நண்பர் லக்கிலுக் ஒரு கேள்வி கேட்டு விட்டார். அது:
//நீங்கள் சமீபத்தில் 1960களில் பார்த்த நங்கநல்லூர் - தற்போதைய நங்கநல்லூர் ஒப்பிடுக. Infrastructure மட்டுமன்றி மக்கள் பெருக்கம், கலாச்சார மாற்றம் போன்றவற்றை பற்றியும் எழுதவும். (இதை கேள்வி பதில் பகுதியில் சொன்னால் ரொம்ப சின்னதாக போய்விடும் என்றால் தனிப்பதிவாகவே இடவும்).//
சரி அப்படியே செய்தால் போயிற்று.
முதன்முறையாக நான் நங்கநல்லூருக்கு வந்தது 1967-ல். எங்கள் வீடு கட்டுவதற்காக வாங்கிய நிலத்தைப் பார்க்க என் தந்தையுடன் வந்திருந்தேன். ஒன்றரை கிரௌண்ட் (3600 சதுர அடிகள்). 4500 ரூபாய் என் தந்தை அதற்காக ஹிந்து காலனி கூட்டுறவு சங்கத்துக்கு பணம் கொடுத்திருந்தார். அவ்வாண்டு செப்டம்பர் மாதவாக்கில் வீடுகட்ட காண்ட்ராக்டரை தேர்ந்தெடுத்தோம். சதுர அடிக்கு 21 ரூபாய் என்ற அளவில் அவரது சார்ஜ். பொருட்கள், ஆட்கள் எல்லாமே அவரது பொறுப்பில். 9 மாத அளவில் முடிப்பதாகப் பேச்சு. ஆனால் 18 மாதங்களுக்கு இழுக்கடித்தார் அந்த மனிதர். தனது சக்தி தெரியாமல் பல வீட்டு காண்ட்ராக்டுகளை ஏற்று எல்லாவற்றையும் இழுத்தடித்து கூத்தடித்தார். பிப்ரவரி 1969-க்குத்தான் நாங்கள் குடிவர இயன்றது. ஆக எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 30000 ரூபாய்கள் செலவு.
நான் அப்போது பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தேன். புது வீட்டிலிருந்து காலேஜுக்கு சில நாட்கள்தான் சென்றிருப்பேன். அதற்குள் பல வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி விட்டார்கள். ப்ராஜக்ட் வேலைக்காக மெனக்கெட வேண்டியிருந்தது. ஒரு மாதிரி எங்களையெல்லாம் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள் எனத் தோன்றியது. காலேஜுக்கு ஒழுங்காகப் போனால்தான் படிப்பு என்ற மனநிலையில் இருந்த எனக்கு இதெல்லாம் பிடிபடவில்லை. கடைசி வருடப் பரீட்சைக்கு படிக்க வேண்டிய நேரத்தில் ஊர் சுற்றி நாவல்கள் படித்து டைம் வேஸ்ட் செய்து வந்திருக்கிறேன் என இப்போது புரிகிறது. சரி அதெல்லாம் இங்கே எதற்கு? நங்கநல்லூருக்கே திரும்ப வருகிறேன்.
ஹிந்து காலனியில் முதலில் வந்தவை தொழிலாளிகளுக்கான வீடுகள். ஒவ்வொன்றும் அரை கிரௌண்டில் கட்டப்பட்டிருந்தன. மொத்தம் 59 வீடுகள், நான்கு தெருக்களில். முதல் வரிசை வீடுகள் இருந்த தெருவில் அவற்றுக்கு எதிர்சாரியில் B- பிளாட்டுகள். எங்கள் வீடுதான் (B-23) அந்த வரிசையில் முதன் முதலில் கட்டப்பட்ட வீடு. கிட்டத்தட்ட அடுத்த 4 வருடங்களுக்கு அந்த நிலைமைதான். ஆக எங்கள் வீட்டின் பின்புறமும், பக்கங்களிலும் காலி நிலங்களே. சற்றே குறுகிய காலத்துக்கு முன்னால் அவை வயல்களாக இருந்தன என்று நினைக்கும்போது மனதுக்கு சிறிது சோகமாக இருந்தது.
எங்கள் தெருவில் எங்கள் வீட்டின் அருகிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் ஒரு தெரு குறுக்கிடும். நாங்கள் வந்த அந்தக் காலக்கட்டத்தில் அந்த தெருவின் இரு ஓரங்களிலும் பனைமரங்கள் நீண்டு வளர்ந்திருக்கும். அதற்கு நாங்கள் பனைமரச்சாலை என்றே பெயரிட்டு அழைத்தோம். இப்போது அதற்கு பெயர் எம்.ஜி.ஆர். சாலை.
எங்கள் வீட்டுக்கு மேற்கே ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. நாங்கள் குடிவருவதற்கு 3 ஆண்டுகள் முன்னால் 1966-ல் அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பக்தவத்சலம் நகர் எனப் பெயரிடப்பட்டிருந்தது (அப்போதைய தமிழக முதன்மந்திரி பக்தவத்சலம் அவர்கள்). பக்தவத்சலம் நகருக்கு தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் பெரிய மலை ஒன்று இருந்தது.
மழை பெய்யும் சமயங்களில் மலையில் பல குட்டி அருவிகளைக் காண முடிந்தது. அத்தனை தண்ணீருக்கும் வடிகால் பழைய ஏரிதான். அங்கு வீடுகள் வந்து விட்டதால் ஏரி வரப்புகளை உடைத்து விட்டனர். 15 நிமிடங்களில் தண்ணீர் விறுவிறுவென வந்து எங்கள் வீட்டை சூழும். எங்கள் வீட்டின் முனாலும் பின்னாலும் தண்ணீர் சலசலவென்று பாயும் காட்சி அருமையாக இருக்கும்.
பனைமரச்சாலையின் இரு புறங்களிலும் காலி மனைகள். இப்போது செல்லம்மாள் பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தினருகில் ஒரு பெரிய வயல் கிணறு இருந்தது. சிதம்பரம் ஸ்டோர்ஸுக்கு எதிரே செல்லும் முதல் மெயின் ரோட் வழியாக நேரே சென்றால் மேடவாக்கம் ரோட் வரும். இடது பக்கம் திரும்பினால் ஆதம்பாக்கம் ஜயலட்சுமி தியேட்டர் வழியே சென்று பறங்கிமலை ரயில் நிலையத்தை அடையலாம். இந்தத் தெருக்களின் இரு புறங்களிலும் காலி மனைகளை கற்பனை செய்து பார்க்க தற்சமயம் இயலாதுதான்.
ரங்கா தியேட்டர் 1969-ல் கிடையாது. பழவந்தாங்கல் ரயில் நிலையமும் கிடையாது. திரிசூலம் ரயில் நிலையமும் கிடையாது. மீட்டர் கேஜ் தடங்கள். மின்வண்டிகள் சோப்புப் பெட்டி ரேஞ்சில் இருக்கும். தெருக்களுக்கு தார் கிடையாது. எல்லாமே ஒருமாதிரியான செம்மண் பாதைகளே.
முக்கியமாக தண்ணீர் கஷ்டம் கிடையாது. சாதாரண கிணறுகள்தான். எல்லா வீடுகளுமே தனித்தனி வீடுகள்தான். முக்கால்வாசி வீடுகளுக்கு மொட்டை மாடிதான். (இப்போதும் எங்கள் வீட்டில் அந்த நிலைதான்). பஸ் போக்குவரத்து லேது. 1969-ல் மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாகத்தான் வீட்டிற்கு வரவேண்டியிருந்தது. சைக்கிள் ரிக்சாவோ ஆட்டோவோ கிடையாது. முதலில் சொன்னவை எழுபதுகளில்தான் வந்தன, அதுவும் பழவந்தாங்கலுக்கு மட்டுமே. ஆட்டோக்கள் நான் தில்லியில் 20 ஆண்டுகள் (1981 முதல் 2001 வரை) இருந்தபோது வந்திருக்கின்றன.
1971-ல் பம்பாயில் வேலை கிடைத்து போக வேண்டியிருந்தது. 1974 ஜூலை வரை பம்பாய் வாசமே. ஊருக்கு வருவது வருடத்துக்கு ஒரு முறைதான். அதுவும் சில நாட்களுக்குத்தான். அப்படியே வந்தாலும் காலை உணவுக்கு பிறகு சென்னைக்கு சென்று நண்பர்களுடன் பொழுது போக்கியதுதான் அதிகம். ஆக ரொம்ப மாற்றங்களைப் பார்க்க இயலவில்லை. 1974-ல் பம்பாயிலிருந்து மாற்றல் பெற்று சென்னை வந்ததிலிருந்து 1979-ல் என் தந்தை மறைந்தவரை நங்கநல்லூர் வாசம்தான். அப்போதுதான் மெதுவாக மாற்றங்கள் வர ஆரம்பித்தன. முதலில் 18C & 18D வழித்தடங்கள். நங்கநல்லூர் ஸ்டேட்பேங்க் காலனியிலிருந்து சைதாப்பேட்டை, பிறகு சிம்ஸன் வரை நீட்டிக்கப்பட்டன.
அப்போது வந்த மாற்றங்களில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது ரங்கா சினிமா தியேட்டர்தான். நான் பம்பாயில் இருந்தபோது அதை 1972-73-ல் நிறுவியிருக்கிறார்கள். அந்த தியேட்டர் அக்காலக்கட்டத்தில் ஒரு அருமையான ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது தினசரி 2 காட்சிகள். பகல் 12 மணி மற்றும் இரவு எட்டரை மணிக்கு. ஒவ்வொரு காட்சியிலும் இரு படங்கள், ஒரு பழைய படம் இடைவேளை வரை பிறகு ஒரு புதிய படம். ஒரே டிக்கட்டில் இருபடங்களையுமே பார்க்கலாம். நாங்கள் பகல் காட்சிக்கு சென்றால் திரும்பவர மாலை 5.30 போல ஆகி விடும். ஆனால் இரவுக் காட்சிக்கு சென்றால், முக்கால்வாசி பழைய படம் பார்த்த கையோடு வீடு திரும்பி விடுவோம். அதற்கே மணி இரவு 11.30 போல ஆகிவிடும். நாங்கள் திரும்பும்போது காவலாளி ஆச்சரியத்துடன் "என்ன சார் போறீங்களா"? என்று கேட்பான். ரங்கா தியேட்டரில் அப்போதெல்லாம் எனக்கு தெரிந்து ஹவுஸ்ஃபுல் ஆனதாக நினைவேயில்லை. நல்ல விசாலமான தியேட்டர். இரவுக் காட்சிகளில் கதவுகளை எல்லா திறந்து வைத்திருப்பார்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும். என்ன அவ்வப்போது நாய்கள் வரும் அவ்வளவுதான்.
நாங்கள் வந்த புதிதில் சுற்றிலும் வெட்டவெளியாதலால் காற்று பிய்த்து கொண்டு போகும். எங்கள் வீட்டு ஹாலில் மட்டும் ஒரே ஒரு மின்விசிறி. மற்ற அறைகளில் கிடையாது. என் கல்யாணம் ஆனதும் கல்யாணப் பரிசாக வந்த மின்விசிறியை எங்கள் முன்னறையில் பொருத்தினோம். இக்காலத்தில் அது பற்றி நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இப்போது சுற்றிலும் கட்டடங்கள் வந்துவிட்டதால் காற்றுக்கு பஞ்சமாகி விட்டது.
நான் நங்கநல்லூரில் இருந்த காலக்கட்டங்கள் 1969-71, 1974-79 மற்றும் 2001-லிருந்து இன்றுவரை. இன்மேலும் இங்கேதான் இருக்கப் போவதாக எண்ணி கொண்டிருக்கிறேன். திருவல்லிக்கேணியிலிருந்து வந்த புதிதில் எம்ஜிஆர் சாலை வழியே சென்று சாலை முடிவில் மலைப்பாதை ஆரம்பிக்க, மலையில் ஏறுவது ஒரு பொழுதுபோக்கு. மலையில் மேலிருந்து பார்த்தால் தூரத்தில் எங்கள் வீடு தனியாகத் தெரியும். கிழக்கே தூரத்தில் கடல் கூட சில கோணங்களில் தெரியும். 1974-79 காலக் கட்டத்தில் மலைமீது ஏற முயற்சிக்கவில்லை. 2001-ல் வந்த புதிதில் ஒரே ஒரு முறை போய் பார்த்தபோது மலையின் கணிசமான பகுதிகள் காணாமல் போயிருந்தன. கல் குவாரிக்காரர்களின் கைங்கர்யம். பிறகு அந்தப் பக்கம் போகவே பிடிக்கவில்லை.
இப்போது? எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்டோக்கள் வந்து விட்டன. குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய். முன்னால் கன்னாபின்னாவென்று சைக்கிள்கள். இப்போது இருசக்கர வண்டிகள். கார்கள் எண்ணிக்கையும் பிரமிக்க வைக்கிறது. முன்பு ஒரு கிராமப்புற தோர்றத்தில் இருந்த நங்கநல்லூர் இப்போது நகரத் தோற்றத்தை வெகு வேகமாக அடைந்து வருகிறது. கிரவுண்ட் விலை? முதலில் கிடைக்கிறதா என்று பாருங்கள். பாதாளச் சாக்கடைகள் போடும் வேலைகள் ஜரூராக நடக்கின்றன. எல்லோரும் செல்பேசியை கையில் வைத்து பேசிக்கொண்டே போகின்றனர்.
07.09 AM 09.04.2008 சேர்த்தது
வந்தியத்தேவன் அவர்கள் கோவில்களை பற்றி கூறவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். நான் கோவில்களுக்கு அதிகம் செல்வதில்லை. வைஷ்ணவ திவ்யதேசங்களுக்கு சென்றதெல்லாம் என் வீட்டம்மா என்னையும் தரதரவென்று இழுத்து சென்றதால்தான். எனக்கும் சேர்த்து அவரே கோவில்களுக்கு சென்று விடுவார். ஆகவேதான் அவற்றை நான் குறிக்க மறந்து விட்டேன் என நினைக்கிறேன். நங்கநல்லூர் இப்போது கோவில்களின் ஊர் என்றே சொல்லலாம். பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் ராஜராஜேஸ்வரி கோவில்கள். என் வீட்டம்மாவின் அபிமான கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவிலைப் பற்றி எனது இன்று பிரதோஷம், நாளை வாலண்டைன்ஸ் டே என்னும் பதிவில் ஏற்கனவே கூறியுள்ளேன்.
சில படங்கள், நண்பர் கமல் கேட்டு கொண்டதற்கிணங்க:
நங்கநல்லூர் ஆஞ்சநேயர், எனது கணினியில் Desktop wallpaper-ல் இருந்து கணினியை திறக்கும்போதே தைரியமாக இரு டோண்டு, தூள் கிளப்பு என எனக்கு அருள் புரிபவர்
லட்சுமி நரசிம்மர் (?) கோவிலின் கோபுரத் தோற்றம்
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
10 hours ago
24 comments:
ஹ்ம்ம்!!!!!ஒரு அருமையான கிராமமாக இருந்த நங்கநல்லூர் இன்று "நெரிசல்"நலூராகி விட்டது :(((...
சார் ஏதேனும் படங்கள் இருந்தால் வலையேற்றலாமே???
//இரவுக் காட்சிகளில் கதவுகளை எல்லா திறந்து வைத்திருப்பார்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும். என்ன அவ்வப்போது நாய்கள் வரும் அவ்வளவுதான்.//
:-)
Sir, how much are they charging for underground drainage connection?
அன்பின் டோண்டு,
65-70 கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் படித்த செ.வ.பன்னீர் செல்வம் என்பவரை உங்களுக்கு தெரியுமா.
அவர் நங்க நல்லூர் ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வந்தார்.
82-84 வருடங்களில் IDPL-ஹரித்துவார் அலுவலகத்தில் பணியாற்றினார்.
அவரை உங்களுக்கு தெரியுமா
அன்புடன்
அரவிந்தன்
முக்கியமாக ஒன்றை விட்டு விட்டீர்கள் டோண்டு சார். ஆஞ்சநேயர் கோவில். (நீங்கள் டெல்லியில் இருந்த காலமோ?) அது வந்த புதிதில் பிரசாதம் ஒரு பெரிய இலையில் தருவார்கள். அது இப்போது தொன்னையாகி, அந்த தொன்னையும் பழைய அளவில் பாதியாகி விட்டது. வெண்பொங்கல் அல்லது புளியோதரைக்காக கோவில் வந்தால் கையில் சுண்டல் கொடுத்து விடுவார்கள். புளியோதரை டப்பா மீண்டும் நிறையும் போது இன்னொரு முறை பிரதட்சணம் வந்து புண்ணியம் கட்டிக் கொண்ட பெருமை எல்லாம் நிறைய உண்டு. நீங்கள் வந்த போது இருந்த கோவில்கள் என்ன என்ன? ராஜ ராஜேஸ்வரி கோவில் இருந்திருக்குமே?
நங்கை நல்லூர் விவரங்கள் அருமை.
குரோம்பேட்டையிலிருந்தும் நடந்து வரும்வழி இருக்கின்றதா?
Tell me about it!
1981'இல் நாங்கள் நங்கநல்லூருக்கு குடிவந்த போது ஏகத்துக்கும் காலி மனைகள்! கிணறுகளில் 20-25 அடிகளில் தண்ணீர் (உப்புத் தண்ணிதான்!). கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது!
போனவாரம் அதே நங்கநல்லூரை பார்த்தபோது, shock and awe! Shock 99% and 1% of awe!
1996'இல் நங்கநல்லூரை விட்டு அமெரிக்காவிற்கு வந்த பிறகு அடையாளம் தெரியாத அளவிற்கு நசுங்கி விட்டது!
அது சரி! ஹிந்து காலனி என்பது சிவில் ஏவியேஷன் காலனிக்கு பின்புறம் வருமா? நாங்கள் ஒரு 9 வருடம் Civil Aviation Colony'இல் குடி இருந்தோம்!! பிறகு இரண்டு இடங்களுக்கு மாறி கடைசியாக லக்ஷ்மி நகருக்கு செட்டில் ஆகியிருக்கிறோம்!!
In all, not a proportionate growth, I should say!
BTW, நீங்கள் குறிப்பிடும் மழைத்தண்ணீர் நாங்கள் குடியிருந்த 19-வது தெருவிலும் ஓடும்!! அப்போது என் வயதை ஒத்த சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடுவார்கள்!
பல விஷயங்களை சொல்லலாம்! எல்லாவற்றையும் நீங்கள் சுருக்கமாக குறிப்பிட்டுவிட்டதால் no more comments!
//65-70 கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் படித்த செ.வ.பன்னீர் செல்வம் என்பவரை உங்களுக்கு தெரியுமா.
அவர் நங்க நல்லூர் ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வந்தார்.//
இல்லை, தெரியாது. நான் டே ஸ்காலராக இருந்ததால் பன்னீர் செல்வம் அவர்களை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஐ.டி.பி.எல். ரிஷிகேசுக்கு ஒரே ஒரு முறை 1990-ல் துபாஷி வேலைக்காக சென்றேன். ஆகவே அங்கும் அவரைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நங்கநல்லூரிலும் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
அவர் உங்கள் உறவினரா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
nanganallur paarpanar athigam vasikkum area.
komanakrishnan
// 15 நிமிடங்களில் தண்ணீர் விறுவிறுவென வந்து எங்கள் வீட்டை சூழும்.//
இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் நீச்சல் கற்றுகொள்ளவில்லை.
//ஆதம்பாக்கம் ஜயலட்சுமி தியேட்டர் வழியே சென்று பறங்கிமலை ரயில் நிலையத்தை அடையலாம்.//
அந்த பாதையில் இருக்கும் பின்னி இன்ஜினியரிங் கம்பெனி எப்பொழுது வந்தது என்று தெரியுமா?. அங்கெ நான் வேலை செய்திருக்கிறேன்.
//பஸ் போக்குவரத்து லேது. 1969-ல் மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாகத்தான் வீட்டிற்கு வரவேண்டியிருந்தது//
இப்போது மட்டும் என்ன வாழுதாம்,
ரயிவே ஸ்டேசனில் இருந்து உங்கள் வீட்டிற்கு நடந்து தான் வந்தேன்
//சைக்கிள் ரிக்சாவோ ஆட்டோவோ கிடையாது.//
இப்போது இருக்கலாம் கொடுக்க என்னிடம் காசு கிடையாது.
நாம பொடி தோசை சாப்பிட்டமே அந்த ஹோட்டல் பற்றி கூட சொல்லவில்லை.
அது வேற ஏரியாவா ?
வால்பையன்
வால்பையன்,
எனக்கு நன்றாக நீந்தத் தெரியும். அந்தத் திறமை திருவல்லிக்கேணியில் உள்ள மெரினா நீச்சல் குளத்தில் வைத்து என் தந்தை எனக்கு சமீபத்தில் 1959-ல் கற்று கொடுத்தது. இருப்பதிலேயே சிறந்த தேகப் பயிற்சி நீச்சல்தான். ஆனால் அது அதிகம் காசு வாங்கும். ஆகவே, அதற்கு அடுத்த சிறந்த பயிற்சியான வேக நடையை நான் பாவிக்கிறேன்.
பொடி தோசை சாப்பிட்ட இடம் அருணாச்சல் இட்லீஸ். அந்த இடத்திலிருந்து அது மாற்றப்பட்டு வேறு இடத்துக்கு சென்று விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அந்த பாதையில் இருக்கும் பின்னி இன்ஜினியரிங் கம்பெனி எப்பொழுது வந்தது என்று தெரியுமா?. அங்கெ நான் வேலை செய்திருக்கிறேன்.//
அந்தப் பாதையில் பின்னி இஞ்சினியரிங்கா? இருக்காதே. அந்த கம்பெனி மீனம்பாக்க ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கு பக்கம் வரும்போது ஜெயின் கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வேலை நின்று பல ஆண்டுகளாகி விட்டாயிற்றே. அதில் நீங்கள் எப்படி வேலை பார்த்திருக்க இயலும்?
நாங்கள் குடி வந்த சமயம் அது செயலுடன் இருந்தது. பிறகு கஷ்டகாலம் வந்து நொடித்து போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நாங்கள் குடி வந்த சமயம் அது செயலுடன் இருந்தது. பிறகு கஷ்டகாலம் வந்து நொடித்து போயிற்று.//
அந்த கஷ்டகாலமே நான்தான்.
இங்கே உள்ள பின்னிக்கும் ஹார்பரில் உள்ள பின்னிக்கும் தொடர்புண்டு.
நான் ஹார்பரில் இருந்தேன்
வால்பையன்
பதிவுக்கு நன்றி!
//நாங்கள் குடிவருவதற்கு 3 ஆண்டுகள் முன்னால் 1966-ல் அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பக்தவத்சலம் நகர் எனப் பெயரிடப்பட்டிருந்தது (அப்போதைய தமிழக முதன்மந்திரி பக்தவத்சலம் அவர்கள்). //
பக்தவத்சலம் நகரையொட்டி ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இன்னொரு நகர் கலைஞர் கருணாநிதி நகர் :-)
//அப்போது வந்த மாற்றங்களில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது ரங்கா சினிமா தியேட்டர்தான்.//
நான் சிறுவனாக இருந்தபோது ரங்காதியேட்டரில் முதல்தடவை வீட்டுக்கு தெரியாமல் மனிதன் படம் பார்த்தேன். டிக்கெட்டு விலை 90 காசு.
நீங்கள் சமீபத்தில் 1972ல் படம் பார்த்தபோது கட்டணநிலை என்னவோ?
கிட்டத்தட்ட நங்கநல்லூரில் இருக்கும் 75 சதவிகிதம் கோயில்களுக்கு போயிருப்பேன். கருமாரியம்மன் கோயிலுக்கு பக்கத்தில் (தில்லை கங்காநகர் சப்வேக்கு போகும் பாதையில்) புதியதாக கட்டப்பட்டிருக்கும் நரசிம்மர் கோயில் அருமையாக இருக்கிறது. நரசிம்மர் ரொம்பவும் ருத்ரமாக, பிரம்மாண்டமாக இருக்கிறார். பிரசாதமாக பானகம் தருகிறார்கள். ஒன்று, ரெண்டு வயசு குட்டிக் குழந்தைகள் கூட டம்ளரை தூக்கிதான் குடிக்க வேண்டும் என்று அங்கிருக்கும் அய்யர் (அய்யங்கார்?) அலம்பல் செய்கிறார். நீங்கள் அந்தப் பக்கமாக போனால் கொஞ்சம் சொல்லி வையுங்கள்.
வேலை தேடி வந்த புதிதில் (1981 -1982) வரை ரெங்கா தியேட்டர் பக்கம் தான் வாசம்.மாமா வீட்டில்.தினமும் சைக்கிளில் பழவந்தாங்கள் போய் அங்கிருந்து வேலைக்கு போகனும்.
ரெங்கா தியேட்டர் என்று சொன்னாலே ரொமான்ஸ் ஆரம்பமாகிவிடும் மண்டைக்குள்.
பல படங்கள் பார்த்திருக்கேன்.
இப்போது பெற்றோர்கள் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் தான் இருக்கிறார்கள்.
இப்போது வெற்றியாகிவிட்டது "ரெங்கா"
1989 சமயத்தில் ஒரு கிரவுண்டை 50 ஆயிரத்துக்கு வாங்கிப்போடுங்க என்று ரியல் எஸ்டேட் காரர்கள் கெஞ்சினார்கள்,அப்போது 50தாயிரம் பார்பது பகல் சொப்பனமாக இருந்தது..
"பக்தவத்சலம் நகரையொட்டி ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இன்னொரு நகர் கலைஞர் கருணாநிதி நகர் :-)"
அப்படியென்றால் அது 1969-க்கு பிறகுதான் வந்திருக்க இயலும்!
1969-ல் அமெரிக்கா சந்திரனில் காலடி எடுத்து வைத்த போது விகடனில் ஒரு கேலிச்சித்திரம் வந்தது. அதாவது நம்ம ஊர் மனிதர்கள் அங்கு நில ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டுகிறார்கள். அந்த இடத்துக்கு நிக்சன் நகர் எனப் பெயர் வைக்கின்றனர்.
நான் முதலில் ரங்காவில் படம் பார்த்தது 1974-ல் தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
அருமையான தகவல்கள்.
இந்தப் பதிவில் நீங்கள் பல விடயங்களை தொட்டுச் சென்றிருக்க்கிறீர்கள். அவற்றையெல்லாம் தனித்தனி பதிவுகளாக இட்டு கூடிய விரைவில் உங்களிடமிருந்து ஒரு "நங்கநல்லூர்" தொடர் பதிவுகள் எதிர்பார்க்கலாமா?
அன்புடன்,
நாகை சங்கர்.
ungal nanganallur perumai thambattithinal yarukku enna nanmai? nadu munneruma? ezaigal munnera vendum endra
pathivu podalame endra ennam en varavillai?
komanakrishnan
/////எங்கள் வீடு கட்டுவதற்காக வாங்கிய நிலத்தைப் பார்க்க என் தந்தையுடன் வந்திருந்தேன். ஒன்றரை கிரௌண்ட் (3600 சதுர அடிகள்). 4500 ரூபாய் என் தந்தை அதற்காக ஹிந்து காலனி கூட்டுறவு சங்கத்துக்கு பணம் கொடுத்திருந்தார்.////
முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டீர்களே?
இன்றைய தேதியில் இடம் என்ன விலை?
பழைய கதைகள் எப்போதுமே சுவையாகத்தான் இருக்கும். அதை இன்னும் மெருகூட்டிச் சொல்லியிருக்கிறீர்கள்.குறிப்பாக ரங்கா தியேட்டர் மேட்டர். நன்றி மிஸ்டர் டோண்டு!
சுப்பையா அவர்களே,
நிலத்தின் இப்போதைய விலைதானே? அது பற்றி எனது 21.04.2008 பதிவின் கேள்வி பதிலில் இவ்வாறு கூறியுள்ளேனே:
//5. நங்கநல்லூரில் தற்போதையை ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி ? 900- 1000 சதுரடி flat எவ்வளவு விலை. ? தண்ணீர் பிரச்னை உண்டா?
பதில்: ஃபிளாட் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறும் என கேட்டறிந்தேன். ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) ஐம்பது லட்சத்துக்குக்ம் மேல் கேட்கிறார்கள். தண்ணீர் பிரச்சினை சில பாக்கெட்டுகளில் அதிகம் உண்டு.//
அன்புடன்,
டோண்டு ராகவன்
/////சுப்பையா அவர்களே,
நிலத்தின் இப்போதைய விலைதானே? அது பற்றி எனது 21.04.2008 பதிவின் கேள்வி பதிலில் இவ்வாறு கூறியுள்ளேனே:
//5. நங்கநல்லூரில் தற்போதையை ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி ? 900- 1000 சதுரடி flat எவ்வளவு விலை. ? தண்ணீர் பிரச்னை உண்டா?
பதில்: ஃபிளாட் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறும் என கேட்டறிந்தேன். ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) ஐம்பது லட்சத்துக்குக்ம் மேல் கேட்கிறார்கள். தண்ணீர் பிரச்சினை சில பாக்கெட்டுகளில் அதிகம் உண்டு.//
அன்புடன்,
டோண்டு ராகவன////
அதாவது நிலத்தின் விலை 40 ஆண்டுகளில் 1,000 மடங்கு உயர்ந்திருக்கிறது!
அன்று வாங்கியவர்கள் எல்லாம் லெட்சுமி கடாட்சம் உள்ளவர்கள்தான்!
ஒரே ஒரு குறையும் அதில் உண்டு!
என்ன மதிப்பை வைத்து மட்டுமே மகிழலாம்!
கையில் காசு பார்க்க வீட்டிலுள்ள மற்றவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்:-)))))))
//அவர் உங்கள் உறவினரா?//
ஆம் நெருங்கிய உறவினர்தான்.
தற்பொழுது NTPC சென்னையில் பொது மேலாளராக பணி புரிகிறார்.சில மாதங்களி ஓய்வு பெருகிறார்.இவரின் சகோதரர் எம்.ஜி.ஆர் மருத்துவ மருத்துபல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பிரமானந்தம்.
அன்புடன்
அரவிந்தன்
thaneer/kaatru tholaindha kadhai nu peru veithu irukalam. Mazhai kaatru ellam kaasu panam tharadhu enbadhai unaramal malai kalaigalium kulangalium azhithom, anubavikirom. "Ellam vidhi vasam endran, aamada vidhi vasam dhan, erivillarku inbam illai enbadhu eesanin vidhi" - Bharathiyar.
//ungal nanganallur perumai thambattithinal yarukku enna nanmai? nadu munneruma? ezaigal munnera vendum endra
pathivu podalame endra ennam en varavillai?
komanakrishnan//
டேய், நீ இன்னும் டாக்டரை பாக்க போகலியா ?
//thaneer/kaatru tholaindha kadhai nu peru veithu irukalam. //
பல கோவில்கள், பத்து பேங்க், நல்ல தார் சாலைகள், புதிய சூப்பர் மார்கெட்டுகள் கிடைத்த கதைன்னும் பேரூ ...
Post a Comment