமலைக்குப் பொன்னாடை போர்த்த முயன்ற முயற்சி" என்று சொல்லி இருந்தார். தங்களுடைய முயற்சியை, வைகை நதியைத் தேம்ஸுடன் இணைக்கும் முயற்சி என்று சொல்லிப் புகழலாமா?
நானும் சில மாதங்களாக திருக்குறளில் வேறொரு வேலை செய்து வருவதால் தாங்கள் கடந்த பத்து மாதங்களில் எப்படிப்பட்ட பேறுகால சுகம் அனுபவித்திருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. சுகப் பிரசவத்திற்கு வாழ்த்துக்கள்.
புத்தக வடிவம் எடுக்கும் போது கட்டாயம் சொல்லுங்கள், எனக்கு ஒரு பிரதி அட்வான்ஸ் புக்கிங்.
"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" இந்தக் குறளுக்கான மொழிபெயர்ப்பு மட்டும் சொல்லுவீர்களா?
RATHNESH
நீங்கள் கேட்ட மொழிபெயர்ப்பு இதோ ரத்னேஷ் அவர்களே. என் மனதுக்கு ஒவ்வாத குறள்களில் இதுவும் ஒன்று. ஆனால் என்ன செய்வது, வேலை என ஏற்றுக் கொண்டதால் செய்ய வேண்டியதாயிற்று. பரிமேலழகர் உரையை மொழிபெயர்ப்பு செய்தது எனது மனைவியின் அத்தையன்பர். நான் அதை சரிபார்த்து தட்டச்சு செய்தேன்.
For the woman, who worships no other God but her husband while getting up from bed, there will be a downpour just on her command.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sir,
This is really a splendid achievement, Congratulations !
நன்றி பாலா அவர்களே,
முதலில் மெனக்கெட்டு மாங்கு மாங்கென்று கையால் எழுதினவரைத்தான் பாராட்ட வேண்டும். பல ஆண்டுகளாக அவரது உள்ளத்தில் கரு கொண்டு வளர்ந்து வெளியே வந்தது இந்த மொழிபெயர்ப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//For the woman, who worships no other God but her husband while getting up from bed, there will be a downpour just on her command.//
மொழிபெயர்ப்பு மொக்கையாக இருக்கிறதே? :-(
//மொழிபெயர்ப்பு மொக்கையாக இருக்கிறதே? :-(//
கணவனே கன்கண்ட தெய்வம் என்ற கான்சப்டே மொக்கைதானே. அதைப் புகழ்ந்து கூறும் குறளிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? பல குறள்கள் அம்மாதிரி உள்ளன. ஆகவே வேலை இவ்வளவு நாட்கள் எடுத்து கொண்டன. ஏனெனில் எனக்கே அவை ரொம்ப ஓவராகப் பட்டன.
என்ன செய்வது? உள்ளடக்கத்துடன் சண்டை போடக்கூடாது என்பது ஒரு மொழிபெயர்ப்பாளனின் பைபிளில் உள்ள முதலாம் கட்டளை.
சமீபத்தில் 1991-ல் ஒரு பிரெஞ்சுக்காரருக்கு துபாஷியாக ஆக்ரா சென்றிருந்தேன். எனது வாடிக்கையாளரும் கூட வந்திருந்தார். தாஜ் மஹால் சென்றிருந்த போது அவர் ஏன்னிடம் தாஜ் மஹாலில் தலைமை கட்டுநரின் கண்ண ஷாஜஹான் பிடுங்கியதாக குறிவிட்டு அதை பிரெஞ்சுக்காரரிடம் மொழிபெயர்க்கச் சொன்னார். அவரிடம் மிக மரியாதையாகவே கீழ்க்கண்ட வாதங்களை வைத்தேன்.
1. இது நடக்காத விஷயம்.
2. தாஜ்மஹல் பணி முடியும் முன்னரே ஷாஜஹான் ஔரங்கசீப்பால் சிறையில் வைக்கப்பட்டான்.
3. ஆக, இந்த அவதூறைக் கூறுவது இந்தியாவின் கௌரவத்துக்கு உகந்ததல்ல.
நல்ல வேளையாக வாடிக்கையாளர் நான் சொன்னதை ஏற்று கொண்டார். இல்லை நான் மொழிபெயர்க்க வேண்டும் என பிடிவாதம் பிடித்திருந்தால் அதையும் செய்திருப்பேன். எனக்கென்ன வந்தது? ஷாஜஹானா என்னை நியமித்தார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
>For the woman, who worships no other God but her husband while getting up from bed, there will be a downpour just on her command.
திருவாளர் டொண்டு
இந்த மொழிபெயர்ப்பு இன்னும் சில சந்தேகங்களை உண்டாக்குகிரது.
a.does Valluvar necessarily equate a husband with God
b. Will there be a downpour if she worships after getting up from bed, say mid-day or in the evening?
c.what is the point in adding "just". The sentence reads better without 'just'.
d. Does Valluvar discourage worshipping any God other than a husband at any time of the day (or night)?
Your translation raises more questions than it answers. Perhaps , it is not fault of the translation, but Valluvar's way of putting this. Perhaps, a typical Indian way of overstating things.
I would translate it as "A woman who worships only her husband can command rain" to make things less tortuous.
விஜயராகவன்
பிகு: எப்படியோ, நல்ல விற்னைக்கு வாழ்த்துகள்.
//a.does Valluvar necessarily equate a husband with God? ஆம்
b. Will there be a downpour if she worships after getting up from bed, say mid-day or in the evening? அப்படித்தான் கூறுகிறார்.
c.what is the point in adding "just". The sentence reads better without 'just'. அவர் கூற வந்ததற்கு அழுத்தம் தருகிறது.
d. Does Valluvar discourage worshipping any God other than a husband at any time of the day (or night)?// அப்படி எடுத்து கொள்ள முடியாது. ஒன்றை உயர்த்திக் கூறும் முயற்சியாகவே இதை எடுத்து கொள்ள வேண்டும் என எனக்கு படுகிறது.
இன்னுமொரு விஷயம். இது பரிமேலழகர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதில் நாமாக எதையும் ஏற்றிவிட முடியாது.
கலைஞர் அவர்கள் விஷயம் வேறு. அவர் தானாகவே முயன்று தனி உரை எழுதினார். ஆகவே அதில் அவர் தனக்கு சரி எனத் தோன்றுவதை சுவைபடக் கூறுதல் இயலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"தெய்வத்தைவிடக் கணவனைப் பெரிதாய் மதிப்பவள், பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழை எவ்வளவு மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமோ அதைப் போன்ற சந்தோஷம் அளிப்பவள்" என்கிற பொருள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது (சுஜாதா உட்பட).
//"தெய்வத்தைவிடக் கணவனைப் பெரிதாய் மதிப்பவள், பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழை எவ்வளவு மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமோ அதைப் போன்ற சந்தோஷம் அளிப்பவள்" என்கிற பொருள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது (சுஜாதா உட்பட).//
சுவாரசியாக உள்ளது. ஆனால் அந்தோ, பரிமேலழகர் கூறுவதைத்தானே நான் மொழிபெயர்க்க இயலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
காமத்தை பற்றி நிறைய எழுதவும். சுவையாக இருக்கும்
மிங்கசுத்து
:)
டோண்டு சார்!!
தமிழக பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்க நீங்கதான் சரியான ஆள்.
புள்ளிராஜா
//தமிழக பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்க நீங்கதான் சரியான ஆள்.//
நானில்லை, திருவள்ளுவர் மற்றும் ஞாநி (இந்த வரிசையில்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்பதிவுக்கு ஒரே ஒரு தமிழ்மண ஸ்டாராவது மிஞ்சி இருக்கிறதே? நல்லவேளை கோவணத்தை உருவுவது போல அதையும் உருவாமல் விட்டார்களே?//
இதுல அப்படி என்னய்யா ஒரு குரூரமான சந்தோசம்?. திராவிட குஞ்சுக எல்லாம் ஒரு "-" குத்திட்டுதான டோண்டு பதிவையே படிக்க ஆரம்பிக்குறது. பின்ன எப்படி 4 ஸ்டார், 5 ஸ்டார் எல்லாம் வரும்?. ம்ம்ம்ம்ம் "-" குத்துரதுக்குன்னே ஒரு கும்பல் இருக்குதுப்பா.
கிழட்டு பரதேசி,
ஏற்கெனவே திருக்குறளுக்கு ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு இருக்குது! இதில் நீ என்னத்தை பெருசா எழுதி கிழிக்கப் போறே?
நான் எங்கே மொழி பெயர்த்தேன்? பதிவை சரியாகப் படிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் எங்கே மொழி பெயர்த்தேன்? பதிவை சரியாகப் படிக்கவும்.//
இதுக்கு என்ன அர்த்தம்?
//இந்த மூன்றாம் ஆண்டில் பெரும்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலை நடந்தது. அது முடிந்த அன்றைக்கு நான் டப்பாங்குத்து நடனமே போட்டு ஒரு குழந்தையையும் அதன் அம்மாவையும் பயமுறுத்தியதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். //
//இதுக்கு என்ன அர்த்தம்?//
மொழிபெயர்ப்பு வேலை மூன்று கட்டமாக நடந்தது.
1. என் மனைவியின் அத்தையன்பர் பரிமேலழகர் உரையை மொழிபெயர்த்து கையால் எழுதினார்.
2. அது என்னிடம் வந்ததும் ஒவ்வொரு குறளையும் தட்டச்சு செய்து, அதை ஆங்கில எழுத்துக்களிலும் எழுத வேண்டும்.
3.பிறகு பரிமேலழகர் உரை சரியாக மொழி பெயர்க்கப்பட்டதா எனப் பார்த்து அந்த மொழிபெயர்ப்பையும் தட்டச்சிட வேண்டும். அதுவும் எனது வேலையே. அதற்காகவே என்னிடமும் பரிமேலழகர் உரை கொடுக்கப்பட்டது.
ஆக மேலே சொன்ன எல்லா வேலைகளுமே மொழிபெயர்ப்பின் கீழேதான் வரும்.
நான் சொன்னதன் அர்த்தம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆயிரத்து முன்னூத்து முப்பது குறள்களையும் பாயிரத்தொடு பயின்றால் கவலையே இன்றி எந்த அரசரது அவைக்கும் சென்று ஆஸ்தானப் புலவராய் வீற்றிருக்கலாம் என்னும் பொருள்பட ஒரு பிரசித்தி பெற்ற புலவர் எழுதியுள்ளார்.//
சொன்னவர் பெயர் நத்தத்தனார் என எனது மனைவியின் அத்தையன்பர் புலவர் விஸ்வநாதன் அவர்கள் கூறி, அப்பாடலையும் காண்பித்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment